5 Aug 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

விகே.புரத்தையும் அகஸ்தியர் பட்டியையும் சிறுவயதில் இருந்து பார்த்தே வளர்ந்ததால் கதைகளம் சுத்தமாக மனதில் ஒட்டவில்லை. கொஞ்சம் மனது வைத்தால் விகே புரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு நடந்தே போய்விடலாம், ஆனால் இங்கோ அதை ஏதோ தொலைதூரப் பயணம் போல் காட்டியிருக்கிறார்கள். 

எனக்குத்தெரிந்து அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல ரோடு வந்த இடம் அகஸ்தியர்பட்டி தான். காரணம் அகஸ்தியர்பட்டி அம்பைக்கும் விகேபுரத்திற்கும் இடையே புதிதாக கட்டமைக்கப்பட்ட (மெஜிரா கோட்ஸ் ஊழியர்களுக்காக) ஒரு பகுதி. அங்கே சிறிய விமான ஓடுதளம் கூட உண்டு. இப்போ அந்த ஓடுதளம் நாஸ்தியாகிவிட்டது என நினைக்கிறன். 

ஆரஞ்சுமிட்டாயில் காண்பிக்கப்படும் அதே போன்ற செம்மண் நிலப்பரப்பு அங்கும் உண்டு. அம்பை வீகேபுரம் செல்லாமல் தென்காசி சாலையில் இருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும். சிவா மாமா ஒருமுறை அழைத்துச் சென்றார். அந்தப் பாதையில் தான் முதல்முறையாக ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங் பார்த்தேன். இப்போது அங்கே கேட் வந்துவிட்டதா தெரியவில்லை. ஆனால் அப்போவே சாலை உண்டு. 

கதையின் சுவாரசியத்திற்காக கைலாசத்தை தேடி வாகனம் கூட செல்ல முடியாத ஒரு பாதையில் நடையோ நடையாய் நடப்பதாகக் காட்டியிருக்கலாம். அது சுவாரசியமாகவும் இருக்கிறது, என்ன அந்தப்பகுதி மக்களுக்கு தங்களை அந்தப் பகுதியில் இருந்து அந்நியபடுத்திக் கொண்டு பார்த்தால் மட்டுமே கதைகளனோடு ஒன்ற முடிகிறது. அல்லது அகஸ்தியர்பட்டியையும் அம்பையையும் வேறோ எங்கோ இருக்கிறது என கற்பனை செய்துகொள்ள வேண்டியது தான்.  

அரை மணி நேரத்தில் இண்டர்வல் வருவதை தமிழ் சினிமா ரசிகனால் தங்கிக் கொள்ள முடியவில்லை. 'த்தா இன்னா டா இது', 'யேய் இது படமா, சீரியல் மாதிரி இல்ல போவுது' போன்ற பேச்சுகளை உணர முடிந்தது. 

**

மேற்சொன்ன விசயமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எத்தனையோ மொக்கைப் படங்களை அரங்கில் சென்று பார்த்திருக்கிறேன். நமக்கு பிடிக்காத காட்சியோ அல்லது நம்மை நெளிய வைக்கும் காட்சியோ திரையில் வந்தால் கத்தி கூப்பாடு போட்டு கேலி செய்வதில் வல்லவன் நம்மூர் ரசிகன். எப்போ அரங்கம் அமைதியாகும் எப்போ கவுண்டர் கொடுக்கலாம் என்று காத்திருக்கும் நொடிகள் உண்டு. ஆனால் ஆரஞ்சு மிட்டாயில் பெரும்பாலான காட்சிகள் மென்மையான இசையின் பின்னணியில் தான் நகர்கிறது. யார் என்ன செய்தாலும் கவுண்டர் கொடுக்க ஏகப்பட்ட வாய்ப்பும் இருந்தது . இருந்தாலும் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ் சினிமா ரசிகன். அதற்காக அவன் தூங்கிவிட்டான் என நினைக்க வேண்டாம் அவ்வபோது சிரித்து தன் இருப்பையும் உறுதி செய்துகொண்டு தான் இருந்தான். இது போன்ற வழக்கத்திற்கு மாறான கதையம்சம் புதிது என்பதால் அதனோடு ஒன்றுவதற்கு தயங்குகிறானா எனத் தெரியவில்லை. 


படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது 'யாரு மச்சி ம்யுசிக் டைரக்டர்' என்று. ஒரு இசையமைப்பாளருக்கு இதை விட என்ன பெரிய கிரெடிட் கிடைத்து விட முடியும். எங்கிருந்தும் வழுவிச் செல்லாத இசை ஜஸ்டின்​ அண்ணா :-) பயணங்கள் தொடருதே அட்டகாசம். 

வசனம் விஜய் சேதுபதியும் இயக்குநர் பிஜுவும் எழுதி இருக்கிறார்கள். 'சாவுற வரைக்கும் ஆஸ்பத்திரில இருக்கணும்னு சொல்றான். அது என்ன மாதிரியான ட்ரீட்மென்ட்', 'என்ன காதலிச்சிட்டோமேன்னு கல்யாணம் பண்ணிக்காத, நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு' எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள். 

அம்பாசமுத்திரம் சிவன் கோவில் அருகில் நள்ளிரவில் கைலாசம் ஒரு ஆட்டம் போடுவார். அட்டகாசம். யாரோ ஒருவர் கூறியிருந்தார் முதியவர் வேடம் விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் பொருந்தவில்லை என. அந்த ஆட்டத்தில் கண்முன் கைலாசம் என்னும் முதியவர் தான் ஆடிகொண்டிருந்தார். விஜய் சேதுபதி இல்லை.   

நடிப்பில் விஜய் சேதுபதியை விடவும் சத்யா (ரமேஷ் திலக்) கவர்கிறார். படு இயல்பான நடிப்பு. தன்னுடைய படத்தில் இன்னொருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆறுமுகமும் அசத்தி இருக்கிறார். என்ன ஆறுமுகம் பேசும் 'யோவ் கொஞ்சமாச்சு கூறு இருக்கா' மட்டும் தான் படத்தில் வரும் ஒற்றைவரி நெல்லை பாஷை. மற்றவை எல்லாமே சாதா பாஷை தான்.   

ஜில்மோர் (மெட்ராஸ் பவன்) சிவா தன்னுடைய விமர்சனத்தில் எழுதியது 'இது ஒரு ஷார்ட் குட் பிலிம் மட்டுமல்ல. குட் ஷார்ட் பிலிமும் கூட'  என்று. படம் பார்க்கும் போது அவ்வபோது குறும்படம் பார்க்கும் உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

புளிக்கிறதா இனிக்கிறதா என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத சுவை உடையது ஆரஞ்சு மிட்டாய். அதைப் போலத்தான் இந்தப் படம் மக்களுக்குப் பிடித்துள்ளதா, பிடிக்கவில்லையா என்பதை கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படம் எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் ஜஸ்டின் என்றாலும் இரண்டாவது காரணம் மொத்தப் படமும் பயணங்களிலேயே கழிவதுதான். பயணமே எல்லை.  

3 comments:

  1. நல்ல படம். ஆனால் வாஷ் அவுட் ஆகிவிட்டது. வசூல் ரீதியாக சேதுபதியின் தொடர் தோல்வி தொடர்கிறது.

    ReplyDelete
  2. பயணமே எல்லை.... :)))

    வரும் விளம்பரங்கள் பார்க்கும் போது பார்க்க நினைத்தேன். விரைவில் தொலைக்காட்சியில் வந்து விடும்னு தோணுது!

    ReplyDelete
  3. பாப்போம் ...
    தம +

    ReplyDelete