எனது குறிப்பு
நித்யா கிருஷ்ணன், அரசுப்பணியாளர்
பதிவர் அல்லாத நான் போட்டியில் பங்கேற்க வாய்ப்பளித்த ஸ்ரீனிவாசன் அவர்களுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை பற்றி எமக்கு தெரியப்படுத்திய எனது மருமகளுக்கும் எனது நன்றிகள். "மலரும் நினைவுகளை எடுத்துவிடுமா" என்று மகன் சொல்ல விளையாட்டுக்கு தான் சொல்கிறான் என்று நினைத்து விட்டு விட்டேன். "மெயில் அனுப்பிட்டேன் லெட்டெர் எழுதிட்டீங்களா??" என்று போன வாரம் கேட்டபோது தான் நிஜமாத்தான் சொன்னானா என்று திகைத்தேன். என்னை ஊக்கப்படுத்தி, கணினியில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் அனுப்ப உதவிய மகனுக்கும், அவனது மனைவிக்கும் அதை சரிபார்த்த என் கணவருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
விளையாட்டான போட்டி தானே என்று நினைத்து சரி என்றுவிட்டேன். போட்டி மிகவும் சீரியசாக போகிறது என்று நினைக்கிறேன். அனைத்து போட்டியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நிஜமோ கற்பனையோ எழுதினதில் சில வார்த்தைகலேனும் நம் இதயத்தேடலின் விவரிப்பாகத்தான் இருக்கும்!!
பிரியமான என்னவனுக்கு!
என்ன சொல்வது, எதை சொல்வது, உன்னிடம் சொல்ல மறந்ததை சொல்லவா? அல்லது சொல்லாமல் மறைத்தவையை சொல்லவா? அதையும் எப்படி சொல்வேன் நான்!
நான் பேசியதையே அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாத என்னால் நமது முதல் சந்திப்பில் நீ பேசிய முதல் வார்த்தையை மட்டும் ஏன் என்னால் மறக்க முடியவில்லை என்று சிந்தித்த நொடியில் வீழ்ந்தேனோ நான் காதலில்! நான் வீழ்ந்ததை நீ என் விழித்திரையில் கூட அறிந்து விடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தும், சலனமின்றி உன்னை சந்திப்பதாய் என்னை நானே மறைத்திருந்தும் என்னை சந்திக்க முடியாமல் உன் விழிகள் தடுமாறிய போது நான் சலனப்பட்டதை நீ அறிந்திருப்பாயோ? என்று குழம்பியதில் நீண்டது என் காதலும் தவிப்பும்!
காதலில் அதிகம் நம்பிக்கை இல்லாத என்னை எப்படியும் உன் நினைவுகளில் இருந்து மீட்டு விடுவேன் என்று நம்பி இருந்தேன். ஆனால் அதிலும் தோற்றுப்போவேன் என்று நான் நினைத்திடவில்லை நீயும் என்னை காதலிப்பதாய் சொல்லும் வரை! கொஞ்சம் நிதானித்து "இனி என்ன செய்வேன் நான்? நான் என்ன சொல்ல வேண்டும்" என்று நினைக்கும் முன் என் பதிலை கேட்டபோது நான் தடுமாறியதில் அறிந்தாயோ, நானும் உன்னை காதலிப்பதை! மேலும் என் பதிலுக்கு காத்திராமல் நீ நகர்ந்து போனது முதன் முதலாய் அதிகமான வலியைத் தந்தது.
என்றோ ஒரு நாள் எதிர்பாராதவிதமாக ஒரே நிற ஆடையை நாம் அணிந்திருந்ததும், ஒரே நேரத்தில் அலுவலக வாசலை கடந்ததையும் நினைத்து நினைத்து இப்பொழுதும் என் மனது ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறதோ! முன்பெல்லாம் நிமிடங்களாய் கடந்து போன விடுமுறை நாட்கள் இன்று மணிகளாய் நீண்டுபோகிறது. இவை அனைத்தையும் நீயும் கவனித்து சொல்கையில் ஏதும் கவனியாதது போல் நான் அசட்டை செய்திருந்தேனே. நம் விழிகள் மோதிக்கொள்ளும் ஒற்றைப்புள்ளியில் என் உணர்வுகள் அனைத்தையும் காட்டிவிடும் என் விழிகளும் தடுமாற்றமும் எப்படி இத்தனை விஷயங்களை மறைத்து வைத்திருந்தது என்பதை என்றுமே யோசிக்கத்துணிகிறேன்!
எப்பொழுதும் பிரிவை தந்துவிட்டு போகும், நான் வெறுக்கும் அந்த மாலை வேளையில் நீ விலகிச் செல்கையில் உன் சட்டை பட்டனோடு ஒட்டிகொண்டு உன்னோடே சென்று விடத் துடிக்கும் என் நினைவுகளை இழுத்துப்பிடித்து சரி செய்வதற்குள் மீண்டும் வீழ்ந்துபோவேன் நான் "ஏன் இந்த மாலை நேரம் வருகிறது?" என்று நீ கேட்கையில்.
“ஒரே அலுவலகத்தில் உன்னருகில் நான் தினம் கழிக்கும் இந்த எட்டு மணி நேரத்தில் சில நொடிகள் கூட உனக்காக செலவழிக்கவில்லையே என்று உனக்கு கோபம் வந்ததுண்டா ?“ என்று ஏன் நீ கேட்டாய் எப்படி வரும் எனக்கு, "நீ என்னவள் என்று உன்னோடு கழிக்கும் இந்த ஒவ்வொரு நொடியும் என்னையே முழுதாய் உன்னுள் தொலைத்துக் கொண்டிருக்கிறேன் அதை மற்றவர்கள் அறியும் படியாக நடந்து உன்னுள் தொலைவதிலிருந்து நான் மீள விரும்பவில்லை. " என்று நீ சொல்லக் கேட்டுமா நான் உன் மேல் கோபப்படுவேன்.
சண்டையில் பேசாமல் இருக்கையில் நீ எனக்காக கொடுத்த காதல் கடிதத்தை உன் முன்னே என்னை படிக்கச் செய்தாயே அதை படிக்கும் போதும்,படித்து முடிக்கும் போதும் எதற்கு படிக்க சொன்னாய் என்று தெரியவில்லை, படித்து முடித்து கை பேசியை அணைக்கையில் திகைத்தேன் எதற்காக சண்டை போட்டோம் என்று மறந்ததை நினைத்து! இப்பொழுதெல்லாம் நாம் சண்டை இடும்போது நீ கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் கூட இதழோரப் புன்னகையை தந்து விட்டுப் போகும் ரகசியம் அறிகிறேன் நான்!
இப்படி எனது ஒவ்வொரு நொடியையும் உன் நினைவுகளுக்குள்ளேயே ஒழித்து வைத்துக்கொள்ள எப்படி முடிந்தது உன்னால்.
உன்னை சந்திக்கும்வரை எனக்கு பிடித்த வண்ணம், பிடித்த உடை, என்று எதையுமே அறியாத நான் இன்று அனைத்தயும் அறிகிறேன் உன் விழிகளில் என்னை கண்டு என்னை நானே நேசிக்க ஆரம்பிக்கையில். "உன்னால் என்னை எப்படி இப்படி நேசிக்க முடிகிறது" என்று ஒவ்வொரு முறை நீ என்னை கேட்கும் போதும் சொல்லத் தவிக்கிறேன் நான், "நீ என்னையே எனக்கு காட்டி இருக்கிறாய் அதை விட பெரிதாய் நான் என்ன செய்துவிட்டேன்உனக்கு" என்று. அதையும் சொல்ல மறந்து போனேனே எவ்வளவு பெரிய நன்றி கெட்டவள் நான்.
எப்பொழுதும் என் அருகிலேயே இரு, என் விழிகளை பார்த்துக்கொண்டே இரு,என்றெல்லாம் நான் கேட்கவில்லை இருப்பினும் எப்பொழுதும் என் நினைவுகளின் அருகாமையிலே இரு, என் எண்ணங்களில் கலந்திரு என்று உன்னைப்பிரியும் ஒவ்வொரு நொடியும் சொல்லத்துணிந்தும் சொல்ல முடியாமல் மறைத்துப்போகிறேன்.
தாகத்தில் வந்த விக்கல் கூட நான் நினைத்தது போல் நின்று போகிறது நீ தான் நினைத்திருப்பாய் என்று நினைக்கையில், இதை எப்படி நான்உன்னிடம் சொல்ல மறந்து போனேன்? எப்பொழுதும் இரவு படுத்தவுடன் உறங்கிவிடும் என்னை எப்படி இத்தனை சோர்விலும் இந்த நல்லிரவிலும் என்னை விழிக்கவைத்து உன் நினைவுத்தேடலுக்கு விடை தேடச்சொல்கிறாய்?
ஒரே அலுவலகத்தினுள் நீ எங்கு நின்று சில விநாடி என் பக்கம் திரும்பினாலும் எப்படி நான் அறிந்து கொள்கிறேன் நீ என்னை பார்ப்பதை! உனக்காக,உன்னோடு இருப்பதற்காகவே என்று என்னை நினைக்க வைத்தே என் வேலையில் அதிக கவனம் செலுத்த சொல்கிறாயே எப்படி உன்னால் முடிகிறது எனது மிகக்கடினமான பாதையை கூட மிக எளிதாக கடந்து போகச்செய்துவிடுகிறாய்!
உன் காதலின் ஆழம் கேட்டதற்கு உன் வயதை சாட்சி ஆக்குகிறாய்! காரணமே இன்றி என் இதழ்களுக்கு புன்னகையையும் தருகிறாய், விழிகளுக்கு கண்ணீரையும் தருகிறாய்!உன்னிடம் வார்த்தைகளை உதிர்க்க சொன்னால் மௌனித்து என்னை திண்டாடவும் வைக்கிறாய். மௌனமாய் இருஎன்றால் விழிவாலை வீசியே என்னை கொள்கிறாய்! என்ன தான் செய்வேன் நான்!
வீட்டில் பொய் சொல்லி விட்டு வெளியே வா என்று வற்புறுத்தியதும் இல்லை நானாக கேட்டாலும் நான் நினைத்தது போல் "இது உனக்கு பிரச்சனையை தரும்" என்று சொல்லிவிடுகிறாய், வீட்டில் இருக்கையில் அநாவசியமாய் என்னை அழைத்து தொந்தரவு செய்ததும் இல்லை என்னையும் அனுமதித்ததுமில்லை.எப்படி உன்னால் என்னை உன்னுள் ஆழமாய் வைத்து இவ்வளவு எளிதாய் காக்கமுடிகிறது? நீ எப்படி இவ்வளவு சரியாய் இருக்கிறாய்?
எப்படி தான் நீ சரியாக இருந்தாலும் உனக்கு இருக்கும் அலுவல் வேலைகளுக்கு மத்தியில் உன்னை தீண்டிவிட்டு போன எனது ஏக்கம் தொடர்ந்து நீ அனுப்பும் குறுஞ்செய்தியை நான் படிப்பதை பார்க்கும்பொழுது யாரேனும் கவனித்து விடுவார்களா என்று நீ தடுமாறுவதில் அறிந்து விடுகிறேன் உன்னை! கடக்கும் சாலையிலும், ஏற்கும் பயணங்களிலும் என்னை யார் கவனிக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்கும் நான் இரவு தாமதமாக வீடு திரும்புகையில் யாரும் அறியாமல், நானும் அறியாமல் வீடு வரை நீ தொடர்ந்து வந்ததை எப்படி கவனியாமல் இருந்திருப்பேன். "போன் பன்னா எடுக்க மட்டேண்கிற? கிளம்பும்போது போன் பன்னவேண்டியதுதான?" என்று திட்டும் அப்பாவிடம் நான் எப்படி சொல்வேன் நீ எனக்கு துணையாய் வீடுவரை வந்து விட்டுச்சென்றாய் என்று?
சில மணிகளில் முடிந்து போகும் எனது பேருந்துப்பயண வேளையின் ஒவ்வொரு நொடியும் நீ என்னுள் நிறைந்திருந்தது யாருக்குத் தெரியும் கனவுப் பயணம் முடிகையில் கனக்கும் என் இதயத்தை தவிர! நீ மட்டும் எப்படி அறிவாய்?
காலை வேளையில் நீ வண்டியில் வந்து இறங்கியவுடன் கலையாமல் கலைந்திருக்கும் உன் கூந்தலுக்கும், மாலையில் கசங்கிப்போகும் உன்சட்டைக்கும் அதன் மேல் சோர்ந்திருக்கும் உன் முகத்திற்கும், உன்னை யாரும் கவனிக்காத போதும் நீ சரியாய் இருப்பதற்கும், கவனிக்கிற போது கவனமாய் இருப்பதற்கும் என்றுமே நான் ரசிகை என்பதையும் நான் உன்னிடம் சொன்னதாய் எனக்கு ஞாபகம் இல்லை.
சாலையில் யாரோ ஒருத்தியாய் என்னை கடந்து செல்கையிலும் யாரும் அறியாமல் நான் மட்டும் அறியும்படியாக கண்களை சிமிட்டி விட்டுச் சென்றபோதும், என் அலுவல் பணியை முடிக்க மாலை தாமதமாகும்போது உன் வேலையை முடித்திருந்த போதும் வேலை இருப்பதாய் அங்கும் இங்கும் வெட்டியாய் சுற்றிக்கொண்டிருந்த போதும், என் புன்னகையில் மறைந்துகிடந்த வேதனையை அறிந்து ஆறுதலாய் பேசும் போதும் அறிந்தேன் முழுதாய் உன்னை! இதை எதையுமே நான் உன்னிடம் சொல்லாதபோதும் "உன் ஒவ்வொரு அசைவிலும், முடிவிலும், தடுமாற்றத்திலும் நான் எனக்கான காதலை காண்கிறேன்" என்றாயே எப்படி அறிந்தாய் என்னை?
நீ விளையாட்டாய் பேசும் வார்த்தைக்கு கூட அர்த்தம் தேடி என்னுள் என்னை தொலைக்கத் தவிக்கிறேன், தொலைத்த என்னை மீட்க உன் காதல் நீளத் தவிக்கிறேன், தனிமையில் தவிக்கும் நொடிகள் யாவும் உன் கைசிறையில் அடையத் தவிக்கிறேன், விலகிச்செல்லாதே என் நினைவுகளில்கலந்திரு என்று சொல்லத்தவிக்கிறேன். என் தவிப்புகள் யாவும் என்றேனும் தனியக் காண்கையில் நான் முழுதாய் உன்னுள் கரையத் தவிக்கிறேன்!
இப்படி அப்படி என நான் உன்னை முழுதாய் அறிந்திருக்கிறேன் என்று நினைத்ததிலும் இத்தனை வருடங்கள் கழித்து உன்னிடம் தோற்றுப்போவேன் என்று நினைத்திடவில்லை. காதல் கடிதம் போட்டியில் கலந்து கொள்ளட்டுமா? என்று உன்னிடம் கேட்க தவித்துதான் நான் நிற்கிறேன் என்பதை எப்படி நீ அறிந்தாய்? "சொல்ல மறந்ததை பற்றி எழுது" என்றாயே. வார்த்தைகளன்றி இங்கு என் மௌனத்தையும் நீ நேசித்து அறிகிறாய் என்பதை இப்பொழுதுதான் முதன்முதலில் அறிகிறேன்.
நான் சித்தரித்து மறைத்துவைத்திருந்த ஒவியம் உயிர் கொண்டு நம்மில் கலந்து வருடங்கள் கடந்துவிட்ட போதும் இன்றும் உன் காதல் தூரலை ஏந்தி அதை உன்னிடம் சொல்லமுடியாமல் நான் தவித்துக்கொண்டு தான் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன் எனக்காக நீ இந்த காதல் கடிதத்தைசரி பார்த்தபோது!!!!!!
'நீ, வா, போ 'என்று ஒரு முறையாவது கூப்பிடு என்றென்னை எத்தனை முறை கேட்டிருப்பாய் உனது அந்த ஆசையையும் இங்கு நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தோடு...
இப்படிக்கு
உன்னவள்
Tweet |
காதல் கடிதம் போட்டியில் மிக உற்சாகமாய் கலந்து கொண்டதற்கு தங்களுக்கும், தங்களை உற்சாகபடுத்திய தங்கள் குடும்பத்திநறுக்கும் மிக உற்சாகமான நன்றிகள். இயல்பான நடையில், பலவித ஏக்கங்களுடனும் காதலுடனும் நகர்ந்த உங்கள் காதல் கடிதத்தை மிகவே ரசித்துப் படித்தேன், சில வாக்கியங்களை மீண்டும் மீண்டும் வாசித்துப் பார்த்தேன், அவற்றில் அத்தனை காதல்.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
மூடிய இதயப்பாரங்கள் எல்லாம் காதல்க்கடிதம் மூட்டிவிடுகின்றது அன்பின் வழிப்பாதையை! அருமையான காதல் ஏக்கம் நிதாணம் என படிக்க சுவையாக இருக்கு போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDelete//"போன் பன்னா எடுக்க மட்டேண்கிற? கிளம்பும்போது போன் பன்னவேண்டியதுதான?" என்று திட்டும் அப்பாவிடம் நான் எப்படி சொல்வேன் நீ எனக்கு துணையாய் வீடுவரை வந்து விட்டுச்சென்றாய் என்று?//
ReplyDeletearumai
அருமையான காதல் கடிதம்.. வாழ்த்துகள்!!
ReplyDeleteசபாஷ் சரியான போட்டி.
ReplyDeleteகாதல் நன்றாகவே வெளிபடுத்தப் பட்டிருக்கிறது. எச்சரிக்கை உணர்வும் குழப்பமும் கொஞ்சம் தெரிகிறது.
அம்மா! நீங்கள் எவ்வளவு எழுத்துத் திறமையை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
பாராட்டுக்கள்! பரிசு வெல்லவும் வாழ்த்துக்கள்
ஹைலைட் செய்யப்பட்ட வரிகள் உட்பட காதல் (கடிதம்) ரசிக்க வைத்தது... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ReplyDelete//நீ, வா, போ 'என்று ஒரு முறையாவது கூப்பிடு என்றென்னை எத்தனை முறை கேட்டிருப்பாய் உனது அந்த ஆசையையும் இங்கு நிறைவேற்றி விட்ட சந்தோஷத்தோடு...//
ReplyDeleteஅட அட கூப்பிடாங்க பாத்துகங்க ஒவ்வொரு வரிகளிளிலும் காதல் தெறிக்கிறது அருமை
முன்னெப்போதும் இல்லாத சந்தோசம் இப்போது இருந்திருக்குமே?.சுவையான கடிதத்துக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசுவையான காதல் கடிதம். போட்டி பலமாய் இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள்....
ReplyDeleteகதை சுவையாக இருக்கிறது வெற்றி நிச்சயம், வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteவெற்றி பெற வாழ்த்துகள்...
//காரணமே இன்றி என் இதழ்களுக்கு புன்னகையையும் தருகிறாய், விழிகளுக்கு கண்ணீரையும் தருகிறாய்!//
ReplyDeleteஎவ்வளவுதான் குழப்பமாக இருந்தாலும் காதல் என்பது மட்டும் நிலையானது என்பதை அறுமையாக விளக்கிய வார்த்தை ஜாலம்.
//என் மௌனத்தையும் நீ நேசித்து அறிகிறாய்//
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்... என்று உங்கள் உள்ளம் உற்சாகமாக பாடியிருக்குமே!!
வாழ்த்துக்கள்!!!
எத்தனை நாளாய் மறைத்து வைத்திருந்த உணர்வுகளோ!
ReplyDeleteஇங்கு காட்டாறு போல இல்லாமல் அமைதியாக ஒரு ஆறுபோல எல்லோரையும் தொட்டுச் செல்லுகிறது.
//எப்படி உன்னால் என்னை உன்னுள் ஆழமாய் வைத்து இவ்வளவு எளிதாய் காக்கமுடிகிறது? நீ எப்படி இவ்வளவு சரியாய் இருக்கிறாய்?//
ரொம்பவும் ரசித்த வரிகள்.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
உணர்வுகளை அற்புதமாக சொல்லி இருக்கிறார்... இது போட்டிக்கு எழுதியது போல் இல்லை...
ReplyDeleteஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை திறமை? அருமை.
ReplyDeleteகடைசி பாரா சூப்பருங்கோ...
ReplyDeleteசிறிதும் செயற்கை இல்லாத இயல்பான எண்ண ஓட்டம். பல முறை படித்து ரசிக்க வைக்கிறது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநான் மிகவும் விரும்பி ரசித்த கடிதம் ... வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஒளித்து வைத்த காதலையெல்லாம் ஒளிர விட்டு உரியவருக்குத் தெரிவிக்கும் பாங்கு அழகு.
ReplyDeleteபாராட்டுக்களும், வாழ்த்துகளும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான காதல் கடிதம்.. வெற்றி பெற வாழ்த்துகள்!!
ReplyDelete"தொலைத்த என்னை மீட்க உன் காதல் நீளத் தவிக்கிறேன், தனிமையில் தவிக்கும் நொடிகள் யாவும் உன் கைசிறையில் அடையத் தவிக்கிறேன், விலகிச்செல்லாதே என் நினைவுகளில்கலந்திரு என்று சொல்லத்தவிக்கிறேன். என் தவிப்புகள் யாவும் என்றேனும் தனியக் காண்கையில் நான் முழுதாய் உன்னுள் கரையத் தவிக்கிறேன்!"
ReplyDeleteஅழகான வரிகள்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.