20 Jul 2013

என் காதலானவனுக்கு - காதல் கடிதப் போட்டி

திடங்கொண்டு போராடு சீனிவாசன் அவர்களுக்கு..

நான் இளமதி.. தங்களின் காதல் கடிதம் போட்டி பற்றி எனது சகோதரர் மூலம் அறிந்தேன்.நான் வலைப்பதிவர் கிடையாது.ஆனால் என் சகோதரர் தங்களுக்கு மிகவும் தெரிந்த வலைப்பதிவர் தான்.. அவர் பெயர் அரசன். நானும் இந்த போட்டிக்கான சிறு முயற்சியில் இறங்கினேன் அதன் விளைவு தான் இந்த காதல் கடிதம்.. இதையும் தாங்கள் தங்கள் வலைப்பதிவின் போட்டிக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி 
இளமதி..

என் காதலானவனுக்கு....

இதை எப்படி ஆரம்பிப்பதென்றெ எனக்கு தெரியவில்லை, ஆனாலும் எழுது என்று மனம் கட்டளையிடுவதை மீற முடியாமல் முதல் நாள் பள்ளிக்கு செல்லும் மழலையின் பயம் கலந்த தவிப்பின் மனநிலையில் தான் இதை எழுத தொடங்குகிறேன்..

நான் கடிதம் எழுதுகிறேன் அதவும் காதல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி வரை என்னால் நம்ப முடியவில்லை..

ஆம் காதல் கடிதம் தான் இது..என் வெட்க புன்னகையை சுமந்து கொண்டு என்னவனை சென்று சேரப்போகின்ற காதல் கடிதம்...

உன்னை என்னுள் வைத்து கொண்டு, கடிதத்தை நான்  எழுதும் இந்த தருணம் எத்தனை மென்மையாய் உணருகிறேன் தெரியுமா? உன்னை பற்றி நினைக்கயிலேயே என் முகம் அழகான புன்னகையை தத்தெடுத்து விடுகிறது .என்னவனை-உன்னை சந்தித்த அந்த நிமிடத்தை இன்று நினைத்து பார்த்தாலும் புதிதாய் பிறந்த குழந்தையின் பூம்பாதங்களை தொட்டு முத்தமிட்டு பரசவப்படும் மகிழ்ச்சியை அடைகிறேன்..

பூங்காவில் ஒரு மாலை நேரம் இளம்தென்றல் மனதை இதமாக்க அந்தி பொழுதை மெளனமாக ரசித்தபடியே அமர்ந்திருந்த என்னை, யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டே வந்த நீ என் காலை மிதித்துவிட, கோபப்பார்வையை வீசியபடி உன்னை திட்டுவதற்காக என் மௌனம் கலைக்க உன் கண்களை சந்தித்த நான் ஒரு சில வினாடிகள் அப்படியே நின்றுவிட்டேன்.ஏனெனில் நீ பேசவே தேவையில்லாதபடி உன் கண்கள் உனது மன்னிப்பை வேண்டிக்கொண்டிருந்தது. எதனாலோ உன்னை திட்ட முடியவில்லை அன்று, மௌனமாய் விலகி நடந்துவிட்டேன்..

உன் கண்களை சந்தித்த அந்த நொடியில் இருந்து யோசித்து கொண்டிருக்கிறேன், கண்களா அது?? ஒரு சில வினாடிகளில் சில மின்னல் கீற்றுகளை என் வசமாக்கி சென்றுவிட்டது அது...

பார்த்ததும் காதல் அதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை,ஏன் காதல் என்ற வார்த்தை கூட பிடிக்காது. ஆனால் என்னவன் உன் கண்களை சந்தித்த பின்பு, காதலில் விழுந்துவிடவில்லை தான் -இருந்தும் என்னுள் ஒரு மின்னல் மாற்றம் நிகழ்ந்ததென்னவோ  நிஜம்..

அடுத்தடுத்து நடந்த சந்திப்புகள் என்னவோ இயல்பானது தான், ஆனால் என் இயல்பை முற்றிலுமாய் தொலைத்த சந்திப்புகள் அவை..எது என்னை உன் பக்கம் ஈர்த்தது என்று கேட்டால் தெரியாது!!எந்த நிமிடம் அந்த அழகான கண்கள் என்னுள் காதல் விதைத்தது என்று கேட்டால் அதுவும் எனக்கு தெரியாது!!உன்னுடனான அந்த அழகான சந்திப்புகள் இன்னுமும் என்னுள்  நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது..

மறக்க முடியாத தருணங்களில் ஒன்று நீ என்னை முதன்முதலாக மதி என்றழைத்ததுதான்.. உன்னையன்றி என்னை அத்தனை ஜீவனாய்  அழைத்ததில்லை யாரும்..என் பெயரையே நிதம் நிதம் ரசிக்க வைத்தவன்..உத்தரவு கேட்காமலேயே என் இதய சிம்மாசனத்தின் இடம் நிறைத்தவன்..

ஏன் காலம் காலமாக பெண்களைத்தான் ஆண்கள் வர்ணிக்க வேண்டுமா என்ன?? இதோ ஒரு சந்தர்ப்பம் அதை மாற்ற உன்னை வர்ணிக்கிறேன்..

நீ தான் எத்தனை மென்மையானவன் !!!உன் கண்கள் மென்மையை தத்தெடுத்து விட்டதா என்ன??

புன்னகை குழந்தையின் தந்தையா நீ??எப்பொழுதும் உன் உதடுகளில் தவழ்ந்தே கிடக்கிறதே!!!

நீ என்னை கண்டிக்கும் பொழுது உன் கோபம் என்னுள் எத்தனை காதல் விதை விதைத்துவிட்டது தெரியுமா??

நீ என்னருகில் இடைவெளிவிட்டு அமரும் பொழுது அந்த இடைவெளியில் எத்தனை நெருக்கத்தை தருகிறாய் தெரியுமா??

தெரியாமல் உன் விரல் எனை தீண்டும் பொழுது,உன் விரலில் வந்து போகும் நடுக்கம் நீ எத்தனை பண்பானவன் என்பதை காட்டுகிறது தெரியுமா??

என்னை நோக்கி நீ நடந்து வருகையில் உன் கம்பீரமான நடையை என்னையறியாமல் எத்தனை முறை ரசித்திருக்கிறேன் தெரியுமா???

இந்த பிரபஞ்சத்தில் வேறு சத்தம் என்பதே இல்லாதது போல் உன் குரலை கேட்டு எப்படி லயித்திருக்கிறேன் தெரியுமா??

இத்தனை வசீகரமானவனா நீ??? உன்னை வர்ணித்தது போதும் என்று தோன்றவே மாட்டேன் என்கிறதே.. ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு பரிமாணத்தில் என்னை கவர்ந்திழுக்கிறாயே, உன் வசீகரத்தில் என்னுள் எதோ சிலிர்த்து என் பெண்மையை உணர செய்கிறதே..

இப்படியாய் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி என்னிலிருந்து என்னையே வெளியேற்றிவிட்டு நீயாகவே மாறிப்போனேனே..

உன்னை கேட்காமலேயே உன்னை எனக்கானவன் என்று என்னுள் தீர்மானித்து விட்டேன்.. ஆம் ! நீ எனக்கானவன் தான், என் பெண்மையை உன் கண்களாலேயே தட்டி எழுப்பிய நீ எனக்கானவனாய் இல்லாமல் வேறு யாருக்கானவனாய் இருக்க முடியும் ?? உன்னை மரியாதை பன்மையில் அழைக்க முயன்று தோற்றுவிட்டேன்.. நான் ஏன் உன்னை மரியாதையாய் அழைக்க வேண்டும்? என்னுள் கலந்து சுவாசமாகி போன உன்னை நான் என் இஷ்டப்படி தான் அழைப்பேன். உன்னிடம் எனக்கான உரிமையை நான் கேட்டு நீ தரவேண்டுமா என்ன??

நான் உன்னிடத்தில் காதலை யாசிக்கவில்லை.. நீ என்னை காதலித்து தான் ஆக வேண்டும் என்று கட்டளையிடவும் இல்லை. என்னுள் பாரம் கூடிக்கொண்டே போகிறது.உன்னையும் உன் ஒவ்வொரு அசைவுகளையும் என்னுள் சேமித்து வைப்பதால்..என் சிந்தனை,என் செயல் முழுவதிலும் நீயே வியாப்பித்திருக்கிறாய்..என் தோழனாய்,தாய் தந்தை என எனக்கு யாதுமானவனாய் மாறிப்போன உன்னிடத்தில் என் நிலையை சொல்லுவதில் தவறொன்றுமில்லையே ...

என்னைவிட அதிகமாய் உன்னை ஒருவரால் நேசிக்க முடியுமா என்ன? கண்டிப்பாக கர்வம் கொள்வேன், என்னைவிட ஒருவரால் உன்னை மனத்தில் நிறைக்க முடியாது என்று..

என் மனம் நிறைத்தவனே!!! நீ என்னை காதலிப்பாயோ?மாட்டாயோ? உன்னைப்போல் ஒருவனை நான் காதலிக்கிறேன் என்பதே என்னை கௌரவப்படுத்தும்.. ஆம் !! நான் காதலிக்கிறேன் உன்னை, உன்னிடத்தில் என் தனித்துவத்தை விரும்பியே தொலைக்க நினைக்கிறன்.உன் ஜீவனுள் கலந்து கரைய துடிக்கிறேன்..நான் பெண் என்ற பூரணத்துவத்தை என்னவனான உன்மூலம் அடைய நினைக்கிறன்..

மனதில் உள்ளதை உன்னிடம் பகிர்ந்ததால் பாரம் குறைந்து கண்களில் கண்ணீர் நிறைகிறது, அனால் உதடுகளிலோ புன்னகை தவழ்கிறது..

என் யாதுமானவனே !!! இது கடிதம் இல்லை,என் ஜீவன். என் ஜீவனை உன்னிடத்தில் அனுப்புகிறேன், அதுவரை உன்மேல் நான் கொண்ட காதலால் ஜீவித்திருப்பேன்.. உன் பதில் எனக்கு சாதகமாக இருந்தால் உன் காதலோடு என் ஜீவனை கலந்திடுவேன், அன்றி பாதகமாக இருந்தால் நீ திருப்பி அனுப்பும் என் ஜீவனை ஏற்காது என் காதலை மட்டும் சுவாசித்து கொண்டிருப்பேன்..

எப்படியும் நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன் நான் உன்மேல் கொண்ட காதலின் ஜீவன் சாகும் வரை..

என்னை தொட்டு தழுவும் உன் செல்ல பார்வையின் இதம் 
அந்த தென்றலிடம் கூட நான் காணவில்லை..
உன் மடி சேர விரும்பும் என்னை 
மறுக்காமல் ஏற்பாயா???
என்னை சிறையெடுப்பாயா அன்றி 
சிதைந்து போக சொல்வாயா???
உனக்குள் கரைந்து போக அனுமதிப்பாயா?
என் உயிர் உருகும் ஓசை கேட்கிறதா?
காதலாகி கசிந்துருகிறேன் 
என்னை காதல் செய்வாயா???
என் காதலானவனே !!!

இப்படிக்கு 
உன்னவளாக விரும்பும் நான்..

15 comments:

  1. "வெட்க புன்னகையை சுமந்து கொண்டு என்னவனை சென்று சேரப்போகின்ற காதல் கடிதம்"

    "புன்னகை குழந்தையின் தந்தையா நீ??எப்பொழுதும் உன் உதடுகளில் தவழ்ந்தே கிடக்கிறதே!!!"

    "என்னுள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி என்னிலிருந்து என்னையே வெளியேற்றிவிட்டு நீயாகவே மாறிப்போனேனே"

    "என்னுள் பாரம் கூடிக்கொண்டே போகிறது.உன்னையும் உன் ஒவ்வொரு அசைவுகளையும் என்னுள் சேமித்து வைப்பதால்..என் சிந்தனை,என் செயல் முழுவதிலும் நீயே வியாப்பித்திருக்கிறாய்"

    மிகவும் இரசித்த வரிகள்...

    அழகானதோர் காதல் கடிதம்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
  2. ஒவ்வொரு வரிகளிலும், ஒவ்வொரு எழுத்துக்களிலும் உண்மையான மிக அழகான காதலை உணர முடிகிறது. கற்பனைக் கடிதம் போலவே நினைக்க முடியவில்லை. மிகவும் சுவையாக ருசியாக அமைந்துள்ளது.

    முழுவதுமே நான் ரஸித்தேன் என்றாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒருசில வரிகள் இதோ:

    1]

    நீ என்னை கண்டிக்கும் பொழுது உன் கோபம் என்னுள் எத்தனை காதல் விதை விதைத்துவிட்டது தெரியுமா?

    2]

    நீ என்னருகில் இடைவெளிவிட்டு அமரும் பொழுது அந்த இடைவெளியில் எத்தனை நெருக்கத்தை தருகிறாய் தெரியுமா??

    3]

    தெரியாமல் உன் விரல் எனை தீண்டும் பொழுது,உன் விரலில் வந்து போகும் நடுக்கம் நீ எத்தனை பண்பானவன் என்பதை காட்டுகிறது தெரியுமா??

    4]

    இந்த பிரபஞ்சத்தில் வேறு சத்தம் என்பதே இல்லாதது போல் உன் குரலை கேட்டு எப்படி லயித்திருக்கிறேன் தெரியுமா??

    5]

    இத்தனை வசீகரமானவனா நீ??? உன்னை வர்ணித்தது போதும் என்று தோன்றவே மாட்டேன் என்கிறதே.. ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் பொழுதும் ஒவ்வொரு பரிமாணத்தில் என்னை கவர்ந்திழுக்கிறாயே, உன் வசீகரத்தில் என்னுள் எதோ சிலிர்த்து என் பெண்மையை உணர செய்கிறதே..

    6]

    இப்படியாய் என்னுள் கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி என்னிலிருந்து என்னையே வெளியேற்றிவிட்டு நீயாகவே மாறிப்போனேனே..

    7]

    உன்னை கேட்காமலேயே உன்னை எனக்கானவன் என்று என்னுள் தீர்மானித்து விட்டேன்.. ஆம் ! நீ எனக்கானவன் தான், என் பெண்மையை உன் கண்களாலேயே தட்டி எழுப்பிய நீ எனக்கானவனாய் இல்லாமல் வேறு யாருக்கானவனாய் இருக்க முடியும் ?? உன்னை மரியாதை பன்மையில் அழைக்க முயன்று தோற்றுவிட்டேன்.. நான் ஏன் உன்னை மரியாதையாய் அழைக்க வேண்டும்? என்னுள் கலந்து சுவாசமாகி போன உன்னை நான் என் இஷ்டப்படி தான் அழைப்பேன். உன்னிடம் எனக்கான உரிமையை நான் கேட்டு நீ தரவேண்டுமா என்ன??

    8]

    நான் உன்னிடத்தில் காதலை யாசிக்கவில்லை.. நீ என்னை காதலித்து தான் ஆக வேண்டும் என்று கட்டளையிடவும் இல்லை. என்னுள் பாரம் கூடிக்கொண்டே போகிறது.உன்னையும் உன் ஒவ்வொரு அசைவுகளையும் என்னுள் சேமித்து வைப்பதால்..என் சிந்தனை,என் செயல் முழுவதிலும் நீயே வியாப்பித்திருக்கிறாய்..என் தோழனாய்,தாய் தந்தை என எனக்கு யாதுமானவனாய் மாறிப்போன உன்னிடத்தில் என் நிலையை சொல்லுவதில் தவறொன்றுமில்லையே ...

    9]

    என்னைவிட அதிகமாய் உன்னை ஒருவரால் நேசிக்க முடியுமா என்ன? கண்டிப்பாக கர்வம் கொள்வேன், என்னைவிட ஒருவரால் உன்னை மனத்தில் நிறைக்க முடியாது என்று..

    10]

    என் மனம் நிறைத்தவனே!!! நீ என்னை காதலிப்பாயோ?மாட்டாயோ? உன்னைப்போல் ஒருவனை நான் காதலிக்கிறேன் என்பதே என்னை கௌரவப்படுத்தும்.. ஆம் !! நான் காதலிக்கிறேன் உன்னை, உன்னிடத்தில் என் தனித்துவத்தை விரும்பியே தொலைக்க நினைக்கிறன்.உன் ஜீவனுள் கலந்து கரைய துடிக்கிறேன்..நான் பெண் என்ற பூரணத்துவத்தை என்னவனான உன்மூலம் அடைய நினைக்கிறன்..

    11]

    மனதில் உள்ளதை உன்னிடம் பகிர்ந்ததால் பாரம் குறைந்து கண்களில் கண்ணீர் நிறைகிறது, அனால் உதடுகளிலோ புன்னகை தவழ்கிறது..

    12]

    என் யாதுமானவனே !!! இது கடிதம் இல்லை,என் ஜீவன். என் ஜீவனை உன்னிடத்தில் அனுப்புகிறேன், அதுவரை உன்மேல் நான் கொண்ட காதலால் ஜீவித்திருப்பேன்.. உன் பதில் எனக்கு சாதகமாக இருந்தால் உன் காதலோடு என் ஜீவனை கலந்திடுவேன், அன்றி பாதகமாக இருந்தால் நீ திருப்பி அனுப்பும் என் ஜீவனை ஏற்காது என் காதலை மட்டும் சுவாசித்து கொண்டிருப்பேன்..

    13]

    எப்படியும் நான் வாழ்ந்து கொண்டுதான் இருப்பேன் நான் உன்மேல் கொண்ட காதலின் ஜீவன் சாகும் வரை..

    14]

    உன் மடி சேர விரும்பும் என்னை மறுக்காமல் ஏற்பாயா???
    என்னை சிறையெடுப்பாயா அன்றி சிதைந்து போக சொல்வாயா???
    உனக்குள் கரைந்து போக அனுமதிப்பாயா?

    போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ஒவ்வொரு வரியும்... அழகிய வர்ணனையுடன் கடிதம் அருமை...

    போட்டியில் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. காலம் கடந்து காதலை நினைக்கும்போதுதான் புதிதாகப் பிறந்த பூம்பாவையின் பாதங்கள் உவமை எல்லாம் தோன்றும் என்று எனக்குத் தோன்றியது. கரண்டாக அப்போது எழுதும் கடிதங்களில் இந்த உவமை பொருந்தாது என்றும் எனக்குத் தோன்றுகிறது!

    ஆண்கள் வர்ணிக்கப்படுவதை இந்தப் போட்டியில் ஆங்காங்கே பார்க்க முடிகிறது!

    'நீயாகவே மாறிப்போன நான்' - ஆஹா...
    அடுத்தடுத்த வரிகளிலும் உணர்வின் வெளிப்பாடு...

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் எழுதிய எல்லாக் கடிதங்களிலும் ஆண்களைத்தானே வருணிக்க முடியும். தன்னைத் தானே வர்ணித்துக் கொள்ள முடியாதே :)

      ஆண்கள் தான் வர்ணிப்பார்கள் என்ற பொதுப்புத்தி நம் சமூகத்தில் இருக்கிறது. ஆனால் சங்ககாலம் தொட்டே பெண்கள் ஆண்களை அதிகமாக வர்ணித்திருக்கிறார்கள் என்பது சுவாரசியம்.

      Delete
  5. அய்ய்யோ! என்ன சீனு இது குடும்பமே எழுத்தாளக் குடும்பமா இருக்கே. பின்னி எடுத்துட்டாங்க உங்க சகோதரி. கவிதையே தேவையில்லை கடிதமே கவிதையா ஜொலிக்குது. இந்தப் போட்டியில மூணு பரிசும் பெண்களுக்குத் தான் கிடைக்கும் போல இருக்கே!
    ஆண்களே!இன்னைக்குத்தான் கடைசி நாளாம். சீக்கிரம் ஒரு நல்ல கடிதமா எழுதுங்க.

    ReplyDelete
  6. மிக அழகான காதல் நினைவுகள்.. அருமை அருமை.

    ReplyDelete
  7. கோபத்தில் கூடக் காதலைப் பார்க்கிறீர்களா? தூர இருந்தாலும் நெருக்கம்!
    உங்கள் உணர்வுகளை மென்மையாக, அதே சமயம் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
    போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அருமை சீனு...எனக்கு சுட்டுப் போட்டாலும் இதுமாதிரி எழுத வராது..

    ReplyDelete
  9. அழகான காதல் கடிதம். வெற்றி பெற வாழ்த்துகள்......

    ReplyDelete
  10. வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அழகான காதல் வரிகள்... ரசிக்கும் படி உள்ளது... இவுங்கல்லாம் பிளாக் எழுத வந்தா நாம நடைய கட்ட வேண்டியதுதான்... அழகாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் அவருக்கு... வெற்றி பெறட்டும்...

    ReplyDelete
  12. //இது கடிதம் இல்லை,என் ஜீவன். என் ஜீவனை உன்னிடத்தில் அனுப்புகிறேன்//

    வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. இக்கடிதம் படித்த பின்பும் காதலிக்காமல் அவனால் இனி ஒருநொடியையும் கடக்கவே முடியாது.

    நான் நடுவராக இருந்தால் முதல் பரிசு இக்கடிதத்திற்கு தான்.

    வாசகன் இடத்திலிருந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்.காதலிலும், போட்டியிலும்.

    ReplyDelete