4 Jun 2012

சென்னை டூ சென்னை


வேகத்தின் உச்சத்தைத் தொட்டு செல்லும் வாகனங்களின் நெரிசலும், சாலையை கடக்க தயாராக இருக்கும் மக்களின் கூட்ட நெரிசலும், இந்த இரு நெரிசலையும் கட்டுக்குள் கொண்டுவந்து போக்குவரத்தை சீராக்கும் காவலரையும் பார்த்தால் புரியும் சென்னை பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத நகரம் என்று. இப்படிப்பட்ட பரபரப்பான சாலையில் இருந்து விலகி மிருதுவான மணலில் நடக்க ஆரம்பிக்கும் உங்களை வரவேற்பது ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையான அழகான அமைதியான ரம்யமான மெரினாவாகத் தான் இருக்கும். 
 
திகாலை சூரிய உதயத்தில் உடற்பயிற்சி செய்ய வருபவர்களில் இருந்து சூரிய அஸ்தமனத்தில் உடலின் களைப்பைப் போக்க வருபவர்கள் வந்து செல்லும் வரை உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெரினா கோடிஸ்வரனிலிருந்து தெருக்கோடி ஈஸ்வரன் வரை அனைவரையும் சமமாகவேப் பார்க்கிறது. இங்குவரும் அனைவரின் கால்களையும் பாசமாக வருடும் கடல் அலைகளும், சுமைகளை சுகமாக்க மெத்தை விரித்த கடற்கரையும், சென்னையின் மொத்த பரபரப்பையும் தன்முன் மண்டியிட வைப்பதில் பெரும்பங்கு ஆற்றிவருகிறது.

மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து ஏதோ ஒரு வேலைக்காக சென்னைக்கு வந்தவர் என்னுடன் மின்சார ரயிலில் பயணிக்கும் பொழுது " பிள்ளே இந்த மேரினாக்கு எப்படி போகணும், ராத்திரி பஸ்ஸ பிடிக்கிற வரைக்கும் அங்க நின்னா பொழுது போயிரும் பாரு" என்று ஆர்வத்தோடு அவர் கேட்டதில் நான் ஆச்சரியப் பட எதுவுமே இல்லை. சென்னைக்கு சுற்றுல்லா வந்தாலும் சரி, ஏதோ ஒரு வேலைக்காக வந்தாலும் சரி மெரீனாவில் தங்கள் கால்களை நனைக்காமல் பெரும்பாலானோர் ஊர் திரும்புவதில்லை. வெளியூரில் இருந்து வருபவர்களுக்கே மெரினா இவ்வளவு பிடிக்கும் என்றால் சென்னைவாசிகளுக்கு கேட்கவா வேண்டும்.

வாரம் முழுவதும் உழைத்த களைப்பைப் போக்குவதற்காக சனி ஞாயிறு மாலை வேளைகளில் சென்னையே கடல் அலைகளில் மிக உற்சாகமாக விளையாடிக் கொண்டிருபதைக் காணலாம். பௌர்ணமி இரவு நிலவொளியில் கருநீல நிறத்தில் ரம்மியமாக இருக்கும் கடற்கரையில், கடல் அலைகள் கால்களை நனைக்க முயலும் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு நண்பர்களுடன்(!) பேசிப்பாருங்கள் அதைவிட இன்பமான நிமிடம் உலகில் வேறு என்ன இருக்க முடியும். எப்போதாவது நேரமும் நண்பர்களும் உடன் இருந்தால் ஒருமுறை அண்ணா சமாதியிலிருந்து கலங்கரை விளக்கு வரை நடந்து பாருங்கள். தூரமும் குறையாது, கலங்கரை விளக்கும் நெருங்காது, உங்கள் கால்களும் வலிக்காது. 

அண்ணா சமாதியிலிருந்து கலங்கரை விளக்கு பார்பதற்கு மிக அருகில் இருப்பது போல் தோன்றினாலும் கிட்டத்தட்ட மூன்று கி.மீ நீங்கள் நடக்க வேண்டி இருக்கும். இருந்தும் நண்பர்களுடன் பேசிக் கொண்டே கடல் காற்றைக் அனுபவித்துக் கொண்டு கலங்கரை விளக்கு நோக்கி நடக்கும் இடைவெளியில் நீங்கள் பல சுவாரசியமான விசயங்களைப் பார்க்கலாம். காதலும் இருக்கும் காமமும் இருக்கும் அதைக் கண்டு களிக்க பெருங்கூட்டமும் இருக்கும். சென்னை குதிரைக் காவல் படையின் குதிரை பவனி ஜோராக இருக்கும். மெரினாவை அலங்கரிக்கும் புகழ் பெற்ற மனிதர்களின் சிலைகளை கண்டு ரசிக்கலாம்.  பட்டம் விடலாம் கடலை போடலாம், கடலை உயர்ரக(!) பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு அது உங்கள் வயிற்றிக்கு பிடிக்காமல் போகலாம். குறிவைத்து பலூனைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சுடலாம். உங்களுக்குப் பிடித்த நடிகர்களின் புகைப்படங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மணலில் வீடு கட்டி விளையாடலாம். ஒன்றே ஒன்று இங்கு விற்கும் ஐஸ்கிரீம் மட்டும் வாங்கி சாப்பிட்டு விடாதீர்கள் பின்பு வாழ்நாளில் ஐஸ் சாப்பிடுவதையே வெறுத்து விடுவீர்கள். 

அடுத்ததாக அண்ணா சமாதியும், அணையா விளக்குடன் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதியும் முக்கியமான இடங்கள். எம்.ஜி.ஆர் சமாதியில் பலரும் தங்கள் காதுகளை பலமாக அழுத்தி ஏதோ ஒன்றைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.அது என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர் உடன் அவர் கட்டியிருந்த வாட்சையும்  சேர்த்து புதைத்துள்ளார்களாம், அதிலிருந்து வரும் டிக் டிக் சத்தம் தான் கேட்கிறதாம். " எனக்கு கேட்டுச்சி", "சத்தம் இன்னாமா கேக்குது நைனா", மெய்யாலுமே கேக்குது பா" என்ற பலரின் குரல் மட்டும் தான் எனக்குக் கேட்டுள்ளது "டிக் டிக்" கேட்டதே இல்லை. உங்களுக்குக் கேட்டால் மறக்காமல் எனக்குச் சொல்லுங்கள். அண்ணா சமாதியிலிருந்து சிறிது தொலைவில் இருக்கும் தீவுத் திடலில் வருடம் ஒருமுறை பொருட்காட்சி நடக்கும், அம்மன் கோவில் திருவிழாவை ம்யுட்டில் வைத்து சத்தம் இல்லாமல் பார்ப்பது போல் இருக்கும் அந்தப் பொருட்காட்சித் திருவிழா. உலகின் ஏழு அதிசியங்களின் மாதிரியைக் கொண்டு இந்த வருட பொருட்காட்சி நடந்து வருகிறது, நேரம் இருந்தால் சென்று இடிபட்டு வாருங்கள் அவ்வளவு கூட்டம் இருக்கும்.  

எனக்கு மிகவும் பிடித்தமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடம் இருப்பதும் இந்த மெரீனாவில் தான். கடற்கரை மிக அருகிலேயே இருப்பதால் அந்தக் காலத்தில் மீன் பதப்படுத்துவதற்காக உபயோகப் படுத்தப்பட்ட அறை ஐஸ் ஹவுஸ் என்று பிரிட்டிஷாரால் அழைக்கப் பட்டது. சொற்பொழிவு ஆற்றுவதற்காக ந்த இளைஞர் சென்னை வந்த பொழுது ஒருவார காலம் இங்கு தான் தங்கியிருந்தார். அதன் பின் அந்த இளைஞரின் செயல்கள் வானளாவ உயரவே அரசாங்கத்தின் உதவியால் அவர் பெயரிலேயே நினைவு இல்லமாக திறந்தது அவர் ஆரம்பித்த அந்த இயக்கம். அங்கே அவரது அறிய புகைப்படங்களுடன் தியான மையமும் செயல்பட்டு வருகிறது. அந்த இளைஞர் வேறு யாரும் இல்லை, அவர் தான் சுவாமி விவேகானந்தர், அந்த இயக்கம் ராமகிருஷ்ண மடம். அந்த இல்லத்தின் பெயர் விவேகானந்தர் இல்லம் அல்லது வி ஹவுஸ். நேரமிருந்தால் போய் வாருங்கள். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம். 

சென்னை கடற்கரை நகரம் என்பதால் இங்கு கடற்கரைகளுக்குப் பஞ்சமே இல்லை. பெசன்ட் நகர் பீச் என்றறியப்படும் எல்லியட்ஸ் பீச் மெரினாவுக்கு அடுத்த இடம் பெறுகிறது. திருவான்மியூர் பீச்  "பதினாறாவது மாடியில ஒன்றரை கோடி குடுத்து பிளாட் வாங்கினவன் வாக்கிங் போற பீச் மாப்ள அது" என்பான் என் நண்பன். நீங்கள் திரையில் பார்க்கும் நட்சத்திரங்கள் அனைவரையும் தரையில் பார்க்க வேண்டுமா நீலாங்கரை பீச் உங்களை தாரளமாக வரவேற்கும். மூன்று வருடத்திற்கு முன்பு முதன் முறையாக நீலாங்கரை பீச் செல்லும் பொழுது வழியில் வந்த ஒரு வீட்டைக் காட்டி "இது தாம்ல தல வீடு" என்று நண்பன் காட்டிய பொழுது பத்து நிமிடங்கள் அந்த இடத்தை விட்டு நகராமல் வெறிக்க வெறிக்க தாஜ்மகாலைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன். 

"வால பீச்க்கு போவோம் டைம் ஆவுது" என்று என் நண்பன் கையைப் பிடித்து இழுத்த பொழுது " இரு தலயத் தான் பார்க்க முடியல அவரு வீட்டையாவது பாக்க விடேன்" . இப்படி எனக்கு ஏற்பட்ட அனுபவம் உங்களுக்கும் ஏற்படலாம் தயாராகவே செல்லுங்கள். கிழக்குக் கடற்கரை முழுவதுமே பல தனியார் கடற்கரைகளும், ரிசார்ட்டுகளும் உள்ளன. மகாபலிபுரம் செல்லும் வழியில் ரிசர்ட்டுடன் கூடிய "ஹோட்டல் தமிழ்நாடு"  உணவகத்தில் இருக்கும் கடற்கரை பெரிதாகவும் அழகாகவும் இருக்கும். 

மகாபலிபுரம் செல்லும் வழியில் இருப்பது எல்லாமே சுற்றுலாத்தலம் தான். விஜிபி எம்ஜிஎம் தீம் பார்க்குகள் இருப்பதும் இந்த கிழக்குக் கடற்கரை சாலையில் தான். முடிந்தால் தமிழ்நாடு டூரிசம் வழங்கும் ஒருநாள் மகாபலிபுரம் சுற்றுல்லா சென்று வாருங்கள் கட்டணம் மிகக் குறைவு, பார்க்கும் இடங்கள் மிக அதிகம். முக்கியமான விஷயம் நீங்கள் கணினி மூலம் முன்பதிவு செய்ய வேண்டுமானால் குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். (இது தெரியாமல் நாங்கள் அனுபவித்த கொடுமையை தனியொரு பதிவாக எழுதுகிறேன்).

முட்டுக்காடு போட்டிங்,  அரைமணி நேரம் டீசல் போட்டில் செய்யும் பயணம் கொஞ்சம் திரில்லிங் ஆக இருக்கும், அதிலிருந்து பத்து கி.மி தொலைவிற்குள் முதலை பண்ணையும் உள்ளது, பல நூற்றுக் கணக்கான முதலைகளை ஒரே இடத்தில ஒரே இடத்தில பார்பதற்கு வித்தியாசமாக இருக்கும். தமிழக அரசு முதலைப் பண்ணையை சிறப்பாகவே பராமரித்து வருகிறது. இவை அத்தனையையும் பார்த்துவிட்டு முடிவில் நாம் சேரும் இடம் தான் மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம். 

சுற்றுல்லாப் பயணியாக வருபவர்களுக்கு இது சுற்றுல்லாத் தலம், கலைக் கண்களோடு வருபவர்களுக்கு இது ஒரு சிற்பக் கண்காட்சி. ஆன்மீகத்தைத் தேடுபவர்களுக்கு இது ஒரு ஆன்மீகத்தலம். இந்த மூன்று வகையினரையும் இங்கே அதிகமாகக் காணலாம் இந்த மூன்று வகையினரோடு வெளிநாட்டவர்களையும் அதிகமாகக் காணலாம். இங்குள்ள கடற்கரையும் விடுமுறை தினங்களில் நிரம்பி வழியும். இங்கே வெளிநாட்டவர்களுக்கு என்று தனியாக ஒரு கடற்கரை உண்டு. இந்த கடற்கரையினுள் மட்டும் இந்தியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் இந்தியர்கள் என்பதால்(!)

கிழக்குக் கடற்கரை சாலை உங்களுக்கு இன்னும் நிறைவு கொடுக்கவில்லை என்று நீங்கள் எண்ணினாலோ இல்லை உங்கள் கிழக்குக் கடற்கரை சாலை பயணத்தை ஒரு நல்ல 'குடி'மகனாக நிறைவு செய்ய விரும்பினாலோ கவலையே படாதீர்கள் இங்கு இருந்து ஒன்றரை மணிநேர தொலைவில் தான் பாண்டிச்சேரி உள்ளது அங்கே சென்று உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.கிழக்குக் கடற்கரையை தெம்பாக சுற்றச் செல்லும் பலரும் தங்கள்  சென்னை டூ சென்னை  பயணத்தை பாண்டிச்சேரி சென்று தள்ளாடியபடி முடித்துக் கொள்வது வேடிக்கையான விந்தை.  

கிழக்குக் கடற்கரை சாலையில் பயணித்து களைத்திருப்பீர்கள் ஓய்வெடுத்து வாருங்கள் அடுத்ததாக சென்னைக்குள் சுற்றுவோம்.     

26 comments:

  1. ரெண்டு வாரமா வேலை பளுனு சொன்ன...பதிவ பார்த்தா அப்படி தெரியலையே..நீலாங்கரை பீச் தனியாக செல்லும் பெண்களுக்கு ஆபத்தானது என்று நண்பன் சொன்னான்.மெய்யாலுமா?தொடரட்டும்...இணைந்திருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. அண்ணா இத ஒருவாரம் முன்பே எழுதி விட்டேன், பதிவிட தான் முடியவில்லை. எப்பாடு பட்டாவது முடித்துவிட வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் தரும் உற்சாகம் கொண்டு முடித்தும் விட்டேன்.

      Delete
  2. chennai suththi paarrkka vaiththu vitteenga...!

    ReplyDelete
    Replies
    1. என்னோடு சேர்ந்து சுத்தி பார்த்ததற்கு நன்றி சீனி.

      Delete
  3. // மெரினா கோடிஸ்வரனிலிருந்து தெருக்கோடி ஈஸ்வரன் வரை

    // குறிவைத்து பலூனைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் சுடலாம்

    // " எனக்கு கேட்டுச்சி", "சத்தம் இன்னாமா கேக்குது நைனா", மெய்யாலுமே கேக்குது பா"


    // கிழக்குக் கடற்கரை சாலை உங்களுக்கு இன்னும் நிறைவு கொடுக்கவில்லை என்று நீங்கள் எண்ணினாலோ இல்லை உங்கள் கிழக்குக் கடற்கரை சாலை பயணத்தை ஒரு நல்ல 'குடி'மகனாக நிறைவு செய்ய விரும்பினாலோ கவலையே படாதீர்கள் இங்கு இருந்து ஒன்றரை மணிநேர தொலைவில் தான் பாண்டிச்சேரி உள்ளது அங்கே சென்று உங்கள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்


    எனக்கு பிடித்தவை இவை ..


    ரொம்ப நல்லா இருக்கு..super boss..

    ReplyDelete
    Replies
    1. உனக்குப் பிடித்த வரிகள் அனைத்தும் எனக்கும் பிடித்துப் போவது ஆச்சரியம் தான்.

      Delete
  4. ஆஹா சென்னை பீச்சாங்கரை பக்கமாவே கூட்டிட்டு போறீங்க.... :) நல்லாத்தான் இருக்கு....

    தொடருங்கள்.... அடுத்த சென்னை பயணத்தின் போது ஒரு பதிவர் சந்திப்பை அங்கே வைச்சிடுவோம் சரியா.... :)

    ReplyDelete
    Replies
    1. பீச்சாங்கரை பக்கம் தான் சார் காற்று கொஞ்சமாவது வருது. சென்னைக்குள் இருக்கவே முடியல அவ்வளவு வெயில். பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள ஆசை தான். ஆனால் அது பற்றிய தகவல் எதுவுமே தெரியவில்லையே? தெரிந்தால் சொல்லுங்கள் .....உங்கள் சுற்றுப் பயணக் கட்டுரை அனைத்தையும் இந்த வாரத்திற்குள் முடித்து விடுவேன் சார்.

      Delete
  5. கடல்ல கால் நனைக்கிற ஆசை இன்னும் அதிகமாகிடுச்சு வாய்ப்பு தான் கிடைக்கல! இருந்தாலும் படங்களோட சென்னை பயனம் சூப்பர் அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. என்னது இன்னும் வாய்ப்பு கிடைக்கலியா, சீக்கிரம் வாருங்கள் மெரினா எல்லாரையும் வரவேற்கிறது.

      Delete
  6. உங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்ததுநேரம் இருப்பின் வாசிக்கவும்.
    http://blogintamil.blogspot.in/2012/06/2.html

    ReplyDelete
    Replies
    1. அய்யா எனது பதிவொன்றை தங்கள் வலைச்சர பூக்களில் தொடுத்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். மிக்க நன்றி.

      Delete
  7. மெரினாவுல ஆரம்பிச்சு ஐஸ் அவுஸ் வழியா கடற்கரையோரமா உலா கூட்டி வந்து பாண்டிச்சேரியில கொண்டு விட்டுட்டீங்களே... பிரமாதம்! மகாபலிபுரத்துக்கு மட்டுமே தனி இடுகை எழுதலாம்னு நான் நினைக்கிறேன். முட்டுக்காடுல படகு சவாரி செய்யணும்னு ரொம்ப நாள் நினைப்பு சீனு... வாய்ப்புத்தான் வரல்லை. மத்தபடி இந்த டூரை ரொம்ப என்ஜாய் பண்ணினேன். தொடர்ந்து உங்ககூட வர்றேன்ப்பா.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தொடர்ந்து வருகிறேன் என்று கூறியதே என்னைத் தொடர்ந்து வருவது போல் உள்ளது வாத்தியாரே. பிரமாதம் என்ற ஒரு வரத்தை என் பாட்டரியை இன்னும் சார்ஜ் செய்து விட்டது தங்களுக்கு நன்றிகள் பல.

      மகாபலிபுரம் பற்றி தனியொரு பதிவு கண்டிப்பாக எழுதுங்கள். எனக்கு மகாபலிபுரம் பற்றி முழுமையாகத் தெரியாது. அரைகுறையாக அறிந்த்ததை எழுத வேண்டாம் என்று நுனிப் புல் மேய்ந்து விட்டேன். நீங்கள் கண்டிப்பாக எழுத வேண்டும் என்பது எங்கள் அன்புக் கட்டளை

      Delete
  8. ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையான அழகான அமைதியான ரம்யமான மெரினா கடற்கரை நிறைவான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி எல்லாம் உங்கள் ஆசீர்வாதங்கள்

      Delete
  9. நிஜமாகவே சென்னையைச் சுற்றிப்பார்த்த உணர்வு ஏற்படுகிறது.உங்கள் எழுத்து நடையும் சுவாரஸ்யமா இருக்கு.கலக்குங்க நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. மணிமாறன் நீங்க சொனதே எனக்கு பெரிய சந்தோசமா இருக்கு

      Delete
  10. அருமை பாஸ்..சென்னையை உண்மையிலே சுத்தி பார்த்த எபக்ட் உங்க பதிவுல கிடைச்சது..
    ரொம்ப நல்லா வர்ணனை பண்ணி இருக்கேங்க..ரொம்பவே ரசித்தேன்..

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சுத்தி பாக்கலாம் தயாரா இருங்க ராஜ், தமிழ்மனம்ல என்னோட பதிவை இணைக்க முடியவில்லை, நீங்கள் கூறிய வழிமுறைகளை பின்பற்றினேன் இருந்தும் முடியவில்லை. இந்த வார விடுமுறையில் மீண்டும் முயற்சிக்கிறேன், என்னால் முடியவில்லை எனில் உங்களை மீண்டும் தொல்லை செய்வேன் :-)

      Delete
  11. அப்புறம் நண்பரே.. தமிழ்மணத்தில் உங்கள் பதிவை இணைக்கலாமே..நிறைய பேரை நாம் பதிவு சென்று அடையும்..

    ReplyDelete
  12. சீனு சூப்பராய் எழுதி உள்ளீர் மொபைல் வழியாக கமெண்ட் போட முடியலை பத்தாம் வகுப்பு ரிசல்ட் வந்தபோது எங்க ஊரில் பவர் கட் அதனால ஸ்கூல் இருந்து ரிசல்ட் பார்க்க கேட்டாங்க கொடுத்தேன் பார்த்துவிட்டு தராமல் ஸ்கூல் வைத்தே பூட்டிவிட்டு போய்விட்டனர் அடுத்த நாள் காலையில் தான் வாங்கினேன் உடனே என்னோட தம்பிக்கு பிளஸ்1 சீட் வாங்க வீட்டில் போக சொன்னாங்க போனால் சீட் புல்லாம் அதனால் வந்துட்டேன் வந்தா உடம்பு சரிஇல்லாமல் போச்சு இப்போ ஏதோ பரவாஇல்லை கொஞ்சம் தலவலி அதோடு தான் கமெண்ட் போடுறேன்...மொபைல் வழியாக அதிகமாய் எழுதினால் தெரியமாட்டேன் என்கிறது அதனால் தான் பதிவு போட்ட அன்றே மொபைல் வழியா சின்னதாய் SUPER அப்படின்னு போட்டேன்...பதிவு உண்மையில் சூப்பர் வாரம் ஒண்ணாவது போடுங்க தமிழ் திரட்டியில் இணைத்து கொண்டு தானே உள்ளீர்...

    ReplyDelete
    Replies
    1. சின்னமலை, தாங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன். நான் நேற்று தான் ஒரு விஷயத்தை கவனித்தேன், நீங்கள் மொபைல் மூலம் அனுப்பும் பதிவுகள் அனைத்தும் SPAM இல் சென்று சேர்ந்துள்ளது, நான் இது வரை அவற்றைப் பார்த்ததே இல்லை, நேற்று தான் அவைகளைப் பார்த்து APPROVE செய்தேன்.

      மற்ற திரட்டிகளில் பதிவை இணைத்துள்ளேன், தமிழ் மனத்தில் என்னால் இணைக்க முடியவில்லை. நண்பர் ராஜ் உதவி செய்தற் ஆனாலும் இணைய மறுக்கின்றது, ஆனால் ராஜ் இணைத்தால் இணைகிறது, நான் இணைத்தல் இணைய மறுக்கிறது. என்ன கொடும தல இது .

      உங்கள் தம்பிக்கு என் வாழ்த்துக்களை கூறுங்கள், உங்கள் உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். வரம் ஒரு பதிவு எழுத கண்டிப்பாக முயல்கிறேன். உங்கள் எல்லார் அன்பும் இருக்கும் வரை என் எழுத்துக்குப் பஞ்சம் இருக்காது என நம்புகிறேன்.

      Delete
  13. ஆஹா... லேட்டா கவனிச்சாலும் அருமையான பதிவை தவறவிடாம படிச்சதுல சந்தோஷம். அழகா ஒரு சுற்றுலா கூட்டிட்டுப் போயிருக்கீங்க சென்னையச் சுத்தி. சூப்பரு. முடிஞ்ச அளவு நீங்க கூட்டிப் போன பக்கங்களையும் ஒரு ரவுண்டு அடிச்சுப் பாத்திடறேன் நட்பே.

    ReplyDelete