Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

3 Jan 2016

பசங்க - 2 - யாருக்கான படம்?

ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கடினமான சவாலான காரியம் குழந்தைகளை வைத்துப் படம் எடுப்பது. மூன்றாவது முறையாக அதை சாத்தியபடுத்தி சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். முதல்முறை கிராமத்துக் குழந்தைகளையும், இரண்டாவது முறை சென்னை மாநகரத்து விளிம்புநிலைக் குழந்தைகளையும் திரையில் காட்டியவர் இம்முறை கொஞ்சம் உயர்ந்து வேறுபக்கம் திரும்பி ஹைகிளாஸ் குழந்தைகளைக் காட்டியிருக்கிறார். மேலும் மற்ற திரைப்படங்களில் (ஓரளவுக்கு) விபரம் தெரிந்த குழந்தைகளை வைத்து படம் இயக்கியவர் இம்முறை இப்போதுதான் விவரம் தெரிய ஆரம்பித்திருக்கும் குழந்தைகளை வைத்து படம் எடுத்திருக்கிறார். அதன்பின் ஒளிந்திருக்கும் சவால்களை தைரியமாகக் கடந்ததற்காகவே அதற்காகவே அவரைப் பாராட்டலாம். 


குழந்தையாக இருந்தபோது என்னுடைய சமகாலத்து 'ஹைகிளாஸ்' குழந்தைகளின் வளர்ப்பு மற்றும் அவர்களின் வாழ்வியல் எப்படி இருக்கும் எனத்தெரியாது. அப்படியிருக்க இந்தத் தலைமுறை குழந்தைகளின் உலகமும் வாழ்வியலும் ம்ம்ம்ம் சுத்தம். அதை பாண்டிராஜ் காட்சிப்படுத்தி இருப்பதற்காக இன்னொரு பூங்கொத்து. மேலும் குழந்தைகளின் உடல்மொழி, அவர்களின் தேவைகள், உணர்வுகள், எப்போது உடைந்து அழுவார்கள், எப்போது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள், எப்போது கொஞ்சுவார்கள் எப்போ மிஞ்சுவார்கள் என ஒவ்வொரு விஷயத்திலும் மிக நுணுக்கமாக அவர் செய்திருக்கும் தேடல் அதன்பின் இருக்கும் உழைப்பு அற்புதம். 

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். 2015-ல் நான் பார்த்த கடைசி மொக்கைப் படம் என்றும் சொல்லலாம். இன்றைய மீடியாக்கள் டீ.ஆர்.பீக்காக என்னவெல்லாம் செய்வார்கள். அதிலும் பாக்சிங் போன்ற ஒரு ஸ்போர்ட்ஸ் கிடைத்தால் அதை வைத்து எப்படியெல்லாம் வியாபாரமாக்கப் பார்ப்பார்கள் என்பது தான் கதை. அல்லது கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இயக்குநரோ அந்தக் கதைகளத்தை குத்திக்குதறி தொம்சம் செய்திருப்பார். கூடவே பார்வையாளர்களையும். 

சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்வது என்று முடிவு செய்துவிட்டால் கிடைத்த கேப்பில் எல்லாம் சிக்ஸர் அடிக்க வேண்டும். குறைந்தபட்சம் தனக்கு வரும் வாய்ப்புகளை வீணாக்காமலாவது இருக்க வேண்டும். அப்படி தன்னை நோக்கி வந்த வாய்ப்புகளை லாவகமாக பயன்படுத்தி இருக்கிறார் பாண்டிராஜ். கிடைத்த இடைவெளிகளில் எல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

படத்தின் முதல் slide-ஆகத் தோன்றும்

     குழந்தைகளின் சிறந்த
     வகுப்பறை
     தாயின் கருவறை

என்ற எழுத்துக்களின் மூலமாகவே இன்றைய தினத்தில் இந்தப் படத்தின் தேவையைக் கூறிவிட்டார். அதற்காக அடுத்தடுத்து வைக்கபட்டிருக்கும் காட்சிகள் அற்புதம். எந்நேரமும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் குழந்தை அதிகமாக சினிமா பஞ்ச் டயலாக் பேசுவதும், எப்போதும் சண்டையிடும் பெற்றோரின் குழந்தை எல்லோருடனும் மல்லுக்கு நிற்பதையும் புரிந்துகொள்ள தாயின் கருவறையினுள் அந்தக் குழந்தைகள் இருக்கும் போது நடைபெறும் சம்பவங்கள் போதுமானதாக இருக்கிறது. 'குழந்தைங்க எப்போதுமே கெட்டத பேசுறது இல்ல. கேட்டதைத் தான் பேசுறாங்க' என்பதுகூட அதன் நீட்சி தான். 

அவசர உலகில் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறைந்துகொண்டே செல்கிறது. பெற்றோர்களின் கவனிப்பும் அரவணைப்பும் எவ்வளவு அவசியம் என்ற கேள்விக்கான பதில் அதன் முக்கியத்துவத்தை இழந்து கொண்டே வருகிறது. குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றால் அது மன ரீதியான பிரச்சனையா அல்லது உடல் ரீதியான பிரச்சனையா என்பதைத் தெரிந்துகொள்ளக்கூட ஒரு மருத்துவரின் உதவியைத் தான் நாட வேண்டி இருக்கிறது என்பதை பல காட்சிகளில் தொடர்ந்து பதிவு செய்திருப்பது, எல்லாவற்றிற்கும் மருந்து மாத்திரை ஒன்றே தீர்வு என நம்பும் கூட்டத்திற்கு தேவையான ஒரு மெசேஜ் - பசங்க 2.  

சமுத்திரக்கனி வந்துசெல்லும் அந்த ஒரேயொரு காட்சியில் அரசுப் பள்ளியின் அவசியத்தையும், அரசு ஊழியர்கள் ஏன் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டும் என்பதன் காரணத்தையும் அழுத்தமாக கூறியிருப்பார். நிதர்சனம் என்னவென்றால் அரசுப் பள்ளி வாத்தியார் தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்கத் துடிப்பதுதான். 

சூர்யா, பெரிதாக ஸ்கோப் இல்லையென்றாலும், நல்லவேளை ஓவர் ஆக்டிங் செய்யவில்லை என்பதே பெரிய ஆறுதல். குழந்தைகளின் உலகைப் புரிந்துகொள்ள நாமும் குழந்தையாக மாற வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை சூர்யா மூலம் காட்சிப்படுத்தி இருக்கிறார். படத்தில் வந்துசெல்லும் அத்தனை பேரின் நடிப்பும் அட்டகாசம். குறிப்பாக குழந்தைகளின் நடிப்பு. இசை, கேமரா உறுத்தவில்லை. வசனம் உறுத்துகிறது - அவ்வளவு ஷார்ப். 

குழந்தைகளின் முதல் குருவான தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய உளவியல் ரீதியான பயிற்சி குறித்து இன்னும் தெளிவாகப் பேசியிருக்கலாம் என்பதைத் தவிர படத்தில் பெரிதாகக் குறை என்று எதுவுமில்லை.   

குழந்தைகளின் உலகம் ரகசியமானது. அவ்வளவு சீக்கிரமாக யாராலும் அதனுள் நுழைந்துவிட முடியாது புரிந்துகொள்ள முடியாது. அவரவர்களுடைய பெற்றோர்களைத் தவிர. அப்படியிருக்க பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான பிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று பாண்டிராஜ் என்னும் இயக்குனர் படம் எடுத்து 'அட ஆமாப்பா, நாம இப்படி இல்லையே' என புரிய வைக்கவேண்டிய நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் இப்படம் அவசியமானதா இல்லையா? பார்க்க வேண்டுமா கூடாதா என்று.   

29 Aug 2015

தனி ஒருவன் - திரையனுபம்

எப்படியும் அடுத்த தீபாவளிக்கோ இல்லை பொங்கலுக்கோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பிவிடுவர்கள். இல்லை கேவலமானதொரு பிரின்ட் கூடிய சீக்கிரம் உங்கள் ஸ்மார்ட்போனில் வந்து குந்திக்கொள்ளும். பாதி டயலாக் புரிந்து, பாதி பேர் அங்குமிங்கும் நடக்கும் காட்சிகளுக்கு மத்தியில் இந்தப் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டயாத்தில் இப்படத்தைப் பார்க்கும் பரிதாப நிலைக்கு உங்கள் நீங்களே தள்ளிக்கொல்வீர்கள். அது தேவையா உங்களுக்குன்னு உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டிய நேரமிது.   

அந்த மொக்க பிரிண்டில நயன்தாரா நடித்திருகிறாரா இல்லை நாட்டியப்பேரொளி நக்மா நடித்திருக்கிறா என்பது கூடத் தெரியாமா ஒழுங்கா போய் தியேட்டர்ல பார்த்திருக்க வேண்டிய படம்ன்னு பெருமூச்சு விடுவீங்க. நடக்குதா இல்லையான்னு பாருங்க.



120+30+30 ஓவா கொடுத்து படம் பார்த்து வேலைமெனக்கெட்டு எங்க பேர்ல ஒரு டாக்கிஸ் ஆரம்பிச்சு அதுல ஹிட்ஸ் கிடைக்குதோ இல்லையோ விமர்சனம்ன்ற பேர்ல படம் நல்லா இருக்கு, கேமெரா ஆங்கிள் டாப்பு ம்யுசிக் ராக்கு, ஸ்டோரி சோக்குன்னு மாஞ்சி மாஞ்சி விமர்சனம் எழுதினா 'ரீமேக் ராஜா எடுத்த படம் சுமாரால்லா இருக்கும்னு நினைச்சே'ன்னு இழுப்பீங்க. 'யோவ் நெசமாலுமே அவர் நல்லா இயக்கி இருக்காரு'ன்னு சொன்னப்போ நம்பாமா, சவுன்ட் ஒழுங்கா கேட்காத அந்த ஸ்மார்ட் போன்ல தீமை தான் வெல்லும்ன்னு வாரப்போ பார்வேர்ட் பட்டன் அமுக்கிட்டு போயிட்டே இருக்கபோறீங்க. இருந்தாலும் சொல்றேன் இதெல்லாம் நல்லதுக்கில்ல.

'எழுத்தாளர் சுபா நல்லா வசனம் எழுதி இருக்காங்க. ஒரு லேடிக்குள்ள இவ்வளவு திறமையா'ன்னு தமிழ் சினிமாவப் பார்த்து ஆச்சரியபடுவீங்க. உங்களைப் பார்த்து சுபா வைய்யாம இருந்தா சரி. ஏன்னா சுஜாதாவுக்கு அப்புறம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் - தமிழ்நாடு நம்பிச்சோ இல்லையோ நீங்களும் நானும் லேடின்னு நம்பின சுபா பெண் இல்லை. சுரேஷ் பாலான்ற இரண்டு ஆண் அப்டின்ற அரிய தகவல் உங்களுக்கு தெரிஞ்சு இருந்தா வாழ்த்துக்கள். 

ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கக்கூடிய நல்ல திர்ல்லர்ன்னு பக்கத்து சீட்டில பேசிக்கிட்டாங்க. லவ்வர்ஸா தியேட்டர்க்கு வந்துட்டு படம் பார்த்துட்டு, அந்த படமும் நல்லா இருக்குன்னு பேசிக்கிறாங்கன்னா படம் நல்லா இருக்குதுன்னு தானே அர்த்தம். இது எப்படிடா தம்பி உனக்கு தெரியும்னு சிரிக்காதீங்க. என் காதில விழற மாதிரிதான் பேசிகிட்டாங்க.  

ஜெயம் ரவி பேசினா எதோ கொழந்த பஞ்ச் டயலாக் பேசுற மாதிரியே இருக்கும்னு அப்பப்போ ஹஸ்கி வாய்ஸ்ல என் காதுக்குள்ள கேட்கும். ஆனா பாருங்க அவரு கூட கொஞ்ச கெத்தா பேசிருக்காரு. பேராண்மைக்கு அப்புறம் போலீஸ்க்கு உண்டான ஆண்மையோட நடிச்சு நல்ல பேரு வாங்கிட்டாரு நம்ம ஜெயம் ரவின்னு ஜில்மோர்ல சிவா பேசுவாருன்னு நினைச்சேன். ஏன் பேசலைன்னு இனிதான் போன் பண்ணி கேட்கனும். 

ஜெயர் ரவி ஹீரோ, அரவிந்த் சாமி ஹீரோவுக்கு எல்லாம் ஹீரோன்னு ஆவி எழுதிட்டாரா தெரியல. ஆனா தன்னோட திரையுலக வாழ்க்கையில இது அவருக்கு ஒரு முக்கியமான படம்னு எழுதி இருக்காரு. ஆவி மாதிரி ஜீனியஸ் சொன்னா சரியாத்தான் இருக்கும். வில்லன் அவதாரத்தில அவரப் பார்த்துட்டு சரவணா சொன்னான் 'கடல்ல வந்த மொக்கசாமியா இப்படி இருக்காருன்னு'. அடேய் மணி சார திட்டாதாடான்னு அவன திட்டிட்டு 'ஆமா சரவணா ஆளு செமையா இருக்காரு'ன்னு சொன்னேன். ஹீரோயினுக்கு இந்தப் படத்தில நல்ல வேல்யு. சம்பளம் இரண்டு கோடின்னு நினைக்கிறன். வாங்கின சம்பளத்துக்கு கொஞ்சமும் வஞ்சம் இல்லாம நடிச்சு கொடுத்துட்டுப் போயிருக்காங்க. ராஜாராணிக்கு அப்புறமா வயசான அக்கா வேஷம் போட்டு இருந்த நயன்தாரா நவ் பேக் டூ தேவதை மோட்.  

எந்தவிதத்திலும் சோர்வடைய வைக்காத திரைக்கதை. விறுவிறுப்பு கூட்டும் அடுத்தடுத்த காட்சி நகர்வுகள்ன்னு எழுதினா தான் இந்த எழுத்துக்கே ஒரு கிளாமர் வருது. இல்லாட்டா எப்படி நம்மையும் அறிவுஜீவின்னு காமிச்சிகிறது. நாலு எழுத்து எழுதினா நாமலும் எழுத்தாளன் தான். நாலு சினிமா விமர்சனம் படிச்சிட்டு அஞ்சாவதா எழுதினா நாமளும் விமர்சகன் தான். எது எப்படியோ இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள் மூவி தான். டிவிலையோ இல்லாட்டா மொக்க தியேட்டர் பிரின்ட்லையோ படம் பார்க்காம ஒழுங்கா தியேட்டர்க்கு போய் ஒரிஜினல் தியேட்டர் பிரிண்ட்ல படம் பாருங்க. தமிழ் சினிமாவுக்கு அப்போப்போ ஆக்ஸிஜன் கொடுக்ககூடிய படங்கள வால வையுங்க. 


இது எதுவுமே செய்யாம இன்னும் நாலு மாசம் கழிச்சு 'அரங்கில் சென்று பார்த்திருக்க வேண்டிய படம். தவறவிட்டு விட்டேன் அது இதுன்னு கொஞ்சமும் உப்புச்சப்பில்லாம ஒரு ஸ்டேடஸ் போடுவீங்க பாருங்க அப்போதான் கான்ட் ஆகும். உங்கள நண்பராக்கிக் கொண்ட பாவத்துக்கு அதையும் படித்தாக வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்படுவோம். இப்படியொரு நிலை வரமால் இருக்க இந்தப்படத்தை அரங்கில் சென்றுபர்த்துவிடுங்கள். நல்லதொரு திரையனுபவத்தை தவறவிட்ட சாபாம் உங்களை அண்டாது இருக்கட்டும். ஸ்தோத்திரம்.   

26 Aug 2015

தலைவாரிப் பூச்சூடி உன்னை - குறும்படம்

ஆவி இயக்கி தயாரித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது குறும்படம் தலைவாரிப் பூச்சூடி உன்னை. 

ஒரு சிறிய கருவைக் கொண்டு இந்தக் குறும்படத்தை  உருவாக்கிய ஆவியின் வடிவில் பட்ஜெட் பத்மநாபனைக் காண்கிறேன். படம் பார்த்தால் உங்களுக்கும் புரியும். நேரத்தையும் சில நண்பர்களின் துணையையும் கொஞ்சம் திறமையையும் தன்னிடம் இல்லாத சில திறமைகளையும் வளர்த்துகொண்டு (எடிட்டிங், ஸ்பெஷல் எபெக்ட்ஸ்) அதையும் முயன்று பார்த்திருக்கிறார். 

பள்ளிக் கூடம் செல்லும் குழந்தையை பாடாய்ப்படுத்தும் இன்றைய தலைமுறை குழந்தைகளின் அம்மாவின் ஒருநாள் தான் இந்தக் குறும்படம். தான் கூற வந்ததை கிட்டத்தட்ட கூறிவிட்டார் என்று தான் கூறவேண்டும். 



'தனியொருவன் முயன்று விட்டால்' விளம்பரம் நொடிக்கு நொடி டிவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்தக் குறும்படம் பற்றி கூறுவதென்றால் மொத்தமாக சுத்தமாக தனியொருவனின் முயற்சிதானிது. கொஞ்சம் ஆத்மார்த்தமான முயற்சியும் கூட.   

மேலும் இது தன்னுள் இருக்கும் ஒரு சினிமா கலைஞனுக்கு அவர் அளிக்க முயன்ற தீனி. யானைப் பசிக்கு சோளப்பொறி. 'இந்தப் படத்தை நான் இயக்கி இருந்தால்? இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதி இருந்தால்' என்று அனைவராலும் ஆயிரம் ஆல் கூறமுடியும் என்பது தெரிந்தபோதிலும் ஒற்றை ஆளாக களமிறங்கி என்ன விமர்சனம் வந்தாலும் பரவாயில்லை என்று தான் கொண்ட முயற்சியில் மனம் தளராமல் செய்து முடித்த  ஆவியின் மனவலிமைக்கு பாராட்டுக்கள். ஆனாலும் ஆவியிடம் விமர்சனம் வைக்காமல் இல்லை. விமர்சனங்கள் கண்ணாடியைப் போன்றவை. அவை நமது பிம்பத்தை, நாம் இருக்கும் அழகைக் காட்டுபவை. அவற்றின் முக்கியத்துவம் உணர்ந்தவர்களுக்குத் தான் அதன் அவசியம் தெரியும். ஏற்றுகொள்வதும் மறுப்பதும் கலைஞனின் உரிமை.   

குறும்படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் மனதில் தோன்றுவதைக் கூறுங்கள் அவையாவும் ஆவி என்னும் கலைஞனை அடுத்தபடியை நோக்கி செதுக்கும் உளியின் சப்தமாக அமையட்டும். 

5 Aug 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

விகே.புரத்தையும் அகஸ்தியர் பட்டியையும் சிறுவயதில் இருந்து பார்த்தே வளர்ந்ததால் கதைகளம் சுத்தமாக மனதில் ஒட்டவில்லை. கொஞ்சம் மனது வைத்தால் விகே புரத்தில் இருந்து அகஸ்தியர் பட்டிக்கு நடந்தே போய்விடலாம், ஆனால் இங்கோ அதை ஏதோ தொலைதூரப் பயணம் போல் காட்டியிருக்கிறார்கள். 

எனக்குத்தெரிந்து அந்த சுற்று வட்டாரத்திலேயே நல்ல ரோடு வந்த இடம் அகஸ்தியர்பட்டி தான். காரணம் அகஸ்தியர்பட்டி அம்பைக்கும் விகேபுரத்திற்கும் இடையே புதிதாக கட்டமைக்கப்பட்ட (மெஜிரா கோட்ஸ் ஊழியர்களுக்காக) ஒரு பகுதி. அங்கே சிறிய விமான ஓடுதளம் கூட உண்டு. இப்போ அந்த ஓடுதளம் நாஸ்தியாகிவிட்டது என நினைக்கிறன். 

ஆரஞ்சுமிட்டாயில் காண்பிக்கப்படும் அதே போன்ற செம்மண் நிலப்பரப்பு அங்கும் உண்டு. அம்பை வீகேபுரம் செல்லாமல் தென்காசி சாலையில் இருந்து பிரிந்து ஊருக்குள் செல்லும். சிவா மாமா ஒருமுறை அழைத்துச் சென்றார். அந்தப் பாதையில் தான் முதல்முறையாக ஆள் இல்லாத ரயில்வே கிராஸிங் பார்த்தேன். இப்போது அங்கே கேட் வந்துவிட்டதா தெரியவில்லை. ஆனால் அப்போவே சாலை உண்டு. 

கதையின் சுவாரசியத்திற்காக கைலாசத்தை தேடி வாகனம் கூட செல்ல முடியாத ஒரு பாதையில் நடையோ நடையாய் நடப்பதாகக் காட்டியிருக்கலாம். அது சுவாரசியமாகவும் இருக்கிறது, என்ன அந்தப்பகுதி மக்களுக்கு தங்களை அந்தப் பகுதியில் இருந்து அந்நியபடுத்திக் கொண்டு பார்த்தால் மட்டுமே கதைகளனோடு ஒன்ற முடிகிறது. அல்லது அகஸ்தியர்பட்டியையும் அம்பையையும் வேறோ எங்கோ இருக்கிறது என கற்பனை செய்துகொள்ள வேண்டியது தான்.  

அரை மணி நேரத்தில் இண்டர்வல் வருவதை தமிழ் சினிமா ரசிகனால் தங்கிக் கொள்ள முடியவில்லை. 'த்தா இன்னா டா இது', 'யேய் இது படமா, சீரியல் மாதிரி இல்ல போவுது' போன்ற பேச்சுகளை உணர முடிந்தது. 

**

மேற்சொன்ன விசயமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். எத்தனையோ மொக்கைப் படங்களை அரங்கில் சென்று பார்த்திருக்கிறேன். நமக்கு பிடிக்காத காட்சியோ அல்லது நம்மை நெளிய வைக்கும் காட்சியோ திரையில் வந்தால் கத்தி கூப்பாடு போட்டு கேலி செய்வதில் வல்லவன் நம்மூர் ரசிகன். எப்போ அரங்கம் அமைதியாகும் எப்போ கவுண்டர் கொடுக்கலாம் என்று காத்திருக்கும் நொடிகள் உண்டு. ஆனால் ஆரஞ்சு மிட்டாயில் பெரும்பாலான காட்சிகள் மென்மையான இசையின் பின்னணியில் தான் நகர்கிறது. யார் என்ன செய்தாலும் கவுண்டர் கொடுக்க ஏகப்பட்ட வாய்ப்பும் இருந்தது . இருந்தாலும் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தான் தமிழ் சினிமா ரசிகன். அதற்காக அவன் தூங்கிவிட்டான் என நினைக்க வேண்டாம் அவ்வபோது சிரித்து தன் இருப்பையும் உறுதி செய்துகொண்டு தான் இருந்தான். இது போன்ற வழக்கத்திற்கு மாறான கதையம்சம் புதிது என்பதால் அதனோடு ஒன்றுவதற்கு தயங்குகிறானா எனத் தெரியவில்லை. 


படம் ஆரம்பித்த சில நிமிடங்களில் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது 'யாரு மச்சி ம்யுசிக் டைரக்டர்' என்று. ஒரு இசையமைப்பாளருக்கு இதை விட என்ன பெரிய கிரெடிட் கிடைத்து விட முடியும். எங்கிருந்தும் வழுவிச் செல்லாத இசை ஜஸ்டின்​ அண்ணா :-) பயணங்கள் தொடருதே அட்டகாசம். 

வசனம் விஜய் சேதுபதியும் இயக்குநர் பிஜுவும் எழுதி இருக்கிறார்கள். 'சாவுற வரைக்கும் ஆஸ்பத்திரில இருக்கணும்னு சொல்றான். அது என்ன மாதிரியான ட்ரீட்மென்ட்', 'என்ன காதலிச்சிட்டோமேன்னு கல்யாணம் பண்ணிக்காத, நல்லா யோசிச்சு ஒரு முடிவு எடு' எனக்கு மிகவும் பிடித்த வசனங்கள். 

அம்பாசமுத்திரம் சிவன் கோவில் அருகில் நள்ளிரவில் கைலாசம் ஒரு ஆட்டம் போடுவார். அட்டகாசம். யாரோ ஒருவர் கூறியிருந்தார் முதியவர் வேடம் விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் பொருந்தவில்லை என. அந்த ஆட்டத்தில் கண்முன் கைலாசம் என்னும் முதியவர் தான் ஆடிகொண்டிருந்தார். விஜய் சேதுபதி இல்லை.   

நடிப்பில் விஜய் சேதுபதியை விடவும் சத்யா (ரமேஷ் திலக்) கவர்கிறார். படு இயல்பான நடிப்பு. தன்னுடைய படத்தில் இன்னொருவருக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். ஆறுமுகமும் அசத்தி இருக்கிறார். என்ன ஆறுமுகம் பேசும் 'யோவ் கொஞ்சமாச்சு கூறு இருக்கா' மட்டும் தான் படத்தில் வரும் ஒற்றைவரி நெல்லை பாஷை. மற்றவை எல்லாமே சாதா பாஷை தான்.   

ஜில்மோர் (மெட்ராஸ் பவன்) சிவா தன்னுடைய விமர்சனத்தில் எழுதியது 'இது ஒரு ஷார்ட் குட் பிலிம் மட்டுமல்ல. குட் ஷார்ட் பிலிமும் கூட'  என்று. படம் பார்க்கும் போது அவ்வபோது குறும்படம் பார்க்கும் உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

புளிக்கிறதா இனிக்கிறதா என்று கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாத சுவை உடையது ஆரஞ்சு மிட்டாய். அதைப் போலத்தான் இந்தப் படம் மக்களுக்குப் பிடித்துள்ளதா, பிடிக்கவில்லையா என்பதை கடைசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை.

படம் எனக்குப் பிடித்துப் போக முதல் காரணம் ஜஸ்டின் என்றாலும் இரண்டாவது காரணம் மொத்தப் படமும் பயணங்களிலேயே கழிவதுதான். பயணமே எல்லை.  

5 Feb 2015

என்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில்

என்னை அறிந்தால் - என்னுடைய பார்வையில் (இனிமே இது ரொம்ப முக்கியமாக்கும்)

அஜீத்

கௌதம் வாசுதேவ் மேனன் - இவருடைய இயக்கம் பிடிக்குமோ இல்லையோ திரைப்படத்தின் காட்சியாக்கம் மிகவும் பிடிக்கும். தன்னுடைய கற்பனையில், தான் நினைக்கும் ஒவ்வொன்றையும் அதனுடைய இயல்பான அல்லது இயல்பை மீறிய அழகுடன் காட்சிப்படுத்துவதில் வல்லவர் கௌதம். இயல்பாகவே அஜீத் அழகு. அந்த அஜீத் கௌதமுடன் இணைந்தால் - அதற்காக மட்டுமே என்னை அறிந்தால் படத்தை வெகுவாக எதிர்பார்த்திருந்தேன். அதனால் படம் ஹிட்டு பிளாப்பு போன்ற இத்யாதிகளெல்லாம் எனக்கு அவசியம் இல்லாததாகத்தான் பட்டது. ஏன்னா தல நடிச்சா நான் பார்த்தே தீருவேன்னு எனக்கு தெரியும்.


இது அஜீத்தின் ஒன் மேன் ஷோ என்பதை விட வழக்கமான ஜிவிஎம்மின் ஒன் மேன் ஷோ. அதுதான் இப்படத்தை தூக்கி நிறுத்துவதும் கூட. இயல்பாக ஆரம்பிக்கும் கதை. இயல்பாக நகரும் திரைக்கதை. தேவையான இடங்களில் பாடல். பாடல்களில் கூட தேவையான அளவில் மட்டுமான நீளம். தெளிவான வசனங்கள் என்று என்று ஒவ்வொன்றும் ஈர்க்கிறது. 

பில்லா, மங்காத்தா அஜீத் வேறுவிதமாக இருந்தார் என்றால் இதில் கச்சிதமாக இருக்கிறார். பொதுவாகவே அஜீத்திற்கு மீசை வைத்தால் நன்றாக இருக்காது என்றொரு எண்ணம் எனக்கு உண்டு, கத்தையாக ஏதோ கம்பளிப் பூச்சியை ஓட்ட வைத்தது போல் இருக்கும். கூடவே ஒட்ட வெட்டிய முடியும். பில்லாவிலும் மங்காத்தாவிலும் மூன்று நாள் தாடியுடன் வருவாரே அது அவருக்கு மிக அழகாக இருக்கும். ஆனால் அளவாக வைக்கும் மீசை கூட தனக்கு அழகுதான் என்பதை சத்யதேவ் (அஜீத்) நிருபித்துள்ளார். அஜீத் தனது கழுத்தில் அணிந்திருக்கும் அந்த மாலையை முதலில் வாங்க வேண்டும். அதுகூட அழகாக இருக்கிறது. 

அஜீத்தினுடைய அடுத்த பெரும் குறையாக நான் நினைப்பது வசன உச்சரிப்பு, டயலாக் டெலிவரி. 'செல்லா ஏன் செல்லா அழுவுற' 'ஒளிஞ்சா கண்டான் விளையாடுவோமா' 'மழ நிக்கிறதுக்குள்ள, அது' போன்ற வசனங்களில் எல்லாம் எனக்கு சிரிப்பு தான் வந்தது. போதாகுறைக்கு இதை வைத்து என்னை ஓட்டுவதுதான் எனது அண்ணனின் வேலை. நல்லவேளையாக தனது சமீபத்திய படங்களில் வசனங்களை பார்த்து பார்த்து சிரத்தை எடுத்து உச்சரிக்கிறார். அல்லது அதிகமான வசனங்களை பேசாமல் தவிர்த்துவிடுகிறார். என்னை அறிந்தாலில் அதிகமான வசனங்கள் இருந்தாலும் - கௌதம் படத்தில் வசனங்கள் இல்லை என்றால் தான் ஆச்சரியம்- அதையும் சிறப்பாக பேசியிருக்கிறார். 

கௌதம் - கௌதம் படங்கள் ஒருவித மென்மையான உணர்வைத் தரக்கூடியவை. வன்முறைக் காட்சிகளில் கூட வில்லன்கள் தேவையில்லாமல் கூட உரத்த குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யமாட்டர்கள். (நான் இன்னும் நடுநிசி நாய்கள் பார்க்கவில்லை என்பதால் சம்முவம் என்னை மன்னிப்பதாக). காதலாகட்டும் அன்பாகட்டும் வீரமாகட்டும் மேலும் எவ்வித உணர்வுகளாகட்டும் கச்சிதமாக வெளிக்கொணர்வதில் வல்லவர். உணர்வுகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர். அன்றைக்கு நண்பர்களோடு பேசிகொண்டிருக்கையில் கூறினேன் சுஜாதாவிற்கு பின் எனக்கு மிகவும் பிடித்த வசனகர்த்தா என்றால் அது ஜிவிஎம் தான். 

அருண்விஜய் - தடையறத் தாக்க படத்திற்குப் பின் இப்படத்தில் மிகவும் கவர்க்கிறார். சில சமயங்களில் முன்னால் வந்துவிழும் முடி மங்காத்தா அர்ஜூனை நினைவூட்டினாலும் அசத்தலான நடிப்பு. 

வசனம் - இந்தப் படத்திலும் வசனங்களுக்குப் பஞ்சமில்லை. டைமிங் காமடியாகட்டும், மிக முக்கியமான பஞ்ச டயலாக் ஆகட்டும். 'சண்டையில கிழியாத சட்ட எங்க இருக்கு' என்பதைக் கூட பொருத்தமான இடத்தில் கோர்த்திருக்கிறார். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் திரிஷா அஜீத் இடையே இடம்பெறும் வசனங்கள் மிகவும் கவர்ந்த்தவை

அனுஷ்கா, த்ரிஷா ஈஷா-  அனுஷ்காவை விட த்ரிஷா அதிகமாக கவர்கிறார். த்ரிஷா மீது இந்தளவிற்கு ஈர்ப்பு ஏற்படவும் ஜிவிஎம் தான் காரணம். விடிவி ஏற்படுத்திய தாக்கம். என்னை அறிந்தாலில் த்ரிஷாவிற்கு இப்படியொரு அறிமுகக் காட்சி இருக்கும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்து அப்படியே த்ரிஷாவின் பாத்திரத்தை வார்த்தெடுத்திருப்பது சபாஷ். த்ரிஷா படம் நெடுக வரவில்லையே என்பதுதான் குறையாக இருக்கிறது. ஈஷாவாக நடித்திருக்கும் அந்தப் பாப்பா கொள்ளை அழகு

கதை திரைக்கதை - வழக்கமான போலீஸ் வழக்கமான வில்லன்களை களையெடுக்கும் முயற்சியில் போட்டுத்தள்ள, அந்த வழக்கமான வில்லன்கள் வழக்கமாக போலீஸின் குடும்பத்தைப் போட்டுத்தள்ள இங்கிருந்து வழக்கமாக ஏதோ ஒன்று நடக்கபோகிறது என்று எதிர்பார்க்கும் போது கதை வேறொரு கோணத்தில் திரும்பி மீண்டும் அதே நயாகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடந்தது என்ன என்பதுதான் வழக்கமான கதை. ஆனால் இதை வழக்கத்திற்கு மீறிய தனக்கே உரித்தான திரைக்கதையில் கூறியிருப்பதில் ஜிவிஎம் கவர்கிறார்.

மேக்கிங் - ஒளிப்பதிவு, ஆர்ட், காஸ்ட்யும். அஜீத் படமாகட்டும் அல்லது தமிழ் படமாகட்டும் மேற்கூறிய மூன்றும் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பேனோ அந்த எதிர்பார்ப்பில் கொஞ்சமும் குறையாமல் அப்படியே...!

என்னை அறிந்தால் - படத்தில் எல்லாமே இருக்கிறது, காதல், அப்பா மகன் பாசம். அப்பா மகள் பாசம், வீரம், வில்லத்தனம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு என்று எல்லாமே இருக்கிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் திரைக்கதை (எனக்கு அப்படித் தெரியவில்லை) என்பதால் ஒருவேளை உங்களுக்குப் பொறுமை தேவைப்படாலம். காரணம் பில்லா மங்கத்தா என்று எதிர்பார்த்து சென்றிறீர்கள் என்றால் நிச்சயம் அப்படியான படம் இல்லை இந்த என்னை அறிந்தால். ஜெமோவின் எழுத்துக்கள் ஒரு மலைப்பாதையின் வழியாக நிகழும் ரயில்பயணம் போன்றது. அதனை உணர வேண்டும் என்றால் அந்த ரயில் மெதுவாகத்தான் சென்றாக வேண்டும். என்னை அறிந்தாலும் அப்படியே. நிச்சயம் இது ஒரு feel good movie.  கொஞ்சம் த்ரில்லரும் இருக்கிறது.

அஜீத் அஜீத் அஜீத் என்பதையும் தாண்டி முழுக்க முழுக்க அஜீத்தின் நடிப்பை நம்பி வெளிவந்திருக்கும் படம் என்பதால் 'என்னை அறிந்தால்' எம்மைப் போன்ற அஜீத் ரசிகர்களுக்கு வராது வந்த தீபாவளி என்பதில் கூடுதல் சந்தோசம்...  

விளம்பரம் : 

30 Jan 2015

இசை - அட்டகாசமான த்ரில்லர்

மதியசாப்பாடு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது தான் அந்த போஸ்டர் கண்ணில் தென்பட்டது, இசை @ மேடவாக்கம் குமரன் என்று. உடனடியாக மெட்ராஸ் பவனுக்கு போன் செய்தேன் 'சிவா இசை எப்படி இருக்கு, பார்க்கலாமா', 'சீனு கொஞ்சம் வொர்க் இருந்தது. பார்க்க முடியல, நீங்க பார்த்துட்டு சொல்லுங்க' என்றார். அடுத்த போன் ஆவிக்கு 'பாஸ் இசை' என்றேன். 'சாரி பாஸ் ஈவ்னிங் தான்' என்றார். சரி இவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை நாமே களத்தில் இறங்கிவிடலாம் என்று முடிவெடுத்தேன். ஒருவேளை இவர்கள் 'மொக்கையா இருக்கு' என்று கூறியிருந்தால் கூட பார்த்துவிடலாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். காரணம் 'படம் பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டேன் டாட்'.



நானும் நண்பனும் சரியாக இரண்டு மணிக்கெல்லாம் அரங்கிற்கு சென்றிருந்தாலும் 'படம் இன்னும் முடியல, வெயிட் பண்ணுப்பா' என்ற பதில்தான் கிடைத்தது. சிவா முன்பே கூறியிருந்தார் 'படம் மூனே கால் மணிநேரம் சீனு, பொறுமைய சோதிக்குதான்னு பார்த்து சொல்லுங்க' என்று. அப்படி இப்படி என்று படம் முடியும் போது மணி மூன்றே கால். கல்லூரி மாணவர்களின் பெரிய பட்டாளம் ஒன்று வந்திருந்தது. அவர்கள் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். காரணம் எஸ்ஜே சூர்யா இளசுகளின் பல்ஸ் அறிந்தவர். நியு, அஆ தென்காசியில் நண்பர்களோடு பார்த்த நாட்கள் நிழலாடியது. 

அரங்கம் நிறையவில்லை என்றாலும் ஒரு நூறு பேர் கூடியிருந்தோம். குமரன் தியேட்டர் குறித்து என் பரதேசி விமர்சனத்தில் ஒருவரி எழுதியிருந்தேன் பரதேசி கதை நடந்த காலத்தில் கட்டப்பட்ட தியேட்டர் என்று. இன்னமும் அரங்கு அப்படித்தான் இருக்கிறது. ஏரியாவின் முக்கியமான பகுதியில் இருக்கும் அரங்கத்தை இன்னும் கொஞ்சம் மோசமாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை வேண்டுமானால் பெஸ்ட் இம்ப்ரூவ்மென்ட் என்று கூறலாம். 

சாதாரண நாட்களிலேயே நான் கதையை எழுதமாட்டேன். அதிலும் இது த்ரில்லர் வகையறா வேறு. தயவுசெய்து எங்கேனும் கதையைப் படித்துவிட்டு படம் பார்க்க சென்று விடாதீர்கள். அப்புறம் ஒரு நல்ல திரைக்கதை அனுபவத்தை இழந்து விடுவீர்கள்.  

இசை திரைப்படம் குறித்து ஒரு செய்தி உலவி வந்தது. இரு இசையமைப்பாளர்களுக்கு இடையில் நடக்கும் போட்டி/சண்டையே கதை,  அவ்விருவரும் இளையராஜா ரஹ்மான் என்று. இரண்டு இசையமைப்பாளர்களுக்கு இடையில் நடக்கும் சண்டை என்பது மிகச்சரியே என்றாலும் தயவுசெய்து அவ்விடத்தில் இளையராஜாவையும் ரஹ்மானையும் பொருத்திப் பார்க்காதீர்கள். சில சம்பவங்கள் படத்தில் வருவது போல் நடந்திருக்கலாம் என்றாலும் அந்த சம்பவங்களின் அதீத கற்பனையாக எஸ்.ஜே.சூர்யா வளர்த்திருக்கும் கதையே இசை. 

சத்யராஜ் குரு, மிக மிக தலைக்கனம் பிடித்த ஆள், அந்த அகம்பாவம் அவருடைய இசைச் சக்கரவர்த்தி நாற்காலியை அவருடைய சிஷ்யன் எஸ்.ஜே.சூர்யா விடம் கொடுக்கிறது. தன்னை மிஞ்சி வளர்ந்து நிற்கும் சிஷ்யனைப் பழிக்குப் 'பலி' வாங்க சத்யராஜ் செய்யும் சாகசமே இசை என்று கதையை ஒற்றை வரியில் சுருக்கலாம்.

சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா இருவரும் போட்டி போட்டுக் நடித்திருகிறார்கள் என்பது நிச்சயம் டெம்ப்ளேட் தான். அதிலும் சத்யராஜின் பாடி லாங்க்வேஜ், செம.     

முதல் பாதி கொஞ்சம் நீளம், இழுவையும் கூட. தேவையில்லாத காட்சிகள் என்று நிறைய இருக்கிறது. சிவாவுக்கும் ஜெனிக்கும் இடையில் நடக்கும் ரொமான்ஸ் காட்சிகள் அப்படியே எஸ்.ஜே.சூர்யாத்தனம். இதுபோன்ற குறும்புக் காட்சிகளை வைக்க அவரால் மட்டுமே முடியும். இப்படியான காட்சிகளில் எல்லாம் கல்லூரி மாணவர்களின் விசில் பறக்கிறது என்பது ஆங்காங்கு மானே தேனே பொன்மானே போல் சேர்த்துக் கொள்ளுங்கள். ரொமான்ஸில் வசனம் எப்படி என்பதை என்ன வார்த்தை கொண்டு நிரப்ப என்று தெரியவில்லை, படம் முழுக்கவே வசனம் செம. வசனங்களில் ந்யு பாதி அஆ மீதியாக எழுதியுள்ளார். அதே போல் சத்யராஜை கெட்டவனாக காண்பிக்க பிரயத்தனப்படும் காட்சிகள் கொஞ்சம் ஓவராக துருத்திக் கொண்டு நிற்கின்றன. அதன் நீளத்தைக் குறைத்திருக்கலாம். சில இடங்களில், வெகு சில இடங்களில் மட்டும் இசை இரைச்சலாக இருக்கிறது. சில ரொமான்ஸ் காட்சிகள் ஒரு மெல்லிசான கோட்டிற்கு அந்தப்புரம் இருக்கும் அடல்ட் ஒன்லி காட்சிகள். குழந்தைகளோடு/குடும்பத்தோடு பார்ப்பது உங்களுக்கு நல்லதல்ல!

ஆனால் இரண்டாம் பாதி அப்படியே உல்ட்டா. தேவையில்லாத காட்சி என்று ஒரு காட்சியைக் கூட கூற முடியாது. தேவையில்லாமல் ஒரு பாடல் காட்சி கூட கிடையாது. ரியல் இசையமைப்பாளராக எஸ்.ஜே.சூர்யா பிரமிக்க வைக்கிறார். சத்யராஜுக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இடையே நிகழும் இசையைப் பற்றிய விவரிப்பு அட்டகாசமான கவிதை. 

இசை இசை இசை என்று வெறியெடுத்து அலையும் சத்யராஜ், இசை இசை இசை என்று அதனைக் காதலிக்கும் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூர்யாவிற்குள் இருக்கும் இசையை அழித்து மீண்டு வரத் துடிக்கும் சத்யராஜ் என்று இரண்டாம் பாதியின் காட்சிகள் பரபரப்பாக நகரத் தொடங்குகின்றன. எஸ்.ஜே.சூர்யாவான சிவாவிற்கு தன்னுடைய ஆட்கள் மூலமாக மெண்டல் டார்ச்சர் கொடுக்கிறார் சத்யராஜ். அப்பாவி எஸ்.ஜே.சூர்யா இசையைத் தவிர ஏதும் அறியாதவர் என்பதால் தன் மீது திணிக்கப்படும் தொல்லைகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார். கொஞ்சம் கொஞ்சமாக வலு இழக்கிறார். 

ஒவ்வொரு சூழ்நிலைகளிலும் தன்மீது செலுத்தப்படும் இயல்பான உளவியல் தொல்லைகளின் மூலம் தன்னையே தான் ஒரு பைத்தியம் என்று நம்பும் அளவுக்கு தொல்லைகள் அதிகரிக்க கொஞ்சம் கொஞ்சமாக வீழத் தொடங்குகிறார். படம் தன்னுடைய இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. இங்கு எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குனராக விஸ்வரூபம் எடுக்கிறார். மொத்த அரங்கமும் எழுந்து நின்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. இதுதான் இசை. 


கேமெரா எடிட்டிங் இசை வசனம் இவையெல்லாமே படத்தின் தூண்கள். அதிலும் வசனம் செம கிளாஸ். மிக ரிச்சான ஒளிப்பதிவு பல காட்சிகளில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மேலும் இந்தப்படத்தில் சற்றே வித்தியாசமாக ஒரு ஆணைக் கற்பழிக்கும் காட்சி கூட இடம் பெற்றிருக்கிறது. அந்த ஆண் எஸ்.ஜே.சூர்யா தான் என்பதையும் குறிப்பிட வேண்டுமா என்ன! கிட்டத்தட்ட வெகுநாட்களுக்குப் பின் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்த திருப்தி, முதல்பாதியின் சில இழுவைகளைத் தாங்கிக் கொள்ளவேண்டும் என்பதைத் தவிர அட்டகாசமான த்ரில்லர் இந்த இசை. வேண்டுமானால் டோன்ட் மிஸ் இட் என்ற வரியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். 

கொசுறு : புகைப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கை உண்டாக்கும் உயிரைக் கொல்லும் என்று நாயகன் பேச வேண்டிய இந்த வசனத்தை எங்க ஊர்க்காரரான எஸ்.ஜே.சூர்யா புகைப்பழக்கம் உடல்நலனுக்கு தீங்கை உண்டாக்கி உயிரைக் கொல்லும் என்றவாறு பேசும் நெல்லைத் தமிழை கவனிக்கத் தவறாதீர்கள் :-)

15 Jan 2015

ஐ - இம்ப்ரெஸ்ட்

வலைப்பூவில் எழுத ஆரம்பித்த புதிதில் குழந்தைத்தனமானதாக, ஏதோ தேசியக் கடமையை ஆற்றுவது போல் சினிமா விமர்சனமாக எழுதிக் கொண்டிருந்தேன். தற்போது சினிமா விமர்சனங்கள் எழுதுவது இல்லை என்றாலும் அந்தக் குழந்தையை தட்டி எழுப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 


2013, 2014-களில் தமிழ் சினிமாவை புரட்டிப் போடப்போகிற என்று விளம்பரம் செய்யப்பட்டு வெளியான படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து, பார்த்த பீதி தெளியும் முன், தமிழ் சினிமாவை புரட்டிப் போடப்போகிற வேறொரு படம் வந்து நொந்து, இப்படி முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருந்ததால், ஐ-க்கு இந்த FDFS என்று சொல்கிறார்களே அந்தக் காட்சிக்குப் போகும் எண்ணமே என்னிடம் இல்லை. திங்கட்கிழமை மாலை சற்றும் எதிர்பார்க்காத வகையில் ' ராசா டிக்கெட் பண்ணிட்டேன் வந்து சேரு' என்று ஆவி கூறிய போதுதான் 'ஓ ஐ ரிலீஸ் ஆகுதுல்ல' என்ற நினைப்பே வந்தது. இவ்வளவு தான் ஐ மீதான எனது எதிர்பார்ப்பு. இருந்தாலும் 'எந்த தியேட்டர்' என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் 'சைதை ராஜ்'. ஏற்கனவே அங்குதான் பில்லா-2 FDFS பார்த்து சுகானுபவம் அடைந்தேன். 

'யோவ் ஏன்யா அங்க போய் டிக்கெட் புக் பண்ணின, அது மொக்கையிலயும் மொக்க தியேட்டர்' என்று அவருடைய சட்டையையும் பிடிக்க முடியாது. தானமாக வரும் மாடு பல்லோடு வந்தால் என்ன பல்செட்டோடு வந்தால் என்ன. இருந்தாலும் என்றோ எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழியை இதன் மூலமாக தீர்த்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டார் என்பது மட்டும் உண்மை. 

சைதை ராஜ் சென்றிருக்கிறீர்களா, இல்லை என்றால் போய் விடாதீர்கள். காரணம் நீங்களும் என்னைப் போல் கொசுவாக இருந்து உங்கள் முன் இருக்கையில் ஆஜானுபாகுவாக எவரேனும் உட்கார்ந்துத் தொலைத்தால் திரை தெரியாது, அந்த ஆசாமியின் பின்புறம் தான் தெரியும். அவ்வளவு அட்டகாசமான அரங்கம். மரக்கட்டையின் மீது உட்கார்ந்து படம் பார்த்தால் ஞானம் வரும் என்று யாரேனும் தியேட்டர் அதிபரிடம் கூறியிருக்க வேண்டும். அதனால் அவர் இன்னும் குஷனுக்கு மாறவில்லை. கட்டையில் உட்கார்ந்துதான் படம் பார்க்க வேண்டும். ஆச்சா, மிகப்பெரிய திரை தான் என்றாலும் படம் ஓடும் போதெல்லேம் யாரோ திரையில் சுண்ணாம்பைக் கோரி ஊற்றியது போலவே உணர்வீர்கள். அதற்குக் காரணம் எல்லாம் தேடக் கூடாது. மேலும் ஸ்பீக்கருக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு தவில் வாசிப்பது போலவே இருக்கும், அதையும் உதாசீனபடுத்தி விடுங்கள். காரணம் இது அதுக்கும் மேல. 

சரி என் கவலை என்னோடு போகட்டும் ஐ-க்கு வருவோம். ஐ எனக்குப் பிடித்திருக்கிறது என்றே ஆரம்பிக்கிறேன். இல்லையென்றால் கடைசி வரைக்கும் இவன் என்ன சொல்லவாறான் என்பது போலவே நீங்கள் வாசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்புறம் 'இவன் புடிச்சிருக்குன்னு சொன்னானா, புடிக்கலன்னு சொன்னானா' என்று தெரியாமலையே போய்விடும் வாய்ப்புகள் அதிகம்.  என்னுடைய நிலைப்பாடு இது தான் என்று தெரிந்துவிட்டால் ஏற்றுகொள்ளவோ, ற்றுகொல்லவோ வசதியாய் இருக்குமில்லையா. சோ 'ஐ' இம்ப்ரெஸ்ட். 

ஜிம் வைத்திருக்கும் இளைஞன், சிலரின் பொறாமை மற்றும் பழியுணர்ச்சியால் சாகவும் முடியாமல், சாவும் வராமல் சாவுக்கும் மேலான மரண வேதனையை அனுபவிக்கிறான். அழகு இழந்து கொடூரம் ஆகிறான். காதலி போகிறாள், வாழ்க்கை போகிறது. வழக்கமான தமிழ் சினிமா பாணியில் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியது யார் என்று தெரிந்து கொள்கிறான். லாஜிக் பார்க்கமால் படம் பார்ப்பது நமக்கு புதிது இல்லை என்பதால் அவர்களை பழியும் வாங்கி விடுகிறான். அவ்ளோ தான் கதை. ஆமா சங்கர் படம்ன்னு போட்டாயிங்க இதுல எங்கடா சோசியல் மெசேஜ் இருக்கு என்று மெர்சலாகிறவர்களையும், எண்ட் கார்டில் விகாரமான விக்ரம் மெர்சலாயிட்டேன் என்று வந்து நிற்கும் போது எழுந்து நின்று கைதட்டுபவர்களையும் ஒரே தராசில் வைத்தால் எனக்கு கைதட்டல் ஓசைதான் மிக அதிகமாகக் கேட்டது. இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் உறுத்தலாய் இருந்தது.

படத்தை தாங்கிப் பிடிப்பது விக்ரம் விக்ரம் விக்ரம் என்றால், அவரை அவ்வளவு வேலை வாங்கி இருப்பது சங்கர் சங்கர் சங்கர். நிச்சயம் இது சங்கர் இயக்க வேண்டிய கதை அல்ல. ஆனால் சீயானால் மட்டுமே நடிக்க முடிகிற , நடிக்கத் துணிவு இருக்கிற கதை. வேறு யாரிடமாவது சங்கர் இந்தக் கதையைக் கூறியிருந்தால் தெரித்து ஓடியிருப்பார்கள். ஓடியிருக்கக் கூடும். படத்தின் பாதி காட்சிகளில் விகாரமான முகத்தோடு பார்த்தாலே அருவருக்கக் கூடிய பாவனையில் நடிப்பதற்கே மிகபெரிய துணிவு வேண்டும். விக்ரம் வாழ்ந்திருக்கிறார். பின்னணி இசையில் ஏ.ஆர்.ஆர் மிரட்டி இருக்கிறார். அதிலும் சைனாவில் வைத்து நடைபெறும் அந்த சைக்கிள் சண்டையில் வரும் பின்னணி இசை சூப்பர். ஆனால் ஏனோ சங்கர் படத்தில் மட்டும் அடியாட்கள் புதிது புதிதாக எங்கிருந்தோ முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள். 

சண்டைக் காட்சிகளின் நீளத்தையும், பாடலின் நீளத்தையும் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். இப்போது நம்மாட்களால் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு எல்லாம் பொறுமையாக உட்கார முடிவதில்லை. பரபரவென்று ஏதாவது நடந்து கொண்டே இருக்க வேண்டும் என நினைகிறார்கள். எங்காவது தொய்வு ஏற்பட்டுவிட்டால் அவர்களைத் தட்டி எழுப்புவதே பெரும்பாடாய் இருக்கிறது. அதனால் படத்தின் நீளத்தில் கொஞ்சம் கத்திரி வைத்தால் சண்டைக் காட்சிகளின் போது புகைபிடிக்கச் செல்பவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.

ஏமி ஜாக்சன், லிப் கிஸ்சடிக்கும் நேரங்களைத் தவிர வேறெங்கும் அவருடைய லிப் சிங்க்கே ஆகவில்லை. மற்றபடி கதைக்கு பொருத்தமான பாத்திரம். மாடலிங் காட்சிகளில் நன்றாக துலங்கி இருக்கிறார். டிவா விளம்பர மாடலாக வரும் இடங்களில் அவ்வளவு அழழழழகு. சேரிப் பையனில் இருந்து மிகப்பெரிய மாடலாக, ரோமியோவாக மாறும் காட்சிகளில் விக்ரம் அவ்வளவு அழகு. பிசி.ஸ்ரீராம் புழக்கத்தில் இல்லாத பிலிம் சுருள்களைக் கொண்டு படம் பிடித்ததாகக் கூறுகிறார். அதை ஒட்டி வெட்டத்தான் போஸ்ட் ப்ரோடக்சனில் பெரும்பாடு பட்டிருப்பார்கள் போலும். பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை முழுமையாகக் கண்டு களிப்பதற்காக வேணும் படத்தை வேறொரு நல்ல திரையரங்கில் பார்க்க வேண்டும். 

படத்தில் குறைகளே இல்லையா என்றால், இருக்கிறது. கதைக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். சங்கர் என்றாலே பிரம்மாண்டம், வித்தியாசம் என்று எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதால் வழக்கமான ரிவெஞ் ஸ்டோரி என்றளவில் நின்றுவிடும் ஐ-யை பெரும்பாலானோருக்குப் பிடிக்கவில்லை. அப்புறம் மனிதர்களின் ஊனங்களை எள்ளி நடகையாடும் காட்சிகளை தவிர்த்திருக்காவிட்டாலும் குறைத்திருக்கலாம். காரணம் கதைப்படி நாயகன் வில்லன்களால் அகோரமாக்கப்படுகிறான், அதற்குப் பழிவாங்க 'அதற்கும் மேல' என்ன செய்வது என்பது தான் நாயகனின் உத்தியாய் இருக்க, சரி படம் பாருங்கள். ஆமாம் படம் பாருங்கள். இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் படம் முடியும் வரை உறுத்தலாகவே இருந்தது.

சந்தானத்தின் காமெடி சூப்பர். பவர் ஸ்டார் வரும் காட்சிகளையெல்லாம் கத்தரித்து விடலாம் என்று கூறினால் பவர் வெறியர்கள் என் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அப்பீட். வழக்கமாகவே சங்கர் படங்களில் கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதில் மிகக் குறைவான நடிகர்களை திறம்பட உபயோகபடுத்தி இருக்கிறார். மஜா பீமா ராஜபாட்டை அஞ்சான் என்றெல்லாம் கூறுகிறார்கள். படம் அந்தளவுக்கு மோசமெல்லாம் இல்லை. நிச்சயம் பார்க்கலாம். மூன்று மணி நேரப் படத்தில் சில இடங்களில் கத்தரி போட்டால் ஆங்காங்கு ஏற்படும் தொய்வு கூட இல்லாமல் போகும். 

அலுவலகத்தில் ஹரீஷிடம் படம் பிடிச்சிருக்கா என்று கேட்டதற்கு 'வழக்கமாவே சங்கர் படம் முடிஞ்சதும், முடியும் போது ஒரு சோஷியல் மெசெஜோட முடிப்பாரு, இந்தப்படத்தில அப்படி ஏதும் இல்ல. அதுனால படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல. மத்தபடி படம் புடிச்சிருக்கு' என்றான். கிட்டத்தட்ட நான் நினைத்ததும் கூட அதையே தான். இருந்தாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் படம் முடியும் வரை உறுத்தலாகவே இருந்தது. அது எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருந்த பிசாசு ஹேர் ஸ்டைல் நபர். நானும் எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு எக்கி எக்கி பார்த்து விட்டேன். ம்ஹும் பலனில்லை. திரையின் பாதியை அவரது அடர்ந்த கூந்தல் நிறைந்த மண்டை மறைத்துக் கொண்டே இருந்தது என்பது மட்டும் தான் கடைசி வரைக்கும் உறுத்தலாகவே இருந்த விஷயம் மற்றபடி மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் ஐ - இம்ப்ரெஸ்ட்

ஆங் சொல்ல மறந்துட்டேன். சரி வேணா விடுங்க. அப்புறம் சொன்னா அதையே எல்லாரும் காப்பி பண்ணி கமெண்ட்டா போடுவீங்க. யு என்ஜாய் கைஸ். 

23 Oct 2014

கத்தி - நடுஇரவில்

கத்தி குறித்து இனி எழுத என்ன இருக்கிறது. நான் எழுத நினைத்ததையும் எழுத நினைக்காததையும் பலரும் எழுதிக் குவித்துவிட்டார்கள். எங்கெங்கு காணினும் கத்தியடா. 

நேற்று இரவு படம் பார்த்து முடித்ததும் இருந்த மனநிலையில் இந்த விமர்சனத்தை எழுத வாய்ப்பு கிடைத்திருந்தால் 'கத்தியின் தாக்கம் இன்னும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும்' என்பது பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதிரசம் வடைசுட வராவிட்டால் வீட்டில் இருக்க இடம் கிடையாது என்று அம்மா மிரட்டியதால் இப்போது தான் சிஸ்டம் அருகிலேயே வருகிறேன். அதனால் நான் எழுத நினைத்த விசயங்களில் சிலவற்றை மட்டும் கூறுகிறேன்.  

கத்தி கதை இந்நேரம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும், இணையத்தில் தானே உலவுகிறீர்கள். நிச்சயம் தெரிந்திருக்கும். ஒருவேளை தெரியாவிட்டாலும் நான் சொல்லபோவதில்லை.  


இங்கே பலரும் கூறுகிறார்கள் கத்தி மிகப்பெரிய சமுதாய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது அல்லது ஏற்படுத்தப் போகிறது என்று. அப்படி கத்தி தான் உங்களுக்குள் மிகப்பெரிய சமுதாய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது என்றால் உறுதியாகக் கூறுகிறேன் இன்னும் பத்து நாட்களுக்குள் அந்த தாக்கம் உங்கள் மனதில் இருந்து காணமல் போயிருக்கும். கோலா கம்பெனி விவசாயியின் ரத்தத்தைத் உறிஞ்சி பணம் பண்ணுகிறான் என்பது போன்ற வீர வசனத்தை நாயகன் பேசிய முப்பதாவது நிமிடத்தில் ஆளுக்கொரு லார்ஜ் பாப்கானையும் ரெகுலர் கோக்கையும் கையில் தூக்கிக் கொண்டு மீண்டும் அரங்கினுள் நுழைந்த விந்தையைப் பார்த்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தேன். ஆச்சரியம் தாக்கம் முப்பது நிமிடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை.

வெல். நாயகன் ஹைட்ராலாஜி படிப்பதால் மட்டுமே நீர்ப் பிரச்சனையை கையில் எடுத்திருப்பதாய் வைத்துக் கொண்டால் அதற்கான மெனக்கெடல் கொஞ்சம் கூட திரைக்கதையில் இல்லை. அதே நேரம் நீர்பிரச்சனையை மட்டுமே விவசாயிக்கு பூதாகரமான பிரச்சனை என்பது போல் பேசியது கொஞ்சம் டூ மச். சமீப காலமாக நம்மாழ்வார் அய்யா அவர்களின் புத்தகங்களையும் பசுமை விகடனையும் தொடர்ந்து படிப்பதால் நீராதாரத்திற்கு இணையான எவ்வளவோ விஷயங்கள் இன்னும் பொதுப்பார்வையில் வைக்கப்படாமல் இருப்பது புரிகிறது. பசுமைப் புரட்சியின் பின்விளைவுகள், உர உபாதைகள், மரபணு விதை, இயற்கை விவசாயம் என்று இன்னும் உரக்க பேச வேண்டிய விஷயங்கள் நீண்டுகொண்டே செல்கிறது. அவற்றை சேர்த்திருந்தால் ஒரு விவசாயின் பல பிரச்சனைகள் பொது வெளிக்கு வந்ததாய் உணரலாம். பாராட்டலாம் ஆனால் தண்ணீர்ப் பிரச்சனை என்பது ஏ.ஆர்.எம் கூறித் தான் நமக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனாலும் அதையாவது வைத்திருக்கிறார்களே என்ற எண்ணத்தில் வேண்டுமானால் பாராட்டலாம். 

ஒருவேளை இந்த சினிமாவை மக்கள்/விவசாயிகளின் பிரச்சனையைப் பற்றி பேசும் சினிமாவாக ரமணா இந்தியன் போல் தாக்கத்தை ஏற்படுத்திய சினிமாவாக பார்த்தீர்கள் என்றால் என் மேற்கூறிய பேரா உங்களுக்கானது. அப்படி இல்லை இது சினிமா தானே வெறும் சினிமாவாக பாப்போம் என்றால், 

முதல் இருபது நிமிடம் போர் என்று அனைத்து தரப்பினரும் கூறுகிறார்கள். வழக்கமாகவே பல தமிழ் சினிமா சந்திக்கும் தற்போதைய பிரச்சனை முதல் இருபது நிமிடம் மொக்க என்பது தான். முதல் இருபது நிமிடம் எவ்வளவு முக்கியமானது, பின் ஏன் அது போர். எல்லாம் இந்த இரண்டரை மணி நேர சாபக்கேடுக்காகத் தான். தமிழ் சினிமா என்றாலே இரண்டரை மணி நேரம் இருக்க வேண்டும், ஆனால் கதைக்கான சரக்கோ ஒன்றரை மணி நேரத்திற்கு தான் இருக்கிறது. பின் என்ன செய்வது, முதல் இருபது நிமிடம் இழுவை. பின்முப்பது நிமிடம் பாடல்கள். பைனலி டார்கட் அச்சீவ்ட். நமக்கும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் படம் ஓடவில்லை என்றால் ஏதோ குறைபட்டுவிட்டது போலவே தோன்றுகிறது பாருங்கள் அது நம் சாபக்கேடு.  சரி கத்திக்கு வருகிறேன். முதல் இருபது நிமிடத்தை விடுங்கள் போனால் போகிறது, ஆனால் அதற்கு அடுத்த நிமிடங்கள். 

இது ரமணா புகழ் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதிய திரைக்கதையே அல்ல. ஏழாம் அறிவு படத்தை அவரே ஏழுமுறை பார்த்துவிட்டு எழுதிய திரைக்கதை போல் இருக்கிறது. பல இடங்களில் வசனம் அருமை என்றாலும் குண்டடிபட்ட விஜயை விஜய் சந்திக்கும் போது அந்த விஜயைப் பார்த்து இந்த விஜய் சொல்கிறார் 'ரைட் சைட்ல தான் குண்டு பாயஞ்சிருக்கு, இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பிடல் கொண்டுபோனா இவர காப்பாத்திரலாம்'. அது எப்படிங்க சார் துல்லியமா ஒரு மணிநேரம். கொஞ்ச நேரத்துலன்னு சொன்னா ரசிகனுக்கு அதோட தாக்கம் புரியாதா? ஆனாலும் படத்தின் மற்ற வசனங்கள் மொக்க இல்ல. இடைவேளைக்கு அப்புறம் பல இடங்கள்ள வசனங்களுக்கு கைத்தட்டல் கிடைக்கிறது.

இசை. திரைக்கதைக்கு இன்னொரு முக்கியமான பலம் இசை, இசைக்கு மிக முக்கியமான பலம் மௌனம். படத்தில் மௌனம் இசையாக இருக்க வேண்டிய இடத்தில் சம்மந்தமே இல்லாம ஏதேதோ இசை கேட்கிறது. பொருந்தாத இடத்தில் வரும் பொருந்தாத பாடல் கூட கொடுமையே என்று சகித்துக் கொள்ளலாம் போலும் ஆனால் பொருந்தாத இடத்தில் வருகின்ற பொருந்தாத பின்னணி இசை, கொடுமை. 'இதை சொன்னா அனிருத் மேல எனக்கு காண்டு பொறாமன்னு சொல்வாங்க எதுக்கு ப்ரோ தொல்ல, ம்யுசிக் அட்டகாசம்'. ஒளிப்பதிவு ரியலி குட். இது ரியலி ரியலான பாராட்டு தான். சமந்தா - படத்துக்கு சம்மந்தமே இல்லாத ஒரு வஸ்து, டோன்ட் கேர். அந்த காயின் பைட் நல்லா இருந்தது, முருகதாஸ் டச் (வேற யாரு டச்சும் ண்ணா சத்தியமா எனக்கு தெரியாதுங் ண்ணா).       

இரண்டரை மணி நேரம் போர் அடிக்காம இருந்ததா என்று கேட்டால் என் பதில், 'மொத இருபது நிமிடம் போர், எல்லா பாட்டும் போர். வழக்கமா விஜய்க்கு சாங்க்ஸ் ஹிட்டாகும், இதில் படத்தில் ஒரு பாடல் கூட ஒட்டல, அப்புறம் எங்க மனசுல ஒட்ட'. மொதல்ல அஞ்சு பாட்டு வைக்கிற கலாச்சாரத்த மாத்துங்க சார். சோ இப்படியே மொத்த படத்தில் ஒருமணி நேரம் போர். 'இரண்டரை மணி நேரப் படத்தில ரொம்ப சாதாரணமாவே ஒரு மணி நேரம் போர் அடிக்கிற ஒரு படத்த எப்படி பாஸ் என்னால நல்ல படம்ன்னு சொல்ல முடியும்'. அதிலும் ஏ.ஆர்,முருகதாஸ் தன்னால் நூறு மதிப்பெண் எடுக்க முடிகிற ஒரு பாடத்தில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் என்பது வியப்பான ஒன்று. அதையும் தமிழ் சினிமா கொண்டாடும் என்றால் ரசிகனையும் உங்கள் தரத்திற்கு கீழே இழுத்துவிட்டீர்கள் என்று தானே பொருள்.   

ஒன் மோர் - இந்த படத்தில எனக்கு விஜய பிடிச்சு இருந்தது, விஜய்க்கு இது ரொம்பவே நல்லா அமைஞ்சிருக்க வேண்டிய படம். ஜஸ்ட் மிஸ். விஜய்க்கு வயசாகிட்டே போறது ரொம்பவே நல்லா தெரியுது. அதனால அவரு அவரோட அடுத்த வெர்சனுக்கு அப்டேட் ஆனா நல்லா இருக்கும். காதல் டூயட் எல்லாம் வேணாம் ப்ரோ. அப்புறம் விஜய பிடிச்சதுக்கு இன்னொரு காரணம், ஹீரோயிசம். நிஜ வாழ்க்கையில நம்மால முடியாத சில விசயங்கள நிழல் உலக ஹீரோ செய்வானே அதாகப்பட்ட காட்சிகள் சில கத்தியில் இருக்கு, அதுவும் ரசிக்கும்படியா இருக்கு, அது எனக்கு பிடிச்சி இருந்தது. அஜீத் விஜய் ரெண்டுபேருமே ஏதாவது துப்பறியும் சீரிஸ் நடிச்சா பிரமாதமா இருக்கும். ஆனா அதுக்கு பிரயத்தனப்பட இயக்குனர்கள் தயாரா இல்ல, சோ எப்படியும் ரெண்டு பேரும் இப்படியேத்தான் இருக்க போறாங்க, நாமளும் வேற வழி இல்லாம நூத்தியிருபது ரூபாயா காணப் பணமா ஆக்கத்தான் போறோம். 

சரி இப்போ தலைப்புக்கு வருகிறேன். கத்தி படத்தில் மூன்று வெவ்வேறு லொக்கேசன்களில் காட்சிகள் நகரும். ஒன்று கல்கத்தா ஜெயில், இன்னொன்று அம்பத்தூர் இந்தியா லேண்ட் பில்டிங். மூன்றாவது முதியோர் இல்லம். இப்போ  இந்தியா லேண்ட் பில்டிங்கில் நடக்கும் காட்சி என்றால் இந்தியா லேண்ட் முகப்புப் பகுதியை ஒவ்வொரு முறையும் காட்டிவிட்டு பின்னரே திரைக்கதை நகரும், இது போல ஜெயில் என்றால் கல்கத்தா ஜெயிலை காட்டிவிட்டும் முதியோர் இல்லம் என்றால் அதனை காட்டிவிட்டும் நகரும். ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஒவ்வொருமுறையும் இப்படித்தான் நகருகிறது திரைக்கதை. சுமார் அறுபது வருடங்களுக்கு முன்பு எஸ்.பாலச்சந்தர் என்ற இயக்குனர் நடு இரவில் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். (சுட்டி கூட கொடுத்திருக்கிறேன், படித்துப் பாருங்கள் - ஒரு விளம்பரந்தேன்) அதில் ஒரு பங்களாவைச் சுற்றி மட்டுமே கதை நகரும் ஒவ்வொருமுறை திரைக்கதை பங்களாவினுள் நுழையும் போதும் அதன் பங்களாவின் வெளிப்புறத்தைக் காண்பித்துவிட்டு அதனுள் நுழைவார்கள். கத்தியிலும் இதே போன்ற உத்தியைப் பார்த்ததும் எனக்கு நினைவிற்கு வந்தது நடுஇரவில் தான். ஆனாலும் நம்பினால் நம்புங்கள் கத்தி முழுக்க முழுக்க பிரஷ்ஷான திரைக்கதை.   

பின்குறிப்பு : என் அஜீத் ரசிக கண்ணாடியை கழற்றி வைத்துவிட்டுத்தான் இந்த விமர்சனத்தை எழுதியுள்ளேன். ஒருவேளை இதில் விஜய்க்கு பதில் அஜீத் நடித்திருந்தால் விஜய் என்று வருகிற இடத்தில் அஜீத் என்று எழுதியிருப்பேன் அவ்வளவுதான். 

19 Jul 2014

வேலையில்லா பட்டதாரி - ஹவுஸ்புல்

நிச்சயமாக படத்தின் கதையை விவரிக்கப் போவதில்லை. இந்தப்பதிவு ஒரு சி செண்டர் பார்வையாளனாக என்னுடைய விமர்சனம் அவ்வளவே. 

வேலையில்லா பட்டதாரி. நாவலூர் ஏஜிஎஸ்ஸில்  முதல்நாள் இரவுக் காட்சி. அதிலும் வெள்ளிக்கிழமை இரவென்பதால் ஒட்டுமொத்த ராஜிவ்காந்தி சாலையும் அரங்கை நிறைத்திருந்தது. ஏதாவது ஐ.டி கான்பரன்ஸ் நடந்தால் கூட இவ்வளவு கூட்டம் வருமா தெரியவில்லை. அம்புட்டு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பட்டதாரி ஊழியர்களும் வேலை இல்லாப் பட்டதாரியைப் பார்க்கக் குழுமியிருந்தார்கள் தங்களின் கடந்தகால நினைவுகளை திரும்பிப் பார்பதற்காக. கடந்த தலைமுறையில் கமலகாசன் தொடங்கி ராம்ஜி வரை வேலையில்லாப் பட்டதாரியாக நடித்துவிட்டுப் போக இந்த தலைமுறையினருக்காக வே.இ.பட்டதாரியாக களத்தில் இறங்கியுள்ளார் தனுஷ். அவரின் சொந்தத் தயாரிப்பும் கூட. இதுவே அவருக்கு வினையாகிப் போனது வேறுவிஷயம், மானப்பிரச்ச்னையும் கூட. இதன் பின்னணி உங்களுக்கும் தெரிந்திருக்கலாம் இல்லையேல் அப்புறம் சொல்கிறேன். 



பொறியியல் முடித்துவிட்டு, தான் படித்த கட்டிட கட்டுமான துறையில் நியாயமான முறையில் நேர்மையான மனிதர்களுக்கு மத்தியில் வேலை பார்க்க ஆசைப்படும் நாயகன் இடைவேளை வரைக்கும் அப்படி ஒரு வேலை கிடைக்காமல் கஷ்டபடுகிறார். இடைவேளைக்குப் பின் அப்படி ஒரு வேலை கிடைத்தாலும், அப்படியாகக் கிடைத்த வேலையை தக்க வைத்துகொள்ள கஷ்டப்படுகிறார். காரணம் நம் நாயகன்தான் நேர்மையானவன் ஆயிற்றே. அதனால் அவனைத் தொந்தரவு செய்ய ஒரு அமுல்பேபி வில்லனாக வருகிறான். அவ்வப்போது டூயட்பாட பக்கத்துவீட்டில் குடியேறும் அமலாபேபி ஹீரோயினாகிறார். அவ்வளவு தான் கதை.  

முதல்பாதியில் விறுவிறுப்பான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும் திரைக்கதை எழுதிய விதத்தில் அவை விறுவிறுப்பாகவே நகர்கின்றன. என்னை கேட்டால் படத்தின் பெரும்பலம் தனுஷைத் தவிர்த்து வசனமும் ஒளிபதிவுமே என்பேன். பெரும்பாலான வசனங்கள் பட்டையக் கிளப்புகின்றன. அதிலும் தனுசின் டயலாக் டெலிவரி பிரமாதம். 'முன்னல்லாம் இல்லதாவங்க இருக்குறவங்கட்ட இருந்து பிடுங்கினாங்க, இப்ப என்னடான்னா இருக்குறவங்க இல்லாதவங்க கிட்ட இருந்து பிடுங்குறீங்க' ஒரு சோற்றுப்பதம். தனுஷ் பேசும் பெரும்பாலான வசனங்கள் அடிபொலி. செயற்கைத்தனம் இம்மியளவும் இல்லை. என்ன நாயகி அமலாபால் இடத்தில் வேறொரு ஈரோயின் இருந்திருந்தால் இன்னும் சூப்பராய் இருந்திருக்கும். அமலாபாலுக்கு கல்யாணம் ஆகிவிட்டதாலோ என்னவோ ஆண்டியாகவே தெரிகிறார். சொல்லபோனால் அதுதான் உண்மையும் கூட. 

சமீபத்திய வெற்றிப்படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் இப்படத்தின் இயக்குநர் என்பதால் படத்தின் ஒளிபதிவு ரிச்சாக இருக்கிறது. நன்றாகவும் இருக்கிறது. சென்னைக்குள்ளேயே படம் மொத்தத்தையும் முடித்தது பாராட்டத்தக்கது.  

படத்தின் சில காட்சி அமைப்புகள்  கொஞ்சம் பிரஷ்ஷாக இருந்தது. அதில் ஒன்று நாயகன் ரகுவரன் நாயகி ஷாலினிக்குக் கொடுக்கும் பிறந்தநாள் பரிசு. ஒட்டுமொத்த அரங்கமும் வேறொன்றை எதிர்பார்த்துக் காத்திருக்க அங்கே நடப்பதோ யாரும் எதிர்பாராத ஒன்று. வெகுநாட்களுக்குப் பின் திரையில் தோன்றும் சின்னக் கலைவாணர் சற்றே ஆறுதல் அளிக்கிறார் என்பதுதான் விகடனின் விமர்சன வரியாக இருக்கும் என்பது என் அவதானிப்பு. 

பாடல்கள் அனிருத்தின் வழக்கமான டெம்ப்ளேட் இசை. அதேநேரம் அனிருத்தின் இசைக்கு தனுஷின் நடனம் பிரமாதம். அவ்வளவு எனர்ஜிட்டிக். திருடா திருடி சுள்ளானில் நடித்த தனுசுக்கும் வேலையில்லா பட்டதாரி தனுசுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள். இத்தனை நாள் தனுஷ் என் பிடித்த நடிகர்களின் பட்டியலில் இல்லை. இந்தப்படத்தில் எனக்கு அவரை வெகுவாகப் பிடித்துப் போய்விட்டது. நடிப்பு பிரமாதம். சமுத்திரக்கனி மற்றும் சரண்யா பொன்வண்ணனின் நடிப்பும் அருமை.          

முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி தொய்வு என்றே பலரும் விமர்சிக்கின்றனர். எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை சலிப்பு தட்டாமல் தான் சென்றது. என்ன இரண்டாம் பாதி திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். அடுத்தடுத்து என்ன நடக்கபோகிறது என்பதை கணிக்கக் கூடிய வழக்கமான திரைக்கதை தான் என்றாலும் போதுமான அளவு மசாலா தடவி பரிமாறப்பட்ட விதத்தில் சுவைக்குப் பஞ்சமில்லை. நம்பிப்போய் பார்க்கலாம். 

ரசித்த சில காட்சிகள் :
  • தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தம்பிக்கு பணம் கொடுத்து உதவுவது. 
  • சரக்கடித்துவிட்டு சரண்யாவிடமும் அமலாபாலிடமும் கூத்தடிக்கும் காட்சிகள். 
  • சமுத்திரகனி தனுஷை ஆறுதல்படுத்தும் காட்சி 
  • வில்லனின் அப்பாவிடம் நேருக்கு நேர் விடும் சவால். 
  • அமுல்பேபியிடம் தனுஷ் பேசும் அத்தனை காட்சிகளும். 
  • பத்திரிக்கையாளர்களிடம் தனுஷ் பேசும் காட்சி.  

வேலையில்லா பட்டதாரியை தனுஷே தயாரித்ததால் படத்தை வெளியிடுவதில் சிக்கலில் மாட்டியிருந்ததாக ஒரு பத்திரிக்கைச் செய்தி படித்தேன். அதவாது தனுஷ் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படம் தயாரிப்பதாகவும் அந்தப் படத்தையும் தங்களிடமே விற்றால் மட்டுமே வேலையில்லா பட்டதாரியை வாங்குவோம் என்றும் தனுசை டார்ச்சர் செய்தார்களாம் டிஸ்ட்டிப்யுட்டர்கள். கடந்த சில படங்கள் தனுஷுக்கு சரியாக போகாததால் ஏற்பட்ட நிலைமை இது. அதனால் தனுஷுக்கு கிட்டத்தட்ட இது தன்மானப் பிரச்சனை. மேலும் 25-வது படம் வேறு. இது வெற்றிப்படமாக அமைந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறார். அதற்காக அதிகமாக உழைத்துள்ளார். தனுஷ் எதிர்பார்த்த வெற்றியை அவர் அறுவடை செய்வாரா என்றால்? 



படம் முடிந்து வெளிவரும் போது அனைவரும் தங்களுக்குள் திரைப்படத்தை மிக உற்சாகமாக விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். 'எனக்கு அந்த சீன் புடிச்சிருந்தது'. 'ஒவ்வொரு டயலாக்கும் செம மச்சி'. 'த்தா மாஸ் சீன் டா' என்று ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை விமர்சித்துக் கொண்டே நகர்ந்தனர். சமீபத்தில் பார்த்த எல்லா முதல்நாள் இரவுக் காட்சிகளிலும், படம் முடிந்ததும் தலையைத் தொங்கபோட்டுக் கொண்டு ஏதோ ஒரு விரக்தியில் செல்லும் ரசிகனையோ அல்லது 'செம தலைவலி எப்படா போய் தூங்குவோம்' என்ற எண்ணத்தில் செல்லும் ரசிகனையோ பார்த்துப் பழகியிருந்த எனக்கு இந்தக் காட்சி சற்றே புதுமையாய் இருந்தது. ஒரு திரைப்படம் வெற்றி பெற ரசிகனின் புளகாங்கிதத்தை விட வேறு என்ன விசயம் வெற்றியைத் தேடித் தந்துவிடப் போகிறது. 

வேலையில்லா பட்டதாரி - ஒருவேளை நீங்கள் வேலையில்லாப் பட்டதாரியாக இருந்தாலோ இருந்திருந்தாலோ உங்களுக்குள் இருக்கும் பழைய நினைவுகளை கிளறிவிட வாய்ப்புள்ளது. 

1 Mar 2014

நடு இரவில் - தவற விடக்கூடாத தமிழ் (திகில்) சினிமா

புதுகோட்டையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது ஆவி ஹோண்டா சிட்டியை தேசிய நெடுஞ்சாலையின் வளைவுகளில் திருப்பிக் கொண்டிருந்த நேரம் எங்களது சம்பாஷனை பழைய திரைப்படங்களை நோக்கித் திரும்பியிருந்தது. 'எலேய் சீனு உனக்கு புடிச்ச திகில் படம் எதுலேய்' வாத்தியார் கேட்க சட்டென எதுவும் நியாபகத்திற்கு வராமல் பீட்சா என்றேன், அதே கண்கள் என்றார் ஸ்கூல்பையன். 'அதுல்லாம் என்னலேய் படம். நா ஒரு படம் சொல்லுறேன், அத போய் பாரு, திகில மனுஷன் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கொண்டுபோயிருப்பான்' என்றார். 'என்ன படம் சார் அது' கேட்டேன்.

'நடு இரவில்ன்னு ஒரு படம், ரொம்ப பழைய படம், ஆனா அந்த காலத்துலையே தமிழ் சினிமால இப்படி ஒரு படமான்னு அசந்துருவ, கண்டிப்பா பாரு' 


'ஆமா சார் என்கிட்டயும் அந்த படம் இருக்கு, செம படம்' என்றான் ரூபக். பயபுள்ள ஒரு படத்தையும் விடமாட்டான் போலையே என்று மனதினுள் நினைத்துக் கொண்டு 'யாரு டைரக்ஷன்' என்று கேட்டதற்கு 'பாலச்சந்தர்' என்று கூறிவிட்டு என் முகத்தையே பார்த்தார் வாத்தியார். அவர் நினைத்ததும், இப்போது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதும் மிகசரி. நான் நினைத்தது கே.பாலச்சந்தரைத்தான். 

'அவசரப்பட்டு கே.பி ன்னு நினைச்சிராத, இவரு எஸ்.பி. எஸ்.பாலச்சந்தர். திகில் மன்னன், அந்த கால டி.ஆர், கதை திரைக்கதை இயக்கம் வசனம் இசை தயாரிப்பு மற்றும் நடிப்பு சகலமும் அவரே, திகில் படம் மட்டும் தான் எடுப்பார், திகில் மன்னன்னு அவருக்கு பேரே உண்டு' என்றபடி வழக்கம் போல தனக்குத் தெரிந்த தகவல்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் கூறினார். 

புதுகோட்டையில் இருந்து அரியலூர் செல்லும் பொழுது ராம்குமாரும் எங்களோடு இணைந்து கொள்ள மீண்டும் எங்களது பேச்சு சினிமாவிற்கு திரும்பியிருந்த நேரம் 'நண்பா நடு இரவில்ன்னு ஒரு பழைய படம், செம த்ரில்லிங்கா இருக்கும், கண்டிப்பா பாருங்க' என்றார் ராம்குமார். எனக்கொரு சந்தேகம் ஒருவேளை ராம்குமாரும் வாத்தியாரும் பேசிவைத்து பேசுகிறார்களோ என்று. 


இவர்கள் அனைவருமே ஆகோ ஓகோ என்றாலும் ஏனோ தெரியவில்லை 'நடு இரவில்' பார்க்கும் எண்ணம் தோன்றவேயில்லை. அதிலும் டிவி, கணினியில் முழுதாய் ஒரு படம் பார்த்தே வருடக்கணக்கில் ஆகிவிட்டது. இருந்தும் அசாத்திய பொறுமையை என்னுள் வரவழைத்துக் கொண்ட ஒரு நடுப்பகலில் ஆரம்பமாகியது நடு இரவில். 

நடு இரவில்: 

முதலைகள் நிறைந்த நீரால் சூழப்பட்ட, ஒரு குட்டி தீவு போன்ற இடத்தில் அமைந்திருக்கும் அரண்மனை போன்ற மாளிகையில், மனநலம் பாதிகப்பட்ட தனது மனைவியுடனும் நான்கு வேலையாட்களுடனும் வசித்து வருகிறார் இன்னும் இருபதே நாட்களில் ரத்தப் புற்றுநோயால் இறக்கப்போகும் தயானந்தம் (மேஜர் சுந்தர்ராஜன்). இவருடைய நண்பர் மற்றும் குடும்ப மருத்துவருமான சரவணன் (எஸ்.பாலச்சந்தர்), வாரிசு அற்ற மிகபெரிய லட்சாதிபதியான தயானந்தத்தின் சொத்துகள் தயானந்தத்தின் மறைவுக்குப் பின் அப்படியே அழிந்துவிடகூடாது என்பதால் அவற்றை அவருடைய சொந்தங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அறிவுறுத்துகிறார். 


அரிஜன பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக தனது காதல் மனைவியை பலவித இன்னல்களுக்குள்ளாக்கி, மனநலம் பாதிக்கச்செய்த உடன்பிறந்தவர்கள் மீது தீரா வெறுப்பில் இருக்கும் தயானந்தம், தனது நண்பன் மற்றும் மருத்துவர் சரவணனின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருந்தும் டாக்டர் சரவணன் தன் நண்பன் மீது உள்ள அக்கறையால் அவருடைய உடன்பிறந்தவர்களுக்கு விளக்கமான மடல் எழுதி அனைவரையும் மாளிகைக்கு வரவைக்கிறார். இது வரை மிக மெதுவாக நகரும் கதை இதன்பின் வேகமெடுத்து ஓடத் தொடங்குகிறது.        

1965ல் எடுக்கப்பட்ட படம் என்பதால் கருப்புவெள்ளையிலும் மிகமோசமான கருப்பு வெள்ளைப்படம் மற்றும் இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய சற்றே நீளமான படம். ஓவராய் மொக்கை போட்டால் தினசரி அரைமணிநேரம் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒருகட்டத்தில் என்னையறியாமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த நான், எவ்வளவு நேரம் ஓடியுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியம், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப்படம் முடிந்திருந்தது. 

இரண்டு அண்ணன், இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கையுடன் பிறந்த மிகபெரிய குடும்பம் தயானந்த்தினுடையது. அனைவருக்குமே திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அடங்கிய ஒரு பெரிய பட்டாளமே தயானந்தத்தின் வீட்டினுள் நுழைகிறது. தயானந்தம் தன் மனைவியின் இந்த நிலைக்குக் காரணமான உடன்பிறப்புகள் மீது எரிந்து விழுகிறார். சகோதரனின் நிலைமையறிந்த ஒவ்வொரும் மன்னிப்பு கோருகிறார்கள்.

தயானந்தத்தின் கடைசி தம்பி ஜம்புலிங்கம்( வி.எஸ்.ராகவன்) ராணுவத்தில் பணிபுரியும் பொழுது தன்னுடைய ஒரு கால் மற்றும் இரண்டு கண்களையும் இழந்து விடுகிறார். இது தனது அண்ணிக்கு தான் செய்த கொடுமையால் வந்தவினை என்று கதறி மன்னிப்பு கோருகிறார். சமாதானம் அடையாத தயானந்தம் அனைவரையும் கடுமையாக திட்டிவிடுகிறார். இந்நேரம் டாக்டர் சரவணன் தயானந்தத்தின் சகோதர்களிடம் 'நீங்கள் கோவபட்டால் நாம் திட்டமிட்டது திட்டமிட்டபடி நடக்காது, இன்னும் சிலநாட்கள் தான் தயானந்தம் உயிரோடு இருப்பார். அதனால் பொறுமையாக இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்'. 

வீட்டு வேலைக்காரராக வரும் சோ, தனது சக தொழிலாளிகளான மொட்டையன் மற்றும் மொட்டையன் மகளுடன் சேர்ந்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் பேய் பயம் உண்டுபண்ணி வீட்டைவிட்டே துரத்த திட்டம் தீட்டுகிறார். பயமுறுத்தவும் செய்கிறார். சோ - அநியாயத்திற்கு இளமையாக இருக்கிறார்.          

மேலும் அதற்கு அடுத்தநாளே தயானந்தத்தின் அண்ணன் மனைவி மோகனாம்பாள் (எஸ்.ஆர்.ஜானகி) சாப்பாட்டு மேஜையின் அடியில் பிணமாகக் கிடக்கிறார். டாக்டர் சரவணன் அவரை சோதித்துவிட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அனைவரின் பார்வையும் தயானந்தத்தின் மீது விழுகிறது. ஒருவர் விடாமல் அனைவரும் இது தயானந்தத்தின் பழிவாங்கும் படலம் என குற்றம் சுமத்துகிறார்கள். தயானந்தம் 'ஒளிந்திருந்து கொள்ள நான் ஒன்று பேடி இல்லை' என மறுக்கிறார். மேலும் உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை ஒருவரும் வீட்டை நகரக் கூடாது, படகை எடுத்துக்கொண்டு கரைக்குப் போகக் கூடாது. ஒருவேளை நீந்தி செல்லலாம் என்று நினைத்தால் முதலைக்கு இரையாவீர்கள் என்று மிரட்டுகிறார்.   


தயானந்தத்தின் மனைவி எப்போதும் தனி அறையிலேயே அடைந்து கிடப்பவர் ஜம்புலிங்கத்தின் மகளான ரோகிணியின் (சௌகார் ஜானகி) பாடலை கேட்டு மகிழ்ச்சியடைகிறார். இதனால் தயானந்தத்திற்கு ரோகிணியின் மீது பரிவு ஏற்படுகிறது.    

மோகனாம்பாள் கொலையானதிலிருந்து சரியாக இரண்டாவது நாளில் தயானந்தத்தின் மூத்த அண்ணன் சோமநாதன் (சி.வி.வி பந்தலு) தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் அது கொலை என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து வரிசையாக மற்ற உடன்பிறப்புகளும் அவர்களது குழந்தைகளுமாக மொத்தம் ஏழு நபர்கள் கொல்லபடுகிறார்கள். 

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது துப்பறியும் பார்வை வேறுவேறு ஆட்களைத் துரத்துகிறது. பழிவாங்க தயானந்தமோ, இல்லை அவரது மனைவி பொன்னியாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கும் வேளையில் பெரும்பாலான நேரங்களில் டாக்டர் சரவணனையே சந்தேகிக்கிறோம். சிலகாட்சிகளும் அப்படியே நகர்கின்றன. மேலும் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் தயானந்தத்தின் சொத்தின் மீது ஆசையிருப்பதால் ஒவ்வொருவரையும் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது. 

இந்நேரத்தில் தயானந்தத்தின் மனைவி பொன்னியும் கொலையாகிறார். வேறுவழியே இல்லாமல் அனைவரது சந்தேகமும் டாக்டர் சரவணன் மீது திரும்புகிறது. அதற்கு ஏற்றாற்போல் ரோகிணியை கொலைசெய்ய வரும் முகமூடி அணிந்த சரவணனை தயானந்தம் சுட்டுக் கொல்கிறார். நாம் எதிர்பார்த்தது போல் சுபம் போடுவர்கள் என்று நினைக்கும் வேளையில் டைரக்சன் எஸ்.பாலசந்தர் என்று  போடுகிறார்கள். 'என்ன இங்க சத்தம்' என்றபடி டாக்டர் சரவணன் மாடிப்படியில் இருந்து இறங்குகிறார். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். ஏன் அதிர்ச்சிக்குள்ளானார்கள்? அப்படியென்றால் உண்மையான கொலையாளி யார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

மிகச்சரியாக சொல்ல வேண்டுமானால் வெறும் இருபது கதாபாத்திரங்கள் மற்றும் ஒரே ஒரு பங்களாவைச் சுற்றி நகரும் கதை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு அத்தனையிலும் ஒரு திகில் படத்திற்கு தேவையான நேர்த்தி. மின்சாரம் வெளிச்சம் இல்லாத அந்த பங்களாவை, பெரும்பாலும் நடு இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடைபெறும்படி திரைக்கதை அமைத்த எஸ்.பாலச்சந்தர் உண்மையிலேயே பாராட்டத்தக்கவர். மிகபெரும் புத்திசாலியாக இருக்க வேண்டும். திகில் படத்திற்கே உரித்தான காட்சி அமைப்புகள், சலிப்புதட்டாத இயல்பான வசனம். பெரும்பாலான வசனங்களில் ஹாஸ்யம் அள்ளுகிறது. பல கொலைகள் நடந்தாலும் ஒரு துப்பறியும் காட்சி கூட கிடையாது என்பது இந்த படத்தின் சிறப்பம்சமாக இருக்க வேண்டும். 


லாஜிக் மீறல்கள் என்று நாம் நினைக்கும் பல காட்சிகளுக்குகாண விளக்கங்களை அந்தந்த காட்சிகளிலேயே வசனம் மூலம் புரியவைப்பது பிரமாதம். அவற்றையும் மீறி சில தென்பட்டாலும், எஸ்.பாலச்சந்தர் மெய்யாலுமே அறிவுஜீவிதான். நீங்கள் தமிழ்சினிமா பிரியர் என்றால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தவறவிடக் கூடாத தமிழ் சினிமா இது... .