27 Dec 2013

ஓடோடி எக்ஸ்பிரஸ் - வண்டலூர் ஜூவும் சில 18+ மிருகங்களும்

அந்த விசித்திர மிருகங்களை ஆங்காங்கே சந்திப்பதற்கு முன்பு வரைக்கும் வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்த பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணம் அணுவளவும் எனக்கில்லை. அப்படியென்ன பொல்லாத மிருகத்தை பார்த்துவிட்டாய், சிங்கம் புலி சிறுத்தை என்று நாங்கள் பார்க்காத மிருகத்தையா பார்த்துவிட்டாய்? என்று நீங்கள் கேட்பது எனக்குப்புரிகிறது, ஆம் நான் பார்த்தது பொல்லாத மற்றும் கொஞ்சம் சுவாரசியமான சில மிருகங்களைத்தான். அது குறித்துப்பேசுவதற்கு முன் வண்டலூர் பூங்காவின் சில வரலாற்றுத் தகவல்களை பதிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதனை படிக்க நினைப்பவர்கள் தொடரலாம் இல்லையேல் நேராக கடைசி பாராவுக்கு தாவி விடலாம், அதையும் தாண்டிய பொறுமை இருந்தால், கடைசி பாராவில் இருந்து மீண்டும் இரண்டாம் பாராவுக்கு தாவலாம். டார்வின் கோட்பாடின் வந்த நமது முன்னோர்களின் கோட்பாடும் அதுதானே.


இன்றைய எக்மோரில் செத்த காலேஜ் இருக்கும் இடத்தில் 1855-ல் பிரிட்டீஷ் அரசாங்கமானது அருங்காட்சியகம் ஒன்றைத் தொடங்க தீர்மானித்தது, அரசாங்கத்தின் இந்த எண்ணம் சற்றே விசாலமாக, அதனருகிலேயே மிருகக்காட்சிசாலை ஒன்றையும் திறந்து சிங்கம் புலி உள்பட பல விலங்குகளையும் அவ்விடத்தில் கொண்டுவந்து அடைத்தனர். 

இவ்விசயம் நம்மக்கள் மத்தியில் சற்றே பிரபலமாக கூட்டம் கூட்டமாக வந்துசெல்ல ஆரம்பித்தனர். மேலும் இவ்விடங்களை இவர்கள் செத்த காலேஜ் என்றும் உயிர் காலேஜ் என்றும் வாஞ்சையோடு அழைக்கத் தொடங்கினர். விஷயம் சுத்துப்பட்டு எட்டுபட்டிக்கும் பரவ "எட்றா வண்டிய" என்றபடி வண்டிமாடு கட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள் ஜமீன்கள் மிராசுகள் மற்றும் ஜனங்கள். வெகுவிரைவில் இவ்விரு இடங்களும் நகரின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக மாறின. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் வான்படை விமானங்கள் மதராசப்பட்டினத்தைத் தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்ட போது விலங்குகளின் நலன் கருதி இடமாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்பின் மீண்டும் இங்கேயே மாற்றிவிட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. 

இந்நிலையில் மிருகக்காட்சி சாலையில் மிருகங்களின்வரத்தும், மதராசப்பட்டினத்தில் போக்குவரத்தும் அதிகரிக்கத் தொடங்கியபோது அங்கிருந்த அத்தனை மிருகங்களையும் விசித்திரமான கொடிய நோய் தாக்கியது. இதனால் பல விலங்குகள் மாண்டன. உறக்கம் கலைந்த அரசாங்கம் மாற்றுவழி தேடி யோசித்த போது சென்னையில் இருந்து முப்பது கிமீ தொலைவில் அமைந்திருந்த வண்டலூரின் பசுமையான இயற்கைச் சூழல் உயிரியல் பூங்கா கட்டமைக்க ஏற்ற சூழல் என்று அரசாங்கம் முடிவெடுத்து 1976-ம் வருடம் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் உதயசூரியனின் தலைமையில் உதயமானது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.  

என்ன காரணத்துக்காக 1976-ம் வருடம் பூங்காவின் இடம் மாற்றபட்டதோ அதே பிரச்சனைகளை தற்போதைய வண்டலூர் சந்தித்துக் கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல், வாகனஒலி, வாகனப்புகை, தண்ணீர்ப்பஞ்சம் இதுவும் போதாதென்று உலகிலேயே மிகப் பெரியபேருந்து முனையம் ஏற்படுத்தும் திட்டத்தை வேறு அரசு பரிந்துரைத்துள்ளது. 'என்னவோ போடா மாதவா...ம்ம்ம்... நாம நம்ம கதைக்கு வருவோம்'.     

பத்து வருடங்களுக்கு முன்பு ரவியை டார்ச்சர் செய்து வண்டலூர் அழைத்து வந்தேன். வந்தும் என்ன பிரயோஜனம் அந்தப் பெரிய இரும்புக்கதவை நன்றாக இழுத்து அடைத்து சங்கிலி போட்டு கட்டியிருந்தார்கள். அதனருகில் தேவுடு காத்துக்கொண்டிருந்த ஒரு சின்ன பலகையில் எழுதியிருந்தது. "செவ்வாய் விடுமுறை" என்று. அதற்குப்பின் வண்டலூரை சுற்ற வாய்ப்பே கிடைக்கவில்லை.

கடந்தவாரம் வீட்டிற்கு வந்த உறவினர்கள் வண்டலூர் சென்றே ஆக வேண்டும் என்று (வழக்கமாக சொல்லும் அதே டயலாக் தான்) ஒற்றைக் காலில் நின்றார்கள். "இப்போதான் நைட்ஷிப்ட் முடிச்சி வந்த்ருக்கேன், என்னால வர முடியாது" என்றாலும் என்னை அவர்கள் விடுவதாயில்லை. அந்த கதை இனி... 

பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் மட்டுமே நுழைவுக் கட்டணம். வாசலில் இரு காவலர்கள் உங்கள் பைகளை சோதனை போடுவதால் விலங்குகளின் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக்கிற்குத் தடா.   

வண்டலூர் ஜூவை சுற்றிப் பார்க்க மூன்று வழிகள் உள்ளன (i) மின்னியங்கி வாகனம். ஆறு ஏழு கிமீ தொலைவு நடக்க சிரமப்படுபவர்கள், வயதானவர்கள் குழந்தைகள் என்றால் மின்னியங்கி வாகனம் சாலச்சிறந்தது. என்னவொன்று முக்கியமான இடத்தில மட்டுமே நிறுத்துவார்கள். ஓடிச்சென்று பார்த்துவிட்டு, அதேவேகத்தில் மீண்டும் வந்து உட்கார்ந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே இதில் இருக்கும் குறை. (ii) வாடகை மிதிவண்டி. நம்முடன் வருபவர்களால் மிதிவண்டி மிதிக்க முடியும் என்றால் மிதிவண்டி உலா ஆகச்சிறந்தது. நிறுத்தி நிதானமாக எவ்வித அவசரமும் இல்லாமல், ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுற்றி வரலாம். அடுத்தமுறை சென்றால் மிதிவண்டியில் தான் சுற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளேன், வருகிறீர்களா? (iii) நடராஜா சர்வீஸ். ஆகட்டுண்டா தம்பி ராஜா, நட ராஜா மெதுவா செல்லையா, பதமா நில்லையா. பொறுமையாக மிகப்பொறுமையாக சுற்றிவரலாம். என்னவொன்று மூன்று கிமீ தாண்டுவதற்குள்ளாகவே மூச்சு வாங்கி ஓய்வெடுக்கத் தொடங்கிவிடுவோம். சில இடங்களுக்கு நடப்பதற்குச் சோம்பேறித்தனபட்டு சென்று பார்க்காமல் விட்டுவிடுவோம். மூன்றிலும் சைக்கிள் பெஸ்ட். உள்ளே தமிழ்நாடு ஹோட்டல் இரு இடங்களில் உள்ளது இரண்டுமே செம வேஸ்ட்.

வண்டலூர் பூங்காவின் உள்ளே நுழைந்த உடனேயே அதன் செயற்கைத்தனமும் உடன் இணைந்துகொண்டு பட்டவர்த்தனமாக தலைவிரித்து ஆடுகின்றன. பொதிகை மலைச்சாரலில் பிறந்து வளர்ந்த எனக்கு ஆயிரத்து முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இக்காடு குளுமையையோ, நிம்மதியான மனநிலையையோ இன்னும் சொல்லபோனால் ஒரு வனத்தினுள் இருக்கிறோம் என்ற பிரம்மையையோக் கூட ஏற்படுத்தவில்லை. ஏதோ நடேசன் பார்க்கில் ஆங்காங்கு மான்களையும் வான்கோழிகளையும் அலையவிட்டது போல் இருந்தது எனக்கு. எங்கெங்கு காணினும் மக்கள் மக்கள் மக்களோடு மக்களாக மக்கள்.

ஒரு சாதாரண மனிதன் எனக்கே இவ்விடம் காடு போன்ற சூழலைத் தந்துவிடாத போது காட்டுவாசிகளான இவ்விலங்குகளுக்கு இச்சூழல் எப்படி நிம்மதியைத் தந்துவிட முடியும். விதவிதமாக ரகம்ரகமாக வகைவகையாக நாம் பார்த்து வியந்து வாயைப்பிளந்து கேமராக்களில் க்ளிக்க வேண்டும் என்பதற்காகவே ஜனனம் எடுத்துள்ளன என்பதைத் தவிர இவ்விலங்குகள் வேறெந்த பாவமும் செய்யவில்லை. 



அத்தனை மிருகமும் உற்சாகமில்லாமல் சோம்பிப்போய் கிடக்கின்றன. படுத்த இடத்திலேயே படுத்துக் கிடக்கின்றன. 'உன்னை அடைத்து வைத்த ஜாதியிலிருந்து வந்துள்ளேன் நிமிர்ந்து பார்' என்றாலும் பார்க்கமறுக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு இவ்விலங்குகளுக்கு கொடுக்க வேண்டிய உணவைக் கூட முறையாகக் கொடுக்காமல் ஊழல் செய்து சிலர் வயிறு வளர்த்தார்கள் என்ற செய்தியைப்படித்த போது வராத வருத்தம் இவ்விலங்குகளை நேரில் காணும் போது என்னுள் தொற்றிக்கொண்டது. 

ஒருமுறை தினமலரில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள், அடிபட்ட புள்ளிமான் ஒன்று படுத்திருப்பது போலவும் அந்த மானின் மீது ஒரு காகம் அமர்ந்து அதன் காயத்தை கொத்திக் கொண்டிருப்பது போலவும். ஜெயமோகனின் யானைடாக்டர் புத்தகத்தில் டாக்டர் கே, 'விலங்குகளின் ரெசிஸ்டன்ஸ் அதிகம், அவை மனிதர்களைப் போன்று சாதாரணமானவை கிடையாது, ஒருவேளை அவைகளின் அடிபட்ட காயத்திற்கு ஆண்டிபயாட்டிக் கொடுத்தால் காடுகளினுள் மூன்று கி.மீக்கு ஒரு விலங்குகள் மருத்துவமனை வேண்டியது திறக்க வேண்டியதுதான்' என்று கூறியிருப்பார். தினமலரில் சுட்டிகாட்டப்பட்ட அந்த மானுக்குத் தேவை மருத்துவசதி இல்லை, வலுகொண்டு அந்த காகத்தை விரட்டவேண்டிய திடம். சோறு போட்டால் தானே அது திடமாய் இருக்கும். அதனுடைய சோறையும் இவன்களே பிடுங்கித்தின்றால்? இன்றும் பல விலங்குகள் காயத்துடன் சோம்பியபடி சுற்றித்திரிவதைப் பார்க்கமுடிகிறது.

சிங்கம் புலி சிறுத்தை போன்ற விலங்குகள் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை. நாம் அவற்றைப் பார்க்க வரவில்லை, அவை தான் நம்மைப் பார்க்க வரவேண்டும் என்ற கர்வத்துடனேயே சுற்றித் திரிகின்றனவோ என்னவோ! வெள்ளைப் புலிகள் என்றழைக்கபடும் வங்காளப் புலிகளை எளிதில் பார்க்கலாம் அல்லது பார்க்கும்படி வைத்திருக்கிறார்கள். 

வண்டலூர் பூங்காவில் லயன் சாபாரி உள்ளது, மனிதர்கள் அனைவரையும் ஒரு கூண்டுக்குள் அடைத்து அழைத்துச் செல்கிறார்கள், அழைத்துச் செல்கையில் அவர்கள் கூறும் கூறும் ஒரே ஒரு விதி, சிங்கம் மனது வைத்தால் மட்டுமே உங்களைக் காணவரும். சிங்கத்தைக் காண்போம் (அ) காண்பிப்போம் என்பதற்கு உறுதியளிக்க முடியாது என்கிறார்கள். 

மதிய உணவைக் கூடத்துறந்து அத்தனை இடங்களையும் சுற்றிமுடித்த போதுதான் லயன் சபாரி என்ற ஒன்றே எங்களுக்குத் தெரிந்தது. அங்கு பயணிப்பதற்கு முன்பதிவு செய்ய ஒரு பெருங்கூட்டம் காத்திருந்தது, அருகே நின்றுகொண்டிருந்த பூங்கா ஊழியரிடம் சென்று 

"ண்ணா, டிக்கெட் எவ்ளோ ண்ணா" என்றேன். மேலும் கீழும் பார்த்தார்,  பதில் எதுவும் கூறாமல் அருகில் இருந்தவரிடம் பேசத் தொடங்கிவிட்டார். இம்மிபிசகாத சென்னைப்புத்தி. எனக்கோ பயங்கர அலுப்பு, என் பிடிவாதம் என்னை விடுவதாய் இல்லை. மீண்டும் "ண்ணா, டிக்கெட் எவ்ளோ ண்ணா" என்றேன். மிகபெரிய சலிப்புடன் "முன்னாடி எழுதியிருக்கு வேணும்னா அங்க போய் பாரு" என்ற பதில் வந்தது. முன்னாடி சென்று பார்க்கும் அளவுக்கு தெம்பில்லை அதனால் நானும் அவரை விடுவதாய் இல்லை "நடக்க முடியாலன்னு தான உங்ககிட்ட கேக்குறேன் சொல்லலாம் இல்ல", "ஏம்பா முன்னாடி போய் பாருன்னா பேஜார் பண்ணிட்டுருக்க, தோ அன்னாண்ட இருக்கு பாரு" என்று நான் கவனிக்காத திசையில் என் எதிரில் இருந்த பலகையைக் சுட்டிக்காண்பித்தார். "இருபது ரூபா, முப்பது ரூபா" என்று அவர் கூறியிருந்தால் அத்தோடு முடிந்திருக்கும். ஆனால் ஓரிரு வார்த்தையில் கூற வேண்டிய தகவல்களைக் கூறமுடியாத அளவிற்கு பிசியாகிவிட்ட இவர்களின் உளவியலைத்தான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அந்தப்பலகையை அவர் காண்பித்தாலும் கூட அதனைப்பார்க்கும் மனநிலை என்னிடம் இல்லை. 

இருந்தும் அடுத்தமுறை லயன் சபாரி செல்வதற்காகவே வண்டலூர் போய்வரவேண்டும். 'அவன் கிடக்கான், லூசுப்பய...' 

இனி வரப்போவது தான் அந்த விசித்திர மிருகங்கள் பற்றிய குஜாலான 18+ பாரா. இது 18+ என்பதால் 18 வயது நிரம்பாதவர்கள் கண்களை மூடிக்கொண்டு படிக்கவும். முதல் பாராவில் இருந்து இங்கு ஒரே தாவு தாவி வந்தவர்கள் நிதானமாகப் படிக்கவும். இந்த மிருகங்கள் பூங்காவின் வெளிப்பகுதிகளில் கொஞ்சம் நாகரிகமாக தோற்றமளித்தாலும், அடர் வனத்தை நெருங்க நெருங்க இவர்களின் சில்மிசங்களும் அதற்கு ஏற்றாற்போல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நான் குறிப்பிட விரும்புபவை எல்லாமே பேன்ட் சட்டை, ஜீன்ஸ் சுடிதார் போட்ட நாகரிகமான மிருகங்கள். வீட்டில் ஒதுங்க இடம் கிடைக்கவில்லையென்று ஒதுக்குபுறமாக தள்ளிக்கொண்டு வந்து ஒதுங்கிய மிருகங்கள். எனக்கு தெரிந்து பூங்காவிற்கு வந்த அனைவரும் விலங்குகளைப் பார்ப்பதை விட இவர்களைப் பார்ப்பதில் தான் அலாதி ஆர்வம் காட்டினார்கள் என்று நினைக்கிறன். தோளில் சாய்ந்து, மடியில் படுத்து, உதட்டுடன் உதடு பொருத்தி, அடேயப்பா இந்த நாகரீக ஆதிவாசிகளின் லீலைகள் இலவசமா ஒரு சினிமா! ஊரில் இருந்து வந்த உறவினர்களின் மனதில் சென்னை குறித்த பிம்பம் தவிடுபொடியானது இந்த இடத்தில்தான். இந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் சென்னைவாசிகள் இல்லை, மனிதர்கள். அல்லது மனிதர்கள் என்று அடையாளம் காணப்படும் மிருகங்கள். இதில் மாலை போட்டிருந்த  ஒருவன் செய்த லீலைகள் இருக்கிறதே, அவன் சாமியே இல்லை. அக்மார்க் போலிச்சாமி. தான் அழைத்து வந்திருந்த பெண்ணை தன் கரங்களுக்கு இடையிலேயே சொருகிக் கொண்டு நடைபழகிக் கொண்டிருந்தான்.  இம்மியளவு பிரியக்கூட அவன் மனதில் வலுஇல்லை. கிடைத்த புதர்களின் இடைவெளிகளில் இருந்தவர்கள் மகாதியானத்திலும், வெளிப்புறமாக இருந்தவர்கள் தியானத்திலும் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள். சிறுவர் பெரியவர் இளைஞர் பெண்கள் மற்றும் அரசனைப் போன்ற நல்லவர்கள் என்று யார் கடந்தாலும் அவர்கள் அவர்களது தியானத்தில் இருந்து வெளிவருவதாய் இல்லை. போதாக்குறைக்கு சில இடங்களில் "இங்கு சுதந்திரமாக பாம்புகள் நடமாடும் ஜாக்கிரதை" என்றெல்லாம் பலகை வைத்து பயமுறுத்துகிறார்கள், அந்த இடங்களில் தான் இவர்களை அதிகமாய்க் காண முடிகிறது. சில பகுதிகளில் சிறுவர்கள் சிலர் அந்த இடங்களிலேயே டேரா போட்டு இவர்களையே வெறிக்க வெறிக்க ஜொள்ளிக் கொண்டிருந்தனர். "மச்சான் டேய் அங்க பாருடா, செம மச்சி, மச்சான் டேய் அவன் கைய பீப்ப்ப்ப். டெல்லி தமிழகம் பீகார் உட்பட இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் எதையோ கண்ட்ரோல் செய்யப் போகிறார்களாம். டேய் மொதல்ல பீச்சு பார்க்குக்கு வார இவிங்கள கண்ட்ரோல் பண்ணுங்கடா, மத்ததெல்லாம் தானா கண்ட்ரோல் ஆயிடும்.


இங்கிருந்து வண்டலூர் ஜூவுக்கோ அல்லது இப்பதிவை விட்டோ ஓடிப்போக தயாராயிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் ஓடோடி எக்ஸ்பிரஸின் நன்றி வணக்கம் :-)  

47 comments:

  1. //இம்மிபிசகாத சென்னைப்புத்தி. //

    யப்பா சிங்கம், பிரபா, மெட்ராஸ்பவனார்... எங்கய்யா இருக்கீரு?

    // "இங்கு சுதந்திரமாக பாம்புகள் நடமாடும் ஜாக்கிரதை"//

    எந்த பாம்புன்னு ச்சொல்லலம்மா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மயிலன்

      இம்மிபிசகாத சென்னைப்புத்தி என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது, தமிழகத்தில் வேறு எந்த பகுதிகளில் சென்று ஏதேனும் கேட்டாலும் அந்த நபருக்கு தெரியவில்லை அல்லது கூறும் விருப்பமில்லையெனில் குறைந்தபட்சம் தெரியாது, வேற யார்கிட்டயும் கேளுங்க அல்லது தெரியாது என்பதைக் குறிக்கும் தலையசைப்போ இருக்கும்.

      ஆனால் சிங்காரச் சென்னையில் மட்டும் தான், நாம் என்ன கேட்டாலும் அப்படி ஒரு விஷயம் அவர்களிடம் கேட்டது போலவே காட்டிக் கொள்ள மாட்டார்கள். முகத்தில் எந்த சலனமும் இருக்காது. கேட்பதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ அதே நிலையில் இருப்பார்கள். ஒருவேளை இரண்டு மூன்று முறை தொடர்ந்து கேட்டால் பதிலோ அல்லது பதிலுக்கு வசவோ கிடைக்கலாம்.

      இதைத்தான் சென்னை புத்தி என்கிறேன், தெரியாது என்ற ஒற்றை வார்த்தையைக் கூட 'நாம் என்ன இவனிடம் கூறுவது' என்ற மனோபாவம் பலருக்கும் இருக்கிறது. குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்களிடம்,பயணத்தின் போது பெரும்பாலான சென்னைவாசிகளிடம்...

      சிலநேரங்களில் யாரேனும் என்னிடம் வழிகேட்டால் நானும் கூட தெரியாது என்பது போல் தலையசைக்கத் தொடங்கிவிட்டேன். எங்கே எனக்கும் சென்னை புத்தி வரத்தொடங்கிவிட்டதோ என்று பயமாய் உள்ளது :-)))

      Delete
    2. //எந்த பாம்புன்னு ச்சொல்லலம்மா...// ஹி ஹி ஹி குறியீடு.. நீங்கள் தான் கண்டுபிடிக்கணும்

      Delete
  2. எங்கே போனாலும் இப்படித் தான் இருக்காங்க....:((( தில்லியிலும் GARDEN OF FIVE SENSES என்ற இடத்தில், ஏதேனும் அங்கு விழா இல்லாவிட்டால் செல்லவே கூடாது...:((( மிருகங்களுக்கு கூட ஒரு விதிமுறை இருக்கு... இவங்க அதை விட மட்டம்...

    மகாபலிபுரத்திற்கு முன்பு புலிக்குகை என்ற இடத்தில் சமீபத்தில் இந்த அனுபவங்கள் கிடைத்தன...அடுத்த முறை சென்னை வரும் போது வண்டலூர் போகலாம் என்று நினைத்திருந்தேன்... இனி அந்த எண்ணமே வரப்போவதில்லை....

    ReplyDelete
    Replies
    1. மகாபலிபுறம் புலிக்குகையில் மட்டும் இல்லை அக்கா.. இ.சி.ஆரில் செல்லும் வலையில் எல்லாம் பைக்கை காரை ஓரமாய் நிறுத்தி தப்பு செய்பவர்களும் உண்டு...

      என்ன செய்ய எல்லாம் மேற்கத்திய மோகம் (ஆவி ஹி ஹி ஹி )

      அதற்காக வண்டலூர் செல்லாமல் இருக்காதீர்கள் சென்று வாருங்கள்...

      Delete
  3. சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள். கடைசி பாராவில் நீங்கள் சொல்லியிருப்பதை நான் நம்பவில்லை. கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. எனவே ஒருமுறை சென்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. போகும் போது சொல்லுங்க ஸார்.. நானும் வர்றேன்.. இது மாதிரி "அநியாயங்களை" பார்த்த பின் தான் விமர்சனம் பண்ணனும்.. ஆமா சொல்லிட்டேன்.. ;-)

      Delete
    2. //கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை. எனவே ஒருமுறை சென்று உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்.// நீங்கள் கூறிய பின்பு தான் சற்று சிந்தித்துப் பார்த்தேன். எனக்கும் நான் பார்த்த காட்சிகளில் உள்ளது.. போகும் போது சொல்லுங்கள் நானும் உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன்...

      Delete
    3. இது மட்டுமில்லை, இன்னொரு திடுக்கிடும் விஷயமும் இன்று செய்தித் தாளில் பார்த்தேன். வண்டலூர் ஜூவில் நேற்று ஒரு ராஜ நாகம் செத்துப் போச்சாம். சீனு மேல சந்தேகப் பட வாய்ப்பிருக்கா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்தக் காட்சியை எல்லாம் படமெடுக்க அது உதவுமா என்று ஆராய்ச்சி செய்திருப்பாரோ...

      Delete
  4. தான் அழைத்து வந்திருந்த பெண்ணை தன் கரங்களுக்கு இடையிலேயே சொருகிக் கொண்டு நடைபழகிக் கொண்டிருந்தான்.
    ...............வுட்டா வேற எவனையாவது புடிச்சுக்கிட்டு ஓடிப் போயிரும் வேய்...! அதான் பயந்து போயிட்டானாக்கும்?!!!! ஹி.... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹ ஹா.. எங்க இவன விட்டா இவன் வேற புள்ளைய தேடி ஓடிருவானோனுன்ற பயம் தான் அந்த புள்ளைகிட்ட இருந்தது வாத்தியாரே :-)

      Delete
  5. நல்ல பகிர்வு சீனு. இதையெல்லாம் தில்லியில் நிறையவே அனுபவிச்சாச்சு! :(

    ReplyDelete
    Replies
    1. சார் :-( இப்படியில்ல :-) இப்படி ஹா ஹா ஹா

      Delete
  6. நல்ல பகிர்வு சீனு. இதையெல்லாம் தில்லியில் நிறையவே அனுபவிச்சாச்சு! ://
    நாகராஜ் சாரே !!

    நீங்க தில்லி லே பார்த்தது நான் அமேரிக்கா, பாச்டன்லே பாத்தது எல்லாம்

    வேற புலி, வேற சிங்கம், வேற சிறுத்தை வேற மானு...

    இங்கன நம்ம தமிழ் நாட்டுலே இருக்கற புலி, சிங்கம் , சிறுத்தை, மானு, மயிலு எல்லாத்தையும்,

    நம்ம பாக்கணும் இல்லையா...

    அதேன் . நம்ம சீனு விவரமா எழுதியிருக்காரு.

    எங்க மாதிரி ஓல்டு மேன் யாருனாச்சும் ஹெல்ப் கிடைச்சாத்தான் போக முடியும். இல்லைன்னா, இது போல எழுதியதை படிச்சுத்தான் கற்பனை பண்ணி பார்க்க முடியும்.

    சீனு சார், கலக்கிட்டீங்க...

    சுப்பு தாத்தா.
    நீங்க திருப்பாவை பஜனைக்கு சுடு தண்ணி கொண்டு வந்ததை எழுதி இருந்தேன். நீங்க வல்லையே.. உங்க பிரண்டு ஆவி மட்டும் ஆவியை புடிச்சு கொண்டு வந்திருந்தாரு.

    ReplyDelete
    Replies
    1. :)))))

      தமிழ் நாட்டு 18+ மிருகங்களையும் பார்க்கணும்னு சொல்றீங்க! பார்த்துடலாம் அடுத்த பயணத்தின் போது!

      Delete
    2. ஐயையோ தாத்தா நான் பார்க்கவே இல்ல... இதோ வந்து பாக்றேன்

      Delete
    3. //தமிழ் நாட்டு 18+ மிருகங்களையும் பார்க்கணும்னு சொல்றீங்க! பார்த்துடலாம் அடுத்த பயணத்தின் போது! // ஹா ஹா ஹா அப்டி வாங்க வழிக்கு

      Delete
  7. நல்ல பதிவு சீனு.. சமீபத்தில் ஜூ வுக்கு நண்பருடன் சென்ற போது எனக்கும் இதே எரிச்சல் தான்.. எங்கே சென்றாலும் இவங்க அழிசாட்டியம் தாங்கல...

    ///இம்மிபிசகாத சென்னைப்புத்தி. //
    உங்க முகத்தை பார்த்து அவனுக்கு பேச புடிக்கல போல... ஏன் தென்காசி-ல யாரும் இப்படி பேச மாட்டாங்களா ???? #கோபம்

    ReplyDelete
    Replies
    1. //உங்க முகத்தை பார்த்து அவனுக்கு பேச புடிக்கல போல...// ஹா ஹா ஹா என் முகத்தை மட்டும் என்றால் சந்தோசம் சார்.. ஆனால் யார் முகத்தையும் எனும் போது என்பதால் மேலிருந்த கோவம்...

      மயிலன் அவர்களின் பின்னூட்டத்தில் எனது ஆதங்கம் வெளிபட்டிருக்கும் விமல் சார்... சென்னைவாசிகளிடம் எனக்குப் பிடிக்காத ஒரே ஒரு விஷயம் இது மட்டும் தான்....

      மற்றபடி நேரமிருந்தால் இந்த பதிவை படித்துப் பார்க்கவும்

      சென்னையும் தென்காசியும்

      http://www.seenuguru.com/2013/05/chennai-and-tenkasi.html

      Delete
  8. தம்பி, பட்டப்பகல்ல இன்று காலையில் சந்தித்த ஒரு பெண்ணுடன் பொது மக்கள் கூடும் ரயில் நிலையத்திலோ, பஸ்ஸிலோ, ஏர்போர்ட்டிலோ இளவட்டங்கள் அரங்கேற்றும் "லிப் டு லிப் களோ", மெல்லிய சில்மிஷங்களோ பெரிதாய் பார்க்கப் படுவதில்லை வெளிநாட்டில் வாழும் பொதுமக்களால். நம்ம ஊரில் அவர்களை மிருகங்கள் என்ற லிஸ்டில் சேர்த்துவது கொஞ்சம் அதிகமாக படுகிறது எனக்கு. காதலர்கள் "கிஸ்" பண்ணிக்கொள்ள அனுமதியில்லை என்ற வாசகம் தாங்கிய போர்டுகள் எதுவும் அங்கே வைக்கப் பட்டிருந்ததா?

    கலாச்சாரம் என்ற பெயரில் ஹார்மோன்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் நாட்டில் பிறந்தது அவர்கள் குற்றமா என்ன? Well, நீங்கள் கடைசி பாராவின் முதல் பத்தியில் குறிப்பிடும் சில்மிஷங்களின் அளவுகள் எல்லை மீறும் போது அருகில் இருக்கும் ஏதாவது ஒரு ஹோட்டல் சென்றிருக்கலாம், இருப்பினும் மனமொத்த இருவர், யாருடைய பலவந்தமும் இல்லாமல் இணக்கத்துடன் இசைந்த இருவரை "மிருகங்கள்" என வர்ணிப்பது சற்றே பொருந்தாதது போல் உணர்கிறேன்.

    இது முழுக்க முழுக்க ஆவியின் கருத்து மட்டுமே. ஏதேனும் தவறு இருப்பின் பொறுத்தருள்க..

    **நான் சொன்னது கண்டிப்பாய் போலிச் சாமியார்களுக்கு பொருந்தாது..

    ReplyDelete
    Replies
    1. முதல்ல உன் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைக்கனும். அப்பதான் வெளிநாட்டோடு நம்ம நாட்டை இந்த விசயத்துல ஒப்பீடு பண்ணுறது குறையும்

      அங்க லிப் டூ லிப் கிஸ் அடிச்சா உத்து பார்க்க மாட்டாங்க. இங்க? டிக்கட் போட்டு ஷோ காட்டுவாங்க. நாம் வளர்ந்த விதம் அப்படி!! கோவில்ல் சிற்பமா, சிலையா வடிச்சு வச்சு கொண்டாடிட்டு அதையே அசிங்கம்ன்னு சொல்லுற ஊர் நம்முது!!

      Delete
    2. //கோவில்ல் சிற்பமா, சிலையா வடிச்சு வச்சு கொண்டாடிட்டு அதையே அசிங்கம்ன்னு சொல்லுற ஊர் நம்முது!!//

      அதைத்தான் நானும் சொல்றேன் அக்கா.. பார்க்கும் கண்ணோட்டங்கள் அடுத்த தலைமுறையிலிருந்தாவது மாற வேண்டும். நாம எல்லா விஷயத்தையும் மேல் நாடுகளிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டாம். சில விஷயங்களை முற்போக்கா பார்க்க கத்துக்கலாம்னு தான் சொல்ல வர்றேன்..

      Delete
    3. அலுவலகம் முடிந்து வந்து உமக்கான பதிலைத் தருகிறேன் ஆவி பாஸ்

      Delete
  9. //அரசனைப் போன்ற நல்லவர்கள்//

    அதானே!!

    ReplyDelete
  10. ஓ.. இப்போ இப்படி எல்லாம் நடக்குதா...?

    ReplyDelete
    Replies
    1. வெள்ளந்தி ஐயா நீங்க

      Delete
    2. ஹா ஹா ஹா அப்டி கேளுங்க மயிலன் :-)

      Delete
  11. நானும் ரெண்டு வருசம் முன் பசங்களோடு போய்ட்டு தலை தெறிக்க ஓடி வந்த அனுபவம் இருக்கு

    ReplyDelete
  12. லவ் பண்றவங்கள்லாம் வேற எங்கதான்யா போறது? எங்களுக்கு தனியா வேற இடம் கட்டி விடுங்கய்யா... அங்க போய் லவ் பண்றோம்.......

    ReplyDelete
  13. காலம் கலிகாலம்... பொறுத்து தான் போகனும்... எனக்கு காட்டி விலங்குகள்னா ரொம்பப் பிடிக்கும். ஆனால் இப்பெல்லாம் அங்க போயி அதுக துன்பப்படும் படுறத பார்க்கவே முடியறதுல்ல... ஒரு காலிவுட் படம் பார்த்தேன். அதுல மனுசனுங்கள அடச்சி வச்சி காட்டு விலங்குகள் ராச்சியம் பண்ணும்.... அப்படி நடந்தாதான் இவனுங்களுக்கு புத்தி வரும்....

    ReplyDelete
  14. 21ஆம் தேதி ஃப்ரெண்ட் குடும்பங்களுடன் 27 பேர் வண்டலூர் சென்றோம்.கூட்டி சென்ற டீன் - ஏஜ் குழந்தைகளை அவர்களிடமிருந்து காப்பாற்றி கொண்டு வருவதே பெரும்பாடா போச்சு.எப்படி கண்டுக்காம இருப்பது அடிக்கு ஒரு ஜோடில்ல உட்கார்ந்து இருந்தாங்க.

    ReplyDelete
  15. சென்னைவாசிகளிடம் எனக்குப் பிடிக்காத மற்றொன்று அந்த ஒற்றை வார்த்தை. வாக்கியங்களில் prefix suffix சேர்ப்பதுபோல் சர்வ சாதாரணமாக சேர்த்துப் பேசுகிறார்கள். அதிலும் அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாத சின்னப் பையன்கள் கூட சரளமாக உபயோகிக்கிறார்கள்.

    அடுத்த முறை உங்கள் உறவினர்கள் வரும்போது கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவுக்குக் கூட்டிச் செல்லவும்... அங்கும் இலவசமாக இதே போன்ற காட்சிகள் காணக்கிடைக்கும்....

    ReplyDelete
  16. முதல் பாராவில் இருந்து இங்கு ஒரே தாவு தாவி வந்தவர்கள் நிதானமாகப் படிக்கவும்.

    annan soli kekkama irupana. naanum appadi thaan thaavi vanthen wait padichitu varenga anna

    ReplyDelete
  17. anney padiva padichachi ini comment poda arampichidalama

    ReplyDelete
  18. இதில் மாலை போட்டிருந்த ஒருவன் செய்த லீலைகள் இருக்கிறதே, அவன் சாமியே இல்லை. அக்மார்க் போலிச்சாமி. தான் அழைத்து வந்திருந்த பெண்ணை தன் கரங்களுக்கு இடையிலேயே சொருகிக் கொண்டு நடைபழகிக் கொண்டிருந்தான். இம்மியளவு பிரியக்கூட அவன் மனதில் வலுஇல்லை.

    payapulla nithiyanatha vida periyala vanthiduvarupola iruke

    ReplyDelete
  19. ok pathivukana comment pothum

    ReplyDelete
  20. ini mathavaga potta commentku , comment poda start pananlam

    ReplyDelete
  21. கோவை ஆவி27 December 2013 08:57
    போகும் போது சொல்லுங்க ஸார்.. நானும் வர்றேன்.. இது மாதிரி "அநியாயங்களை" பார்த்த பின் தான் விமர்சனம் பண்ணனும்.. ஆமா சொல்லிட்டேன்.. ;-)

    anney rompa arvamey irukaglooo vimarsanam panrathuku :))))))))))))))))))))))))))))))

    ReplyDelete
  22. சீனு27 December 2013 12:42
    ஹா ஹ ஹா.. எங்க இவன விட்டா இவன் வேற புள்ளைய தேடி ஓடிருவானோனுன்ற பயம் தான் அந்த புள்ளைகிட்ட இருந்தது வாத்தியாரே :-)


    anney enthalavuku watch pani irukega antha pullaya :))))))))))))

    ReplyDelete
  23. பன்னிக்குட்டி ராம்சாமி27 December 2013 13:44
    லவ் பண்றவங்கள்லாம் வேற எங்கதான்யா போறது? எங்களுக்கு தனியா வேற இடம் கட்டி விடுங்கய்யா... அங்க போய் லவ் பண்றோம்.......

    Anney neega engayooooooo poitenga

    ReplyDelete
  24. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    ReplyDelete
  25. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், சீனு!

    ReplyDelete