24 Dec 2013

நைட்ஷிப்ட் - விடுகதையா இந்த வாழ்க்கை !

"Hi this is srinivasan from legacy team, joining the bridge call"

'ஹேய்ய்ய்ய் ஸ்ரீஈஈஈஈஈஈநிவாசன் ஹௌ ஆர் யு', மிகபெரிய உற்சாக சிரிப்புடன் பேசத் தொடங்கும் அந்த அமெரிக்க அக்காவுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட பின்பே மற்ற விசயங்கள் குறித்து பேசத்தொடங்கவேண்டும். பொதுவாகவே அமெரிக்கர்களைப் பொருத்தவரையில், உயிர் போகும் விசயமாக இருந்தாலும் சரி அல்லது நம்மைக் கழுவி ஊத்தப் போகும் விசயமாக இருந்தாலும் சரி, பேசவந்த விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நம்மால் மிஞ்சவே முடியாது! 

நான் பேசிக் கொண்டிருப்பது 'பிரிட்ஜ் கால்' என்பதால் என்னை விளித்த அந்த அமெரிக்க அக்காவுடன் இன்னும் சிலரும் இருந்தனர்.  அலுவலகத்தைப் பொறுத்த வரையில் அணை உடைந்து வெள்ளம் வரப்போகிறது என்ற நிலையிலோ அல்லது வெள்ளம் தலைக்கு மேல் ஓடப்போகிறது என்ற நிலையிலோ அணையில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையை அடைப்பதற்காக சகல வல்லுனர்களும், சக வல்லுனர்களும், இன்னபிற பெரிய பெரிய தலைகளும் ஒன்று கூடி ஒரு கூட்டம் போடுவார்கள். இக்கூட்டமனாது ஒரு கான்பரன்ஸ் கால் மூலம் நடக்கும், அதாவது அமெரிக்காவில் இருந்து அவர்களும் இந்தியாவில் இருந்து நாமும் ஒருங்கிணைந்து ஓட்டையை அடைப்பது குறித்து தீர ஆலோசித்து முடிவெடுத்து அடைக்கவேண்டும். இந்த தொலைபேசி உரையாடலை பிரிட்ஜ் கால் என்பார்கள். 

அப்படிப்பட்ட ஒரு பிரிட்ஜ் காலில் உடையக் காத்திருக்கும் அணையை தடுத்து நிறுத்துவதற்கான ஆணையை என்னிடம் இருந்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது அந்த பிரிட்ஜ் கால், இடையிடையே அந்த அமெரிக்க அக்கா தன் அருகில் இருந்தவர்களுடன் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், அவள் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை. கவனிக்கவும் முடியாது காரணம் (i)அணையை அடைக்க வழி  தேட வேண்டும் (ii) அணையை அடைக்க நான் தேடிய வழியை அவர்களிடம் போன் வாயிலாக கூற வேண்டும், (iii) இதுவும் போதாது என்பதற்காக மின்னஞ்சலும் செய்ய வேண்டும். (iv) இவற்றிற்கு இடையில் அணையை அடைக்க வழியும் தேட வேண்டும்.  

நான் வசமாக சிக்கிக் கொண்டிருப்பதோ நைட் ஷிப்ட். துணைக்கு எனதருகில் நண்பர்கள் யாருமில்லாமல் தன்னந்தனியாக அணை  கட்டிக் கொண்டிருந்தேன். திடிரென்று அக்காவிடம் இருந்து மிரட்டலான தொனியில் கட்டளை ஒன்று வந்து சேர்ந்தது. புது உத்தரவு. 'இன்னும் பத்து நிமிடத்தில் அணையை சரி செய்தே ஆக வேண்டும், இல்லையென்றால் பெரிய பிரச்சனையாகிவிடும்'.  வேறு வழியில்லை. முடித்தே ஆக வேண்டிய கட்டாயம். பரபரப்பான நிமிடங்கள் தொடங்கியது. 

"ஹே ஸ்ரீநிவாசன் ப்ளீஸ் மேக் இட் பார்ஸ்ட், வீ டோன்ட் ஹவ் இனாப் டைம்"

அணையை அடைக்க வழி கண்டுபிடித்துவிட்ட ஆர்வத்தில், பரபரப்பின் உச்சத்தில், நானும் "யா யா, வி ஹவ் டன் வித் எவ்ரிதிங், ப்யு மினிட்ஸ், ப்ளீஸ் ஹோல்ட் பார் ப்யு மினிட்ஸ்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

"சீனு..சீனு"         

"வெயிட்..வெயிட்...கைண்ட்லி வெயிட்... ஜஸ்ட்... ப்யு மினிட்ஸ்"  

"சீனு..சீனு.. எந்தில, என்னத்த உளறிகிட்டு இருக்க...மணி ரெண்டாகுது, எந்திச்சி சாப்ட்டு தூங்கு...",  என் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அம்மா உலுக்கும் போதுதான் தெரியும் இவ்வளவு நேரம் நிஜம் போல் கண்டுகொண்டிருந்த அத்தனையும் கனா என்று. 

"போங்கம்மா, நல்ல தூக்கம் வருது, தூங்கும் போது எழுப்பாதீங்கன்னு நூறு தடவ சொன்னாலும் உங்களுக்கு புரியவே புரியாது" அம்மாவைத் திட்டிவிட்டு மீண்டும் தூங்கலாம் என்று கண்களை மூடினாலும், என்னுடைய மனம் முழுவதும், அந்த கனவின் நிஜத்திலேயே லயித்திருக்கும். இது போன்ற அலுவலகம் சார்ந்த கனவுகள் எப்போதாவது அபூர்வமாக வருமென்றாலும் நைட்ஷிப்ட் செல்லும்போது மட்டுமே அனுபவப்பூர்வமாக வந்துத்தொலைக்கும்.

நந்தாவின் நிலைமை இன்னும் மோசம். அவனுடைய ப்ராஜக்ட் இருக்கும் மூன்றாம் மாடியில் இருநூறுபேர் அமரக்கூடிய அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்களாம். அந்த வகையில் எனக்குப் பிரச்சனை இல்லை. பாவம் அவன்தான் ஆவிகளுடனும் மோகினிப் பிசாசுகளுடனும் அளவளாவிக் கொண்டிருக்க வேண்டும். ஷிப்ட் முடிந்து அறைக்கு வந்தால் அத்தனை பேரும் வேலைக்கு சென்றிருப்பார்கள். தனிமை மட்டுமே வாழ்க்கை.  "சத்தியமா சொல்றேன், அங்க இருந்தா பைத்தியம் புடிச்சிரும்டா" என்பவனை சமாதனப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சரியாக இரவு பத்து மணிக்கு அலுவலகத்தினுள் நுழையும் போது தாங்கள் செல்ல வேண்டிய பேருந்தைப் பிடிக்க ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டிருப்பார்கள். "ஏறி தூங்குனா போதும்" என்ற மனநிலையில்தான் அவர்களது ஓட்டமும், ஓட்டம் சார்ந்த நடையும் இருக்கும்.

அன்றொரு இரவும் அப்படியான ஒரு இரவுதான். அலுவலக வளாகத்தினுள் நடந்து கொண்டிருந்தேன். மார்கழிப்பனி இரவை நனைத்துக் கொண்டிருந்தது. (ஒருவேளை இன்னும் சில வருடங்களுக்குப் பின் வரப்போகும் வருங்கால சந்ததிகள் இப்பதிவைப் படிக்க நேர்ந்து, அந்நேரம் மார்கழி என்றால் என்னவென்றே தெரியாமல் குழம்பித் தவிக்கலாம், அவர்களுக்கும் இந்தப் பதிவு புரிய வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்தில்...) டிசம்பர் பனி இரவை நனைத்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் தென்பட்ட புல்வெளியினில் பனித்துளி தலைதூக்கி சிரித்துக் கொண்டிருக்க பலரது உடலையும் ஜெர்க்கின் குளிரில் இருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது. 

பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் என்னைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தவள், தன்னுடன் நடந்து கொண்டிருந்தவனிடம் "யப்பா சாமி, என்னாக் குளிரு, இன்னிக்கு நைட்ஷிப்ட் பாக்கப் போறவன் செத்தான், இல்லடா" என்று கூறிக்கொண்டே என்னைக் கடந்து கொண்டிருந்தாள். கடுப்பான நானோ ஒருநொடி நின்று அவளை நோக்கித் திரும்பிப்பார்த்தேன். ஜெர்க்கினை  உடலோடு இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு நிரம்பி வழிந்துகொண்டிருந்த பனியில் நனைந்து மறைந்தாள். அவள் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இருந்தும் அவள் எங்களைப் பார்த்து கூறிய சொற்கள் சாபமா? இல்லை பரிதாபத்தின் வெளிப்பாடா? யார் அறிவார்!     

குளிருக்கு சோம்பேறித்தனத்தை அதிகமாக்கும் வழக்கம் இயல்பாகவே உண்டென்பதால் கட்டுக்கடங்காமல் வரும் தூக்கத்தைப் புறந்தள்ள அதைவிட இயல்பான மனதைரியம் வேண்டும். என்னுடைய பணியைப் பொருத்தவரையில் வேலை இருந்துகொண்டே இருந்தால் பிரச்சனையே இல்லை, காரணம் தூக்கத்தைப் பற்றி  சிந்திக்க அவகாசம் இருக்காது, ஒருவேளை சிறிதளவு கூட வேலை இல்லாமல் ஆகி, ஏதேனும் வேலை வருமா வருமா என்று இலவு காத்த கிளிபோல் உட்கார்ந்து கொண்டே இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். தூங்கவும் முடியாது. தூங்காமல் இருக்கவும் முடியாது என்பதெல்லாம் என்ன மாதிரியான தண்டனையென்று புரியவில்லை.

சில சமயம் தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி 'உனக்கு வேலை வந்த்ருச்சி எழும்பு' என்று எழுப்பிவிடும் தருணம் அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அந்தோ பரிதாபம் !

"சீனு...இப்போ எந்திக்கப் போறியா இல்லியா? மணி மூன்றையாவுது, கொஞ்சமாவது சாப்ட்டு தூங்கு"

"ம்ம்ம்மா சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதீங்க, பசிச்சா நானே எந்திச்சு சாப்டுவேன், பேசாம போயிருங்க" என்றபடி போர்வையை இழுத்து மூடித் தூங்குபோது, தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றும், பசி லேசாக வயிற்றைக் கிள்ளினாலும் தூக்கம் கண்களில் அள்ளும். எனக்காவது பரவாயில்லை வீட்டில் இருக்கிறேன், சில நேரங்களில் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் சாப்பிட்டுவிடுவேன்,அறைகளில் தங்கிருப்பவர்களின்பாடு படுதிண்டாட்டம். இவர்களில் மதியஉணவைத் துறப்பவர்கள் அநேகம் பேர். சரவணாவிற்கு எல்லாம் இது தான் சாப்பாட்டு நேரம் என்ற வரைமுறை என்றோ மாற்றி எழுதப்பட்டுவிட்டது.    

அதிகாலை மூன்று மணிவரையிலும், பனியானது தாங்கிக்கொள்ளும் அளவில்இருந்தாலும் மூன்றைக் கடக்கும் போதுதான் தாக்கிக்கொல்லும் பனியாக மாறுகிறது. அலுவலகத்தினுள் ஏசியினால் ஏற்படும் குளிரை விட வெளியில் பரவிக்கிடக்கும் குளிர் வெகுவாக நடுங்கச் செய்கிறது. அதுவும் கிழக்குக் கடற்கரையின் மிகஅருகில் அலுவலகம் என்பதால் கடல் காற்று அநியாயத்திற்கு குளுமையாய் வீசுகிறது. 

இரவுப் இரவுப் ப(னி)ணியில் காவலிருக்கும் செக்யுரிட்டிகளின் நிலைமையோ படுமோசம். பெரும்பாலான செக்யுரிடிகள் ஸ்வெட்டர் அணிந்திருந்தாலும், பனிபொழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கள் காதுகளைச் சுற்றிலும் சட்டையைக் கட்டி அதன்மேல் துண்டு அல்லது சால்வையை இறுக்கக் கட்டிக்கொள்கிறார்கள். அவ்வபோது கூட்டமாய் கூடி சாயா குடித்து பனியை விரட்ட முற்படுகிறார்கள்

சில சமயங்களில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது பிடிக்காமல் காலாற நடந்து செல்வதும் உண்டு. ஒரு முழு இரவின் அழகியலின் அமைதியை மிக அருகமையில் சந்திக்கக்கூடிய தருணங்கள் அவை. ரம்மியமான இரவு, தூரத்தில் மின்னியபடி கதைபேசும் விண்மீன்கள், சுற்றிலும் பரந்து விரிந்த புல்வெளி முழுவதும் நிறைந்து கிடக்கும் மவுனம், அந்த மவுனத்தின் அடிநாதமாய் சில்வண்டுகளின் ரீங்காரம், வானில் மிதந்துகொண்டிருக்கும் சாம்பல் நிற மேகங்களுக்கு நடுவில் ஒளிந்து விளையாடும் முழு நிலவு. அவ்வளவு எளிதில் கிட்டாத, மனதை அலைபாய விடாத இந்தச் சூழலே ஒரு தவம். பெருந்தவம். இருந்தும் இது பிடிக்காமல் போவதன் காரணம் 

"சீனு...சீனு.. இப்ப எந்திக்கப் போறியா இல்ல தண்ணிய கோறி ஊத்தவா"

"ஏன் இப்போ கத்துறீங்க, மணி என்ன?"

"நீயே எந்திச்சி பாரு"

"சொல்லுங்கம்மா மணி என்ன "

"ஆறரை"

"என்னது ஆறறையா?" 

"ஆமா ஆறரை.. நீ எப்ப மத்யான சாப்பாடு சாப்ட்டு, எப்போ நைட்டு சாப்பாட சாப்டுவியோ, ஐயோ ஐயோ"

இந்த நிமிடம் இந்த நொடி என் மனம் சொல்லும் 

விடுகதையா இந்த வாழ்க்கை 
விடை தருவார் யாரோ? 



அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக் குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட் ஷிப்ட்.

40 comments:

  1. இது உண்மையிலேயே கொடுமை தான். இன்னும் உடல் சார்ந்த பிரச்சனைகள் இதன்மூலம் இன்னொரு கொடுமை! வேளை கேட்ட வேளையில் பசிப்பதும்.. தலை சுத்துவதும்.. சாமி.. கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. ம்ம் மிகவும் கொடுமை தான் சார்.. பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இரவில் பசிக்கும் இருந்தும் எனக்கு சாப்பிட பிடிக்காது என்பதால் இருமுறை காபி குடிப்பேன் அத்தோடு சரி...

      Delete
  2. இடிஸ் ஆல்வேஸ் 5பிஎம் சம்வேர் இன் தி வர்ல்ட் - ஜிம்மி பபெட் பெருந்தகை.
    தாங்கிக்கொள்ளும். தாக்கிக்கொல்லும். அட அட..

    ReplyDelete
    Replies
    1. //தாங்கிக்கொள்ளும். தாக்கிக்கொல்லும். அட அட..//

      தொடர்ந்து கவனித்து வருகிறேன்... என் பதிவில் எனக்குப் பிடிக்கும் சில வரிகள் உங்களுக்கும் பிடித்துப் போவதன் மாயம் என்ன அப்பா சார் :-)

      Delete
  3. சங்கடம் தான்...:(

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் வேற வழியே இல்ல :-)

      Delete
  4. உண்மைதான்...பதினைந்து ஆண்டுகால நைட் ஷிப்ட் வாழ்க்கை என் நண்பர் ஒருவர் வாழ்க்கை முறையையே ராக்கோழி என்பதாக மாற்றி விட்டது. உங்களைப் போன்றோருக்காவது பரவாயில்லை. அமைதியான வேலைச் சூழல். சில பேக்டரியில் வேலை செய்பவர்கள் நிலை இன்னம் மோசம்....

    ReplyDelete
    Replies
    1. //பதினைந்து ஆண்டுகால நைட் ஷிப்ட் வாழ்க்கை என் நண்பர் ஒருவர் வாழ்க்கை// என்னது 15 வருசமா.. சத்தியமா என்னால முடியாதுக்கா :-)

      //சில பேக்டரியில் வேலை செய்பவர்கள் நிலை இன்னம் மோசம்....// மிகச்சரி

      Delete
  5. கண்ட நேரத்தில் வேலைக்குப் போவதால் இப்படி ஒரு நிலைமை... இதைப் படிக்கும்போது நல்லவேளையாக எனக்கு இப்படி ஒரு நிலைமை இல்லை என்று தோன்ற வைக்கிறது... இன்னும் சில வருடங்கள் கழித்து மருத்துவர்கள் கூறக்கூடும், "சாப்ட்வேர்ல வேலை பாக்கிறவங்களுக்கு இது நார்மலா வரக்கூடிய வியாதி தான்" என்று.

    ReplyDelete
    Replies
    1. //சாப்ட்வேர்ல வேலை பாக்கிறவங்களுக்கு இது நார்மலா வரக்கூடிய வியாதி தான்" என்று.//

      ஹா ஹா ஹா இப்பவே அதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க சார், முதுகு வலி, கழுத்து வலி, விரல் நரம்புகள் பாதிப்பு, கண்ணெரிச்சல் இத்தியாதி இத்யாதி எல்லாமே....

      Delete
  6. ஹா.. ஹா... இந்த நைட் ஷிப்ட் கொடுமையில நீங்களும் சிக்கியாச்சா...

    ReplyDelete
    Replies
    1. கடந்த இரண்டு வருசாமா சார்.. சிக்கியாச்சான்னா... நீங்களும் நம்ம ஜாதி தானா :-)

      Delete
  7. நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி... பாராட்டுகள் தெளிவாக சொல்லிஸ் சென்றதற்கு

    வேலையில் கஷ்டம் என்பது இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்களுக்கும் உண்டு. இங்க் ஐடியில் வேலை பார்க்கும் பலருக்கும் இது போல கஷ்டங்கள் உண்டு. உதாரணமாக எனது மனைவி ஆஃப் சோர்ஸ் ப்ராஜெக்டை மேனேஜ் செய்கிறார் இங்கிருந்து அவர் அமெரிக்க நேரத்தில் வேலை செய்வது மட்டுமல்லாமல் அநேக நாட்களில் இந்திய நேரத்திலும் முழித்து வேலை வாங்க வேண்டியிருக்கிறதுங்க.. இதுதானுங்க வாழ்க்கை tha.ma 3

    ReplyDelete
    Replies
    1. //நீண்ட நாட்களுக்கு அப்புறம் ஒரு நல்ல பதிவை படித்த திருப்தி... பாராட்டுகள் தெளிவாக சொல்லிஸ் சென்றதற்கு// மிக்க நன்றி மதுரைத் தமிழன்...

      //அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்களுக்கும் உண்டு.// ம்ம்ம் தெரியும் சார் எங்க ஆன்சைட் படுற கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்ல

      //இதுதானுங்க வாழ்க்கை/ வாழ்ந்து தான் ஆகணும் இல்ல :-)

      Delete
  8. விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ?
    விடை காணமுடியாத வாழ்க்கைப்புதிர்..!

    ReplyDelete
    Replies
    1. அது தான் தெரியலியேம்ம்மா !

      Delete
  9. என்னதான் பகலில் தூங்கினாலும் இரவு மட்டுமே நம்மை முழுதாய் கணம் குறைத்து இறகை போல பறக்க செய்யும் அப்படி பட்ட இரவுகளிடம் உங்களை முழுதாய் ஒப்படைக்க இயலாமல் தவிப்பது பெரும் கொடுமை சீனு ..............விரைவில் இரவு உங்களை தழுவி ஆசிவதிக்க என் வாழ்த்துக்கள் ( ஒன்றை இழந்தால் மட்டுமே ஒன்றை பெற இயலும் எது வேண்டும் என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது ) நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. எனக்காவது பரவாயில்லைக்கா மாதத்தில் ஐந்து நாட்கள் தான் நைட்ஷிப்ட் (அதுக்கேவா இம்புட்டு எழுதியிருக்க என்று கேட்பது புரிகிறது) இன்னும் சிலரது நிலமை மிக மோசம், மாதம் முழுவதும் நைட் ஷிப்ட் செல்லும் அவர்களை நினைத்தால் இன்னும் பாவமாய் இருக்கும்...

      Delete
  10. பணம் துட்டு காசு மணி மணி....
    மண்ணும் மலடாகி நம் மனமும் மலடாகி....
    வாழ்வதே எதற்காக என்ற கேளிவி!

    ReplyDelete
    Replies
    1. இன்னா பண்றது ப்பா.. வாழ்ந்து தானே ஆவணும்.. இன்னா சொல்ற... :-)

      Delete
  11. உண்மைதான் சீனு.... ஆனால் தினமும் பகலில் இப்படி சத்தங்களோடு வேலை செய்துவிட்டு, ஒரு நாள் இரவு இப்படி வேலை செய்ய வேண்டும் என்று எனக்கு ஆசை !

    ReplyDelete
    Replies
    1. இரவுப் பணியும் நன்றாக தான் சார் இருக்கும்.... ஆனால் அளவுக்கு மீறும் போது கொஞ்சம் கஷ்டம் தான்...

      Delete
  12. Replies
    1. நிச்ச்யமாத்தான் :-)

      Delete
  13. Nice Post, Wish you all the best By http://wintvindia.com/

    ReplyDelete
  14. // பாவம் அவன்தான் ஆவிகளுடனும் மோகினிப் பிசாசுகளுடனும் அளவளாவிக் கொண்டிருக்க வேண்டும்.//

    ஆவியுடன் பேசுவதை இளக்காரமாக சித்தரித்த சீனுவை சபை கடுமையாக கண்டிக்கிறது..!

    ReplyDelete
    Replies
    1. //சீனுவை சபை கடுமையாக கண்டிக்கிறது..!// ஆழ்ந்த மகிழ்ச்சிகள் :-)

      Delete
  15. //அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, //

    கடைசி பத்தி இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பணிபுரிபவர்களை மட்டும் தான் சொல்கிறது.. இந்திய கம்பெனியில் இருந்து அமெரிக்கா சென்று அங்கிருந்து இந்தியாவில் வேலை செய்யும் பொறியாளர்களை "ஆப் ஷோர் கோ-ஆர்டினேஷன்" என்ற பெயரில் விடிய விடிய வேலை செய்யும் அவலமும் நடக்கத்தான் செய்கிறது..

    ReplyDelete
    Replies
    1. //கடைசி பத்தி இந்தியாவில் இருந்து கொண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கு பணிபுரிபவர்களை மட்டும் தான் சொல்கிறது..// இது முழுக்க முழுக்க நான் மற்றும் என் சார்ந்த பதிவு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன், வேண்டுமானால் என்னைப் போன்றவர்கள் சார்ந்ததாகவும் கொள்ளலாம்...

      //ஆப் ஷோர் கோ-ஆர்டினேஷன்// அப்புறம் இன்னாத்துக்கு ஆப் ஷோர் ஹா ஹா ஹா

      Delete
  16. யோவ்.. உன் பீலிங்க்ஸ் புரியுதுய்யா.. இன்னா பண்றது கொஞ்ச நாள் அட்ஜேஸ் பண்ணித்தான் ஆவணும்.. பீலிங் சாரி பார் யு!!

    ReplyDelete
    Replies
    1. //பீலிங் சாரி பார் யு!!// தங்கள் குறியீடு புரிகிறது நன்றி வணக்கம் :-)

      Delete
  17. இரவுப்பணி வரும்போதெல்லாம் கடக்கும்வரை கஷ்டம்தான் இல்லை?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் ஸ்ரீராம் சார்.. ஆனாலும் பழகிருச்சு

      Delete
  18. அடிக்குற குளிரிலும் உம்ம பதிவு இன்னும் ஜில்லுன்னுதாம்லே இருக்கு ... மேம்போக்கா சொன்னது மாதிரி இருந்தாலும் விசயத்தின் வீரியம் தெரியுது ....

    என்ன பண்ண? ஒன்றை பெற இன்னொன்றை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது இன்றைய வாழ்வியல் அப்படி ப்ரோ ///

    ReplyDelete
    Replies
    1. // மேம்போக்கா சொன்னது மாதிரி இருந்தாலும் விசயத்தின் வீரியம் தெரியுது .... // ஆனாலும் சரியா கண்டுபுடிச்சிட்டீருய்யா மேம்போக்கா தான் சொல்லிருகேன்னு.. பதிவ வளக்க விரும்பல அதான் நிறைய எடிட்டிங்ல போயிருச்சு :-)

      Delete
  19. நைட் ஷிப்ட் கொடுமை.I.T இல் மட்டுமல்ல பல அசோக் லைலேன்ட் ,டி.வி.எஸ் போன்ற பெரிய கம்பெனிகள்ல ல கூட இருக்கே.. கொடுமையைக் கூடை இனிமையா சொல்லிட்டே சீனு. டே ஷிப்டே கிடைக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா சார், எனது அன்னான் வேலை செய்த மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலும் உண்டு. இருந்தும் இங்கே முன்வைத்தது எனது அனுபவத்தை மட்டுமே..

      //டே ஷிப்டே கிடைக்க வாழ்த்துகள்// அது கொஞ்சம் கஷ்டம் சார் :-)

      Delete
  20. உங்களுக்கு night shift எங்களுக்கு casualty பேரு தான் வேற மறறபடி இரண்டுமே தொல்லை தான்

    ReplyDelete
  21. மிகச் சிறப்பாக நைட் ஷிப்ட் வருத்தங்களைச் சொல்லியிருக்கிறீர்கள், சீனு. எங்களையும் அந்த கஷ்டத்தை அனுபவிக்கும்படி இருந்தது உங்கள் எழுத்து.
    ஒரு நல்ல எழுத்தாளராக உருவாகி வருகிறீர்கள்.
    உங்கள் எழுத்துக்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இதைபோல எழுதி பகிர்வதில் கஷ்டங்கள் பாதியாகிவிடும்.

    ReplyDelete
  22. கஷ்டம் புரிகிறது சீனு.......

    ஆரம்ப காலத்தில் சில சமயங்களில் எனக்கும் வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ இரவு நேரம் அலுவலகத்தில் வேலை இருந்திருக்கிறது. மிகப் பெரிய அலுவலகக் கட்டிடத்தில், எட்டு மாடி, ஏகப்பட்ட அறைகள் கொண்ட அக்கட்டிடத்தில் நான் மட்டுமே தனியாக இருந்திருக்கிறேன் - தூங்கவும் முடியாது - வேலையும் இருக்காது! :( பிறகு இரவு நேரத்திற்கென்றே ஒரு ஆளை நேர்ந்து விட்டு விட்டார்கள்!

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    ReplyDelete