3 Dec 2013

கே.ஆர்.பி செந்திலின் பணம் - புத்தக விமர்சனம்


சில சமயங்களில் ஒரு சில புத்தகங்கள் நம்மோடு பேசுவது போல் தோன்றும். அன்றும் அப்படியொரு புத்தகம் என்னோடு பேசுவது போல் தோன்றியது. வாங்கிவிட்டேன். அது  கே.ஆர்.பி செந்திலின் 'பணம்'.

பதிவுலகம் பரிட்சியமாகியிருந்த புதிது. அண்ணன் மெட்ராஸிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது "சீனு கே.ஆர்.பி மலேசியால இருந்து வந்திருக்காரு, சாய்ங்காலம் நடேசன் பார்க்ல ஒரு சின்ன சந்திப்பு வரமுடியுமா",என்றார்.  எனக்கோ கே.ஆர்.பி என்றால் யார் என்றே தெரியாது இருந்தும் அழைத்தது சிவா என்பதால் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் கிளம்பிவிட்டேன். கே.ஆர்.பி, சிவா, பட்டிக்காட்டான், மதுமதி, மோகன்குமார் உட்பட பத்துக்கும் மேல் வந்திருந்தார்கள், அனைவருமே பதிவர்கள். யாரையும் எனக்கும், என்னை யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. அழைத்த பாவத்திற்கு சிவா  மட்டும் என்னை தனித்து விடாமல் பார்த்துக் கொண்டார். 

கே.ஆர்.பி, அவரைச் சுற்றி ஒரு வட்டம் அமர்ந்திருந்தது.பேச ஆரம்பித்தார். பேசினாஆஆஆஆஆஆஆர், மற்றவர்களும் பேசினார்கள், வெகுநேரம் கழிந்திருந்தது. கே.ஆர்.பியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்த யாருக்கும் அங்கிருந்து நகர மனம் வரவில்லை. ஆனால் எனக்கோ வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கவே சிவாவிடம் கூறிவிட்டு மெல்ல எழுந்தேன். 

"எவனோ புதுப்பய நம்ம கூட்டத்துக்கு வந்த்ருக்கான்" என்ற ஞானோதயம் கே.ஆர்.பிக்கு வந்திருக்க வேண்டும். என்னைப்பார்த்து, 

"தம்பி நீங்க" என்று இழுத்தார் கே.ஆர்.பி. சிவாவுக்கு ஆடு கிடைத்துவிட்டது, வெட்ட வேண்டாமா "அப்போ இவ்ளோ நேரம் நீங்க சீனுவ கவனிக்கல, அதெப்படி நீங்க ஒரு புது பதிவர கவனிக்காம இருக்கலாம். புதிய பதிவரை மதிக்காத கே.ஆர்.பின்னு பதிவு போடுங்க சீனு" என்று கொந்தளிக்க, ஆள வுடுங்க சாமி என்று நான் எஸ் ஆனாலும் அடுத்த நாள் "புதிய பதிவரை மதிக்காத கே.ஆர்.பி" என்று பதிவு எழுத நான் மறக்கவில்லை. 


அடுத்தமுறை கே.ஆர்.பியை வாரண்ட் என்னும் குறும்பட திரையிடல் நிகழ்வில் சந்தித்தேன். மறந்திருப்பார் என்று நினைத்த நேரத்தில் அவராகவே அடையாளம் கண்டுகொண்டு பேசினார். ஈகோ பார்க்காத மனிதர். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு முழுமையுமே அவருடைய சிங்கப்பூர் மலேசிய அனுபவங்கள் குறித்தே இருந்தது. அதன்பின் பலமுறை சந்தித்திருந்தும் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது அவர் "பணம்" என்னுமொரு புத்தகம் எழுதியுள்ளார் என்பது குறித்து.  

டிஸ்கவரி புக் பேலஸில் தற்செயலாய் ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அப்புத்தகம் என் கண்ணில் படக் மிக முக்கியகாரணம் அதன் அட்டைப் படம்.



முக்கால் நிர்வாணமாக்கி குனிய வைத்த நிலையில் ஒருவன் தனது புட்டத்தில் அடிவாங்குவது போன்ற படம். ஆசிரியர் கே.ஆர்.பி. செந்தில் என்று எழுதியிருந்தது, அட கே.ஆர்.பி புத்தகமெல்லாம் எழுதியுள்ளாரா என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் வாங்க வேண்டும் என்று தோன்றவில்லை. 'பணம்' என்ற தலைப்பு நிச்சயமாய் சுயமுன்னேற்றம் அல்லது பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது போன்ற வகையறாவாகத் தான் இருக்கும் என்ற அவதானிப்பே வாங்கத் தயங்கியதன் காரணம். இது நடந்து பல மாதங்கள் இருக்கும். 

கடந்த வாரம் டிஸ்கவரி சென்றிருந்த போது பதிவர்கள் எழுதிய அத்தனை புத்தகங்களையும் ஒரு இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார் வேடியப்பன். எந்தெந்த பதிவர்கள் என்னென்ன புத்தகம் எழுதியிருக்கிறார்கள் என்று அலசியபோது மீண்டும் கண்ணில் தென்பட்டது கே.ஆர்.பியின் "பணம்".

சில சமயங்களில் ஒரு சில புத்தகங்கள் நம்மோடு பேசுவது போல் தோன்றும். அன்றும் அப்படியொரு புத்தகம் என்னோடு பேசுவது போல் தோன்றியது. வாங்கிவிட்டேன்.

'பணம்' புத்தக விமர்சனம் 

ஒரு புத்தகத்தை கையில் எடுத்ததும் அதனைப் படித்து முடிக்கும் வரை அப்புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு, என்னுரை, முன்னுரை மற்றும் இன்னபிற உரைகளையெல்லாம் வாசிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது, பழக்கம் என்று சொல்வதைவிட பொறுமை கிடையாது. ஒருவேளை இப்புத்தகத்தின் என்னுரையை வாசிக்காமல் நேரடியாக மெயின் மேட்டரை வாசிக்கத் துவங்கி இருந்தேன் என்றால் ஒன்று எனக்கு கே.ஆர்.பி மீது உச்சபட்ச பரிதாபம் பிறந்திருக்கும் அல்லது பைத்தியம் பிடித்திருக்கும். நல்லவேளையாக முன்னுரையை வாசித்திருந்தேன். 

உள்நாட்டில் பணம் பண்ணத் தெரியாதவர்கள், வெளிநாடு, தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவிடும் என்று நம்பி அயல்தேசம் சென்று தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்த கதையை தனக்குக் ஏற்பட்ட அனுபவங்கள் மூலமும் கிடைத்த குறிப்புகள் மூலமும் எழுதியிருக்கிறார் கே.ஆர்.பி. அதுவும் சுவாரசியமாக.

இப்புத்தகம் ஒரு புதினமோ அல்லது புனைவோ இல்லை. அதற்காக கட்டுரைத் தொகுப்பு என்றும் கூறிவிட முடியாது. கே.ஆர்.பி தன்னை ஒரு கதைசொல்லியாக மாற்றிக்கொண்டு மற்றவர்களின் அனுபவங்களை தன்னுள் உள்வாங்கி சொந்த அனுபவம் போல அனைத்தையும் விவரிக்கிறார். அதாவது இப்புத்தகத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் கே.ஆர்.பி. வழியாக, கே.ஆர்.பியாகவே வெளிப்படுகிறார்கள். முன்னுரையில் அவர் நம்மிடம் கூற விரும்பியதும் இதைத்தான்.     

வெறும் டூரிட் விசா மட்டுமே வைத்துக் கொண்டு அயல்தேசங்களில் வேலைக்குச் செல்லும் பிறநாட்டவர்கள், அங்கே அவர்கள் படும் கஷ்டங்கள். அயல்தேசம் நம்மை எப்படி நடத்துக்கிறது, நாம் எப்படி நடந்து கொள்கிறோம். அயல்தேசத்தில் வாழும் நம் நாட்டவர்கள் நம்மை நடத்துகிறார்கள், குடும்ப சூழ்நிலை அவை தரும் நெருக்கடி, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மூலம் மாற்றபடுவதால் ஏற்படும் மனஉளைச்சல், கூடவே இருந்து குழிபறிக்கும் நண்பர்கள், அயல்தேசத்து மது மாது மூலம் சம்ம்பாதித்தை இழந்து சீரழியும் ஆண்கள், பணிப்பெண் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், உள்நாட்டில் மனைவிகள் படும் கஷ்டங்கள், கள்ளக்காதல்கள், இவை ஒட்டுமொத்தமும் ஒருகட்டத்தில் பெரிய நெருக்கடியைத் தர அவை மூலம் ஏற்படும் தற்கொலைகள், கொலைகள். அதிர்ஷ்டவசமாக தப்பிப்பிழைத்து ஆகாஓகோ என்று வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள். இவர்கள் தான் இப்புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறார்கள். 

பலவருட மலேசிய சிங்கப்பூர் அனுபவம் கே.ஆர்.பியிடம் இருப்பதால், அவர் கூறிச்செல்லும் கதையுடன் நம்மால் இயல்பாக ஒன்ற முடிகிறது. மேலும் பெரும்பான்மையான சம்பவங்கள் மற்றும் குறிப்புகள் மலேசியா சிங்கப்பூர் சுற்றியே நிகழ்கிறது. வெளிநாடுகளில் சீன முதலாளிகள் நேர்மானையவர்கள், இந்திய முதாலாளிகள் நம்மை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்பதை நம்பவே கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. 

வொர்க் பெர்மிட் விசா இல்லாததால் எந்நேரமும் போலிசுக்குப் பயந்து கொத்தடிமைகளாக வாழும் அவலம், நாம் அழைத்து வந்த நண்பனே நம்மை போலீசில் காட்டிக் கொடுக்கும் கொடுரம், கூடவே நன்றாக பழகிய நண்பன் வெளிநாட்டு மோகத்தை நம்மில் விதைத்து கையில் இருக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கி ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகம் என்று மோசமான நண்பர்களைப் பற்றி குறிப்பிடும் அதே நேரத்தில் வெளிநாட்டில் மாட்டிக் கஷ்டப்படும் பொழுது உதவும் முகம் தெரியா நண்பர்கள், ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நண்பர்கள் என்று இந்த சமுதாயத்தில் மிகக் குறைவாக தென்படும் நல்லவர்களைப் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை.

எவ்வளவு சம்பாதித்தாலும் அங்கு ஏற்படும் செலவுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சொற்பசேமிப்பே எஞ்சி நிற்கும். இதை சம்பாதிக்கவா, விசா இல்லாமல், போலீசுக்குப் பயந்து, கொத்தடிமைகள் போல இங்கு வாழ வேண்டும். வெளிநாடு வருவதற்கு செலவழித்த சில பல இலட்சங்களை முதலீடாக்கியிருந்தால் இங்கு கிடைக்கும் வருமானத்தை உள்நாட்டிலேயே சம்பாதித்து இருக்கலாம், மானமிழந்து அசிங்கப்பட்டு வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை அழுத்தமாக சொல்கிறார்கள். பணிபெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பெண்களை தயவு செய்து செல்ல வேண்டாம் என்றும் அதற்கான காரணங்களையும் பட்டியல் இடுகிறார்.           

"இந்தியாவில் நான் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை சம்பாதிக்கும் அளவுகடந்த ஆசையில் நான் பட்ட துன்பங்களின்  மட்டுமே உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இனி என் வாழ்நாளில் அத்தைகைய பிரச்சனை வந்தாலும் ஒரு சட்டவிரோதக் குடியேறியாக மட்டும் எந்த நாட்டிற்கும் போக மாட்டேன்"    

மலேசிய சிங்கப்பூர் தவிர்த்து அமெரிக்கா லண்டன் பிரான்ஸ் மொரிசியஸ் அரபுநாடுகள் குறித்தும் எழுதியுள்ளார். மேலும் சட்ட விரோத குடியேறிகளை தடுக்க அணைத்து அரசாங்கங்களும் பலவித கடுமையான சட்டதிட்டங்கள் வகுத்துவிட்டதால் முன்பிருந்த அவலம் தற்போது வெகுவாய்க் குறைந்துவிட்டது என்றும் கூறுகிறார்.   

இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ்நாட்டைக் கூட தாண்டியிராத எனக்கு இப்புத்தகம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. சிறுவயதில் என்னுடைய இஸ்லாம் நண்பர்கள் யாரைக் கேட்டாலும் அவர்களுடைய தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகக் கூறுவார்கள். இப்புத்தகம் படிக்கும் போது அவர்கள் தான் என் கண்முன் வந்து நின்றார்கள். வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்கள் படும் கஷ்டங்களை வெகு இயல்பாக நம்முள் கடத்தியிருக்கிறார் கே.ஆர்.பி.      

நீங்கள் புத்தகப் பிரியராக இருந்தாலோ அல்லது வெளிநாடு செல்லும் ஆசை உடையவராக இருந்தாலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இது நீங்கள் தவறவிடக் கூடாத புத்தகம்.

ஆன்சைட் என்ற வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கான புத்தகமல்ல இது. படித்து முடித்து உள்நாட்டில் வேலை இல்லாமல் கஷ்டப்படும், வெளிநாட்டில் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் ராஜாவாகி விடுவேன் என்ற நினைப்பில் வெளிநாடு செல்ல நினைக்கும் அத்தனை பேருக்காகவும் எழுதப்பட்ட புத்தகம். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படியுங்கள்.      

மறுபதிப்பின் போது வெகுசிலடங்களில் இருக்கும் வாக்கியப்பிழைகளை திருத்தினால் நன்றாக இருக்கும். கே.ஆர்.பி.         


டிஸ்கவரியில் ஆன்லைன் மூலம் வாங்க 


22 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. வணக்கம்
    விமர்சனம் மிக நன்றாக உள்ளது.....இன்றைய இளைஞ்ஞர்கள் வேண்டிப்படித்தால் நிச்சயம் திருந்த வாய்ப்பு உள்ளது.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பிரதர் கே.ஆர்.பி. என் பிறந்த தினத்தில் அன்பளித்த இந்தப் புத்தகம் என்னிடமும் இருக்கிறது. இன்னும் படிக்கத் துவங்கவில்லை. அது தப்போன்னு இப்ப இதைப் படிச்சதும் தோணுது. உடனே படிச்சிடறேன் நானும்!

    ReplyDelete
  4. மிக்க நன்றி தம்பி,
    மறுபதிப்பின் நிச்சயம் போது பிழைகள் சரி செய்யப்படும்

    ReplyDelete
  5. நல்லது.. கே.ஆர்..பி அண்ணனுக்கு வாழ்த்துகள்!!

    ReplyDelete
  6. நல்லதொரு பார்வை...
    இப்படியான புத்தகங்களும் செய்திகளும் அடிக்கடி எம்மவர்களுக்கு தேவையானது

    ReplyDelete
  7. சீனு,

    அண்ணனை எனக்கு சில வருடங்களாக தெரியும் என்றாலும் அவருடைய புத்தகத்தை நான் வாங்கவில்லை. அது எனக்கு அவுட் ஆப் சிலபஸ்.

    ஆனால் உன்னுடைய விமர்சனம் படித்தபிறகு வாங்கத் தோன்றுகிறது.

    நான் படிப்பதற்காக இல்லையென்றாலும், வெளிநாட்டு மோகத்தில் வாழும் / வெளிநாட்டுக்கு போய் சம்பாதிக்க விரும்பும் நண்பர்களுக்கு பரிசளிக்கலாம் இல்லையா...

    ReplyDelete
  8. நல்ல ஒரு அறிமுகம் சீனு !நம்மவர்களுக்கும் இது போய்ச்சேர வேண்டும்!

    ReplyDelete
  9. இது அன்று விழாவில் தெரியாமல் போச்சே...! நல்லதொரு விமர்சனம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. பணம் ! :( சிலரை ஆடவைக்கிறது,சிலரை ஆட்டிப்படைக்கிறது ! வாய்ப்புக் கிட்டினால் வாங்கி வாசிக்கிறேன் , புத்தக விமர்சனங்கள் தொடரட்டும் சீனு அண்ணா !

    ReplyDelete
  11. நான் அதை வெளியிட்ட அன்றே வாங்கி ஒரே நாளில் படித்து விட்டேன் . அருமையான புத்தகம்.

    ReplyDelete
  12. வாங்கிப் படிக்கத் தூண்டும் விமர்சனம் சீனு...

    நிச்சயம் வாசிக்கிறேன்..... சென்னை வரும்போது வாங்க குறித்து வைத்துக் கொண்டேன்.....

    ReplyDelete
  13. அருமையான விமர்சனம். படிக்கும் ஆவலைத் தூண்டியது..

    ReplyDelete
  14. கே.ஆர்.பி சாருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. நானும் தலைப்பைப் பார்த்து ஏதோ ,ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆவது எப்படி என்பது போன்ற சமாச்சாரம் என்று நினைத்திருந்தேன். இது பணம் என்கிற மாயப்பொருளுக்காக மனிதர்கள் படும் கஷ்டங்களை சொல்கிறது போல... புத்தகம் இங்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. சிங்கை - மலேசியாவிற்கு வந்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கலாம் என்கிற ஆசையோடு வருபவர்கள் படும் துன்பங்களை இது போல நூறு புத்தகங்கள் அளவு எழுதலாம். அவ்வளவு கண்ணீர் காவியங்கள் இங்கே இருக்கிறது.

    ReplyDelete
  16. /சில சமயங்களில் ஒரு சில புத்தகங்கள் நம்மோடு பேசுவது போல் தோன்றும்./


    ஆமா. அந்த காலத்துல பேசும் படம்னு ஒரு பொஸ்தகம் வந்துச்சி!

    ReplyDelete
  17. /இப்புத்தகம் ஒரு புதினமோ அல்லது புனைவோ இல்லை. அதற்காக கட்டுரைத் தொகுப்பு என்றும் கூறிவிட முடியாது./

    இத எதுக்காக சொல்றீங்கன்னு தெரிஞ்சா அதுக்காகத்தான் சொல்வீங்கன்னு தெரியும். இதுக்காக நான் எதுக்காக கேக்க வந்தேன்னு சொல்லாம இருக்க முடியுமா? அதுக்காகத்தான் சொல்றேன்.

    ReplyDelete
  18. கே.ஆர்.பி.யுடனான அறிமுகம் சுவாரஸ்யம். நானும் பணம் என்றால் சுய முன்னேற்ற நூல் என்றே நினைத்திருந்தேன், தவிர கே.ஆர்.பி. புத்தகம் எழுதியவர் என்பதே எனக்கு புதிய தகவல். சொல்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மையை ஒத்துக்கொண்ட என்னைப் பாராட்டுங்கள்....

    ReplyDelete
  19. பணம் என்ற புத்தகத்தைப் படித்தபின்பாவது வெளிநாட்டில் பணம் சம்பாதிக்கும் ஆசையைப் பற்றி எல்லோரும் யோசிக்க வேண்டும்.
    வாழ்த்துகள் கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  20. தாங்கள் எழுதிய நூல் விமர்சனம் அந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியது. மறுபதிப்பில் கே ஆர் பி செந்தில் அவர்கள் அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை மாற்றினால் தேவலை. அந்த அட்டைப்படம் விற்பனைக்கு ஒரு மைனஸ் .

    ReplyDelete
  21. நானும் இந்த புத்தகத்தை எங்கேயோ வாசித்தது போல உள்ளது. புத்தக விமர்சனம் அருமை அண்ணா...

    ReplyDelete