மார்கழிமாத மாதப்பிறப்பிற்கு முந்தைய தின இரவே பாட்டி எங்களிடம் கூறிவிடுவாள் "ஏல நாளைக்கு மார்கழி பொறக்கு, பஜனைக்கு போவனும், ஒழுங்கா எந்திச்சிரு". ஒருவேளை அடுத்தநாள் அதிகாலை எழுந்திருக்காமல் தூங்கிவிட்டால் அவ்வளவு தான், விடிகாலையிலேயே என்னருகில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என் பாட்டி. நான் எழுந்திருக்கும் வரை ஒருஅடி கூட நகரமாட்டாள். வெந்நீர் தயாராய் இருக்கும். காலைக்கடன்களை முடித்து குளித்து பள்ளிக்கூட டவுசரை போட்டுகொண்டு பாட்டியின் அருகில் சென்றால் போதும், வேஷ்டி கட்டி நாமம் போட்டுவிடும் வரை அத்தனையையும் கவனித்துக் கொள்வாள். பாட்டியைப் பொருத்தவரை இரண்டு வெள்ளைக் கோடுகளை இழுத்து, நடுவில் திருச்சனம் இட்டால் தான் நிம்மதி. "செவப்பு நாமம் மட்டும் போதும், பள்ளிகூடத்துல பசங்க கேலி பண்ணுவாங்க" என்றால் விடமாட்டாள். மூன்றையும் இழுத்து விடுவாள். ஆனால் என் அண்ணன் அவனுக்கு அவனே நாமம் போட்டு பழகிக் கொண்டதால் தப்பித்துக் கொள்வான்.
அண்ணன், நான், தம்பி |
வருடத்தில் அந்த ஒரு மாதத்திற்கு மட்டுமே வேஷ்டி கட்டுவதால் முதன்முறை வேஷ்டிகட்டி நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாய் இருக்கும். புதிதாய்க் வேஷ்டியை கட்டிக் கொண்டு மார்கழிப் பனியில் தெருவில் இறங்கினால் ராஜா நகர்வலத்திற்கு கிளம்பியது போல மனதினுள் ஒரு புது உற்சாகம் பிறந்திருக்கும். தெருவின் இரண்டு பக்கமும், அம்மா, பெரியம்மா, எதிர்த்தவீட்டு பாட்டி, பக்கத்து வீட்டு அத்தை, இன்னொரு பக்கத்து வீட்டு அக்கா என அனைவரும் கோலம் போடுவதில் மும்மரமாய் இருப்பார்கள். 'பஜன கிளம்புரதுக்குள்ள ஒரு சின்ன கோலமாவது போட்றனும்க்கா" என்றபடி நூறு புள்ளிகளுக்கு மேல் வைத்து படம் வரைந்து பாகம் குறிக்கத் தொடங்கியிருப்பாள் பக்கத்துக்கு வீட்டு அக்கா. தெருவே கோலமயமாக இருக்கும்.
அவர்கள் போட்ட கோலத்தை மிதிக்காமல் அதேநேரத்தில் கட்டிய வேஷ்டியும் அவிழ்ந்து விடாமல் சாவடிக்கு சென்றுவிட்டா ல் அதுவே அன்றைய தினத்தின் அளப்பரிய சாதனை. சந்திராவின் வீட்டைக் கடக்கும் போது வாசலில் இருந்தே அவன் அம்மா அவனை கத்தத் தொடங்கிவிடுவார் "ஏல சீனுவப் பாரு சாவடிக்கு கிளம்பிட்டான், நீ இன்னும் குளிக்கவே இல்ல".
சாவடிக்குள் நுழைந்தால் எனது அத்தனை நண்பர்களும் எனக்கு முன்னரே சாவடிக்கு வந்து சேர்ந்திருப்பார்கள். இங்கே எனது நண்பர்கள் என்பவர்கள் எங்கள் தெருவின் அப்போதைய வாண்டுகள் என்று அர்த்தம், அனைவருமே பத்து வயதிற்குட்பட்டவர்கள். ஒவ்வொருவன் கையிலும் ஒரு சிங்கி இருக்கும். அதனை எடுப்பதற்காகவே அத்தனை அதிகாலையிலும் வேகமாய் வந்திருப்பார்கள் உற்ற தோழர்கள்.
அந்த அமைதியான அழகான மார்கழிக் காலையில் எங்கள் கையில் சிக்கிய சிங்கியானது குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப் போன்று அவஸ்த்தைப்படும். எப்படி தட்டினாலும் சத்தம் வரும் என்பதற்காக சும்மா 'நங் நங்' என்று தட்டிக் கொண்டே இருப்போம் எங்கள் முதுகில் யாராவது நங் என்று தட்டும் வரை.
அதன்பின் பஜனைக்கு எவன் குளித்து விட்டுவந்தான் எவன் குளிக்காமல் வந்தான் என்பதற்கான கணக்கெடுப்பு நடக்கும். ஒருவன் குளித்துள்ளான இல்லையா என்பதை கண்டறிவதே சுவாரசியமான விஷயம். எப்படியும் எங்கள் கைகளில் கயிறு கட்டியிருப்போம், குறைந்தபட்சம் திருப்பதி கயிறு அல்லது எங்கள் தெரு மந்தமாரியம்மன் கோவில் கயிறு. அந்தக்கயிறு ஈரமாக இருந்தால் அவன் குளித்திருக்கிறான், இல்லை என்றால் இல்லை. எங்களுக்குள் விழித்திருக்கும் துப்பறியும் சாம்பு இப்படித்தான் வேலை செய்வான். தற்செயலாக ஒருவன் கயிறு கட்டவில்லை என்றால் அவன் குளிக்காதவனே. இந்த சோதனைக்குப் பயந்தே பலரும் குளித்துவிடுவார்கள், குறைந்தபட்சம் கயிருகட்டியிருக்கும் கையை நனைத்து விட்டாவது வருவார்கள்.
தெருவில் இருக்கும் தாத்தாக்கள் அண்ணன்கள் பெரியவர்கள் இப்படி ஒவ்வொருவராக சாவடிக்கு வரத்தொடங்கும் போது பஜனை களை கட்டத்தொடங்கியிருக்கும்.
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கிற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
என்று ஆண்டாளை வணங்கிவிட்டு தீபாராதணைக்குப் பின் அனைவரின் கையிலும் நன்றாக குழைத்த சந்தனைத்தை ஊற்றுவார்கள். இது அடுத்த பிரச்சனை. அதிகாலையில் குளித்தது, மார்கழிமாத குளிர் என எல்லாம் ஒன்று சேர அவர்கள் கொடுத்த சந்தனத்தை உடம்பில் தடவினால் ஒரு கிலோ ஐஸ்கட்டியை தடவியது போல் ஜில்லென்று இருக்கும். அதுவல்ல பிரச்சனை. கையில் கிடைத்த சந்தனத்தை நமக்குத் தெரியாமல் நம் முதுகில் பூச ஒரு கூட்டமே காத்திருக்கும். அவர்களை எதிர்கொள்வது அடுத்த சவால்.
ஒருவழியாக இந்தப்பிரச்சனை முடிவுக்கு வந்தால் அடுத்த பிரச்சனை பழம், துளசி வைக்கபட்டிருக்கும் தட்டை 'யார் தூக்குவது?' என்ற வடிவத்தில் வரும். தட்டை தூக்குவது அல்ல பிரச்சனை, தட்டில் வைக்கபட்டிருக்கும் வாழைப்பழம்தான் பிரச்சனை, கயிலாயம் தொடங்கி கவுண்டமணி செந்தில் வரை பழம் தானே பிரச்சனை. அந்த தட்டில் இரண்டு வாழைப்பழம் இருக்கும், அதில் ஒன்றை பஜனை முடியும் பொழுது தட்டைத் தூக்கியவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தார்மீக கோட்பாடு, அப்படித்தான் நடக்கும். அது பிரச்சனை இல்லை. அந்த தட்டில் இருக்கும் மற்றொரு பழம் யார் யாருக்கு என்பது தான் பிரச்சனையே. பெரும்பாலும் அந்தப் பழத்தை பங்கு போட்டு சாப்பிட வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு, அப்படி பங்கு போட்டுக்கொள்ள நடக்கும் சண்டையானது வாய்க்கா வரப்பு சண்டையை விட அதிதீவிரமானதாக இருக்கும்.
இறுதியில் பலம் இருப்பவனிடம் பழம் இருக்கும் அல்லது பழம் இருப்பவனிடம் பலம் இருக்கும். தட்டைத் தூக்குபவனுக்கு கண்டிப்பாக ஒரு பழம் உறுதி என்பதால் தட்டைத் தூக்குவதற்க்கும் எங்களுக்குள் கடும்போட்டி நிலவும். ஒருவழியாக சாவடி பிரச்சனைகள் முடிந்து தெருவில் காலடி எடுத்து வைத்தால்
கதிரவன் குணதிசை சிகரவந்தணைந்தான்
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்
பாடல் வரிகள் தெரிந்தவர்கள் பாடத் தொடங்கிவிடுவார்கள். நமக்கோ ஒன்றும் தெரியாது, அதற்காக மனதை தளர விடக்கூடாது, திடிரென்று சில வரிகளில் ஆஆஆஆ என்று ராகம் இழுப்பார்கள், அது எந்த எந்த வரிகள் என்று எங்களுக்கு மனப்பாடமாய்த் தெரியும் அப்போது மட்டும் எங்கள் 'ஆஆஆஆ' விண்ணைப் பிளக்கும்.
அடிமேல் அடிவைத்து மெதுவாக நடப்பதால் எந்த ஒரு கட்டத்திலும் வேஷ்டி அவிழ்ந்து விடாது, ஆனால் அப்படிச் செல்வதில் சுவாரசியம் இல்லையே. வேண்டுமென்றே ஒருவனுக்கு தெரியாமல் அவனுடைய வேஷ்டியை அவிழ்த்து விடுவோம். அதன்பின் அவன் கதி பஜனை முடியும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கும் தன்னுடைய வேஷ்டியை ஒருமாதிரி சுருட்டிப் பிடித்துக் கொண்டே நடக்க வேண்டும். பார்பதற்கு கொஞ்சம் பாவமாய் இருக்கும். இதை விட பெரிய பிரச்சனையை அவன் பிரசாதம் வாங்கும் பொழுது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கோவிலில் சுட சுட சக்கரைப் பொங்கல் வாங்கும் போது நெய்வடிய சூடாகக் கிடைக்கும் அந்த பொங்கலையும் சாப்பிட வேண்டும். வேஷ்டியையும் தவற விடக்கூடாது. வேஷ்டி அவிழ்ந்தவன்பாடு படுதிண்டாட்டம் தான். அதன்பின் யாராவது வேஷ்டியை கட்டிவிட்டாலும் அது அவன் இடுப்பில் நிற்கவே நிற்காது. நாரதர் தம்புராவைப் பிடித்திருப்பது போல ஒரு கையில் வேஷ்டியைப் பிடித்துக் கொண்டே நடக்க வேண்டியதுதான்.
பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கைகழுவ தண்ணீர் இல்லையென்றால் 'அப்புறம் தம்பி வீட்டுபாடம்லா எழுதிடிய்யா' என்றபடி பேசிக்கொண்டே எவன் வேஷ்டியையாவது நாசம் செய்யவேண்டியது கையை துடைப்பதற்கான சூட்ச்சுமவித்தை.
எங்கெல்லாம் மணல் மேடு கண்ணில் தென்படுகிறதோ அதன் மீதெல்லாம் ஏறி விளையாடத் தொடங்கிவிடுவோம். எங்கள் தொந்தரவு தாளாமல் எங்களை பஜனைக்கு வரக்கூடாது என்று கூறியவர்களும் உண்டு. பொங்கல் அன்று பஜனை இன்னும் களைகட்டும். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் செல்லும்.
இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட வருடம் 1995 ஆக இருக்கலாம், முடிந்தால் என்னைக் கண்டுபிடியுங்கள். இப்படத்தில் இருக்கும் பலரையும் காலம் அழைத்துக் கொண்டது.
|
எத்தனை முயன்றாலும் இனி அக்குழந்தைப் பருவத்திற்கு நிச்சயம் செல்லவே முடியாது. இன்று எங்கள் தெருவில் என்னதான் எங்களுக்கு அடுத்ததடுத்த சிறுவர்கள் பஜனைக்கு வந்து சேட்டை செய்ய ஆரம்பித்துவிட்டாலும். எங்கள் காலம் பொற்காலம். என்னவொன்று எங்கள் வயதில் பெரியவர்கள் அதட்டினால் நாங்கள் கேட்டுக்கொள்வோம், இப்போதோ கேட்டுக் கொல்கிறார்கள்.
"பாவம் ஸ்ரீ அண்ணா, தனியா அந்த வானரக் கூட்டத்த எப்படி சமாளிக்கப் போறாரோ!"
இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் தெருவில் மார்கழி மாத பஜனை துவங்க இருக்கிறது. பஜனைக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் எழுந்த நியாபகங்களே இவை. கொஞ்சம் சீரியசான பதிவாகத்தான் எழுத வேண்டும் என்று நினைத்து, சிறுவயது மார்கழிமாத நியாபகம் வந்துவிட்டதால், பதிவின் பாதை வேறுமாதிரியாக பயணித்துவிட்டது. இருந்தும் அந்த பதிவும் உண்டு :-)
Tweet |
// நமக்கோ ஒன்றும் தெரியாது, அதற்காக மனதை தளர விடக்கூடாது,// ஹஹஹஹா.. அது தெரிந்த விஷயம் தானே!
ReplyDelete// புகைப்படம் எடுக்கப்பட்ட வருடம் 1995 ஆக இருக்கலாம், முடிந்தால் என்னைக் கண்டுபிடியுங்கள். //
ReplyDeleteஉங்க அண்ணா புன்னகையோட நடுவுல அமர்ந்திருக்கார்.. சீனுவ கண்டுபிடிக்கிறது கொஞ்சம் சிரமமா இருக்கு. முதல் வரிசையில் கடைசியில் அமர்ந்திருக்கும் சிறுவனா?
முதல் படத்தில் உம்ம கையில் எதோ முத்ரை எல்லாம் தெரியுதே.. எதோ குறியீடு மாதிரி தெரியுதே.. :)
ReplyDeleteமார்கழி மாசம் ஒவ்வொரு வருஷமுமே குளிரா இருக்கும்..அம்மா நாலு-நாலரைக்கெல்லாம் எழுந்து குளித்து கோலம் போட கிளம்பிடுவார். நான் அந்த குளிரை அனுபவிப்பதற்காகவும், அந்த குளிர்காற்றில் சூடான மூச்சுக்காற்றை பலமாக விடும்போது நிகழும் மாற்றத்தை ரசிப்பதில் ஒரு ஆனந்தம். அதற்காகவே அம்மாவுடனே நானும் எழுந்து அவர் இடும் கோலத்திற்கு வர்ணம் கொடுக்கிறேன் என்ற பெயரில் அதை துவம்சம் செய்து கொண்டிருப்பேன்.
ReplyDeleteஇனிய நினைவுகள் சீனு......
ReplyDeleteமார்கழி மாதம் அதிகாலையில் எழுந்திருப்பதே ஒரு தனி சுகம் தான்......
ரசித்தேன்.
த.ம. 3
உங்கள் தளம் பல பெண்கள் வந்து போகும் தளம் அதில் நீங்கள் சட்டை போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோவை போட்டதற்கு கண்டனம்
ReplyDeleteHilarious.
DeleteI second this motion.
tha.ma 4 இப்ப இங்கு மார்கழி மாத குளிர் ஆரம்பிடுச்சு ஆனா பாடிவரத்தான் ஆள் இல்லை
ReplyDeleteபால்ய நினைவுகள் மனதிற்கு சுகம் இல்லையா ?
ReplyDeleteகயிலாயம் தொடங்கி கவுண்டமணி செந்தில் வரை பழம் தானே பிரச்சனை.
ReplyDeleteமலரும் மார்கழி நினைவுகள்
கடந்த கால நிகழ்வுகளைப் புரட்டிப் பார்ப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும்
ReplyDeleteகிட்டாது .குறும்புக்காரப் பசங்களையும் பொறுப்பாக வழிநடத்தும் எங்கள்
பாட்டிகளின் கெட்டித் தனத்தைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது .
மார்கழி மாதம் மதினில் தங்க மறுபடியும் அதே மகிழ்ச்சி கை கூட என்
இனிய வாழ்த்துக்கள் சகோதரா .
மார்கழி மாத நினைவுகள் அருமை....
ReplyDeleteஇனிய நினைவுகள் மனதை மகிழ்வித்தன...
ReplyDeleteபடத்தில் அதே முழி... ஹா.. ஹா... வாழ்த்துக்கள் சீனு...
ஆமாங்க அது பா.ரா முழி ...
Deletesuper.. really nice rememberance.. thanks a lot
ReplyDeleteஆகா..அருமையான எழுத்து.
ReplyDeleteபழம், பலம்.. interesting.
// இருந்தும் அந்த பதிவும் உண்டு :-) //
ReplyDeleteயாருக்கு கருணை மனு போடலாம் ...?
// "ஏல சீனுவப் பாரு சாவடிக்கு கிளம்பிட்டான், //
ReplyDeleteமொத முறை படிக்கும்போது நா வேற மாதிரி படிச்சுட்டன் :)
நீஙகளுமா?
Delete:)
DeleteNice write up seenu ....!
ReplyDeleteநான் கண்டுப்பிடிச்சுட்டேன். ஆனா, சொல்ல மாட்டேன்
ReplyDeleteஅதென்னப்பா சாவடி...அருமையான மலரும் நினைவுகள்..
ReplyDeleteசீனு நாமம் வாழ்க
ReplyDeleteஅருமையான நினைவுகள் ! ரசிக்கும்படியாக எழுதியுள்ளீர்கள், அடுத்தபதிவை எதிர்பார்த்திருக்கிறேன் :)
ReplyDeleteஅருமையான நிகழ்வுகள். இப்படி மொத்தமா எல்லாம் சட்ட போடாமல் இருக்கீங்களே! சென்சார் பண்ணமாட்டாங்களா????
ReplyDeleteஅடடே சீனுவா இது.... கலக்கல் போங்க...
ReplyDeleteஐயோ! சிறுவன் சீனு எத்தனை அழகு! கண்ணில் குறும்பு இன்னும் அழகு! கைகளை வேறு முத்திரையில் வைத்துக் கொண்டு..... கண்ணு படப்போகுதய்யா ...!
ReplyDeleteஇடது ஓரத்தில் கழுத்தில் மாலையுடன் இருப்பவர் சீனுவா?
இரண்டு மூன்று தடவை திரும்பத்திரும்ப படித்து ரசித்தேன் சீனு!
ஆமாம் அதென்ன சாவடி?