புதுகோட்டையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது ஆவி ஹோண்டா சிட்டியை தேசிய நெடுஞ்சாலையின் வளைவுகளில் திருப்பிக் கொண்டிருந்த நேரம் எங்களது சம்பாஷனை பழைய திரைப்படங்களை நோக்கித் திரும்பியிருந்தது. 'எலேய் சீனு உனக்கு புடிச்ச திகில் படம் எதுலேய்' வாத்தியார் கேட்க சட்டென எதுவும் நியாபகத்திற்கு வராமல் பீட்சா என்றேன், அதே கண்கள் என்றார் ஸ்கூல்பையன். 'அதுல்லாம் என்னலேய் படம். நா ஒரு படம் சொல்லுறேன், அத போய் பாரு, திகில மனுஷன் எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு கொண்டுபோயிருப்பான்' என்றார். 'என்ன படம் சார் அது' கேட்டேன்.
'நடு இரவில்ன்னு ஒரு படம், ரொம்ப பழைய படம், ஆனா அந்த காலத்துலையே தமிழ் சினிமால இப்படி ஒரு படமான்னு அசந்துருவ, கண்டிப்பா பாரு'
'ஆமா சார் என்கிட்டயும் அந்த படம் இருக்கு, செம படம்' என்றான் ரூபக். பயபுள்ள ஒரு படத்தையும் விடமாட்டான் போலையே என்று மனதினுள் நினைத்துக் கொண்டு 'யாரு டைரக்ஷன்' என்று கேட்டதற்கு 'பாலச்சந்தர்' என்று கூறிவிட்டு என் முகத்தையே பார்த்தார் வாத்தியார். அவர் நினைத்ததும், இப்போது நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதும் மிகசரி. நான் நினைத்தது கே.பாலச்சந்தரைத்தான்.
'அவசரப்பட்டு கே.பி ன்னு நினைச்சிராத, இவரு எஸ்.பி. எஸ்.பாலச்சந்தர். திகில் மன்னன், அந்த கால டி.ஆர், கதை திரைக்கதை இயக்கம் வசனம் இசை தயாரிப்பு மற்றும் நடிப்பு சகலமும் அவரே, திகில் படம் மட்டும் தான் எடுப்பார், திகில் மன்னன்னு அவருக்கு பேரே உண்டு' என்றபடி வழக்கம் போல தனக்குத் தெரிந்த தகவல்கள் அத்தனையையும் ஒன்றுவிடாமல் கூறினார்.
புதுகோட்டையில் இருந்து அரியலூர் செல்லும் பொழுது ராம்குமாரும் எங்களோடு இணைந்து கொள்ள மீண்டும் எங்களது பேச்சு சினிமாவிற்கு திரும்பியிருந்த நேரம் 'நண்பா நடு இரவில்ன்னு ஒரு பழைய படம், செம த்ரில்லிங்கா இருக்கும், கண்டிப்பா பாருங்க' என்றார் ராம்குமார். எனக்கொரு சந்தேகம் ஒருவேளை ராம்குமாரும் வாத்தியாரும் பேசிவைத்து பேசுகிறார்களோ என்று.
இவர்கள் அனைவருமே ஆகோ ஓகோ என்றாலும் ஏனோ தெரியவில்லை 'நடு இரவில்' பார்க்கும் எண்ணம் தோன்றவேயில்லை. அதிலும் டிவி, கணினியில் முழுதாய் ஒரு படம் பார்த்தே வருடக்கணக்கில் ஆகிவிட்டது. இருந்தும் அசாத்திய பொறுமையை என்னுள் வரவழைத்துக் கொண்ட ஒரு நடுப்பகலில் ஆரம்பமாகியது நடு இரவில்.
நடு இரவில்:
முதலைகள் நிறைந்த நீரால் சூழப்பட்ட, ஒரு குட்டி தீவு போன்ற இடத்தில் அமைந்திருக்கும் அரண்மனை போன்ற மாளிகையில், மனநலம் பாதிகப்பட்ட தனது மனைவியுடனும் நான்கு வேலையாட்களுடனும் வசித்து வருகிறார் இன்னும் இருபதே நாட்களில் ரத்தப் புற்றுநோயால் இறக்கப்போகும் தயானந்தம் (மேஜர் சுந்தர்ராஜன்). இவருடைய நண்பர் மற்றும் குடும்ப மருத்துவருமான சரவணன் (எஸ்.பாலச்சந்தர்), வாரிசு அற்ற மிகபெரிய லட்சாதிபதியான தயானந்தத்தின் சொத்துகள் தயானந்தத்தின் மறைவுக்குப் பின் அப்படியே அழிந்துவிடகூடாது என்பதால் அவற்றை அவருடைய சொந்தங்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அறிவுறுத்துகிறார்.
அரிஜன பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக தனது காதல் மனைவியை பலவித இன்னல்களுக்குள்ளாக்கி, மனநலம் பாதிக்கச்செய்த உடன்பிறந்தவர்கள் மீது தீரா வெறுப்பில் இருக்கும் தயானந்தம், தனது நண்பன் மற்றும் மருத்துவர் சரவணனின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இருந்தும் டாக்டர் சரவணன் தன் நண்பன் மீது உள்ள அக்கறையால் அவருடைய உடன்பிறந்தவர்களுக்கு விளக்கமான மடல் எழுதி அனைவரையும் மாளிகைக்கு வரவைக்கிறார். இது வரை மிக மெதுவாக நகரும் கதை இதன்பின் வேகமெடுத்து ஓடத் தொடங்குகிறது.
1965ல் எடுக்கப்பட்ட படம் என்பதால் கருப்புவெள்ளையிலும் மிகமோசமான கருப்பு வெள்ளைப்படம் மற்றும் இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய சற்றே நீளமான படம். ஓவராய் மொக்கை போட்டால் தினசரி அரைமணிநேரம் பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். ஒருகட்டத்தில் என்னையறியாமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த நான், எவ்வளவு நேரம் ஓடியுள்ளது என்று பார்த்தால் ஆச்சரியம், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப்படம் முடிந்திருந்தது.
இரண்டு அண்ணன், இரண்டு தம்பி மற்றும் ஒரு தங்கையுடன் பிறந்த மிகபெரிய குடும்பம் தயானந்தத்தினுடையது. அனைவருக்குமே திருமண வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அடங்கிய ஒரு பெரிய பட்டாளமே தயானந்தத்தின் வீட்டினுள் நுழைகிறது. தயானந்தம் தன் மனைவியின் இந்த நிலைக்குக் காரணமான உடன்பிறப்புகள் மீது எரிந்து விழுகிறார். சகோதரனின் நிலைமையறிந்த ஒவ்வொரும் மன்னிப்பு கோருகிறார்கள்.
தயானந்தத்தின் கடைசி தம்பி ஜம்புலிங்கம்( வி.எஸ்.ராகவன்) ராணுவத்தில் பணிபுரியும் பொழுது தன்னுடைய ஒரு கால் மற்றும் இரண்டு கண்களையும் இழந்து விடுகிறார். இது தனது அண்ணிக்கு தான் செய்த கொடுமையால் வந்தவினை என்று கதறி மன்னிப்பு கோருகிறார். சமாதானம் அடையாத தயானந்தம் அனைவரையும் கடுமையாக திட்டிவிடுகிறார். இந்நேரம் டாக்டர் சரவணன் தயானந்தத்தின் சகோதர்களிடம் 'நீங்கள் கோவபட்டால் நாம் திட்டமிட்டது திட்டமிட்டபடி நடக்காது, இன்னும் சிலநாட்கள் தான் தயானந்தம் உயிரோடு இருப்பார். அதனால் பொறுமையாக இருங்கள் என்று அறிவுறுத்துகிறார்'.
வீட்டு வேலைக்காரராக வரும் சோ, தனது சக தொழிலாளிகளான மொட்டையன் மற்றும் மொட்டையன் மகளுடன் சேர்ந்து வீட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் பேய் பயம் உண்டுபண்ணி வீட்டைவிட்டே துரத்த திட்டம் தீட்டுகிறார். பயமுறுத்தவும் செய்கிறார். சோ - அநியாயத்திற்கு இளமையாக இருக்கிறார்.
மேலும் அதற்கு அடுத்தநாளே தயானந்தத்தின் அண்ணன் மனைவி மோகனாம்பாள் (எஸ்.ஆர்.ஜானகி) சாப்பாட்டு மேஜையின் அடியில் பிணமாகக் கிடக்கிறார். டாக்டர் சரவணன் அவரை சோதித்துவிட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அனைவரின் பார்வையும் தயானந்தத்தின் மீது விழுகிறது. ஒருவர் விடாமல் அனைவரும் இது தயானந்தத்தின் பழிவாங்கும் படலம் என குற்றம் சுமத்துகிறார்கள். தயானந்தம் 'ஒளிந்திருந்து கொள்ள நான் ஒன்று பேடி இல்லை' என மறுக்கிறார். மேலும் உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை ஒருவரும் வீட்டை நகரக் கூடாது, படகை எடுத்துக்கொண்டு கரைக்குப் போகக் கூடாது. ஒருவேளை நீந்தி செல்லலாம் என்று நினைத்தால் முதலைக்கு இரையாவீர்கள் என்று மிரட்டுகிறார்.
தயானந்தத்தின் மனைவி எப்போதும் தனி அறையிலேயே அடைந்து கிடப்பவர் ஜம்புலிங்கத்தின் மகளான ரோகிணியின் (சௌகார் ஜானகி) பாடலை கேட்டு மகிழ்ச்சியடைகிறார். இதனால் தயானந்தத்திற்கு ரோகிணியின் மீது பரிவு ஏற்படுகிறது.
மோகனாம்பாள் கொலையானதிலிருந்து சரியாக இரண்டாவது நாளில் தயானந்தத்தின் மூத்த அண்ணன் சோமநாதன் (சி.வி.வி பந்தலு) தற்கொலை செய்து கொள்கிறார். பின்னர் அது கொலை என்று கண்டுபிடிக்கப்படுகிறது. இவர்களைத் தொடர்ந்து வரிசையாக மற்ற உடன்பிறப்புகளும் அவர்களது குழந்தைகளுமாக மொத்தம் ஏழு நபர்கள் கொல்லபடுகிறார்கள்.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது துப்பறியும் பார்வை வேறுவேறு ஆட்களைத் துரத்துகிறது. பழிவாங்க தயானந்தமோ, இல்லை அவரது மனைவி பொன்னியாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கும் வேளையில் பெரும்பாலான நேரங்களில் டாக்டர் சரவணனையே சந்தேகிக்கிறோம். சிலகாட்சிகளும் அப்படியே நகர்கின்றன. மேலும் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் தயானந்தத்தின் சொத்தின் மீது ஆசையிருப்பதால் ஒவ்வொருவரையும் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது துப்பறியும் பார்வை வேறுவேறு ஆட்களைத் துரத்துகிறது. பழிவாங்க தயானந்தமோ, இல்லை அவரது மனைவி பொன்னியாகவோ இருக்கலாம் என்று சந்தேகிக்கும் வேளையில் பெரும்பாலான நேரங்களில் டாக்டர் சரவணனையே சந்தேகிக்கிறோம். சிலகாட்சிகளும் அப்படியே நகர்கின்றன. மேலும் இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் தயானந்தத்தின் சொத்தின் மீது ஆசையிருப்பதால் ஒவ்வொருவரையும் நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இந்நேரத்தில் தயானந்தத்தின் மனைவி பொன்னியும் கொலையாகிறார். வேறுவழியே இல்லாமல் அனைவரது சந்தேகமும் டாக்டர் சரவணன் மீது திரும்புகிறது. அதற்கு ஏற்றாற்போல் ரோகிணியை கொலைசெய்ய வரும் முகமூடி அணிந்த சரவணனை தயானந்தம் சுட்டுக் கொல்கிறார். நாம் எதிர்பார்த்தது போல் சுபம் போடுவர்கள் என்று நினைக்கும் வேளையில் டைரக்சன் எஸ்.பாலசந்தர் என்று போடுகிறார்கள். 'என்ன இங்க சத்தம்' என்றபடி டாக்டர் சரவணன் மாடிப்படியில் இருந்து இறங்குகிறார். அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். ஏன் அதிர்ச்சிக்குள்ளானார்கள்? அப்படியென்றால் உண்மையான கொலையாளி யார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மிகச்சரியாக சொல்ல வேண்டுமானால் வெறும் இருபது கதாபாத்திரங்கள் மற்றும் ஒரே ஒரு பங்களாவைச் சுற்றி நகரும் கதை. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு அத்தனையிலும் ஒரு திகில் படத்திற்கு தேவையான நேர்த்தி. மின்சாரம் வெளிச்சம் இல்லாத அந்த பங்களாவை, பெரும்பாலும் நடு இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடைபெறும்படி திரைக்கதை அமைத்த எஸ்.பாலச்சந்தர் உண்மையிலேயே பாராட்டத்தக்கவர். மிகபெரும் புத்திசாலியாக இருக்க வேண்டும். திகில் படத்திற்கே உரித்தான காட்சி அமைப்புகள், சலிப்புதட்டாத இயல்பான வசனம். பெரும்பாலான வசனங்களில் ஹாஸ்யம் அள்ளுகிறது. பல கொலைகள் நடந்தாலும் ஒரு துப்பறியும் காட்சி கூட கிடையாது என்பது இந்த படத்தின் சிறப்பம்சமாக இருக்க வேண்டும்.
லாஜிக் மீறல்கள் என்று நாம் நினைக்கும் பல காட்சிகளுக்குகாண விளக்கங்களை அந்தந்த காட்சிகளிலேயே வசனம் மூலம் புரியவைப்பது பிரமாதம். அவற்றையும் மீறி சில தென்பட்டாலும், எஸ்.பாலச்சந்தர் மெய்யாலுமே அறிவுஜீவிதான். நீங்கள் தமிழ்சினிமா பிரியர் என்றால் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் தவறவிடக் கூடாத தமிழ் சினிமா இது... .
Tweet |
என்கிட்டயும் வாத்தியார் கொடுத்திருக்காருல்ல.. நாளைக்கே பார்த்துடறேன்..
ReplyDeleteகண்டிப்பா பாருங்க பாஸ்
Delete//அவற்றையும் மீறி சில தென்பட்டாலும், எஸ்.முத்துராமன் மெய்யாலுமே அறிவுஜீவிதான். // ரொம்ப மிரண்டுட்டீங்க போல..அது எஸ்.பாலசந்தர், இல்லியா?
ReplyDeleteஹி ஹி ஹி திருத்திட்டேம்னே..
Deleteசாப்ட் காப்பி வச்சிருப்பீங்க போல... நெட்ல அப்லோட் பண்ணி விடலாமில்ல... அல்லது யூடியூபில் இருந்தால் லிங்க் தரவும்...
ReplyDeleteஎங்கயுமே video லிங்க் கிடைக்கல
Deleteyoutube இல் அப்லோட் பண்ணும் அளவுக்கு இணைய வசதி இல்லை பிரபா.. நாம் சந்திக்கும் போது உங்களிடம் தரட்டுமா...?
இந்தப் படத்தை விட "அதே கண்கள்" அதிகம் ரசித்ததுண்டு பயத்துடன்...!
ReplyDeleteஹா ஹா ஹா.. அதையும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் டிடி
Deleteஎஸ் பாலசந்தரை இப்போதுதான் கேள்விப்படுகிறீர்கள் போலிருக்கிறது. நல்லது. நடு இரவில் மட்டுமல்ல, பொம்மை, அவனா இவன் போன்ற த்ரில்லர் திரைப்படங்களையும் எடுத்துள்ளார். எல்லாமே அந்த காலத்தின் அலைவரிசையை தாண்டிய படங்கள். சிவாஜி நடித்த.. சிறப்பாக நடித்த... அந்த நாள் படத்தின் இயக்குனரும் இவரே. ஒரே வரியில் இவரை stiff necked genius என்று அழைக்கலாம். சினிமாவை விட்டு விலகிய பிறகு வீணை பாலசந்தர் என்று மக்களால் அறியப்பட்டவர். டி ராஜேந்தருடன் இவரை இணை வைப்பதெல்லாம் திகிலாக இருக்கிறது.
ReplyDeleteநேற்று விக்கியில் பார்த்தபோது, குருநாதரே இல்லாமல் வீணை கற்றுக் கொண்டவர் என்பதை படித்த போது பிரம்மித்துப்போனேன் காரிகன்...
Deleteஅவருடைய மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது...
stiff necked genius really true...
காரிகன் சொல்வதைத்தான் நானும் சொல்லவந்தேன். செங்கோவியின் கருத்தையும்! அந்த நாள் அந்தநாளில் வந்த மிக வித்தியாசமான படம். விருமாண்டியில் ஒரே சம்பவம் இருவேறு பார்வையில் இருக்கும். அந்த நாள் படத்தில் எத்தனை கோணம்! ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி சுடப்பட்டு இறப்பார்!
ReplyDelete//அந்த நாள் அந்தநாளில் வந்த மிக வித்தியாசமான படம்.// என்னே ஒரு வாக்கிய அமைப்பு :-)
Deleteஅந்த நாளும் பார்த்தே ஆக வேண்டும் சார்.. உங்ககிட்ட இருக்கா...
நான் முன்பே உன்கிட்ட சொன்னதுபோல எஸ்.பாலசந்தரை ‘தமிழின் ஹிட்ச்காக்’ன்னுதான் சொல்ல முடியும். காமிரா கோணங்கள் வைககிறதுலயும், டெம்போவை மெயின்டைன் பண்ற திரைக்கதை அமைக்கறதுலயும் மன்னன். கதையின் முக்கியமான, திருப்புமுனை கட்டத்துலதான் தன் பெயரைப் போடுவார். ‘அவனா இவன்?’ படத்துல படம் ஆரம்பிச்சு முக்கா மணி நேரம் கழிச்சு கதை டேக்ஆஃப் ஆகற டயத்துலதான் டைட்டில்ஸே ஆரம்பிக்கும். அப்படில்லாம் வித்தியாசமா அசத்தினவரு!
ReplyDelete//காமிரா கோணங்கள் வைககிறதுலயும், டெம்போவை மெயின்டைன் பண்ற திரைக்கதை அமைக்கறதுலயும் மன்னன். // இந்த மூணையுமே கவனிச்சேன் சார்.. பிரமாதபடுத்தி இருந்தார்..
Deleteஇங்கையும் கூட கிளைமாக்ஸ்ல டைரக்சன்ன்னு வந்தப்ப அசந்துட்டேன்...
இந்த படத்தின் எண்மிய பல்திற வட்டு என்னிடம் இருக்கிறது. மாடர்ன் சினிமா நிறுவனம் வெளியிட்ட அந்த எண்மிய பல்திற வட்டில் காட்சிகள் சரிவர தெரிவதில்லை.
ReplyDeleteசந்தேகம் வந்து மறுபடியும் வேறொரு எண்மிய பல்திற வட்டினை வாங்கினேன். அப்போதுதான் தெரிந்தது அந்த படத்தின் அச்சே (ப்ரிண்ட்) அப்படித்தான் உள்ளது என்று.
நீங்கள் வெளியிட்டு இருக்கும் ஸ்க்ரீன் ஷாட்டில் காட்சிகள் தெளிவாக இருக்கிறதே? அப்படி எனின் நல்ல ப்ரிண்டா?
‘எண்மிய பல்திற வட்டு’ன்னு கொடுந்தமிழ்ல மொ(மு)ழி பெயர்த்த உமக்கு சினிமா, ஸ்கிரீன் ஷாட் அப்படிங்கிற வார்த்தைகளுக்கான தமிழ் தெரியலியா வேய்!
Deleteகிட்டத்தட்ட என்னிடமும் அதே பிரிண்ட் தான் இருக்கிறது என நினைக்கிறன் விஸ்வா.. பெரிய திரை டிவிக்களில் பார்த்தால் சகிக்காது.. என்னுடைய மடிக்கணினி சிறிய திரை என்பதால் கொஞ்சம் நன்றாக தெரிந்தது... என்னிடம் இருப்பதை வேண்டுமானால் உங்களுக்கு தருகிறேன் பரிசோதித்துப் பாருங்கள்...
Deleteசி. டி. எங்கே கிடைக்கும் ?
ReplyDeleteஹி .. ஹி ....ஒ சிலே கிடைக்குமா ?
மலிவுப் பதிப்பு உண்டா ?
மூத்த குடிமகனுக்கு டிச்கௌண்ட் உண்டா ?
இரவல் உண்டா ?
இல்ல, உங்க வீட்டுலே போட்டு காண்பிப்பதாக இருந்தா,
இண்டர்வல் போது காபி, டீ உண்டா ?
சுப்பு தாத்தா.
www.wallposterwallposter.blogspot.in
www.subbuthatha.blogspot.com
பாப்கார்னும் கொடுக்கறதா இருந்தா உங்களோட நானும் வர்றேன் தாத்தா.. :)
Deleteதாத்தா அங்கயே இருங்க.. அப்டிக்கா வரும் போது தாரேன்.. உங்களுக்கு இல்லாமலா :-)
Delete//இல்ல, உங்க வீட்டுலே போட்டு காண்பிப்பதாக இருந்தா,
இண்டர்வல் போது காபி, டீ உண்டா ?//
பேஷ் பேஷ் நன்னா இருக்குன்னு சொல்ற மாதிரி நானே காபி போட்டு தாரேன்.. வாங்க :-)
ஆவி பறக்க பாப்கார்ன் எனக்கு செய்ய தெரியாதே.. :-)
Deletechk this: https://www.youtube.com/watch?v=2s7dVJRWfJA
Deleteஇதன் டைரக்டர் எஸ் பாலச்சந்தர் வீணை பாலச்சந்தர் என்று அழைக்கப்பட்டவர். அவர் பன்முகக் கலைஞர் எனலாம். மிக அருமையான டைரக்டர். வாத்தியார் சொல்லியிருப்பது போல அவர் ஒரு திறமை மிக்க சினிமா மேக்கர். திரைப்பட இசையும் செய்திருக்கிறார். பாடுவார்......இந்தப் படம் மிகவும் அருமையான படம்....பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது...
ReplyDeleteஇந்த நல்ல படத்தைப் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி!
அது சரி வாத்தியார் திருநெல்வேலியா?
//அது சரி வாத்தியார் திருநெல்வேலியா?// கருத்துக்களுக்கு மிக்க நன்றி :-)
Delete//அது சரி வாத்தியார் திருநெல்வேலியா?//
வாத்தியாருக்கு நெல்லை சகவாசம் உண்டு என்பதால் அவருக்கு அந்த பாஷை புடிக்கும் :-)
திரில்லிங்கான படமாக இருக்கே. யூட்யூபில் இல்லையா? அதே கண்கள் பார்த்து பயந்ததுண்டு. இந்த படத்தை பற்றி நீங்கள் சொல்லும் போதே பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ReplyDeletechk this: https://www.youtube.com/watch?v=2s7dVJRWfJA
Deleteநான் ஏற்கனவே பார்த்துட்டேன். எப்படியும் ஒரு பத்து முறை பார்த்திருப்பேன்.
ReplyDeleteAnd then there were none என்ற அகதா கிறிஸ்டி நாவலையும் / அதே பெயரில் வந்த படத்தையும் தழுவியது இந்த கதை. மிக சிறந்த முறையில் எடுத்திருப்பார் எஸ் பாலச்சந்தர். பன்முக கலைஞர் என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தம்.
ReplyDeleteநீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடல் ஜேசுதாசின் அறிமுகப் பாடலோ , முதல் பெரிய அளவு பெயர் வாங்கித்தந்த பாடலோ என நினைக்கிறேன். அந்த நாள்.. மிக மிக புதுமையான படம்.
நாடு இரவில் தான் எஸ் பாலச்சந்தர் கடைசியாக இயக்கியது.
பணத்துக்கு சினிமா.. மன நிறைவுக்கு இசை.. என்று சொன்னதாக கேள்வி.
சுருக்கமாக.. அவர் ஒரு ஜீனியஸ்!
ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் பாணியில் அமைந்த படம் ‘பொம்மை’. வில்லன் பொம்மையில் குண்டு வைப்பதும், அதை கை மாற்றி விடுவதும் ஆடியன்சுக்குத் தெரியும். அது குழந்தையின் கையில் இருக்கும் போது வெடிக்குமா, பெண்ணின் கரத்திலிருக்கும் போது வெடிக்குமா என்று அந்த பொம்மை வெவ்வேறு கை மாறும் சமயங்களிலும் பார்ப்பவர்களுக்கு பி.பி.யை எகிற வைத்து விடுவார் எஸ்.பாலசந்தர். ஏசுதாசின் முதல் பாடல் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’தான்!
Deleteவீணை பால்ச்சந்தர் மறக்க முடியுமா நல்லபடம் நடு இரவில்.பார்த்து நாளச்சு!ம்ம் பகிர்வுக்கு நன்றி!மீண்டும் பார்ப்பேன்.
ReplyDeleteபுதுக்கோட்டையில் உள்ள ஞானாலயா ஆய்வு நூலகத்திற்கு சென்று வந்து இருக்கலாமே?
ReplyDeleteநடு இரவில்.... நல்ல படம். சிறு வயதில் கொஞ்சமாக பார்த்து பயந்திருக்கிறேன்...
ReplyDeleteஇப்போது பார்க்க நினைக்கிறேன். அடுத்த சென்னைப் பயணத்தின் போது உங்களிடமிருந்து சேமித்துக் கொள்கிறேன் சீனு.
சீனு உங்களிடம் படம் இருந்தால் என் மின்னஞ்சலுக்கு அனுப்ப முடியுமா, நான் இணையத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.
ReplyDeleteAnd then there were none என்கிற அகதா கிறிஸ்டி கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு ”பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை” என்ற பெயரில் கண்ணதாசன் பதிப்பக்கத்தில் கிடைக்கிறது.
narenkarthik6290@gmail.com
The film Nadu Iravil was inspired from the English film `And then there were None (1945)` - Agatha Christie. This film is available in YouTube.
ReplyDeleteசூப்பர் விமர்சனம்
ReplyDelete