17 Mar 2014

கொண்டையும் மீசயும் - சிறுகதை

அம்மணமாக பம்புசெட்டின் மீது நின்று கொண்டிருந்த கொண்ட மெல்ல குதிக்கத் தயாரானான். 

'எலேய் செருக்கியுள்ளையலா, பேதியிலபோவானுவலா, சவத்துமூதியலா எவன் வீட்டு கிணத்த எவன்லே அசிங்கப்படுத்துரிய' அந்த வயக்காட்டில் எங்களைத் தவிர வேறுயாருமே இல்லையென்பதால் வெகுதூரத்தில் இருந்து கத்திய மீசயின் குரல் மிகத்துல்லியமாக எங்களை வந்தடைந்தது.

குதிக்கத் தயாரான கொண்டையால் தன்னை கட்டுப்படுத்தி நிற்க முடியமல் 'எலேய் மீச வண்டாம்ல ஓடுங்கள ஓடுங்கள' சொல்லிக்கொண்டே கிணத்தினுள் தொப்பென்று குதித்துவிட்டான், மீசையின் குரலைக் கேட்டு உசாராகியிருந்த நாங்கள் கிணத்தோர பைப்பைப் பிடித்தபடி மேலேறி ஓடுவதற்கு தயாரான சமயம் மீசயும் எங்களை நெருங்கியிருந்தான்.

'சொல்லிகிட்டே இருக்கேன், அந்தா ஒருத்தன் குதிக்கான் பாரு, அறுத்துவுட்டா தாம்ல இனி வரமாட்டிய..சின்னப்பயளுவலா',  

மீச அருகில் வந்துவிட்ட பதட்டத்தில் அவசரவசரமாக மேலேறினான் கொண்ட, 'எலேய் கொண்ட சீக்கிரம்வா... அறுத்ருவாராம்லே, அறுத்துட்டா என்னல பண்ணுவ' நேரங்காலம் தெரியாமல் கிண்டலடித்தான் முத்து. மீச கையிலிருந்த அருவாளை அப்போது தான் கவனித்தேன். பயம் இன்னும் அதிகமாகியிருந்தது. ஏற்கனவே மீசயைப் பற்றி கேள்விபட்டிருந்தாலும் அன்றுதான் அவனை முதல்முறையாகப் பார்கிறேன். வயல்வேலை பார்த்துப்பார்த்தே பளபளக்கும் கருத்தமேனிக்குச் சொந்தகாரனானவன். ஆறடிக்கும் குறையாத உயரம். வயது ஐம்பதுக்கும் மேல் இருக்கும். கண்ணுக்கெட்டிய தூரம் வரை பரந்து கிடக்கும் MR வயலை கவனித்து வருகிறான்  Mr.மீச.

நாங்களனைவரும் தயாராயிருக்க, கொண்டைக்கோ அவனுடைய டவுசரை தேடக்கூட அவகாசம் தரவில்லை மீச, 'எலேய் ஓடுங்கல ஓடுங்கல வண்டாம்லெ', என்றபடி ஓடதொடங்கையில் கொண்ட கத்தினான் 'என் டவுசர கானோம்ல, எவனாது பாத்திங்களா' முத்து மெல்ல என் காதில் கிசுகிசுத்தான் 'கொண்ட டவுசர் என்கிட்டதான் இருக்கு, கொஞ்ச நேரத்துக்கு அம்மணமா திரியட்டும்'.  போனவாரம் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததை டீச்சரிடம் மாட்டிவிட்ட கொண்டையின் மீது இன்னும் கோவம் இருந்தது முத்துவிற்கு. 

'இன்னிக்கு ஒருத்தனுக்காது மார்க்கம் பண்ணாம விடமாடேன்ல' சாமக்கொள்ளைக்கு புறப்பட்ட கருப்பன் போலிருந்தார் மீச. எப்போதும் கொஞ்சதூரம் துரத்துவார், கொஞ்சம் பயங்காட்டுவார் அப்புறம் விட்ருவார் இதுதான் மீசயைப் பற்றி நான் கேள்விபட்டிருந்த தகவல்கள். ஆனால் இன்றோ அளவுக்கு அதிகமாய் சூடேறி இருந்தார். போதாக்குறைக்கு அவர் சொல்லச்சொல்ல கேளாமல் கிணற்றினுள் குதித்த கொண்டயும் அவனது அம்மணமும் அவரை இன்னும் கடுப்பேற்றி இருக்க வேண்டும். நிலைமை மோசமாகியிருந்தது. 

'எப்படியாவது வழுக்காம்பாறைய தாண்டிட்டோம்னு வையி, மீச என்ன அவன் அப்பனே வந்தாலும் பிடிக்க முடியாது, ஏலே மக்கா டவுசர எடுத்திருந்தா குடுங்கல' கொண்ட இப்போது எங்களையும் தாண்டி எங்களுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான், மீசயும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான்.          

தென்காசி வாய்க்காபாலம் பகுதியில் மிகபெரிய கிணறு என்றால் அது MR கிணறு தான். பச்சைப்பசேல் வயல்வெளிகளுக்கு நடுவில் இருக்கும் அந்த கிணறு பார்ப்பதற்கு ஒரு பெரிய நீச்சல்குளம் போல் காட்சியளிக்கும்.

'வெளாடிட்டு MR கிணத்துக்கு போய் ஒரு குளியல போட்டாதாம்ல சுகமா இருக்கும்' வேண்டுமென்றே வகுப்பறைகளில் என் காதுபட பேசுவார்கள் என் நண்பர்கள். போதாகுறைக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் 'எலேய் நேத்து செம குளியலு, அந்த பம்புசெட் மேல இருந்து கொண்ட தலைகீழா குதிச்சான்பாரு, மூணு நிமிசத்துக்கு மேல வரலன்னா பாத்துகோயேன்' என்று முத்து ஆரம்பிக்க கொண்ட முழுவாண்டுத் தேர்வில் பாஸானது போல் பெருமைப்படுவான். 

'கொண்டைக்கு நீச்சலே தெரியாது, நான் தரையவே தொட்டாந்தேன் தெரியுமா, மண்ணு கூட அள்ளுனேன், கொண்ட சொல்லுல' கொண்டையை மட்டம் தட்டி பெருமை பீத்துவான் கோனு. 'எப்படி அளக்கான் பாரு, ஏ உனக்கு நிலா நீச்சல் தெரியுமாடே, உள் நீச்சல், வட்ட நீச்சல்.. சும்மா பேசாத என்ன..'  பதிலுக்கு கோனை வம்புக்கு இழுப்பான் கொண்ட... இப்படி நீண்டு கொண்டே போகும் பேச்சின் பாதியிலேயே அடக்க முடியாத அழுகையுடன் சேர்ந்து வரும் கோவத்துடன் எழுந்து விடுவேன் நான். இவர்களுடன் கிணற்றுக்குப் போக முடியவில்லை என்பதையும் தாண்டி எனக்கு நீச்சல் தெரியாது என்பது தான் என் கோபத்திற்குக்கான முக்கிய காரணம்.  

'ஏ மக்கா இப்ப எதுக்கு கோவபடுற' நான் எதற்க்குக் கோபப்படுகிறேன் என்று தெரிந்தாலும் வேண்டுமென்றே கேட்பான் கொண்ட.

'நீயும் வேணுமின்னா அடுத்த வாரம் வாயேன்.. நீ தான் சமஞ்சபுள்ள கணக்கா வீட்டுகுல்லையே இருக்க'

'எனக்கு நீச்சல் தெரியாதுல்லா'

'அதுகென்ன, நாங்க இருக்கமுல்லா..' சூடேத்துவான் கோனு 

'அம்மா திட்டுவாங்க, எனக்கு நீச்சல் தெரியாது, கிணதுக்குன்னா விடவே மாட்டாங்க, நான் வர மாட்டேன்'      

'வேணா அம்மாக்கு தெரியாமவா. MR கிணத்துக்கு போலாம். ஞாயித்துகிழம பள்ளியோடம் லீவுதான, முத்து வீட்டுக்கு வா அங்கருந்து போவோம்' இப்படித்தான்  மெல்ல என் ஆசையைக் கிளப்பிவிட்டார்கள்.

வாய்க்காபாலம், கொலையே செய்தாலும் கண்டுபிடிக்க நாலுநாள் தேவைப்படும் ஊரின் ஒதுக்குபுறம். அங்கிருந்து கீழிறங்கி வழுக்காம்பாறையை கடந்து வயல்வெளிகளினுள் நுழைந்தால் பத்து நிமிட நடையில் MR கிணறு. சிற்றாறு இந்த இடத்தைக் கடக்கும் போது மட்டும் இதன் பெயர் வழுக்காம்பாறை. இங்கிருக்கும் பாறைகளின் மீது எப்போதும் நீர் ஓடிக்கொண்டே இருப்பதால் இவை அனைத்தும் நல்ல பாலிஷ் செய்தது போல் வழுவழுவென்று இருக்கும். அந்தபாறையில் ஓவென கத்திகொண்டே வழுக்கி விளையாடுவதில் எங்களைபோல் சிறுவர்களுக்கு அப்படியொரு ஆர்வம். இன்னும் சொல்லபோனால் எங்கள் ஊருக்கு இயற்கை அமைத்துக் கொடுத்த கிஸ்கிந்தா இந்த வழுக்காம்பாறை. இங்கும் சில இடங்களில் ஆழமும் சுழித்துச் செல்லும் நீரின் வேகமும் அதிகமாய் இருக்கும்.

முதல்முறையாக MR கிணறில் குளிக்கப் போகிறேன். கிணற்றினுள் இறங்கும்முன்  'அம்மாக்கு தெரியாம ஆத்துக்கு கிணத்துக்குலா போய் குளிக்கக் கூடாது, தண்ணிக்கு பகை தெரியாது' என்றெல்லாம் மிரட்டியிருந்த அம்மாவின் எச்சரிக்கை காதுக்குள் கேட்டபோதும் நண்பர்கள் கொடுத்த தைரியம் இதோ முதல் முறை நானும் கிணத்தினுள் இறங்கப் போகிறேன். 

'கொண்ட அவனப் பாத்துக்கோ, நான் வந்ததும் நீ போ' என்றபடி சுழற்சி முறையில் என்னை பார்த்துக் கொண்டார்கள். பம்புசெட்டின் மீதிருந்து குதிப்பதும், விதவிதமாக ஜாலங்கள் செய்வதும் என பலவித வித்தைகள் காட்டிகொண்டிருந்தார்கள். நானோ கிணற்றின் ஒரு மூலையில் இருந்த PVR பைப்பைப் பற்றிக்கொண்டு அவர்களையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'லேய் அடுத்ததடவ வரும்போது ஒரு கயிறும், லாரி டயரும் எடுத்துட்டு வரணும்' என்றபடியே என்னை நோக்கி நீந்தி வந்த கொண்ட 'நீச்சல் ஒன்னும் பெரிய விசயமில்ல மக்கா, சீக்கிரம் கத்துகலாம்' என்றபடி நம்பிக்கையூட்டினான்.

'ஆமா இது யாரு கிணறு, நம்மள ஒன்னும் சொல்லமாட்டாங்களா' என்று நான் கேட்ட போது தான் மீசயின் வரலாறை எடுத்துவிட ஆரம்பித்தார்கள் என் நண்பர்கள். அப்போதே கொஞ்சம் டரியலாகி இருந்தாலும், நான் இரண்டாம் முறையாக இங்கு வருகையிலேயே மீசயின் தரிசனம் கிடைக்கும் என்று துளி கூட நினைத்துப் பார்க்கவில்லை. தரிசனம் என்ன தரிசனம் இதோ உருமா கட்டாத கருப்பனாக எங்களைத் துரத்திக் கொண்டுள்ளான் இந்த மீச.  

மீசயிடம் சிக்குவது கூட எனக்கு பெரிய விசயமாய்த் தெரியவில்லை. எங்கே என் அம்மாவுக்கு தெரிந்துவிடுமோ என்று நினைத்தபோது என் ஓட்டத்தின் வேகம் இன்னும் அதிகமாகி இருந்தது. 

வயக்காட்டில் இருந்து வழுக்காம்பாறையினுள் இறங்குவதற்கு கிட்டத்தட்ட பத்தடி உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும். காய்ந்த இலைச்சருகுகள் மற்றும் களிமண் தரை என்பதால் தலைகீழாகக் குதித்தாலும் அடிபடாது. எங்கள் வேகத்துடன் மீசையால் ஈடு கொடுக்க முடியவில்லை. வழுக்காம்பாறையை நெருங்கி விட்டோம். ஆற்று நீர் வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றை நெருங்க நெருங்கத்தான் எனக்கு நீச்சல் தெரியாது என்ற விசயமே எங்களுக்கு உரைக்கத் தொடங்கியது. அதற்குள் எங்களுடன் வந்த பாதிபேர் ஆற்றினுள் இறங்கி நீந்தத் தொடங்கியிருந்தார்கள்.

நானும் முத்துவும் கொண்டையும் நின்றுவிட்டோம். மீசை பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருக்கும் சப்தம் ஆற்று நீரின் சலசலப்பு, குளிர்ந்த காற்று, மயான அமைதி இவை அனைத்தும் விடாது எங்களை பயமுறுத்தத் தொடங்கியிருந்தது. 

''கொண்ட இப்போ என்ன பண்ண'  வருத்ததுடன் கேட்டான் முத்து.

'பொறு ஏதாது பண்ணுவோம், இல்லைனா சுன்னத்தான்' 

'எலேய் நீ தண்ணி உள்ள குதி. நானும் முத்துவும் உன்ன எப்படியாவது அங்க கொண்டு போயிருதோம். நீ கைய கால எதையும் அசைக்காத, ஆனா தலைய மட்டும் தண்ணிக்கு வெளிலையே வச்சிக்கோ' என்று கூறிக்கொண்டே சடாரென்று என்னை நீரினுள் தள்ளிவிட்டான் கொண்ட. அவனுள் எப்படி அப்படியொரு வேகம் வந்தது, முத்துவும் அவனும் என்ன செய்தார்கள் எதுவும் தெரியவில்லை ஆனால் அடுத்த நொடி எதிர்பக்கம் இருந்த பாறையில் கிடந்தோம். என்னால் எழுந்திருக்க முடியவில்லை. கொஞ்சம் தண்ணீரைக் குடித்திருந்தேன்.

'குண்டன் பொணொம் கணம் கணக்கான் பாரு' என்றபடி கொண்டையும் என்னருகில் படுத்துவிட்டான். மீச இந்நேரம் நீருக்குள் இறங்கியிருந்தான்

'செத்தோம் எலேய் கொண்ட உங்க அய்யாட்ட சொல்லி ஆயின்மெண்ட் வாங்கிகோல' என்றபடி முத்து சிரிக்க என்னாலும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினேன். மூவருக்கும் வேர்த்துக் கொட்டியது, பலமாக மூச்சு வாங்கியது. 

மீச வன்ட்டான் எந்தி எந்தி என்றபடி ஓடத்தயாராகும் போது, திடிரென்று மீசயின் செயல் மாறியிருந்தது. கையில் இருந்த அருவாளை கீழே போட்டுவிட்டு தண்ணீருக்குள் இருந்த கூழாங்கற்களை பொறுக்கிக்கொண்டிருந்தான். கல்லடி படுவதற்குள் அவன் பார்வையில் இருந்து விலக வேண்டும் என்றெண்ணி மீண்டும் ஓடத்துவங்க, அவனோ எங்களுக்கு நேர் எதிர் திசையில் தான் பொறுக்கிய கற்களை எறிந்து கொண்டே இருவரைத் துரத்த ஆரம்பித்திருந்தான். நானும் முத்துவும் நொடிப்பொழுதும் தாமதியாமல் அவசரமாக கொண்டையின் கண்களை மூடினோம். 

மீச துரத்திக் கொண்டிருந்த திசையில் ஒரு ஆணும் பெண்ணும் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள் அம்மணமாக

15 comments:

  1. இடம் போற்றிய வர்ணனைகள் பிரமாதம் சீனு. அனுபவமோ, கற்பனையோ கதையும் ஜோர்.

    ReplyDelete
  2. சிறு வயதில் நடந்த நிகழ்ச்சியோ...?

    அம்மாவுக்கு "தண்ணிக்கு பகை தெரியாது" - சரி தான்... !

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்.. கலவரத்துலயும் ஒரு கிளுகிளுப்பு!! :)

    ReplyDelete
  4. எலெய்... சூப்பராச் சொல்லிட்டலே கதையெ! விழுப்புரத்துக்கு பக்கத்துல விக்ரவாண்டியில இருந்தப்ப வயக்காட்டுப் பக்கம் போயி நாங்க லூட்டியடிச்சதெல்லாம் நெனப்புல வந்துபோச்சு லேய்...1 கடைசிப் பாரா திருப்பம் எதிர்பாராத விசயமா இருந்தாலும் நல்லாவே... ஹி.... ஹி... ஹி...

    ReplyDelete
  5. அனுமதியின்றி கிணற்றில் குளித்ததில்லை... வேடிக்கை பார்த்தல் மட்டுமே, ஹிஹி நீச்சல் தெரியாது.... முடிவு எதிர்பாராதது.....

    ReplyDelete
  6. அனுமதியின்றி ஒரு முறை பம்ப் செட்டில் குளித்திருக்கிறேன்..... அந்த வயல் உரிமையாளர் பல புதிய வார்த்தைகளைக் கற்றுக் கொடுத்தார்! :)

    ரசித்தேன் சீனு.... காட்சி கண்முன்னே விரிந்தது!

    ReplyDelete
  7. எலேய் மக்கா, சீனு என்னம்மா எழுதிருக்காருலேய்! ஏலே சீனு நம்மூரு திருநெவேலியோ! எலேய் நம்மளும் பம்புசெட்டுல குளிச்சுருக்கம்னு சொல்லுலே! எலேய் கடசில ஹி ஹி ஹி ஹி " "என்னலே! என்ன கிகிகி நு சிரிப்புலே!? ஏ மூதி சொல்லி தொலைய்ம்லே! " "ஏ அது அது ஒரு ஆம்பளையும் பொம்பளையும் அம்மணமா ஓடினாங்ளம்லே,,,,இவனுங்க என்ன சென்ஞ்சுருப்பானுங்கலேய்?"

    மிகவும் ரசித்தோம் சீனு!

    ReplyDelete
  8. அருமையான கதை! சிறியவயதில் நண்பர்களுடன் குளத்தில் குளித்த பொழுதுகள் நியாபகபடுத்தியது! நன்றி!

    ReplyDelete
  9. நல்லா இருக்கு சீனு. தொடர்ந்து எழுதுங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ஏமாத்தல சீனு.....அருமையா முடிச்சிருந்த.

    ReplyDelete
  11. ஐயோ.... என்னத்தைச் சொல்லுறது....?

    ReplyDelete
  12. சோக்கா சொல்லிக்கின மக்கா...! கடிசீல வச்சுக்கினாம்பாரு ஒரு டுஸ்ட்டு... சூப்பருலே...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
  13. வழக்கு தமிழ் எழுத்தில் நீச்சலடிக்கிறது ரசித்து படித்தேன் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் குட் சீனு

    ReplyDelete
  14. அருமை சீனு. நீச்சல் அனுபவத்தை கற்பனையோடு கலந்தது பிரமாதம். எதிர்பாரா முடிவு அசத்தல்.

    ReplyDelete