6 Mar 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - நார்த்தாமலையும் பழனியப்பா என்னும் எளியவரும்

சித்தன்னவாசலில் இருந்து அடுத்ததாக நாங்கள் பயணப்பட்ட இடம் நார்த்தாமலை. நார்த்தாமலை. கடைசி வரைக்கும் இந்த பெயரை உச்சரிப்பதில் எனக்கும் ரூபக்கிற்கும் அப்படியொரு குழப்பம், ரூபக்காவது பரவாயில்லை நார்த் மலை என்றான். நானோ நாச்சியார் மலை, நாச்சியார் மலை என்றே கடைசிவரை சொல்லிக் கொண்டிருந்தேன். 

வழக்கம் போல் விசாரித்து விசாரித்து நார்த்தாமலையை அடைந்துவிட்ட நாங்கள் அங்கிருந்து மலையடிவாரதிற்கு செல்வது எப்படி என்று வழிதெரியாமல் குழம்பிய வேளையில் ஒரு இளைஞனிடம் 'தம்பி நார்த்தாமலைக்கு எப்படி போகணும்' என்று கேட்க, அவனோ 'இதான் நார்த்தாமலை, இங்க இருந்து வேற எந்த நார்த்தாமலைக்கு போ போறீங்க' என்றான் எகத்தாளமாக. அவனுக்கு புரியும்படி அவனிடம் ' நார்த்தாமலைல இருக்குற குடவரைக் கோவிலுக்கு எப்படி போகணும்' என்று கேட்க அவனோ 'நார்த்தா மலைல ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டும் தான் இருக்கு, அதுவும் இங்கதான் இருக்கு' என்றபடி தனது பின் இருந்த கோவிலை காட்டிவிட்டு ஏளனப் புன்னகை கொஞ்சத்தை வாரியிறைத்துக் கிளம்பிவிட்டான். 




ஏக கடுப்புடன் எதிர்பட்ட ஒரு லோடு ஆட்டோ டிரைவரிடம் வழிகேட்க 'சொசிட்டி ஆப்பீஸ் பக்கம் லெப்ட் எடு சார்', நார்த்தாமல தான் என்றார். அவர் கூறிய சொசிட்டி (சொசைட்டி) ஆபீஸ் பக்கம் திரும்பினால் பொட்டால் காடுதான் தெரிந்ததே ஒழிய நார்த்தாமலையைக் காணோம். மற்றொரு பெரியவரிடம் வழிகேட்க அவரோ இப்போ ஒரு லோடு ஆட்டோ வந்ததே என்று எங்களுக்கு தவறான வழி கூறிய அந்த லோடு ஆட்டோ எதிர்பட்ட திசையிலே போகச் சொன்னார். உச்சி வெயில் மண்டையைப் பொளந்து கொண்டிருக்க ஒருவழியாய் நார்த்தா மலை அடிவாரத்தைக் கண்டுபிடித்தால் வாத்தியாரும், ஆவியும் சேர்ந்துகொண்டு 'வெயில் மண்டையப் பொளக்கு, நாங்க வரல' என்றபடி காரிலிருந்து இறங்காமல் அடம்பிடித்தார்கள்.  

நாங்கள் பார்த்த எந்த மலையுமே பசுமையான மரங்கள் அடர்ந்த குளிர்ச்சியூட்டும் மலைகள் இல்லை. இன்னும் சொல்லபோனால் இவைகளனைத்தும் மலைகளே அல்ல, அண்டப் பெருவெடிப்பின் போது ஏற்பட்ட மாறுதல்களில் 'நீங்கள் அனைவரும் குன்றுகளாக இருக்கக் கடவது' என்ற உத்தரவின்படி, எசமானனின் ஆணைக்கேற்ப குன்றுகளாக வடிவம் பெற்றவை. உச்சிவெயிலில் குன்றின் மீது படர்ந்திருந்த சூரிய வெளிச்சத்தைப் பார்த்த பொழுது ஏதோ எண்ணைச் சட்டிக்குள் குதிக்கப் போவது போலவே நாங்களும் உணர்ந்தோம். இருந்தும் இவ்வளவு தூரம் வந்துவிட்டு தொலைவில் தெரியும் மலையை மட்டுமே பார்த்துவிட்டு திரும்புவதில் எனக்கு உடன்பாடில்லை. 


பிரம்மாண்டத்தின் மத்தியில் இவ்வளவுதான் நாம்...! 
ரூபக்கிடம் 'போலாமா?' என்று கேட்க , 'ம்ம் போகலாம்' என்று மெல்ல இழுத்தான். ஸ்கூல்பையனோ 'போயே ஆகணும்' என்றார் உறுதியாக. 'உங்க உறுதி எனக்கு புடிச்சிருக்கு' சார் என்று மானசீகமாக கூறிக்கொண்டே நாங்கள் மூவரும் அங்கிருந்த கருவேலங்ககாட்டு வழியாக மலையடிவாரம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஆள் அரவமற்ற கருவேலங்ககாடு, தூரத்தில் தொண்ணூறு சதம் வற்றிப் போயிருக்கும் ஒரு குளம். அந்த குளத்தின் வழியாக நடந்தால் மலையின் மீது ஏறி கோவிலுக்கு சென்று விடலாம். ஒன்றிரண்டு ஆட்டு குட்டிகள் மேய்ந்து கொண்டிருந்தன.       

'குடுமியான்மலைல ஒரு கைடு கிடைச்சா மாதிரி இங்கையும் ஒருத்தர் கிடைச்சா நல்லா இருக்கும்லா சார்' என்று ஸ்கூல்பையனிடம் கூறிகொண்டிருந்த போதே மரங்கள் அடர்ந்த ஒரு மேட்டில் இருந்து இறங்கி வந்தார் ஒரு மனிதர். அவரை மனிதர் என்று கூறுவதை விட விளிம்பு நிலை மனிதர் என்பது பொருத்தமாய் இருக்கும். 'எப்படி செல்ல வேண்டும், என்னென்ன இருக்கிறது' என்று மேற்படி தகவல்கள் கேட்க முற்பட அவரோ எங்களை சோலார் காலத்திலிருந்து சோழர் காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டார். 


வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசிய அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடிரென்று கிராமத்து தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மாறி 'சார் இன்சைட் கேவ் டெம்பில் சார், சோழா பில்ட் சார், லார்ட் சிவா டெம்பில் சார்,' என்று ஏதேதோ பேசத் தொடங்கினார். அவரை எப்படி மீண்டும் தமிழுக்கு இழுப்பதென்று எங்கள் மூவருக்குமே தெரியவில்லை. இத்தனைக்கும் நாங்கள் மூவரும் படு சுத்தத்தமிழில் தான் பேசிக்கொண்டிருந்தோம். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரையும் அழைத்துக்கொள் என உத்தரவிட மெல்ல அவரிடம் 'அண்ணே நீங்களும் கூட வந்தா நல்லா இருக்கும்' என்றோம். அவரும் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் எங்களுடன் இணைந்து கொண்டார். மேலும் வற்றிப்போயிருந்த அந்தக் குளத்தினுள் இறங்கிய போதே தனது களப்பணியை ஆரம்பித்திருந்தார் அந்த மனிதர். இனி அவர் பழனியப்பா என்ற பழனி.  



இந்த குளம் பேரு அருமைகுளம் சார், சோழர் காலத்துல விவாசயத்துக்கு கட்டின குளம். வர்சம் பூரா தண்ணி இருக்கும், இப்போ பாருங்க எப்படி வத்தி போயிருக்கு. எப்போதும் இங்க மனுசங்க ஆடு மாடுன்னு குளமே ரெம்பிப் போயி இருக்கும் சார். மனுஷனுக்கு ஆச அதிகமாக அதிகமாக அவனுக்கு தெரியாமையே பலதையும் இலக்கோம் சார் என்றபடி தத்துவமும் பேசத் தொடங்கினார். அதோ தெரியுது பாருங்க மடை என்று தூரத்தில் தெரிந்த குளத்து மடையை காண்பித்து இது சோழர் காலத்துல கட்டினது சார். இன்னி வரைக்கும் கோளாறாகல, ஆனா நம்ம அராசங்கம் போட்டது வருசத்துக்கு ஒரு தடவ கோளாறாகுது என்று அரசியலும் பேசினார்.

பழனிக்கு வயது ஐம்பதிற்கும் மேல் இருக்கும். விறுவிறுவென மலை மீது ஏறத் தொடங்கியவரிடம் ஏதோ பேச்சு கொடுக்க 'சார் கொஞ்சம் மூச்சு வாங்குது, புள்ளையார் கோவில் பக்கம் போய் பேசுவோம் சார்' கூறிவிட்டு மீண்டும் மூச்சு வாங்கியபடியே ஏறத் தொடங்கினார். ஒரு நிமிடம் 'என்ன தைரியத்தில் இவருடன் மலையேறுகிறோம்' என்ற உள்ளுணர்வு வேறு எச்சரித்தது. அந்த இடத்தில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இருந்தும் எங்களை அழைத்துச் சென்றது அந்த மனிதர் மீது நாங்கள் வைத்த நம்பிக்கை தான்.    



மலையின் பாதி தூரத்தில் இடிந்த நிலையில் பிள்ளையார் கோவில் இருக்கிறது. அந்த கோவிலின் பின்புறம் இருக்கும் தடாகத்தைக் காட்டியவர் 'இது உள்ள ஒரு சிவ லிங்கம் இருக்கு சார், லிங்கம் எப்போதும் தண்ணி உள்ளயே முங்கி இருந்தாலும் அந்த லிங்கதுல இருக்குற வெள்ளைபட்டை மட்டும் அழியறதே இல்ல, இந்த தண்ணிய பாருங்க எவ்ளோ பாசி புடிச்சிப் போய் இருக்குன்னு, ஆனா அந்த லிங்கம் மட்டும் பாசி புடிக்கிறதே இல்ல.'

'நீங்க அந்த லிங்கத்த பார்த்து இருக்கீங்களா'

'முன்னாடி எல்லாம் அந்த லிங்கத்துக்கு பூசையே நடக்கும் சார், இங்க இருக்க தண்ணிய பம்புசெட் வச்சி வெளியேத்திட்டு பூச நடக்கும், ஆனா இப்போ அரசாங்கம் விடுறது இல்ல, அதான் தண்ணி அப்டியே இருக்கு' என்றவர் அந்த குளத்தின் அருகில் இருக்கும் கல்வெட்டுக்களை காண்பித்தார், அதில் என்ன எழுதியிருக்கிறது என்பது எங்களுக்கும் அவருக்கும் தெரியவில்லை. 

அந்த கோவில் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் சற்று தொலைவில் இருக்கும் சிவன் கோவில் மற்றும் குடவரைக் கோவில் தெரிகிறது. வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தாலும், சுற்றுப்பகுதி மொத்தமும் பொட்டலாக இருந்தபோதிலும், அந்த மலை மட்டும் குளிர்ச்சியாகவே இருந்தது. 

மிகபெரிய என கூற முடியாவிட்டாலும், ஓரளவு பரந்து விரிந்த இடத்தில் அமைந்துள்ளது இடைக்காலச் சோழர்களில் முதன்மையானவனான விஜயாலயச் சோழன் கட்டிய அந்த சிவன் கோவில். இக்கோவிலே சோழர்கள் கட்டிய முதல் சிவன் கோவில் என்றும் கூறினார். கோவிலின் விமானமானது கலை நுட்பத்துடன் கூடிய சிற்பங்களால் அமைந்துள்ளது. சிவன் உமையவளுக்கு அன்னம் ஊட்டி விடுவது போலவும், நடனமங்கை ஒருவள் அபிநயித்துக் கொண்டிருப்பது போலவும், சிவன் நந்தியுடன் இருப்பது போலவும் பல விதமான சிற்பங்கள் அமைந்துள்ளன.

இந்த கோவிலின் மற்றும் மூலவரின் பெயர் சரியாக தெரியவில்லை. விஜயாலய சோழன் கட்டியதால் இந்த இடத்திற்கு விஜயாலய சோழீஸ்வரம் என்றொரு பெயர் உண்டு என குறிப்பிட்டார். சதுர வடிவிலான வெளிப்பிரகாரத்தினுள் வட்ட வடிவமாக உட்பிரகாரம் அமைந்துள்ளது, இதனுள்ளேயே மூலவர் அமைந்துள்ளார். மேலும் வெளி மற்றும் உட்பிரகாரம் இவற்றிற்கு இடையே இருக்கும் இடைவெளி வெறும் ஒரு அடியே. இது சோழர்களின் கட்டிடக் கலைக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு என்றும் குறிப்பிட்டதோடு மட்டுமல்லாமல், உள்ளே பிராகாரம் எப்படி அமைந்திருக்கும் என்பதை படம் வரைந்து பாகமும் குறிக்கத் தொடங்கிவிட்டார். 



இங்கே சோழர்கள் தவிர பாண்டியர்களும் நாயக்கர்களும் கூட சில கோவில்களைக் கட்டியுள்ளனர், சின்னசின்னதாக ஐந்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன, மூலவரைத் தவிர வேறு எங்கும் சிலைகள் இல்லை. கோவிலின் அதிகாரி அங்கு இல்லை என்பதால் மூலவரின் கோவில் அடைக்கப்பட்டிருந்தது. கதவிடுக்கின் வெளியே கிடைத்த குறைந்தபட்ச சூரிய வெளிச்சத்துடன் பார்த்தோம், அசந்துவிட்டோம் இங்கும் கோவில் முழுக்க தாவரக் கலவையால் ஆன ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. என்ன இங்கும் பெரும்பாலானவை சிதைந்து போய்த்தான் உள்ளது. தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் துரையின் கீழ் உள்ளது.        



பழனிக்கு கோவில், வரலாறு மட்டுமல்லாமல் வேறுபல விசயங்களும் தெரிந்துள்ளது. கற்களில் ஆண் கல், பெண் கல் என்று இருவகை கற்கள் உண்டு என்றும், எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறிவிட்டு, உதாரணதிற்கு சில சிலைகளையும் காண்பித்தார். 'இந்த சிலைய பாருங்க சார் இது எவ்ளோ உறுதியா அப்டியே நேத்து செஞ்சு வச்ச மாதிரி இருக்கு, இது ஆண் கல்' என்று கூறிவிட்டு மற்றொரு சிலையைக் காண்பித்தார் 'இத பாருங்க காற்று பட்டு பட்டு எப்படி தேஞ்சி போய் இருக்குன்னு' என்றபடி அவர் காட்டிய கல் மிக மென்மையானது என்பதால் காலம் அதனை கொஞ்சம் கொஞ்சமாய் சிதைத்துக் கொண்டுள்ளது.


நேர்த்தியாக அடுக்கப்பட்ட கற்கள் மீது செதுக்கப்பட்ட சிங்கம் மற்றும் யானையின் சிற்பங்கள் 
இந்த கோவில்கள் தவிர்த்து இரண்டு பெரிய குடவரைக் கோவில்களும் உள்ளன, இவை சமணர்களால் கட்டப்பட்டு பின் சைவ வைணவ தளங்களாக மாறியுள்ளன. இங்கிருக்கும் அத்தனை கோவில்களிலும் சிற்ப வேலைபாடுகள் பிரமாதமாக உள்ளன. குடைவரையின் உள்ளே சிவ லிங்கமும் வெளியே விஷ்ணுவின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

சிவலிங்கம் இருக்கும் குடவரைக் கோவில் ஒன்றின் வெளிப்புறம் அமைந்திருக்கும் இரு சிலைகளை காண்பித்து 'இத பார்த்தா உங்களுக்கு என்ன தோணுது சார்' என்று வினவினார், ஒன்றும் விளங்கமால் அவரையே பார்த்து சிரிக்க 'இது மனித உணர்வுகளை பிரதிபலிக்குது சார், ஒரு சிலைய பாருங்க ஒரு விரல காண்பிக்குது, அதாவது இறைவன் ஒருவனே என்று கூறுது, இன்னொரு சிலைய பாருங்க, உள்ளே இருக்கும் லிங்கத்த காமிக்குது அதாவது இறைவன் அவனே, எவ்வளவு பெரிய தத்துவம் சார்' என்றார் பழனி. ஒருவேளை பழனி இல்லாமல் போயிருந்தால் எவ்வளவு அருமையான மற்றும் சுவாரசியமான தகவல்களை இழந்திருப்போம் என்பதை ஒருநிமிடம் நினைத்துப்  பார்த்துக்கொண்டோம். வழக்கமாய் இது போன்ற இடங்களில் நான் மட்டுமே அதிக ஈடுபாட்டுடன் இருப்பேன், ஆச்சரியம் ரூபக்கும் ஸ்கூல்பையனும் கூட என்னைவிட அதிக ஈடுபாட்டுடன் பழனியின் பேச்சில் மூழ்கிப் போயிருந்தனர்.          


         
இருபது வருடத்திற்கு முன்னர் சமண மதத்தைத் சேர்ந்த சில நிர்வாண சாமியார்கள் இங்கு வந்திருந்ததாகவும், தாங்கள் வழிபடுவதற்காக சில இடங்களில் சிறிய அளவில் மலையைக் குடைந்ததாகவும், தான் அவர்களைப் பார்த்ததாகவும் கூறிவிட்டு அவர்கள் குடைந்திருந்த குடகுகளையும் காண்பித்தார்.   

அனைத்து இடங்களையும் பார்த்துவிட்டு மெல்ல மலையில் இருந்து கீழே இறங்கும் பொழுது 'இங்க  ஆளுங்க வருவாங்களா?' என்று கேட்டதற்கு, நம்மாளுங்களுக்கு இதோட அருமை தெரியல சார், ஆனா வெளிநாட்டுல இருந்து அதிகமா ஆளுங்க வருவாங்க. தொல்லியல் துறை மாணவர்கள் வருவாங்க, அப்பப்போ உங்கள மாதிரி ஆளுங்க வருவாங்க என்றார் பழனி.

பழனியிடம் மெல்ல நான் 'அண்ணே இவங்க ரெண்டு பேரும் எழுத்தாளருங்க, அதான் இங்க சுத்தி பார்க்க வந்த்ருக்காங்க' என்று ரூபக்கையும் ஸ்பையையும் காட்டி நான் கூறியதும், பழனிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பெருமிதம் பொங்க  கட்டியணைக்காத குறைதான். 'அப்டியா சார், ரொம்ப சந்தோசம் சார், நமக்கு புஸ்தவம்லா படிக்க தெரியாது, நார்த்தா மலைய பத்தி நிறைய பேருக்கு தெரியனும், நிறைய எழுதுங்க சார், கொஞ்சநாள் முன்ன கூட தினமணில இருந்து வந்து படம் புடிச்சிட்டு போனாங்க' என்று சந்தோசமாய் சிரித்துக் கொண்டே கூறினார். அதன்பின் அவர் உடல்மொழியில் வெகுவான மாற்றம் தெரிந்தது, பெருமை தெரிந்தது, பெருமிதம் தெரிந்தது. ஒரு பதிவாளனாய் நமக்குக் கிடைக்ககூடிய உச்சபட்ச மகிழ்ச்சி பழனி போன்றவர்கள் நம்மிடம் காட்டும் அன்யோன்யம்தான் என்று நினைக்கிறன்.     

மீண்டும் பழனியை நாங்கள் சந்தித்த இடத்திற்கே வந்து சேர்ந்தபோது ஒரு மரநிழலில் எங்களை நிறுத்திவிட்டு அவசரமாக தண்ணீர் எடுக்க ஓடினார். இத்தனைக்கும் பழனியின் அன்பில் நாங்கள் தாகமாய்க் கூட உணரவில்லை. பேசிமுடித்து கிளம்பும் பொழுது பழனியிடம் ஸ்பை நூறு ரூபாய் கொடுக்க, 'ஐயோ தயவு செஞ்சு பணம்லா வேணாம் சார், பயங்கர வெயிலா இருக்கு நீங்க ஏதாது கலர் வாங்கி குடிங்க சார்' என்றபடி எங்கள் கைகளிலேயே திணிக்க எத்தனித்தார் இருந்தும் எங்களின் தொடர் வற்புறுத்தலுக்குப் பின் வாங்கிக் கொண்ட பழனியப்பாவையோ அல்லது பழனியப்பாவைப் போன்ற வேறு ஒருவரையோ காலசக்கரத்தின் சுழற்சியில் வேறு ஏதாவது ஒரு புள்ளியில் சந்திப்போமா என்பது சந்தேகமே.



நார்த்தாமலை பழனியப்பாவை எப்படி எங்களால் மறக்க முடியாதோ அதே போன்ற மற்றொரு பழனியப்பா புதுகோட்டையில் எங்களுக்காக காத்திருக்கும் என்பதை நாங்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. புதுக்கோட்டை பழனியப்பா பற்றிய ரூபக்கின்  பதிவைப் படிக்க இங்கே சுட்டுங்கள்... 

17 comments:

  1. இவைகளனைத்தும் மலைகளே அல்ல, அண்டப் பெருவெடிப்பின் போது ஏற்பட்ட மாறுதல்களில் 'நீங்கள் அனைவரும் குன்றுகளாக இருக்கக் கடவது' என்ற உத்தரவின்படி, எசமானனின் ஆணைக்கேற்ப குன்றுகளாக வடிவம் பெற்றவை

    &&&&&&தம்பி சுத்தமான எலக்கியவாதியா ஆயிருசசு போலயே...!

    அவரோ எங்களை சோலார் காலத்திலிருந்து சோழர் காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டார்.

    &&&&&&சரளமாய் வந்து விழும் இதுபோன்ற வார்த்தைகள் ரசிக்க வைக்கின்றன!

    ழனியிடம் மெல்ல நான் 'அண்ணே இவங்க ரெண்டு பேரும் எழுத்தாளருங்க, அதான் இங்க சுத்தி பார்க்க வந்த்ருக்காங்க' என்று ரூபக்கையும் ஸ்பையையும் காட்டி நான் கூறியதும், பழனிக்கு மகிழ்ச்சி தாளவில்லை

    &&&&&யப்பா டேய்... ஒரு புகழ்பெற்ற(!) எழுத்தாளன் மத்தவங்களைக் காட்டி இப்படி அறிமுகப்படுத்தறது உலகமகா நடிப்புடா ஸாமீஈஈஈஈ!

    ReplyDelete
  2. செம writeup.... இதை நான் எழுதியிருந்தா இவ்வளவு சுவாரஸ்யமா இருந்திருந்திருக்காது... பழனியப்பா மட்டும் இல்லேன்னா அன்று கோவில்களைப் பார்த்துட்டு போட்டோ எடுத்திட்டு மட்டும் வந்திருப்போம்... கோவில் பற்றிய, சமணர்கள் பற்றிய எதுவுமே தெரிந்திருக்காது....

    ReplyDelete
  3. ஆஹா ... அருமையான பதிவு. சுவாரசிய பயணம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. ஹைய்யோ!!!! அருமையான பதிவும் படங்களும் சீனு.!

    பழனியப்பா போன்ற நல்ல கைடு இருப்பதே அந்த இறைவனின் கருணை!

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  5. பழனியப்பா சந்தோசப்பட்டதைப் போல் எனது மனதும்... வாத்தியாரும், ஆவியும் கொடுத்து வைக்கலை...

    ReplyDelete
  6. உணர்ச்சி பொங்க வீர வேலுடன் அங்கு நீங்க எடுத்த புகைப்படம் மில்லிங்

    ReplyDelete
  7. மிகச் சிறந்த பதிவு தோழரே. பழநியப்பா போன்ற சாமான்யர்களின் குணங்களிலும் காடு மலைகளுக்குள் மறைந்து கிடக்கும் வரலாற்று பொக்கிசங்களிலும் தமிழகத்தின் ஆன்மா நித்தியமாய் கலந்துள்ளது. உங்களின் எழுத்து நடையும் விவரிக்கும் பாங்கும் மிக மிக நன்றாக உள்ளது. :)

    ReplyDelete
  8. பழனி அந்த நேரத்துக்கு உங்கள் முன் தோன்றியதே அதிருஷ்டம்தான். சுவாரஸ்யமான எழுத்துகள். பால கணேஷ் பாராட்டியிருக்கும் வரிகள் எனக்கும் கவர்ந்த வரிகள். இத்தனை இடங்களையும் பார்க்கும் உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
  9. அருமையான வர்ணனை. வார்த்தைகள் சரளமாக வந்துள்ளது. பழனியப்பா உங்கள் கண்களில் தென்பட்டது அதிர்ஷ்டம் தான். நார்த்தாமலை கேள்விப்பட்டிருக்கிறேன். போனதில்லை... குடும்பத்துடன் செல்ல ஏற்ற இடமா? பாதுகாப்பானதா?

    ReplyDelete
  10. சுவாரஸ்யமாக மலையையும் கோவிலையும் சுற்றிக்காட்டிவிட்டீர்கள்! பழனி அவர்களின் அறிவும் அன்பும் வியக்க வைக்கின்றது. சிறப்பான புகைப்படங்கள். தன்னடக்கத்துடன் சரவணனையும், ரூபக்கையும் மட்டும் எழுத்தாளர்கள் என்று நீங்கள் அறிமுகப் படுத்தினாலும் நீங்க பெரிய எழுத்தாளர் என்பதை நாங்க மறப்பதாய் இல்லை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. முதல் படம் செம்மையா இருக்கு ....! Actual ஆ இப்ப இருக்கிற நம்மை காட்டிலும் சோழர் காலத்தினர் தான் அதிகமா சோலார பயன்படுத்தியிருப்பாங்கன்னு நினைக்கேன் :)

    பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று தொடர்புடைய புதினங்களை வாசித்து முடித்தபின் இது போன்ற இடங்களுக்கு சென்றால் இன்னும்கூட உளப்பூர்வமாக அனுபவிக்கமுடியும் என்று நினைக்கின்றேன் .

    As usual awesome writing...! அப்டியே எங்க ஊருக்கும் ஓரெட்டு வந்துட்டு போங்கோ எழுத்தாளரே ... அப்டியாவது எங்க ஊரு வரலாற்றையும் தெரிஞ்சுக்குறேன் ...




    ReplyDelete
  12. சவுத்துல இருந்தாலும் அதுக்கு நார்த்தா மலைன்னு பேர் வச்சிருக்காங்களே ஏன்? மீண்டும் ஒரு முறை பயணித்த அனுபவம் கிட்டியிருக்கும் மற்ற இருவருக்கும்.. மேலே ஏறாமலே எல்லா இடங்களையும் இப்ப நாங்க தெரிஞ்சுகிட்டோமே..!!

    ReplyDelete
  13. சோலார் காலத்திலிருந்து சோழர் காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டார். ஆஹா சூப்பர் எழுத்து!

    அருமையான தொகுப்பு! 'நடை' யா இது 'நடை' யா அருமையான 'நடை' டா என்று பாராட்ட வைக்கிறது!

    நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவும் அந்த இடங்களுக்குச் சென்றே ஆகவேண்டும் என்று தோன்றுகின்றது!

    ReplyDelete
  14. அருமையான இடம்.... இது போன்ற பல இடங்களை இழந்து வருகிறோம். அவற்றின் பெருமை சொல்லும் பழனியப்பா போன்ற ஆட்களும் குறைந்து வருகிறார்கள் என்பது தான் சோகம்......

    ReplyDelete
  15. மிக அருமையான பதிவு குரு


    குடவரை கோவில்கள் பெரும்பாலும் மக்களின் விருப்பத்தை பெறுவது இல்லை

    இந்த மாதிரி புராதான சின்னங்களை விட்டுவிட்டு தெருவுக்கு தெரு புது கோவில்கள் கட்டி கொண்டிருக்கிறோம்


    எங்களை அந்த மலைக்கே அழைத்து சென்று விட்டீர்கள்


    நன்றி

    ReplyDelete
  16. மிக அருமையான பதிவு குரு


    குடவரை கோவில்கள் பெரும்பாலும் மக்களின் விருப்பத்தை பெறுவது இல்லை

    இந்த மாதிரி புராதான சின்னங்களை விட்டுவிட்டு தெருவுக்கு தெரு புது கோவில்கள் கட்டி கொண்டிருக்கிறோம்


    எங்களை அந்த மலைக்கே அழைத்து சென்று விட்டீர்கள்


    நன்றி

    ReplyDelete
  17. நாங்களும் இரண்டு மாதங்க்களுக்கு முன்பு போய் வந்தோம்.
    சித்தன்னவாசல் போய்விட்டு அங்கு உள்ளவர் இந்த மலையைப் ப்ற்றி சொன்னதால் போனோம்.
    முன்பே பயணதிட்டம் வகுத்து இருந்தால் அந்த ஊரைப்பற்றி தெரிந்து கொண்டு போய் இருப்போம்.
    கார்த்திக் சரவணன் உங்க்கள் பதிவு லிங் கொடுத்தார்.
    மிக அருமையாக இருக்கிறது பதிவு.
    தொல்லியல் துறை சேர்ந்தவர் நீங்கள் மதியம் போன போதும் இல்லையா?
    கம்பி த்டுப்பு வழிதான் பார்த்து இருக்கிறீர்கள். காலை முதல் மாலை வரை இருப்பார் என்று சொன்னார்கள்.

    பழனியப்பாவை உங்களுக்கு வழிகாட்டியாக அனுப்பிய இறைவனுக்கு நன்றி.

    ReplyDelete