குடுமியான் மலையில் இருந்து சித்தன்னவாசலை நோக்கிக் கிளம்பும்போது நேரம் நடுப்பகலை நெருங்கிக் கொண்டிருந்தது. வறண்டுபோன பூமியின் வறட்சியை இன்னும் செழுமையாய்க் காட்ட ஆதவன் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். குடுமியான் மலையில் இருந்து சித்தன்னவாசலை நோக்கி செல்லும் சாலையில், அரை கிமீ தூரம் சென்றதுமே கண்ணில் தென்படும் அந்த பரந்து விரிந்த ஏரி, பாவம் கவலைப்படக்கூட ஆள் இல்லாமல் வறண்டு போய்க் கிடக்கிறது. ஒரு கிராமம் அளவுக்குப் பெரிதாய் பரந்து வறண்டு கிடக்கும் இந்த ஏரி ஒருவேளை சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் விழுப்புரம் அருகே இருந்திருக்குமானால் இந்நேரம் அங்கே மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா நகர் உதயாமிகிருக்கும். இப்போ ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை, இதே நிலை இன்னும் பத்தாண்டுகள் நீடிக்குமானால் புதுகோட்டை நிச்சயமாய் சென்னையின் மிக மிக அருகில் வந்துவிடும் என்பது திண்ணம் .
புதுகோட்டை சென்னையின் அருகில் வருவதல்ல என்னுடைய கவலை. சந்திரனில் நீரின் இருப்பை சந்திராயன் சீக்கிரமாக உறுதிப்படுத்த வேண்டுமே என்பது தான் என்னுடைய மிகபெரிய கவலை. அப்போதானே இங்கிருக்கும் எஞ்சிய விவசாயிகளையும் சந்திரனுக்கு பேக்கப் பண்ணிவிட்டுஅங்கிருந்து இங்கு நெல் இறக்குமதி செய்யமுடியும். ஒருவேளை இதே நிலை இன்னும் இருபது ஆண்டுகள் நீடித்தால் சந்திரனும் சென்னைக்கு மிக மிக அருகில் வந்துவிடக்கூடாதே என்பதும் என்னுடைய மற்றொரு ஆகச்சிறந்த கவலை.
குடுமியான்மலையில் இருந்து குறைந்தபட்சம் பத்து கிமீ தொலைவில் இருக்கும் குன்று சித்தன்னவாசல், செல்லும் பாதையில் ஒரு பேருந்தைக் கூட பார்க்க முடியவில்லை, இன்னும் சொல்லபோனால் கிராமங்களையும் மனிதர்களையுமே மிக அரிதாகவே காணமுடிந்தது. சில இடங்களில் பாதை இரண்டு மூன்று கிளைகளாக பிரியும் சமயங்களில் மட்டும் வழிகேட்பதற்கு யாரேனும் தேவைபட்டார்கள். ஸ்கூல்பையன் மொபைலில் இருக்கும் GPS வசதி எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை துல்லியமாகக் கூறினாலும் ஸ்கூல்பையன் பேச்சை எல்லாம் கேட்க நாங்கள் தயாராயில்லை :-)
சித்தன்னவாசல் நுழைவாயிலில் இருந்து குடவரைக் கோவிலை அடைய இரண்டு கிமீ தூரம் செல்லவேண்டும் என்பதால் காரில் அல்லது பைக்கில் வருவது உத்தமம். நடராஜா ஓகே என்றால் ஓகே. நுழைவாயிலில் தலைக்கு பத்துரூபாய் மொய் வைத்தால் உள்ளே செல்ல அனுமதி. சுற்றுல்லா வந்த பள்ளிச் சிறுவர் சிறுமிகளை அதிகமாக காண முடிந்தது, என்னவொன்று இவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய யுவன் யுவதிகள் இச்சிறார்கள் கண்முன்னாலேயே சில்மிசங்களில் ஈடுபடுவதும், கட்டியனைப்பதும், உம்மா கொடுப்பதும், மறைவான புதர்களினுள் அழைத்துச் செல்வதும் அதன் பின் நடக்கும் நிகழ்வுகளை நமது யூகத்தில் விடுவதும் என என்ன மாதிரியான வழிகாட்டல்களை தருகிறார்கள் என்பதை இச்சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் என்போன்ற சிறுவர்களின் நலன் கருதியாவது இது போன்றவர்கள் கொஞ்சம் நாகாரீகத்துடன் மொத்த சில்மிசத்தையும் புதர்களுக்குள்ளாகவே வைத்துகொண்டால் நலம்.
இதுபோன்ற காட்சிகளைக் கடந்ததும் வருவது ஒரு சிறிய குன்றின் மீது அமைந்திருக்கும் சித்தன்னவாசல் குடவரைக் கோவில். குன்றின் கீழ்புறம் இருக்கும் பாட்டி கடையில் ஒரு முறுக்கு பாக்கெட் வாங்கியது தான் தாமதம் ஆவியின் நண்பர்கள் ஆவியை சூழ்ந்து விட்டார்கள். வெகுநாட்களுக்குப் பின் அவர்களை சந்தித்த மகிழ்ச்சியில் அவர்களுடன் இணைந்து நடனம் ஆடத்தொடங்கிவிட்டார்.அவர் நண்பர்களிடமிருந்து அவரை இழுத்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
அன்னவாயில்ராயன் என்னும் சோழன் ஆண்ட பகுதி அன்னவாயில். இதன் அருகில் இருக்கும் குன்றில் சித்தர்கள் வாழ்ந்து வந்ததால் அது சித்தன்னவாயில் என்று அழைக்கபட்டிருக்கிறது. பின்னர் வாயில் வாசலாக மருவியதால் சித்தன்னவாயில் சித்தன்னவாசலாக மருவிவிட்டது.
குன்றின் மீது இருக்கும் ஒரு லாவகமான பகுதியில் வாக்கான இடத்தை தேர்ந்தெடுத்து உள்ளே ஒரு இருபதடி அளவிற்கு குடைந்து கட்டியுள்ளார்கள் இந்த குடவரைக் கோவிலை. தோராயமாக கிபி 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த குடவரை கோவிலை சமண துறவிகள் கட்டியுள்ளதாகவும் பௌத்தமும் சமணமும் தலையெடுத்த காலகட்டத்தில் பௌத்தமும் காஞ்சிபுரம் பக்கம் ஒதுங்கிகொள்ள சமணம் புதுகோட்டையை நோக்கி நகர்ந்துள்ளது. குடவரைக் கோவிலின் உட்புறம் சமண துறவிகளின் சிலைகளும் 23ம் தீர்த்தங்கரின் சிலையும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது.
குன்றைக் குடைந்து, குடைந்த குகையில் ஏற்பட்ட வெடிப்புகளை மெனக்கெட்டு பாலிஷ் செய்து, அதன்மீது ஈர சுண்ணாம்பைப் பூசி, பூசிய சுண்ணாம்பின் ஈரம் காயும்முன் ஏற்கனவே செய்துவைத்த தாவர வண்ணக் கலவையை நாரில் முக்கி எடுத்து, உள்ளத்தில் உரு கொண்ட ஓவியத்தை அப்படியே தத்ரூபமாக வடித்துள்ளான் கலைஞன். அப்படி தத்ரூபமாக வடித்தெடுப்பது ஓவியனுக்கு எளிது என்றாலும் இங்கே விடப்பட்டிருக்கும் வித்தியாசமான சவால்கள் தான் சித்தன்னவாசலை காலத்தாலும் அழிக்க முடியாததாகியிருக்கிறது. இருள் சூழ்ந்த குகை, கிடைக்கும் குறைந்தபட்ச விளக்கொளியில் தலையை தூக்கி விட்டத்தை நோக்கி வரைய வேண்டும், ஒரு சிறு பிழை நேரினும் திருத்த முடியா ஓவியத்தை அப்படி எதுவும் நேராமல் திருந்த வரைய வேண்டும். வரைந்தும் இருக்கிறார்கள். ஏதோ கொஞ்சநஞ்சம் பகுதிகளில் அல்ல. அந்த குகை முழுவதும் வரைந்திருக்கிறார்கள்.
என்ன...! கால ஓட்டம் இந்த ஓவியங்களுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்காததால் சிந்திக்க முனையாத மனிதன் சிறிதும் லஜ்ஜையின்றி அவற்றை எல்லாம் சிதைத்து விட்டான். 80சதம் ஓவியங்கள் அழிக்கப்பட்டதும் அரசாங்கம் விழித்துக் கொண்டது. நினைத்துப் பாருங்கள், அவ்வளவு பெரிய குகையில் சிறு இடைவெளிகூட விடாமல் திரும்பிய பக்கமெல்லாம் ஓவியமாக அதுவும் சங்ககால வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியமாக இருந்திருந்தால் அது எவ்வளவு பெரிய கலைப் பொக்கிஷமாக இருந்திருக்கும்.
தற்போது 80சதம் ஓவியங்கள் அழிந்த நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஓவியங்களை அரசு வேலிபோட்டும், படம்பிடிக்க விடாமலும் பாதுகாத்துக் கொண்டுள்ளது. நுழைவுக் கட்டணம் ஐந்து ரூபாய்.
ஒரே ஒரு அரசு அலுவலரை பாதுகாப்பு அதிகாரியாக நியமித்து உள்ளார்கள். அந்த அதிகாரியும் இத்தனை காலம் அங்கேயே இருப்பதால் அங்கிருக்கும் ஓவியங்களை கூர்ந்து நோக்கி அதில் இருக்கும் ஓவியங்களை இது சமணத் துறவி, இது தாமரைக் குளம், இது யானை இத்தியாதி இத்யாதி என்று வருபவர்களுக்கு தனக்குத் தெரிந்ததை கூறுகிறார். மேலும் அக்குகையில் உள்ளிருந்து ஓம் என்று ஒலி எழுப்புகிறார். அவர் எழுப்பும் ஒலியில் நமது உடலும் லேசாக அதிர்கிறது. அந்த அதிர்வு ஏதோ ஒரு மன அமைதியைக் கொடுக்கிறது. இப்படி ஒலி எழுப்புவதை எவருடைய உதவியும் இல்லாமல் தேர்ந்த பயிற்சியின் மூலம் தானே கற்றுக் கொண்டதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.
இவ்வளவு தூரம் பயணித்து வந்தது இவ்வளவு சிறிய குடவரைக் கோவிலைக் காண்பதற்குத் தானா? சிறிய வயதில் இருந்து கேள்விப்பட்ட சித்தன்னவாசல் இம்புட்டுதானா என்ற ஏக்கம் எங்கள் அனைவரிடமும் இருந்தது. ஆனால் சித்தன்னவாசல் என்பது இந்த ஒரே ஒரு குடவரைக் கோவில் மட்டுமே என்றெண்ணி நாங்கள் ஏமாந்தது போல் நீங்களும் ஏமாந்து விடாதீர்கள்.
ஏழடிபாட்டம் என்ற இடத்தில இருக்கும் சமணர்படுகை மற்றும் பிற குகைகளும் பார்க்க வேண்டிய இடங்கள். இவ்வளவுதான் சித்தன்னவாசல் என்று சித்தன்னவாசலை விட்டு கிளம்பும் பொழுது ஒரு சில நபர்கள் சமணர் படுகை இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம். வெயில் கங்கணம் கட்டிக் கொண்டிருந்ததால் அங்கு போகவில்லை. அங்கு போகவில்லையே என்பதை நினைத்தால் இப்போது வருத்தமாக இருக்கிறது.
சமணர்கள் மறைந்து வாழ்ந்த பகுதி என்றும், தவம் செய்த பகுதி என்றும், ஓய்வெடுக்க வந்த பகுதி என்றும் இப்பகுதிகளை கூறுகிறார்கள். தாங்கள் படுப்பதற்கு வசதியாக செதுக்கி வைத்திருந்த படுக்கைகளை சமணர் படுகை என்று கூறுகிறார்கள். நம்மவர்களோ அதனை உடலுறவு படுகை ஆக்கிவிட்டதாலும் ஆர்ட்டின் விட்டும் அம்பு விட்டும் தங்கள் கலைத் திறமையை உலகுக்கு வெளிபடுத்தியதாலும் வேலிபோட்டு பாதுகாத்து வருகிறது அரசாங்கம். மேலும் இதே குன்றில் இன்னும் சில குகைகள் இருப்பதாகவும், அங்கும் ஓவியங்கள் வரைந்திருந்ததாகவும், தற்போது அதற்கான தடயங்களை மட்டுமே காண முடிகிறது என்றும் குறிப்பிடுகிறார்கள்.
சித்தனவாசலை விட்டு கிளம்பும்பொழுது இயற்கை அழைக்க அங்கு கட்டப்பட்ட (அ)சுகாதார கழிவறையினுள் ஒதுங்கும் போதுதான் கவனித்தேன் அதன் அருகில் மறைவாய் இருந்த புதரினுள் இருவர் அந்தரங்க சில்மிஷம் செய்து கொண்டிருந்ததை. கருமம் கருமம் இதுமட்டும் ஏன்தான் என் கண்ணுல பட்டுத்தொலையுதோ...
சித்தன்னவாசல் மற்றும் சமணர் படுகை பற்றி சிவகாசிகாரன் ராம்குமாரின் பதிவு படிக்க இங்கே சுட்டுங்கள்
சித்தன்னவாசல் மற்றும் சமணர் படுகை பற்றி சிவகாசிகாரன் ராம்குமாரின் பதிவு படிக்க இங்கே சுட்டுங்கள்
Tweet |
கலக்குறேள் போங்கோ.. ஆனால் அங்கு வேலை செய்யும் அரசு அதிகாரி சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்மை தான் நண்பா.. அவர் ஒரு மாதிரி அக்கறையே இல்லாமல், கடமைக்கு சொல்வதால், ஏதோ அவர் கதை அடிப்பது போல் இருக்கும்.. ரொம்ப short temperஆன ஆள் அவர்.. ஒரு முறை நான் அவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்த போது சொன்னார், “யாரும் இதோட ஆச்சரியத்த ரசிக்கிறது இல்ல சார்.. உள்ள நொழஞ்ச ஒடனே ‘இவ்ளோ தான் சித்தன்னவாசலா? நாங்க என்னமோனு நெனச்சோம்!’னு சொல்லிட்டு போயிறாங்க,.. அப்படி ஆட்களையா பாத்துட்டு, இப்பலாம் யார் வந்தாலும் எனக்கே ‘என்னத்த சொல்ல?!’னு ஆயிருது சார்”னார். உண்மை தானே? வரவன் போறவன் எல்லாம் அதன் அருமை தெரியாமல் பேசினால், அங்கு 15 வருடத்திற்கு மேல் வேலை பார்க்கும் ஒருவருக்கு எப்படி இருக்கும்? நான் ரெண்டு முறை அவரின் அந்த ‘ஓம்’ சவுண்டுக்கு பாராட்டினேன். சித்தன்னவாசல் சிற்பத்தை சிலாகித்தேன்.. அதற்கு பின் நான் யாரை அங்கு கூட்டிச்சென்றாலும், என்னை பார்த்து ஒரு புன்னகை செய்துவிட்டு அவர் அதன் விபரங்களை ஆசையோடு சொல்வார்..
ReplyDeleteநான் மனிதர்களோடு வேலை செய்கிறேன்... நீங்கள் கம்ப்யூட்டரோடு வேலை செய்கீறீர்கள்.. மனிதர்கள், மிஷின் இரண்டுமே நமக்கு பதில் கொடுப்பவை.. 15 ஆண்டுகள் வெறும் வரலாறு & பாறைகளோடு வாழ்பவனுக்கு கொஞ்சமாவது நாம் மரியாதை கொடுத்தால் அவனும் அந்த சேவையை இன்னும் நன்றாக செய்வான்.. இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாத கருத்து என்றாலும், ரொம்ப நாளாக சொல்ல நினைத்ததை உங்கள் மூலம் சொல்லிவிட்டேன்.. நன்றி நண்பா.. :-)
"நச்"
Deleteவணக்கம் சீனு ...
ReplyDeleteஆவி டான்ஸ் வீடியோ இருந்தால் என் மனம் நிறைந்திருக்கும் ...
அடப்பாவிகளா டிக்கட் போட்டு , வசூலிப்பாங்க போலிருக்கே..
Deleteசித்தன்ன வாசலை ராம் குமார் பதிவில் படித்திருந்தேன் , அரிய பொக்கிசத்தை பாதுகாக்க தெரியாத மூடர்களை வைத்துக் கொண்டு எந்த பெருமையை எங்கிட்டு போய் வாய் கிழிய பீத்திக் கொள்வது ?
ReplyDeleteஇருக்கும் கொஞ்ச நஞ்சம் ஓவியங்களை அரைவேக்காடு காம ஈனங்கள் வந்து அழிக்காமல் இருந்தால் சரி ...
அங்கே ஓவியங்களுக்கு கீழே நம்ம ஆள் ஒருவன் "குமார் லவ்ஸ் ரம்யா" என்று ஒரு அம்பைப் பாய்ச்சி இருந்தான்.. அவன் கலையுணர்வை ரசித்து விட்டு காதலுக்கு மரியாதை செய்த அவன் கையை தேடி அலைந்து கொண்டிருக்கிறேன்..
Deleteஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்று பேச சத்தியமாய் தமிழனுக்கு தகுதியில்லை என்று தான் தோன்றுகிறது ... கடற்கரை, பார்க், கோவில் இன்னபிற மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் இந்த அவசரக் கூட்டங்கள் தான் ஆர்பரிக்கின்றன ... வீட்டுக்குள் செய்ய வேண்டியதை இங்கு செய்தால் பொறவு வீட்டுக்குள் என்ன பண்ணும்னு தெரியால் ..
ReplyDeleteதல, இதுபத்தி நிறைய பேசிட்டோம்.. இருந்தாலும் மறுபடியும் நீங்க பேசுறதால உங்களுக்காக ஒரு போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. விரைவில் வருகிறது.
Deleteமிக அருமையான பதிவு! மாமல்ல புரம் தொடங்கி சித்தன்ன வாசல் வரை இந்த அசிங்கம் பிடித்தவர்கள் தொல்லை குறையவில்லை போல! தானாக திருந்தாதவர்களை தடியெடுத்து திருத்த அரசாங்கம் முயல வேண்டும்! வரலாற்று பொக்கிஷங்களை காக்க வேண்டும்! நன்றி!
ReplyDeleteஅங்கு தென்பட்ட, அரசு பாதுகாக்கத் தவறிய, நமமவர்கள் கைவரிசையைக் காட்டிய அரைகுறை ஓவியங்களை என் மனதில் முழு வர்ணப்படமாகக் கற்பனித்துப் பார்த்தது வெகு இதமாக இருந்தது. நம்மைப் போல் ஒரு நாளில் எத்தனை எத்தனை பள்ளிக் கூட்டமும், தனிநபர்களும் வந்தும் சலிக்காமல் நமக்கு விளக்கம் தந்த அந்த அலுவலரை நிச்சயம் பாராட்டத்தான் வேணும்...! (அந்த வொர்க்லோடுக்கு ராம்குமார் சொன்ன மாதிரி ஷார்ட் டெம்பர் இல்ல... நான்லாம் உக்ரமாவே ஆயிருப்பேன் அந்த வேலையப் பாத்திருந்தா)
ReplyDeleteஉன் கண்ணில மட்டும் ‘அது’ ஏன் பட்டுத் தொலைக்குதுன்னா.... வயசுக் கோளாறு ஓய்! (அப்புறம்... ‘என் போன்ற சின்னப் பையன்கள்’ என்று இருப்பதை மட்டும் ‘நம் போன்ற’ என்று திருத்தி வாசித்துக் கொண்டேன். ஹி... ஹி... ஹி...!)
ReplyDeleteஅழகு நடையில் நாடோடி எக்ஸ்ப்ரெஸ் எங்களை அழைத்துச் சென்றது மிக ரம்மியமாகவும், சுவாரசியமாகவும் இருந்தது! கண்டிப்பாகப் பார்க்கவேண்டிய ஒரு இடம்!
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி!
ரொம்ப நல்ல பதிவு பார்த்த மாதிரியே இருந்தது, கண்டிப்பாக பார்க்கணும் ஆனால் ஒன்று போகிற போக்கில் உன்னோட வயச குறைக்கிறது கொஞ்சம் ஓவரு { குறைந்தபட்சம் என்போன்ற சிறுவர்களின் நலன் கருதியாவது இது போன்றவர்கள் கொஞ்சம் நாகாரீகம் கருதி மொத்த சில்மிசத்தையும் புதர்களுக்குள்ளாகவே வைத்துகொண்டால் நலம். } நல்லா எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteகருமம் கருமம் இதுமட்டும் ஏன்தான் என் கண்ணுல பட்டுத்தொலையுதோ...
ReplyDelete>>
வயசுக்கோளாறு. சீக்கிரம் கல்யாணம் கட்டிக்கோங்க இந்த வியாதி சரியாகிடும்!!
சித்தனவாசல் ஓவியம் இவ்வளவுதானா!? நான் மாமல்லபுரம் போல பரந்து விரிந்து இருக்கும்ன்னு நினைச்சேனே!!
ReplyDeleteசந்திரன் பூமியில் இருந்து விலகித்தான் செல்கிறது.... ஒரு நாள் அதுவும் நடந்து அந்த கொடுமையை பார்க்க நாமெல்லாம் இருக்க மாட்டோம் கவல படாதீங்க
ReplyDelete15 ஆண்டு காலம் ஒரு யோகியை போல வேலை பார்க்கும் ஒருவரின் மன நிலை எப்படி இருக்கும். ராம்குமார் மிக தெளிவாக புரிந்து சொல்லியிருக்கிறார்.
ReplyDeleteஎன் பதிவில் ஒருத்தர் சித்தன்ன வாசல் ஓவியங்களை பத்தி எழுதுங்க என்று கேட்டார். நீங்க சொல்வதை பார்த்தால் சான்ஸே இல்ல போல
ReplyDeleteOne of the most ignored historical sites in Tamil Nadu. அங்கு ஒரே ஒரு முறை சிறு வயதில் சென்றிருக்கிறேன். அற்புதமான இடம். அந்த சூழலும் அமைதியும் இன்றைக்கு எவ்வளவு பணம் கொடுத்தால் கூட கிடைக்காது. நம் ஆட்களுக்கு வரலாற்றின் முக்கியத்துவம் மண்டையில் ஏற வெகு காலங்கள் ஆகலாம். நல்ல பதிவு சீனு. பாராட்டுக்கள்.
ReplyDelete4வது பாரா : 'என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?!!
ReplyDeleteகடைசியாகக் குறிப்பிட்டுள்ள விஷயத்துக்கு புகைப்பட ஆதாரம் இல்லாததால் நம்பமுடியாத விஷயம் என்று தள்ளுபடி செய்யப்படுகிறது. :)))
ஹஹஹஹா..
Deleteசித்தன்னவாசல் இவ்வளவு தானா என்ற சொல்ல முடியாத மனநிலை எனக்கும் இருந்தது. இருந்தாலும் அந்த ஓவியங்கள் இன்னும் மனதில் நிலைகொண்டுள்ளன. அவற்றை நமக்கு உற்சாகத்துடன் சிறு குச்சியின் உதவியுடன், "இது அன்னப்பறவை, இது யானை, மீன்" என்று காட்டிய அந்த அலுவலர் மனதில் நிற்கிறார். பதினைந்து வருடங்களாக ஒரே பாட்டைப் பாடிக்கொண்டிருந்தாலும் அவருடைய பாடலில் இனிமை இன்னும் குறையவில்லை - என்னுடைய நிலைப்பாட்டில்.
ReplyDeleteகவிஞர் ஸ்பை உருவாகிற மாதிரி தெரியுது?
Deleteபலதும் பலானதும்...! ம்...!
ReplyDeleteNice da.. feel like visited that place.. Thx a lot :)
ReplyDeleteசித்தன்னவாசலுக்கு நாங்களும் பலமுறை போக வேண்டும் என்று நினைத்து இதுவரை போக முடிந்ததில்லை. ”திருமதி பக்கங்கள்” கோமதிம்மா கூட சித்தன்னவாசல் பற்றி எழுதியிருப்பாங்க.
ReplyDeleteஇந்த மாதிரி ஜென்மங்கள் இல்லாத இடமேயில்லை....:(((
விஜயவாடா அருகிலும் இது போன்ற ஒரு குகை உண்டு..... அங்கேயும் இந்த அம்புகள் விட்ட இதயங்கள் இருக்கின்றன! தெலுங்கில் லவ்வுகிறார்கள்..... மொழி மட்டுமே மாற்றம்!
ReplyDeleteபார்க்கணும்..... சித்தன்ன வாசல் ஓவியங்களை - ராம்குமார் சொன்னது போல அந்த இடத்தில் இருக்கும் அலுவலக ஊழியரின் உதவியோடு!
சித்தன்னவாசல் அருமையான இடம் என கேள்விப்பட்டு இருக்கிறேன்
ReplyDeleteபார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவலை விதைத்து விட்டீர்கள்
விரைவில் நம் உத்திரமேரூர் பயணத்தை நடத்த முயலுவோம்