Showing posts with label இரவுநேர சாலைகள். Show all posts
Showing posts with label இரவுநேர சாலைகள். Show all posts

23 Oct 2015

இருள் பரவும்...!

அன்புள்ள ஆவி வணக்கம், 

கன்னியாகுமரி, தென்காசி சுற்றுப்பயணத்தில் இருக்கின்றீர்கள் என நினைக்கிறன். பயணம் சிறக்க வாழத்துகள். வரும் வாரம் நீங்கள் சென்னை வருகிறீர்கள் என்று கேள்விபட்டேன் மகிழ்ச்சி. அதற்குள் என்ன அவசரம் இந்த கடிதம் எழுத என்பதை அன்புள்ள என்ற வார்த்தையை படிக்கும் போதே மனதிற்குள் நினைத்து, என்ன பதில் எழுத வேண்டும் என்பதையும் இந்நேரம் உங்கள் மனதிற்குள் எழுத ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குமுன்! அதற்குமுன் இந்தக் கடிதத்தையும் ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் என் முன்முடிவு பொய் ஆகிவிடும். மேலும் நேற்று நடந்த அந்த திகில் அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொண்டது போல் ஆகிவிடும். 

உங்களுக்கு நினைவிருக்கும். நம்முடைய மஞ்சோலை மற்றும் கோவா பயணத்தின் போது 'சீனு நீங்க நாய பத்தி ரொம்ப அதிகமா எழுதிட்டீங்க, இனி வேண்டாமே' என்று கூறியது. ஒவ்வொரு முறை நாயைப் பார்க்கும்போதும் மற்ற எல்லா சிந்தனைகளையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து நிற்கிறது இந்த அறிவுரை. 




உங்களுக்கே தெரியும் நான் நன்பகலில் பயணித்து நள்ளிரவில் வீடு வந்து சேர்பவன் என்று. அன்றாட நிகழ்வில் நீங்கள் பலரையும் கடக்கும் போது, பல சமயங்களில் நான் நாய்களை மட்டுமே கடந்து வருபவன். கூடிய விரைவில் நான் எழுதப்போகும் தெருநாய்களைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ஐநாவில் இருந்தோ சீலேவில் இருந்தோ அல்லது உகாண்டாவில் இருந்தோ பரிசு கிடைத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்பது தான் என் நிலைப்பாடு. இருந்தும் நாய்களைப் பற்றிய நமக்கான விவாதத்தில் ஒரு திருப்புமுனை வரும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை இவ்வளவு அவசர அவசரமாக எழுதுவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் நேற்றைய இரவு வரைக்கும் கூட.  

நேற்றைக்கு வீடு திரும்பும் போது மணி நள்ளிரவு இரண்டு. மழை வரும் போல் இருந்தாலும் நன்றாக பனி விழுந்து கொண்டிருந்தது. சரவணாவை பெரும்பாக்கத்தில் விட்டுவிட்டு அடுத்த சந்து திரும்பினால் அதிர்ச்சி. பேரதிர்ச்சி என்று சொன்னால் உண்மைக்கு மிக அருகில் என்று பொருள். அந்த சந்தில் ஒரு நாய் இல்லை ஒரு நாய்ப் பண்ணையே நின்று கொண்டிருந்தது. ஏற்கனவே குளிரில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நாய்கள் வேறு. இவைகளைக் கடக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று வேறு ஒரு சாலையைப் பிடித்து மேடவாக்கம் பிரதான சாலையை அடையலாம். ஆனால் அது கொஞ்சம் சுத்து. சரி ஆனது ஆகட்டும் என்று எண்ணத்தில் என்னிடம் இல்லாத தைரியத்தை வரவழைத்து வண்டியை செலுத்தினேன். உள்ளுக்குள் பரவ ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு மட்டும் அடங்கவே இல்லை. 

லேசாக ஒரு உறுமல். அப்படியே அந்த உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி கண்ணுக்கெட்டாத தொலைவில் இருந்தும் கேட்கத் தொடங்கியது.  இருள் பரவும் என்பார்களே அப்படித்தான் இருளோடு இருளாக நாய்களின் உறுமலும் பரவத் தொடங்கியது. லேசாக மின்னல் வெட்டியது. தெருவிளக்குகளில் பாதி எரியவில்லை. மீதி எரிந்தும் பிரயோஜனமாக இல்லை. எத்தனையோ முறை இதே சந்தில் அலறியடித்து ஓடி பின் என்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட கதையை உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். வருத்தத்தோடு கேட்பது போல் மூஞ்சை வைத்திருந்தாலும் உள்ளுக்குள் சிரித்து சந்தோசப்பட்டிருபீர்கள். பரவாயில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசி மூட்டைகளைப் போல ஏகப்பட்ட நாய்கள். இந்த நள்ளிரவிலும் சில நாய்கள் வாக்கிங் சென்று கொண்டிருக்க சில நாய்கள் காதல் புரிந்து கொண்டிருந்தன. நன்றாக கவனித்துவிட்டேன் பனிக்காலங்கள் வந்தால் இந்த நாய்கள் சுறுசுறுப்பாகி விடுகின்றன. (குஜால்டியாகி விடுகின்றன என்று தான் எழுத நினைத்தேன்.) ஒவ்வொரு நாய்களைக் கடக்கும் போதும் தங்கள் தலையை தூக்கி 'இது எங்க ஏரியா' என்ற தொணியில் ஒரு பார்வை பார்த்தன. லேசாக உறுமவும் செய்தன. அந்தக் கூட்டத்திலேயே நோஞ்சானாக கருதப்படும் நாய் கூட என்னைப் பார்த்து உறுமியது என்ற சோகத்தைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வந்த கோவத்துக்கு அங்கேயே அடிச்சிருப்பேன். ஆனா கடிச்சிருச்சுனா? 

இப்போதெல்லாம் நாய்களின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் பழகிவிட்டேன். என்னவென்னாலும், நாய் கடிக்கவே வந்தாலும் வண்டியின் வேகத்தை மட்டும் கூட்டி அவற்றின் கோபத்தை அதிகரிக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன். வேகம் விவேகம் என்பார்கள். பத்து கிமீ வேகம் தான் இங்கே விவேகம். கண்ணாடியை திருப்பி நாய்களைப் பார்க்கும் படி வசதி செய்து கொண்டேன். ஒவ்வொரு நாயைக் கடக்கும் போதும் அவை கொலைவெறியோடு முறைப்பது தெரிந்தது. ஒரு கிமீ நீளமுள்ள அந்த தெருவில் குறைந்தது ஐம்பது நாய்கள் என்றால் என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

அந்த தெருவில் ஒரு மெக்கானிக் ஷெட் இருக்கிறது. பழைய கார்களை உடைத்து பாகம்பிரிப்பது தான் அவர்களுடைய வேலை. தினமும் மூன்றில் இருந்து நான்கு கார்கள் அந்த ஷெட்டின் வெளியே இருக்கும். அதில் இரண்டு கடந்த சில மாதங்களாக அங்கேயேதான் நிற்கின்றன. ஒன்று இண்டிகா, மற்றொன்று ஆம்னி. இரண்டிலுமே முன் பக்க கண்ணாடி உடைந்து ஒரு சிறிய துளை இருக்கிறது. பெயின்ட் உதிர்ந்து சிலந்தி வலை பின்னி. சில சமயங்களில் அதன் உள்ளிருந்து கூட நாய்கள் வெளிப்படும். என் கவலை அது இல்லை. 

சமீப காலமாகவே அந்த கார்கள் என்னை அதிகம் பயமுறுத்துகின்றன. ஒரு திகில் படத்தில் வரும் வில்லனைப் போல் என்னைப் பார்த்து சிரிக்கின்றன. உடைந்த அந்த கண்ணாடிகளின் வழியே எப்போது வேண்டுமானாலும் ஒரு பேய் வெளிப்படலாம் என்ற உணர்வுடனேயே அவற்றை நெருங்குகிறேன். எப்போது வேண்டுமானாலும் கதவுகளைத் திறந்துகொண்டு என் முன் நிற்ககூடும் என்ற உணர்வை தடுக்க முடியவில்லை. அது ஏன் இந்த பேய்களுக்கு பழைய வீடுகளும் கார்களுமே பிடித்துப்போகின்றன. 

பேய்களை நான் நம்புகிறேனா என்ற வாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. நான் ஏன் பேய்களை நம்புகிறேன் என்ற கேள்விக்கும் பதிலும் தெரியவில்லை. பள்ளிகூட நாட்களில் இருந்தே பேய்கதைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். நள்ளிரவில் ஆட்டோவில் வந்த பேய். கிணத்தில் குளிக்கும் போது கழுத்தை நெரித்த பேய். புளியமரத்து பேய், பக்கத்து வீட்டு குழந்தையை பிடித்துகொண்ட பேய் என்று எத்தனையோ கதைகளை எத்தனையோ பேர் கூறக்கேட்டும் அலுத்ததே இல்லை. கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டோ, கருவேல மரத்தின் அடியில் அமர்ந்தோ நாங்கள் பேசிய பாதி கதைகள் பேய்களைப் பற்றிதான். அப்போது கேட்ட கதைகள் அனைத்தும் இப்போது நிஜமாகிவிட்டால். வெள்ளை உடை அணிந்த மோகினி ஒன்று மல்லிகைப்பூ வாசத்தோடு முன்னால் வந்து நின்றால்...! எனக்குத் தெரியும் இதற்கு முந்தைய வரியை மீண்டும் ஒருமுறை படித்து சிரிப்பீர்கள் என்று. ஆனால் என் கவலையே வேறு. ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். 

ஒருவேளை வாக்கிங் வந்த பேய் ஜாலியாக என்னுள்ளே செட்டில் ஆகிவிட்டால் என்னையே நம்பியிருக்கும் இந்த சமுதாயத்தின் நிலைமை என்னாவது. அப்போதும் 'வர வர நீ பேயாட்டம் எழுதுற' என்றுதான் கூறுவீர்களே ஒழிய ஏன் பேயாட்டம் எழுதுறேன் என்பதை குறித்து சிந்திக்க மாட்டீர்கள். சிரிக்காதீர்கள். நான் புலம்புவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா?

இப்போதெல்லாம் நாய்களை விடவும் அந்த கார்களையே அதிகம் கவனிக்கிறேன். அதிகமாகவும் யோசிக்கிறேன். அதே யோசனையில் மேடவாக்கம் வரையிலும் வந்துவிட்டேன். யாருமற்ற சாலையில் இருந்து சிவகாமி நகர் நோக்கி திரும்பியபோது தான் அந்த பொம்மையைப் பார்த்தேன். நல்ல பெரிய பொம்மை. நடுரோட்டில் தலையை விரித்துப் போட்டபடி குப்புறக் கிடந்தது. காஞ்சுரிங் போன்ற படங்களில் பாத்திருக்கிறோமே. இம்மி பிசகாமல் அதேமாதிரி இருந்தது. அதைபார்த்த மாத்திரத்தில் வண்டியை நிறுத்திவிட்டேன். லேசாக வீசிய காற்றில் அதன் முடி அசைவது போல் இருந்தது. உயிர் இருந்தாலும் இருக்கக் கூடும். பொம்மை என்றே நினைக்க முடியவில்லை. பொம்மை உருவில் வந்த பேய் அல்லது பேய் உருவில் வந்த பொம்மை. 

தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் மேலும் உயிரூட்டியது. நான். அந்த பொம்மை. ஒரு சில தவளைகளின் அலறல். எங்கும் நிரம்பி இருக்கும் நிசப்தம். அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அதற்கும் ஏதேனும் பூர்வஜென்ம தொடர்பு இருக்கக்கூடுமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். மெல்ல அதனைக் கடந்து செல்ல தொடங்கினேன். வண்டியின் கண்ணாடியில் அசையாது படுத்துக்கிடந்தது அதன் பிம்பம். எப்போது வேண்டுமானலும் நிமிர்ந்து உட்காரலாம் என்பது போல் படுத்திருந்தது. வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆவி! எனக்கு என்ன பயம் என்றால் நம்முடைய அடுத்த நீண்ட பயணத்தில் 'சீனு நீங்க இப்போல்லாம் பேய்களைப் பத்தி அதிகமா எழுதுறீங்க' என்று கூறிவிடக் கூடாதே என்பது தான். 

இப்படிக்கு
சீனு    

14 Nov 2014

பழைய மகாபலிபுரம் சாலை

பழைய மகாபலிபுரம் சாலையில் சுவாரசியமான காட்சிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அதிலும் நள்ளிரவில் என்றால் சலிக்காமல் பல கதைகள் கூறலாம், அவ்வளவு இருக்கிறது. 

இன்றைக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மணி ஒன்றை நெருங்கி இருந்தது. லேசான தூறல் வேறு. சிறுசேரியில் இருந்து கிளம்பும் வரையிலும் லேசாக தூறிக் கொண்டிருந்த வானம் நாவலூரைக் கடக்கையில் கொஞ்சம் அடித்துப் பெய்யத் தொடங்கியது. 

நேற்றைக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நள்ளிரவு ஒரு மணி. யாருமற்ற அந்த சாலையில், அதில் நிலவும் அமைதியில் பயணிக்கவே அலாதியாய் இருக்கும். அவ்வப்போது கடக்கும் கார்கள், ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். 



அப்படியிருக்க நேற்றைய தினம் சத்யபாமாவைக் கடக்கையில் ஒரு பெண் சாலையின் ஓரத்தில் மாடல் ட்ரெஸ் அணிந்தபடி துள்ளிக் குதித்து டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். யார் அவள், இந்நேரம் ஏன் இப்படி என்ற கேள்விகளுடனேயே கடக்கும் போதுதான் தெரிந்தது அவர் ஒரு திருநங்கை என்று. மீண்டும் மனதில் ஆயிரம் கேள்விகள், அதற்கு ஆயிரம் விடைகள், இவர்களின் வாழ்கையே முறையே வேறு. எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. தனிமை புறக்கணிப்பு மிரட்டல் தீண்டாமை பாலியல் வன்கொடுமை என்று எத்தனையோ கஷ்டங்கள் நிறைந்தது. வீட்டில் அவரை எதிர்பார்த்து யாரேனும் இருப்பார்களா, முதலில் அவருக்கு வீடு இருக்குமா, எங்கு தங்குவார். அடுத்த சில கிமீ அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  

இன்றைய நள்ளிரவில் நாவலூர் ஏஜிஸ் கடந்து செம்மஞ்சேரி செக்போஸ்டைக் கடக்கையில் இரண்டு பெண்கள் காதில் ஹெட்செட் மாட்டியபடி தைரியமாக நடந்து கொண்டிருந்தார்கள், ஒருசில வாகனங்களைத் தவிர யாருமே இல்லை. மழை வேறு வலுத்துக் கொண்டிருந்தது. மிக சமீபத்தில் தான் சிறுசேரி பயங்கரம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து செல்லும் தொலைவில் தான் அவர்கள் ஹாஸ்டல் இருக்க வேண்டும் என்றாலும் அந்த அர்த்த ராத்திரியில் ஒருவருக்கு ஒருவர் துணையாக அவர்கள் எடுத்த முடிவு வீண் வம்பில் சென்றால் அவர்கள் வீட்டிற்கு யார் பதில் கூறுவது. அதிபயங்கரமான இந்த ஆண் சமூகத்தை எப்படி இவ்வளவு எளிதில் நம்பினார்கள்.  

ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தால் அங்கு பணிபுரியும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் தற்போதைய கஷ்டங்கள் போதாதா? 

இவர்களுக்கு என்ன ஹாயாக ரோட்டில் நடந்து சென்று வம்பில் மாட்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு என்ன ஹாயாக கார்பரேட் ஆபீசில் அமர்ந்து கொண்டு சிறுசேரியில் என்ன நடக்கிறது, அடிமட்ட ஊழியன் எப்படி கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாமலேயே நான்கு புதிய சட்டங்களைச் சமைத்து ஈமெயில் அனுப்புவார்கள். மாட்டிக் கொண்டு முழிக்கப் போவது என்னவோ எங்களைப் போல் யாரோ ஒரு நூறு கோயிஞ்சாமி தானே. பாவம் எங்களுக்கு என்ன மயிரே போச்சு. அனுபவிக்கட்டும். ஆனால் நேற்றைக்கு அந்த திருநங்கையைப் பார்த்ததற்கும் இன்று இவர்களைப் பார்த்தற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது, எத்தனைப் பெரிய முரண்! 

செம்மஞ்சேரி போலீஸ் செக்போஸ்ட்டை நெருங்க நெருங்க தூரத்தில் ஒரு ஏசி பஸ் ரோட்டின் ஓரமாய் பார்க் செய்யபட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அது நின்று கொண்டிருந்த விதமும் டிசைனும் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு நெருடல். அந்த இடத்தில் வழக்கமாகவே நான்கைந்து பேரிகட்ஸ் இருக்கும், மேலும் யு டர்ன் போட வசதியான இடமும் கூட. தாறுமாறாக நிறுத்தபட்டிருந்த அந்த அரசாங்கப் பேருந்தைப் பார்த்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். 

அருகில் செல்லச் செல்ல ஆட்கள் கூட்டமாக இருப்பது தெரிந்தது. வண்டியில் ஓட்டுனரும் நடத்துனரும் அருகில் நின்று கொண்டிருக்க அவர்களோடு நான்கைந்து போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். 

பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரை இடித்து ஒரு பத்தடி முன் நகர்ந்து அசாதாரணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய சாலையில், சாலையின் ஓரத்தில் இருக்கும் இரண்டடி சுவரின் மீது ஏறி அந்தப் பக்கம் போய் இருக்க வேண்டும் என்றால் அந்த பேருந்து எவ்வளவு வேகத்தில் அவ்விடத்தைக் கடக்க முயன்றிருக்க வேண்டும். பாவம் உள்ளிருந்த பயணிகளை நினைத்தாலே கதி கலங்குகிறது. நாங்கள் பார்க்கும் போது யாருமற்ற பேருந்தாக தனித்து தொங்கிக் கொண்டிருந்தது, அருகில் நின்று பார்க்க முனைபவர்களை நிற்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர் போலீசார். ஒருவன் போட்டோ எடுக்கமுயல நல்லவேளை அவனுக்கு அடி விழவில்லை. 

நான்கைந்து மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறன், மதியம் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வழியில் சத்யமபாமா தாண்டி இருக்கும் ஆலமரத்து நிறுத்தத்தின் அருகில் மீடியனைத் தாண்டி ஒரு ஆம்னி தலையணையைப் புரட்டிப் போல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் அங்கு இருந்தோம். என்னவென்று விசாரித்ததில் ஆம்னியின் பின் டயர் வெடித்து அது வந்த வேகத்தில் தூக்கி தூர வீசப்பட்டு சாலையின் ஓரத்தில் சோப்பு டப்பாவைப் போட்டது போல் கவிழ்ந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த ஆம்னியில் இருந்த ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சிவனே என்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த புதிய ஹோண்டா சிட்டிக்குத்தான் பலத்த அடி. அந்த காட்சி இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த ஆம்னியின் ஓனர் ஒரு ஓரமாய் நின்று தலையத் தொடைத்துக் கொண்டிருந்தார். மரணபயம் நிறைந்திருந்த அந்தக் கண்களை இன்னும் மறக்க முடியவில்லை.  


ஆனாலும் சொல்கிறேன் நிலைமை எப்படி இருந்தாலும் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி ஓட்டுவதற்கு இணையான சுகானுபத்தை இதுவரை வேறு எந்த சாலையுமே கொடுத்ததில்லை. காரணம் அது பழைய மகாபலிபுரம் சாலை. 

பின்குறிப்பு : பீக் ஹவர்ஸில் பழைய மகாபலிபுரம் சாலையின் முகம் வேறு மாதிரி இருக்கும். வேறு மாதிரி என்றால் கொஞ்சம் கொடூரமாக இருக்கும். நல்லவேளை எனக்கும் பீக் ஹவர்ஸுக்கும் சம்மந்தமே இல்லை :-) 

படங்கள் : நன்றி இணையம்.

21 Aug 2012

சென்னையின் சாலைவலிகள் : மரண வாக்குமூலம்


சென்னையின் சாலை வலிகளைப் பற்றி நான் எழுதும் இரண்டாவது மரண வாக்குமூலம் இது. மரண வாக்குமூலமா? யாருக்கா? சென்னையின் சாலையில் பயணிப்பவரா நீங்கள்...? புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறன். முன்பெல்லாம் சாலைகள் எனக்கு வலிகளை மட்டுமே தந்து கொண்டிருந்தன, ஆனால் இப்போதெல்லாம் உயிர் பயத்தையும் சேர்த்துத் தரத் தொடங்கிவிட்டன. 


லுவலகம் முடிந்த இரவுகளில் பதினோரு மணிக்கு மேல் பயணம் செய்யும் சுதந்திரப் பறவை நான். பகல் பொழுதில் கொடிய அரக்கனைப் போல் அட்டுழியம் செய்யும் சென்னையின் சாலைகள், இரவில் தன் முகத்தை அப்படியே மாற்றி இருக்கும். பகல் எல்லாம் ஆடிக் களைத்த களைப்பில் அசந்து தூங்குகின்ற குழந்தையைப் போல் உறங்கும். சென்னை என்னும் குழந்தை உறங்கும் சமயங்களில் தான் எனது பயணமும் இருக்கும். வாகன நெரிசல் இல்லாத நாற்கர சாலை என்பதால் பைக்கின் வேகம் எப்போதுமே அறுபதிற்கு குறைந்திருக்காது.சமயங்களில் எண்பதையும் தொடும்.       

சென்ற வாரம் சோளிங்கநல்லூரில்  இருந்து மேடவாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். நல்ல இருட்டு, அரசு நட்ட மின் கம்பங்களுக்கு மின்சாரம் பாய்ச்ச ஆள் இல்லாத காரணத்தால் இரவின் குளுமையை அனுபவித்துக் கொண்டிருந்தன. சாலையின் நடுவில் நாய்கள் மற்றும் நடுநிசி நாய்கள் படுத்திருந்தால் கூட கண்டுகொள்ள முடியாது. வண்டி திடிரென்று பயங்கரமாக அதிர்ந்தால், வண்டியை ஏதேனும் பள்ளத்தில் விட்டேனா இல்லை ஜீவராசிகளைக் கொன்றேனா என்று கூட கண்டுபிடிக்க முடியாது. 

ஹெட்லைட் வெளிச்சத்தில் இரண்டு அடிகளுக்கு மேல் என்னால் பார்க்க முடியாது. அந்த இரண்டு அடி தூர வெளிச்சத்தை மூளை உள்வாங்கி கட்டளை பிறப்பிக்கும் நேரத்தில் குறைந்தது பத்தடியைத் தாண்டியிருப்பேன். இந்த கொடிய சாலைகளில் பயணிக்கும் பொழுது ஒன்றை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டேன். அறுபதிற்க்கு மேல் நான் இருக்க வேண்டுமானால் வண்டியின் வேகம் நாற்பதிற்கு மேல் கூட இருக்கக் கூடாது என்ற ஒன்று தான் அது.  

உசுரு பயம்னா என்னன்னு தெரியுமா 

ன்றும் அப்படித்தான், மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த கும்மிருட்டில் தூரத்தில் ஏதோ அசைவது போல் தோன்றியது. இப்போதெல்லாம் இருளுக்கும், இருள் நிறைந்த அந்த சாலைகளுக்கும் கண்கள் தன்னைப் பழகிக் கொண்டுவிட்டது. தூரத்தில் ஏதேனும் அசைகிறதா இல்லை அசைவது போன்ற மாயையா எனபதை அந்த இருட்டில் இனம் காண முடியாமல் மூளை விழித்துக் கொண்டிருந்தது. 



வேகத்தைக் குறைத்துவிட்டேன். இப்போது எதுவும் அசைவது போல் தெரியவில்லை.  தூக்கக் கலக்கமாக இருக்கும் என்று வண்டியின் வேகத்தை அதிகரித்தேன். வேகம் அறுபதைக் காட்டியது. அந்த ஏதோ ஒன்றை நெருங்க நெருங்க மூளைக்கு முன் மனம் முழித்துக் கொண்டது. வேகத்தை மீண்டும் குறைக்க ஆரம்பித்தேன். பத்தடி தூரத்தில் கண்டுகொண்டேன் அசைவது போல் தோன்றியது ஒரு பெரிய வாகனம் தான் என்று. எட்டடி தூரத்தில் கண்டுகொண்டேன், வண்டியின் பின்னல் ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் ஒட்டப்படாத டிராக்டர் என்று. ஆறடி தூரத்தில் தான் முக்கியமான விசயத்தைக் கவனித்தேன், அந்த டிராக்டர் செல்லவில்லை நடுரோட்டில் நின்று கொண்டுள்ளது எனபதை. 

டுத்த நான்கு அடிகளும் வண்டியின் டயர் தேயும் சத்தம் மட்டுமே எனக்குக் கேட்டது. எனக்கும் டிரக்டருக்கும் நூல் அளவு மட்டுமே இடைவெளி. (இரண்டடி குறைகிறதா? மூளை பிரேக்கிற்கு செய்தி அனுப்பும் முன், அந்த இரண்டு அடிகளை கடந்து இருந்தேன்). நான் வந்த வேகத்தில் டிராக்டரின் மேல் இடித்து இருந்தேன் என்றால், நிச்சயம் சின்னாபின்னம் ஆகியிருப்பேன். அந்த நொடியை இப்போது நினைத்தாலும் பயமாகத் தான் உள்ளது. நல்லவேளை எந்த சேதாரமும் இல்லாமல் தப்பித்தேன். வண்டியின் இண்டிகேட்டரை ஆன் செய்துவிட்டது  போர்க்களதிற்குப் புறப்பட்டேன்.

"யோவ் வண்டிய இப்படியா நடு ரோட்ல நிப்பாட்றது, வாறவன் அடிபட்டு சாகுறதுக்கா?" 

" இல்ல தம்பி, லைட்டு எதுவும் வேல செய்யல, அதான் இன்னா பிரச்சனன்னு பாத்துனு இருக்கேன்" 

" ஓரமா நிறுத்திப் பாருன்னே" 

ரு கார் டயர் தேயும் சத்தம் கேட்டது. காரும் இன்னும் இரண்டு பைக்சாரிகளும் என்னுடன் சேர்ந்து அவனை திட்டவே, ஏதோ வேண்டா வெறுப்பாக சாலையின் ஓரத்திற்கு டிராக்க்டரைக் கொண்டு சென்றான்.    

டந்த ஒரு மாதகாலமாகே இந்த சாலையிலும் சரி, வேளச்சேரி மேடவாக்கம் நாற்கர சாலையிலும் சரி மின்கம்பங்கள் உயிரற்றுத் தான் கிடக்கின்றன. அதிலும் கிண்டி - வேளச்சேரி - மேடவாக்கம் நாற்கர சாலையில் வண்டி ஊட்டுவதற்கு தனி தைரியம் வேண்டும். இந்த சாலையில் ஐம்பது கி .மீ வேகத்திற்கு குறைவாக வண்டி ஓட்டினால் வண்டி ஓட்டுவது கஷ்டம். ஐம்பது கி .மீ வேகத்திற்கு அதிகமாக்கினால் உயிர் வாழ்வது கஷ்டம். காராணம் அவ்வளவு நாற்சக்கர வாகனங்கள் டயரில்றெக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருப்பார்கள். 

சென்னையில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் நிலைமை மிகவும் பரிதாபமாகவே உள்ளது. திடிரென்று யாரவது நடுரோட்டில் புகுந்தால் நிலைமை என்னவாகும். இருட்டில் சாலையைக் கடப்பவனை அடையாளம் கூட காண முடியாது. இருள் இருள் இருள் எங்கும் இருள்.வாழ்வது கலிகாலத்திலா கற்காலத்திலா? ஒன்றும் விளங்கவில்லை.  பல சென்டர் மீடியன்களில் ரிப்லெக்ஷன் ஸ்டிக்கர் இல்லாத காரணத்தால் வாகனங்கள் இடித்து உடைபட்டு பரிதாபமாகக் காட்சி அளிக்கின்றன. அவைகளால் நிச்சயமாக பெரும் விபத்து நடக்கும் என்பது திண்ணம். ஒட்டுப் போட்ட சாலைகளில் டயர் உருளும் போதெல்லாம் எங்கே சரிக்கி விழுந்து விடுமோ என்ற பயத்தில் வயிற்றிற்குள் ஏதோ உருளுகிறது.  



சிறு வயதில் ட்யுஷன் முடிந்து வரும் இரவு வேளைகளில் மின்சாரம் போய்விட்டால் செய்வதறியாது அந்த இடத்திலேயே நின்று விடுவேன். யாரேனும் டார்ச் அடித்துக் கொண்டு அந்த வழி வந்தால் அந்த வெளிச்சத்திலேயே அவர்கள் செல்லும் தூரம் வரை செல்வேன். இப்போது வண்டியும் அப்படித் தான் ஓட்ட வேண்டியுள்ளது. ஏதேனும் கார் வந்தால், கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் தைரியமாக ஓட்டுகிறேன். மற்ற நேரங்களில் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட்டுகிறேன்.

இந்திய அரசியவாதிகளுக்கு 

மெட்ரோ ரயில் வேலைகள் நடைபெறும் சாலைகள் தவிர்த்து சென்னையின் அனைத்து சாலைகளும் அழகாக அருமையாக உள்ளன, காரணம் அரசியல்வாதிகளான நீங்கள் அங்கே வசிக்கிறீர்கள். ஓட்டுபோட்ட சாலைகளை அடையாறிலும் பெசன்ட் நகரிலும் அண்ணா நகரிலும் போர்ட்கிளபிலும் பார்க்க முடியவில்லை. வேறு இடங்களில் ஒட்டுப் போட்ட சாலைகளைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. ஓட்டு போட்டது ஒரு குற்றமா. கருணையே இல்லாமல் எங்களைக் கொலை செய்வதற்கு நீங்கள் தேர்ந்ததெடுத்த துறைகள் மின்சாரத்துறையும், நெடுஞ்சாலைத் துறையுமா? மின்சாரத்தை நிறுத்துவதற்குப் பதிலாய் நெடுஞ்சாலைகளை மூடிவிடுங்கள். பல உயிர்களாவது சந்தோசமாய் வாழும். சென்னையின் புறநகர் என்ன பாவம் செய்ததது உங்களுக்கு. தேர்தலைப் புறக்கணிப்பது தவறு என்று சொல்லும் தேர்தல் ஆணையமே, ஒழுங்கான அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் இணங்காண முடியாதா? 

இந்தியப் பொதுமக்களுக்கு 



சென்னையின் சாலை வலிகள் வழிகளாக மாறும் வரை இந்தக் கட்டுரை தொடரும். இப்படி ஒரு தொடர் கட்டுரை எழுத வாய்ப்பளித்த இந்திய பொதுமக்களுக்கு நன்றிகள். எத்தனை காலம் தான் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே நன்றி சொல்லிக் கொண்டிருப்பது.

சென்னையின் சாலைவலிகளைப் பற்றி கூறிய எனது முந்தைய கட்டுரை