23 Oct 2015

இருள் பரவும்...!

அன்புள்ள ஆவி வணக்கம், 

கன்னியாகுமரி, தென்காசி சுற்றுப்பயணத்தில் இருக்கின்றீர்கள் என நினைக்கிறன். பயணம் சிறக்க வாழத்துகள். வரும் வாரம் நீங்கள் சென்னை வருகிறீர்கள் என்று கேள்விபட்டேன் மகிழ்ச்சி. அதற்குள் என்ன அவசரம் இந்த கடிதம் எழுத என்பதை அன்புள்ள என்ற வார்த்தையை படிக்கும் போதே மனதிற்குள் நினைத்து, என்ன பதில் எழுத வேண்டும் என்பதையும் இந்நேரம் உங்கள் மனதிற்குள் எழுத ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குமுன்! அதற்குமுன் இந்தக் கடிதத்தையும் ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் என் முன்முடிவு பொய் ஆகிவிடும். மேலும் நேற்று நடந்த அந்த திகில் அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொண்டது போல் ஆகிவிடும். 

உங்களுக்கு நினைவிருக்கும். நம்முடைய மஞ்சோலை மற்றும் கோவா பயணத்தின் போது 'சீனு நீங்க நாய பத்தி ரொம்ப அதிகமா எழுதிட்டீங்க, இனி வேண்டாமே' என்று கூறியது. ஒவ்வொரு முறை நாயைப் பார்க்கும்போதும் மற்ற எல்லா சிந்தனைகளையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து நிற்கிறது இந்த அறிவுரை. 




உங்களுக்கே தெரியும் நான் நன்பகலில் பயணித்து நள்ளிரவில் வீடு வந்து சேர்பவன் என்று. அன்றாட நிகழ்வில் நீங்கள் பலரையும் கடக்கும் போது, பல சமயங்களில் நான் நாய்களை மட்டுமே கடந்து வருபவன். கூடிய விரைவில் நான் எழுதப்போகும் தெருநாய்களைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ஐநாவில் இருந்தோ சீலேவில் இருந்தோ அல்லது உகாண்டாவில் இருந்தோ பரிசு கிடைத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்பது தான் என் நிலைப்பாடு. இருந்தும் நாய்களைப் பற்றிய நமக்கான விவாதத்தில் ஒரு திருப்புமுனை வரும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை இவ்வளவு அவசர அவசரமாக எழுதுவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் நேற்றைய இரவு வரைக்கும் கூட.  

நேற்றைக்கு வீடு திரும்பும் போது மணி நள்ளிரவு இரண்டு. மழை வரும் போல் இருந்தாலும் நன்றாக பனி விழுந்து கொண்டிருந்தது. சரவணாவை பெரும்பாக்கத்தில் விட்டுவிட்டு அடுத்த சந்து திரும்பினால் அதிர்ச்சி. பேரதிர்ச்சி என்று சொன்னால் உண்மைக்கு மிக அருகில் என்று பொருள். அந்த சந்தில் ஒரு நாய் இல்லை ஒரு நாய்ப் பண்ணையே நின்று கொண்டிருந்தது. ஏற்கனவே குளிரில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நாய்கள் வேறு. இவைகளைக் கடக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று வேறு ஒரு சாலையைப் பிடித்து மேடவாக்கம் பிரதான சாலையை அடையலாம். ஆனால் அது கொஞ்சம் சுத்து. சரி ஆனது ஆகட்டும் என்று எண்ணத்தில் என்னிடம் இல்லாத தைரியத்தை வரவழைத்து வண்டியை செலுத்தினேன். உள்ளுக்குள் பரவ ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு மட்டும் அடங்கவே இல்லை. 

லேசாக ஒரு உறுமல். அப்படியே அந்த உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி கண்ணுக்கெட்டாத தொலைவில் இருந்தும் கேட்கத் தொடங்கியது.  இருள் பரவும் என்பார்களே அப்படித்தான் இருளோடு இருளாக நாய்களின் உறுமலும் பரவத் தொடங்கியது. லேசாக மின்னல் வெட்டியது. தெருவிளக்குகளில் பாதி எரியவில்லை. மீதி எரிந்தும் பிரயோஜனமாக இல்லை. எத்தனையோ முறை இதே சந்தில் அலறியடித்து ஓடி பின் என்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட கதையை உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். வருத்தத்தோடு கேட்பது போல் மூஞ்சை வைத்திருந்தாலும் உள்ளுக்குள் சிரித்து சந்தோசப்பட்டிருபீர்கள். பரவாயில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசி மூட்டைகளைப் போல ஏகப்பட்ட நாய்கள். இந்த நள்ளிரவிலும் சில நாய்கள் வாக்கிங் சென்று கொண்டிருக்க சில நாய்கள் காதல் புரிந்து கொண்டிருந்தன. நன்றாக கவனித்துவிட்டேன் பனிக்காலங்கள் வந்தால் இந்த நாய்கள் சுறுசுறுப்பாகி விடுகின்றன. (குஜால்டியாகி விடுகின்றன என்று தான் எழுத நினைத்தேன்.) ஒவ்வொரு நாய்களைக் கடக்கும் போதும் தங்கள் தலையை தூக்கி 'இது எங்க ஏரியா' என்ற தொணியில் ஒரு பார்வை பார்த்தன. லேசாக உறுமவும் செய்தன. அந்தக் கூட்டத்திலேயே நோஞ்சானாக கருதப்படும் நாய் கூட என்னைப் பார்த்து உறுமியது என்ற சோகத்தைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வந்த கோவத்துக்கு அங்கேயே அடிச்சிருப்பேன். ஆனா கடிச்சிருச்சுனா? 

இப்போதெல்லாம் நாய்களின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் பழகிவிட்டேன். என்னவென்னாலும், நாய் கடிக்கவே வந்தாலும் வண்டியின் வேகத்தை மட்டும் கூட்டி அவற்றின் கோபத்தை அதிகரிக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன். வேகம் விவேகம் என்பார்கள். பத்து கிமீ வேகம் தான் இங்கே விவேகம். கண்ணாடியை திருப்பி நாய்களைப் பார்க்கும் படி வசதி செய்து கொண்டேன். ஒவ்வொரு நாயைக் கடக்கும் போதும் அவை கொலைவெறியோடு முறைப்பது தெரிந்தது. ஒரு கிமீ நீளமுள்ள அந்த தெருவில் குறைந்தது ஐம்பது நாய்கள் என்றால் என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

அந்த தெருவில் ஒரு மெக்கானிக் ஷெட் இருக்கிறது. பழைய கார்களை உடைத்து பாகம்பிரிப்பது தான் அவர்களுடைய வேலை. தினமும் மூன்றில் இருந்து நான்கு கார்கள் அந்த ஷெட்டின் வெளியே இருக்கும். அதில் இரண்டு கடந்த சில மாதங்களாக அங்கேயேதான் நிற்கின்றன. ஒன்று இண்டிகா, மற்றொன்று ஆம்னி. இரண்டிலுமே முன் பக்க கண்ணாடி உடைந்து ஒரு சிறிய துளை இருக்கிறது. பெயின்ட் உதிர்ந்து சிலந்தி வலை பின்னி. சில சமயங்களில் அதன் உள்ளிருந்து கூட நாய்கள் வெளிப்படும். என் கவலை அது இல்லை. 

சமீப காலமாகவே அந்த கார்கள் என்னை அதிகம் பயமுறுத்துகின்றன. ஒரு திகில் படத்தில் வரும் வில்லனைப் போல் என்னைப் பார்த்து சிரிக்கின்றன. உடைந்த அந்த கண்ணாடிகளின் வழியே எப்போது வேண்டுமானாலும் ஒரு பேய் வெளிப்படலாம் என்ற உணர்வுடனேயே அவற்றை நெருங்குகிறேன். எப்போது வேண்டுமானாலும் கதவுகளைத் திறந்துகொண்டு என் முன் நிற்ககூடும் என்ற உணர்வை தடுக்க முடியவில்லை. அது ஏன் இந்த பேய்களுக்கு பழைய வீடுகளும் கார்களுமே பிடித்துப்போகின்றன. 

பேய்களை நான் நம்புகிறேனா என்ற வாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. நான் ஏன் பேய்களை நம்புகிறேன் என்ற கேள்விக்கும் பதிலும் தெரியவில்லை. பள்ளிகூட நாட்களில் இருந்தே பேய்கதைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். நள்ளிரவில் ஆட்டோவில் வந்த பேய். கிணத்தில் குளிக்கும் போது கழுத்தை நெரித்த பேய். புளியமரத்து பேய், பக்கத்து வீட்டு குழந்தையை பிடித்துகொண்ட பேய் என்று எத்தனையோ கதைகளை எத்தனையோ பேர் கூறக்கேட்டும் அலுத்ததே இல்லை. கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டோ, கருவேல மரத்தின் அடியில் அமர்ந்தோ நாங்கள் பேசிய பாதி கதைகள் பேய்களைப் பற்றிதான். அப்போது கேட்ட கதைகள் அனைத்தும் இப்போது நிஜமாகிவிட்டால். வெள்ளை உடை அணிந்த மோகினி ஒன்று மல்லிகைப்பூ வாசத்தோடு முன்னால் வந்து நின்றால்...! எனக்குத் தெரியும் இதற்கு முந்தைய வரியை மீண்டும் ஒருமுறை படித்து சிரிப்பீர்கள் என்று. ஆனால் என் கவலையே வேறு. ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். 

ஒருவேளை வாக்கிங் வந்த பேய் ஜாலியாக என்னுள்ளே செட்டில் ஆகிவிட்டால் என்னையே நம்பியிருக்கும் இந்த சமுதாயத்தின் நிலைமை என்னாவது. அப்போதும் 'வர வர நீ பேயாட்டம் எழுதுற' என்றுதான் கூறுவீர்களே ஒழிய ஏன் பேயாட்டம் எழுதுறேன் என்பதை குறித்து சிந்திக்க மாட்டீர்கள். சிரிக்காதீர்கள். நான் புலம்புவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா?

இப்போதெல்லாம் நாய்களை விடவும் அந்த கார்களையே அதிகம் கவனிக்கிறேன். அதிகமாகவும் யோசிக்கிறேன். அதே யோசனையில் மேடவாக்கம் வரையிலும் வந்துவிட்டேன். யாருமற்ற சாலையில் இருந்து சிவகாமி நகர் நோக்கி திரும்பியபோது தான் அந்த பொம்மையைப் பார்த்தேன். நல்ல பெரிய பொம்மை. நடுரோட்டில் தலையை விரித்துப் போட்டபடி குப்புறக் கிடந்தது. காஞ்சுரிங் போன்ற படங்களில் பாத்திருக்கிறோமே. இம்மி பிசகாமல் அதேமாதிரி இருந்தது. அதைபார்த்த மாத்திரத்தில் வண்டியை நிறுத்திவிட்டேன். லேசாக வீசிய காற்றில் அதன் முடி அசைவது போல் இருந்தது. உயிர் இருந்தாலும் இருக்கக் கூடும். பொம்மை என்றே நினைக்க முடியவில்லை. பொம்மை உருவில் வந்த பேய் அல்லது பேய் உருவில் வந்த பொம்மை. 

தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் மேலும் உயிரூட்டியது. நான். அந்த பொம்மை. ஒரு சில தவளைகளின் அலறல். எங்கும் நிரம்பி இருக்கும் நிசப்தம். அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அதற்கும் ஏதேனும் பூர்வஜென்ம தொடர்பு இருக்கக்கூடுமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். மெல்ல அதனைக் கடந்து செல்ல தொடங்கினேன். வண்டியின் கண்ணாடியில் அசையாது படுத்துக்கிடந்தது அதன் பிம்பம். எப்போது வேண்டுமானலும் நிமிர்ந்து உட்காரலாம் என்பது போல் படுத்திருந்தது. வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆவி! எனக்கு என்ன பயம் என்றால் நம்முடைய அடுத்த நீண்ட பயணத்தில் 'சீனு நீங்க இப்போல்லாம் பேய்களைப் பத்தி அதிகமா எழுதுறீங்க' என்று கூறிவிடக் கூடாதே என்பது தான். 

இப்படிக்கு
சீனு    

8 comments:

  1. ஆவி! எனக்கு என்ன பயம் என்றால்...///

    நீங்க சொல்லவேண்டாம். எனக்குத் தெரியும். ஆவியோட அத்தனை பிரண்ட்ஸ் ஸுமே அதையே தான் ரிபீட் ரிபீட் பண்றாக. நாய் அப்படின்னு சொல்றாக. பேயி அப்படின்னு சொல்றாக...ஒன்னும் புரியல்ல.

    எதுக்கும் நம்ம பால கணேஷ் சாரு கிட்ட சொல்லி, ஒரு தாயத்து வாங்கி கட்டிக்கங்க..

    நாய் கடிக்கு ஊசி இருக்குது. பேய் கடிக்கு இனிமே தான் கண்டுபிடிக்கணும் .

    இருந்தாலும் ஒன்னு சொல்லிப்ப்புட்டு போயிடறேன்.
    நீங்க எழுதினதை அப்படியே ஒரு குறும்படம் ஆ .எடுங்க.
    பேய் வேஷத்துக்கு ????

    அது ஆம்பளப்பேயா பொம்பளப் பேயா அப்படின்னு திரும்பவும் ஒரு தரம் பாத்துட்டு சொல்லுங்க...
    சரியான ஆக்டர் யாருன்னு கண்டுபிடிச்சுடுவோம்.

    சுப்பு தாத்தாவுக்கும் வேலை வேணுமுல்ல.

    ReplyDelete
  2. அசத்தல்! நள்ளிரவில் உடன் பயணித்தது போன்ற உணர்வைத் தந்தது பதிவு!

    ReplyDelete
  3. செம !! நாய்ல ஆரம்பிச்சு பேய்ல முடிச்சுருக்கீங்க !! வித்யாசமான ஸ்டைல ஒரு கதை :)

    ReplyDelete
  4. சுப்பு தாத்தா சொல்லும் குறும்பட ஐடியா நன்று. முயற்சித்துப் பாருங்களேன்!

    இரவுப் பயணம் - அது ஒரு சுகம் - எப்போதாவது அமைந்தால்! தினம் தினம் கொஞ்சம் கஷ்டம் தான்..... பல சமயங்களில் இரவில் பயணிக்கும்போது ஊரே ஒரு மயான அமைதி நிலவும். பகலில் பலர் உலவும் இடமா இது என்ற சந்தேகம் கூட வரும்....

    நல்ல பகிர்வு சீனு. பாராட்டுகள்.

    ReplyDelete
  5. சீனு!, கடத்தி சென்ற வில்லனை காதலிக்கும் கதாநாயகி போல ஒரு கட்டத்தில் நாய்களை நேசிக்கப் போகிறாய் என்று தோன்றுகிறது.
    பேய்களை நேசிக்கவும் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்தான். திருமணத்த்திற்குப் பின் உதவக் கூடும்

    ReplyDelete
    Replies
    1. அப்ப இதுலே யாருனாச்சும் ஒத்தரை சூஸ் பண்ணுங்க.
      முஹூர்த்தம் நேரம் முடியறதுக்கு முன்னாடி தாலியை கட்டுங்க.

      https://www.google.co.in/search?q=ghost+images&biw=1366&bih=627&site=webhp&source=lnms&tbm=isch&sa=X&ved=0CAYQ_AUoAWoVChMIgfrj78DayAIVx5COCh2CDwsM

      subbu thatha.

      Delete
  6. நாய்களை நண்பனாக்கிக் கொள்ள முடியும். பேய்களை முடியுமா என்று தெரியவில்லை!

    ReplyDelete
  7. சீனு என்னாச்சு நாய்கள், பேய்களாயிடுச்சு?!!! ஆகறது கஷ்டம் இல்லைதான் நா வை எடுத்துட்டுப் பே போட்டா போச்சுன்னு.....

    நாய்களை ஈசியாக ஃப்ரெண்டாக்கிடலாம்...நீங்க போற தெருவுல ஒரு 3 ரூபா பிஸ்கட் பாக்கெட்டை போட்டீங்கனு வையுங்க ...அதுங்க பாட்டுக்குச் சண்டைப் போட்டுக்கும்..நீங்க தப்பிச்சுடலாம்..இல்லை உங்களைப் பார்த்து வாலாட்டும்...ஆமாம் ரைட்டு சீனு வண்டி ஸ்பீடா போகக்கூடாது...திடீர்னு ஸ்பீடும் பண்ணக் கூடாது...உங்கள் டெக்னிக் சரிதான்..

    பேயை வளைச்சுப் போட என்ன வழினு தெரியல...

    ReplyDelete