6 Oct 2015

சொர்க்கம் அருகிலே @ பாண்டிச்சேரி

ஒரு கனவு

விரக்தியின் உச்சத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நேரம், அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தேன். எளிதில் முடியக்கூடிய வேலை என்று இந்த உலகில் எதுவுமே இல்லை போலும். ஒன்றை முடித்தால் மற்றொன்று. அதை முடித்தால் அதைத் தொடர்ந்த வேறோன்று என ஒரு பூதம் போல பெரிதாகிக் கொண்டிருந்தது வேலை. உழைத்து களைத்து இதற்கு மேல் முடியவே முடியாது என்ற நிலை வந்தபோது வந்தது ஒரு அழைப்பு. 'எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது. கஸ்டமர்ஸ் ஆர் வெயிட்டிங்' என்று சீறியது. 'வில் ரெஸ்பாண்ட் இன் ஃபியு மினிட்' என்று கூறிவிட்டு அழைப்பை துண்டிக்க தலை கொஞ்சம் கொஞ்சமாக பாரமாவதைப் போல் உணர்ந்தேன். நிச்சயமாக இது பூதத்தின் வேலை தான்.

எவ்வளவு வேலை கொடுத்தாலும் செய்யும் அற்புத பூதம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதுவோ எவ்வளவு வேலையை முடித்தாலும் மேலும் மேலும் வேலை கொடுக்கும் பூதம். தப்பிக்கும் வழி தெரியவில்லை. எழுந்து ஓடலாம் என்றால் உட்கார்ந்த இடத்தில் இருந்து நகரவும் முடியவில்லை. எங்கு திரும்பினாலும் எண்கள் எண்கள் எண்கள். எண்களின் மத்தியில் சிக்கிக்கொண்டு மூச்சுவிட இடமில்லாமல் நெருக்கியடிக்கும்  எண்கள். திடிரென கொடிய உருவம் பெற்ற எண்கள் கொலைவெறியுடன் துரத்த ஆரம்பித்தன. தப்பிக்கும் வழி தெரியாமல் ஓடத் தொடங்குகிறேன். எங்கே நிற்க வேண்டும் என்ற கட்டளையற்ற ஓட்டம். ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஓட முடியாமல் மூச்சு வாங்க ஒரு மலைச்சரிவில் இருந்து கீழே விழும்போது முழிப்பு வந்தது. நல்லவேளை கனவென ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன். கனவின் தாக்கம் மட்டும் குறையவில்லை. 

இரண்டு தேவதை

அலுவலகம் முடித்து படுக்கைக்குள் நுழைந்தபோது இருந்த உறக்கம் எங்கே போனதெனத் தெரியவில்லை. எவ்வளவோ முயன்றும் தூக்கம் வரவில்லை. கண்களை மூட நினைக்கும் போதெல்லாம் மேலிருந்து கீழாக இடமிருந்து வலமாக ஓடத் தொடங்கும் எண்களின் ஓட்டம் மிரட்சியாக இருந்தது. எவ்வளவு நேரம் தான் முழித்துக் கொண்டே இருப்பது. மணி ஒன்றைக் கடந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். இருள் கண்களுக்குப் பழகியிருக்க, விட்டதையே வெறித்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த அதிசியம் நிகழ்ந்தது. திடிரென அறையினுள் நுழைந்த தேவதை என்னோடு பேசத் தொடங்கியது. 'உன்ன பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு. என்ன வேணும் கேளு' என்றது அந்தத் தேவதை. சோ இது வரம் கொடுக்க வந்த தேவதை. வெள்ளை உடை, முதுகுக்குப் பின்னால் வளர்ந்த சிறகுகள் எல்லாம் இல்லை. திடிரென அறையினுள் நுழைந்து உனக்கென்ன பிரச்சனை எனக்கேட்டால் யாரால் தான் நம்பாமல் இருக்க முடியும். ஆக வந்திருப்பது தேவதையே தான். நம்பி என் கதையைக் கூறலாம். கூறினேன். 

'உன் பிரச்சன பெரிய பிரச்சனையா இருக்கு. உனக்கு என்னால மட்டும் உதவ முடியாது. என்னோட பிரண்டு தேவதை ஒண்ணு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அசால்ட்டு பண்ணுவோம் கொஞ்சம் பொறு' என்று கூறி மறைந்துவிட்டது. மறைந்த சிறிது நேரத்தில் இரண்டு பேருமாக அறைக்குள் நுழைய 'சரி இப்ப சொல்லு உன் பிரச்சனை என்ன' என்று கேட்க, 'அதான் சொன்னனேன. நீங்க என்ன என் கிளையன்ட் மாதிரி கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப கேட்கிறீங்க' என்றேன் கடுப்பில். 'ஓ இது தான் உன் பிரச்சனையா, சரி உனக்கு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமா என்றது இரண்டாவதாக வந்த தேவதை'. 'கிடைக்கும், ஆனா நான் வொர்க் பண்றது சப்போர்ட் ப்ராஜாக்ட். இப்படி திடிர்ன்னு கேட்டா கிடைக்காது. முன்னாடியே சொல்லணும். இல்ல பாஸ் கோச்சுப்பார்' என்றேன். 'சரி ரெண்டு நாள் லீவ் அப்ளை பண்ணு நான் பார்த்துகிறேன். ஆனா இதேமாதிரி அவதிக்குள்ளான வேறு சில நண்பர்களும் உன்கூட வருவாங்க பரவாயில்லையா' என்றது முதல் தேவதை. 'நண்பர்கள்ன்னா ஓகே, எதிரிகள் நாட் அலவுட். எனக்கு அவங்களை சமாளிக்கத் தெரியாது' என்றேன் சிரித்துக்கொண்டே. 'ஷட்' என்றது அந்த தேவதை. ஷட்டினேன் என்று எழுதிய என்னை சுஜாதா மன்னிப்பாராக!

மூன்று பேர் ஒரு பயணம்

வெள்ளிக்கிழமை. அதிகாலை மணி ஒன்பது இருக்கும். வேகாத வெயிலில் பாண்டிச்சேரி பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். திருவான்மியூரில் பேருந்து ஏறியதும் அழைப்பதாக கூறியிருந்தார் டின். எங்களுடைய நேரமோ என்னவோ அதுவரைக்கும் காலியாக சென்று கொண்டிருந்த பேருந்துகள் அனைத்தும் நிற்கக் கூட இடம் இல்லாமல் விரைந்து கொண்டிருந்தன. 'சீனு இன்னும் பஸ் கிடைக்கல. கூப்பிடுறேன்' என்பதை மட்டும் அரைமணி நேரமாக கூறிக் கொண்டிருந்தார். நான் வாத்தியார் ஆவி செல்வின் டின் எல்லாரும் சேர்ந்து செல்வதுதான் முதல்கட்ட திட்டம். நான் கொஞ்சம் சொதப்பியதால் ஆவியும் வாத்தியாரும் முன்னே செல்ல, நானும் செல்வினும் டின்னும் ஒன்றாகச் செல்வதென முடிவானது. சொதப்பியதற்கு காரணம் நான் இல்லை, இந்த பத்தியின் இரண்டாவது வார்த்தைதான். 


அஞ்சாசிங்கம் செல்வின்
விபரம் தெரிந்தபின் இதுதான் என்னுடைய இரண்டாவது பாண்டிச்சேரி பயணம். கூட்டம் நிரம்பித்ததும்ப முண்டியடித்துக் கொண்டு ஏறிய கூட்டத்தை சமாளிக்க முடியாத எனக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்கவில்லை. செல்வினுக்கும் டின்னும் திருவான்மியூரில் ஏறியதால் பிழைத்தார்கள். பேருந்து நகர நகர, செல்வின், வரலாறு தொடங்கி சங்க இலக்கியம் புகுந்து அறிவியல் வழியாக அனுபவக் கதைகளை பேச ஆரம்பித்தார். அவர் மடை திறந்த காட்டாறு. பேச ஆரம்பித்தால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். பேச்சும் சுவாரசியமாக இருந்ததால் நின்று கொண்டே பயணித்த சில மணி நேரங்கள் பாரமாய் தெரியவில்லை. 

எங்கே போகிறோம், என்ன விசயமாக போகிறோம் என்பதெல்லாம் தெரியாது. பாண்டி வந்ததும், அங்கிருந்து பதினைந்து கிமீ தொலைவில் இருக்கும் சாகர் லாட்ஜ் செல்ல வேண்டும். மீண்டும் அழைப்பு வரும். இதுதான் எங்களுக்குக் கிடைத்த உத்தரவு. நல்ல வெயிலில் சாகர் லாட்ஜ் வந்து சேர்ந்த நேரம் டான் விஸ்வாவிடம் இருந்து ஒரு அழைப்பு 'அந்த ரிசப்ஷன்ல இருக்குற லேடி லீவ்ல போயிருக்காங்க, அங்க ஒரு வயசானவர் தான் இருப்பாரு. அவர் மொகத்த இருபது நிமிஷம் பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தாலும் பரவாயில்ல பார்த்துட்டு இருங்க வாரேன்' என்றார். அவர் எப்பயுமே அப்படித்தான் பாஸ் என்றார் டின். 

அனந்தகோடி சொர்க்கவாசல் - 1

கடலின் அருகாமையில் அமையப்பெற்ற எந்தவொரு இடமும் வசீகரமானது. தூரத்தில் தெரியும் சலனமில்லாத கடல் கொள்ளை அழகு என்றால் நெருங்கி முத்தமிடும் கடல் பேரழகு. அந்தப் பேரழகியின் காலடியில் நின்று கொண்டிருந்தோம். கிழக்குக் கடற்கரை சாலை முழுவதுமே கடற்கரையின் ஓரத்தில் அமைந்த ரிசார்ட்டின் எண்ணிக்கைகள் மிக அதிகம். இதுவரைக்கும் மொத்தமே இரண்டுமுறை தான் ரிசார்ட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒன்று சிறியது இன்னொன்று அதைவிட சிறியது. கடற்கரை. நிறைய நண்பர்கள். கொஞ்சம் கிரிகெட், கொஞ்சம் வாலிபால் கொஞ்சம் நீச்சல் கொஞ்சம் சாப்பாடு இந்தளவில் முடிந்து போன அனுபவங்கள் அவை. ஆனால் இம்முறை சென்றது முந்தைய அனுபவங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. வாழ்வில் மறக்கவே முடியாத அனுபவம் என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள் வரலாற்று ஆசிரியர்கள். 



பாண்டியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது கிளப் மகேந்திரா க்ரூப் ஃஆப் ரிசார்ட்ஸ். பன்னிரண்டு பேர் கொண்ட குழு சரியாக இரண்டு மணிக்கெல்லாம் ஒன்று கூடியிருந்தோம். நான், வாத்தியார், ஆவி, கிங் விஸ்வா, செல்வின் என நன்கு பரிட்சியாமான நண்பர்கள் இருக்க, சில வாரங்களுக்கு முன்புதான் தினேஷை (டின்னை) சந்தித்திருந்தேன். பிரபல பதிவர், ட்விட்டர், பேஸ்புக்கர், வாட்ஸப்பர் பரிசல்காரன் கிருஷ்ணகுமார் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் டான் விஸ்வாதான் பரிசலை அறிமுகம் செய்துவைத்தது. பரிசல் தன் குடும்பத்துடன் வந்திருந்தார். கௌதம் சார் ஒரு எடிட்டர் என்று எப்போதோ விஸ்வா கூறியது ஞாபகமிருக்க, திரைப்பட எடிட்டர் என்று தான் பாண்டிச்சேரி வரும் வரையிலும் நினைத்திருந்தேன். அங்கு சென்றபின் தான் தெரிந்தது அவர் விகடனில் பணியாற்றி பின் குங்குமத்தில் எடிட்டராக இருந்தவர் என்று. அவர் வகித்த பதவிகளின் உயரம் இன்னுமின்னும் அதிகம். இவரை சந்திப்பேன் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. கௌதம் சாரும் அவருடைய குடும்பசகிதம் வந்திருந்தார். மெதுவாக எங்களின் கரம் பற்றி அழைத்துச் சென்றன அந்தத் தேவதைகள். இதுவரை கண்டிராத உலகம் மெல்ல கண்முன் விரிந்து கொண்டிருந்தது. 

மகேந்திரா க்ரூப் ஃஆப் ரிசார்ட்ஸ்

ஒரு ரிசார்ட் எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு தான் பார்த்தேன். யானையைப் பார்க்கும் மனநிலை. அந்த ரிசார்ட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக பதிவு செய்து கொண்டிருந்தது மனம். பரந்த புல்வெளி, அதன் நடுவில் கட்டப்பட்டிருக்கும் அறைகள் என அத்தனை வசதிகளும் கொண்ட மிகமிக உயர்தரமான உட்கட்டமைப்பு ஆசம் அட்டகாசம். இந்த இடம் உயர் இல்லை, உயர் உயர் குடிமக்களுக்கான இடம் என்பது அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே புரிந்துவிட்டது. அங்கிருந்த மக்களும் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களுக்கும் எனக்குமான  தூரம் எவ்வளவு அதிகம் என்பது இதுபோன்ற இடங்களுக்குச் வந்தால்தான் தெரிகிறது. அதேநேரத்தில் இதுபோன்ற இடங்களுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததையே பெரும்பாக்கியமாக கருதி உள்ளூர மகிழ்ந்து கொண்டிருந்தேன். 


பரிசல்காரன் கிருஷ்ணகுமார்

ஒரு சிறிய கடற்கரை விசிட்டிற்குப் பின் மதிய உணவருந்தச் சென்றோம். ஃபபே சிஸ்டம். கடுமையான பசி. பசிக்கு தீனிக்கு போடும் சுவை. எதை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற வசதி. வேறென்ன வேணும் இது போதுமே. உணவருந்திவிட்டு ஒரு சிறிய ஓய்விற்குப் பின் நீச்சல் குளத்தைத் தேடிச்சென்றோம். அட்டகாசமான இரண்டு மணிநேரக் குளியல். 

காந்தி ஜெயந்தி லாங் வீகென்ட் என்பதால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உயர்குடியும் இங்குதான் வருவேன் என்பது போல் அடம்பிடிருத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
கிடைத்த ஒரே ஒரு அறையையும் மகளிர் அணிக்குக் கொடுத்துவிட்டு இரவு வேட்டைக்காக ஹோட்டல் சாகருக்குச் சென்றுவிட்டோம்.   

அனந்தகோடி சொர்க்கவாசல் - 2

ஒரு பயணம் தன்னால் எவ்வளவு அனுபவங்களைத் தரமுடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டிருந்தது. உடன் இருப்பவர்கள் அத்தனை பேரும் வயதிலும் அனுபவத்திலும் திறமையிலும் பெரிய பெரிய ஆட்கள். நான் இங்கு வெறும் பார்வையாளன் மட்டுமே. அவர்களுடைய அனுபத்தில் இருந்து எனக்கான உலகை கட்டமைத்துக் கொண்டிருந்தேன். எனக்கான உலகில் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என வழிகாட்டிக் கொண்டிருந்தவர்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தேன். இங்கே வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் ஆகச்சிறந்த உதாரணங்கள். உலகம் ஒரு சமயம் சிறியது, ஒரு சமயம் மிகப்பெரியது. இவர்களை எல்லாம் சந்திக்கச் செய்த நிகழ்வில் தன்னைச் சுருக்கிக்கொண்ட உலகம், அவர்களுடைய அனுபவவெளியில் எல்லையில்லாது விரித்துக்கொண்டது. 

சுருங்கி விரியும் இந்த உலகில் கனவு ஒரு பூமராங். என்றோ தூக்கி எறிந்த கனவுகள் மீண்டும் கைகெட்டலாம். அப்படியான ஒன்றாகத்தான் இந்த அனுபவத்தைப் பார்க்கிறேன். ஆவலுடன் அதனோடு கை குலுக்கிறேன். ஏக்கப் பெருமூச்சோடு சென்னைக்குள் நுழைந்த முதல் நாளுக்கும் இந்த நாளுக்குமான இடையில் எத்தனையோ கனவுகளை தூர வீசி எறிந்திருக்கிறேன். என்றேனும் ஒருநாள் அவையனைத்தும் என்னை வந்து சேரக்கூடும். ஏனென்றால் கனவு ஒரு பூமராங். 

இரண்டாம் நாள். ஆவி தான் இயக்கிய, நடித்த குறும்படங்களுடன் அந்த நாளை துவக்கி வைத்தார். எல்லாருமே செம எனர்ஜிடிக். விடியவிடிய பேசிக் கொண்டிருந்தாலும் விடியும் முன் எழுந்துவிட்டார்கள். மீண்டும் ரிசார்ட். அட்டகாசமான காலை உணவு. உண்மையச் சொல்வதென்றால் இப்படி ஒரு காலை உணவை இதுவரைக்கும் உண்டதில்லை. ஏன் பார்த்தது ம்ம்கும் கேள்விபட்டது கூட இல்லை. இட்லி தோசை பூரி பொங்கல் மிஞ்சிப்போனால் புட்டு இடியாப்பம், ஆனால் இங்கே அது இது என்றில்லை எல்லாமும் கிடைத்து. பழவகைகள், பிரட் வகைகள், தென்னிந்தய உணவு, பிறநாட்டு உணவுவகைகள் என அடுக்கியிருந்தார்கள். முடிந்த மட்டும் வயிற்றை நிரப்பிக் கொண்டேன்(டோம்). 


டின் @ தினேஷ்
மேக்கப் கலையாமல் நடந்து கொண்டிருந்த முந்தைய தினத்து அழகிகள் அனைவரும் காலை சோம்பல் முறித்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கையில் பிரட் இருந்தது. வயதானவர்கள் கைகளில் பாலும் பழமும் இருக்க, குழந்தைகள் எதையும் சாப்பிடுவதில்லை என அடம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மட்டும் பியர் புட்டியை தூக்கிக்கொண்டு நடந்து கொண்டிருந்தார்கள். பரபரப்பான தங்கள் உலகிலிருந்து வெளிவந்து அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தார்கள். காலை சாப்பாடு முடிந்ததும் நிரம்பிய வயிறை சுமந்துகொண்டு நீச்சல்குளத்தை நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். 

இங்கே சில பகுதிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளன

'நீச்சல்குள பராமரிப்பில் கிளப் மகேந்திராவை மிஞ்ச ஆள் கிடையாது' கௌதம் சார் கூறினார். அவர் கூறியது உண்மையே. பொதுவாகவே நீச்சல் குளங்களில் தண்ணீர் இருக்கிறதோ இல்லையோ சரிபாதி க்ளோரின் கலந்த கெமிக்கல் இருக்கும். இங்கே அப்படி இல்லை. க்ளோரின் கலக்கபட்டிருந்தும் அதன் சுவை தொந்தரவாக இல்லை. முந்தைய தினம் நீச்சல்குளத்தில் இறங்கிய போதே எதையாவது விளையாடலாம் என்று யோசித்து அந்த யோசனையை கைவிட்டிருந்தோம். இன்றைக்கு கையில் ஒரு பந்து சிக்கியிருந்தது. வயது வித்தியாசம் பாராமல் விளையாடும் குணம் அமைவது மிகஅரிது. இந்தக் குழுவில் வயது ஒரு தடை இல்லை. மங்கி விளையாடலாம் என்று அழைத்தபோது தயங்காமல் அத்தனை பேரும் ஒத்துக்கொண்டார்கள். 

மங்கி விளையாடி இருந்தீர்கள் என்றால் தெரியும் அது எந்தளவிற்கு நம்முடைய ஈகோவைச் சீண்டும் விளையாட்டு என்று. மங்கியாக நிற்பவர்களை எளிதில் சீண்ட முடியும். 'நீ என்னடா வெண்ண' என்ற மனநிலையில் இருப்பவர்கள் மங்கியாக சிக்கினால் சும்மா வச்சி செய்யலாம். அவர்களின் கோவத்தை எளிதாகக் கிளறலாம். போங்கடா நீங்களும் உங்க விளையாட்டும் என்று பந்தை தூக்கி எறிந்துவிட்டுப் போன எத்தனையோ மங்கி நண்பர்களை எனக்குத் தெரியும். இங்கே ஒருவர் கூட மறுப்பு தெரிவிக்கவில்லை. குதுகலமாக ஆரம்பித்த விளையாட்ட்டு போகப்போக சூடுபிடிக்க ஒருகட்டத்தில் 'நான் தான் மங்கியாக நிற்பேன்' 'நான் தான் மங்கியாக நிற்பேன்' என்று அத்தனைபேரும் ஆசைப்படும் அளவுக்கு அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தது. அந்தப்பகுதிகளை சென்சார் செய்வதைத் தவிர வேறுவழியில்லை என்று டான் கேட்டதால் ஜலக்கிரீடை நடத்திய அந்த கும்பலை வெட்டிவிடுகிறேன். சொல்ல மறந்துவிட்டேன் டைனிங் ஹாலும் சரி, ஸ்விம்மிங்பூலும் சரி அட்டாச்ட் பார் வசதி கொண்டது. 

இது நீச்சல் குளத்து ஆவி. நீச்சலடிக்கும் ஆவி  

கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் நீச்சல் குளத்திலேயே இருந்தோம். இருந்தோம் என்பதை விட கிடந்தோம் என்பது தான் சரி. எங்களுக்குள்ளான முறையான அறிமுகமே அங்கு தான் நடத்தது. கௌதம், பரிசல், விஸ்வா இவர்களின் எழுத்து முயற்சிகளை, அவர்கள் கூறிய அனுபவங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். சோஷியல் மீடியாவுக்கு முந்தைய தலைமுறை மீடியாவை நன்றாக உள்வாங்கியிருந்த அவர்களின் அனுபவம் எங்கு தேடினாலும் கிடைக்காத வரம். இன்னுமின்னும் பேசமாட்டார்களா என்ற ஆர்வத்தில் ஒவ்வொருவரின் கதைகளையும் கேட்டுக்கொண்டிருந்தேன். காலம் அதன் போக்கில் ஓடிக் கொண்டிருந்தது. மூன்று மணியுடன் மதிய உணவு வழங்குவதை நிறுத்திவிடுவார்கள் என்பதால் வேறுவழியே இல்லாமல் நீச்சல் குளத்தைவிட்டு வெளியே வந்தோம். மதிய உணவு, பின் ஒரு சிறிய ஓய்வுக்குப் பின் பயணம் தனது முடிவை நெருங்கிக் கொண்டிருந்தது. 

பயணத்தின் பயணம்

அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் ஆரம்பிக்கும் ஒவ்வொரு பயணங்களும் முடியும் தருவாயில் பெருத்த சோகத்தினுள் தள்ளிவிடுகிறது. மீண்டும் இயந்திர வாழ்க்கைக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை விட எதைபற்றியும் சிந்திக்காமல் இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்தோமே அந்த சந்தோசத்திற்கு பங்கம் வரப்போகிறதே என்ற உணர்வு தான் பெரும் பாரமாய் இருக்கிறது. திடிரென ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது. இருந்தும் இந்த வெற்றிடம் மிகவும் அவசியம் என்பேன். இல்லையென்றால் ஒரே ஒரு பயணத்திலேயே நமது மொத்த ஆசைகளையும் தீர்த்துக்கொண்டு அடுத்த பயணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டோம். இந்த வெற்றிடம் அடுத்த பயணத்தின் தேவையை உடனே உருவாக்கிறது. எப்போதுமே நாடோடியாய் வைத்திருக்க உதவுகிறது.


கௌதம் சார்
எவ்வித யோசனையுமில்லாமல் பல அருமையான நட்புகளை அடையாளம் காட்டிவிடுகிறது காலம். பொதுவாகவே நான் புதிதாக சந்திப்பவர்களிடம் பழகுவதற்கு கொஞ்சம் கூச்சப்படுவேன். எவ்வளவோ முயன்றும் அதை மட்டும் என்னால் விரட்டி அடிக்கமுடியவில்லை. ஆனால் இங்கே, சின்னப் பையன்தானே என எவ்வித ஈகோவும் இல்லாமல் பழகிய அத்தனை பேரையும் வெகுவாகப் பிடித்துவிட்டது. நெடுநாள் பழகியவர்களிடம் இருந்து பிரியும் அந்தப் பிரிவு லேசான வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவரவர் நிமித்தம் அவரவர் பாதையை திறந்து வழிவிட்டதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். பாண்டியில் இருந்து சென்னை நோக்கி விரைந்த பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துகொண்டு நடந்த மொத்த நிகழ்வுகளையும் ஒருமுறை ஓட்டிப்பார்த்தேன். மனம் லேசாகி இருந்தது. கரம் பற்றி அழைத்துச்சென்ற அந்த இரண்டு தேவதைகளுக்கும் என்னால் முடிந்தமட்டும் நன்றி கூறிக்கொண்டேன். அவர்கள் இல்லையென்றால் நிச்சயம் இந்தப் பயணம் இல்லை. அவர்களை உங்களுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் இல்லையா! அந்த தேவதைகளின் பெயர் கிங் விஸ்வா மற்றும் கெளதம். 

***


பதிவுலகில் நான் வியந்து பார்க்கும் மனிதர்களில் ஒருவர் அப்பா சார். அவர் எழுத்துக்கு இணை அவரே. அவருடைய அறிமுகமும் நட்பும் கிடைத்தது முன் ஜென்மத்து புண்ணியம் என்று கூறினால் கிளிஷேவாக இருக்கும். சமயங்களில் குட்டவும், தோளில் தட்டவும் செய்யும் இவர் என்னுடைய மிகப்பெரிய ஆதர்சம். தான் எழுதி வரும் பாடல் பெற்ற பதிவர் என்ற பதிவில் என்னைப் பற்றி எழுதி இருக்கும் சொற்கள் - நிச்சயம் என்னை உயிர்ப்புடனும்  உற்சாகத்துடனும் எழுதச் செய்யும்! நன்றி அப்பா சார். 

21 comments:

  1. // நீங்க என்ன என் கிளையன்ட் மாதிரி கேட்ட கேள்வியவே திரும்பத் திரும்ப கேட்கிறீங்க// ஹிஹிஹி

    ReplyDelete
  2. //இங்கே சில பகுதிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளன// அதெல்லாம் டைம் பாஸில் வருமோ? ;)

    ReplyDelete
  3. // நீச்சலிடிக்கும் ஆவி // நீச்சல் இடிக்கும்??? குசும்பய்யா உமக்கு!

    ReplyDelete
  4. வாவ்.. இந்த முறை உங்க எழுத்தையும் தாண்டி உங்க போட்டோகிராபி என்னை ஈர்த்தது.. ஒளி அறையில் நீங்கள் செய்தவைகள் நல்ல பலனளித்துள்ளது.. தொடருங்கள்.

    ReplyDelete
  5. அந்த இரு தேவதைகளுக்கு என் நன்றிகளும்..!

    ReplyDelete
  6. இவ்வளவு நேரம் மகிழ்ச்சியாக இருந்தோமே அந்த சந்தோசத்திற்கு பங்கம் வரப்போகிறதே என்ற உணர்வு தான் பெரும் பாரமாய் இருக்கிறது. திடிரென ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது. இருந்தும் இந்த வெற்றிடம் மிகவும் அவசியம் என்பேன். இல்லையென்றால் ஒரே ஒரு பயணத்திலேயே நமது மொத்த ஆசைகளையும் தீர்த்துக்கொண்டு அடுத்த பயணத்தைப் பற்றி யோசிக்கவே மாட்டோம். இந்த வெற்றிடம் அடுத்த பயணத்தின் தேவையை உடனே உருவாக்கிறது. எப்போதுமே நாடோடியாய் வைத்திருக்க உதவுகிறது. /// கிளாஸ்டா சீனு. இவன் என்னவன் என்று மகிழ்ச்சியுடன் கை குலுக்குகிறேன்.

    ReplyDelete
  7. அப்பா ஸாரிடம் பாடல் பெற்ற பாக்கியசாலி ஆய்ட்டே.... ஆனா அவர் உன்னை நுண்மை பிறழா இலக்கிய நூல் ஒன்றை வெளியிடச் சொல்லியிருக்கிறார் என்பதை சிவப்பு மையால் அடிக்கோடிட்டு உன் கவனத்திற்கு எடுத்துச் செல்ல விழைகிறேன்.

    ReplyDelete
  8. கௌதமும், பரிசலும் பயணம் எனக்குத் தந்த மற்றுமிரு மாணிக்கங்கள். நினைவில் என்றும் நிற்கும் இந்தப் பயணத்தை உன் எழுத்தில் மீண்டும் நுகர்ந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

    ReplyDelete
  9. இடையிடையே மூச்சு விடுவதற்காக படங்களை சொருகியதுபோல் தெரிகிறது. அப்படித்தான் எனக்கிருந்தது. ரெக்கையில்லா இருட்டு தேவதைகளின் வரம் இரவிற்கு சுகம்...

    சிறப்பான எழுத்து சீனு...

    ReplyDelete
  10. எழுத்து(ம்) நன்றாக வருகிறது சீனு உங்களுக்கு.. ஆரம்பித்ததே அமர்க்களம்! கேமராக்காரனாகத்தான் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள். விடாமல் எழுதுங்கள்!

    ஆனால்.. பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை 4 மணிக்கு, ஜம்போ சைஸ் பிட்சாவும், பிக் சைஸ் சாண்ட்விச்களும் ஆர்டர் பண்ணி, தன் தொப்பையைக் 'கரெக்ட்' பண்ணிக்கொண்ட விஷ்வாவையும், முன் பக்கம் தொலைந்த முடிகளைக் கவர் பண்ணுவதற்காக கர்ச்சீப் போர்த்திக்கொண்டு போஸ் கொடுத்த என்னையும் தேவதைகளாகக் கற்பனை செய்து பார்க்க எனக்கே சகிக்கவில்லை! மென்மையாகக் கண்டிக்கிறேனாக்கும்!

    அதென்ன உயர்.. உயரிய.. உயர்குடிகாரர்கள்! டிமாண்ட் அண்ட் சப்ளை தியரிப்படி நாம்தான் அந்த உயர் உயர் குடிமக்களய்யா. தறிகெட்டு உழைத்துக் களைத்து, மண்டை காய்ந்து கிடக்கும் நம்மைப் போன்றோருக்குப் பலன் தந்தே, இதைப் போன்ற சொர்க்கங்கள் தங்கள் பிறப்பின் அர்த்தத்தை பூர்த்தி செய்துகொள்ள முடியும்!

    முன்பெல்லாம் (சுமார் நான்கைந்து வருடங்களுக்கு முன்னதாக) இதைப் போன்ற இடங்களுக்குப் போகும்போது, வட இந்தியர்களையும் வெளி நாட்டவர்களையும்தான் பார்க்க முடியும். இப்போது தமிழ்க் குரல்களும் குறிப்பிட்ட அளவில் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. டூர் என்றாலே கோயில் - குளம் என்றிருந்த நிலை மாறி, ஓய்வு - உற்சாகம் - புத்துணர்வு என நம்ம மக்களும் நல் வழிக்கு வந்து விட்டார்கள்! ஆக.. நாம்தான் - நாமேதான் அந்த உயர்குடிப் பிறந்தோர்!

    மாதாமாதம் 500 - முதல் 1000 வரை முடிந்த பணத்தைச் சேமித்து வையுங்கள் இப்படி ஊர் சுற்றுவதற்கென. நமக்கு உயரே ஒரு பயலும் இல்லை!

    பெரிய ஆட்கள் - சிறிய ஆட்கள் எனக் குறிப்பிட்டது தொடர்பாக சிறிய விளக்கம். குஞ்சென்றும் மூப்பென்றும் இல்லை சீனு.. வந்திருந்த ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து ஏதோ ஒன்றையாவது கற்றுக்கொண்டுதான் திரும்ப வந்திருக்கிறோம்! அந்தவகையில் அனைவரையும் ஒரே புள்ளியில் இணைத்த, விஷ்வாவுக்கு அநேக நன்றிகள்!

    ‘ஒரு பயணம் தன்னால் எவ்வளவு அனுபவங்களைத் தரமுடியுமோ அவ்வளவையும் கொடுத்துக் கொண்டிருந்தது’ என்ற உங்கள் வரிகளும் ஆரம்பப் பாராக்களில் நீங்கள் கொடுத்த முஸ்திபுகளும், இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே என்ற கேள்வியைத்தான் எழுப்புகிறது! ஆனால் என்ன செய்வது.. குறும்படப் பதிவு, படகுப் பயணம், நிலவொளியில் நீண்ட நேர பீச் பேச்சு, அதிகாலை வாக்கிங், அந்தாதி பாட்டுப் போட்டி… இப்படி திட்டமிட்டிருந்த எல்லாமும் நடந்திருந்தால் இன்னும் எக்கச்சக்க சுவாரசியம் சேர்த்திருக்கும் இந்தப் பயணம்.
    விட்டவற்றைப் பிடிப்பதற்கான கால அவகாசமும் அனுபவப் பகிர்வும் அடுத்த முறை வாய்க்கட்டும்! வாய்க்கும்!

    நிறையப் படிக்கிறிர்கள் எனக் கருதுகிறேன். உங்கள் எழுத்து அடர்வாகவே இருக்கிறது. முதல் பாராவை மறுபடி ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள் சீனு! வாழ்த்துக்கள்!

    பி.கு: பாண்டிச்சேரிக்கும் சொர்க்கத்துகும் முடிச்சுப்போட்டு தலைப்பிட்டிருப்பதால், மொடாக்குடி குடித்தோமாக்கும் என படிப்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடும். மக்களே.. ம்ஹூம்.. பேசுவதிலும் பேச்சைக் கேட்பதும் சுவாரசியமாக இருந்ததால், சரக்குக்கு சந்து பொந்துதான் கிடைத்தது. ஆளுக்கு அரை மூடி குடித்திருந்தால் அதிகம்! கவனிக்கவும் 'மூடி'தான், பாட்டில் அல்ல!

    ReplyDelete
  11. நல்ல நடை! இனிய பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. எத்தனை வருடங்களாகி விட்டன உங்கள் எழுத்துக்களையெல்லாம் பார்த்து! நலமா?

      Delete
  12. சென்சார் செய்த பகுதிகளை என் மெயில் ஐடிக்கு அனுப்பவும்!!!!!

    ReplyDelete
    Replies
    1. வேணாம்யா. தாங்க மாட்டே....

      Delete
  13. உங்களின் எழுத்தில் மெருகு கூடிக்கொண்டே போகிறது! அத்துடன் இந்த முறை புகைப்படத்திலும் அசத்தி இருக்கிறீர்கள்! சிறப்பான நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்! அவர்களுடன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  14. தேவதைகள் என்றால் முதுகில் ரெக்கைகள் கட்டிக்கொண்ட வெண்னிற உடையனிந்தவர்கள் என்ற மாயையை உடைத்தெறிந்து இப்படியும் யோசிக்கனும்
    என்று சிவப்பு இங்கில் அடிக்கோடு போட்டுவிட்டீர் சீனு

    ReplyDelete
  15. உணவு= =உண்ணவேண்டும்.
    நீர் அல்லது பானகம்= =அருந்தவேண்டும்
    தீனி= =தின்னவேண்டும்

    kalakarthik
    karthik amma

    ReplyDelete
  16. food should be eaten.''aruntha ' enraal drinking .hope you would take this correction in the right sense.
    kala karthik
    karthik amma

    ReplyDelete
  17. செம சீனு! அசத்திட்டீங்க சொர்கம் பற்றி....அழகான நடையில் (அப்போ நீங்க தண்ணில நீச்சல் அடிக்கலையா??!!!) அருமையான ஜலக்ரீடை பற்றிய விவரணம்...அது சரி ஜலக்ரீடை ன்னாலே சென்சார் செய்துடுவாங்களோ...கண்ணு பட்டுரும்னா??!!!!..

    ReplyDelete