உங்கள் இருவருக்குமான இந்த மடலை எழுதலாமா வேண்டாமா என்ற மிகப் பெரிய மனப் போராட்டத்திற்குப் பின் எழுதத் தொடங்குகிறேன். புதிய தலைமுறை உங்கள் இருவரையும் அறிமுகம் செய்யும் முன்பே, நீங்கள் எழுதி வரும் வலைபூ மூலம் உங்களை கண்டுகொண்டேன். உங்களது தீவிர வாசகன் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள மாட்டேன், சொல்லப் போனால் சுஜாதா ஒருவரைத் தவிர வேறு எந்த எழுத்தாளர்களுக்கும் நான் தீவிர வாசகன் எல்லாம் கிடையாது. ஆனால் உங்கள் எழுத்துகள் மீது தனிப்பட்ட மரியாதை உண்டு. முதல் காரணம் நீங்கள் இருவருமே உயிர்மை வழங்கிய சுஜாதா விருது பெற்றுள்ளீர்கள், இரண்டாவது காரணம் அந்த விருதுகள் உங்கள் எழுத்தின் அருமைக்கு பெருமை சேர்த்தவை.
என்னை போன்ற இளைஞர்கள் எழுத்துத்துறையை தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்று தெளிவு பெறாத நிலையில் அந்தத் துறையை துணிந்து தேர்ந்தெடுத்து அதில் அங்கீகாரமும் பெற்றவர்கள் நீங்கள். பா ராகவன் அவர்களின் நட்பு உங்களுக்கு கிடைப்பதற்கு வலைப்பூ மிகப்பெரும் அளவில் உதவி உள்ளது. எழுத்துலகில் அங்கீகாரம் பெறுவதற்கு வலைபூவும் பதிவர் சந்திப்பும் உதவி உள்ளது என்பதை உங்கள் தளங்களில் படித்துள்ளேன். அதிஷா, நீங்கள் சுஜாதா விருது பெற்றபோது பதிவர் சந்திப்பு எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றெல்லாம் எழுதி இருந்தீர்கள் ( இதை என் நினைவில் இருந்து கூறுகிறேன். இப்போது சென்று படித்துவிட்டு வந்து கூறவில்லை). நீங்கள் இருவருமே முற்போக்கு சிந்தனை உடையவர்கள் என்பதை உங்கள் பதிவுகள் மற்றும் முகநூல் எழுத்துக்களின் மூலம் அறிந்து கொண்டேன்.
கர்ணன் திரைப்படம் பார்த்துவிட்டு வந்து கர்ணன் ஒரு க்ளோனிங் பேபி என்று யுவா எழுதி இருந்தார், இதிகாசங்கள் மீது மதிப்பு வைத்திருக்கும் என் போன்ற பல வாசகர்களை அது எவ்வளவு காயபடுத்தி இருக்கும் என்பதை யுவா அறிந்திருப்பாரா என்று தெரியவில்லை. "இவ்வாறு எழுதாதே என்று கூற நீ யார்?" என்று யுவா கேட்கலாம். உங்களை அவ்வாறு எழுத வேண்டாமென்று என்று கூறவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்கள் மீது வைத்திருந்த மதிப்பில் ஒரு படி குறைந்த்தது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதே நேரத்தில் ஹைடெக் ஆசிரமத்தில் சேரச்செலும் பணக்காரன் கதையை அதிஷா எழுதி இருந்தார் அதை நான் வெகுவாக ரசித்தேன். மூடநம்பிக்கையை சுட்டிக்காட்டினால் எவரும் ஏற்றுக் கொள்வார்கள். மூடநம்பிக்கையை கிண்டல் செய்கிறேன் என்ற பெயரில் நீங்கள் வெறுப்பதை எல்லாம் சுட்டிக்காட்டினால் எந்த ஒரு வாசகனுக்கும் அலுப்பும் எரிச்சலும் வரத்தான் செய்யும்.
மடலின் பாதை திசை திரும்பவில்லை. உங்கள் வாசகன் என்ற முறையில் உங்கள் எழுத்துக்கள் என்னுள் ஏற்படுத்திய பாதிப்புகளை முதலில் கூறினேன்.
புதிய தலைமுறையைப் புரட்டும் பொழுது, மாலன் அவர்களின் எழுத்துக்களைப் படிக்கும் முன், வாசிப்பது உங்கள் இருவரின் எழுத்துக்களைத் தான். புத்தகக் கண்காட்சியில் நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைக் குறிப்பிட்ட பொழுது உங்களின் தேடலை எண்ணி வியந்தேன். நான் எப்போது அது போன்ற புத்தகம் எல்லாம் வாசிக்கப் போகிறேன் என்ற கேள்வியை என்னுள் கேட்டுக் கொண்டேன். யுவாவின் அழிக்கப் பிறந்தவனை படிக்கும் படி பலரிடமும் கூறிகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஒரு பதிவிலும் அதைப் பற்றி கூறி இருக்கிறேன். அப்படிப்பட்ட உங்களை ஒரு வாசகனாக (சக பதிவனாக இல்லை) பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களில் நானும் ஒருவன். உங்களுடன் பேச வேண்டும் கைகுலுக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை. தூரத்தில் இருந்து உங்களை பார்க்க வேண்டும் என்ற சிறு ஆர்வம் தான். விழாவிற்கு வந்த பி கே பி அவர்களையும் அப்படித் தான் நான் ரசித்தேன்.
உங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக நீங்கள் வரவில்லை, உங்கள் அலுவல் அப்படி. அதில் தலையிடும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை. வருகிறார்களா என்று கேட்டேன். வரவில்லை என்றார்கள். ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வில்லை. ஆனால் கூகிள் பிளசில் உங்கள் எழுத்துகளைப் படித்த பொழுது மிக மிக வருத்தமாக இருந்தது. முற்போக்கு சிந்தனையை கொஞ்சம் விசாலமாக்கி இருந்தீர்கள் என்றால் அது ஹைபட்ஜெட்டா இல்லை அவ்வளவு பெரிய சந்திப்பை மிகச் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தி காசை நேரத்தை விரயம் செய்யாத அளவில் வடிவமைக்கப்பட்ட பட்ஜெட்டா என்று உங்களுக்கு தெரிந்திருக்கும்.
சந்திப்பு நடக்க மண்டபம் தேவை, ஒரு முழு நாள் விழா என்பதால் மதிய உணவு தேவை. மூத்த பதிவர்களுக்கு மரியாதையை செய்யும் விதமாக நினைவுப் பரிசு தேவை என்றெல்லாம் ஒவ்வொரு பதிவருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டுமா. நாங்கள் மெரீனாவில் நூறு நூத்தைம்பதுக்கு தான் சந்தித்தோம் நீங்கள் அப்படி சந்தித்திருந்தால் எனக்கு உடன்பாடு உண்டு. இப்போது இல்லை என்று சொல்ல வருகிறீர்களா? எல்லாரும் எல்லா நேரங்களிலும் ஒரே வழிமுறைகளைத் தான் பின்பற்ற வேண்டுமா? அந்த பணத்தைக் கொண்டு ஏழைகளுக்கு உதவலாம் என்று கூறுகிறீகள். ஏழைகளுக்கு உதவலாம் என்று சந்திப்பு நடத்துவதற்கும் ஒரு சந்திப்பு தேவை என்பது தெரியாதா? மேலும் அன்று நடந்த அந்த சந்திப்பில் ஏழைகளுக்கு உதவுவது பற்றி ஒரு விவாதம் நடைபெற்றது.
என் போன்ற புதிய இளைய பதிவர்களுக்கு பதிவர் சந்திப்பு நடைபெற்ற தினம் எவ்வளவு உற்சாகமான தினம் தெரியுமா? நான் ஒவ்வொரு தனிப் பதிவரையும் ஊர் ஊராக சென்று சந்திப்பதை விட அத்தனை பேரையும் ஒரே இடத்தில சந்திபதற்கு எனக்கு ஆன செலவு மிகச் சொற்பமே.எத்தனை பேரின் வழிகாட்டுதல் இந்தப் பதிவின் மூலம் எனக்குக் கிடைத்தது தெரியுமா? ஜெய் மிக நேர்மையாக வரவு செலவு காட்டி இருக்கிறார். ஆனால் பணம் விஷயம் என்றால் கலவரத்தில் தான் முடியும் என்று நீங்களே கலவரம் உண்டு பண்ணுகிறீர்கள். பணம் என்ற ஒன்று மட்டுமே உங்களுக்கு பிரதானமாகத் தெரிகிறது. இதற்காக உழைத்தவர்கள் யாருமே உங்களுக்கு தெரியவில்லை. யாருக்கும் தனிப்பட்ட அழைப்பிதழ் எல்லாம் கிடையாது. நாம் நடத்தும் சந்திப்பு நமக்கேன் அழைப்பிதழ் என்ற எண்ணத்தில் அனைத்து பதிவர்களும் கலந்து கொண்டார்கள் அதில் தானே இருக்கிறது இந்த சந்திப்பின் வெற்றி.
என்ன சாதித்தோம் என்று கேட்கிறீர்கள் ஒரு நாளில் ஒரு சந்திப்பில் சாதனை நிகழுமா? எந்த வில்லங்கமும் இல்லாமல் அனைவரும் மகிவாய் இனிதாய் கூடி பேசியதே நம்மைப் பொறுத்தவரை சாதனை தானே? பலரின் எழுத்துகளை மட்டுமே பார்த்தவன் அவர்களின் அணுகுமுறையைப் புரிந்து கொள்ள எனக்குக் களம் அமைத்துக் கொடுத்த இந்த சந்திப்பு சாதனை தானே? இல்லை எப்படி முடிந்த்திருந்தால் இதை சாதனையாக ஏற்றுக் கொண்டிருபீர்கள் என்று புரியவில்லை. விதை ஊன்றி இருக்கிறோம், பலனை எதிர்பாப்போம். பலமான பேனா முனை உங்களுடன் இருக்கிறது. உங்களால் இன்னும் இன்னும் ஆக்கபூர்வமணா செயலில் ஈடுபட முடியும். புதியவர்களை உற்சாகப்படுத்த முடியும். அதை விடுத்தது இவ்வளவு காட்டமாக உங்கள் கருத்தை கூறுகிறீர்கள், முன் நின்று நடத்திய மூத்த பதிவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தாதா? நீங்கள் கவனிக்கப்படாதவரை மட்டுமே உங்கள் கருத்துக்களை எல்லாரும் எல்லா நேரங்களிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை அறியாதவரா நீங்கள்?
சமஸ் மற்றும் திருமாவேலன் மீதும் அதிகமான மதிப்பை வைத்துள்ளேன், அவர்கள் எழுத்தின் வேகம் மிக மிக அதிகம். உங்களின் எழுத்துக்களையும் அந்த இடத்தில பார்க்க வேண்டும் என்ற சாதாரண வேண்டுகோளுடன் இந்த மடலை முடிக்கிறேன்.
இப்படிக்கு
உங்களின் வாசகன்