Showing posts with label சென்னை புத்தகக் கண்காட்சி. Show all posts
Showing posts with label சென்னை புத்தகக் கண்காட்சி. Show all posts

16 Jan 2016

போலி புத்தகக் கண்காட்சி - 2016

புத்தகக் கண்காட்சியை போலி என்று கூற ஏழு காரணங்கள்

1. இடப்பற்றாக்குறை. காற்று புகக்கூட வசதியில்லாத ஒரு மைதானத்தில் மந்தையில் அடைத்தது போல் கடைகளை அமைத்து மக்களையும் மந்தையாக்கி சிரமித்திற்குள்ளாக்கி இருப்பது முதல் குறை. பெருங்குறை. அந்தப் பக்கம் நகர்ந்தால் ஒரு பெரியவர் முறைக்கிறார், இந்தபக்கம் நகர்ந்தால் ஒரு பெரியம்மா முறைக்கிறார். எந்தப்பக்கம் திரும்பினாலும் யாராவது ஒருத்தர் இடிக்கிறார்கள். இல்லை முறைக்கிறார்கள். முறைப்புக்கு மத்தியில் புத்தகங்களை தேடவேண்டி இருக்கிறது. 

2. இடப்பற்றாக்குறையின் காரணமாக ஸ்டால்களையும் சின்னதாகவே அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியவில்லை. வெளியே நின்றால் அடுத்த ஸ்டாலின் உள்ளே நுழைய முடியவில்லை. இதன் காரணமாகவே பல ஸ்டால்களின் உள்ளே நுழைவதை தவிர்த்துவிட்டேன். மீறி நுழைந்தாலும் ஒவ்வொரு அலமாரியின் முன்னும் யாராவது ஒருவர் நின்றுகொண்டு அங்கே இங்கே நகர மறுக்கிறார்கள். நகர இடமும் இல்லை என்பது வேறுவிஷயம். 

3. ஸ்டாலின் அளவு மிகவும் சிறியது என்பதால் ஒப்புக்கு நான்கு புத்தகங்களை அடுக்கி இருக்கிறார்கள். மேடவாக்கத்தில் இருந்து ராயப்பேட்டை வரை 20+20 கிமீ பயணித்து சென்றவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் ஒரே ஆசரியர் எழுதிய அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். கணையாழி, உயிர்மை, விகடன், கிழக்கு எல்லாம் வெறும் பெயர்ப்பலகையை மட்டும் தொங்கவிட்டு விட்டு சிவனே என உட்கார்ந்து இருக்கிறார்கள். 

4. ஸ்டால் சிறியது, அடுக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் ஒரு கடையிலும் Card Payment வசதி இல்லை. கணையாழியில் மட்டும் புண்ணியத்திற்கு Card Payment வசதி செய்து கொடுத்துள்ளார்கள். இதனாலேயே பெரும்பாலான ஸ்டால்களில் எடுத்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். வாழ்க வளமுடன். அன்பர் ஒருவர் மூவாயிரம் ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்துவிட்டு என்ன செய்வதன தெரியாமல் பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தார்,  கூடவே அவர் கையில் இருந்த ஜெமோவும், சாருவும், யுவன் சந்திரசேகரும்.     

5. வெறும் ஸ்டால்கள் என்பதால் எந்த கடைகள் எந்த வரிசையில் இருக்கிறது என்ற வழக்கமான கையேடை அச்சடிக்காமல் விட்டிருக்கிரார்கள். பெரும்பாலான நபர்கள் எந்த கடை எங்கிருக்கிறது என செக்யுரிடியை கேட்டு டார்ச்சர் செய்ய 'தோ அந்த பக்கம் போனா, எழுதி ஒட்டி இருக்காங்க. போய் பாரு' என்று கூறிவிட்டு அருகில் நின்ற என்னை நோக்கியவர், 'ஜனம் மொத்தமும் எங்கிட்டயே வந்து கேட்டா இன்னா சார் செய்வேன்' என்றார். முறையான வழிகாட்டுதல் இல்லை என்பது ஒரு மாபெரும் குறை. 

6. இடப்பற்றாக்குறை காரணமாக முறையான பார்க்கிங் வசதி இல்லை. சகட்டுமேனிக்கு வாகனங்கள் வந்து செல்வதால் அரங்கம் மொத்தமும் தூசி/புழுதி. அரங்கை விட்டு வெளியில் வந்தால் தூசி அபிஷேகம் நிச்சயம். 

7. முறையான பார்க்கிங் வசதி இல்லை என்பதை விட, பார்க்கிங் வசதியே இல்லை என்று கூறலாம். அனைவரும் சகட்டுமேனிக்கு வண்டியை நிறுத்தி, அருகில் நிறுத்தப்பட்ட வண்டிகளை காயப்படுத்தி ரணகளப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஏண்டா வண்டியில் வந்தோம் என்று ஆகும் அளவுக்கு இருக்கிறது வாகன நெரிசல்.

சென்னையில் வசிப்பதால் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமே புத்தகக் கண்காட்சி தான். அதை எதோ ஒரு அமைப்பு ஏனாதானோவென நடத்துவது என்போன்ற/ நம்போன்ற வாசகர்களை ஏமாற்றுவது போல் தான் இருக்கிறது. இதில் விடுமுறை தினத்தன்று அவ்வளவு தூரம் பயணித்து ஏமாந்தது இன்னும் கடுப்பாய் இருக்கிறது. ஒரே நல்ல காரியம் சென்னையில் இன்றைக்கு வாகன நெரிசல் இல்லை என்பதுதான். 


மேலும் பபாசியை விட வேறு யாராலும் புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த முடியாது என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள் இப்போது புத்தகக் கண்காட்சி நடத்தும் இந்த அமைப்பினர். எல்லாம் சரி சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக, புத்தக உலகின் தொய்வை சரிசெய்வதற்காக என்றெல்லாம் கூறும் சால்ஜாப்புகள் தான் மேலும் கடுப்பைக் கிளப்புகின்றன. ஓய்வான ஒரு மாலை வேளையில் டிஸ்கவரிக்கோ, அகநாழிகைக்கோ, பனுவலோக்கோ சென்றால் இதைவிட அதிக கலெக்சன் கிடைக்கும், இதைவிட நிம்மதியான புத்தகத் தேடல் கிடைக்கும் என்பதே இன்றைக்கு யாம் பெற்ற இன்பம். 

அது என்ன ஏழு காரணம் என்று கேட்கிறீர்களா? புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை எழு. 

புதுமைப்பித்தன் கதைகள் - முழு தொகுதி - கணையாழி
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
ஒற்றன் - அசோகமித்திரன்
சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்
கன்னி நிலம் - ஜெமோ
தேகம் - சாரு
பறவை உலகம் - சலீம் அலி

இந்திய அரசாங்கத்தின் நேஷனல் புக் டிரெஸ்ட் பதிப்பகத்தை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். குறைவான விலையில் புத்தகம் விற்கிறார்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கதைகளாகவும், தெரியாத ஆசிரியர்களாகவும் இருந்ததால் பறவை உலகம் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் வாங்கவில்லை. நாளைக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே நினைகிறேன். திங்கட்கிழமை ஓய்வாக இருந்தால் ஒரு எட்டு சென்று வாருங்கள். யார் புத்தகக் கண்காட்சி நடத்தினால் என்ன இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் ஹீரோ வாத்தியார் சுஜாதா தான். 

19 Jan 2015

சென்னை புத்தகக் கண்காட்சி 2015 - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை

சென்னை புத்தகக் கண்காட்சி, முதல் நாள் மாலை அவ்வளவாகக் கூட்டம் இல்லை. கண்காட்சிக்கான ஏற்பாடுகளும் முழுமை அடைந்திருக்கவில்லை. கண்காட்சித் திடலும் சரி, புத்தக அரங்குகளும் சரி தங்களுடைய இறுதி கட்ட பணிகளில் மும்மரமாகி இருந்தன. பெரும்பாலான கடைகளில் அப்போதுதான் புத்தகங்களையே அடுக்கிக் கொண்டிருந்தார்கள். கூட்டமே இல்லாத அரங்க வீதிகளில் நான் ஆவி சூர்யா கூடவே வெற்றிவேலும் நடந்து கொண்டிருந்தோம். இவ்வளவு விசாலமான வீதிகள் விடுமுறை தினங்களில் மனிதக் கால்களால் நிரம்பி இருக்கும். தலையை கொஞ்சம் உயர்த்தி எக்கிப் பார்த்தால் மனிதத் தலைகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது. 



அடுக்கபட்டிருக்கும் புத்தகங்களையும், அடுக்கப்பட இருக்கும் புத்தகங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே நடந்து கொண்டு இருந்தோம். தரையில் பச்சைக் கம்பளம் விரித்துக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் நடக்க ஆரம்பிக்கவில்லை என்பதால் ஆங்காங்கு துருத்திக் கொண்டு நின்றது. எங்கோ பார்த்தபடி நடந்து கொண்டிருந்த குழந்தைகள் தடுக்கி விழுந்து பெரியவர்களுக்கு எச்சரிக்கைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். புத்தகக் கண்காட்சியின் முதல் புத்தமாக சுஜாதாவின் பூக்குட்டியும், வைரங்களும் வாங்கினேன். அரங்கு எண் ஒன்றிலிருந்து எழுநூறு வரை மெல்ல நடந்து கொண்டிருந்தோம். முதல்நாள் முழுவதும் நடந்து கொண்டே இருந்தோம். ஆவி பேசிக் கொண்டே இருந்தார். அவர் பேசாமல் நடந்தால் தான் ஆச்சரியம்.

இம்முறை மொத்தமாக நான்கு தினங்கள் புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளைப் பற்றியும் தனித்தனியாக எழுதி உங்களை அறுக்க மனமில்லை. பிழைத்துப்போங்கள். இனி மொத்தமாக ஒரு குறுக்குவெட்டுப் பார்வை. 

தொடர்ச்சியாக நான்காவது வருடமாக புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதால் முதன்முறை தெரிந்த பிரம்மாண்டமும் பிரம்மிப்பும் இப்போது இல்லை என்றாலும் ஆர்வம் கொஞ்சமும் குறையவில்லை. மேலும் புத்தக உலகினுள் நிகழும் சஞ்சாரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத ஒன்று. பார்க்கும் புத்தகங்களை எல்லாம் அடுத்த நிமிடமே படித்து முடிக்க வேண்டுமென்ற வேட்கையை ஏற்படுத்தக் கூடியது. எத்தனை எத்தனை புத்தகங்கள். எவ்வளவு எழுத்தாளர்கள். மலைப்பாய் இருக்கிறது. எவ்வளவு பெரிய வாசக உலகம் நம்மிடம் இருந்திருந்தால் இவ்வளவு எழுத்தாளார்கள் முளைத்திருக்க முடியும். ஆனாலும் எழுதப்பட்ட அத்தனை புத்தகங்களும் உருப்படியானவை, ரசவாதத்தை உண்டாக்குபவை என்றெல்லாம் கூறிவிடமுடியாது.

எழுதப்பட்டதில் முக்கால்வாசி புத்தகங்கள் சுயுதிருப்த்திக்காக எழுதபட்டவையாகத்தான் இருக்க வேண்டும். ஆர்வத்தில் ஒன்றிரண்டு புத்தகங்கள் எழுதி இருப்பார்கள். சூடுபட்டிருக்க வேண்டும். பின்பு காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் அவர்களையும் கடந்து ஒரு இருபத்தி சதவிகிதம் பேர் இருக்கிறார்களே அவர்கள் எல்லாருமே நாயகர்கள் தான். தமக்கென நிச்சயம் குறைந்தது ஐநூறு வாசகர்களையேனும் சம்பாத்திருப்பர்கள். (ஏழுகோடி ஜனத்தொகையில் குறைந்தது ஐநூறு என்று கூறுவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.) மேலும் இவர்களில் பெரும்பான்மையான எழுத்தாளர்களிடம் தனித்துவமான எழுத்துக்கள் இல்லையென்றாலும் சோர்வடையாமல் கதை சொல்லுகின்ற தன்மையைப் பெற்றிருப்பார்கள். பல குடும்ப நாவல்களின், திரில்லர் நாவல்களின் வெற்றிக்குப் பின் இருக்கும் விசயமாக இதையே நான் கருதுகிறேன். சீரியல்களும் தொலைகாட்சிப் பெட்டிகளும் சமூக வலைதளங்களும் நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கியபின் இந்த குடும்ப நாவல்களுக்கான வாசகர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.   

ஜனரஞ்சக எழுத்துக்களில் இருந்து மெல்ல இலக்கியம் நோக்கி நகர்ந்தால் அங்கும் நமக்கான வாசிப்பு உலகம் பரந்து விரிந்ததாகவே இருக்கிறது. இலக்கிய வாசிப்புக்கான வாசகர்களின் எண்ணிக்கை ஜனரஞ்சக வாசகர்களின் எண்ணிக்கையை விட குறைவு என்ற போதிலும் சமூக வலைதள யுகத்தில் இலக்கியம் நோக்கி நகர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாவே படுகிறது. இது நிச்சயம் நல்ல முன்னேற்றம் தான். இந்த மாற்றத்திற்குப் பின் இருக்கும் விடயத்தை ஆராய முற்பட்டால் வாசிப்பு சார்ந்த வழிகாட்டுதல்கள் நம் சமுதாயத்தில் இன்னும் முறைப்படுத்தப்படவில்லை. இல்லை முறையான வழிகாட்டிகள் கிடைத்திருக்கவில்லை. ஆசிரியர்கள், சுற்றத்தார் செய்ய வேண்டிய பணியை தற்போது இணையம் செய்து வருகிறது. எங்கோ நடந்து கொண்டிருந்த இலக்கியக் கூட்டங்களும் திண்ணை விவாதங்களும் இன்று பேஸ்புக் குழுமங்களில் நடக்கத் தொடங்கியுள்ளன. 

இன்னும் கொஞ்சம் தீவிரமாகப் பார்த்தால் இம்முறை அத்தனை பதிப்பகங்களும் பல முக்கியமான முன்னணி இலக்கியவாதிகளின்/எழுத்தாளர்களின் படைப்புகளை செம்பதிப்பாக கொண்டு வந்துள்ளன. எனக்குத் தெரிந்து நாவல் வெளியிடுவதில் அவ்வளவாக மும்மரம் காட்டாத கிழக்கு கூட காலச்சுவடு அளவிற்கு செம்பதிப்புகளை இறக்க தயராக இருக்கிறது. வம்சி, தமிழினி, க்ரியா, சந்தியா, காலச்சுவடு என்று எங்கும் மக்களின் கூட்டத்தை காண முடிக்கிறது. தேடித்தேடி வாங்குபவர்களை விட முன்பே தயாரித்த பட்டியலின் படி கேட்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ராஜன் என்னும் இளம் இலக்கிய வாசிப்பாளர் துணிமணிகளை அள்ளிச் செல்வது போல் புத்தகங்களை மூட்டை மூட்டையாக அள்ளிக் கொண்டிருந்தார். தற்சமயம் நான் பொறாமைப்படும் நபர்களில் இவரும் ஒருவர். என்னைப் போன்றவர்கள் நன்கு அறிமுகமான புத்தகங்களை வாங்கினால் அரசனைப் போன்றவர்கள் நின்று நிதானமாக ஒரு புத்தகத்த்தின் ஒரு பக்கத்தையேனும் வாசித்து, அந்த வாசிப்பு ஈர்ப்பை அளித்தால் வாங்கிவிடுகின்றனர். என்ன உறை போட்டு வரும் புத்தகங்களை அப்படி வாங்க முடிவதில்லை என்பதால் இழப்பு புத்தகத்திற்கு தானே தவிர வாசகனுக்கு இல்லை என்பார் அரசன்.

குழந்தை இலக்கியங்கள் பரவலான வளர்ச்சியை அடைந்துள்ளது, முன்னணிப் பதிப்பகங்கள் குழந்தை இலக்கியங்களை பதிப்பிக்கத் துவங்கியுள்ளன. ரா.நடராசன், விழியன், யூமா வாசுகியின் புத்தகங்கள் பாரதி புத்தகாலயத்திலும் எஸ்ராவின் குழந்தை இலக்கியங்கள் வம்சி உயிர்மை ஸ்டால்களிலும் கிடைகின்றன. இவற்றை கேட்டு வாங்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. என்னை கேட்டல் குழந்தைகளின் வாசிப்பை வளர்த்தாலே போதும் அவர்கள் வளர வளர வாசிப்பின் வீச்சே அவர்களை வேறு கட்டத்திற்கு கொண்டு சென்றுவிடும். குறைந்தபட்சம் 'என்ன மச்சி புக்ஸ படிச்சிட்டு இருக்க', 'நமக்கு இந்த புத்தகமெல்லாம் படிக்க வராதுப்பா' போன்றவர்களின் எண்ணிக்கையாவது குறையும். 

எம் புள்ளைக்கு தமிழ் வாசிக்க தெரியாது என்பவர்களுக்கெல்லாம் குழந்தை இலக்கியங்களை வாங்கிக் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நீங்கள் படிக்க ஆரம்பியுங்கள் குழந்தைகள் உங்களை பின்தொடர்வார்கள். எத்தனை பேருக்குத் தெரியும் ஸ்கூல்பையன் வலைப்பூவில் எழுதுவதைப் பார்த்து அவர் பையன் அவருக்குத் தெரியாமலேயே நோட்டுப் புத்தகத்தில் கதை எழுதிக் கொண்டிருப்பது, நாம் நினைக்கமலேயே சில மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய வல்லமை வாசிப்புக்கு உண்டு. அதற்காகவேனும் கொஞ்சமாவது வாசிக்க வேண்டும். அதற்கு குழந்தை இலக்கியத்தின் வளர்ச்சி மிகமுக்கியமானது. தமிழ்ச் சூழலில் இன்றைக்கு அது நன்றாகவே உள்ளது. இருந்தும் நான் பார்த்தவரையில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில புத்தக ஸ்டாகளுக்கே அதிகம் கூட்டிச் சென்றதையும் கவனிக்க முடிந்தது.    

இளைஞர்கள். சுஜாதா புத்தகங்களுக்கு அப்புறமாக அவர்கள் கைகளில் கிளாசிக் நாவல்கள் அதிகம் காணக் கிடைக்க்கின்றன. சும்மா சுத்திப் பார்க்க வருவோமே என்று வந்து இரண்டு மூன்று புத்தகங்களை வாங்கியவர்களை பார்த்தேன். வினோத் அண்ணா. 'போடா நீயும் உன் புக்ஸும்' என்பவர் கைகளில் ஐந்து புத்தகளைப் பார்த்தேன். வா.மணிகண்டனையும், விநாயக முருகனையும், அபிலாசையும் பல இளைஞர்கள் தேடிவந்து சந்திப்பதாகக் கூறுகிறார்கள். லக்ஷ்மி சரவணகுமாரின் உப்புநாய்களும் கானகனையும் பலரின் கைகளில் பார்த்தேன். இதுபோன்ற நிகழ்வுகளுக்காகவாவது புத்தகக் கண்காட்சிக்கு நன்றி கூறவேண்டும். வாசிப்பு அறியாதவர்களுக்கு வாசிப்பின் அதீதத்தை ஏற்படுத்தும் உந்துசக்தி இது. 

உலகத்திலேயே கேப்ஷன் தேவைப்படாத ஒரே மனிதரல்லாத ஆவி

காலச்சுவடில் கிருஷ்ண பிரபு சில இளைஞர்களுக்கு 'எந்தப் புத்தகங்களை வாங்கலாம்' என்று பாடம் நடத்தி கொண்டிருந்தார். ஓரமாய் நின்று கொஞ்சநேரம் அவரை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி புக் பேலஸில் ஒரு நண்பர் இருக்கிறார். தன் பங்குக்கு எது எது நல்ல நாவல் என்று புத்தகங்களைத் தேர்வு செய்வதில் வழிகாட்டுகிறார். தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிவதாகக் கூறினார். கிழக்குப் பதிப்பகத்தில் ஒருவர் என்னிடம் சர்வே எடுக்க நான் வாங்கிய புத்தகங்களின் பெயர்களைக் கூறியதும் நீங்க ப்ளாக்கரா என்றார். 

ரஞ்சனி அம்மா எழுதி இருக்கும் மலாலா புத்தகம் கிழக்குப் பதிப்பக டாப் டென் பெஸ்ட் செல்லரில் ஒன்றாக இருக்கிறதாம். முகநூல் வாயிலாகவே அறிமுகமாகி இருக்கும் கார்த்திக் புகழேந்தியின் புத்தகங்களை பல இணைய நண்பர்கள் கேட்டு வாங்கிச் செல்வதாகக் கூறினார். கேபிள் சங்கர் யுவா அதிஷா அராத்து கருந்தேள் ராஜேஸின் புத்தகங்களின் பெஸ்ட் சேல்ஸ்க்கும் இணையம் நிச்சயம் முக்கிய காரணியே.  

ஜெயமோகனையும், சாருவையும், எஸ்ராவையும் பலரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை என்னுடைய டாப் புத்தகங்களில் இவர்கள் புத்தகங்களே அடங்கும். பெருமாள் முருகன் அத்தனை சின்ன ஸ்டால்களில் இருந்து பெரிய ஸ்டால்கள் வரைக்கும் முன் வரையில் உட்கார்ந்துள்ளார். மாதொருபாகன் கிடைக்காதவர்கள் ஆலவாயனையும் அர்த்தநாரியையும் வாங்கிச் செல்கிறார்கள். முன்பு கிழக்கு செய்த பணியை தற்போது மதி செய்து வருகிறது. பா.ராகவனும் அங்கே தான் அதிகமாகக் காணக்கிடைக்கிறார்.

விகடனின் கிளாசிக் வரிசை பலரது கைகளிலும் தவழ்கிறது, மற்றபடி விகடன் அப்படியேதான் இருக்கிறது, கிழக்கு, காலச்சுவடு ஸ்டால் வடிவமைப்பு அட்டகாசம். பனுவலில் இயற்கை சார்ந்த புத்தகங்கள் அதிகம் கிடக்கின்றன. அகநாழிகைக்கு கடைசி நேரத்தில் இடம் கிடைத்ததால் சின்ன ஸ்டாலாகவே போட்டிருந்தனர். இஸ்கான், ஈசா, நித்யானந்தா, ஓஷோ அசரமால் ஸ்டால் போடுகிறார்கள். மக்களும் செல்கிறார்கள். நித்யானந்தா ஸ்டாலில் மெட்ராஸ் பவனாருக்கு கிடைத்த தீட்சை குறித்து அவர் ஒரு நாவலே எழுதினாலும் எழுதக் கூடும்.  

நான், அண்ணன், ஆவி, அரசன், சக்தி, வாத்தியார், ஸ்கூல் பையன் ,வினோத் அண்ணா என்று பெருங்கூட்டமாக சென்றிருந்தோம். ஆங்காங்கு எதிர்பட்ட நண்பர்களாக மெட்ராஸ்பவன் சிவா,கே.ஆர்.பி, கேபிள், கிங் விஸ்வா, அதிஷா பிலாசபி பிரபா, அஞ்சா சிங்கம் மற்றும் அலுவலக நண்பர்களான சோழர் , ஆர்கே போன்றோரையும் சந்திக்க முடிந்தது. இதில் தற்செயலாக சந்தித்து பெருமகிழ்ச்சியைக் கொடுத்தவர்கள் அண்ணன் விவேகானந்தனும் நண்பன் காளிமுத்துவும், வெங்கட் நாகராஜ் & குடும்பமும். கிங் விஸ்வா உடனான சந்திப்பை தனி பதிவாகவே எழுதலாம். வெங்கட் சாரிடம் புகைப்படம் எடுப்பது எப்படி வகுப்பிற்கு செல்லலாம் என்று இருக்கிறேன். எப்போதும் பபாசி நடத்தும் மாலை நேர சொற்பொழிவுகளுக்கு செல்வது வழக்கம். இம்முறை அதற்கெல்லாம் நேரமில்லை. அதுமட்டும் தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. 

வாங்க சாப்பிடலாம் ஸ்டாலில் வழக்கம் போல் விலை அதிகம், தரமும் சுவையும் குறைவு. வேறுவழியில்லாமல் சாப்பிட வருபவர்களின் தலையில் நன்றாக மிளகாய் அறைக்கிறார்கள். நம்ம ஆட்டோவின் சேவை மீட்டருக்கு மேல் பாராட்டலாம். பேருந்து நிறுத்தம் வரை சென்று இறக்கிவிட இலவச வாகன வசதி இருந்தது. முதன்முறையாக சீசன் டிக்கெட் 50ரூபாய் என்றளவில் அறிமுகபடுத்தி உள்ளனர், முதல் மூன்று நாட்கள் புத்தகத் திடலினுள் நெட்வொர்க் சொதப்பியதால் கிரெடிட் டெபிட் கார்ட் மூலம் வாங்க நினைத்தவர்கள் தெறித்து ஓடிவிட்டார்கள். மேலும் மொபைல் சிக்னல் இல்லாததால் தொலைந்து போனவர்களை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கலாகிப் போனது. 

இந்தவருட புத்தகக் கண்காட்சி என்னளவில் இனிதே முடிவுக்கு வந்தது. பபாசிக்கும் பபாசி மூலமாக சாத்தியபடுத்திய பதிப்பங்களுக்கும். ஓய்வில்லாமல் வாசிக்க வைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றிகள். பின்வரும் அந்த பத்திகளையும் கூறியே ஆக வேண்டும்.

தீபாவளிக்கு முந்தைய இரவுகளில் அம்மாவும் கார்த்தியம்மாவும் புதுத்துணி எடுத்து வந்து வீடு முழுவதும் பரப்பி வைத்து ஒவ்வொன்றாக 'இது உனக்கு' 'இது அவனுக்கு' என்று காட்டிக் கொண்டிருப்பார்கள். அரை உறக்கத்தில் இருந்து எழுதிருந்தாலும் புதுத்துணியைப் பார்த்த உற்சாகம், அது தரும் வாசத்தில் உறக்கம் தொலைந்து மனம் முழுவதும் புதுத் துணியின் வாசம் பரவியிருக்கும்.


அப்படி ஒரு மோன நிலையில் இருக்கிறேன். எனக்கு முன்னால் புத்தகக் கண்காட்சியில் இருந்து வாங்கி வந்த புத்தகங்களை பரப்பி வைத்து ஒவ்வொன்றாக எடுத்து வாசம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த வாசங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தொலைந்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இந்நிலை அடுத்த மூன்று மாதங்களுக்காவது நீடிக்கலாம். இப்போது என்னுடைய கவலையெல்லாம் எங்கிருந்து ஆரம்பிப்பதில் என்று தான். 

படங்கள் - நன்றி வெங்கட் நாகராஜ் 

16 Jan 2014

சென்னை புத்தக உலா 2014 - புத்தகம் சரணம் கச்சாமி...!

ரண்டு வருடகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி எதிர்புறம் இருக்கும் ஆங்கிலோ இந்திய வழி பள்ளிகூடத் திடலில் நடைபெற்ற புத்தககாட்சிக்கு நேற்றுதான் சென்று வந்தது போல் இருக்கிறது. அட அதுவாவது பரவாயில்லை. கடந்த வருட புத்தக கண்காட்சியின் போது நானும் வாத்தியாரும் அருந்திய தேநீரின் சூடுகூட இன்னுமென் நாவிலிருந்து விலகவில்லை, அதற்குள் சென்னை புத்தககாட்சி - 2014 என்றால் நம்புவதற்கு கொஞ்சம் மிரட்சியாக இருக்கிறது. நம்பமுடியாத வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான் காலதேவன். யாராவது அவனைப் பிடித்து நிறுத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்துங்களேன், அந்த இடைவெளியில் நான் கொஞ்சம் ஆசுவாசப்பட்டுக் கொள்கிறேன். 


தீபாவளியையும் பொங்கலையும் இழந்துவிட்ட இக்காலத்தில் மனதிற்கு ஆறுதல் தரும் ஒரே திருவிழா புத்தகக் கண்காட்சிதான். சென்னைக்கும் பபாசிக்கும் நன்றி. புத்தக கண்காட்சி ஆரம்பித்த இரண்டாம் நாளே நான் அண்ணன் ஆவி ரூபக் மற்றும் ஸ்கூல்பையனுடன் சென்றுவிட்டாலும் இரவாட்டம் தடுபாட்டம் போட்டதால் முழுவதும் சுற்ற இயலாமல் பணிக்கு திரும்பி விட்டேன். இருந்தும் நேற்று மிக நிதானமாக மற்றொரு ரவுண்ட் அடித்துவிட்டேன்.

கடந்த வருட புத்தகக் கண்காட்சிகளில் எங்கு திரும்பினாலும் 'அவசர வழி ' தெரிந்ததே தவிர அவசரத்திற்கோர் வழி கண்ணிலேயே படவில்லை. நல்லவேளையாக இம்முறை அரங்க நுழைவாயிலின் அருகிலேயே சுத்தமான சுகாதாரமான தற்காலிக கழிப்பிடம் கட்டி வைத்துள்ள பபாசிக்கு யாராவது கோவில் கட்டினால் அதில் என் பங்காக ரூபாய் ஆயிரத்தி ஒன்று தரலாமென உத்தேசம்

எத்தனையெத்தனை புத்தகங்கள், பதிப்பகங்கள், ஆசிரியர்கள்... மலைமலையாய் குவிந்து கிடக்கும் புத்தகங்களையெல்லாம் பார்க்கும் போதே மலைப்பாய் இருக்கிறது. எங்கிருக்கிறார்கள் இத்தனை எழுத்தாளர்களும். இப்புத்தகங்களைப் பார்க்கும் போது அராத்துவின் புத்தக வெளியீட்டில் மதன் கூறியது நியாபகம் வருகிறது. மனிதன் தன்னுடைய வாழ்நாளில் அத்தனை புத்தகங்களையும் படித்துவிட முடியாது, அதனால் புத்தக தேர்ந்தெடுப்பில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென்று. இங்கே வாசகனுக்கு விடப்பட்டிருக்கும் மிகப்பெரிய சவாலும் இதுதான். 

யாரைப் படிப்பது, என்ன மாதிரியான எழுத்துக்களைப் படிப்பது என்பதில் எனக்கென எவ்வித வரைமுறைகளும் இருந்ததில்லை, ஆபத்தும் அதுவே. 'நாங்கள் பதிப்பிப்பது எல்லாமே நல்ல புத்தகங்கள்தான்' என்று மார்தட்டிய சில முன்னனிப் பதிப்பகங்களை நம்பி வாங்கிய புத்தகங்கள், தொடர்ந்து வாசிக்கப் பிடிக்காமல் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. அதனால் இம்முறை மிகவும் யோசித்து, பார்த்துப்பார்த்து, முக்கியமான எழுத்தாளர்களின் சில படைப்புகளை மட்டுமே வாங்கியுள்ளேன்/வாங்கவுள்ளேன். வரும் வருடத்தில் கி.ரா, அசோகமித்திரன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன் ஆகியோரின் ஒரு நாவலையோ அல்லது ஒரேயொரு சிறுகதைத்தொகுப்பையோ படித்துவிட வேண்டுமென்று முடிவும் செய்துள்ளேன். 

ஸ்டால்களில் அடுக்கபட்டிருக்கும் பல புத்தகங்களின் தலைப்புகள் ஆச்சரியப்படுத்துகிறது (அ) ஆயாசப்படுத்துகிறது. 'அதிக உயரம் வளர்வது எப்படி', 'ஆண்குழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்?' ஷப்பா முடியல. 

ஒரு பதிப்பகத்தில் அந்த வருடத்திற்கான வருமானம் குறைவெனில் உடனே ஒரு மருத்துவர் பெயரில் அந்தரங்க சந்தேகங்களின் தீர்வுகள் குறித்து புத்தகம் வெளியிடத் தொடங்கிவிடுகிறார்கள். எல்லா பதிப்பகங்களிலும் நமது அந்தரங்க சந்தேகத்திற்கு தீர்வு கிடைக்கிறது. அதேநேரம் இதுபோல் நான்கு புத்தகங்கள் படித்தால், 'ஐந்தாவதை நானே எழுதிவிடுவேனோ?' என ஐயமாகவும் இருக்கிறது. இப்படியான அந்தரங்க புத்தகங்களும் காமசூத்திர புத்தகங்களும் மட்டுமே கண்ணில்பட்ட நிலையில் அந்த ஸ்டாலின் ஒரு அடுக்கில் காமம் + காதல் =கடவுள், நவீன காமசூத்திரம் உங்களுக்காக என்ற புத்தகளுக்கு நடுவே 'செஸ் விளையாட கற்றுக்கொள்வது எப்படி?' என்றொரு புத்தகம் கண்ணில் பட்டது. அட அசிங்கம் புடிச்சவிங்களா இப்படி எல்லாமாடா தலைப்பு வைப்பீங்க என்றபடி மற்றொரு முறை அத்தலைப்பை வாசித்த போதுதான் உணர்ந்தேன் 'க்'கை சேர்த்து வாசித்தது என் தவறு என்று. 

மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா சாண்டில்யன் உட்பட பல எழுத்தாளர்களின் புத்தகங்கள் மலிவு விலைக்கு கிடைக்கின்றன. சிலவற்றை பொறுக்கிக் கொண்டேன்.

விகடன் ஸ்டாலினுள் நுழைந்த போது என்னருகே நின்றவர் 'ச்ச என்ன தம்பி புஸ்தகம் ரேட்டு ல்லாம் தாறுமாறா இருக்கு' என்றார் சிரித்துக்கொண்டே. 'அதான் சார் பிரச்சனையே' என்றேன் அமைதியாக. 'இல்ல தம்பி ஒரு புஸ்தகமும் வாங்க முடியலியே என்ன பண்றது' என்றார் தனது ஆதங்கக் குரலில் . 'அதுதான் சார் நம்ம பிரச்சனையே' என்றேன் கொஞ்சம் துடுக்காக, மனிதர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அதன் பின் என்னிடம் ஒருவார்த்தை கூட பேசவில்லை. 
  
உயிர்மை, காலச்சுவடு, தமிழினி போன்ற பல பதிப்பகங்கள் மீது கோபம் கோபமாக வருகிறது. சாதாரண சிறிய புத்தகத்திற்குக் கூட யானைவிலை குதிரைவிலை. தரம் இருக்கிறது, இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக எல்லா புத்தகங்களையுமே வாசகனானவன் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாப்பான் என எப்படிச் சொல்லமுடியும். ஒருமுறை படிப்பான், சுவாரசியம் மிகையென்றால் மேலும் இருமுறை படிப்பான். அப்படிப்பட்ட புத்தகங்களை மிகத்தரமான அச்சிலும், ஏனையவற்றை சாதாரண அச்சிலும் வெளிக்கொணர்ந்தால் எம்மைப் போன்ற மத்யமர்களின் வாசிப்பின் பரப்பும் விரியுமே? அதே மேடையில் சாரு வருத்தபட்டார் என் போன்றவர்களின் புத்தகங்கள் 1000 பிரதிகளைக் கூட தாண்டி விற்பதில்லை என்று. இவ்வளவு விலை வைத்தால் எவன் வாங்குவானய்யா! நடுத்தர வர்க்கமும் வாங்குபடியான (வி)நிலை வராதவரை தமிழ்ச்சமுதாயத்தின் பெரும்பகுதி தன் நேரத்தையும் பணத்தையும் இலக்கியம் நோக்கி செலவழிக்க மறுக்கிறதென ஒவ்வொரு எழுத்தாளனும் பதிப்பகமும் பொங்கும் உங்களின் பொருமல்கலளில், புலம்பல்களில் இம்மியளவு நியாயமும் இருக்கபோவதில்லை.  

மேற்கூறிய பத்தியில் இருக்கும் என் ஆதங்கத்தின் பெரும்பகுதி முத்திரை பதித்த எழுத்தாளர்களையே சென்று சேரட்டும். ஜெயமோகன், கிரா, எஸ்ரா, பாரா, வண்ணதாசன், நாஞ்சில்நாடன், அசோகமித்திரன், சாரு, வாமுகொமு இன்னும்பலர் என யாருடைய எழுத்துக்களும் மலிவு விலையில் இல்லை. தங்களுடைய மிக முக்கியமான புத்தகங்களையாவது மலிவு விலை பிரசுரமாக பிரசுரித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மட்டுமே என்னிடம் மிச்சமிருக்கிறது. ஒருவேளை அப்படி வெளியிடுவதாய் உத்தேசமிருந்தால் தயவுசெய்து உயிர்மை பக்கம் போய்விடாதீர்கள். அவர்களுடைய அகராதியில் மலிவுவிலை எனப்படுவது நூற்றி ஐம்பதுக்கும் மேல் :-)     

பாரதி புத்தக நிலையம் என்ற ஒன்றைப் பார்த்தேன், தரமான காகிதம், குறைவான விலை நேர்த்தியான அச்சு. என்னவொன்று யாருமே பிரபலமாகாத எழுத்தாளர்கள். என்ன நம்பிக்கையில் வாங்குவது என்றே தெரியவில்லை. இங்கே நிலை இப்படி என்றால், அங்கே நிலை அப்படி. விகடன் கிழக்குப் பதிப்பகங்கள் கிடைத்த தலைப்புகளில் எல்லாம் புத்தகங்களை சரமாரியாக அச்சிட்டுத் தள்ளியுள்ளன. கிழக்கு போகிற போக்கைப் பார்த்தால் 'எங்கே விக்கிபீடியாவில் இருக்கும் எல்லாவற்றையும் மொழி பெயர்த்து விடுவார்களோ' எனப்பயமாக இருக்கிறது. என்னவொன்று அவர்களிடம் தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் (பத்திரிக்கையாளர் சமஸ் எழுதியிருந்தார் அவர்களை தரவிறக்க மொழி பெயர்ப்பாளர்கள் என்று). 

பாரா, சொக்கன் மற்றும் பலர் என்று பலரும் அங்கே போட்டிபோட்டுக் கொண்டு எழுதுகிறார்கள்ஏதோ ஒன்று. மேலைக் கலைகளை தமிழில் செப்பா விட்டால் மெல்லத் தமிழினி சாகுமென்று சொன்னான் பாரதி. அதற்கேற்ப பல கற்பித்தல்களையும் தமிழில் புகுத்திக் கொண்டிருக்கும் கிழக்கு மற்றும் விகடனுக்கு வாழ்த்துக்கள். இருந்தும் இப்புத்தகங்களில் இருக்கும் நம்பகத்தன்மை அந்த எழுத்தாளனின் மேல் இருக்கும் நம்பகத் தன்மையே அன்றி வேறொன்றும் இல்லை பராபரமே. தற்போது இந்த பட்டியலில் மதி என்ற ஒரு புத்தக நிலையமும் இணைந்துள்ளது. 

இம்முறை ஆங்கிலப் புத்தகங்க ஸ்டால்களின் எண்ணிக்கையும் குழந்தைசார் புத்தகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. எஸ்ரா தன் மகனை கதை கூற சொல்லி அதனை குழந்தைகள் படிக்கும் விதத்தில் எழுதப்பட்ட புத்தகங்களும் அரங்கேறியுள்ளன. குலவிச்சை கல்லாமல் பாகம்ப(டட்)டும்.  

ஜெமோ இணையத்தில் எழுதிய எல்லாவற்றையும் புத்தகமாக்கி விட்டார்கள். விகடனில் ஜோதிஜியின் டாலர் நகரம் கிடைகிறது. இந்த புத்தக சந்தையின் மற்றோர் இன்ப அதிர்ச்சி ரஞ்சனி அம்மா புத்தகம் எழுதியிருப்பது.


கீழைக்காற்று என்னும் கம்யுனிச ஸ்டாலில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த போது கீ.வீரமணி என்னருகே நின்று கொண்டிருந்தார். அவருடன் படமெடுக்க ஒரு கூட்டம் ஓடிக் கொண்டிருந்தது. உயிர்மையில் மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்து வாங்க காத்துக் கொண்டிருந்தது ஒரு கூட்டம். ஒரு ஐந்து நிமிடம் அவர் அருகில் நின்று கொண்டிருந்தேன், அதற்குள் ஐம்பது பேராவது கையெழுத்து வாங்கியிருப்பார்கள். ஒரு பெண்மணி அவரிடம் வந்து 'என்ன உங்கள ஒரு வாரமா டிவியில பார்க்க முடியல' என்று நலம் விசாரித்தார். மற்றொரு பெண்மணி 'எம்பொண்ணு நல்லா பேசுவா. அவ பேச்சு போட்டியில கலந்துக்குற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தா சொல்லுங்க' என்றபடி டார்ச்சர் செய்ய, தன் மயிரை சிலுப்பிய மனுஷ் வேறொருவருக்கு கையெழுத்து போடுவதில் மும்மரமாகிவிட்டார்.    

டிஸ்கவரியில் வேடியப்பன் செம பிசியாக இருந்தார். வெளியே வா.மணிகண்டனும் விநாயக முருகனும் நின்று கொண்டிருந்தார்கள். வா.மணிகண்டனின் வாயில் நுழையா பெயர் கொண்ட அந்த புத்தகத்தில் கையெழுத்து வாங்கியபோது, அந்த மனிதரின் வெற்றிக்குப் பின்புலமாக இருப்பது அவரது நிசப்தம் வலைப்பூ என்பது கொஞ்சம் பெருமையாக இருந்தது எனக்கு. மேலும் டிஸ்கவரியில் பதிவர்கள் எழுதிய புத்தகங்களை தனியாக ஒரு டேபிளில் அடுக்கி வைத்திருந்தார் திரு.வேடியப்பன்.     

ஸ்பை மற்றும் ரூபகிற்கு மத்தியில் எங்களைப் பிடித்த ஆவி...! 

ஜக்கி வாசுதேவின் புத்தகங்களுக்கு என்றே ஒரு தனி ஸ்டால் திறந்து வைத்துள்ளார்கள். அங்கும் ஒரு கூட்டம் அள்ளுகிறது. நித்தியின் உரைகளை புத்தகமாக எழுதி சாருவும், ஜக்கியின் உரைகளை புத்தகமாக எழுதி சுபாவும் பிரபலமடைந்த நிலையில், எதிர்கால சாமியார் ஒருவரின் இடமும், அவரது உரையை எழுதப்போகும் எழுத்தாளனின் இடமும் இன்றளவிலும் வெற்றிடமாகவே உள்ளது. இதனை எண்ணியெண்ணி வெதும்பிய என் மனதில் கணப்பொழுதில் தோன்றியது அந்த எண்ணம், ஏன் தோழர் அரசனை சாமியாராக்கி அவரது அந்திநேர ஆனந்த உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடக்கூடாது என்று. இதன் மூலம் என் எழுத்தாளனாகும் கனவும் நனவாக வாய்ப்பு இருக்கிறது. தோழர் அரசன் அடுத்த புத்தக காட்சிக்குள் சாமியாராக வேண்டுமென்று நித்தியையும் ஜக்கியையும் வேண்டிக்கொண்டே ஜக்கியின் ஸ்டாலில் இருந்து வெளிவந்தேன்.  

இறைவா இவ்வளவு புத்தகங்களுக்கு மத்தியில் 'நீ எப்ப புத்தகம் எழுதப்போற' என்று என்னை நோக்கி வரும் உசுபேத்தல்களை சமாளிக்கும் வல்லமையைக் கொடு இல்லையேல் இந்த ஜாம்பவான்களோடு போட்டிபோடத் தேவையான ஆற்றலைக் கொடு. இரண்டில் இரண்டுமே நடக்காவிட்டால்... வேண்டாம் அதைப்பற்றி சிந்திக்கப் போவதில்லை. 
         
எனது சிந்தனைகளில் இருந்து சிந்தனைகளில் இருந்து வெளிப்பட்டு மீண்டும் புத்தக கடலுக்குள் மூழ்கியபோது எங்கு திரும்பினாலும் மக்கள் மக்கள் மக்கள். ஒருகட்டத்தில் சுற்றியிருந்த மக்கள் மறைந்து புத்தகங்கள் புத்தகங்கள் புத்தகங்கள் மட்டுமே தோன்றியபோது நிஜமாகவே அது ஒரு புத்தகாதீனமான அனுபவம் என்பதைத் தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை.     

புத்தகம் சரணம் கச்சாமி...! 

17 Jan 2013

சென்னை புத்தகக் கண்காட்சி - ஓர் உலா


வொய் எம் சி மைதானத்தில் வண்டியை நிறுத்தும் பொழுது பலகுரல் சேர்ந்து பயங்கர சப்தத்தில் அழுங்குரல் கேட்டது, ஒரு சத்தம் சற்றே வித்தியாசமாய் கேட்டுவிட்டால் எனக்குள் இருக்கும் தமிழனும் அவனுக்குள் இருக்கும் தமிழுணர்வும் உடனே விழித்து விடுவார்கள். காதை சற்றே கூர் தீட்டிய நேரம், அந்தப் பெருங்குரல் ஒரு ஒற்றை வார்த்தையை ஒரே நேரத்தில் ஒரே போல் உச்சரித்த நேரம், எனக்கும் சத்தமாக அவர்களுடன் சேர்ந்து  அதே போல் ஹல்ல்லேலூய்ய்யாஆஆ சொல்ல வேண்டும் போல் இருந்தது. சென்னையின் 36வது புத்தகக் கண்காட்சி இப்படி தான் ஆரம்பித்தது எனக்கு.

வடியில் இருந்தபொழுது அண்ணா நகரும், தற்போது அண்ணாசாலையும் அருகாமையில் இருப்பதால் புத்தகக் கண்காட்சியின் இடமாற்றம் என்பது மகிழ்ச்சியே. நடுப்பகல், இருந்தும் விடுமுறை தின கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் பெரிய மைதானம் என்பதால்ஸ்டால்கள்  அமைந்திருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் இடையேயான நீள அகலங்களை தாராளமாய்ச் செய்திருகிறார்கள், ஸ்டால்களின் உள்ளே  சுற்றுவதற்கு சற்றே நெருக்கடியாய் உள்ளது, அதிலும் கொஞ்சம் வசதி ஏற்படுத்தி இருந்தால் சில தள்ளுமுல்லுகளில் இருந்தும், இடிபிடிகளில்  இருந்தும் தப்பித்து இருந்திருக்கலாம்

கிட்டத்தட்ட எழுநூறுக்கும் அதிகமான ஸ்டால்கள் அடங்கிய பதினைந்திற்கும் அதிகமான மிக விசாலமான வரிசைகளை, பல்லாயிரக்கணக்கான பதிப்பகங்கள் அல்லது சில லட்சக் கணக்கான எழுத்தாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். சம்பிரதாயமாக ஒன்றில் இருந்து தொடங்கலாம் என்று சென்றால் மொத்த கூட்டமும் முதல் ஸ்டாலிலேயே திருப்தி அடைந்தது போல் நகராமல் நின்று கொண்டிருந்தனர். சாமுத்ரிகா லட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும் நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள், குறைந்தது சில காலங்களுக்கு பல மனிதர்களின் லட்சணங்களை எடைபோடாமல் இருப்பேனே அந்த அளவில் சாமுத்ரிகாவிற்கு குட்பை சொல்லியது சாலச் சிறந்தது தான்.

ல்வா என்றொரு புத்தகம் கையில் கிடைத்தது, பா.ராகவனின் ஒன்லைனை அட்டையின் வெளியில் "எடுத்தல் முடிக்கத் தோன்றாத புத்தகம்" என்று அச்சிட்டு இருந்தனர். பா ரா புகழ்ந்த எழுத்தாளர் என்று ஆராய்ந்தேன் அவரும் ஒரு பதிவர் தான் என்று புத்தகம் என்னிடம் கூறியது. பினாத்தல் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவர் பெயர் ராம்சுரேஷ் முதல் புத்தகமே அல்வா, நெல்லைக்காரன் எனக்கு அல்வா பிடிக்காமல் போய்விடுமா என்ன. அப்படியே நோட்டம் விட்டபொழுது அய்யாசாமியின் கதைகள் என்று ஒரு புத்தகம் கண்ணில் தென்பட்டது, "என்ன நம்ம வீடுதிரும்பல் எதுவும் புத்தகம் எழுதி அச்சாகி விட்டதோ என்று ஆச்சரியமாக எடுத்துப் பார்த்தால் அய்யாசாமியை தென்கச்சி சாமி எழுதி இருந்தார்.


ன்ன தைரியத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் எழுதி இருகிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது, இவ்வளவு புத்தகங்களையும் படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா? இல்லை என்னைத் தான்  முழுவதுமாக புத்தக உலகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்காமல் இருக்கிறேனா என்று நினைக்கும் பொழுது பயமாய் இருக்கிறது. எத்தனை எத்தனை எழுத்தாளர்கள் திடங்கொண்டு எழுதி வருகிறார்கள் போராடி வருகிறார்கள். மத சம்மந்தமான புத்தக நிலையங்களையும், தமிழ் அல்லாத புத்தக நிலையங்களையும்புத்தகம் அல்லாத நிலையங்களைத் தவிர்த்தும் என்னால் நான்கு மணி நேரத்தில் ஐந்து வரிசைகளைத் தான் முழுமையாகச் சுற்ற முடிந்தது

புத்தகங்களில் கூட மேல்தட்டு மட்டும் தான் கவனிக்கப்படுகின்றன அடித்தட்டு கேட்பாரற்று கிடக்கின்றன என்று .மார்க்ஸ் எங்கேனும் எழுதி இருக்கிறாரா என்று தெரியவில்லை. மொத்த கம்யுனிஸ சிந்தனைகளையும் வலம் இடம் என்று பாராமல் குத்தகைக்கு எடுத்துள்ளார். கம்யுனிச அரங்குகளுக்குள் நுழைந்து வெளிவரும் பொழுது சில நிமிடங்கள் காம்ரேடாக மதம்மாறி இருந்தேன், இன்னும் தி. புத்தக நிலையம் செல்லவில்லை சென்றிருந்தால் கடவுளை "மிஸ்டர் காட் வேர் ஆர் யு, ஆர் யு தேர்" என்று கேள்வி கேட்கும் நாத்திகனாக சில நிமிடங்களுக்கு மதம் மாறியிருப்பேன், அதற்காக கடவுள் வருத்தப் பட வேண்டாம், நான் கேட்கத் தவறிய கேள்விகளை அடுத்த வாரம் நிச்சயம் கடவுளிடம் கேட்பேன். "மை டியர் காட், பி ரெடி பார் தட் கொஸ்டின்". 

மூன்று மணி வரை சுத்தமாக பசி தெரியவில்லை, அதற்கு மேல் பசிக்கு உணவைத் தவிர வேறு எதன் மீதும் நாட்டம் செல்லவில்லை"சாப்பிட வாங்க" உணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதா மாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன், விதிவலியது யாரை விட்டு வைத்திருக்கிறது . எனக்குப் பிடித்த க்ளோப் ஜாமூன் இருந்தது, இருந்தும் பரோட்டா கற்றுக் கொடுத்த பாடம் ஜாமூனுக்கு டாட்டா காட்ட சொல்லியது.

மீண்டும் புத்தகங்களின் ஊடே எனது பவனி ஆரம்பித்து, மக்களின் கூட்டமும் அதிகமாகியிருந்தது, இந்நேரத்தில் கொண்டு சென்றிருந்த புத்தகப் பையின் சுமையும் அதிகமாகியிருந்தது. ஜீன்ஸ் போட்ட மங்கைகளும் ஸ்லீவ்லெஸ் போட்ட நங்கைகளும் மகாபாரதம் சாண்டில்யன் கல்கி ராஜேஷ்குமார் என்று வாங்கிக் கொண்டிருந்து தமிழின் வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டுள்ளது போல் எனக்குத் தோன்றியதுதமிழ் ஆர்வம் எல்லாரிடமும் இருக்கிறது, ஆனால் அதை முறைப்படுத்தும் முறை சினிமாக்களுக்கு குவாட்டர்கட்டிங் என்று பெயர் வைப்பதோடும் பேக்கரிகளுக்கு அடுமனை என்று பெயர் வைப்பதோடும் நின்று விடுகிறதே என்று நினைக்கும் பொழுது தான் வருத்தமாய் உள்ளது. பல புத்தகங்களின் தலைப்புகளே மிக அருமையாக உள்ளது. "நட்ட கல்லை தெய்வமென்று" இந்த தலைப்பிற்காக இந்த புத்தகம் வாங்கிவிடலாம என்று யோசித்தேன், யோசனையோடு நிறுத்திக் கொண்டேன்.

ழிசூழ் உலகு, கொற்கை, கொற்றவை, விஷ்ணுபுரம், காவல்கோட்டம், டாலர் தேசம் போன்ற புத்தகங்கள் எல்லாம் படிப்பதற்கே ஒரு வருடம் ஆகும், எப்படித் தான் இவர்களால் இவ்வளவு பெரிய புத்தகங்களை எழுத முடிகிறதோ, அதிலும் ஜெ மோ தான் லீட், 'தல எழுதினாலே முன்னூறு பக்கத்துக்கு கொறையாது போல'ஆழிசூழ் உலகு படிக்க ஆசைப்பட்டேன், அதற்கு இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது புத்தகத்தில் அளவும் விலையும்.

பா ராகவனின் ன்சைஸ், நாஞ்சில் நாடனின் னுவல் போற்றுதும் பார்த்து வைத்துள்ளேன் அடுத்த முறை செல்லும் பொழுது வாங்கிவர வேண்டும்சாவியின் அறிமுகதிற்காக வாசிங்கடனில் திருமணம் வாங்கியுள்ளேன். வாத்தியாரின் லைமைச் செயலகம் நெடுநாளாய் வாங்க நினைத்த புத்தகம் வாங்கிவிட்டேன்.

க்கீரன் பதிப்பகம் சபீதா ஜோசப் என்பவரை குத்தகைக்கு எடுத்துள்ளது. அவர் எந்த ஒரு விசயத்தைப் பற்றி எழுதி இருந்தாலும் அவர்களைப் பற்றி நூறு தகவல்களுக்குக் குறையாமல் கொடுத்து சதம் அடிக்கிறார். சச்சினை விட அதிக சதம் கண்ட மனிதர் இவராகத் தான் இருக்க முடியும் என்பது எனது ஐயம். ரஜினியின் நூறு படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். நக்கீரன் திரையுலக கில்மா மேட்டர்களை புலன் விசாரணை என்றும்புலன் விசாரணைகளை இதழியல் ஆராய்ச்சி என்றும் அச்சிட்டு உள்ளார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குமுதம் பதிப்பகம் நடிகை சோனாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு வரலாற்றிற்கு பெருமை தேடித் தந்திருகிறார்கள்.


கிழக்கு யிர்மை மற்றும் விகடன் இவர்களால் சுஜாதா சாகா வரம் பெற்றுள்ளார் என்று சொல்வதை விட இவர்களுக்காகவே சாகா வரம் பெற்றுள்ளார் என்பது தகும். இவர்கள் ஸ்டால்களில் குறைந்தது முப்பது சதவீதம் இடத்தை வாத்தியார் தான் ஆக்கிரமித்து உள்ளார்எல்லாவற்றிற்கும் மேலாக விகடன் சுஜாதா இதழை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் இப்படி தான் சுஜாதாட்ஸ் என்னும் புத்தகத்தை வாங்கி ஏமாந்தேன். ண்ணும் எழுத்தும், ற்றதும் பெற்றதும்ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவி அதற்கு சுஜாதாட்ஸ் என்னும் கவர்சிகரமான பெயர் வைத்து என்னை ஏமாற்றி விட்டார்கள், இதில் இன்னும் கொடுமை அந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் பயோகிராபி என்று வேறு போட்டுத் தொலைந்துள்ளார்கள்.

ராஜூமுருகனின் ட்டியும் முதலும் புத்தகமாக வந்துள்ளது, தற்போது விகடனில் வரும் உருப்படியான பகுதி இது ஒன்று தான், இருந்தும் விகடனில் தொடர்ந்து படித்து வருவதால் இப்புத்தகத்தை வாங்கவில்லை விலையும் அதிகம். விகடனின் புதிய வெளியீடு மதராசபட்டினம் டூ சென்னை, சீக்கிரம் படிக்க வேண்டும். "ப்ளீஸ் டோன்ட் பை திஸ் புக்" என்று கோபிநாத்தின் கைவண்ணத்தில் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது அவரின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்கஅவர் எழுதிய முதல் புத்தகமான தெருவெல்லாம் தேவதைகள் வெகுநாட்களாக தேடியது, எடுத்துப் பிரித்து பார்த்தேன், அவரும் வரிகளை மடக்கி கவிதையாக்கி இருப்பதால் அப்படியே வைத்துவிட்டேன்


அரங்கில் இருக்கும் அணைத்து பாதைகளுக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களின் பெயரையே வைத்துள்ளனர். சென்ற முறை பார்த்ததை விட சற்றே பெரிய அரங்கம். திங்கள் மாலை யாவரும் எழுதலாம் என்ற தலைப்பில் ராஜுமுருகன் பேசப் போவதாக தெரிவித்தார்கள், முடிந்தால் செல்ல வேண்டும்.  ஞானியின் ஞானபானு அரங்கில் தினமும் கேள்விகேட்டு வாக்கெடுப்பு நடத்துகிறார்,சென்ற வருடமும் இதேபோல் நடத்தினார். சென்ற வருடம் அரங்கில் ஆங்காங்கு சின்ன சின்ன அரங்கு அமைத்து  அங்கே எல்லாம் எழுத்தாளர்களின் உரை நிகழ்ந்து கொண்டிருந்தது. இம்முறை அப்படி ஒரு அரங்கை நான் பார்க்கவே இல்லை. என் கண்ணில் சிக்க வில்லையயா என்று தெரியவில்லை.  இந்த வருடம் ஆங்கிலம் சம்மந்தமான புத்தகங்கள்  மற்றும் குழந்தைகள், கல்வி சம்மந்தமான புத்தகங்கள் அதிகம் காணக் கிடைகின்றன.       

ரவு நேரப் பணி என்னை அழைத்ததால் மாலை ஐந்து மணியுடன் புத்தகக் கண்காட்சிக்கு பை பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன், நான் கிளம்பும் பொழுது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.

தலைமைச் செயலகம் - சுஜாதா 
திரைக் கதை எழுதுவது எப்படி - சுஜாதா
அல்வா - பினாத்தல் சுரேஷ் 
மதராசபட்டினம் டூ சென்னை - பார்த்திபன்
வாஷிங்டனில் திருமணம் சாவி
இல்லாதவன் ஜெயகாந்தன்
பத்திரிக்கைக்கு எழுதுவது எப்படி - லோகநாயகி
பொன்னி - ராம கிருஷ்ணன்
ஜெயகாந்தன் சிறுகதைகள் ஒரு ஆய்வு
இருண்ட வீடு பாரதிதாசன்
புதுமைப் பித்தன் கட்டுரைகள்
பிரபல கொலை வழக்குகள்
பேய் அமானுஷ்ய கதைகள் அடங்கிய புத்தகம்  
சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
கண்ணதாசன் பாடல் பிறந்த கதை
கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு

தோ ஒரு ஆர்வத்தில் இவை அனைத்தையும் வாங்கிவிட்டேன், சீக்கிரம் படித்து முடிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சியில் எதுவும் வாங்கப் போவதில்லை என்று கூறிவிட்டு என் அண்ணன் வேறு ஒருபாடு புத்தகங்கள் வாங்கி வந்துள்ளான், இதில் நான் படிக்க வேண்டுமென்று எனக்காக மென்பொருள் சம்மந்தமான மூன்று விரல் எனும் நாவலும் கற்றது கடலளவு என்னும் கடல் சம்மந்தமான புத்தகமும் வாங்கி வந்துள்ளான் அவற்றையும் சீக்கிரம் படிக்க வேண்டும். இந்நிலையில் நான்  இரண்டாம் கட்டம் வேறு செல்ல இருக்கிறேன். நிச்சயம் எனது அம்மா "உனக்கு வேற வேலையே இல்ல , வீடு புல்லா புக்கா வாங்கி அடுக்கி வச்சுக்கோ" என்று மீண்டும் ஒருமுறை திட்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.