16 Jan 2016

போலி புத்தகக் கண்காட்சி - 2016

புத்தகக் கண்காட்சியை போலி என்று கூற ஏழு காரணங்கள்

1. இடப்பற்றாக்குறை. காற்று புகக்கூட வசதியில்லாத ஒரு மைதானத்தில் மந்தையில் அடைத்தது போல் கடைகளை அமைத்து மக்களையும் மந்தையாக்கி சிரமித்திற்குள்ளாக்கி இருப்பது முதல் குறை. பெருங்குறை. அந்தப் பக்கம் நகர்ந்தால் ஒரு பெரியவர் முறைக்கிறார், இந்தபக்கம் நகர்ந்தால் ஒரு பெரியம்மா முறைக்கிறார். எந்தப்பக்கம் திரும்பினாலும் யாராவது ஒருத்தர் இடிக்கிறார்கள். இல்லை முறைக்கிறார்கள். முறைப்புக்கு மத்தியில் புத்தகங்களை தேடவேண்டி இருக்கிறது. 

2. இடப்பற்றாக்குறையின் காரணமாக ஸ்டால்களையும் சின்னதாகவே அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியவில்லை. வெளியே நின்றால் அடுத்த ஸ்டாலின் உள்ளே நுழைய முடியவில்லை. இதன் காரணமாகவே பல ஸ்டால்களின் உள்ளே நுழைவதை தவிர்த்துவிட்டேன். மீறி நுழைந்தாலும் ஒவ்வொரு அலமாரியின் முன்னும் யாராவது ஒருவர் நின்றுகொண்டு அங்கே இங்கே நகர மறுக்கிறார்கள். நகர இடமும் இல்லை என்பது வேறுவிஷயம். 

3. ஸ்டாலின் அளவு மிகவும் சிறியது என்பதால் ஒப்புக்கு நான்கு புத்தகங்களை அடுக்கி இருக்கிறார்கள். மேடவாக்கத்தில் இருந்து ராயப்பேட்டை வரை 20+20 கிமீ பயணித்து சென்றவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் ஒரே ஆசரியர் எழுதிய அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். கணையாழி, உயிர்மை, விகடன், கிழக்கு எல்லாம் வெறும் பெயர்ப்பலகையை மட்டும் தொங்கவிட்டு விட்டு சிவனே என உட்கார்ந்து இருக்கிறார்கள். 

4. ஸ்டால் சிறியது, அடுக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் ஒரு கடையிலும் Card Payment வசதி இல்லை. கணையாழியில் மட்டும் புண்ணியத்திற்கு Card Payment வசதி செய்து கொடுத்துள்ளார்கள். இதனாலேயே பெரும்பாலான ஸ்டால்களில் எடுத்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். வாழ்க வளமுடன். அன்பர் ஒருவர் மூவாயிரம் ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்துவிட்டு என்ன செய்வதன தெரியாமல் பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தார்,  கூடவே அவர் கையில் இருந்த ஜெமோவும், சாருவும், யுவன் சந்திரசேகரும்.     

5. வெறும் ஸ்டால்கள் என்பதால் எந்த கடைகள் எந்த வரிசையில் இருக்கிறது என்ற வழக்கமான கையேடை அச்சடிக்காமல் விட்டிருக்கிரார்கள். பெரும்பாலான நபர்கள் எந்த கடை எங்கிருக்கிறது என செக்யுரிடியை கேட்டு டார்ச்சர் செய்ய 'தோ அந்த பக்கம் போனா, எழுதி ஒட்டி இருக்காங்க. போய் பாரு' என்று கூறிவிட்டு அருகில் நின்ற என்னை நோக்கியவர், 'ஜனம் மொத்தமும் எங்கிட்டயே வந்து கேட்டா இன்னா சார் செய்வேன்' என்றார். முறையான வழிகாட்டுதல் இல்லை என்பது ஒரு மாபெரும் குறை. 

6. இடப்பற்றாக்குறை காரணமாக முறையான பார்க்கிங் வசதி இல்லை. சகட்டுமேனிக்கு வாகனங்கள் வந்து செல்வதால் அரங்கம் மொத்தமும் தூசி/புழுதி. அரங்கை விட்டு வெளியில் வந்தால் தூசி அபிஷேகம் நிச்சயம். 

7. முறையான பார்க்கிங் வசதி இல்லை என்பதை விட, பார்க்கிங் வசதியே இல்லை என்று கூறலாம். அனைவரும் சகட்டுமேனிக்கு வண்டியை நிறுத்தி, அருகில் நிறுத்தப்பட்ட வண்டிகளை காயப்படுத்தி ரணகளப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஏண்டா வண்டியில் வந்தோம் என்று ஆகும் அளவுக்கு இருக்கிறது வாகன நெரிசல்.

சென்னையில் வசிப்பதால் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமே புத்தகக் கண்காட்சி தான். அதை எதோ ஒரு அமைப்பு ஏனாதானோவென நடத்துவது என்போன்ற/ நம்போன்ற வாசகர்களை ஏமாற்றுவது போல் தான் இருக்கிறது. இதில் விடுமுறை தினத்தன்று அவ்வளவு தூரம் பயணித்து ஏமாந்தது இன்னும் கடுப்பாய் இருக்கிறது. ஒரே நல்ல காரியம் சென்னையில் இன்றைக்கு வாகன நெரிசல் இல்லை என்பதுதான். 


மேலும் பபாசியை விட வேறு யாராலும் புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த முடியாது என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள் இப்போது புத்தகக் கண்காட்சி நடத்தும் இந்த அமைப்பினர். எல்லாம் சரி சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக, புத்தக உலகின் தொய்வை சரிசெய்வதற்காக என்றெல்லாம் கூறும் சால்ஜாப்புகள் தான் மேலும் கடுப்பைக் கிளப்புகின்றன. ஓய்வான ஒரு மாலை வேளையில் டிஸ்கவரிக்கோ, அகநாழிகைக்கோ, பனுவலோக்கோ சென்றால் இதைவிட அதிக கலெக்சன் கிடைக்கும், இதைவிட நிம்மதியான புத்தகத் தேடல் கிடைக்கும் என்பதே இன்றைக்கு யாம் பெற்ற இன்பம். 

அது என்ன ஏழு காரணம் என்று கேட்கிறீர்களா? புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை எழு. 

புதுமைப்பித்தன் கதைகள் - முழு தொகுதி - கணையாழி
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
ஒற்றன் - அசோகமித்திரன்
சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்
கன்னி நிலம் - ஜெமோ
தேகம் - சாரு
பறவை உலகம் - சலீம் அலி

இந்திய அரசாங்கத்தின் நேஷனல் புக் டிரெஸ்ட் பதிப்பகத்தை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். குறைவான விலையில் புத்தகம் விற்கிறார்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கதைகளாகவும், தெரியாத ஆசிரியர்களாகவும் இருந்ததால் பறவை உலகம் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் வாங்கவில்லை. நாளைக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே நினைகிறேன். திங்கட்கிழமை ஓய்வாக இருந்தால் ஒரு எட்டு சென்று வாருங்கள். யார் புத்தகக் கண்காட்சி நடத்தினால் என்ன இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் ஹீரோ வாத்தியார் சுஜாதா தான். 

10 comments:

  1. வெளிப்படையான தங்களது விமர்சனம் பின் வரும் நாட்களில் சென்னையிலும் மற்ற ஊர்களிலும் புத்தகக் கண்காட்சியை நடத்துவோருக்கு நல்ல ஆலோசனைகளாக இருக்கும்.

    ReplyDelete
  2. பல சிரமங்களுக்கிடையே நடத்தும்போது வாசகர்களைப் பற்றி நினைப்பதில்லை. வியாபாரம் என்பது முன்னுக்கு வந்துவிடும் நிலையில் மற்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

    ReplyDelete
  3. மிகவும் சிரமப்பட்டுள்ளீர்கள் என்று புரிகிறது...

    ReplyDelete
  4. சீனு நல்ல பதிவு
    அடுத்த முறை திருந்திவிடுவார்கள்
    பனுவல், அகநாழிகை குறித்து சொன்னது அருமை..
    வரேன் நானும்

    ஒரு குட்டிப் பையன் இவ்வளவு படிப்பது அருமை தொடருங்கள் ...
    நிகில் குறித்து சில செய்திகள்
    தம +

    ReplyDelete
  5. I TOO EXPERIENCED THE SAMETHING THE PLACE IS SMALL YOU CANNOT SELECT THE BOOKS
    AS THE STOCK IS SMALL. WE HOPE BAPASI STARTS THE FAIR IN FEB 2016 ITSELF.

    ReplyDelete
  6. ஆம் நானும் இதை உணர்ந்தேன் .14ம் தேதி அன்று பல ஸ்டால்களில் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது .

    ReplyDelete
  7. இந்த புத்தகக் கண்காட்சிக்கு வர இயலுமா என்று தெரியவில்லை! ஏப்ரல் கண்காட்சிக்கு வரவேண்டும். இப்போதே ஒரு தொகை சேமிப்பில் உள்ளது. அது போதாது என்று தோன்றுகிறது!

    ReplyDelete
  8. ஸ்டாலின் அளவு மிகவும் சிறியது --- ? enna oru villathanam? Stalin ennanga panninaaru?

    ReplyDelete
  9. பபாசி நடத்தும் புத்தகக் கண்காட்சிக்கே நான் இந்த முறை செல்லும் எண்ணமில்லை!!!

    ReplyDelete
  10. புதுமைப்பித்தன் கதைகள் (முழுத்தொகுதி) வெவ்வேறு விலைகளில் கிடைக்கிறது. இந்தத் தேர்வில், சிறப்பான அச்சும், கட்டும் கொண்டவை அதை விட அதிகம் விலை கொண்டவையை விட குறைவான விலையில் கிடைப்பது தான் ஆச்சரியம்!

    தேடுதலுக்கு வழியில்லாத பொழுது ஒன்றும் செய்ய முடியாது தான்.!

    ReplyDelete