15 Jan 2016

பொங்கல்

சபரிமலைக்கு வந்து சேர்ந்திருந்த போது மணி அதிகாலை ஐந்து. வருடம் 2007. நல்ல குளிர். சுற்றிலும் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்த மஞ்சள் நிற விளக்குகள், கேரள தேசத்தின் குளிரை படம்பிடித்துக் கொண்டிருக்க, தூக்கம் அகலாத கண்களின் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருந்தது குளிர். தேக பலம் தா, பாத பலம் தா என ஒரு பக்கத்தில் இருந்து வீரமணி பாட, இருமுடி தாங்கி ஒரு மனதோடு குருவெனவே வந்தோம் என்று வேறொரு வரியில் வேறொரு இடத்தில் இருந்து பாடத்தொடங்கி இருந்தார் அதே வீரமணி

தென்காசியில் இருந்து சபரிமலை பக்கம் என்பதால் நள்ளிரவு ஒரு மணிக்குத் தான் ஊரிலிருந்தே கிளம்பினோம். இரண்டு வேன் நிறைய முப்பது பேர் கொண்ட பக்தர்கள் குழு. இதுதான் என்னுடைய முதல் சபரிமலைப் பயணம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் கிளம்பினேன். எங்கள் குழுவில் யாரும் மாலை போட்டிருக்கவில்லை என்பதால், பெரிதாக திட்டமிடாத பயணம். அய்யப்பனைப் பார்த்துவிட்டு அங்கிருக்கும் சாமிகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று மட்டும் முடிவாகியிருந்தது. அதனால் கூடவே ஒரு தவசுப்பிள்ளையையும் அழைத்துச் சென்றிருந்தோம். 

வேனில் இருந்து இறங்கியதும் மாமா அருகில் வந்தார். 'ஏல சும்மா நிக்காத, நிறைய வேல இருக்கு. ஜாமா எல்லாம் எடுத்துவை. சமையல் செய்ய இடம் பார்க்கணும்' என ஒவ்வொருவரும் ஒவ்வொருவரையும் விரட்டிக் கொண்டிருந்தார்கள். அன்னதான பொருட்களை வேனில் இருந்து இறக்கி, அருகில் இருந்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வதற்குள் உடம்பு சிலிர்த்து பயங்கரமாக நடுங்கத் தொடங்கிவிட்டது. 'மாமா காபி' என்றேன். 'அதுக்கு தானல தவுசுப்பிள்ளைய கூப்டு வந்திருக்கோம். பொறு போட்டு தருவாரு' என்றபடி அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார். குளிர் அடங்குவதாய்த் தெரியவில்லை. கொஞ்சநேரத்தில் அருகில் வந்தவர். கையில் ஒரு பாக்கெட் சங்குமார்க் பல்பொடியையும் துண்டையும் கொடுத்து 'பம்பையில போய் குளிச்சிட்டு வா' என்றார். 

'மாமா' என்றேன்

'என்னடே' 

'குளிருது' 

'நா வேணா வெண்ணி போட்டு தரவா' என்றார்

'ஊம்' என்றேன். 'ஊமா, போல போய் ஆத்துல குளி' என்று அவர் திட்டிக் கொண்டிருக்கும் போதே, நான்கு வயது சிறுவன் ஒருவன் பம்பையில் குளித்துவிட்டு நடுநடுங்க 'ஐயப்பா, ஐயப்பா' என்று கூறியபடி வந்து கொண்டிருந்தான். மாலை வேறு அணிந்திருந்தான். மாமா பார்த்துவிட்டார். அடுத்து என்ன கூறுவார் என்று தெரியும் என்பதால் துண்டை வாங்கிக்கொண்டு பம்பையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். கூடவே கௌதமும் இன்னொரு நண்பனும். 

மார்கழி மாதம் என்பதால் பம்பையில் அவ்வளவாக தண்ணி இல்லை. இரண்டடிக்கு தான் நீர் ஓடிக்கொண்டிருந்தது. பம்பையை நெருங்க நெருங்க உள்ளுக்குள் ஒரு உதறல். பனிப்படலமாக, வெண்புகையாக காற்று நடமாடிக் கொண்டிருந்தது. ஆற்றினுள் இருந்தவர்கள் 'ஐயப்பா, ஐயப்பா' என்றபடி முங்கி முங்கி எழுந்து கொண்டிருக்க. மெல்ல பசிக்க ஆரம்பித்தது. தண்ணீரையே வெகுநேரம் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். எப்படியாவது இறங்கித்தான் ஆக வேண்டும். முதல் துளி நீர் உடலெங்கும் பரவும் வரைக்கும் தான் குளிர் எல்லாம். அதன்பின் குளிப்பதில் சிரமம் இருக்கப் போவதில்லை. அனால் அந்த முதல்துளி நீர் தான் பிரச்சனையே. கண்களை மூடிக்கொண்டு பம்பையில் இறங்கினேன். குளிரும் பசியும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, குளிர் அணைந்து பசி பரவத்தொடங்கியது. குளித்து முடித்து வெளியில் வரும்போது பயங்கர பசி. 

வீரமணி பாடிகொண்டிருந்த டீக்கடையில் இருந்து உன்னிமேனனும் கூடவே பஜ்ஜிவாசமும் வரத் தொடங்கி இருந்தது. நல்ல மொறுகளான பஜ்ஜி என்பதைப் பார்த்தாலே தெரிந்தது. அருகில் இருந்த பாய்லரில் ஆவி வேறு பறந்து பசியைக் கிளறிக் கொண்டிருந்தது. நேரே மாவிடம் சென்று 'காபி' என்றேன். 'கொஞ்சம் பொறு சாப்பாடே தயாராகிரும். அங்க இருக்க பிள்ளையார் கோவிலுக்குப் போய்ட்டு வா' என்றார். வேறவழி. விநாயகனை தேடி தரிசித்து முடிப்பதற்குள் மேலும் ஒரு மணி நேரம் ஆகியிருந்தது. நல்ல விடிந்து பனி கொஞ்சம் குறைந்திருந்தது. மணியைப் பார்த்தேன். ஏழைக் கடந்திருந்தது. சமையல் நடந்து கொண்டிருந்த இடத்துக்குச் சென்றால் 'கொஞ்சம் மலைய சுத்தி பாருங்க, அதுக்குள்ள தயாராகிரும்' என்றபடி விரட்டினார்கள். கொஞ்சநேரம் மலையை சுற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தை நெருங்கும் போது மணி எட்டு. 


'சரி வாங்க வாங்க எல்லாரும் வாங்க சாப்பாடு ரெடி' என்ற அழைப்பு கேட்டபோதுதான் ஐயப்பன் தெரிந்தான். அழைப்பு கேட்ட அடுத்தநொடி வரிசையில் இடம்பிடித்து சுடச்சுட பரிமாறப்பட்ட பொங்கலையும் சாம்பாரையும் கலந்து வாயில் வைத்தபோது ஐயப்பன் இன்னும் தெளிவாகத் தெரிந்தான்.  தேவாமிர்தம் என்பார்களே அப்படியொரு சுவை. தேவாமிர்தத்தின் சுவை இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் தலையில் சூடமடித்துச் சத்தியம் செய்யலாம் அப்படியொரு சுவை. அந்த குளிரில் அந்தப் பசியில் அந்த சூட்டில் பரிமாறப்பட்ட பொங்கலின் சுவையை இதற்கு முன்னும் ருசித்தது இல்லை. அதன் பின்னும் உண்டது இல்லை. பொங்கல் என்றால் அதுதான் பொங்கல் என்று கூறிக்கொண்டு உங்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன். வாய்ப்புக்கு நன்றி. வணக்கம். 

3 comments:

  1. இனிய பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நீங்கள் ருசித்ததையும், ரசித்ததையும் நாங்கள் அனுபவித்தோம். நன்றி.

    ReplyDelete
  3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete