வொய் எம் சி ஏ மைதானத்தில் வண்டியை நிறுத்தும் பொழுது பலகுரல் சேர்ந்து பயங்கர சப்தத்தில் அழுங்குரல் கேட்டது, ஒரு சத்தம் சற்றே வித்தியாசமாய் கேட்டுவிட்டால் எனக்குள் இருக்கும் தமிழனும் அவனுக்குள் இருக்கும் தமிழுணர்வும் உடனே விழித்து விடுவார்கள். காதை சற்றே கூர் தீட்டிய நேரம், அந்தப் பெருங்குரல் ஒரு ஒற்றை வார்த்தையை ஒரே நேரத்தில் ஒரே போல் உச்சரித்த நேரம், எனக்கும் சத்தமாக அவர்களுடன் சேர்ந்து அதே போல் ஹல்ல்லேலூய்ய்யாஆஆ சொல்ல வேண்டும் போல் இருந்தது. சென்னையின் 36வது புத்தகக் கண்காட்சி இப்படி தான் ஆரம்பித்தது எனக்கு.
ஆவடியில் இருந்தபொழுது அண்ணா நகரும், தற்போது அண்ணாசாலையும் அருகாமையில் இருப்பதால் புத்தகக் கண்காட்சியின் இடமாற்றம் என்பது மகிழ்ச்சியே. நடுப்பகல், இருந்தும் விடுமுறை தின கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. கொஞ்சம் பெரிய மைதானம் என்பதால், ஸ்டால்கள் அமைந்திருக்கும் ஒவ்வொரு வரிசைக்கும் இடையேயான நீள அகலங்களை தாராளமாய்ச் செய்திருகிறார்கள், ஸ்டால்களின் உள்ளே சுற்றுவதற்கு சற்றே நெருக்கடியாய் உள்ளது, அதிலும் கொஞ்சம் வசதி ஏற்படுத்தி இருந்தால் சில தள்ளுமுல்லுகளில் இருந்தும், இடிபிடிகளில் இருந்தும் தப்பித்து இருந்திருக்கலாம்.
கிட்டத்தட்ட எழுநூறுக்கும் அதிகமான ஸ்டால்கள் அடங்கிய பதினைந்திற்கும் அதிகமான மிக விசாலமான வரிசைகளை, பல்லாயிரக்கணக்கான பதிப்பகங்கள் அல்லது சில லட்சக் கணக்கான எழுத்தாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். சம்பிரதாயமாக ஒன்றில் இருந்து தொடங்கலாம் என்று சென்றால் மொத்த கூட்டமும் முதல் ஸ்டாலிலேயே திருப்தி அடைந்தது போல் நகராமல் நின்று கொண்டிருந்தனர். சாமுத்ரிகா லட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும் நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள், குறைந்தது சில காலங்களுக்கு பல மனிதர்களின் லட்சணங்களை எடைபோடாமல் இருப்பேனே அந்த அளவில் சாமுத்ரிகாவிற்கு குட்பை சொல்லியது சாலச் சிறந்தது தான்.
அல்வா என்றொரு புத்தகம் கையில் கிடைத்தது, பா.ராகவனின் ஒன்லைனை அட்டையின் வெளியில் "எடுத்தல் முடிக்கத் தோன்றாத புத்தகம்" என்று அச்சிட்டு இருந்தனர். பா ரா புகழ்ந்த எழுத்தாளர் என்று ஆராய்ந்தேன் அவரும் ஒரு பதிவர் தான் என்று புத்தகம் என்னிடம் கூறியது. பினாத்தல் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். அவர் பெயர் ராம்சுரேஷ் முதல் புத்தகமே அல்வா, நெல்லைக்காரன் எனக்கு அல்வா பிடிக்காமல் போய்விடுமா என்ன. அப்படியே நோட்டம் விட்டபொழுது அய்யாசாமியின் கதைகள் என்று ஒரு புத்தகம் கண்ணில் தென்பட்டது, "என்ன நம்ம வீடுதிரும்பல் எதுவும் புத்தகம் எழுதி அச்சாகி விட்டதோ என்று ஆச்சரியமாக எடுத்துப் பார்த்தால் அய்யாசாமியை தென்கச்சி சாமி எழுதி இருந்தார்.
புத்தகங்களில் கூட மேல்தட்டு மட்டும் தான் கவனிக்கப்படுகின்றன அடித்தட்டு கேட்பாரற்று கிடக்கின்றன என்று அ.மார்க்ஸ் எங்கேனும் எழுதி இருக்கிறாரா என்று தெரியவில்லை. மொத்த கம்யுனிஸ சிந்தனைகளையும் வலம் இடம் என்று பாராமல் குத்தகைக்கு எடுத்துள்ளார். கம்யுனிச அரங்குகளுக்குள் நுழைந்து வெளிவரும் பொழுது சில நிமிடங்கள் காம்ரேடாக மதம்மாறி இருந்தேன், இன்னும் தி.க புத்தக நிலையம் செல்லவில்லை சென்றிருந்தால் கடவுளை "மிஸ்டர் காட் வேர் ஆர் யு, ஆர் யு தேர்" என்று கேள்வி கேட்கும் நாத்திகனாக சில நிமிடங்களுக்கு மதம் மாறியிருப்பேன், அதற்காக கடவுள் வருத்தப் பட வேண்டாம், நான் கேட்கத் தவறிய கேள்விகளை அடுத்த வாரம் நிச்சயம் கடவுளிடம் கேட்பேன். "மை டியர் காட், பி ரெடி பார் தட் கொஸ்டின்".
மூன்று மணி வரை சுத்தமாக பசி தெரியவில்லை, அதற்கு மேல் பசிக்கு உணவைத் தவிர வேறு எதன் மீதும் நாட்டம் செல்லவில்லை. "சாப்பிட வாங்க" உணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதா மாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன், விதிவலியது யாரை விட்டு வைத்திருக்கிறது . எனக்குப் பிடித்த க்ளோப் ஜாமூன் இருந்தது, இருந்தும் பரோட்டா கற்றுக் கொடுத்த பாடம் ஜாமூனுக்கு டாட்டா காட்ட சொல்லியது.
மீண்டும் புத்தகங்களின் ஊடே எனது பவனி ஆரம்பித்தது, மக்களின் கூட்டமும் அதிகமாகியிருந்தது, இந்நேரத்தில் கொண்டு சென்றிருந்த புத்தகப் பையின் சுமையும் அதிகமாகியிருந்தது. ஜீன்ஸ் போட்ட மங்கைகளும் ஸ்லீவ்லெஸ் போட்ட நங்கைகளும் மகாபாரதம் சாண்டில்யன் கல்கி ராஜேஷ்குமார் என்று வாங்கிக் கொண்டிருந்து தமிழின் வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டுள்ளது போல் எனக்குத் தோன்றியது, தமிழ் ஆர்வம் எல்லாரிடமும் இருக்கிறது, ஆனால் அதை முறைப்படுத்தும் முறை சினிமாக்களுக்கு வ குவாட்டர்கட்டிங் என்று பெயர் வைப்பதோடும் பேக்கரிகளுக்கு அடுமனை என்று பெயர் வைப்பதோடும் நின்று விடுகிறதே என்று நினைக்கும் பொழுது தான் வருத்தமாய் உள்ளது. பல புத்தகங்களின் தலைப்புகளே மிக அருமையாக உள்ளது. "நட்ட கல்லை தெய்வமென்று" இந்த தலைப்பிற்காக இந்த புத்தகம் வாங்கிவிடலாம என்று யோசித்தேன், யோசனையோடு நிறுத்திக் கொண்டேன்.
ஆழிசூழ் உலகு, கொற்கை, கொற்றவை, விஷ்ணுபுரம், காவல்கோட்டம், டாலர் தேசம் போன்ற புத்தகங்கள் எல்லாம் படிப்பதற்கே ஒரு வருடம் ஆகும், எப்படித் தான் இவர்களால் இவ்வளவு பெரிய புத்தகங்களை எழுத முடிகிறதோ, அதிலும் ஜெ மோ தான் லீட், 'தல எழுதினாலே முன்னூறு பக்கத்துக்கு கொறையாது போல'. ஆழிசூழ் உலகு படிக்க ஆசைப்பட்டேன், அதற்கு இன்னும் சில காலங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைக்க வைக்கிறது புத்தகத்தில் அளவும் விலையும்.
பா ராகவனின் அன்சைஸ், நாஞ்சில் நாடனின் பனுவல் போற்றுதும் பார்த்து வைத்துள்ளேன் அடுத்த முறை செல்லும் பொழுது வாங்கிவர வேண்டும். சாவியின் அறிமுகதிற்காக வாசிங்கடனில் திருமணம் வாங்கியுள்ளேன். வாத்தியாரின் தலைமைச் செயலகம் நெடுநாளாய் வாங்க நினைத்த புத்தகம் வாங்கிவிட்டேன்.
நக்கீரன் பதிப்பகம் சபீதா ஜோசப் என்பவரை குத்தகைக்கு எடுத்துள்ளது. அவர் எந்த ஒரு விசயத்தைப் பற்றி எழுதி இருந்தாலும் அவர்களைப் பற்றி நூறு தகவல்களுக்குக் குறையாமல் கொடுத்து சதம் அடிக்கிறார். சச்சினை விட அதிக சதம் கண்ட மனிதர் இவராகத் தான் இருக்க முடியும் என்பது எனது ஐயம். ரஜினியின் நூறு படங்களுக்கு விமர்சனம் எழுதி இருக்கிறார். நக்கீரன் திரையுலக கில்மா மேட்டர்களை புலன் விசாரணை என்றும், புலன் விசாரணைகளை இதழியல் ஆராய்ச்சி என்றும் அச்சிட்டு உள்ளார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக குமுதம் பதிப்பகம் நடிகை சோனாவின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டு வரலாற்றிற்கு பெருமை தேடித் தந்திருகிறார்கள்.
கிழக்கு உயிர்மை மற்றும் விகடன் இவர்களால் சுஜாதா சாகா வரம் பெற்றுள்ளார் என்று சொல்வதை விட இவர்களுக்காகவே சாகா வரம் பெற்றுள்ளார் என்பது தகும். இவர்கள் ஸ்டால்களில் குறைந்தது முப்பது சதவீதம் இடத்தை வாத்தியார் தான் ஆக்கிரமித்து உள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக விகடன் சுஜாதா இதழை வெளியிட்டு உள்ளது. சமீபத்தில் இப்படி தான் சுஜாதாட்ஸ் என்னும் புத்தகத்தை வாங்கி ஏமாந்தேன். எண்ணும் எழுத்தும், கற்றதும் பெற்றதும், ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவி அதற்கு சுஜாதாட்ஸ் என்னும் கவர்சிகரமான பெயர் வைத்து என்னை ஏமாற்றி விட்டார்கள், இதில் இன்னும் கொடுமை அந்தப் புத்தகத்தில் சுஜாதாவின் பயோகிராபி என்று வேறு போட்டுத் தொலைந்துள்ளார்கள்.
ராஜூமுருகனின் வட்டியும் முதலும் புத்தகமாக வந்துள்ளது, தற்போது விகடனில் வரும் உருப்படியான பகுதி இது ஒன்று தான், இருந்தும் விகடனில் தொடர்ந்து படித்து வருவதால் இப்புத்தகத்தை வாங்கவில்லை விலையும் அதிகம். விகடனின் புதிய வெளியீடு மதராசபட்டினம் டூ சென்னை, சீக்கிரம் படிக்க வேண்டும். "ப்ளீஸ் டோன்ட் பை திஸ் புக்" என்று கோபிநாத்தின் கைவண்ணத்தில் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது அவரின் ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க. அவர் எழுதிய முதல் புத்தகமான தெருவெல்லாம் தேவதைகள் வெகுநாட்களாக தேடியது, எடுத்துப் பிரித்து பார்த்தேன், அவரும் வரிகளை மடக்கி கவிதையாக்கி இருப்பதால் அப்படியே வைத்துவிட்டேன்.
அரங்கில் இருக்கும் அணைத்து பாதைகளுக்கும் பெரிய பெரிய எழுத்தாளர்களின் பெயரையே வைத்துள்ளனர். சென்ற முறை பார்த்ததை விட சற்றே பெரிய அரங்கம். திங்கள் மாலை யாவரும் எழுதலாம் என்ற தலைப்பில் ராஜுமுருகன் பேசப் போவதாக தெரிவித்தார்கள், முடிந்தால் செல்ல வேண்டும். ஞானியின் ஞானபானு அரங்கில் தினமும் கேள்விகேட்டு வாக்கெடுப்பு நடத்துகிறார்,சென்ற வருடமும் இதேபோல் நடத்தினார். சென்ற வருடம் அரங்கில் ஆங்காங்கு சின்ன சின்ன அரங்கு அமைத்து அங்கே எல்லாம் எழுத்தாளர்களின் உரை நிகழ்ந்து கொண்டிருந்தது. இம்முறை அப்படி ஒரு அரங்கை நான் பார்க்கவே இல்லை. என் கண்ணில் சிக்க வில்லையயா என்று தெரியவில்லை. இந்த வருடம் ஆங்கிலம் சம்மந்தமான புத்தகங்கள் மற்றும் குழந்தைகள், கல்வி சம்மந்தமான புத்தகங்கள் அதிகம் காணக் கிடைகின்றன.
இரவு நேரப் பணி என்னை அழைத்ததால் மாலை ஐந்து மணியுடன் புத்தகக் கண்காட்சிக்கு பை பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன், நான் கிளம்பும் பொழுது கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.
நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்.
தலைமைச் செயலகம் - சுஜாதா
திரைக் கதை எழுதுவது எப்படி - சுஜாதா
அல்வா - பினாத்தல் சுரேஷ்
மதராசபட்டினம் டூ சென்னை - பார்த்திபன்
வாஷிங்டனில் திருமணம் சாவி
இல்லாதவன் ஜெயகாந்தன்
பத்திரிக்கைக்கு எழுதுவது எப்படி - லோகநாயகி
பொன்னி - ராம கிருஷ்ணன்
ஜெயகாந்தன் சிறுகதைகள் ஒரு ஆய்வு
இருண்ட வீடு பாரதிதாசன்
புதுமைப் பித்தன் கட்டுரைகள்
பிரபல கொலை வழக்குகள்
பேய் அமானுஷ்ய கதைகள் அடங்கிய புத்தகம்
சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்
கண்ணதாசன் பாடல் பிறந்த கதை
கண்ணதாசன் வாழ்க்கை வரலாறு
ஏதோ ஒரு ஆர்வத்தில் இவை அனைத்தையும் வாங்கிவிட்டேன், சீக்கிரம் படித்து முடிக்க வேண்டும். புத்தகக் கண்காட்சியில் எதுவும் வாங்கப் போவதில்லை என்று கூறிவிட்டு என் அண்ணன் வேறு ஒருபாடு புத்தகங்கள் வாங்கி வந்துள்ளான், இதில் நான் படிக்க வேண்டுமென்று எனக்காக மென்பொருள் சம்மந்தமான மூன்று விரல் எனும் நாவலும் கற்றது கடலளவு என்னும் கடல் சம்மந்தமான புத்தகமும் வாங்கி வந்துள்ளான் அவற்றையும் சீக்கிரம் படிக்க வேண்டும். இந்நிலையில் நான் இரண்டாம் கட்டம் வேறு செல்ல இருக்கிறேன். நிச்சயம் எனது அம்மா "உனக்கு வேற வேலையே இல்ல ல, வீடு புல்லா புக்கா வாங்கி அடுக்கி வச்சுக்கோ" என்று மீண்டும் ஒருமுறை திட்டுவார் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.
Tweet |
நல்ல பகிர்வு.என்னிடம் இருக்கும் புத்தகங்களைப் படித்து முடிக்கும் வரை வேறு புத்தகங்கள் வாங்குவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன். இணையம் நேரத்தைப் பிடித்துக் கொள்கிறது. உட்கார்வதால் உடலில் சதை பிடிக்கிறது:) சாவியின் விசிறி வாழை புத்தகம் கிடைத்தால் படியுங்கள். நன்றி. புகைப்படங்கள் அருமை.
ReplyDeleteமிக்க நன்றி அம்மா... அனைத்தும் வலையில் சுட்ட படங்கள் தான் :-)
Delete// வாழை புத்தகம் // நிச்சயம் படிக்க முயல்கிறேன்
கேமிரா வாங்கியாச்சா, இல்லை மொபைல் புகைப்படங்களா?
ReplyDeleteகாணும் பொங்கல் என்று நேற்று புத்தகங்களைக் 'காண' நிறைய்ய்...ய கூட்டம் வந்திருக்கும்.
முதலில் ஏற்பட்ட சத்தம்... என்ன அது?
இல்ல சார் இன்னும் வாங்கல... மொபைல்இல் காமெரா இல்லை... சீக்கிரம் எதாவது ஒன்று வாங்க வேண்டும். அவசியமா என்று யோசிதுக்கொண்டுள்ளதால் தாமதம் எற்படுகிறது....
Delete// 'காண' நிறைய்ய்...ய கூட்டம்//
ஹா ஹா ஹா அருமையான ஹாஸ்யம்
பினாத்தல் சுரேஷை இப்படி பெனாத்தல் ரமேஷ் ஆக்கிட்டீங்க!
ReplyDeleteதக்க நேரத்தில் கூறியதற்கு நன்றி... புத்தகம் வாங்கும் பொழுது பார்த்தது, நினைவில் வைத்து எழுதியது. மாற்றி விடுகிறேன்
Delete//ஆழிசூழ் உலகு, கொற்கை, கொற்றவை, விஷ்ணுபுரம், காவல்கோட்டம், டாலர் தேசம் போன்ற புத்தகங்கள் எல்லாம் படிப்பதற்கே ஒரு வருடம் ஆகும்,//
ReplyDeleteகரெக்ட் நண்பா... சில புத்தகங்களைப் படித்து உட்கிரகிப்பதற்கே வருஷங்கள் ஆகும்....
எனக்கு மட்டும் தான் என்று நினைத்தேன்... உங்களுக்குமா :-)
Deleteசில புத்தகங்களோட சைசப் பாத்தே பயந்து போனது உண்மை
ReplyDeleteநீங்க பாலகுமாரனையே அசால்ட்டா படிக்கிற ஆளு... நீங்களா சார் இப்படி சொல்றது :-)
Deleteம்......பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றிண்ணே
Deleteஎனக்குப் புத்தகங்கள் படிக்கனும் என்னு தோனும் ஆனா புத்தகங்களிண்ட சைசைப் பார்த்துவிட்டு இந்தப் பழம் புளிக்கும் என்னுட்டுப் போடுவேன் ...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி எழுத்தாளரே
//பகிர்வுக்கு நன்றி எழுத்தாளரே// இது வெறும் நகைச் சுவை மட்டும் தானே நண்பா ஹா ஹா ஹா
Deleteகறறது கடலளவு நல்ல புத்தகம் சீனு. அவசியம் படி. உன் மற்ற செலக்ஷனும் நன்று. அல்வா படித்து முடித்ததும் நன்றாயிருக்கிறதா என்பதைத் தெரிவி. பா.ராகவனின் இயல்பான நகைச்சுவை தளும்பும் எழுத்து நடை அனைவரையும் மயக்கும். முதல் உலா நன்று. (இரண்டாம் கட்டமா...? அப்படின்னா?)
ReplyDeleteகற்றது கடலளவு படிக்க வேண்டும் என்ற ஆசையை நீங்களும் அதிகப்படுத்தீட்டீங்க... அல்வா படிச்சிட்டு இருக்கேன்.. நிச்சயம் சொல்றேன். அன்சைஸ் கண்டிப்பா வாங்குறேன் வாத்தியரே...
Deleteஇந்த ஞாயிறு அல்லது திங்கள் ஆலது செவ்வாய் எமது இரண்டாம் கட்ட உலா நடை பெற உள்ளது :-)
மனதில் திடங்கொண்டு வாங்கிய புத்தகங்களை தவறாமல் படிக்கவும்.
நிச்சயம் தவறாது படிக்கிறேன் புலவர் அய்யா
Delete
ReplyDelete//சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்//
அவர் மிரட்டி வாங்க வச்சாரா???
யோவ் மெட்ராஸ் உமது புத்தக விமர்சனம் தான் என்னை மிரட்டி வாங்க வைத்தது
Delete'சாப்பிட வாங்க" உணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதா மாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன்,
ReplyDeleteஇதுதான் நண்பா நகைச்சுவை..விட்டுற வேண்டாம்..கெட்டியா பிடிச்சுக்க..
உங்கள் உற்சாகமான கருத்துக்கு மிக்க நன்றி மதுமதி....
Delete//சாமுத்ரிகா லட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும் நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள்,// பல முறை நானும்.. கொக்கோகமும் அப்படித்தான்.. சொந்தமாக வாங்கவில்லயென்றாலும் இரண்டையும் ஓரளவு அரைகுறையாகவாவது முடித்துவிட்டேன் :P
ReplyDelete//கிழக்கு உயிர்மை மற்றும் விகடன் இவர்களால் சுஜாதா சாகா வரம் பெற்றுள்ளார் என்று சொல்வதை விட இவர்களுக்காகவே சாகா வரம் பெற்றுள்ளார் என்பது தகும்.// உண்மையை சொல்லவேண்டுமானால், அந்த பதிப்பகங்கள் தான் சுஜாதாவினால் சாகாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.. தலைவர் யானை மாதிரி...
வாஷிங்டனில் திருமணம் படியுங்கள்.. இன்றைய காலகட்டத்தை மனதில் வைத்து வாசித்தால் மொக்கையாக தெரியலாம்.. ஆனால் நல்ல நகைச்சுவையான நாவல்.. இந்த கட்டுரையை பார்க்கும் போது புத்தகக்கண்காட்சிக்கு வர வேண்டும் புத்தகம் வாங்க வேண்டும் என கை அரித்தாலும், இருக்கும் புத்தகங்களை முதலில் முடிக்க வேண்டும்.. செப்டம்பரில் மதுரையில் சூப்பராக போடுவார்கள். அதற்குள் இருக்கும் அனைத்தும் முடித்துவிட்டு பார்க்கலாம்.. இந்தப்பதிவு ஒரு ரெஃபரன்ஸ் மாதிரி பல புத்தகங்களுக்கு.. நன்றி.. அனைத்தையும் படித்துவிட்டு சிறு கருத்துக்கள் சொன்னால் இன்னும் நல்லா இருக்கும்..
யோவ் கொக்கோகம் மட்டும் தானா?
Deleteமதுரையில் கூட புத்தகக் கண்காட்சி நடக்கிறதா, அதுவும் பெரிய அளவில், முதல் முறை கேள்விப்படுகிறேன்.
//அந்த பதிப்பகங்கள் தான் சுஜாதாவினால் சாகாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன.. தலைவர் யானை மாதிரி...// ஹ்தலைவர் புத்தகங்கள் செம சேல்ஸ் ஆகின்றன. சிரிய பெரிய அணைத்து கடைகளிலும் நல்ல சேல்ஸ்.
//ஆனால் நல்ல நகைச்சுவையான நாவல்..// எழுத்தாளரின் எழுத்து நடைக்காக மட்டும் தான் நண்பா... ஒருவரின் எழுத்து பிடித்துவிட்டால் மொக்கை கூட நமக்கு சூப்பராகத் தானே தோன்றும் :-)
// இந்தப்பதிவு ஒரு ரெஃபரன்ஸ் மாதிரி பல புத்தகங்களுக்கு..// ஹா ஹா ஹா நீங்க தெய்வம்னெ தெய்வம்
உம் தமிழ் புலமைக் கண்டு வியந்தோம் யாம்! விரைவில் நான் வாங்கும் புத்தகத்தில் எழுத்தாளர் பெயராக உம் பெயர் தென்பட அவா.
ReplyDelete:) :) :)
// நான் வாங்கும் புத்தகத்தில் எழுத்தாளர் பெயராக உம் பெயர் தென்பட அவா.// என்ன ஒரு கொலைவெறி ஹா ஹா ஹா....
Deleteநிச்சயம் நண்பா... நிச்சயமாக முயற்சிக்கிறேன்
என்ன தைரியத்தில் இவ்வளவு எழுத்தாளர்கள் எழுதி இருகிறார்கள் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது, இவ்வளவு புத்தகங்களையும் படிப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்களா? இல்லை என்னைத் தான் முழுவதுமாக புத்தக உலகத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்காமல் இருக்கிறேனா என்று நினைக்கும் பொழுது பயமாய் இருக்கிறது.
ReplyDeleteஎஸ் சீனு நாம் தான் புத்தக உலகத்திற்குள் நம்மை முழுமையாய் ஈடு படுத்தி கொள்ளவில்லை நான் இன்னும் புத்தக கண் காட்சி செல்லவில்லை சுஜாதா புத்தகங்கள் வாங்க வேண்டும்
சீக்கிரம் ஒரு உலா போயிட்டு வாங்க... முன்பெல்லாம் அடிக்கடி பேருந்தில் பயணிப்பேன், அந்நேரமெல்லாம் புத்தகம் படிப்பேன்... இப்பொழுது பேருந்துப் பயணங்கள் வெகுவாய் குறைந்துவிட்டதால் அதிகம் புத்தகங்கள் படிக்க முடிவதில்லை
Delete//அவர் எழுதிய முதல் புத்தகமான தெர்மாக்கோல் தேவதைகள் வெகுநாட்களாக தேடியது, எடுத்துப் பிரித்து பார்த்தேன், அவரும் வரிகளை மடக்கி கவிதையாக்கி இருப்பதால் அப்படியே வைத்துவிட்டேன். //
ReplyDeleteதெர்மாக்கோல் தேவதைகள் என்னுடய சிறுகதை தொகுப்பல்லவா.. கோபிநாத் வேற எழுதினாரா என்ன?
அது தெருவெல்லாம் தேவதைகள்... மாற்றி விட்டேன் மிக்க நன்றி சார்.. சுட்டிக் காட்டியமைக்கு....
Deleteசீனு... நான் தந்த பிடிஎப் கலெக்ஷனிலேயே விசிறி வாழை இருக்கிறது. படிததுப் பார்.
ReplyDeleteஓ அதில் இருக்கிறதா... அதில் என்ன புத்தகம் இல்லை என்று தான் கேட்க வேண்டும்... பொக்கிஷம் அது :-)
Deleteமிக்க நன்றி...
ReplyDelete// "உனக்கு வேற வேலையே இல்ல ல, வீடு புல்லா புக்கா வாங்கி அடுக்கி வச்சுக்கோ" என்று மீண்டும் ஒருமுறை திட்டுவார் //
ReplyDeleteஎன் வீட்டிலும் அதே அதே!.... புத்தகக் கண்காட்சிக்கு சென்று புத்தகம் வாங்காது திரும்புவதா.... நடக்காது! :)
நல்ல பகிர்வு சீனு. நானும் அடுத்த மாதம் தில்லி புத்தகக் கண்காட்சிக்குப் போகணும், புத்தகங்கள் வாங்கணும்.... ரெடியா இருக்கேன்!
## சாமுத்ரிகாலட்சணம் என்ற புத்தகம் என்னை உறுதிக் கொண்டே இருந்தது, பின்பு அதைஎடுத்த இடத்திலேயே வைத்துவிட்டேன், இப்படி செய்த என் லட்சனதிற்கும்நிச்சயம் ஏதேனும் ஒரு லட்சணம் வைத்திருப்பார்கள்,
ReplyDeleteபுத்தகங்களில் கூட மேல்தட்டு மட்டும் தான் கவனிக்கப்படுகின்றன அடித்தட்டுகேட்பாரற்று கிடக்கின்றன என்று அ.மார்க்ஸ் எங்கேனும் எழுதி இருக்கிறாராஎன்று தெரியவில்லை.
உணவகத்தில் பரோட்டாவை கொஞ்சம் வேக வைத்திருந்தால் நான் மைதாமாவுக்கு பதிலாக பரோட்டாவை சாப்பிட்டு இருப்பேன்,
ஜீன்ஸ் போட்ட மங்கைகளும் ஸ்லீவ்லெஸ்போட்ட நங்கைகளும் மகாபாரதம் சாண்டில்யன் கல்கி ராஜேஷ்குமார் என்றுவாங்கிக் கொண்டிருந்து தமிழின் வாழ்நாளை அதிகப் படுத்திக் கொண்டுள்ளது போல் எனக்குத் தோன்றியது, ##
** அழகு ...! " ஒரு சிறந்த எழுத்தாளர் உருவாகிக்கொண்டிருகிறார்" **
## "ப்ளீஸ் டோன்ட் பை திஸ் புக்" என்று கோபிநாத்தின்கைவண்ணத்தில் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது அவரின் ப்ளீஸ் இந்தப்புத்தகத்தை வாங்காதீங்க.##
** தமிழ் பதிப்பு வாங்கி படிச்சுருக்கேன் நல்லாத்தான் இருந்துச்சு.**
வேண்டுகோள் :
முந்தைய ரெண்டு பதிவு படிக்கும் போது எதோ அவசரத்துல எழுதுன மாதிரி எனக்கு பட்டுச்சு ... ஆனா இந்த பதிவுல மீண்டும் அமர்க்களமா வந்துடீங்க . எண்ணிக்கைய பாக்காதீங்க சீனு ... எதிர்பார்ப்பு அதிகம் உங்க மேல ....
உன் வரிகளுக்கு உயிர் வருகிறது, வந்து கொண்டு இருக்கிறது சீனு.. மெய்யாலுமே..
ReplyDeleteநான் என்னுடைய புத்தகக் கண்காட்சி அனுபவத்தை எழுதுவதைப் போல் எழுதி இருக்கிறீர்கள் நன்றி ! ஆனால் உங்கள் புத்தக தேர்வு அதை மறுதலிப்பது போல் தோன்றுகிறது............கடலளவு, கடல் பற்றிய புத்தகமன்று!
ReplyDeleteநான் என்னுடைய புத்தகக் கண்காட்சி அனுபவத்தை எழுதுவதைப் போல் எழுதி இருக்கிறீர்கள் நன்றி ! ஆனால் உங்கள் புத்தக தேர்வு அதை மறுதலிப்பது போல் தோன்றுகிறது............கடலளவு, கடல் பற்றிய புத்தகமன்று!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மிக்க நன்றி. அந்தப்புத்தகம் கடல் சார்ந்த கப்பல் சார்ந்த என்று குறிப்பிட்டு இருந்தால் சரியா இருந்திருக்கும் இல்லையா...
Deleteமேலும் ரசனை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும், என் புத்தக ரசனை உங்களுக்கு வேறுபட்டுப் போகலாம், இருந்தும் நீங்கள் விரும்பும் புத்தகங்கள் பற்றி குறிப்பு குடுத்தால், அறிந்து கொள்வேன் மகிழ்ச்சி நன்றி