தமிழ்ப் பதிவுலகத்தின் மிக முக்கியமான சிறப்பு, எல்லாவிதமானவர்களும் ஆச்சர்யப்படத்தக்கவகையில் எழுதுகிறார்கள் என்பதுதான். இதற்குச் சிறந்த உதாரணம், சமீபத்தில் ஃபேஸ்புக்கில் தூள் பரப்பும் நடிகர் சாருஹாசன்.
அவரை ஒரு நடிகராக, இன்னொரு பெரிய நடிகரின் அண்ணனாகமட்டுமே நாம் அறிவோம். தமிழில் இத்தனை பத்திரிகைகள் இருந்தென்ன, அவர் இத்தனை பிரபலமாக இருந்தென்ன? அவருக்கு எழுதவரும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லையே, இணையம் தந்திருக்கும் Spaceஐ அவர் அருமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.
அவரைப்போல, இந்தத் தளத்தில் மிகச் சிறப்பாக இயங்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள், பல துறை சார்ந்த நிபுணர்கள், ஏன், குழந்தைகள்கூட இருக்கிறார்கள். உடனுக்குடன் கிடைக்கும் Feedback இவர்களை மேலும் ஆர்வத்துடன் இயங்கச் செய்வது மகிழ்ச்சி.
பதிவுலகம்பற்றி ஓரிரு குறையும் எனக்கு உண்டு. எழுதும் அளவுக்கு இங்கே பலர் படிப்பதில்லை, அப்படியே படித்தாலும்கூட, மற்ற வலைப்பதிவுகளைதான் வாசிக்கிறார்கள். அது தவறில்லை, அவற்றைமட்டுமே வாசிப்பது தவறு. இந்த Spiral தொடர்ந்து ஒரு கட்டத்தில் உறைந்து நின்றுவிடும் அபாயம் உண்டு.
ஆகவே, தொடர்ந்து உற்சாகமாக எழுத விரும்புவோர், சீனியர் வாசகர்களின் உதவியோடு ஒரு reading schedule போட்டுக்கொள்வது நல்லது என்பது என் தனிப்பட்ட விண்ணப்பம்.
அதேபோல், எழுத்துப் பிழைகளைப் பலர் பொருட்படுத்துவதில்லை. அதை யாராவது சுட்டிக்காட்டினாலும் சுருக்கென்று கோபப்படுகிறார்கள். அதனால் இழப்பு அவர்களுக்குமட்டுமல்ல என்பதை உணர்ந்தால் சந்தோஷம்.
*****
பதிவுலகில் பலரும் பலதையும் எழுதிவருகிறார்கள். இதில் துறை சார்ந்து - ஜோதிடம், ஆன்மிகம், கணினி, தொழில்நுட்பம் - போன்றவற்றை எழுதிவருபவர்கள் மட்டுமே தொடர்ந்து எழுதுகிறார்கள். இவர்கள் பார்வையாளர் எண்ணிக்கையைப் பற்றியோ கருத்துரைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. மற்ற பதிவர்களில் பெரும்பாலானோர் முகநூல் பக்கமும் கூகிள் பிளஸ் பக்கமும் சாய்ந்துவிட, எஞ்சி இருப்பவர்கள் கொஞ்சமே. இவர்களிலும் சிலர் திரட்டிகளில் முதலிடம் பிடிக்கும் முயற்சியில் இருப்பதால் பலருடைய எழுத்துக்களில் தரத்தைக் காண முடியவில்லை. பல பதிவர்களிடம் - என்னையும் சேர்த்து - consistency என்பது அறவே இல்லை. சேர்ந்தாற்போல் ஐந்தாறு பதிவுகள் எழுதுகிறார்கள். பின் மாதக்கணக்கில் முடங்கி விடுகிறார்கள். பின் மீண்டும் சில நாட்கள் கழித்து உயிர்த்தெழுகிறார்கள். பதிவு எழுதுவதற்கு சோம்பலா, அல்லது முகநூல் போன்றவற்றில் எழுதியதால் பதிவு எழுதிய திருப்தியா, தெரியவில்லை.
சில பதிவர்கள் தினமும் முகநூலில் பதிவு எழுதுகிறார்கள், வெட்டி அரட்டை அடிக்கிறார்கள். அதைத் தவறு என்று சொல்லவில்லை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தினால் நல்லது என்கிறேன். முகநூலை முற்றிலும் தவிர்க்க முடியாது என்பதால் தினம் ஒரு பதிவு எழுதட்டும். அவற்றைத் தொகுத்து வலையிலும் வெளியிடட்டும். பின்னூட்டங்களைப் பற்றி அதிகம் விவாதித்தாயிற்று என்பதால் சுருக்கமாக - ஒற்றை வார்த்தைக் கருத்துரையை முடிந்தவரை தவிர்க்கலாம். பல மூத்த பதிவர்கள் இளைய பதிவர்களைக் கண்டுகொள்வதேயில்லை. அவர்களும் அடிக்கடி இல்லை என்றாலும் எப்போதாவது வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தலாம். முடிந்தவரை புதிய பதிவர்களின் பதிவுகளை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
*****
இன்றைய தமிழ்ப் பதிவுலகம் அருமையாக இருக்கிறது. பத்திரிகைகளுக்கு அனுப்பி மாதக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் அவஸ்தையை ஒழித்தது இந்த முறை. முன்பு சுஜாதா சொன்னதாகப் படித்த ஒரு வார்த்தை ஞாபகத்துக்கு வருகிறது. "எதிர்காலத்தில் எல்லோரும் அஞ்சு நிமிஷம் பிரபலமாக இருப்பார்கள்" பதிவுலகம் அந்த வார்த்தைகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம். புத்தகங்கள் படிக்கும்போது, செய்தித் தாள்கள் படிக்கும்போது கிடைக்கும் அதே பயன்கள்/அனுபங்கள் பதிவுகள் படித்தாலும் வருகிறது.
பதிவுலகம் தனி மனிதத் துதிகள், தாக்குதல்களைத் தவிர்த்து மனமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு நல்ல விஷங்களை எடுத்துச் சொல்லி முன்னேற்றப் பாதையில் நடந்தால் மகிழ்ச்சி."
பதிவுலகம் என்பதில் முகநூல் வட்டத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இங்கிருப்பவர்கள்தானே அங்குமிருக்கிரார்கள்.
பதிவுலகிலும் முகநூல் வட்டத்திலும் நண்பர்கள் இணைந்து கொண்டே ஒரு குழுவாக அமைந்து கொண்டு வருவதும், சேர்ந்து திட்டமிடுவதும் (குடிமியான் மலை, கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பயணங்களும், வாசகர் கூடம் போன்ற தளங்களும்), இணைந்து பேசிச் சிரித்து மகிழ்வதும் (முகநூல் நண்பர்கள் அவ்வப்போது வெவ்வேறு நாடகங்களிலும், அவரவர்களுக்குள்ளேயே யாராவது ஒருவர் வீட்டிலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வதும், எழுத்தாளர் பாலகுமாரன் வீட்டுக்குக் கூட பல நண்பர்கள் இணைந்து சென்று வந்ததும்),சமீப காலங்களில் நடக்கும் பாஸிட்டிவ் நிகழ்வு.
*****
தமிழ் பதிவுலகம்
பல நல்ல விஷயங்கள்பதிவுலகில்நடந்து வருகின்றன. சமீபத்தில் வல்லமை குழுமத்தில் சேர்ந்ததிலிருந்து நிறைய படிக்க ஆரம்பித்து இருக்கிறேன். தமிழ் மொழியையும், பாரம்பரியத்தையும் காப்பாற்றும் வகையில் பலர் பழைய கோவில்கள், கலைச்சின்னங்கள் ஆகியவற்றை புகைப்படங்கள்/ காணொளிகளாகச் செய்து ஆவணப்படுத்துகிறார்கள். வரவேற்கத் தக்க முயற்சி. வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து இதையெல்லாம் செய்கிறார்கள். நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி எழுகிறது.
கவலைகள்:
இது ஒருபுறம் இருக்க, தனிநபர் குறித்த வசவுகளும், கன்னாபின்னாவென்று பின்னூட்டங்களும் சில இடங்களில் காணப்படுகின்றன. இளைஞர்கள் நிறைய எழுதுவது நல்ல விஷயம். அதிகமாக சினிமா விமரிசனம் காணக் கிடைப்பது சற்று கவலையைத் தருகிறது. திரைப்படம் என்பது பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி அதுவே வாழ்க்கை ஆகிவிட்டதோ என்றும் தோன்றுகிறது. விமரிசனம் எழுதுபவர்கள் எல்லா திரைப்படங்களும் நன்றாக இருக்கின்றன என்பது போல எழுதிவிடுகிறார்கள். ஐடி துறையில் நடக்கும் குற்றங்களை எத்தனை பேர்கள் பதிவு செய்தார்கள், தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரியது. ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும், பதிவுகளில். இது நான் முன் வைக்கும் கோரிக்கை. தொடர் பதிவுகள் என்று ஏதோ ‘மொக்கை’ போடுவதற்கு பதில் கவலைக்குரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து எழுதலாம். எழுதுபவர்களும், எழுத்துக்களும் எல்லை மீறாமல் இருப்பது மிக மிக அவசியம்.
*****
rajamelaiyur.blogspot.com
பதிவுலகம் ஒரு வித்தியாசமான உலகம் . வெவ்வேறு ஊரில் , கருத்தில், கொள்கையில் இப்படி பல மற்று இருத்தாலும்அனைவரையும் ஒருங்கிணைப்பது இந்த பதிவுலகம் . நேரில் பார்க்காத பலரை உறவினரைவிட பாசமுள்ள சொந்தகங்களாக எனக்கு ( நமக்கு ) பெற்று தந்தது இந்த பதிவுலகம் .
இங்கே சண்டை வருவது சகஜம் .ஆனால் அது சில நாட்கள் மட்டுமே . புத்தகம் வெளியிடும் நபர்தான் எழுத்தாளர் என்ற மாயவலையை கிழித்தது இந்த பதிவுலகம் அதனால்தான் பல எழுத்தாளர்கள் பதிவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் வறுத்து எடுக்கின்றனர் . பல சமயங்களில் பெரிய எழுத்தாளர்களை விட பதிவர்கள் எழுதுவது அருமையாக இருப்பதும் ஒரு காரணம் .
மனதுக்கு பிடித்ததை , ரசித்ததை , சொல்ல விரும்பியதை , சமுக அவலங்களை தட்டிகேட்க என நமது எண்ணங்களை வெளிபடுத்த நமக்கான களம் இது. இது தான சேர்ந்த கூட்டம் . பலர் வரலாம் சிலர் போகலாம் ஆனால் பதிவுலகம் என்றும் இருக்கும் . நம் காலத்திற்கு பின்னும் நம்மை பற்றி பேச இது ஒரு டிஜிட்டல் கல்வெட்டு .