வேள்பாரி – கதாபாத்திர வடிவமைப்பும், கதைக் கட்டுமானமும்
சங்ககால வாழ்வை நோக்கியப் பயணங்கள் பெருங்களிப்பு நிறைந்தவை. இதுவரை
நாம் கடந்திராத பேரனுபவத்தைத் தரவல்லவை. ஒரு நிலம் ஒரு குலமாக உருவெடுத்து,
அதிலிருந்து பல்வேறு குலங்களாகப் பிரிந்து, தங்களுக்குள் இணக்கமாகவும், இணக்கம்
மறைந்து சண்டையிட்டும் வாழ்ந்த கதைகளுக்கான குறிப்புகளை நம்மால் அங்கிருந்தே பெற
முடிகிறது.
பல நூறு ஆண்டுகள் கடந்த பின்னும் ஆதி மனிதனை நோக்கிய நம் தேடலும்
பயணமும் அதன் மூலம் கிடைக்கும் தரவுகளும் தொடர்ந்து நம்மை வியப்படையச் செய்கின்றன.
நம்மை நாமே ஏன் பின்சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியத்தையும்
வரலாற்றை மீண்டும் மீண்டும் பிரதி எடுப்பதன் கட்டாயத்தையும் வரலாற்று
ஆசிரியர்களின் மூலம் காலம் நிகழ்த்தியபடியேதான் இருக்கிறது. காலத்தின் வேர்
பிடித்து நடக்கும் அவர்களும் அந்தப் பிரதியை மீட்டெடுத்துக்கொண்டேதான்
இருக்கிறார்கள். அவ்வகையில் வேள்பாரி எனும் புதினம் சமகாலத்தில் எழுதபட்ட
சங்ககாலம் குறித்தான மிகமுக்கியமான வரலாற்றுப் புனைவு என்றே நான் கருதுகிறேன்.
*****
பறம்பு நாட்டை வழிநடத்தும் வேள்பாரி எனும் தலைவனின் வள்ளல் தன்மை குறித்து
அறியும் பெரும்புலவர் கபிலர், அதனை உறுதிசெய்யும் பொருட்டு பறம்பு நாட்டை நோக்கிய
தன் பயணத்தை மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் ஊடாக அவர் தெரிந்துகொள்ளும் ஒவ்வொரு
தகவலும் அவருக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. பின் கோடைகாலத்தில் பறம்பு நாட்டினுள்
நுழையும் கபிலர், அடர் மழைக்காலத்திற்குள் பறம்பில் இருந்து கீழ் இறங்கிவிட
வேண்டும் என்று நினைக்கிறார். காலமோ வேறொரு பதிலை வைத்திருக்கிறது.
பாரியின் ஒப்பற்ற பண்பு நலன்களின் மூலம் ஈர்க்கப்படும் கபிலர்
குறிஞ்சி நிலத்திலேயே தன்னையும் ஒருவனாக மாற்றிக் கொள்கிறார். பறம்பு நிலத்தின்
ஒருவனாக மாறிப்போகிறார். இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் நாவல் ஆரம்பித்து
முடிவடைவது ஒரு பின்கோடைக் காலத்திற்கும் மற்றொரு பின்கோடை காலத்திற்குமான
இடைப்பட்ட பகுதியில். அதற்குள் இவ்வளவும் நடந்து விடுகிறது.
பெரும் புலவர் என்று மூவேந்தர்களாலும் கொண்டாட்டப்படும் கபிலர் தன்னை
முற்றும் அறிந்தவனாகவே உணர்கிறார். பெரும்புலவன் என்ற கர்வம் அவரிடம் சிறிதேனும்
இருந்திருக்கக்கூடும் அதே எண்ணத்துடன் பறம்பை நோக்கியத் தன் பயணத்தை
ஆரம்பிக்கிறார்.
கபிலரிடம் ஒரு முன் முடிவு இருக்கிறது அது பாரி எனும் தலைவன் புகழ்
போதையில் மயங்கிக் கிடப்பவன் என்று. அப்படிப்பட்ட கபிலரின் மனமாற்றமே பாரியின்
பாதையில் நம்மையும் தொடர்ந்து பயணிக்கச் செய்கிறது. பாரி குறித்தும் பறம்பு நாடு
குறித்தும் கபிலருக்குச் சொல்லப்படும் விவரணைகளின் மூலமாகவே கபிலரோடு இணைந்து
நாமும் பயணிக்கிறோம்.
பறம்பின் எல்லைக்குள் நுழைந்த மறுகணமே கபிலருக்குப் புரிந்து
விடுகிறது அந்த நிலம் குறித்தும் அங்கு வசிக்கும் மக்கள் குறித்தும் தனக்கு
எதுவுமே தெரியாது என்று. அனைத்தும் அறிந்தவன் எனும் எண்ணம் இருப்பவனால் எதையும் தெரிந்துகொள்ள
முடியாது. தன் பலவீனத்தை உணரும் கபிலர், நொடிப்பொழுதில் அதிலிருந்து வெளியேறி தெளிந்த
மனதுடன் தனக்கான கேள்விகளை கேட்கத் தொடங்குகிறார்.
கேட்கும் ஒருவனுக்கே பதில் கிடைக்கும் என்றாலும் “அனைத்தும்
அறிந்தவனுக்கு இதுகூடத் தெரியவில்லையா?” என்று தன் அறியாமை எள்ளி நகைக்கப்படும்
அவஸ்த்தைக்கும் ஆளாகிறார் கபிலர். கற்றுக்கொள்வது என்று முடிவான பின் தன்னை நோக்கி
வரும் கேலிகளையும் சேர்த்தேதான் கடந்தாக வேண்டும். எனவே கேள்விகேட்பதை மட்டும் ஒருபோதும்
நிறுத்துவதில்லை அவர். ஒருவன் புலமை கொள்வது தன் கேள்விகளின் மூலமே என்பதும் இங்கே
கவனிக்கத்தக்கது.
*****
வேள்பாரி புதினத்தின் தலைசிறந்த அம்சம் அதன் கதாபாத்திரக் கட்டமைப்பு.
மிக நீண்ட ஒரு வரலாற்றுப் புனைவில், பலவிதமான கதாபாத்திரங்கள் வந்து செல்கின்ற கதைக்களத்தில்
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான குணங்கள் கொடுக்கப்பட்டு அந்த குணங்கள்
மிகக்கச்சிதமாக வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. நாவல் நிறைவடையும் வரையிலும்
நம்மால் அவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ளவும் முடிகிறது. இந்த நாவலின் பெரும்பலங்களில்
இதுவும் ஒன்று.
நாவலின் மைய கதாபாத்திரங்கள் பறம்பும் பாரியுமே என்றாலும் இவர்கள்
அனைவரையும் ஒரு புள்ளிக்குள் கொண்டுவரும் கதாபாத்திரம் கபிலர். கபிலருக்குச்
சொல்லப்படும் கதையே நமக்குச் சொல்லப்படும் கதை. பின் கபிலர் பார்க்கும் கதையே நாம்
அறியும் கதை. கபிலர் பறம்பின் கதையை முதலில் நீலனின் மூலமும் பின் வேட்டுவப்
பழையனின் மூலமும் அதன் தொடர்ச்சியாக அதிரன் மற்றும் பாரியின் மூலமும் தெரிந்து கொள்கிறார்.
இவ்வாறு கதை கேட்கும் கபிலர் என்ற கதாபாத்திரம் மீது வைக்கப்படும்
பிரம்மாண்டமான சித்திரமானது எங்குமே தன் பிரம்மாண்ட்டத்தை வெளிப்படுத்தி இருக்காது
என்பதும் உண்மை. என்னளவில் கபிலர் எனும் பிரம்மாண்டம் வெளிப்படும் தருணம் ஒன்றை
நாவலின் இறுதி வரைக்குமே எதிர்பார்த்திருந்தேன். அப்படியொரு சித்திரம்
அமையப்பெறவில்லை என்பது என்னளவில் சிறிது ஏமாற்றமே.
அதேநேரம் கபிலரின் உருவம் நாவலின் துவக்கத்திலேயே மிக வலுவாகக்
கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பதால் அதனையும் மீறி அது தன்னை வெளிப்படுத்த வேண்டிய
தேவையும் இல்லை என்ற கூற்றும் ஏற்புடையதே.
‘பாரியைச் சந்திக்கச் செல்கிறேன்’, என்று கபிலர் கூறிய அடுத்தநிமிடம்
அறுகநாட்டு அரசன் செம்பன், தானே அவர்தம் தேரை செலுத்தி வந்து விடுகிறேன் என்று
கூறும் ஆரம்பக்காட்சியாகட்டும், ஆளிக்காட்டில் கபிலரை முதல்முறை சந்திக்கும்
வேள்பாரி வீடு வரைக்கும் கபிலரை தன் தோளில் சுமந்து வரும் காட்சியாகட்டும்
இப்படியாக கபிலர் எனும் பெரும்புலவரின் புகழ் ஆரம்பத்திலேயே நமக்குக் கூறப்பட்டு விடுகிறது.
அதற்கு மேலும் தன் புலமையை விசாலமாக்க அவருக்கு இருக்கும் ஒரு வாய்ப்பு பறம்பை
பற்றித் தெரிந்துகொள்வது மட்டுமே. ஆக கபிலரின் கதாபாத்திரம் கதைகேட்டு அதன்மூலமே
தன் புலமையை விருத்தி செய்துகொள்ளும் ஒன்றாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. IT
யில் ரிவர்ஸ் KT என்று ஒன்று உண்டு. கற்றுக்கொண்டதை
மீட்டுக்கூறல். அதவாது கற்றுக்கொடுப்பதை நாம் ஒழுங்காகக் கற்றுக்கொண்டோமா
என்பதற்கான பயிற்சி.
இங்கே கபிலருக்கு அதுபோன்ற பயிற்சிகள் இல்லை என்றாலும் கபிலர்
தனக்குத்தானே அந்த பயிற்சியை வைத்துக்கொள்கிறார். தனக்கு வைக்கப்பட்ட நாவல் பழ
பயிற்சியை தன் ஆசான் திசைவேழருக்கு வைப்பதாகட்டும், குதிரை ஓட்டிவருகையில் பறம்பு
மக்களின் கண்களுக்கு அவர் முடியனை ஒப்ப காட்சியளிப்பதாகட்டும், கபிலர் வெகுவேகமாகத்
தன்னை பறம்பு நாட்டுக்கு இயைந்தவனாக மாற்றி இருப்பார்.
மூவேந்தர்களுடனான போரில் கபிலர் கூறும் ஆலோசனைகள் முக்கிய திருப்பமாக
அமையும் என்று நினைத்தேன். அப்படியெந்த காட்சிகளும் இல்லை (அதுவும் ஏமாற்றமே).
நல்லவேளை புலவர் கடைசிவரை புலவராகவேதான் இருக்கிறார்.
கபிலர் முதல்முறை பாரியை சந்திப்பதற்கான முந்தைய இரவில், பழையனும்
கூழையனும் பேசிக்கொள்ளும் சம்பாஷனைகளின் மூலம் கபிலர் ஒருவேளை பறம்பு நிலத்தை வேவு
பார்க்கவந்த ஒற்றனாகத்தான் பறம்பின் உள் நுழைகிறாரோ என்ற சந்தேகம் அவர்களைப் போலவே
எனக்கும் எழாமல் இல்லை. அதன்பின் நிகழும் மாயாஜாலம் வேள்பாரி கொள்ளும் உச்சம். கதை
நகர்வின் சுவாரசியத்தை இவ்வாறு சிறுசிறு காட்சிகளின் மூலமும் கச்சிதமாக நகர்த்திச்
செல்கிறார் ஆசிரியர் என்றே கூறவேண்டும்.
*****
கபிலருக்கு அடுத்து கவனிக்கப்படும்
கதாபாத்திரம் நீலன். முதல் அத்தியாயத்தில் பறம்பு நாட்டின் முதல் சாட்சியாக வெளிப்படும்
நீலனின் கதை, நெடுக வளர்ந்து முடிவில் கதையின் நிறைவை நோக்கியும் அவனே அழைத்துச்
செல்கிறான் என்பதன் மூலம் அவன் முக்கியத்துவத்தை உணர முடிகிறது.
இந்த நாவலின் சுவாரசியத்தை அதிகரிக்கும் கட்டுமானங்களில் மற்றொன்று
கதை சொல்லல் முறை. இத்தனைப் பெரிய நாவலை எளிதில் புரிந்துகொள்ள அதன்
கட்டுமானத்தைப் புரிந்துகொள்வது அவசியம். புதினம் முழுக்கவே, நாவலின் ஆசிரியர் எது
ஒன்றை நமக்கு முதலில் அறிமுகம் செய்கிறாரோ அதுவே இப்புதினத்தின் அடுத்த
அத்தியாயத்தில் பேருருகொள்ள இருக்கிறது அல்லது
திருப்புமுனையாகப் போகிறது. நாவலின் தொடக்க அத்தியாயங்களிலேயே கண்டுகொள்ள
முடிகிற இந்த உத்தியை கதையின் கடைசி அத்தியாயம் வரைக்கும் மிக சுவாரசியமாகவே பயன்படுத்தி
இருக்கிறார் ஆசிரியர் என்பது அட்டகாசமான ஒன்று.
நீலனை நாம் சந்திக்கும் முதல் தருணமே அவன் படபடவென்று ஓடுகிறான்,
செய்ய வேண்டிய காரியங்களை சடுதியில் செய்கிறான். தன்னுடைய வேகத்திற்கு ஈடுகொடுத்து
நடக்க முடியாத கபிலர் குறித்து அவன் கூறும் “வீரர்களின்
வாழ்நாள் மிகக்குறைவு, காத தூரத்தை இத்தனை நாழிகைக் கடக்க
மாட்டார்கள்”, வார்த்தைகளின் மூலமே அவனுள் இருக்கும் துடிப்பை நம்மால்
அறிந்துகொள்ள முடியும்.
நாவலின் போக்கில் குறிஞ்சி நில மூப்பர்களான முருகன் வள்ளியின் கதை
எத்தனை முக்கியமானதோ அதேயளவு முக்கியமானது கொற்றவைக் கூத்தும் அதன் மூலம்
கூறப்படும் கதைகளும். நிலத்தின் மீது எப்படி குலங்கள் தோன்றின. அந்தக் குலங்கள்
அழிந்து எப்படி மன்னராட்சி தோன்றியது என கதையின் போக்கை மிகத் தெளிவாகக் கட்டமைக்க
உதவும் இடம் கொற்றவைக் கூத்து. இந்த ஒவ்வொரு கூத்தும் அதன் மூலம் கூறப்படும்
கதைகளுமே தனித்துவம் வாய்ந்தவை. இந்த கூத்தின் மூலமே நீலன் குறித்தும் அதிரன்
குறித்தும் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
*****
நீலனுக்கு அடுத்த முக்கியத்துவம் அதிரனுக்கு. அதிரன், நாகர்களின் குலத்தைச்
சேர்ந்தவன். அங்கவையின் மனதில் இடம்பிடிக்க இருப்பவன். மூவேந்தர்களுடனான போரில்
தன் படையை முன்னின்று வழிநடத்தப் போகிறவன் என்பதையும் மீறி எப்போதும் பாரியின்
கண்காணிப்பிலேயே இருக்கக் கூடியவன் என்ற பொறுப்பும் அவனுக்கு இருக்கிறது.
அதிரனுக்கும் அங்கவைக்கும் இடையே வளரும் காதலை பாரி கண்டுகொள்ளக்கூடிய
தருணமே அற்புதமான ஒன்று. இந்தக் கதையில் நமக்கு விடை தெரியாத கேள்விகள் இரண்டே
இரண்டு. ஒன்று கபிலருக்கான அரசவை விருந்துக்குத் தேவையான அறுபதாங்கோழி எப்படிக்
கிடைத்தது? மற்றொன்று பாண்டிய இளவரசி பொற்சுவையின் முன்னாள் காதலன் யார்? இரண்டாம்
கேள்வியை அப்புறம் பார்ப்போம். இந்த அறுபதாங்கோழி செம மேட்டர்.
விடை தெரியாத இரண்டு கேள்விகள் என்று கூறக்காரணம், கதை முழுக்க கபிலர்
கேள்வி கேட்டுகொண்டே இருக்க, அவர் கேட்காத இரண்டு கேள்விகள் இவையாகத்தான் இருக்க
வேண்டும் என்பதால்தான். அதில் ஒன்றிற்கு ஏற்கனவே அவருக்குப் பதில் தெரியும்.
இரண்டாவது இந்த அறுபதாங்கோழி.
அறுபதாங்கோழி கிடைத்துவிட்டது என்ற தகவலை சங்கவை பாரியிடம் கூறும்
நொடியே அது அங்கவையின் மூலமே கிடைத்திருக்கக்கூடும் என்ற விஷயத்தை பாரி
கண்டுபிடித்திருப்பார். காரணம் அங்கவை காதலில் விழுந்துவிட்டாள் என்பதை அதற்கு
முந்தைய அத்தியாயத்தில் அவள் அந்த சந்தன வேங்கையை கூர்ந்து நோக்கும்போதே
கண்டுபிடித்திருப்பார். மேலும் அறுபதாங்கோழி முட்டையிடும் தீப்புல் காதலர்களின்
கண்களுக்கு மட்டுமே தெரியும் என்ற தகவலை நீலனின் காதலி மயிலா, அங்கவை தன்னிடம்
கூறியதாக நீலனிடம் கூறுவாள். இவையனைத்தையும் கணிக்கும் பாரி பேரெலி வேட்டையின்போது
அதிரனையும் சேர்த்தே துரத்திச் சென்றிருக்கக்கூடும் - இவன் தன் மகளுக்கு
ஏற்றவன்தானா என்பதை கண்டுபிடிக்கும் பொருட்டு. ஒரு நாவலின் சுவாரசியமான பகுதிகள்
சொல்லப்படாத தகவல்களே.
நீலனுக்கு அதிரனுக்கும் அடுத்த இடம் வாரிக்கையனுக்கும் தேக்கனுக்கும்.
வாரிக்கையன் ஊரில் மிக மூத்தவன். தலைவனே மதிப்பு கொடுக்கும் பெருங்கிழவன். நடக்கும்
அத்தனை யுத்தங்களிலும் தலைமை ஆலோசகன் மற்றும் முடிவெடுப்பவன். தேக்கன், அந்தப்
பெருங்காட்டின் பேராசான். தன் குலத்தவருக்குக் காடறியத் தேவையான சகல
நுட்பங்களையும் கற்றுக்கொடுப்பவன். காட்டு வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்
செய்பவன்.
இந்த நாவலில் ஒரு பகுதி மிக அழகாகக் கூறப்பட்டிருக்கும்.
வாரிக்கையன், பழையன் – முதல் தலைமுறை
தேக்கன், கூழையன் – இரண்டாம் தலைமுறை
பாரி, முடியன் – மூன்றாம் தலைமுறை
அதிரன், நீலன் – நான்காம் தலைமுறை
இந்த நான்கு தலைமுறை கதாபாத்திரங்களும் மையமாகச் சுழன்று
கட்டமைத்திருப்பதே இந்த நாவலின் ஒட்டுமொத்த சித்திரமும்.
*****
வேள்பாரியில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் கற்றலும்
கற்றுக்கொடுத்தலும். இந்த நாவல் முழுக்கவே யாரோ ஒருவர் இன்னொருவருக்குக் கற்றுக்
கொடுப்பவராகவும் கற்றுக் கொள்பவராகவுமேதான் வருகிறார்கள். வள்ளி முருகனுக்கோ,
முருகன் வள்ளிக்கோ கற்றுக்கொடுப்பதாகட்டும். பறம்பில் வசிக்கும் ஒரு குலத்தவர்
மற்றொரு குலத்தவருக்குக் கற்றுக்கொடுப்பதாகட்டும், இப்படி கற்றலின் மூலம் அறிவை
விருத்தி செய்த ஒரு இனமாகவும், தொடர்ந்து கற்றுக்கொடுத்தலின் மூலம் தொடர்பை
இழந்துவிடாத ஒரு இனமாகவுமே நம் வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நாம் எதை
இழந்தோம், நம்மிடம் இப்போது எது இல்லை என்பதை இந்த குணத்தின் மூலம் உணர முடியும்.
அதேநேரம் இதில் எனக்குக் கேள்வி எழக்கூடிய பகுதி எதுவென்றால் முருகன்
வள்ளிக்கு ஏழிலைப்பாலை என்ற மரத்தை அறிமுகம் செய்து வைக்கும் காட்சி. வள்ளி கொடிகுலம்
சார்ந்தவள். அதாவது காட்டின் அத்தனை பச்சயங்களை பற்றியும் மிகுந்த அறிவுவாய்ந்த
ஒரு குலத்தில் இருந்து வந்தவள் அவளுக்கு ஏன் ஏழிலைப்பாலை குறித்துத் தெரியவில்லை
என்ற கேள்வி எழுந்தது.
காதல் மற்றும் திருமணம் என்ற வகையில் இங்கு யாரும் யார் மீதும் (
குலங்களுக்கு இடையே) காதல் கொள்ளலாம், திருமணத்திற்கு முன்பே உறவும் கொள்ளலாம்
என்றே திருமணம் சார்ந்த சமூகவியல் சித்தரிக்கப்பட்டுள்ளது. சங்க காலம் பற்றிய
புரிதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தகவலாக இதனைப் பார்க்கிறேன்.
அதேநேரம் உடன்கட்டை ஏறும் பழக்கமும் இந்த காலத்தில் இருந்திருக்கிறது –
இந்தநாவலில் அதற்கான தரவுகள் இல்லை என்றாலும் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்றே
நினைக்கிறன்.
அதேபோல்தான் காட்சிகள் முன்னுக்குப் பின்னாக நகரக்கூடிய இடங்கள்.
கபிலர் பாரியையும் பறம்பையும் அறியவந்தவர் என்றபோதும் வேட்டுவன்பாறையில், மக்களின்
வீட்டில் இருக்ககூடிய திறளி மரத்துப் பலகையைப் பார்க்கும்போது, சமவெளி மக்கள்
அந்தப் பலகையை எவ்வாறு யவன வணிகத்திற்குப் பயன்படுத்துகின்றனர் என்ற நினைவுகளாகக்
காட்சிகள் வணிகத்தை நோக்கி விரிந்து பின் பறம்பை நோக்கி வரும்.
நாவல் முழுக்கவே கபிலர் சந்திக்கும் அனைவரும் பாரியின் பெருமைகளைப்
பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள் பாரியைத் தவிர. ஒரு காட்சியில் சேர நாட்டு
அமைச்சன் கோளூர்சாத்தான் வாணிபம் பேசும் நோக்குடன் பாரியை சந்திக்க வருகிறார்.
பறம்பு நாட்டுக் கொள்கையின்படி எதற்காகவும் யாருடனும் வாணிபம் செய்வதில்லை
என்பதால் அவனை திரும்ப அனுப்பிவிடுகிறான் பாரி. ஆனால் என்ன வாணிபம் என்பதை
கேட்டுத்தெரிந்திருக்க மாட்டான். அதேநேரம் இந்தக் கேள்வியை பறம்பு நாட்டின்
எல்லைக்காவல் வீரன் கூழையன் அறிந்திருப்பான். அதாவது எந்த கேள்வியை யார் யாரிடம்
கேட்க வேண்டும் என்ற முறைமைக்கான சான்று இந்தக்காட்சி. இதுபோன்ற நுட்பமான
விவரணைகளுடனேயே இந்த நாவல் பயணிக்கிறது.
சங்ககாலம் தொட்டே உப்பு நம்மிடையே தவிர்க்க முடியாத பதார்த்தமாகத்தான்
இருந்து வருகிறது. பறம்பு நாட்டின் பிரதான குலம் வேளீர்குலம்தான் என்றபோதிலும்
பறம்பு நாடு முழுக்கவே அழிந்துபோகும் தருவாயில் இருக்கும் பல குலத்தைச்
சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரணாக பறம்பு நாடு இருக்கிறது. இதில்
பெரும்பாலான குலங்கள் அழிவைச் சந்திப்பதற்குக் காரணமாக உப்பு விற்கும் குலமான
உமணர்கள் இருக்கிறார்கள். என்ற போதிலும் பறம்புநாடு உப்பை உமணர்களிடம் இருந்து
தொடர்ந்து பண்டமாற்றம் செய்தபடியேதான் இருக்கிறார்கள்.
பறம்புநாட்டைப் பொறுத்தவரையில் குற்றங்களுக்கான தண்டனையோ அல்லது
அவர்களை அடைத்து வைக்கும் சிறைசாலையோ கிடையாது. தலைவனை அழிக்கவந்த குலம்
சிக்கிக்கொண்ட போதும் கூட இனி நீங்கள் பறம்பில் இருக்கும் வரை ஆயுதங்களை
தொடக்கூடாது என்ற நிபந்தனையையே விதிக்கிறார்கள். இதைக்கூறுவதன் காரணம் பறம்பு
நாடும் மொத்தமுமே குற்றமற்றவர்கள் நிறைந்தநாடாகத்தான் இருக்கிறது.
குற்றமற்றவர்கள்தானே தவிர அவர்கள் மனதிற்குள் கோபமும் பழியுணர்ச்சியும் இல்லாமல்
இல்லை. தங்களை அழித்த மன்னர்களை அழிப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்தே
காத்திருக்கிறார்கள். அப்படியொரு வாய்ப்பாகவே மூவேந்தர்கள் உடனான யுத்தத்தை
எதிர்கொள்கிறார்கள்.
பறம்பு நாட்டிற்குக் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாமல் முக்கியத்துவம்
பெரும் இரண்டு கதாபாத்திரங்கள் பாண்டிய நாட்டு இளவரசி பொற்சுவை மற்றும் சிற்பி
காராளி. பொற்சுவை முன்னாள் காதலன் யார் என்பதை கண்டுபிடித்து விட்டீர்களா? அதற்கான
என் யூகத்தை இந்த விமர்ச்சனத்திலேயே பதிவு செய்துள்ளேன். கண்டுபிடியுங்கள்
பார்க்கலாம்.
கதையின் தொய்வு நிறைந்த பகுதிகளாக நான் உணர்வது, இரண்டாம் பாகத்தில்
கதை பரபரவென்று நகரும் தருணங்களில் இடைச்செருகல்களாக வந்து செல்லும் காதல்
காட்சிகள்.
பெண்களுக்கான முக்கியத்துவம் என்ற வகையில். பெண்கள் எவரும்
போர்க்களங்களில் இறங்கி போர் புரியவில்லை. அதேநேரம் கொற்றவை யட்சி என்ற இரண்டு
பெண் தெய்வங்களே போர்த்தெய்வங்களாகவும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது கவனிக்கப்பட
வேண்டிய ஒன்று. பறம்பு நாட்டுப் பெண்கள் போர்த்தொழிலில் ஈடுபடவில்லையே தவிர பறம்பு
நாட்டைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் நாகப்பச்சை வேலியை அவர்களே கட்டமைத்திருக்கிறார்கள்.
அவ்வகையில் பாதுகாப்பு விஷயத்தில் சமபங்கு வகிக்கிறார்கள்.
இந்த பதிவில் நான் குறிப்பிட்டவை மொத்தமும் வேள்பாரி புதினத்தின்
கதாபாத்திரக் கட்டமைப்பும் கதையின் வடிவம் குறித்தும் மட்டுமே. எழுதாது எவ்வளவோ
இருக்கின்றன. மிக முக்கியமாக பாரியின் கதாபாத்திர கட்டமைப்பு குறித்து நான்
எதுவுமே எழுதவில்லை. அதையே தனி பதிவாக எழுதமுடியும். பாரி சறுக்கும் இடங்கள், பாரி
மேலெழும் இடங்கள் என்று. இதில் குறிப்பிட முனைந்த தகவல்கள் இந்தப் புதினம் ஏன்
முக்கியத்துவம் பெறுகிறது என்பதை என்னளவில் உணர்ந்த காரணங்களாகத்தான்.
(இதில் பல இடங்களில் வரலாறு பிழையாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்கிற
சர்ச்சையும் இருக்கிறது. அவற்றை இனிதான் தேடி வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.
முடிந்தால் அது குறித்தும் பேசுவோம்)
இந்த பதிவை பறம்பு நாட்டுத் தேறலின் ஒரு சொட்டாகப்
பாவித்துக்கொள்ளுங்கள். நன்றி.