யுத்தம் ஆரம்பித்த இடம் ஹாரி பாட்டர் வலைபூ. முதல் பகுதி படிக்காதவர்கள் படித்துவிட்டு மாறுபட்ட இக்கதையை தொடருங்கள்.
துப்பறியும் கணேஷ் வசந்த் - யுத்தம் ஆரம்பம் 2 - தொடர்
வழக்கத்தை விட சுருதி கொஞ்சம் கம்மியான குரலில் வயிற்றிற்குள் இருந்து வெளிவந்த கார்பன் டை ஆக்ஸைடை ஏழு ஸ்வரங்களுக்குள் அடங்காத இசையாக மாற்றிக் கொண்டே அலுவலகத்தினுள் நுழைந்தான் வசந்த்.
"இப்போ விசிலடிக்கிறத நிப்பாட்ட போறியா இல்லியா? " கணேஷின் சிந்தனை தடைபட்டதற்கான எரிச்சல் அவன் வார்த்தைகளில் தெரிந்தது.
"அதே தம்புசெட்டி தெருவில், அதே இடத்தில இருக்கும் லாயர் கணேஷ் அலுவகத்தில் விசலடிக்கக் கூடாது அப்படின்னு அம்பேத்கர் எதுவும் எழுதி வைச்சதா எனக்கு நியாபகம் இல்லையே பாஸ்" .
பதில் எதுவும் சொல்லாமல் அன்றைய தினசரியில் ஆழ்ந்தான் கணேஷ். வசந்த் தன் கையிலிருந்த கார் சாவிக்கு தூக்கு தண்டனையை வழங்கிவிட்டு கணேஷிடம்
"பாஸ் ஒன்னு அந்த பியட்ட மாத்துங்க இல்ல என்ன மாத்துங்க, உங்ககிட்ட இருந்து எங்க இரண்டு பேரில் யாருக்கு விமோசனம் கிடைத்தாலும் சந்தோசம் தான்"
"உனக்கெல்லாம் விமோசனமே கிடையாதாடா? "
"அதைத் தான் பாஸ் நானும் உங்ககிட்ட கேக்கிறேன் எனக்கெல்லாம் விமோசனமே கிடையாதா !" கணேஷ் முறைத்தான் சரி பியட்ட மாத்த வேண்டாம் உங்க டப்பா மொபைல் அந்த டபிள் ஒன் டபிள் ஜீரோவையாவது மாத்தக் கூடாதா?" குரலில் அலுத்துக் கொண்டான்.
"உலகமே ஆண்ட்ராயிட் ஆப்பிள்ன்னு சுத்திகிட்டு இருக்கு, நீங்க மட்டும் மாறாமலேயே இருக்கீங்க". கணேஷ் லேசாக சிரித்துவிட்டு குளியலறை நோக்கி சென்றான். இந்நேரத்தில் கணேஷ் போன் ரிங் ஆக, அதை வசந்த் எடுக்க, பேசியவரின் வார்த்தைகளைக் கேட்டு தன் முகத்தை மாற்ற, சில நிமிடங்களில் தொடர்பு துண்டிக்கப்படவும் கணேஷ் பாத்ரூம் கதவைத் திறக்கவும் சரியாக இருந்தது. இந்நேரத்தில் குறுந்தகவல் வந்ததன் அடையாளமாய் "பீப்" ஒலித்து அமைதியாகியது. அதனை எடுத்துப் படித்த வசந்தின் முகம் கணேஷ் அணைத்த பாத்ரூம் பல்பை விட பிரகாசமாய் எறிந்தது.
"பாஸ் உங்க மொபைல கோடி ரூபா கொடுத்தா கூட வித்ராதீங்க. இது போன் இல்ல பொக்கிஷம். இப்போ பேசினது யாரு தெரியுமா! அரசியலையும் ஸ்டைலையும் சென்சஷேன் ஆக்கினவரு , நேத்து தப்பிப் பிழைச்சவரு"
வசந்த் ஆர்வத்தோடு சொல்ல கணேஷோ " வசந்தா அவர மாதிரி பேசறவங்க ஜப்பான் ல கூட ஆயிரம் பேரு இருக்காங்க டா" குரலில் கணேஷும் சிறிது ரஜினி ஆனான்.
"கணேஷா இந்த வசந்த் ஒன்னும் அவ்ளோ சீக்கிரமா யார்கிட்டயும் ஏமாற மாட்டான்." அவனும் ரஜினியானான், கலைந்த தன் தலைக்குள் கையைவிட்டு மேலும் கலைத்தான். அதிலும் ரஜினியே.
"சரி போன் பண்ணினது அவரு தான்னு எப்படி நம்புறது"
"அப்படிக் கேளுங்க, தலைவர் போன் போட்டு உங்க கூட பேசனும், பார்க்கனும்னு சொன்னாரு, நான் கூட எதிர்க்கட்சிகாரன் ஏவல்னு சீரியஸா எடுத்துக்கல, அவர போய் நாம பார்க்க வேண்டிய இடம் எல்லாம் சொல்லி முடிச்சதும் அவரே போன கட் பண்ணிட்டாரு, ஆனா..."
"ஆனாவுக்கு அப்புறம் என்ன நடந்ததது அத சொல்லு" கணேஷ் வசந்தை வேகப்படுதினான்.
"அவர் போன் கட் பண்ணினதும் எனக்கு ஒரு மெசேஜ் ரிசீவ் ஆச்சு, அதான் என் நம்பிக்கைக்கு காரணமே"
"என்ன மெசேஜ் "
"இன்னிக்கு எல்லா நியூஸ் பேப்பர்லையும் தலைப்பு செய்தி என்ன? "
" WAR BEGINS யுத்தம் ஆரம்பம் "
கணேஷ் சொல்லி முடிக்க, தன் கையிலிருந்த மொபைலை நீட்டினான் வசந்த்.
*******************************************************
வசந்த் நீட்டிய மொபைலை வாங்கிப் படித்துவிட்டு
"இல்லீங்க கணேஷ் இவங்கள சும்மா விடப் போறது இல்ல. WAR BEGINSன்னு சொல்றாங்க யுத்தம் ஆரம்பம்னு சொல்றாங்க, யார் யார் கூட யுத்தம் பண்ணப் போறாங்க... என் கூட யுத்தம் செய்யல கணேஷ்... தமிழக மக்கள்... தமிழக மக்கள் கூட யுத்தம் செய்ய போறாங்க. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா" பலமான தன் அதிரும் சிரிப்பின் பின் அமைதியானார் முதல்வர் ரஜினிகாந்த்.
"அரியணையில் அமர்ந்த உங்களைப் பார்த்து சந்தோசப்படவா இல்ல இப்படி அடிபட்டு இருக்கத பாத்து வருத்தப்படவான்னே தெரியலை சார்" தன் வருத்தமானதொனியில் சொல்லிய கணேஷ் முதல்வரின் பதிலை எதிர்பார்த்து அவர் கண்களில் தன் பார்வையைப் பதித்தான். பார்க்க முடியவில்லை. கண்களில் அத்தனை தீர்க்கம்.
"நேற்று நடந்த குண்டுவெடிப்பு சமந்தமா பேசுறதுக்காகத் தான் உங்கள வரச் சொன்னேன் கணேஷ். ஸ்டோரி டிஸ்கசன் அப்போ சுஜாதா சார் பெரும்பாலும் உங்களைப் பத்தி தான் பேசுவாரு! கிரேட் மேன்.... ஐ மிஸ் ஹிம் லாட்..."
"வீ டூ சார்..." வசந்த் சொல்லிவிட்டு சோகமாக கணேசைப் பார்த்தான், கணேஷாலும் எதவும் பேசமுடியவில்லை.
"ஷெங்கர் சார் கிட்ட தான் உங்க நம்பர் வாங்கினேன். நிறைய விஷயங்கள் பேசனும்"
"பேசலாம் சார்" இது வசந்த்.
"ஓ வசந்த் மறந்தே போய்ட்டேன். மொதல்ல அந்த ஜோக் சொல்லுங்க இன்னிக்கு தெரிஞ்சே ஆகணும் " அடிபட்ட வேதனையிலும் உற்சாகமானார் தலைவர்.
"மெக்சிகோ நாட்டுல" வசந்தும் ஆர்வமுடன் ஆரம்பிக்க. " சார் நீங்க தனியா இருக்கும் போது சில முக்கியமான விஷயங்கள் பேசலாம்னு தான் வந்தோம்.அதுக்கு சரியான நேரம் இதை விட்டா வேறு இருக்காது. வசந்த்தை இடைமறித்த கணேஷ் அவனை கண்களால் எரித்துவிட்டு அமைதியானான்.
"ஆமா கணேஷ் என்னோட மனசுலயும் பல குழப்பங்கள் இருக்கு. இந்த முதலமைச்சர் பதவி அதுக்குள்ள இவ்ளோ பெரிய வலிய உண்டு பண்ணும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல."
பெருமூச்சு ஒன்றை விட்டு மேலும் தொடர்ந்தார். " கோவலன் மதுரைக்கு வரும் போது கோட்டை வாசல்ல இருந்த கொடி உள்ளே வராதே உன் உயிருக்கு ஆபத்துன்னு சொல்ற மாதிரி அசைந்ததாம். இந்தக் கோட்டைக்கு நான் வரும் போது எந்தக் கொடியுமே அப்படி அசையலையே கணேஷ். கணேஷ் அது என்ன சிலப்பதிகாரப் பாடல்னு தெரியுமா?".
"போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரால் என்பது போல் மறித்துக் கைகாட்ட"
அழகிய தமிழில் சொல்லி முடித்தான் வசந்த்.
"வசந்த் உங்களுக்கு இலக்கியம் கூட தெரியுமா?" தன் சிறிய விழிகளை அகல விரித்து ஆச்சரியக்குறியைக் காட்டினார் ரஜினி.
"அவனுக்கு தொல்காப்பியத்திலிருந்து 'தோல்'காப்பியம் வரை எல்லாமே தெரியும் சார் நாகரிகம் தவிர " பொய்க் கோபத்துடன் வசந்தை முறைக்க , அவனும் பதிலுக்கு முறைத்தான்.
"ஹா ஹா ஹா" சிரித்துவிட்டு ஆழ்ந்த சிந்தனயில் ஆழ்ந்தார். " ஏதோ முக்கியமான விசயம்ன்னு சொன்னீங்களே சொல்லுங்க கணேஷ்"
கணேஷ் ஆரம்பித்தான் " சார் நேத்து ராத்திரி விழா நடந்த அரங்கதிற்குள்ள வர முடியல. அவ்ளோ கூட்டம். வெளியில இருக்ற திரையிலாவது உங்களைப் பார்த்துவிட்டுத் தான் வருவேன்னு வசந்த் அடம் புடிச்சான். கார்ல இருந்து விழா நிகழ்வுகளப் பார்த்துட்டே இருந்தோம்" இமைக்காமல் சம்பவங்களை துரத்திக் கொண்டிருந்தார் ரஜினி.
"அப்போ திரையில் தெரிஞ்ச விஜயகாந்த் தொண்டன் கையில எதையோ கொடுத்ததையும் அத அந்த தொண்டன் உங்க கையில கொடுத்ததையும் பார்த்தோம்.அவரு மேடைய விட்டு அகன்ற கொஞ்ச நேரத்துல பயங்கர சப்தம். எங்களுக்கு முன்னாடி நின்ன கார் புயல் வேகத்தில புறப்பட்டது. என்ன நடந்த்ததுன்னு மூளை மனசுகிட்ட சொல்றதுக்குள்ள வசந்த் அந்தக் கார பாலோ பண்ண ஆரம்பிச்சான். ஏன்னு கேட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மேடையில பார்த்த விஜயகாந்த் இப்போ அந்த கார்ல போறாரு. சாம் திங் ராங். வீ ஹாவ் டூ பாலோ ஹிம் பாஸ்னு சொன்னான்."
"வசந்த் சில விசயங்கள்ல கோடு போட்டாம்ன்னா ரோடு போடாம விடமாட்டான்" நிறுத்திவிட்டு கணேஷ் வசந்தைப் பெருமையோடு பார்த்தான். இப்போது வசந்த் தொடர்ந்தான்.
"தாம்பரம் டூ வேளச்சேரி போற பாதையில இருக்கிற காஞ்சு போன காட்டுக்குள்ள கார் போனது. நாங்களும் போனோம். கார் போக வழியில்லை. நடந்து போய் துரத்தினோம். கட்டி முடிக்காம இருந்த அப்பார்ட்மென்ட் கிரௌண்ட் ப்ளோர் ல அங்கங்க துப்பாக்கி குண்டுகள் சிதறி இருந்தது. ஹால் நடுவில ஒருத்தர கட்டிபோட்டு இருந்தாங்க. விஜயகாந்த் போய் கட்டவிழ்துவிட்டாறு, ஏதோ வாக்குவாதம் பண்ணினாங்க. கொஞ்ச நேரத்துல்ல அந்த இரண்டு பெரும் ஒளிஞ்சு இருந்து வேடிக்கைப் பார்த்த எங்கள கவனிக்காம போனாங்க. அப்போ தான் கட்டுபடிருந்தவர் முகத்த தெளிவாப் பார்த்தோம் அது அர்ஜுனனு."
"யோசிக்கக் கூட நேரம் இல்லாம அவங்களைப் பின் தொடர்ந்தோம். வந்த கார் புறப்பட்டது. எங்க கார் பின்னாடி இருந்து இன்னொரு உருவம் வெளிப்பட்டு அதுவும் அந்த கார்ல ஏறியது. வானத்தில திடீர்ன்னு மின்னல் வெட்ட சரத்குமார் தான் அந்த திடீர் மனிதர்னு கண்டுபிடிச்சோம். வேகவேகமா கார ஸ்டார்ட் பண்ணி துரத்தும் போது தான் தெரிஞ்சது, எங்க கார் பெட்ரோல் டாங்க்ல ஓட்டை போட்டு லீக் பண்ண வச்சு எங்கள தடுத்து நிப்பாட்டினது சரத்குமார் தான்னு." இது தான் தலைவா நடந்தது. வசந்த் நிறுத்தினான்.
ஆச்சரியத்திலிருந்து அதிர்ச்சிக்கு தள்ளப்பட்ட ரஜினி கணேஷிடம் கேட்டார் " விஜயகாந்த் எனக்கு நல்ல நண்பன் அவன் பண்ணியிருக்க வாய்ப்பே இல்ல மேலும் அவன் கூட வார அர்ஜுன் பத்தி எனக்கு நல்ல தெரியும். அர்ஜுன், அமெரிக்கன் ஜெமேஸ் கூட எல்லாம் டிடெக்டிவ்வா வொர்க் பண்ணியிருக்கான். சரத்குமார் என் கட்சி தான். நீங்க சொல்றது எதையுமே என்னால நம்பவே முடியல கணேஷ் என்ன நடக்குது கணேஷ். ஒன்னுமே புரியல"
வசந்த் விளக்கினான். " ரெண்டு சாத்தியக் கூறுகள் இருக்கு சார். விஜயகாந்த், அர்ஜுன் சரத்குமார் மூணு பேருமே கெட்டவங்க. குண்டு வெடிப்பு நடக்ரதுல அர்ஜுன்க்கு கடைசி நேரத்துல உடன்பாடு இல்லாம போயிருக்கலாம், அதனால் மூணு பேருக்குள்ளையும் சண்டை வந்த்ருக்கலாம், அர்ஜுன கட்டிபோட்டுட்டு மத்த ரெண்டு பெரும் சேர்ந்து காரியத்த முடிச்சிருக்கலாம். காரியம் முடிஞ்சதும் மூணு பெரும் சமாதானம் ஆகியிருக்கலாம்." வசந்த் சிறிது இடைவெளிவிட்டு கணேஷைப் பார்த்தான்.
"அப்போ இன்னொரு சாத்தியக்கூறு என்ன கணேஷ்?" இடைவெளியை நிரப்பினார் ரஜினி.
"இவங்க மூணு பேருமே நல்லவங்க. இந்தத் திட்டம் கடைசி நேரத்துல இவங்க மூணு பெருகும் தெரிய வந்திருக்கு, தீவிரவாதிகள் கூட அர்ஜுனும் சரத்குமாரும் சண்டை போடுற நேரத்துல விஜயகாந்த் உங்கள எச்சரிக்கை பண்ண வந்திருக்கலாம். உங்களை எச்சரிச்சதும் அவங்கள காப்பாத்த கிளம்பிருக்காரு. இந்த நேரத்துல அர்ஜுன் அந்த உண்மையான தீவிரவாதிகளால கட்டுபட்டிருப்பரு , சரத்குமார் அவங்கள ஓடஓட துரத்தி அடிசிருப்பாறு, விஜயகாந்த் அர்ஜுன் கட்டவிழ்த்து காப்பாதிருப்பாறு"
"வாவ். சுஜாதா சார் சொன்னதுல கொஞ்சம் கூட பிழையில்ல கணேஷ். மார்வலஸ் என்னால நம்பவே முடியல."
"பட்" ரஜினி பாஸ் செய்தார்.
"கேப்டன் அர்ஜுன் சரத் இந்த மூணு பெரும் நல்லவங்களோ கெட்டவங்களோ இந்த மூணு பேரு விசயத்துல நாலாவது அஞ்சாவதா இந்த கணேஷ் வசந்த் நுழையிறது அவங்களுக்கு பிடிக்கமா போயிருக்கலாம். பெட்ரோல் சிந்த வச்சு அவங்க தப்பியிருக்கலாம். "
இதைக் கேட்டதும் ரஜினி முகத்தில் ஈ ஆடவில்லை. கவலையின் ரேகைகள் படர்ந்தன. இந்நேரத்தில் டி.ஜி.பி ராஜேந்திரன் உள்ளே நுழைய சம்பிரதாயமாக பேசிவிட்டு கணேசும் வசந்தும் விடைபெறும் பொழுது ரஜினியும் ராஜேந்திரனும் ஒரே குரலில் சொன்னார்கள் " கணேஷ் வசந்த் வீ நீட் யு ஆல்வேஸ். "
இந்நேரத்தில் அஜீத் விஜய் மொபைலில் குறுந்தகவல் வந்ததன் அடையாளமாய் "பீப்" ஒலிக்க எடுத்துப் படித்ததும் பரபரப்பானார்கள்... அந்த குறுந்தகவல் சொல்லிய தகவல்..
" WAR BEGINS யுத்தம் ஆரம்பம் " .....
அடுத்து ஆரம்பமாகும் இடம்
நண்பன் பக்கம் அப்துல் பாசீத் வலைப்பூ ... படிக்கத் தவறாதீர்கள்....
பகுதி 4 - ராஜ் -சினிமா சினிமா-
பகுதி 5 - சின்னமலை - தல போல வருமா-
பகுதி 6 - SCENECREATOR -யாவரும் நலம்-
பகுதி 7 - ஹாலிவுட் ரசிகன்- ஹாலிவூட் பக்கம்-
பகுதி 8 - KUMARAN - எண்ணங்களும் வண்ணங்களும்-
பகுதி 9- ராஜா - என் ராஜ பாட்டை -
பகுதி 10 - JZ - JZ சினிமா -
பகுதி 11 - கணேஷ் - மின்னல் வரிகள் -
பகுதி 12 - ஸ்ரீராம் - எங்கள் பிளாக் -
பகுதி 13 - அருண் - அவிழ்மடல்
இணைய விரும்பும் நண்பர்கள் இணையலாம்..
பகுதி பதிமூன்றைத் தொடர்பவர்கள் பற்றிய அறிவிப்பு நண்பன் ஹாரியின் மூலம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்