
பில்லா படத்தில் அந்த ஒரு காட்சியை பார்த்த நொடியே இந்தப் பதிவை எழுதலாம் என்று முடிவெடுத்தேன், நண்பன் ராஜுவும் அன்பான வேண்டுகோள் ஒன்று வைத்ததால் பதிவு எழுதுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அந்தக் காட்சியைப் பற்றி விளக்க மனமில்லை, விளக்காமல் என் உள்ளக் குமுறலை சொல்கிறேன்.
இன்று காலை எட்டு மணி காட்சி, சைதாப்பேட்டை ராஜ் திரையரங்கில் தான் டிக்கெட் கிடைத்தது, உள்ளே சென்று பார்த்தபின் தான் தெரிந்த்தது சென்னையில் இதை விட ஒரு மொக்கையான திரை அரங்கம் இருக்க முடியாது என்று. வாயில் பாக்கு போட்டு மென்று கொண்டிருந்தவன் குதப்பிக் கொண்டே கூறினான் "எப்பா பாக்கு சிகரெட் எல்லாம் உள்ளே கொண்டு போக கூடாது, தியேட்டர்ல பாக்கு போட்டா பைன் போடுவாங்க" , நானும் எனது நண்பர்களும் தலையில் அடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். அரங்கம் அதிர ஆரம்பித்திருந்தது, ஏனோ தெரியவில்லை நாங்கள் அமைதியாகவே இருந்தோம்.
இத்தனை நாள் எதிர்பாத்துக் காத்திருந்த பில்லா டூ ஆரம்பமாகியது, நான் இயக்கி இருந்தால் கூட முதல் காட்சியை சற்று வித்தியாசமாக வைத்திருப்பேன், எடுத்த எடுப்பிலேயே இவர் தான் டேவிட் பில்லா என்று காட்டிவிட்டார்கள். அஜீத் என்ற நடிகனுக்கு உண்டான மாஸ் இங்கேயே தூள் தூளாக்கப்பட்டது போன்ற உணர்வு. இருந்தும் "என் வாழ்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிசமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனது டா" என்ற வசன உச்சரிப்பினால் தல எங்களை எல்லாம் ஈர்த்துவிட்டார்.
சக்ரி டோல்டியை நம்பி எப்படி இப்படி ஒரு கதைக்கு ஒத்துக் கொண்டார் என்பது தான் புதிராக உள்ளது. உன்னைப்போல் ஒருவன் படம் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தின் பாதியைக் கூட இப்படம் ஏற்படுத்தவில்லை, படத்தின் டைட்டிலை வித்தியாசமாக போடுவதாக எண்ணிக் கொண்டு சொதப்பி இருந்தார், அதில் தெளிவு இல்லை அவசரம் மட்டுமே இருந்தது.
இலங்கைத் தமிழன் எப்படி அகதி ஆனான், அகதி எப்படி அடியாள் ஆனான் என்பதை புகைப் படங்களாக காட்டிவிட்டு, அடியாள் எப்படி காங்க்ஸ்ட்டர் ஆனான் என்று சொல்வதற்காக இரண்டு மணிநேரம் ஒதுக்கி அதில் இரண்டாயிரம் பேரை நடிக்க வைத்திருகிறார்கள்.
இரத்தம் பார்க்காத
காட்சிகளே படத்தில் கிடையாது, மேலே கீழே, முன்னே பின்னே, யார் எப்போது எங்கே எப்படி திரும்பினாலும் இரத்தம் பார்க்காமல் சாவதில்லை. சென்ற படத்தில் இறுதிக் காட்சியில் மட்டும் வன்முறையை கையாண்ட இயக்குனர், இந்தப் படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. விஜயகாந்த் படத்தில் நாம் பார்க்காத வன்முறையா, தமிழன் அதை எல்லாம் பொறுத்துக் கொள்வான், ஆபாசம் அளவுக்கு மீறி இருகிறதே அதை எப்படி பொறுத்துக் கொள்வான். அதையாவது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.
குடும்பத்தோடு செல்ல நினைபவர்கள் தயவு செய்து சென்று விடாதீர்கள், இல்லையேல் குடும்பத்திற்குள்ளும் வன்முறை வெடித்துவிடும். இருபது நொடிகளுக்குள் தமிழ் சினிமா இதுவரை காணாத அளவிற்கான ஆபாசத்தைக் காட்டியிருப்பது அதிர்சியளிகிறது. இயக்குனரை மட்டும் குறை கூறி எதுவும் நடந்துவிடப் போவதில்லை, அஜீத் தலையிட்டு அந்தக் காட்சியை மாற்றச் செய்திருக்கலாம். போலீஸ் அதிகாரி ஒருவரை கொல்லச் செல்லும் இடத்தில தான் அத்தனை ஆபாசத்தைக் காட்டியிருப்பார்கள், அந்த ஒரு
காட்சியை நீக்கினால் கூட போதும் படத்திற்கு U/A கண்டிப்பாக கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு. மாஸ் ஹீரோ நடித்த படத்தில் இது போன்ற காட்சி வைத்தது ரசிகன் எதை வேண்டுமானலும் பார்ப்பான் என்ற எண்ணத்திலா இல்லை நமது கலாச்சாரம் தான் மாறிவிட்டதா.
அடுத்தது கதாநாயகிகள் தேர்வு, ஒருவரையும் பார்பதற்கு சகிக்கவில்லை, வெள்ளைத்தோல் இருந்தால் போதும் என்று நினைத்து விட்டார்கள் போல, காட்சிக்கு காட்சி புது புது ஆட்கள் வந்து மாண்டு போகிறார்கள், இதுவும் ஏன் என்று தெரியவில்லை, பல இடங்களில் காட்சி தொங்கலில் விடப்பட்டுள்ளது.
ஒருவேளை பில்லா ஹிட் ஆகுமானால் அதற்கான காரணங்கள்
அஜீத் குண்டாகத் தான் இருக்கிறார் ஆனால் அசிங்கமாகத் தெரியவில்லை, இந்தப் படத்தில் அதிகமாக நடக்கவில்லை, பெரும்பாலும் அமர்ந்தே இருக்கிறார், இல்லை துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார், அவர் என்ன செய்தாலும் அதில் சிறப்பான நடிப்பு வெளிப்படிருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விசயம். டூயட் இல்லை, ஒபனிங் சாங் இல்லை. இவை எல்லாம் படத்திற்க்கான பிளஸ்கள்.
அஜீத் பேசுவது சில வசனங்கள் தான் என்றாலும் அனைத்தும் அருமை, வசனங்களுக்காக அதிகம் மெனகெட்டு இருகிறார்கள் என்று தெரிகிறது, அவர் பேசும் அத்தனை வசனங்களும் ரசிக்கும் படியாக உள்ளது கைத்தட்டல்களை அள்ளுகிறது.
"கூப்பிடரவங்களைப் பொறுத்து", "இது பேராசை இல்ல பசி", " மத்தவங்க பயம் நம்ம பலம்" "நண்பனா இருக்க எந்தத் தகுதியும் வேண்டாம், ஆனா எதிரியா இருக்க தகுதி வேண்டும்". வசனங்களை அத்தனை உயிரோட்டமாக சொல்கிறார் அஜீத். கோட் சூட் கருப்பு கூலிங்கிளாஸ் அனைத்தும் அம்சமாகப் பொருந்துகிறது. இடைவேளைக்குப் பின் வரும் சண்டைக் காட்சியில் பரபரப்பைக் கூட்டி, அதன் அடுத்த காட்சியில் பில்லா தீம் மியூசிக் உடன் அஜீத் நடந்து வரும் காட்சிகளில் நிமிர்ந்து நிற்கும் பில்லா டூ சொத்தப்பலான திரைக்கதையால் அடுத்த காட்சியிலேயே படுத்து விடுகிறது.
இறுதிக் காட்சியில் ஹெலிஹாப்டரில் தொங்கிக் கொண்டு செய்யும் ஸ்டண்டில் அஜீத்தின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. விறுவிறுப்பை அதிகப்படுத்தி ஆபாசத்தையும் இரத்தத்தையும் குறைத்திருந்தால் அஜீத் என்ற பேஸ்மெண்டை கொண்டு எழுப்பிய பில்டிங் ஸ்ட்ராங்காக வந்திருக்கும்.
படம் முடிந்து வெளியே வந்த பொழுது நண்பன் சொன்னான் "விட்ரா மச்சான் இது என்ன நமக்குப் புதுசா, வின்ன விட லாஸ் தான் நமக்குப் பிடிக்கும், அடுத்த படத்துல பாத்துக்கலாம்", இப்படிப்பட்ட ரசிகர்களை மீண்டும் மீண்டும் அஜீத் ஏமாற்றாமல் சிறந்த கதைகளில் நடிக்க முயற்சித்தால், முயற்சித்தால் இல்லை முயற்சியுங்கள் என்பதே உங்கள் ரசிகனின் வேண்டுகோள். ஏதோ ஒரு நம்பிக்கையில் பில்லா டூ வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறேன்
இப்பதிவு எழுதுவதற்காக உற்சாகம் அளித்த சினிமா சினிமா ராஜ் அவர்களுக்கு ( இதைப் படித்த பின் ஏன்டா இவனை எழுதச் சொன்னோம் என்று கடியாகி இருந்தீர்கள் என்றால் தயவு செய்து மன்னிக்கவும் )
என்ன தான் தல ஹிட் கொடுக்கா விட்டாலும் அஜீத் அவர்களைப் பற்றி நான் எழுதிய தல போல வருமா (டூ) பில்லா டூ இந்தப் பதிவு செம ஹிட். 700 ஹிட்ஸ் பெற்றுள்ளேன், அதில் எத்தனை பேர் முழுவதுமாக படித்தார்கள் என்று எனக்குத் தெரியாது, இருந்தும் இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதற்க்கு முந்தைய என் பதிவுகள் அனைத்தும் நூறு ஹிட்சைத் தாண்டினால் அதுவே அபூர்வம். அதற்காக ஸ்பெஷல் தேங்க்ஸ் பார் யு தல.


