Showing posts with label ஆவி பாஸ். Show all posts
Showing posts with label ஆவி பாஸ். Show all posts

5 Dec 2016

டியர் சிந்தகி


அன்புள்ள ஆவி, 

நலமாய் இருக்கிறீர்களா? எழுதி பலநாள் ஆகிறது. எங்கே எழுதுவது மொத்தமாக மறந்து போய்விட்டதோ என்று சில சமயம் பயமாகவும் இருக்கிறது. எதை எழுத ஆரம்பித்தாலும் கருணையே இல்லாமல் எழுதியது மொத்ததயும் அழித்துவிடுகிறேன் அல்லது பாதியில் நிறுத்திவிடுகிறேன். எழுத்து என்பது விருப்பப்பட்டு நிகழ வேண்டிய ஒரு செயல். அதனை வலுகட்டாயமாக திணித்து எழுத முடியாது. அல்லது என்னால் முடியவில்லை என்றும் சொல்லலாம். அமெரிக்கா வந்ததில் இருந்து எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் நடந்து கொண்டிருகின்றன. யாரும் பார்க்காத வனத்தில் மலர்ந்து உதிரும் பூ போல் யாருமற்ற இடத்தில் வீசும் தென்றலைப் போல் யாருக்கும் சொல்லாமல் கடந்து கொண்டிருக்கிறேன். 'என்ன சீனு இப்ப ஏதும் எழுதுறது இல்ல போல' 'என்னடா எழுதுறத நிறுத்திட்ட போல' 'ஜீ எதாது எழுதுங்க ஜீ' போன்ற வார்த்தைகளை சமீப நாட்களாக அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் எழுத்தைத் தேடும் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிட்டதட்ட பத்து மாதகாலமாக நீங்கள் கூறிக்கொண்டிருந்ததை இப்போது இன்னும் சிலரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். 

நீண்ட நாளைக்குப் பின் ஏதாவது எழுத வேண்டும் போல் இருக்கிறது, தொய்வில்லாமல் ஒரு விஷயத்தை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது, அதற்குக் காரணம் டியர் சிந்தகி படமாகவும் இருக்கலாம். அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட கோவாவாகவும் இருக்கலாம். முதலில் படம் அப்படி ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. மிக மெதுவான திரைக்கதை. பிடிப்பே இல்லாத கதைக்களம் என திரையில் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்க நம்மை படத்தோடும் கட்டிபோடும் எவ்வித மாயாஜாலமும் அந்தக்கதையில் இருந்திருக்கவில்லை கதைக்களம் கோவாவை நோக்கி நகரும் வரைக்கும். 

கோவா கோவா கோவா... கோவா எத்தனை அருமையான இடம் என்பதை இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்து கொண்டிருந்தேன். ஆளரவம்ற்ற அமைதியான அந்த கடற்கரை. வளைந்து நெளிந்து சில சமயங்களில் குறுகி மிரட்டி நீளும் சாலைகள், நாம் தங்கியிருந்த இடத்தின் அருகில் இருந்த மிகபெரிய ஆறு. அந்த ஆற்றின் சலனம். அந்த சலனங்களின் மேல் நீண்டு மறுகரையைத் தேடிச் செல்லும் பாலம், மக்களை ஏற்றிச்செல்லும் படகு என கோவா நினைவுகள் மீண்டு எழுகின்றன. 

இன்னும் எத்தனை முறை சென்றாலும் நாம் முதல்முறை சென்ற கோவா பயணத்தைப் போல் மீண்டும் ஒருமுறை அமையுமா என்பது சந்தேகமே. யாருக்கும் வாய்க்காத ஒரு பயணம் அது. மிகச்சரியான சமயத்தில் நல்லதொரு மழைக்காலத்தில் அமைந்த பயணம். பயணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து முடியும் வரையிலும் மழை நம்மை துரத்திக் கொண்டே இருந்தது. முதலில் மழையை வெறுத்து சபித்து பின் மழையின் துணையோடு ஊர் சுற்ற ஆரம்பித்த நினைவுகள் சுகமாக இருக்கின்றன. நீங்கள் நான் கௌதம் ரூபக் என அந்த நான்கு நாட்களும் நம்மை கோவாவிடம் ஒப்புக் கொடுத்திருந்தோம். வழியெங்கும் பசுமையான காடுகள் மலைகள் ஆறுகள் கடல் என ஒரு பறவையைப் போல் பறந்து கொண்டிருந்தோம். சலிக்காமல் பயணித்துக் கொண்டே இருந்தோம். எத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் சாகசங்கள். 

'கார் வேணாம் பைக் ஊர் சுத்தலாம்' என நீங்கள் சொன்னபோது 'பெய்யுற மழைக்கு கார்தான் பாஸ் பெஸ்ட்' என்று கூறியதன் அர்த்தம் புரிய ஒரு நாளாகியது எனக்கு. ஷானே பஞ்சாப், ஷேர் கே பஞ்சாப் டோனா பாலா பன்ஜிம் என கோவா நினைவுகள் அத்தனை சீக்கிரம் மறக்கக்கூடிய விசயமல்ல. மீண்டும் ஒருமுறை கோவா போகவேண்டும். போகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதே தவிர நினைத்தவுடன் கோவா பயணிக்க முடியவில்லை என்பது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. காரணமே இல்லாமல் டியர் சிந்தகி பிடித்துவிட்டது. கோவாவில் நகரும் உணர்வுப் பூர்வமான கதைக்களம் பிடித்திருக்கிறது. 

போகட்டும் விடுங்கள் டியர் சிந்தகி பிடிக்க ஒரேயொரு காரணம் வேண்டும் என்றால் உங்களுக்கு ஆலியா எனக்கு கோவா!

நன்றி
சீனு 

23 Oct 2015

இருள் பரவும்...!

அன்புள்ள ஆவி வணக்கம், 

கன்னியாகுமரி, தென்காசி சுற்றுப்பயணத்தில் இருக்கின்றீர்கள் என நினைக்கிறன். பயணம் சிறக்க வாழத்துகள். வரும் வாரம் நீங்கள் சென்னை வருகிறீர்கள் என்று கேள்விபட்டேன் மகிழ்ச்சி. அதற்குள் என்ன அவசரம் இந்த கடிதம் எழுத என்பதை அன்புள்ள என்ற வார்த்தையை படிக்கும் போதே மனதிற்குள் நினைத்து, என்ன பதில் எழுத வேண்டும் என்பதையும் இந்நேரம் உங்கள் மனதிற்குள் எழுத ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குமுன்! அதற்குமுன் இந்தக் கடிதத்தையும் ஒருமுறை படித்துவிட்டீர்கள் என்றால் என் முன்முடிவு பொய் ஆகிவிடும். மேலும் நேற்று நடந்த அந்த திகில் அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்து கொண்டது போல் ஆகிவிடும். 

உங்களுக்கு நினைவிருக்கும். நம்முடைய மஞ்சோலை மற்றும் கோவா பயணத்தின் போது 'சீனு நீங்க நாய பத்தி ரொம்ப அதிகமா எழுதிட்டீங்க, இனி வேண்டாமே' என்று கூறியது. ஒவ்வொரு முறை நாயைப் பார்க்கும்போதும் மற்ற எல்லா சிந்தனைகளையும் முந்திக்கொண்டு முன்னால் வந்து நிற்கிறது இந்த அறிவுரை. 




உங்களுக்கே தெரியும் நான் நன்பகலில் பயணித்து நள்ளிரவில் வீடு வந்து சேர்பவன் என்று. அன்றாட நிகழ்வில் நீங்கள் பலரையும் கடக்கும் போது, பல சமயங்களில் நான் நாய்களை மட்டுமே கடந்து வருபவன். கூடிய விரைவில் நான் எழுதப்போகும் தெருநாய்களைப் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு ஐநாவில் இருந்தோ சீலேவில் இருந்தோ அல்லது உகாண்டாவில் இருந்தோ பரிசு கிடைத்தால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமே இல்லை என்பது தான் என் நிலைப்பாடு. இருந்தும் நாய்களைப் பற்றிய நமக்கான விவாதத்தில் ஒரு திருப்புமுனை வரும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை இவ்வளவு அவசர அவசரமாக எழுதுவேன் என்று சற்றும் நினைத்துப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் நேற்றைய இரவு வரைக்கும் கூட.  

நேற்றைக்கு வீடு திரும்பும் போது மணி நள்ளிரவு இரண்டு. மழை வரும் போல் இருந்தாலும் நன்றாக பனி விழுந்து கொண்டிருந்தது. சரவணாவை பெரும்பாக்கத்தில் விட்டுவிட்டு அடுத்த சந்து திரும்பினால் அதிர்ச்சி. பேரதிர்ச்சி என்று சொன்னால் உண்மைக்கு மிக அருகில் என்று பொருள். அந்த சந்தில் ஒரு நாய் இல்லை ஒரு நாய்ப் பண்ணையே நின்று கொண்டிருந்தது. ஏற்கனவே குளிரில் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நாய்கள் வேறு. இவைகளைக் கடக்காமல் வந்த வழியே திரும்பிச் சென்று வேறு ஒரு சாலையைப் பிடித்து மேடவாக்கம் பிரதான சாலையை அடையலாம். ஆனால் அது கொஞ்சம் சுத்து. சரி ஆனது ஆகட்டும் என்று எண்ணத்தில் என்னிடம் இல்லாத தைரியத்தை வரவழைத்து வண்டியை செலுத்தினேன். உள்ளுக்குள் பரவ ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு மட்டும் அடங்கவே இல்லை. 

லேசாக ஒரு உறுமல். அப்படியே அந்த உறுமல் கொஞ்சம் கொஞ்சமாக பரவி கண்ணுக்கெட்டாத தொலைவில் இருந்தும் கேட்கத் தொடங்கியது.  இருள் பரவும் என்பார்களே அப்படித்தான் இருளோடு இருளாக நாய்களின் உறுமலும் பரவத் தொடங்கியது. லேசாக மின்னல் வெட்டியது. தெருவிளக்குகளில் பாதி எரியவில்லை. மீதி எரிந்தும் பிரயோஜனமாக இல்லை. எத்தனையோ முறை இதே சந்தில் அலறியடித்து ஓடி பின் என்னை ஆசுவாசபடுத்திக் கொண்ட கதையை உங்களிடம் பலமுறை கூறியிருக்கிறேன். வருத்தத்தோடு கேட்பது போல் மூஞ்சை வைத்திருந்தாலும் உள்ளுக்குள் சிரித்து சந்தோசப்பட்டிருபீர்கள். பரவாயில்லை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிசி மூட்டைகளைப் போல ஏகப்பட்ட நாய்கள். இந்த நள்ளிரவிலும் சில நாய்கள் வாக்கிங் சென்று கொண்டிருக்க சில நாய்கள் காதல் புரிந்து கொண்டிருந்தன. நன்றாக கவனித்துவிட்டேன் பனிக்காலங்கள் வந்தால் இந்த நாய்கள் சுறுசுறுப்பாகி விடுகின்றன. (குஜால்டியாகி விடுகின்றன என்று தான் எழுத நினைத்தேன்.) ஒவ்வொரு நாய்களைக் கடக்கும் போதும் தங்கள் தலையை தூக்கி 'இது எங்க ஏரியா' என்ற தொணியில் ஒரு பார்வை பார்த்தன. லேசாக உறுமவும் செய்தன. அந்தக் கூட்டத்திலேயே நோஞ்சானாக கருதப்படும் நாய் கூட என்னைப் பார்த்து உறுமியது என்ற சோகத்தைத்தான் என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வந்த கோவத்துக்கு அங்கேயே அடிச்சிருப்பேன். ஆனா கடிச்சிருச்சுனா? 

இப்போதெல்லாம் நாய்களின் உறுமலுக்கும் மிரட்டலுக்கும் பழகிவிட்டேன். என்னவென்னாலும், நாய் கடிக்கவே வந்தாலும் வண்டியின் வேகத்தை மட்டும் கூட்டி அவற்றின் கோபத்தை அதிகரிக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன். வேகம் விவேகம் என்பார்கள். பத்து கிமீ வேகம் தான் இங்கே விவேகம். கண்ணாடியை திருப்பி நாய்களைப் பார்க்கும் படி வசதி செய்து கொண்டேன். ஒவ்வொரு நாயைக் கடக்கும் போதும் அவை கொலைவெறியோடு முறைப்பது தெரிந்தது. ஒரு கிமீ நீளமுள்ள அந்த தெருவில் குறைந்தது ஐம்பது நாய்கள் என்றால் என் நிலைமையை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். 

அந்த தெருவில் ஒரு மெக்கானிக் ஷெட் இருக்கிறது. பழைய கார்களை உடைத்து பாகம்பிரிப்பது தான் அவர்களுடைய வேலை. தினமும் மூன்றில் இருந்து நான்கு கார்கள் அந்த ஷெட்டின் வெளியே இருக்கும். அதில் இரண்டு கடந்த சில மாதங்களாக அங்கேயேதான் நிற்கின்றன. ஒன்று இண்டிகா, மற்றொன்று ஆம்னி. இரண்டிலுமே முன் பக்க கண்ணாடி உடைந்து ஒரு சிறிய துளை இருக்கிறது. பெயின்ட் உதிர்ந்து சிலந்தி வலை பின்னி. சில சமயங்களில் அதன் உள்ளிருந்து கூட நாய்கள் வெளிப்படும். என் கவலை அது இல்லை. 

சமீப காலமாகவே அந்த கார்கள் என்னை அதிகம் பயமுறுத்துகின்றன. ஒரு திகில் படத்தில் வரும் வில்லனைப் போல் என்னைப் பார்த்து சிரிக்கின்றன. உடைந்த அந்த கண்ணாடிகளின் வழியே எப்போது வேண்டுமானாலும் ஒரு பேய் வெளிப்படலாம் என்ற உணர்வுடனேயே அவற்றை நெருங்குகிறேன். எப்போது வேண்டுமானாலும் கதவுகளைத் திறந்துகொண்டு என் முன் நிற்ககூடும் என்ற உணர்வை தடுக்க முடியவில்லை. அது ஏன் இந்த பேய்களுக்கு பழைய வீடுகளும் கார்களுமே பிடித்துப்போகின்றன. 

பேய்களை நான் நம்புகிறேனா என்ற வாதத்திற்கு செல்ல விரும்பவில்லை. நான் ஏன் பேய்களை நம்புகிறேன் என்ற கேள்விக்கும் பதிலும் தெரியவில்லை. பள்ளிகூட நாட்களில் இருந்தே பேய்கதைகள் என்றால் அவ்வளவு பிடிக்கும். நள்ளிரவில் ஆட்டோவில் வந்த பேய். கிணத்தில் குளிக்கும் போது கழுத்தை நெரித்த பேய். புளியமரத்து பேய், பக்கத்து வீட்டு குழந்தையை பிடித்துகொண்ட பேய் என்று எத்தனையோ கதைகளை எத்தனையோ பேர் கூறக்கேட்டும் அலுத்ததே இல்லை. கடைசி பெஞ்சில் அமர்ந்து கொண்டோ, கருவேல மரத்தின் அடியில் அமர்ந்தோ நாங்கள் பேசிய பாதி கதைகள் பேய்களைப் பற்றிதான். அப்போது கேட்ட கதைகள் அனைத்தும் இப்போது நிஜமாகிவிட்டால். வெள்ளை உடை அணிந்த மோகினி ஒன்று மல்லிகைப்பூ வாசத்தோடு முன்னால் வந்து நின்றால்...! எனக்குத் தெரியும் இதற்கு முந்தைய வரியை மீண்டும் ஒருமுறை படித்து சிரிப்பீர்கள் என்று. ஆனால் என் கவலையே வேறு. ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். 

ஒருவேளை வாக்கிங் வந்த பேய் ஜாலியாக என்னுள்ளே செட்டில் ஆகிவிட்டால் என்னையே நம்பியிருக்கும் இந்த சமுதாயத்தின் நிலைமை என்னாவது. அப்போதும் 'வர வர நீ பேயாட்டம் எழுதுற' என்றுதான் கூறுவீர்களே ஒழிய ஏன் பேயாட்டம் எழுதுறேன் என்பதை குறித்து சிந்திக்க மாட்டீர்கள். சிரிக்காதீர்கள். நான் புலம்புவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கிறதா?

இப்போதெல்லாம் நாய்களை விடவும் அந்த கார்களையே அதிகம் கவனிக்கிறேன். அதிகமாகவும் யோசிக்கிறேன். அதே யோசனையில் மேடவாக்கம் வரையிலும் வந்துவிட்டேன். யாருமற்ற சாலையில் இருந்து சிவகாமி நகர் நோக்கி திரும்பியபோது தான் அந்த பொம்மையைப் பார்த்தேன். நல்ல பெரிய பொம்மை. நடுரோட்டில் தலையை விரித்துப் போட்டபடி குப்புறக் கிடந்தது. காஞ்சுரிங் போன்ற படங்களில் பாத்திருக்கிறோமே. இம்மி பிசகாமல் அதேமாதிரி இருந்தது. அதைபார்த்த மாத்திரத்தில் வண்டியை நிறுத்திவிட்டேன். லேசாக வீசிய காற்றில் அதன் முடி அசைவது போல் இருந்தது. உயிர் இருந்தாலும் இருக்கக் கூடும். பொம்மை என்றே நினைக்க முடியவில்லை. பொம்மை உருவில் வந்த பேய் அல்லது பேய் உருவில் வந்த பொம்மை. 

தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் மேலும் உயிரூட்டியது. நான். அந்த பொம்மை. ஒரு சில தவளைகளின் அலறல். எங்கும் நிரம்பி இருக்கும் நிசப்தம். அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அதற்கும் ஏதேனும் பூர்வஜென்ம தொடர்பு இருக்கக்கூடுமோ என்றெல்லாம் கூட யோசித்தேன். மெல்ல அதனைக் கடந்து செல்ல தொடங்கினேன். வண்டியின் கண்ணாடியில் அசையாது படுத்துக்கிடந்தது அதன் பிம்பம். எப்போது வேண்டுமானலும் நிமிர்ந்து உட்காரலாம் என்பது போல் படுத்திருந்தது. வைத்த கண் வாங்காமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஆவி! எனக்கு என்ன பயம் என்றால் நம்முடைய அடுத்த நீண்ட பயணத்தில் 'சீனு நீங்க இப்போல்லாம் பேய்களைப் பத்தி அதிகமா எழுதுறீங்க' என்று கூறிவிடக் கூடாதே என்பது தான். 

இப்படிக்கு
சீனு    

6 Feb 2015

பதிவுலக ஆவிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல்...

அன்புள்ள ஆவி அவர்களுக்கு,

வணக்கம். நலமா? எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு சந்தானம் போல் 'நான் நல்லா இருக்கேன்' என்று கூறுவீர்கள். அதனால் நீங்கள் நலம் என்று நம்புவது போல் நம்புகிறேன். இன்றைக்கு இந்த நொடியில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு இல்லாவிட்டால் வேறு என்றைக்கு என ஒரு அபத்தமான கேள்வி எழுந்ததால் எனக்கென இருந்த அந்த கொஞ்சம் வெட்டி-வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தங்களை குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன்.       


நன்றாக நியாபகம் இருக்கிறது நமது முதல் சந்திப்பு. புலவர் அய்யா வீட்டில், அவரிடம் பாடம் படிக்க வந்த மாணவனைப் போல் அப்பாவியாய் அமர்ந்திருந்தீர்கள். 'ஹலோ நான் ஆவி' என்று வார்த்தை சிக்கனத்தோடு முடித்துக் கொண்டீர்கள். முதல் சந்திப்பில் அதற்கு மேல் என்ன பேசிவிட முடியும். உங்கள் ஊரில் கோவை ஞானி என்ற மூத்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நீங்களோ என்று நினைத்திருந்தேன். குறைந்தபட்சம் உங்களுடைய வயது ஐம்பதைத் தாண்டியிருக்க வேண்டும் என்றொரு அசாத்திய நம்பிக்கை எனக்கிருந்தது. நீங்களோ பந்தாவாக ஒரு ஷர்ட், அதில் சொருகப்பட்ட கூலர்ஸ் சகிதம் கல்லூரி மாணவனைப் போல் அமர்ந்திருந்தீர்கள். பேச்சுலர் லுக்.  

அதற்கு அடுத்தநாளே நாம் சைதையில் சந்தித்தோம். அது ஒரு அதிகாலை சந்திப்பு. நீங்கள், நான், வாத்தியார், கார்த்திக் சரவணன். சந்திப்பு முடிந்து கிளம்பும் நேரம் 'நான் வேளச்சேரி வரைக்கும் போகணும் என்ன டிராப் பண்ணிற முடியுமா' என நீங்கள் கேட்டிராவிட்டால் இதோ இந்த கடித்தைதையே டிராப்ட் செய்திருக்க மாட்டேன். 

அன்றைய தினம் நீங்களும் நானும் ஸ்ட்ரேஞ்சரஸ். வழிப்போக்கி. பேசிக்கொள்ள வார்த்தைகள் இல்லை. பேசினோம். பதிவுலகம். பதிவர்கள். எழுத்துக்கள் என்று நம்மிருவருக்குமான அறிமுகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். உங்களை நேரில் சந்திக்கும் முன் முதலில் சந்தித்தது வாத்தியாரின் பதிவுகளில் என்றேன். அதை ஆமோதிப்பதைத் தவிர உங்களுக்கும் வேறு வழியில்லை. 

நீங்கள் அமெரிக்கன் ரிட்டர்ன் எனக் கூறியபோது ஆச்சரியமாய் இருந்தது. நம்முடைய முதல் கோப்பை காபி வேளச்சேரி அடையார் ஆனந்த பவனில். குடித்துவிட்டுக் கிளம்பும் போது என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டீர்கள், இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் 'சீனு உங்க லவ்வர் பேரு என்ன?'. இன்றில் இருந்து சரியாக ஒரு வாரத்தில் காதலர் தினம் வருகிறது. காதலர் தினம் என்றால் என்னவென்று தெரிந்த நாட்களில் இருந்து அதுவும் ஒருநாளாகத்தான் கடந்து கொண்டுள்ளது. சரி யாருக்கும் வேண்டாம். என்னுடைய முதல் காதலர் தினத்தைக் கொண்டாடும் போது கூறிவிடுகிறேன் என்னுடைய காதலியின் பெயர் என்ன என்பதை.  

பதிவுலகம் மீதிருத்த உங்களுடைய ஈர்ப்பு அசாத்தியமானது. சென்னையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பிற்காக நீங்களே எழுதி மெட்டமைத்து பாடிய பாடல் அன்றைய தினத்தில் ஒரு கலக்கு கலக்கியது என்பது எல்லாருக்கும் தெரிந்த சேதி. சிறுகதைகள், தொடர்கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவக் கட்டுரைகள் என்று நீங்கள் எழுதாத கட்டுரைகள் இல்லை. ஒரு கட்டத்தில் சினிமா விமர்சனங்களில் தேங்கி இப்போது எதுவுமே எழுதுவதில்லை. நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகவும் இக்கடிதம் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்ளவும்.   

பயணம் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் ஊர் சுற்றக் கிளம்பி விடுவீர்கள். இப்போது கூட பயணத்தில் தான் இருக்கிறீகள். நானும் பயணங்களின் காதலன். நான் நாடோடி எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் பயணக் கட்டுரை எழுதி வருகிறேன் என்றால் நீங்களோ பயணம் என்ற தலைப்பிலேயே உங்கள் வலைப்பூவை எழுதி வருகிறீர்கள்.

ஆவிப்பா - உங்களுடைய முதல் புத்தகம். நல்லதொரு அனுபவத்தைக் கற்றுத்தந்த புத்தகம். முதல்முறையாக ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதினேன் என்றால் அதுவும் உங்களுடைய புத்தகத்திற்குத் தான். சீனு என்றால் யார் என்றே தெரியாத புத்தக உலகத்தில், உங்களுக்கு முதல் விசிடிங் கார்ட் தேவைப்படும் சந்தர்ப்பத்தில், வேறு யாரையோ எழுத வைத்திருக்கக் கூடிய இடத்தில் என்னை எழுதும்படி கூறினீர்கள். எந்தவொரு விவாதத்திலும் நீங்கள் கூறியதை முதல்முறை ஏற்றுகொண்டதே இல்லை. எவ்வளவோ மறுத்தேன். பின் எழுதிவிட்டேன். 'எழுத்தாளர் சீனு' என்ற அங்கீகாரத்தை வேறு கொடுத்தீர்கள்.  

இன்றைக்கும் அந்த இரவு நன்றாக நியாபம் இருக்கிறது நாம் எல்லாரும் அரியலூர் சென்றிருந்தோம். நீங்கள், நான், வாத்தியார், கார்த்திக் சரவணன், ரூபக், ராம்குமார் என்று கழிந்து கொண்டிருந்தது அந்த இரவு. அந்த இரவில் நான் கூறினேன் என்கிற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒருவிசயத்தை விட்டிருந்தீர்கள். சரியாக நூறுநாட்களுக்கு. நூறுநாட்கள் என்பது பெரிய விசயமேயில்லை. நான் கூறினேன் என்று கூறினீர்கள் இல்லையா அதுதான் பெரிய விஷயம். நட்பிற்குக் கிடைத்த மரியாதை.

நீங்கள் ஒரு தீவிர சினிமாக் காதலர். அதிலும் ஹாலிவுட் படமென்றால் உங்களோடு சேர்ந்து பார்க்கவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒரு தேர்ந்த சப்டைட்டில். உங்களுடன்  பார்த்த எந்த ஆங்கிலப் படமுமே இதுவரைக்கும் புரியாது போனதில்லை. ஆனால் இரவுக் காட்சிக்கு மட்டும் உங்களோடு சென்றுவிடக் கூடாது என்பது எனக்கும் அரசனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. டைட்டில் போடும்முன் குறட்டை விட ஆரம்பித்து விடுவீர்கள். லூசி படத்தின் போது முன்னிருக்கையில் ஆண்ட்ரியா அமர்ந்திருக்கிறார் என்பதைக் கூறிய பின்னரும் நீங்கள் எழுப்பிய குறட்டை ஒலியை நிச்சயம் அருமையான பிஜிஎம் என்றுதான் நினைத்திருப்பார் ஆண்ட்ரியா.

நீங்களும் நானும் மேற்கொண்ட அந்த பெங்களூர் பயணம். இப்போது நினைத்தாலும் உவப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட பன்னிரண்டு மணிநேரப் பயணம். சென்னை - பெங்களூரு - சரவணபெலகோலா - பெங்களூரு என்று நீண்ட அந்தப் பயணம் மீண்டும் ஒருமுறை கிடைக்குமா என்பது சந்தேகமே. என்னுடைய வாழ்நாளில் ஒரு கனவுப் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று நம்பினேனோ அதை கிட்டத்தட்ட நிறைவேற்றிய பயணம் அது. வார்த்தைகள் இல்லாது போகும் தருணங்களில் இசையால் நிறைந்த பயணம். 

பெங்களூரை உங்களைத் தவிர வேறுயாராலும் இப்படி சுற்றிக் காட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. ஏன் பெங்களூர் குறித்து நன்றாக தெரிந்த ஆசாமிகளால் கூட இதனை இவ்வளவு சிறப்பாக சுற்றிக் காண்பிக்க முடியாது. காரணம் உங்களுக்கும் பெங்களூரு தெரியாது. ராம்குமாரை சந்திக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு ஒரு சாலையை ஒண்ணரை மணிநேரமாய்த் தேடிக் கொண்டிருந்தோம். ஒருவழியாக ராம்குமாரைச் சந்தித்தோம் என்பதும் கூட அன்றைய தினத்தின் மற்றொரு சாதனை. முதல் சாதனை பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்து நீங்கள் கார் ஓட்டியது. அப்போதுதான் நீங்கள் மெலிஸா பற்றிய கதையையும் கூறினீர்கள். 

பெங்களூருக்கு ஊர் சுற்ற சென்ற இடத்திலும் கூட சினிமாவுக்குக் கூட்டிச் சென்ற ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள். சிவகாசிக்காரன் ராம்குமார், கடல் பயணங்கள் சுரேஷ், கற்போம் பிரபுகிருஷ்ணா, எங்கள் பிளாக் கௌதமன் சார் என்று நமது ஊர்சுற்றல் கூட பதிவுலகச் சுற்றலாகத்தான் இருந்தது. கேரளாக்காரன் வருணைக் கூட நாம் அன்றைக்குத்தான் முதல்முதலாய் சந்தித்தோம். எத்தனை அற்புதமான ஒரு பயணக் கட்டுரையை இப்படி அநியாயத்திற்கு  எழுதாமல் விட்டிருக்கிறேன். 

அடுத்தது உங்களுடைய மிகப்பெரிய சாதனையாக நினைப்பது நீங்கள் குறும்படம் இயக்கியதைத்தான். பொறுமை. நீங்கள் குறும்படம் இயக்கியதை சாதனையாகக் கூறவில்லை. அந்தக் குறும்படத்தை என்னை வைத்து இயக்கினீர்கள் பாருங்கள் அதைத்தான் சாதனை என்று கூறுகிறேன். நடிக்கவே தெரியாத ஒருவனை, நடிப்பின் வாடையே அறியாத ஒருவனை ஒரு படத்தில் நடிக்க வைத்தது சாதனைதானே. 

வாழ்வில் வேறெதெற்கும் இவ்வளவு மறுப்பு தெரிவித்திருப்பேனா தெரியவில்லை. ஆனால் நீங்கள் என்னைக் குறும்படத்தில் நடிக்கக் கூப்பிட்டதற்கு அவ்வளவு மறுப்பு தெரிவித்தேன். இதுவே வேறு யாரும் என்றால் 'போடா மயிறு' என்று கடந்து போயிருப்பார்கள். நீங்களோ விடாப்பிடியாக நான் தான் நடிக்க வேண்டும் என்று உங்களிடம் இல்லாத அந்த மூன்றாவது காலிலும் நின்றீர்கள். ஒருவேளை விஷப்பரீட்சை என்பார்களே அதனை செய்துபார்க்க துணிந்து விட்டீர்களா என்ன? இப்போதெல்லாம் யாரேனும் குறும்படம் குறித்து பேசினாலே ஜெர்க் ஆகி ஓடிவிடுகிறேன். என்னைத் தவிர்த்துவிட்டு அந்தக் குறும்படத்தைப் பார்த்தால் படம் நன்றாக வந்திருப்பதை உணர முடிகிறது. ஒருவேளை நான் இல்லாதிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ? ஆனாலும் அட்டகாசமான அர்ப்பணிப்பு ஆவி பாஸ். 

ஒரே ஒரு மன்னிப்பு மட்டும் என்னிடம் பாக்கி இருக்கிறது. அதையும் கேட்டுவிடுகிறேன். உங்களுடைய அந்த முதல் குறும்படம் இயக்கப்படக்கூடாது எனப் பெரிதும் பிரயாசைப்பட்டவன் நான் ஒருவனே. அதன் காரணமும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அதையும் மீறி வெற்றிகரமாக 'காதல் போயின் காதலை' எடுத்து முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். அதற்காகத்தான் அந்த மன்னிப்பும் கூட. நீங்கள் திரையுலக பாதையில் மென்மேலும் முன்னேற வேண்டும். ஒரு திரைப்படம் இயக்குவது உங்கள் கனவு என்றால் அதையும் நீங்கள் நிஜமாக்கிக் காட்ட வேண்டும் என்று உங்களுடைய இந்த பிறந்தநாள் தினத்தில் வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.


சிறகுகள் மலர்ந்த ஒரு சுதந்திரப் பறவையினால் மட்டுமே பல புதிய இடங்களைக் கண்டடைய முடியும் என்பார்கள். உங்கள் சிறகுகள் அந்தப் புதிய உலகினை நோக்கி சிறகடிக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆவி பாஸ். 

பாசங்களுடனும் நேசங்களுடனும்


சீனு, ராம்சங்கர், ரவி, ஸ்ரீ, கௌதம் 
மற்றும் காமெடி கும்மி நண்பர்கள்