அன்புள்ள ஆவி,
நலமாய் இருக்கிறீர்களா? எழுதி பலநாள் ஆகிறது. எங்கே எழுதுவது மொத்தமாக மறந்து போய்விட்டதோ என்று சில சமயம் பயமாகவும் இருக்கிறது. எதை எழுத ஆரம்பித்தாலும் கருணையே இல்லாமல் எழுதியது மொத்ததயும் அழித்துவிடுகிறேன் அல்லது பாதியில் நிறுத்திவிடுகிறேன். எழுத்து என்பது விருப்பப்பட்டு நிகழ வேண்டிய ஒரு செயல். அதனை வலுகட்டாயமாக திணித்து எழுத முடியாது. அல்லது என்னால் முடியவில்லை என்றும் சொல்லலாம். அமெரிக்கா வந்ததில் இருந்து எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் நடந்து கொண்டிருகின்றன. யாரும் பார்க்காத வனத்தில் மலர்ந்து உதிரும் பூ போல் யாருமற்ற இடத்தில் வீசும் தென்றலைப் போல் யாருக்கும் சொல்லாமல் கடந்து கொண்டிருக்கிறேன். 'என்ன சீனு இப்ப ஏதும் எழுதுறது இல்ல போல' 'என்னடா எழுதுறத நிறுத்திட்ட போல' 'ஜீ எதாது எழுதுங்க ஜீ' போன்ற வார்த்தைகளை சமீப நாட்களாக அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் எழுத்தைத் தேடும் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிட்டதட்ட பத்து மாதகாலமாக நீங்கள் கூறிக்கொண்டிருந்ததை இப்போது இன்னும் சிலரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.
நீண்ட நாளைக்குப் பின் ஏதாவது எழுத வேண்டும் போல் இருக்கிறது, தொய்வில்லாமல் ஒரு விஷயத்தை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது, அதற்குக் காரணம் டியர் சிந்தகி படமாகவும் இருக்கலாம். அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட கோவாவாகவும் இருக்கலாம். முதலில் படம் அப்படி ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. மிக மெதுவான திரைக்கதை. பிடிப்பே இல்லாத கதைக்களம் என திரையில் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்க நம்மை படத்தோடும் கட்டிபோடும் எவ்வித மாயாஜாலமும் அந்தக்கதையில் இருந்திருக்கவில்லை கதைக்களம் கோவாவை நோக்கி நகரும் வரைக்கும்.
கோவா கோவா கோவா... கோவா எத்தனை அருமையான இடம் என்பதை இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்து கொண்டிருந்தேன். ஆளரவம்ற்ற அமைதியான அந்த கடற்கரை. வளைந்து நெளிந்து சில சமயங்களில் குறுகி மிரட்டி நீளும் சாலைகள், நாம் தங்கியிருந்த இடத்தின் அருகில் இருந்த மிகபெரிய ஆறு. அந்த ஆற்றின் சலனம். அந்த சலனங்களின் மேல் நீண்டு மறுகரையைத் தேடிச் செல்லும் பாலம், மக்களை ஏற்றிச்செல்லும் படகு என கோவா நினைவுகள் மீண்டு எழுகின்றன.
இன்னும் எத்தனை முறை சென்றாலும் நாம் முதல்முறை சென்ற கோவா பயணத்தைப் போல் மீண்டும் ஒருமுறை அமையுமா என்பது சந்தேகமே. யாருக்கும் வாய்க்காத ஒரு பயணம் அது. மிகச்சரியான சமயத்தில் நல்லதொரு மழைக்காலத்தில் அமைந்த பயணம். பயணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து முடியும் வரையிலும் மழை நம்மை துரத்திக் கொண்டே இருந்தது. முதலில் மழையை வெறுத்து சபித்து பின் மழையின் துணையோடு ஊர் சுற்ற ஆரம்பித்த நினைவுகள் சுகமாக இருக்கின்றன. நீங்கள் நான் கௌதம் ரூபக் என அந்த நான்கு நாட்களும் நம்மை கோவாவிடம் ஒப்புக் கொடுத்திருந்தோம். வழியெங்கும் பசுமையான காடுகள் மலைகள் ஆறுகள் கடல் என ஒரு பறவையைப் போல் பறந்து கொண்டிருந்தோம். சலிக்காமல் பயணித்துக் கொண்டே இருந்தோம். எத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் சாகசங்கள்.
'கார் வேணாம் பைக் ஊர் சுத்தலாம்' என நீங்கள் சொன்னபோது 'பெய்யுற மழைக்கு கார்தான் பாஸ் பெஸ்ட்' என்று கூறியதன் அர்த்தம் புரிய ஒரு நாளாகியது எனக்கு. ஷானே பஞ்சாப், ஷேர் கே பஞ்சாப் டோனா பாலா பன்ஜிம் என கோவா நினைவுகள் அத்தனை சீக்கிரம் மறக்கக்கூடிய விசயமல்ல. மீண்டும் ஒருமுறை கோவா போகவேண்டும். போகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதே தவிர நினைத்தவுடன் கோவா பயணிக்க முடியவில்லை என்பது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. காரணமே இல்லாமல் டியர் சிந்தகி பிடித்துவிட்டது. கோவாவில் நகரும் உணர்வுப் பூர்வமான கதைக்களம் பிடித்திருக்கிறது.
போகட்டும் விடுங்கள் டியர் சிந்தகி பிடிக்க ஒரேயொரு காரணம் வேண்டும் என்றால் உங்களுக்கு ஆலியா எனக்கு கோவா!
நன்றி
சீனு
Tweet |
வாழ்த்துகள்
ReplyDeleteதொடர்க
டியர் ஜிந்தகி என்று ஒரு படம் வந்திருப்பதை இப்போதுதான் அறிகிறேன். விமர்சனம் எழுதி இருக்கலாம்
ReplyDeleteகோவா பார்க்கும் ஆசை வந்துவிட்டது.
ReplyDeleteஇடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சீனு.....
ReplyDeleteகோவா.... அது ஒரு கனவுலகம்.... எத்தனை எத்தனை இடங்கள் அங்கே..... போகவேண்டும்....
டியர் சிந்தகி நன்றாக இருப்பதாகச் சிலர் சொன்னார்களே! கோவா பார்த்ததில்லை. பார்க்க வேண்டும்...இப்போதைக்குப் படத்தில் பார்த்துவிடலாம் என்று நீங்களும் சொல்லிவிட்டீர்கள்...
ReplyDeleteகீதா