21 Dec 2016

Internet - Nothing but Sex?

அந்த பதின்ம வயது சிறுவனுக்கு அவனுடைய காதலியிடம் இருந்து ஒரு படம் வருகிறது. அந்த இளம்பெண் கிட்டத்தட்ட தன்னை நிர்வாணமாக எடுத்துக்கொண்ட படம். கூடவே இதேபோன்ற உன் படத்தையும் அனுப்ப முடியுமா என்ற கேள்வியும் வருகிறது. முதலில் அதிர்ச்சியாகும் சிறுவன் ஒரு மெல்லிய குறுகுறுப்புடன் மீண்டும் அந்தப் படத்தை கவனிக்கத் தொடங்குகிறான். இன்னும் மீசை கூட முளைக்காத அந்த சிறுவனின் மனதில் வயதை மீறிய ஒன்றை முயன்று பார்க்கும் ஆசை துளிர்க்கிறது. அதில் இருந்து சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தகவல் அவளிடம் வருகிறது 'நான் உன்கிட்ட இப்படி கேட்டிருக்கக் கூடாதுன்னு நினைக்கிறன். என்னை மன்னிச்சிக்கோ'. சிறுவனின் மனதில் அந்தக் குறுகுறுப்பு இன்னும் அதிகமாகிறது. 

வேகமாக குளியலறைக்குள் நுழைபவன் லிப்ஸ்டிக்கை எடுத்து தன் தொடையில் 'லவ் ஸ்லேவ்' என்று எழுதி கூடவே தன் நிர்வாணத்தையும் அனுப்புகிறான். அதில் இருந்து சிலநாட்களில் அந்தப்படம் அவனுடைய பள்ளிக்கூடம் முழுவதும் பரவுகிறது. ஒட்டுமொத்த பள்ளியும் அவனை 'லவ் ஸ்லேவ், லவ் ஸ்லேவ்' என்று கிண்டல் செய்யத்தொடங்க, முதல் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு கோமாவிற்கு செல்கிறான் அந்த சிறுவன். இதற்குக் காரணமான அதே பள்ளியைச் சேர்ந்த மற்ற இரு சிறுவர்களும் குற்றத்தில் இருந்து தப்பிக்கும் வழியில் இறங்குகிறார்கள். 

வேறோர் காட்சி இப்படித்தான் தொடங்குகிறது. ஒரு பதின்ம வயது சிறுவன் அரை நிர்வாணமாக கணினியின் முன் நின்று கொண்டு தன்னோடு உறவு வைத்துக் கொள்ளும்படி விளம்பரம் செய்கிறான். தெளிவாகச் சொல்வதென்றால் 'Paid adult internet sex'. இந்த விளம்பரத்தைக் கடக்கும் ஒரு பெண் அவனோடு பேச ஆரம்பிக்கிறாள். ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்கிறது. மிகவும் வெளிப்படையாக அதேநேரத்தில் செக்ஸைத் தவிர வேறெதுவும் பேசத் தயாராக இல்லை அந்த சிறுவன். செக்ஸ் அல்லாது வேறு வேறு விஷயங்களுக்கு அவள் சென்றாலும் தான் கொண்ட காரியத்திலேயே கண்ணாயிருக்கிறான் இந்த சிறுவன். அதுவரைக்கும் எழுத்து மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவனுக்கு அவளது முகத்தைப் பார்க்கும் ஆவல் வருகிறது, முகம் பார்த்து பேசிப்பழகி பின் நேரில் சந்திக்க அழைக்கிறான். அவர்கள் இருவரும் நேரில் சந்திக்கும் இடத்தில் அந்தப்பெண் 'தான் ஒரு ரிப்போர்ட்டர் என்றும், இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் குழந்தைப் பாலியல் தொழிலார்களைப் பற்றி சிறப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் அவனிடம் தெரிவிக்கிறாள். முதலில் தயங்கினாலும் அவளுக்காக, அந்த புதிய நட்புக்காக சிலபல நிபந்தனைகளுடன் அந்த பெட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். 

அதில் மிக முக்கியமான நிபந்தனை அவனுடைய அடையாளம் வெளியில் கசியக்கூடாது என்பது. எப்படி பாலியல் தொழிலாளி ஆனான், எவ்வாறு அந்த மாயவலைக்குள் ஈர்க்கப்பட்டான், அந்த நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்ற பல தகவல்களுடன் வெளியாகும் அந்தப்பேட்டி மிகப்பெரிய வெற்றியடைகிறது. கூடவே பாதுகாப்பு அதிகாரிகளின் காதுக்கும் சென்று சேர்க்கிறது. யார் அந்தப்பையன் என்று அவனுடைய முகவரி கேட்டு மிரட்டத் தொடங்குகிறது அதிகாரத்தின் மேல்மட்டம். தன்னை நம்பி வந்த இளைஞனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 

முகம் பார்த்திராத, யார் என்றே தெரியாத அந்த ஆணிடம் தன்னிடம் இருக்கும் அத்தனை ரகசியங்களையும் கொட்டத் தொடங்குகிறாள் அந்தப்பெண். மிக சமீபத்தில் குழந்தையை இழந்த, எந்நேரமும் வேலை வேலை என வேலையே கதியென இருக்கும் கணவனின் அரவணைப்பு கிடைக்காத, ஆதரவாய் பேச யாருமற்ற சூழலில் முகம்தெரியாத அந்த நபரிடம் தன்னைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறாள். 

அவள் ஆசை விருப்பு வெறுப்பு என போகும் அந்த நட்பு கிட்டத்தட்ட காதலாக மாறுகிறது. அதேநேரத்தில் அவள் கணவனுடைய வங்கிக் கணக்கு மற்றும் கடன் அட்டை விபரங்கள் மொத்தமும் சிலரால் கைப்பற்றப்பட்டு அதிலிருக்கும் பணம் மொத்தமும் களவாடப்படுகிறது. அன்றாடச் செலவுக்குக் கூட காசில்லாத சூழ்நிலை. தங்களால் உதவ முடியாது என கைவிரித்துவிட்ட சூழலில் தனியார் துப்பறிவாளரிடம் செல்கிறான் கணவன். அவர்களுடைய கணினியை ஆராய்ந்துவிட்டு அவளுடைய மனைவியோடு தொடர்பில் இருக்கும் அந்த முகம் தெரியாத நபர் தான் அவர்களுடைய கணினியினுள் வைரஸை செலுத்தி அத்தனை தனிப்பட்ட விபரங்களையும் களவாடிவிட்டதாக குற்றம் சுமத்துகிறான்.  




இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் இடம் இன்டெர்நெட். இன்டெர்நெட் குறித்தும் அதன் தீவிர எதிர்நிலை குறித்தும் பல கதைகள் வந்துவிட்ட போதிலும் இணைய குற்றங்களை மையமாக வைத்து வெளிவந்த டிஸ்கனெக்ட் திரைப்படம் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் இந்தக் கதைகள் சொல்லப்பட்ட விதம். மிக அழுத்தமான கதையை எவ்வித உறுத்தலும் இல்லாமல், அதே நேரத்தில் இணைய உலகம் நம் தனிமனித பாதுகாப்பை எப்படி கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் அலுப்பூட்டாமல் சொன்ன விதம். 

ஒன்றுகொன்று சம்மந்தமில்லாமல் வரும் மூன்று கதைகளிலும் கவனிக்க வேண்டிய ஒன்று - இதில் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஆறுதலாக பேச ஆளில்லாமல் தங்கள் தேவைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ஒருவேளை ஆறுதல் கிடைக்க வேண்டிய நேரத்தில், கவனம் செலுத்தபட வேண்டிய நேரத்தில் கவனிக்கபட்டிருந்தால் மிகபெரும் பிரச்சனைகள் மொத்தமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஹென்றி அலெக்ஸ் ரூபின். பிரச்சனகளைப் பற்றி மட்டும் பேசாமல் அதன் தீர்வையும் அழுத்தமாக பேசிய விதத்தில் மிக முக்கயமான படமாகிறது இந்த டிஸ்கனெக்ட். 


A Wired connection may turn as weird connection at any point of time. 

3 comments:

  1. மிகவும் வித்தியாசமான
    அதே நேரத்தில் விழிப்புணர்வுப் படமாகத் தோன்றுகிறது நண்பரே
    வாய்ப்பு கிடைக்கம் பொழுதுஅவசியம் பார்ப்பேன்

    ReplyDelete
  2. இதில் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஆறுதலாக பேச ஆளில்லாமல் தங்கள் தேவைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ஒருவேளை ஆறுதல் கிடைக்க வேண்டிய நேரத்தில், கவனம் செலுத்தபட வேண்டிய நேரத்தில் கவனிக்கபட்டிருந்தால் மிகபெரும் பிரச்சனைகள் மொத்தமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஹென்றி அலெக்ஸ் ரூபின்.//

    உண்மை இதுதான். பல பதின்மவயதுக்காரர்கள் தவறான பாதையில் செல்வதற்கு முக்கிய காரணமே அவர்களுக்கு வேண்டிய கவனிப்பு, ஆதரவு, அன்பு கிடைக்காமல் போவதுதான்...அருமையான படம் ...விமர்சனம் படித்தாயிற்று...ஆனால் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை..பார்த்துவிட வேண்டும்..தீர்வும் சொல்லப்பட்ட படம் என்பதால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். நல்ல விமர்சனம் சீனு!

    ReplyDelete
  3. nice writeup seenu..

    u must start writing in mainstream press

    ReplyDelete