6 Feb 2015

பதிவுலக ஆவிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து மடல்...

அன்புள்ள ஆவி அவர்களுக்கு,

வணக்கம். நலமா? எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு சந்தானம் போல் 'நான் நல்லா இருக்கேன்' என்று கூறுவீர்கள். அதனால் நீங்கள் நலம் என்று நம்புவது போல் நம்புகிறேன். இன்றைக்கு இந்த நொடியில் கடிதம் எழுத வேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. ஆனால் இன்றைக்கு இல்லாவிட்டால் வேறு என்றைக்கு என ஒரு அபத்தமான கேள்வி எழுந்ததால் எனக்கென இருந்த அந்த கொஞ்சம் வெட்டி-வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தங்களை குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டேன்.       


நன்றாக நியாபகம் இருக்கிறது நமது முதல் சந்திப்பு. புலவர் அய்யா வீட்டில், அவரிடம் பாடம் படிக்க வந்த மாணவனைப் போல் அப்பாவியாய் அமர்ந்திருந்தீர்கள். 'ஹலோ நான் ஆவி' என்று வார்த்தை சிக்கனத்தோடு முடித்துக் கொண்டீர்கள். முதல் சந்திப்பில் அதற்கு மேல் என்ன பேசிவிட முடியும். உங்கள் ஊரில் கோவை ஞானி என்ற மூத்த எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் நீங்களோ என்று நினைத்திருந்தேன். குறைந்தபட்சம் உங்களுடைய வயது ஐம்பதைத் தாண்டியிருக்க வேண்டும் என்றொரு அசாத்திய நம்பிக்கை எனக்கிருந்தது. நீங்களோ பந்தாவாக ஒரு ஷர்ட், அதில் சொருகப்பட்ட கூலர்ஸ் சகிதம் கல்லூரி மாணவனைப் போல் அமர்ந்திருந்தீர்கள். பேச்சுலர் லுக்.  

அதற்கு அடுத்தநாளே நாம் சைதையில் சந்தித்தோம். அது ஒரு அதிகாலை சந்திப்பு. நீங்கள், நான், வாத்தியார், கார்த்திக் சரவணன். சந்திப்பு முடிந்து கிளம்பும் நேரம் 'நான் வேளச்சேரி வரைக்கும் போகணும் என்ன டிராப் பண்ணிற முடியுமா' என நீங்கள் கேட்டிராவிட்டால் இதோ இந்த கடித்தைதையே டிராப்ட் செய்திருக்க மாட்டேன். 

அன்றைய தினம் நீங்களும் நானும் ஸ்ட்ரேஞ்சரஸ். வழிப்போக்கி. பேசிக்கொள்ள வார்த்தைகள் இல்லை. பேசினோம். பதிவுலகம். பதிவர்கள். எழுத்துக்கள் என்று நம்மிருவருக்குமான அறிமுகங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். உங்களை நேரில் சந்திக்கும் முன் முதலில் சந்தித்தது வாத்தியாரின் பதிவுகளில் என்றேன். அதை ஆமோதிப்பதைத் தவிர உங்களுக்கும் வேறு வழியில்லை. 

நீங்கள் அமெரிக்கன் ரிட்டர்ன் எனக் கூறியபோது ஆச்சரியமாய் இருந்தது. நம்முடைய முதல் கோப்பை காபி வேளச்சேரி அடையார் ஆனந்த பவனில். குடித்துவிட்டுக் கிளம்பும் போது என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டீர்கள், இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் 'சீனு உங்க லவ்வர் பேரு என்ன?'. இன்றில் இருந்து சரியாக ஒரு வாரத்தில் காதலர் தினம் வருகிறது. காதலர் தினம் என்றால் என்னவென்று தெரிந்த நாட்களில் இருந்து அதுவும் ஒருநாளாகத்தான் கடந்து கொண்டுள்ளது. சரி யாருக்கும் வேண்டாம். என்னுடைய முதல் காதலர் தினத்தைக் கொண்டாடும் போது கூறிவிடுகிறேன் என்னுடைய காதலியின் பெயர் என்ன என்பதை.  

பதிவுலகம் மீதிருத்த உங்களுடைய ஈர்ப்பு அசாத்தியமானது. சென்னையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பிற்காக நீங்களே எழுதி மெட்டமைத்து பாடிய பாடல் அன்றைய தினத்தில் ஒரு கலக்கு கலக்கியது என்பது எல்லாருக்கும் தெரிந்த சேதி. சிறுகதைகள், தொடர்கதைகள், சமையல் குறிப்புகள், அனுபவக் கட்டுரைகள் என்று நீங்கள் எழுதாத கட்டுரைகள் இல்லை. ஒரு கட்டத்தில் சினிமா விமர்சனங்களில் தேங்கி இப்போது எதுவுமே எழுதுவதில்லை. நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகவும் இக்கடிதம் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்ளவும்.   

பயணம் என்றால் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் ஊர் சுற்றக் கிளம்பி விடுவீர்கள். இப்போது கூட பயணத்தில் தான் இருக்கிறீகள். நானும் பயணங்களின் காதலன். நான் நாடோடி எக்ஸ்பிரஸ் என்ற தலைப்பில் பயணக் கட்டுரை எழுதி வருகிறேன் என்றால் நீங்களோ பயணம் என்ற தலைப்பிலேயே உங்கள் வலைப்பூவை எழுதி வருகிறீர்கள்.

ஆவிப்பா - உங்களுடைய முதல் புத்தகம். நல்லதொரு அனுபவத்தைக் கற்றுத்தந்த புத்தகம். முதல்முறையாக ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதினேன் என்றால் அதுவும் உங்களுடைய புத்தகத்திற்குத் தான். சீனு என்றால் யார் என்றே தெரியாத புத்தக உலகத்தில், உங்களுக்கு முதல் விசிடிங் கார்ட் தேவைப்படும் சந்தர்ப்பத்தில், வேறு யாரையோ எழுத வைத்திருக்கக் கூடிய இடத்தில் என்னை எழுதும்படி கூறினீர்கள். எந்தவொரு விவாதத்திலும் நீங்கள் கூறியதை முதல்முறை ஏற்றுகொண்டதே இல்லை. எவ்வளவோ மறுத்தேன். பின் எழுதிவிட்டேன். 'எழுத்தாளர் சீனு' என்ற அங்கீகாரத்தை வேறு கொடுத்தீர்கள்.  

இன்றைக்கும் அந்த இரவு நன்றாக நியாபம் இருக்கிறது நாம் எல்லாரும் அரியலூர் சென்றிருந்தோம். நீங்கள், நான், வாத்தியார், கார்த்திக் சரவணன், ரூபக், ராம்குமார் என்று கழிந்து கொண்டிருந்தது அந்த இரவு. அந்த இரவில் நான் கூறினேன் என்கிற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒருவிசயத்தை விட்டிருந்தீர்கள். சரியாக நூறுநாட்களுக்கு. நூறுநாட்கள் என்பது பெரிய விசயமேயில்லை. நான் கூறினேன் என்று கூறினீர்கள் இல்லையா அதுதான் பெரிய விஷயம். நட்பிற்குக் கிடைத்த மரியாதை.

நீங்கள் ஒரு தீவிர சினிமாக் காதலர். அதிலும் ஹாலிவுட் படமென்றால் உங்களோடு சேர்ந்து பார்க்கவேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒரு தேர்ந்த சப்டைட்டில். உங்களுடன்  பார்த்த எந்த ஆங்கிலப் படமுமே இதுவரைக்கும் புரியாது போனதில்லை. ஆனால் இரவுக் காட்சிக்கு மட்டும் உங்களோடு சென்றுவிடக் கூடாது என்பது எனக்கும் அரசனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. டைட்டில் போடும்முன் குறட்டை விட ஆரம்பித்து விடுவீர்கள். லூசி படத்தின் போது முன்னிருக்கையில் ஆண்ட்ரியா அமர்ந்திருக்கிறார் என்பதைக் கூறிய பின்னரும் நீங்கள் எழுப்பிய குறட்டை ஒலியை நிச்சயம் அருமையான பிஜிஎம் என்றுதான் நினைத்திருப்பார் ஆண்ட்ரியா.

நீங்களும் நானும் மேற்கொண்ட அந்த பெங்களூர் பயணம். இப்போது நினைத்தாலும் உவப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட பன்னிரண்டு மணிநேரப் பயணம். சென்னை - பெங்களூரு - சரவணபெலகோலா - பெங்களூரு என்று நீண்ட அந்தப் பயணம் மீண்டும் ஒருமுறை கிடைக்குமா என்பது சந்தேகமே. என்னுடைய வாழ்நாளில் ஒரு கனவுப் பயணம் எப்படி இருக்க வேண்டும் என்று நம்பினேனோ அதை கிட்டத்தட்ட நிறைவேற்றிய பயணம் அது. வார்த்தைகள் இல்லாது போகும் தருணங்களில் இசையால் நிறைந்த பயணம். 

பெங்களூரை உங்களைத் தவிர வேறுயாராலும் இப்படி சுற்றிக் காட்டியிருக்க முடியுமா தெரியவில்லை. ஏன் பெங்களூர் குறித்து நன்றாக தெரிந்த ஆசாமிகளால் கூட இதனை இவ்வளவு சிறப்பாக சுற்றிக் காண்பிக்க முடியாது. காரணம் உங்களுக்கும் பெங்களூரு தெரியாது. ராம்குமாரை சந்திக்கப் போகிறோம் என்று கூறிவிட்டு ஒரு சாலையை ஒண்ணரை மணிநேரமாய்த் தேடிக் கொண்டிருந்தோம். ஒருவழியாக ராம்குமாரைச் சந்தித்தோம் என்பதும் கூட அன்றைய தினத்தின் மற்றொரு சாதனை. முதல் சாதனை பன்னிரெண்டு மணி நேரங்களுக்கு தொடர்ந்து நீங்கள் கார் ஓட்டியது. அப்போதுதான் நீங்கள் மெலிஸா பற்றிய கதையையும் கூறினீர்கள். 

பெங்களூருக்கு ஊர் சுற்ற சென்ற இடத்திலும் கூட சினிமாவுக்குக் கூட்டிச் சென்ற ஆள் நீங்களாகத்தான் இருப்பீர்கள். சிவகாசிக்காரன் ராம்குமார், கடல் பயணங்கள் சுரேஷ், கற்போம் பிரபுகிருஷ்ணா, எங்கள் பிளாக் கௌதமன் சார் என்று நமது ஊர்சுற்றல் கூட பதிவுலகச் சுற்றலாகத்தான் இருந்தது. கேரளாக்காரன் வருணைக் கூட நாம் அன்றைக்குத்தான் முதல்முதலாய் சந்தித்தோம். எத்தனை அற்புதமான ஒரு பயணக் கட்டுரையை இப்படி அநியாயத்திற்கு  எழுதாமல் விட்டிருக்கிறேன். 

அடுத்தது உங்களுடைய மிகப்பெரிய சாதனையாக நினைப்பது நீங்கள் குறும்படம் இயக்கியதைத்தான். பொறுமை. நீங்கள் குறும்படம் இயக்கியதை சாதனையாகக் கூறவில்லை. அந்தக் குறும்படத்தை என்னை வைத்து இயக்கினீர்கள் பாருங்கள் அதைத்தான் சாதனை என்று கூறுகிறேன். நடிக்கவே தெரியாத ஒருவனை, நடிப்பின் வாடையே அறியாத ஒருவனை ஒரு படத்தில் நடிக்க வைத்தது சாதனைதானே. 

வாழ்வில் வேறெதெற்கும் இவ்வளவு மறுப்பு தெரிவித்திருப்பேனா தெரியவில்லை. ஆனால் நீங்கள் என்னைக் குறும்படத்தில் நடிக்கக் கூப்பிட்டதற்கு அவ்வளவு மறுப்பு தெரிவித்தேன். இதுவே வேறு யாரும் என்றால் 'போடா மயிறு' என்று கடந்து போயிருப்பார்கள். நீங்களோ விடாப்பிடியாக நான் தான் நடிக்க வேண்டும் என்று உங்களிடம் இல்லாத அந்த மூன்றாவது காலிலும் நின்றீர்கள். ஒருவேளை விஷப்பரீட்சை என்பார்களே அதனை செய்துபார்க்க துணிந்து விட்டீர்களா என்ன? இப்போதெல்லாம் யாரேனும் குறும்படம் குறித்து பேசினாலே ஜெர்க் ஆகி ஓடிவிடுகிறேன். என்னைத் தவிர்த்துவிட்டு அந்தக் குறும்படத்தைப் பார்த்தால் படம் நன்றாக வந்திருப்பதை உணர முடிகிறது. ஒருவேளை நான் இல்லாதிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ? ஆனாலும் அட்டகாசமான அர்ப்பணிப்பு ஆவி பாஸ். 

ஒரே ஒரு மன்னிப்பு மட்டும் என்னிடம் பாக்கி இருக்கிறது. அதையும் கேட்டுவிடுகிறேன். உங்களுடைய அந்த முதல் குறும்படம் இயக்கப்படக்கூடாது எனப் பெரிதும் பிரயாசைப்பட்டவன் நான் ஒருவனே. அதன் காரணமும் உங்களுக்குத் தெரியும். ஆனால் அதையும் மீறி வெற்றிகரமாக 'காதல் போயின் காதலை' எடுத்து முடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். அதற்காகத்தான் அந்த மன்னிப்பும் கூட. நீங்கள் திரையுலக பாதையில் மென்மேலும் முன்னேற வேண்டும். ஒரு திரைப்படம் இயக்குவது உங்கள் கனவு என்றால் அதையும் நீங்கள் நிஜமாக்கிக் காட்ட வேண்டும் என்று உங்களுடைய இந்த பிறந்தநாள் தினத்தில் வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன்.


சிறகுகள் மலர்ந்த ஒரு சுதந்திரப் பறவையினால் மட்டுமே பல புதிய இடங்களைக் கண்டடைய முடியும் என்பார்கள். உங்கள் சிறகுகள் அந்தப் புதிய உலகினை நோக்கி சிறகடிக்கட்டும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஆவி பாஸ். 

பாசங்களுடனும் நேசங்களுடனும்


சீனு, ராம்சங்கர், ரவி, ஸ்ரீ, கௌதம் 
மற்றும் காமெடி கும்மி நண்பர்கள்

24 comments:

  1. ஒவ்வொரு தருணத்தையும் நினைவில் பசுமையாக வைத்திருக்கிறாய். ஆவியின் வலிகள் என்ன, சந்தோஷங்கள் என்ன என்பதை நன்கறிந்தவன் என்கிற முறையிலும், அவனின் முயற்சிகளில் உடனிருக்கும் பாக்கியம் பெற்றவன் என்கிற முறையிலும் ஒன்று மட்டும் கூறிக் கொள்வேன்... அவன் தொட வேண்டிய உயரங்கள் இன்னும் நிறைய. எட்டப்போகும் சிகரங்கள் பல அவனுக்காக காத்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் விரைவிலேயே வசப்பட இந்த இனிய நாளில் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளும், ஆசிகளும் ஆவிக்கு. (வாழ்த்துச் சொல்றதுல எங்களையும் சேர்த்துக்கிட்ட விஷயம் உன் இந்தப் பகிர்வில் மிகக் கவர்ந்தது. ஹாட்ஸ் ஆஃப்...)

    ReplyDelete
  2. தோழர் சீனு,
    இவ்வளவு உருக்கமான என்பதை விட
    நிறைய விசயங்களை மறக்காமல் அப்படியே நினைவில் வைத்திருக்க அசாத்திய திறமை வேண்டும். எழுதிய உங்களுக்கு வணக்கமும்,
    பர்த்டே குழந்தைக்கு வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துக்கள் ஆவி ,
    எவ்வித பந்தாவும் இல்லாமல் பழகும் ஆவியை குறித்த ஜட்ஜ்மெண்டல் பார்வை எனக்கு வேறு மாதிரி ,ரேவதிக்கு வேறு மாதிரியும் இருந்தது .ஆனால் இருந்த இரு நாட்களில் இருவர் எண்ணத்தையும் சுக்கு நூறாக்கி விட்டார் ஆவி. அது என்னென்ன என்பதை எதிர்காலத்தில் ஒரு பதிவாக இட்டுக்கொள்ள வைத்துக்கொள்கிறேன்.
    மிக சிறப்பான மனிதர் .. ..ஒரு வருடம் கழிகிறது என வருத்தப்படத்தான் தோணுது ஆவி ..

    ReplyDelete
  4. நட்பு என்றால் இதுதான் .அழகான நினைவுகள் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆவி

    ReplyDelete
  5. உங்கள் அருமை நண்பரை வேறுவேறு கோணத்திலிருந்து பார்த்து வியந்து, போற்றி நீங்கள் எழுதியிருக்கும் இந்த பிறந்தநாள் வாழ்த்துப் பதிவில், நானும் உங்களுடன் சேர்ந்து அவருக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதைத் தவிர வேறெதுவும் எழுத தெரியவில்லை. உங்கள் இருவருடனும் பயணித்து உங்கள் இருவரையும் தெரிந்து கொண்டதுபோல ஒரு உணர்வு. ஆவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தல உமக்கு நல்ல ஞாபக சக்திப்பா
    ஆவிக்கு பாஸுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

    உங்கள் நட்பு இன்னும் வலுப்பெற வேண்டும் நீங்கள் இணைந்து இன்னும் பல சாதனைகள் புரியவேண்டுமென்று வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  7. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஆவி சார்.இனிய நினைவை மீட்டி அழகான கடிதம் சீனு.

    ReplyDelete
  8. WoW!!!!சீனு! நம் ஆவிக்கு எவ்வளவு அழகான ஒரு வாழ்த்து மடல்!!! மிகமிக மிக ரசித்தோம். பல முறை வாசித்தோம்....நம் அருமை அன்பு ஆவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! உங்கள் நட்பும் காலம் முழுவதும் இணைந்த் இன்னும் பல படைக்க வாழ்த்துக்கள்!

    ஒவ்வொரு தருணத்தையும் இப்படி அசை போட்டு...ஆஹா.....சொல்கிற போக்கில் இப்படி ஒரு நகைச் சுவை பிட்டையும் போட்டீர்கள் பாருங்கள்...சிரித்து மாளவில்லை...
    ஆனால் இரவுக் காட்சிக்கு மட்டும் உங்களோடு சென்றுவிடக் கூடாது என்பது எனக்கும் அரசனுக்கும் மட்டுமே தெரிந்த உண்மை. டைட்டில் போடும்முன் குறட்டை விட ஆரம்பித்து விடுவீர்கள். லூசி படத்தின் போது முன்னிருக்கையில் ஆண்ட்ரியா அமர்ந்திருக்கிறார் என்பதைக் கூறிய பின்னரும் நீங்கள் எழுப்பிய குறட்டை ஒலியை நிச்சயம் அருமையான பிஜிஎம் என்றுதான் நினைத்திருப்பார் ஆண்ட்ரியா.//

    ஹஹஹஹஹஹ்....மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே ஆவி!!!

    ReplyDelete
  9. எங்களுக்கும் ஆவிக்கும் உள்ள நட்பையும், அன்பையும், சினேகத்தையும் என்னவென்று சொல்லுவது! மட்டுமல்ல எனக்கும் ஆவிக்கும், என் வேண்டுகோளுக்கு இணங்க என்னை சேச்சி என்று விளித்து என்னை சந்தோஷப்படுத்தி, எப்படி இப்படி ஒரு பந்தம் ஏற்பட்டது என்பது வியக்க வைக்கின்றது! இதைத்தான் பூர்வஜென்ம பந்தம் எங்கின்றார்களோ?!

    எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் மனதில் போட்டு புதைத்துவிட்டு சந்தானம் போல் 'நான் நல்லா இருக்கேன்' என்று// நானும் கற்றுக் கொள்கின்றேன் அதை அவரிடம்.....இந்த கீதா சேச்சியின் வாழ்த்துக்கள்! மனமார்ந்த வாழ்த்துக்கள்! இறுதி வரை எங்கள் அன்பும் நட்பும் ஆவியுடனும், ஆவியுடன் மட்டுமின்றி அரசன் அன்று சொன்னது போல் நம் எல்லோரது அன்பும் இறுதி வரை தொடர பிரார்த்தனைகள்..

    ReplyDelete
  10. உங்கள் சிநேகத்தை வார்த்தைகளால் அழகாக வடித்தெடுத்து விட்டீர்கள்.அருமையான மடல்.ஆவிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இனி பிறந்தநாள் வாழ்த்துகள் ஆவி அண்ணா .

    அப்பப்பா ! ஆவி அண்ணனைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா ? முதல்முறையாக சீனுஅண்ணனின் பதிவு முழுவதையும் வாசித்ததே தெரியாத அளவிற்கு சுவாசிக்கவைத்துவிட்டீர்கள் . வாழ்வின் அருகாமையில் பார்த்தது போன்றதொரு உணர்வினை வழங்கியது அண்ணா .

    ReplyDelete
  12. அழகான நட்பு...

    இனிய நண்பருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  13. நண்பர் ஆவி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    அன்புடன் கில்லர்ஜி

    ReplyDelete
  14. //காதலர் தினம் என்றால் என்னவென்று தெரிந்த நாட்களில் இருந்து அதுவும் ஒருநாளாகத்தான் கடந்து கொண்டுள்ளது// இதை நீங்கள் முதலில் சொன்னபோது நான் நம்பவில்லை.. ஆனால் நம் குறும்பட ஷூட்டிங்கின் போது முழுமையாக நம்பும்படி ஆயிற்று.. ;)

    ReplyDelete
  15. //நீங்கள் மீண்டும் எழுத வேண்டும் என்பதற்காகவும் இக்கடிதம் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொள்ளவும்// இன்றே எழுதிவிடுகிறேன்.. :)

    ReplyDelete
  16. // இசையால் நிறைந்த பயணம்// பெங்களூர் பயணத்தை விட நான் மிகவும் ரசித்தது தென்காசி பயணம் அதை சொல்லாமல் விட்டுட்டீங்க. அதில் உங்க உறவினர்களையும் சந்தித்ததில் ரொம்ப சந்தோசமாக இருந்தது..

    ReplyDelete
  17. குறும்படத்தை பற்றிய விளக்கங்களை நான் பட வெளியீட்டுற்கு பின் சொல்கிறேன்.. ;)

    ReplyDelete
  18. சென்ற வருடம் எனக்கு வேதனைகளும் வலிகளும் நிறைந்த வருடமாக இருந்தது.. ஆனால் நட்பின் கால அளவு சிறிதே எனினும் எனக்கு ஆறுதலாய், மாறுதலாய் இருந்து என்னை வழிநடத்திச் சென்றது என் நண்பர்கள்தாம்..! வலிகளோடு சேர்த்து இது போன்ற நண்பர்களையும் கொடுப்பானென்றால் அந்த கடவுளிடத்தில் நான் மேலும் வலிகளை கேட்டுப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.. வாழ்த்திய எல்லா உள்ளங்களுக்கும் நன்றி.. சீனு, உங்களுக்கு நன்றி சொல்லி அந்நியப் படுத்திவிட மாட்டேன்.. டோன்ட் ஒர்ரி.. ;)

    ReplyDelete
  19. touching!! அப்புறம் அங்கங்கே மானே ! தேனே! போல காமெடி!! உங்க பெங்குளூரு டேஸ் க்கு ஒரு ஓ போடுறேன்:)) நண்பர்கள் ரெண்டு பேருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  20. நட்பை சிறப்பிக்கும் வரிகள் மனதில் ஒட்டிக் கொள்கின்றன சீனு! அருமை! உங்கள் வட்டத்தில் நானும் ஒருவன் என்று பெருமைப்படுகிறேன்! சற்றுவிலகி இருந்தாலும்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆவி.

    ReplyDelete
  21. இணையத்தால் மலர்ந்த நட்பை பற்றி படிக்கும் போது மனம் மகிழ்கிறது ஆவியைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்..உங்கள் பதிவின் மூலம். எனது வீட்டிலிருந்து 5 மைல் தூரத்தில் வசித்த ஆவி நான் வாங்கும் அடிகளை பார்த்துதான் இந்தியாவிற்கு ரிடர்ன் ஆகிவிட்டார் போலிருக்குது

    ReplyDelete
  22. என் இனிய நண்பர் ஆவிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். அவரிடம் அறிமுகமானதில் இருந்து தொடங்கி அனைத்தையும் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் சீனு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. மனம் நெகிழ்ந்தது.... நட்பு தொடரட்டும்.....

    மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆவி.

    ReplyDelete