பள்ளிக்கூடம் முடிந்து அரக்கபரக்க ஓடியாந்தால் வாசலில் ஏகப்பட்ட சைக்கிள்கள் நிற்கும், சேமியா ஐஸ், பாக்கு ஐஸ், இழந்த பழம் ஐஸ் வைத்துக் கொண்டு நிற்கும் அண்ணா, அவருக்குப் போட்டியாய் நிற்கும் இன்னொரு தாத்தா, ஊறவைத்த நெல்லிக்கா, மாங்கா, தேன் மிட்டாய் வைத்தபடி அமர்ந்திருக்கும் டயனா கிழவி. டயனா கிழவி. அவருக்கு அந்த பெயரை வைத்தது சாதாத் இல்லை முத்து. நல்ல மூப்பு. என்புதோல் போர்த்திய உடம்பு அவருக்கு. பார்க்கவே பரிதாபமாக உட்கார்ந்திருப்பார். அவ்வளவாக பார்வை கிடையாது. நாம் கொடுத்தது ஐந்து பைசாவா பத்து பைசாவா என்பதை கண்டுபிடிக்கும் முன் நெல்லிக்கா மாங்காயை கை நிறைய அள்ளிவிட்டு சிட்டாய் பறந்திருப்பர்கள் எம் பள்ளிக்கூட சிறுவர்கள்.
மாலை வெயில் அவருக்கு அதிகமாய் கண் கூசும். எப்போதும் ஒரு கையை நெத்தியின் மேல் வைத்து கண்களை சுருக்கியபடி யாவாரம் செய்து கொண்டிருப்பார். இந்நேரம் அவர் அமரர் ஆகி ஆண்டுகள் ஓடியிருக்கலாம். இப்போது நினைத்துப் பார்த்தால் எல்லாமே நேற்று பார்த்தது போல் இருக்கிறது. பள்ளிகூட சிறுவனாய், தோளில் மாட்டிய கூடையுடன் அவருக்கு அருகில் சென்று 'டயானா கிழவி' என்று கத்தி விட்டு ஓடியது அனைத்தும் நிழலாடுகிறது. 'ஏல ஏல யாவாரம் பாக்க வுடுங்கலே' அவசரமாய் கத்துவார். குரல் நடுங்கிப் போன, வார்த்தை வார்த்தையாய் பேசும் குரல். அவருக்கு ஏன் அந்தப் பெயர் வைத்தார்கள், அவரை ஏன் அவ்வளவு தொந்தரவு செய்தோம் எதுவுமே தெரியவில்லை. ஆனால் அவர் எங்களுக்கு ஒரு பதுமை. வீட்டிலும் அவரை அப்படித்தான் நடத்தியிருக்க வேண்டும் அதான் கூடையை தூக்கிக் கொண்டு பள்ளிக்கூட வாயிலில் அமர்ந்துவிட்டார்.
நிச்சயமாகச் சொல்லலாம் அந்தத் தொண்டுக் கிழவியின் நியாபகத்தில் நாங்கள் இருந்தோம். அவர் அருகில் சென்றாலே தன்னுடைய கைத்தடியை தூக்கிவிடுவார். 'நெல்லிக்கா வாங்கனுமா, வேணாமா' என்றால் 'வாங்கிட்டு பேசாமா போவனும்' என்பார். சிலசயங்களில் ஐஸ் விற்கும் அண்ணா, வெள்ளரி விற்கும் மீசக்காரர் கூட எங்களை திட்டியிருக்கிறார்கள். 'ஏமுல அது தொண்டதண்ணிய வைத்த வைக்கியே, ஓடுங்கலே' என்றபடி துரத்தி விடுவார்கள். 'எங்க டயானா கிழவினே' என்போம். சிரித்துவிட்டு திரும்பிக் கொள்வார்கள். எட்டு வயசில் ஆரம்பித்த பழக்கம் அது.
பள்ளிக்கூடம் நான்கரைக்குத்தான் முடியும் என்றாலும் நாலு மணிக்கெல்லாம் வந்துவிடுவார். சமயங்களில் மூன்று மணிக்கே கூட வந்துவிடுவார். ஒரு நூல் சேலையை தன்னுடைய எலும்பைச் சுற்றி சுற்றியிருப்பார். ஒரு கூடை, ஒரு சட்டி, தரையில் விரிக்க ஒரு சிமின்ட் சாக்கு. அவ்வளவுதான் அவருடைய உடமைகள். காசை தன சேலையின் தலைப்பில் முடிந்து கொள்வார். அவ்வளவு சில்லறைகள் தான். நோட்டு கூட ஒரு ரூபாய் இல்லை ரெண்டு ரூபாய்த் தாள்களாகத் தான் இருக்கும்.
எங்களிடமும் எல்லாநாளும் காசு இருக்காது. ஒருவேளை ஐந்து பைசா பத்து பைசா இருந்தால் கூட நேரே கிழவியிடம் தான் ஓடுவோம். எங்களைப் பார்த்தால் கை நிறைய நெல்லிக்காய் தருவார். கூடவே கைத்தடியையும் தூக்குவார். மதியமே நெல்லிக்காயை உப்பு மிளகாய்பொடி கலந்த நீரில் ஊற வைத்து ஒரு சட்டி நிறைய எடுத்து வருவார். வாயில் போட்டவுடன் கரைந்து விடும். அதிலிருந்து வரும் சாரை வாயிலேயே வைத்திருக்கலாம். சமயங்களில் நெல்லிக்காயின் கொட்டை கூட சுவையாய் இருக்கும்.
பெரும்பாலும் கடைசி பீரியட் கேம்ஸ் பீரியட்டாகத்தான் இருக்கும். அந்த நாட்களில் எல்லாம் நேர கிழவியிடம் சென்று விடுவோம். ஒரு ரூபாய்க்கு நெல்லிக்காய் பர்சேஸ் செய்தால் இனாமாக ஒரு மாங்காத்துண்டு கேட்போம். சில சமயங்களில் கைத்தடியை தூக்குவார். சமயங்களில் ஒன்றுக்கு இரண்டு துண்டுகள் கூடத் தருவார். அவரைப் புரிந்து கொள்ளவே முடியாது. நண்பர்கள் யாருக்கேனும் காத்திருக்க வேண்டும் என்றால் எங்களுடைய மீட்டிங் பாயின்ட் டயனா கிழவி தான். மெளனமாக அவர் அருகில் அமர்ந்திருப்போம் எவ்வளவு அங்கு உட்கார்ந்திருந்தாலும் எதுவும் பேசமாட்டார். கண்டுகொள்ளவும் மாட்டார்.
என் வாழக்கையில் நான் பார்த்த முதல் தொண்டுக் கிழம் அவர்தான் என்றாலும் அதற்கடுத்து அவருக்கு வயது அதிகரிக்கவே இல்லை. அடுத்த ஐந்தாறு வருடங்களுக்கும் அப்படியேத்தான் இருந்தார். முகத்தில் எப்போதுமே ஒருவித சோகம் நிறைந்திருக்கும். சிதம்பரேஸ்வரர் கோவிலின் ஆர்ச் நிழல் அந்த சோகத்தை இன்னும் கொஞ்சம் அதிகரித்துக் காண்பிக்கும். எதையோ யோசித்துக் கொண்டே இருப்பார். அவர் சிரித்துப் பேசி நாங்கள் பார்த்தது இல்லை.யாருமே வரையாமல் விட்ட ஓவியம் அவர்.
கீழப்புலியூர் ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில்தான் அவர் வீடு. விடுமுறை நாட்களில் தெருவில் எங்கேனும் அவரைப் பார்க்க நேர்ந்தால் 'என்ன டயனா இன்னிக்கு லீவா' என்று கத்திவிட்டு ஓடுவோம். ஒருமுறை தற்செயலாய் என் அம்மா பள்ளிக்கு வந்து 'ம்மா டயனா கிழவிட்ட நெல்லிக்காய் வாங்கிகொடுங்க' என்று கேட்டதுதான் தாமதம். முதுகில் மொத்து மொத்து என்று அடி விழுந்தது. அதுவரையிலும் டயனா கிழவியாக இருந்தவர், அதன்பின் எனக்கு மட்டும் டயனா பாட்டியாகிவிட்டார். பெரியவங்களுக்கு பட்டப்பேர் வைக்க கூடாது, கிழவி சொல்லகூடாது என்று தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு அடி. டயனா மீது கோவம் கோவமாக வந்தது. எனக்கு விழுந்த அடிக்கு அவர் தான் காரணம் என்று முழுதாக நம்பினேன்.
கொஞ்சம் வளர்ந்து ஊர் சுற்றத் தொடங்கியதும் எங்களுக்கான நெல்லிக்காய் மரங்களை நாங்களே கண்டுகொண்டோம். மதியம் சாப்பாட்டு பீரியடில் நெல்லிக்காய் பறித்து, சத்துணவுக் கூடத்தில் உப்பு வாங்கி, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, சம்படத்தில் போட்டு ஊறவைத்தால் மதியம் நான்கு பீரியடுக்கும் நெல்லிக்காய் வாயில் அறைந்து கொண்டிருக்கும். வகுப்பறையே நெல்லிக்காய் மணத்தில் நிறைந்து கிடக்கும்.
ஒருமுறை நன்றாக சளி பிடித்து, அம்மா அதற்கான காரணம் கண்டுபிடித்த போதுதான் 'அவங்கூடத்தனால உன்னையும் ஸ்கூலுக்கு அனுப்புறேன், நீ மட்டும் விதவிதமா சேட்ட செய்வியோ' என்று அடி விழுந்தது. எப்போதுமே ஒரேவிதமான சேட்டைகளுக்கு அம்மாவிடம் அடிவாங்கியதே கிடையாது. ஒவ்வொன்றும் ஒருவிதம். பின் வீட்டிலேயே நெல்லிக்காய் மரம் வளர்த்தேன் என்பதெல்லாம் வேறு கதை.
இந்நேரம் டயனா அருகில் ஒரு குண்டு கிழவி கடை விரிந்திருந்தார். வில்லி. எங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை. டயானாவிடம் நெல்லிக்காய் வாங்காமல் வில்லியிடம் செல்பவர்களை முறைப்போம். நெல்லிக்காய் வாங்கினால் டயானாவிடம் என்ற கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து வந்தோம். மீசை முளைக்கத் தொடங்கி, டவுசரில் இருந்து பேண்டுக்கு மாறி, பின் பள்ளிக்கூடம் மாறி கல்லூரி சென்று என்று வாழ்க்கை எங்கெங்கோ இழுத்துச் செல்ல டயானாவை மறந்தேவிட்டோம்.
டயனா எப்போது தன் கடையைக் காலி செய்தார் என்பது நியாபத்தில் இல்லை. ஆனால் எட்டாம் வகுப்பிற்கு உள்ளாகவே அந்த இடத்தை காலி செய்துவிட்டார் என்று நினைகிறேன். எப்போது இறந்தார், எப்படி இறந்தார். அவருடைய இறப்பு எப்படிபட்டது. கடைசி நாட்கள் எப்படி இருந்தன எதுவுமே தெரியாது. அந்த வழியாகக் கடக்கும் போதெல்லாம் டயானாவை பற்றி எங்களுக்குள் பேசிக்கொள்வோம். முத்து கொண்ட இருவரையுமே டயானாவுக்கு மிக நன்றாகத் தெரியும். கொண்ட ஒருமுறை டயானவிடம் அடி கூட வாங்கி இருக்கிறான். எனக்குத்தெரிந்து டயானாவிடம் அடிவாங்கிய ஒரே ஆளும் கொண்ட தான்.
நேற்றைக்கு பார்க்-டவுன் வெளியே ஒரு அம்மாவைப் பார்த்தேன். தட்டு நிறைய ஊறவைத்த நெல்லியைப் பரப்பி விற்றுக்கொண்டிருந்தார். மிளகாய்த் தண்ணியில் மிதந்து கொண்டிருந்தது ஒவ்வொரு நெல்லியும். நெல்லி விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவிடம் இரண்டு மாங்காய்த் துண்டுகள் வாங்கிய குறுநில மன்னன் ஒருவன் 'ரெண்டு நெல்லி கொடேன்' என்று இனாமாக வாங்கி வாயில் போட்டுக் கொண்டே ரயிலைப் பிடிக்க நடந்து கொண்டிருந்தார். நெல்லிக்காய் விற்றுக் கொண்டிருந்த அந்த அம்மாவின் முகம் இப்போது நியாபகத்தில் இல்லை. ஆனால் அவர் விற்றுக் கொண்டிருந்த ஒவ்வொரு நெல்லியிலும் எங்கள் டயானாக் கிழவியின் வரையபடாத அந்த ஓவியம் நிழலாடிக் கொண்டிருந்தது என்பது மட்டும் நிஜம்.
Tweet |
அந்த வேறு கதை (நிஜம்) முக்கியம்... வாழ்க...
ReplyDeleteபம்ளிமாஸ் வித்த கிழவி யாவந்தான் வருது...கூடவே நெல்லிக்காயுந்தான்...
ReplyDeleteகருப்பட்டி முட்டாயி கூட விக்கும் அந்த கிழவி. அதுக்குள்ள அஞ்சி, பத்து, இருவது பைசால்லாம் இருக்குந் தெரியுமா.,
அய்யய்யோ கருப்பட்டி திங்கணும் போலுக்குலா இருக்கு.
இன்னும் கொஞ்சம் கூட நிதானமாக எழுதியிருக்கலாம் ... ஒருமுறை பொறுமையாக வாசித்து பாருங்கள் தோழர் உங்களுக்கே புரியும் .
ReplyDelete//ஒரு நூல் சேலையை தன்னுடைய எலும்பைச் சுற்றி சுற்றியிருப்பார்//
ReplyDeleteஇதைவிட வறுமையை விளக்க முடியாது . அருமை சீனு .
இன்றைய வலைச்சரத்தில் இந்தப் பதிவு அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. நேரம் கிடைக்கும்போது வருகை தந்தால் மகிழ்வேன்.
ReplyDeleteநன்றி!
ReplyDeleteடயானா கிழவியை இந்த பாடு படுத்தியிருக்கீங்களே.... :-).. சின்ன வயது சேட்டைகளை அசை போடுவதே ஒரு சுகம்தான்.அது சரி.. இது கதையா இல்ல அனுபவமா சீனு..?
என் தொடக்கப்பள்ளி நாட்களை நினைவூட்டியது.
ReplyDeleteஇலக்கிய உயரங்களை இலவசமாகத் தொடக்கூடிய சிறுகதைக்கான வாய்ப்பைத் தவற விட்டீர்களோ?
எழுத்தில் மணம் மிகக் கூடியிருக்கிறது. பாராட்டுக்கள்.
அப்படியே உங்கள் பள்ளி நினைவுகளை எங்கள் முன் கொண்டு வந்தது உங்கள் எழுத்து சீனு. பாராட்டுகள்.
ReplyDelete