இன்னும் மூன்று நாட்கள் இந்த நட்டநடு நள்ளிரவில் பயணித்தேன் என்றால் நிச்சயமாக நாய்களை வெறுத்துவிடுவேன். எனக்கும் அவற்றிற்கும் எந்த சண்டையுமே இல்லை. சாதாரணமாக பத்தடி தூரத்தில் குறுக்கே வரும் நாயைப் பார்த்தேன் என்றால் இருபதடி தூரத்தில் பிரேக் பிடித்து அவற்றிற்கு வழி விடும் தாராள மனபான்மையாளன். எள்ளளவும் துரோகம் நினைக்காத பண்பாளன். சமயங்களில் சாலையில் அடிபட்டு நைந்து போய் கிடக்கும் நாய்களைப் பார்த்தால் உள்ளுக்குள் அறச்சீற்றம் கொண்டு கதறி அழுபவன்.
அப்படிப்பட்ட என்னை, எனது நல்ல உள்ளத்தை இந்த பாழாய்ப் போன நாய்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றன. எங்கோ விரிசல் ஏற்பட்டு, இடைவெளி பெருத்து இப்போது எங்களுக்கு இடையில் யுத்தம் நடந்து கொண்டுள்ளது. பகலில் சாதுவாக படுத்திருக்கும் நாய்கள் இரவானால் கொட்டக் கொட்ட முழித்திருந்து என் - தொடர்ந்து ரைமிங்காக எழுத ஆசை தான், ஆனால் எனக்கான பெண் வாசகர்கள் அதிகம், அவர்கள் தவறாக நினைக்கக் கூடும் என என் ஆண்வாசகர்கள் நினைக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதால் அந்த ரைமிங்கை தவிர்த்து - கடிக்கக் கூடாத இடத்தில் கடித்துவிட்டால் என்ன செய்வது. இப்போது தான் தூரத்தில் ஒரு ஒளி தெரிகிறது.
சரி விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறேன். மூன்று நாளைக்கு முன் புங்கராஜை அவன் வீட்டில் விட்டுவிட்டு ஏரிக்கரை வழியாக வரும்போதுதான் முதல் அசம்பாவிதம் நடந்தது.
நல்ல செவப்பான செக்கக்செவேல் நாய். புங்கராஜ் வீட்டை நோக்கி செல்லும் போதே துரத்தியது. கொஞ்சம் மேனேஜ் செய்து, இரண்டு கால்களையும் ஹேன்டில்பரில் தூக்கிவைத்து, நிலைகுலைந்து, பின் சமாளித்து ஒருவழியாக அவனை வீட்டில் இறக்கி விட்டேன்.
'ஆமா நாய் தொரத்தும் போது கூட போன நோண்டிட்டே இருந்தியே பயமா இல்லையாடா' என்றேன். 'அது உங்களத்தான பாஸு துரத்திச்சு, எனகென்ன பயம்' என்றான். முறைத்தேன். 'ஆமா அது கடிக்குமோ பாஸு' என்றான். 'அதுக்குள்ள ஏதொ அமானுஷ்ய சக்தி புகுந்து இருக்கு பாஸு, உங்க ஹெல்மெட்ட கழட்டி வச்சுட்டு போங்க, தொரத்தாது' என்று ஐடியா வேறு கொடுத்தான்.
நானும் நல்ல புள்ளையாட்டம் ஹெல்மட்டை டேங்கில் வைத்துவிட்டு பூனை போல என்ஜினை உறுமவிடாமல் மெதுவாக சென்று கொண்டிருந்தேன். ஏரிக்கரையின் ஓரமாக ஆங்காங்கு பலநாய்கள் உருண்டு கொண்டிருந்தன.
ஏரிக்கரையை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. நள்ளிரவில் அதுவே ஒரு அமானுஷ்ய பூமி போலத்தான் இருக்கும். ஒரு பக்கம் நல்ல உயர்ந்து வளர்ந்த ஏரிகரை. அதன் மீது வளர்ந்து நிற்கும் பழங்காலத்து மரங்கள். அதற்கும் பின்னால் தற்போது ஜரூராக மணல் அள்ளும் வேலை நடந்து வரும் ஏரி. ஒருமுறையை ஏரிக்கரை மீது ஏறிப் பார்த்தேன். இன்னும் கொஞ்சநாளில் லாவாவை அள்ளி லாரி ஏற்றுவார்கள் போலும். தீயா வேலை செய்கிறார்கள். சரி அமானுஷ்யம் மிஸ் ஆகிறது. மீண்டும் விட்ட இடத்திற்கே வருகிறேன். எனக்கேன் தேவையில்லாத அறச்சீற்றம்.
நள்ளிரவில் ஏரிக்கரை பகுதியே அமானுஷ்யம் நிறைந்து காணப்படும். அதன் எதிர்ப்புறம் அங்கொன்றும் இங்கொன்றுமான வீடுகள். இனிமேல் சாலை போட்டால் புதிய பள்ளங்கள் வரலாம் என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் பழைய பள்ளங்கள். காற்றில் மெல்ல மரங்கள் அசைய. லேசாக பனி விழுந்து கொண்டிருந்தது. தூரத்தில் அந்த நாய். நல்ல சிவப்பான கொழுத்த நாய்.
நடு முதுகுத் தண்டில் லேசான குறுகுறுப்பு. கண்களில் வீரத்தை வரவைத்துக் கொண்டு. கைகளை தயார்ப்படுத்தினேன். பேஸ்மென்ட் நடக்கபோகும் யுத்தத்திற்கு தயாராய் இருந்தது. இந்நேரம் அந்த நாதாரி நாயும் தயார் நிலைக்கு வந்திருந்தது.
'போயிருடா போயிருடா போயிருடா' மனம் துடிக்க. அந்த நாயைக் கிட்ட நெருங்க ஒரு ஆயிரம் ஹெட்ஸ் சப்தத்தில் லொள் என்றது. நல்லவேளை ஏற்கனவே தயார் நிலையில் இருந்ததால் கையை வலுகொண்டு முறுக்கினேன். மங்கள்யான் வேகத்திற்கு கொஞ்சம்தான் வேகம் அதிகம். பள்ளமான தரை என்பதால் கடலில் மிதப்பது போல இருந்தது. இப்போது அந்த நாய் கண்ணாடியில் இருந்து மறைந்து, கணுக்காலுக்கு மிக அருகில் ஓடிவந்து கொண்டிருந்தது. மெல்ல குனிந்து பார்த்தேன். ஏதொ ஒரு ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ அதற்கு வஞ்சம் செய்திருக்கிறேன். அந்தக் கொலைவெறி அதன் கண்களில் தெரிந்தது. 'தக்காளி இப்ப வா' என்றபடி இன்னும் முறுக்கினேன்.
எவனாவது எதிரில் வந்திருந்தால் இனி அவன் எவன் எதிரிலும் சென்றிருக்க முடியாது. அப்படி ஒரு வேகம். இனி அது என்னைத் தொட முடியாது என்ற நிலை வந்ததும் கொஞ்சம் ஆசுவாசபடுத்தி திரும்பிப் பார்த்தேன். தூரத்தில் என்னை வெறித்துப் பார்க்க, அதன் கண்களில் ஒளி வந்து சென்றது. அந்தக் காட்சியே இன்னும் மனதில் இருந்து மறையவில்லை. அதற்கு முன் அடுத்தநாளும் வந்துவிட்டது.
அடுத்தநாள் பகலில் புங்கா வீட்டிற்கு செல்லும் போது அந்த சாலையைப் பார்த்தேன். முந்தைய தினம் நாய் துரத்த ஆரம்பித்த இடத்தில் சிவப்பாக ஏதோ ஒன்று சுருண்டு கிடக்க மனம் பதபதக்க மெல்ல அதனை நெருங்கினால் ஊரின் ஒதுக்குபுற ஏரியா என்பதால் எவனோ அவன் வீட்டு நைந்து போன தபேலா தலையணை தூக்கி எறிந்திருக்கிறான். கருமம் அது கலரும் சிவப்பாகவா இருந்துத் தொலைய வேண்டும்.
அன்றைய தின நள்ளிரவு மீண்டும் புங்காவை இறக்கி விடச் செல்கையில் அதே நாய் தென்படுகிறதா என பார்த்தோம். புங்கா அதை அடிப்பதற்காக ஆயுதம் எல்லாம் தயார் செய்திருந்தான். ஆங்காங்கு சில நாய்கள் சுருண்டு கிடக்க, இரவிலும் அந்த தலையணை என்னை பயமுறுத்தியது என்ற சோகத்தை யாரிடம் சொல்லி அழ.
வேறொரு சிவப்பு நாய் தன் குடும்பம் குட்டிகளோடு உறவாடிக் கொண்டிருந்தது. எவ்வித பிரச்சனையும் இல்லாமல் அவன் வீடு வந்தாயிற்று, இப்போது திரும்பிப் போக வேண்டுமே. மனதில் தைரியத்தை வரவைத்துக் கொண்டு மெல்ல சென்றபோது தான் அந்த குள்ளநரி வெளிப்பட்டது. தக்காளி மீண்டும் ஓட்டம். போன ஜென்மத்தில் ஒலிம்பிக்கில் என் எதிரியாய் இருந்து தோற்றிருக்கும் என்று நினைக்கிறன். பந்தம் இன்னும் தொடர்கிறது. நானும் நன்றாக பழகி இருந்ததால், அதன் கண்களில் எளிதாக மண்ணைத் தூவி இம்முறையும் வென்றுவிட்டேன்.
கதை இப்படி என்றால், இன்றைக்கு சரவணாவை அவன் வீட்டில் விட்டுவிட்டு வரும்போது 'இந்த நாயும் துரத்துமா' என்று நினைத்த ஒரு நாய் கூட துரத்த ஆரம்பித்தது. 'எல்லாம் உன் நேரம்டா சீனு' என்றபடி என்னுடைய கிரையோஜீனிக் என்ஜினை முறுக்கினேன். அது ரோடா, ஸ்பீட் பிரேக் காடா என்று தெரியாத அளவுக்கு வேகத் தடுப்பான்கள் நிறைந்த சாலையில் வண்டி மிதந்தது. வாயில்லா என் வண்டி நிச்சயம் என் மீது சாபம்விட்டிருக்கும். மெல்ல என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டே வண்டியை நிறுத்திய போது தூரத்தில் அந்த நாய் ஒரு புள்ளியாகி இருளில் மறைந்திருந்தது.
'என்னடா சீனு வரிசையா நாய் துரத்துதே ஒரு வேல உன் மேல ஏதும் அமானுஷ்யம் இறங்கிருச்சோ' என்றபடியே பெரும்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி நொந்து கொண்டிருந்தேன். பெரும்பாக்கமாவது பரவாயில்லை நான்கடிக்கு ஒருநாய். இங்கோ இரண்டடிக்கு ஒன்று நின்று முறைத்துக் கொண்டிருந்தது. இவற்றைக் கடந்துவிட்டால் போதும் பத்திரமாக வீடு போய் சென்றது விடலாம். நாளையில் இருந்து பாதுகாப்பிற்கு ஒரு இரும்பு கம்பியை எடுத்துவர வேண்டும்.
நாய்த் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கான வழிகளை யோசித்துக்கொண்டே ரெங்கநாதபுரம் முக்கு திரும்பியது தான் தாமதம், எங்கோ தலையை சொருகியிருந்த நாய் என்னைப் பார்த்ததும் அடித்துப் பிடித்து ஓடி வந்தது.
ஏற்கனவே நான் செம டயர்ட். பேசாமல் ஆண்டவரே என ஒப்புக் கொடுத்துவிடலாமா என்று யோசித்துக் கொண்டே வண்டியை முறுக்கிய போது வேறொரு ஜந்து குறுக்கே வந்தது. அதை ஏற்றிவிடக் கூடாது என்ற பரிதவிப்பில் சடன் பிரேக் போட்டால் அதன் கண்கள் இரண்டு வைரங்கள் போல் ஜொலித்தன. அதுவும் என்னையே முறைக்கத் தொடங்கியது. நாயா பூனையா கரும்புலியா இல்லை பேயா என்று தெரியாத அளவிற்கு வெல்வெட் கருப்பு. பூனைதான். 'இவ்ளோ நேரம் நாய், இப்போ நீயா' என்று சோகத்துடன் அதை வெறிக்க, இங்குதான் கதையில் ட்விஸ்ட். இதுவரைக்கும் நாய்தானே பூனையைத் துரத்தி கேள்விபட்டிருப்பீர்கள். இங்கே உல்டாவாக அந்த கறுப்புப் பூனை நாயைத் துரத்தத் தொடங்கியிருந்தது. என்னிடம் தன் வீரத்தை காண்பித்த அந்த நாய் இப்போது தெறித்து ஓடியது.
பூனையின் கண்களில் இன்னும் அந்த ஜொலிப்பு குறைந்திருக்கவில்லை. வண்டியை கிளப்பும் முன் நன்றியுடன் அதைத் திரும்பிப் பார்த்தேன். எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பாராமல் என்னைக் கடந்து குறுக்கே ஓடியது. முடிவு செய்துவிட்டேன் எனக்கான ஆயுதம் இரும்புக் கம்பி இல்லை. அந்தக் கறுப்புப் பூனை தான். முதலில் அதை ஆட்டையைப் போடவேண்டும். ஆனால் அதற்கு முன் எனது அலுவலகத்தில் அந்தக் கருப்புப் பூனைக்கு ஓர் ஐடி கார்ட் தருவார்களா என கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
படங்கள் - நன்றி இணையம்
Tweet |
என்னங்ணே ! மாபெரும் மாட்டையே சிறுகுச்சிய வச்சி விரட்டுன நீங்களா நாய்களுக்கு பயப்படுறிங்க ?
ReplyDelete// உங்க ஹெல்மெட்ட கழட்டி வச்சுட்டு போங்க, தொரத்தாது' என்று ஐடியா வேறு கொடுத்தான் // இதுல ஏதும் உள்ளர்த்தம் இருக்குமோ ??
// ஆனால் எனக்கான பெண் வாசகர்கள் அதிகம் // இல்லாமலா இருக்கும் . நம்பக்கூடிய உண்மைதான் .
என்னதோ போங்க ! படம் நடிச்சதுல இருந்து ஒரு மார்க்கமாவே இருக்கிங்க !
தப்பிச்சு எங்கள மகிழ்விச்சா சரி .
அது ஒன்றுமில்லை சீனு! குறும்பட நாயகன் பதிவுலகில் இருந்து புறப்பட்ட பயல் சாரி புயல்,ஷைனிங் ஸ்டார் சீனுவின் பாதுகாப்பை முன்னிட்டு அமைக்கப்பட்ட பூனைப் படையின் தலைவர் பூனையாக இருக்கும் நினைக்கிறேன்
ReplyDelete*******
பதிவு எக்ஸ்பிரஸ் வேகம் .
எதிர்ப்பாராத ட்விஸ்ட்...!
ReplyDeleteநாலு பிஸ்கட்டுல முடியவேண்டிய விஷயம் இது சீனு!
ReplyDeleteஅதே அதே!
Deleteநாங்கல்லாம் நாயிங்க சீனு....ஸாரி ஸாரி....நாய்ங்களோடு இருக்கறவங்கனு சொல்ல வந்தோம்.....ஹஹஹ்ஹ.....
Andha irandaavathu para mattum avasiyam illaathathu pol irundhadhu. matrabadi indha pathil ilakkiya vaadai konjam kammiya irukkuthe yen? :)
ReplyDelete-----------
We had a cat, and it will fight with the nearby dogs and most of the time win the fight..
"எனக்கான பெண் வாசகர்கள் அதிகம்"... #ShiningStar-Thimiru
ReplyDeleteபார்க்க.சாது பதிவு சுவைபட எழுதுவதில் புலி! நடை நன்று சீனு!
ReplyDeleteஇப்போதுதான் தூரத்தில் ஓர் ஒளி தெரிகிறது/// ஒளி பிரகாசிக்க வாழ்த்துக்கள்! நாய்கள் ஓடும் வரையே துரத்தும்! நின்று திருப்பி அதட்டினால் ஓடிவிடும். என்ன ஒன்று அப்படி அதட்ட நமக்கு சந்தர்ப்பத்தை கொடுப்பதில்லை! என்னை பகலிலேயே நாய்கள் விரட்டிய சம்பவங்கள் உண்டு. நானும் உங்களைப் போலவே சபித்துக் கொண்டே எப்படியோ தப்பித்தால் போதும் என்று வந்துவிடுவேன்! நன்றி!
ReplyDelete
ReplyDeleteபதிவர்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்வது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லோருடைய பங்கும் சிறப்பாக உள்ளது. முதல் பிரசவம் .கொஞ்சம் வலி இருக்கும். அடுத்துத்து இன்னும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ஆவி,சீனு மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
இதைத்தான் நாய்பாடு படுகிறேன் என்பார்கள் போலும்.. :-) BTW மேலே போட்ட கமெண்ட் குறும்பட சம்பந்தமாக போட்டது. அதைப் பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லை. அதனால் இதில் பதிந்தேன். விரைவில் குறும்பட விமர்சனம் எழுதுகிறேன்.. :-)
ReplyDelete