சுத்தமாகக் கூட்டம் இல்லை, சுவாமி சன்னதியே வெறிச்சோடிக் கிடந்தது என்றாலும் அய்யரும் செக்யுரிட்டியும் மேலும் சில காவல் அதிகாரிகளும் பக்தர்களை 'போறும் போறும் போங்கோ போங்கோ' என்று விரட்டிக் கொண்டிருந்தது எரிச்சலைக் கொடுதத்து.
கண்களை மூடி நமச்சிவாய உச்சரிக்கலாம் என்றால் எங்கோ முடிக்கிவிடப்பட்ட மந்திரமாக 'போறும் போறும் போங்கோ போங்கோ'வே ஒலித்துக் கொண்டிருந்ததை மனம் வெறுத்தது. மந்திர உச்சாடனத்தைக் கைவிட்டு கருவறையில் திருவுருவாகி நின்ற சொக்கனை அவனுடைய தியானத்தை கூர்ந்து நோக்கத் தொடங்கியிருந்தேன். இந்நேரத்தில் தான் காதருகில் யாரோ ரகசியம் பேசும் சப்தம் கேட்டது. ஒரு பெண்ணின் குரல் என்று அடையாளம் காண, திரும்பி அவளது முகத்தைப் பார்த்தேன்.
தலையில் எண்ணெய் வைத்துப் பல நாட்கள் ஆகியிருக்க வேண்டும், தாமிர நிறத்தில் இருந்தது. ஒல்லியான தேகம். அப்போது தான் குளித்திருக்க வேண்டும் என்பதால் முகம் மட்டும் கொஞ்சம் பிரகாசமாக இருந்தது. அருகில் அவளுடைய மகன் நின்று கொண்டிருந்தான். இரண்டு அல்லது மூன்றாம் வகுப்பு.
'போறும் போறும் போங்கோ போங்கோ' மந்திரம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க அந்தப் பெண் இறைவனிடம் மெய்மறந்து வேண்டிக் கொண்டிருந்தாள். அத்தனையும் தன் குடும்பம் தன் மகன் அவன் படிப்பு வாழ்க்கை குறித்ததாக இருந்திருக்க வேண்டும். பெரும்பாலும் அவளுடைய ஜெபம் காற்றாக மட்டுமே வெளிப்பட்டதால் வார்த்தைகள் கேட்கவில்லை. அதேநேரம் 'போறும் போறும் போங்கோ போங்கோ' மந்திரம் மட்டும் உச்சம் அடைந்து கிட்டத்தட்ட எங்களை திட்டத் தொடங்கியிருந்தது.
அந்தப் பெண்ணோ பொறுமையாக அதேநேரம் மிகக் கவனமாக சொக்கனிடம் தான் கூறவந்தது அத்தனையையும் கூறும் முனைப்பில் இருந்தாள். புறவொலிகள் அவளைப் பதட்டப்பட வைக்கவில்லை. கரம்கூப்பிய வேண்டுதல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
'எம்மா இப்ப நகரப் போறியா இல்லியா, வந்தமா பார்த்தமான்னு இல்லாம அங்கையே நின்னா எப்டி?' என்ற கணீர் குரல் சந்நிதானத்தின் ஒட்டுமொத்த அமைதியையும் ஒருநிமிடம் அசைத்துப் பார்த்தது. அவளுடைய ஜெபத்தில் பாதி கூட நிறைவடைந்திருக்காத நிலையில், சந்நிதானமே வெறிச்சோடிக் கிடக்க தரிசனத்தைக் கெடுக்கும் கரடியான அந்த செக்யுரிட்டியை முறைத்தேன். 'உன்ன மாதிரி ஊருபட்ட பேர பார்த்த ஆளு நானு' என்பது போல் இருந்தது அவருடைய பதில் முறைப்பு.
இதற்குத்தான் இது போன்ற கோவில்களுக்கே நான் வருவதில்லை. நிம்மதியாக சாமி கும்பிட விடமாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை சாமி ஒரு காட்சிப் பொருள். பார்த்துவிட்டு கன்னத்தில் போட்டுவிட்டு நகர்ந்து விட வேண்டும். காசிருப்பவன் வேண்டுமானால் கூட கொஞ்ச நேரம் நிற்கலாம். வேண்டலாம். கண்ணார கண்டுகளிக்கலாம். செய்த பாவத்தைக் கழுவ அங்கேயே தவம் கிடக்கலாம்.
எனக்கு இருபது நபர் தள்ளி முன்புறம் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்தேன். நல்ல தாட்டியான ஆள், உடன் மனைவி மக்கமார். வந்து பதினைந்து நிமிடத்திற்கும் மேல் ஆகியிருக்க வேண்டும். சொக்கனை கூடவே இழுத்துப் போவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மீது யாரும் பாய்ந்து பிடுங்கப்போவதில்லை. இது அவர்களுக்கான சந்நிதானம்.
பழமையான கோவில்களுக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது. காற்றோடு காற்றாக உறைந்து நிற்கும் அமைதி இருக்கிறது. எப்போது கடவுளை சந்தைப் படுத்தத் தொடங்கினார்களோ அப்போதே அமைதி குறையத் தொடங்கிவிட்டது. வேண்டுமென்றே நூறு கம்பிகளைச் சுற்றிவரச் செய்து, கருவறையில் இருந்து இருபதடி தூரத்தில் தள்ளி நின்று, கண்ணிமைக்கும் நேரத்தில் கடவுளைக் கண்டு, ச்ச என்னவிதமான ஆன்மிக தரிசனம் இது. சிலசமயம் கடவுள் கருவறையில் இருக்கிறாரா இல்லை கருஞ்சிறையில் இருக்கிறாரா என்ற ஐயம் ஏற்படுகிறது.
அன்றைய தினத்தில் மக்கள் கடவுளை எப்படி கண்டடைந்தார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் இன்றைக்கு நமக்கும் கடவுளுக்குமான இடைவெளியில் கடவுளின் மெய்த்தரகர்களாக தம்மை நினைத்துக் கொண்டிருப்பவர்களே கடவுளை அடையவிடாமல் செய்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது. மனநிம்மதியை வேண்டி வந்தவனது சிந்தனையை சில சம்பவங்கள் என்ன என்னவோ தொடர்ச்சியான எண்ணங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. கடைசியில் முழுவதுமாக சொக்கனை மறந்து வேறு எங்கு எங்கோ உழன்று கொண்டிருப்பது அயர்ச்சியைக் கொடுத்து. சொக்கன் என்னுள் உருவேறவேயில்லை.
இந்நேரம் செக்யுரிட்டி எங்களை நெருங்கி வந்திருந்தான். அவன் கண்களில் ஒரு ஜென்மத்துக் குரோதம். ஒருவேளை அவன் கைகளில் கொலை ஆயுதம் ஏதேனும் இருந்திருந்தால் சந்நிதானம் என்றும் பார்க்காமல் கடவுளின் கட்டளையே என்று பாசக்கயிறை வீசினாலும் வீசியிருப்பான்.
'ஏம்மா இப்ப நகரப்போறியா இல்லையா' என்று கூடுதல் சப்தத்துடன் அவன் கத்த, சொக்கனைப் பார்த்தபடியே மெல்ல அடியடியாக நகரத் தொடங்கினாள் அந்தப் பெண். இந்நேரம் அவளுடைய மகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை சொக்கனைப் பார்த்து ' சாமீ எங்க அம்மா நினைச்சது அத்தனையும் நடக்கணும், நான் நினைச்சதும் நடக்கணும், நாங்க எல்லாரும் சந்தோசமா இருக்கணும். எம்மா நடம்மா சாமிகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன், பாத்துபாரு' என்றபடி தன் அம்மாவின் கையை இழுத்துக்கொண்டு வேகவேகமாக நடக்கத் தொடங்கினான். அவனுடைய வேகத்தில் கடவுளின் தற்செயல் ஒளிந்து கொண்டிருந்தது.
கூர்ந்து கவனித்தபின் தான் கண்டுகொண்டேன் சொக்கனும் கருவறையில் இருந்து கீழிறங்கி அந்தச் சிறுவனுடன் நடக்கத் தொடங்கியிருந்ததை. உள்ளுக்குள் நமச்சிவாய எனும் மந்திரம் பிரவாகம் எடுக்க வெறும் கல்லை மட்டுமே கும்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஆசாமியை எண்ணி சிரித்துக் கொண்டே வெளியில் வந்தேன். சொக்கன் தோளில் கைபோட்டபடி என்னோடு நடக்கத் தொடங்கினார்.
Tweet |
வித்தியாசமான கதையா இருக்கே. வழக்கமான ஸ்டைல்ல இருந்து விலகி வேற ஒரு நடையில கதை சொன்ன விதம் அருமை சீனு.
ReplyDeleteஅட... உங்களுடனும் நண்பராகி விட்டாரே...!
ReplyDeleteமாறுபட்ட நடையில் மாறுபட்ட கோணத்தில் சிறப்பான கதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteவெறும் கல்லை மட்டுமே கும்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஆசாமி
-சொக்கன் சிறுகதை நன்று.
நன்றி.
த.ம. 4.
கூர்ந்து கவனித்தபின் தான் கண்டுகொண்டேன் சொக்கனும் கருவறையில் இருந்து கீழிறங்கி அந்தச் சிறுவனுடன் நடக்கத் தொடங்கியிருந்ததை /// சிலிர்க்குது இத நெனச்சா ....
ReplyDelete