சில மனிதர்களை அவர்கள் செய்கின்ற செயல்களின் மூலம் பிடித்துப்போகும். சில மனிதர்களையோ அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துபோகும். நான் கூற விரும்பும் மனிதரோ பார்த்ததுமே பிடித்துப் போகும் வகையைச் சேர்ந்தவர். பெயரிலேயே சிரிப்பை வைத்திருப்பவர். இவரை பார்க்கும் போதெல்லாம் திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கூறுவது போல தெய்வீகச் சிரிப்பையா உமக்கு என்று கூறுவது உண்டு. அவர் வேறு யாருமில்லை அம்பத்தூரில் சிரிப்பரங்கமும் சிரிப்பு யோகாவும் நடத்தி வரும் சிரிப்பானந்தா அவர்கள் தான். அவரால் எனக்கு ஒரு பேரதிர்ச்சி ஏற்படப் போகிறது என்பது அப்போது வரை எனக்குத் தெரியாது. பேரதிர்ச்சி என்பதை விட ஆனந்த அதிர்ச்சி என்ற சொல் தகும்.
இதுவரை ஒரே ஒருமுறை தான் சிரிப்பரங்கதிற்கு சென்றுள்ளேன். கடந்த இருமாதங்களாக நடைபெற்ற சிரிப்பரங்கத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை. இம்மாதம் எப்பாடு பட்டாவது பங்குகொள்வது என்று முன்பே முடிவெடுத்துவிட்டேன். மாலை 4.30 மணிக்கு சிரிப்பரங்கம் ஆரம்பமாகும். என் தம்பி மற்றும் தோழன் உட்பட நாங்கள் மூவரும் 4 மணிக்கே அரங்கத்திற்குள் நுழைந்துவிட்டோம். இரண்டு மாதங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியில் கட்டித் தழுவிக் கொண்டார். தம்பியையும் நண்பனையும் அறிமுகம் செய்துவைத்தேன். பின் சிறிது நேரம் சி(ரி)றப்பான தகவல்களைக் சொல்லி ஆச்சரியப்படுத்திக் கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் கூட அவர் செய்யப் போகும் வினோதம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை.
அரங்கம் நிறைந்தது. அரங்கம் ஆரம்பித்தது. கடவுள் வாழ்த்தாக பாடப்படும் நகைச்சுவைக் கும்மியை ஆடிப்பாடி முடித்தார், முடித்தார்கள். இப்போது தான் அந்த விபரீத வினோதம் அரங்கேறியது. அன்றைய விழாவிற்கான தலைவரை அந்த நொடியில் தேர்ந்தெடுப்பது அவர்கள் வழக்கம். INSTANT தலைவர் என்பது அந்தப் பதவியின் பெயர்.மைக்கைப் பிடித்துக்கொண்டு இன்றைய சிரிப்பரங்கதின் தலைவர் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (என் முகப்புத்தகப் பெயர்) அவர்களை தலைமை தாங்க அழைக்கிறோம் என்று அழைத்தார்கள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏற்றுக்கொள்ள மனமில்லை, மறுப்பதோ முறையில்லை. தயங்கினேன். தோழனும் தமையனும் வற்புறுத்தினார்கள் மேடை ஏறிவிட்டேன்.
எனக்குள் சில கேள்விகள். என்னை விட வயதில் மூத்தவர்கள் பலர் வீற்றிருக்க நான் தலைமை ஏற்பது தகுமா? கீழே அமர்ந்திருக்கும் தோழனுக்கும் தமையனுக்கும் நானொரு காமெடி பீஸ் ஆகிவிடமாட்டேனா? சும்மாவே ஓட்டுவார்கள் இதில் இது வேறா? மேடையில் இருந்து அவர்கள் இருவரையும் பார்த்தேன். சிரிப்பாய் சிரித்து கடுபெற்றிக் கொண்டிருந்தார்கள். தாடிக்குள் முகம் புதைத்து சிரிப்பால் முகம் மலர்ந்த சிரிப்பானந்தா மெதுவாக என் காதிற்குள் முணுமுணுத்தார், "சிறந்த மூணு நகைசுவை செலக்ட் செஞ்சி வச்சிகோங்க பரிசு கொடுக்கணும்". ஞே என்று விழித்தேன். மீண்டும் தொடர்ந்தார் "தலைவரே ஒரு அஞ்சு நிமிஷம் பேசனும்". நல்ல வேளை நான் மயங்கி விழவில்லை.
மேடையேறிய பலரும் நகைச்சுவைக்குப் பதிலாக பாடல்களைப் பாடியதால் சிரிப்பரங்கம் சிறிது நேரம் பாட்டரங்கம் ஆகிவிட்டது. அது எனக்கும் வசதியாகி விட்டது. சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுப்பது எளிதல்லவா! சிரிப்பு விருந்தினராக வந்திருந்தவரின் பெயரும் ஸ்ரீநிவாசன். என்ன ஒரு ஒற்றுமை. பலமுறை அரங்கம் அவரை அழைத்த போதெல்லாம் நான் வழக்கம் போல் ஞே என்று விழித்துக் கொண்டிருந்தேன். அவர் ஒரு பலகுரல் வல்லுநர். விலங்குகள் பறவைகள் போல் குரல் எழுப்பி வியப்பில் ஆழ்த்தினார். வாரியார் போல் பேசியது அருமையாக இருந்தது. இவை எல்லாம் முடிந்ததும் என்னைப் பேச அழைத்தார்கள்.
மற்றவர்கள் நகைச்சுவை சொல்லிக் கொண்டிருந்த வேளையில் என்ன பேசப் போகிறோம் என்பது பற்றிய ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தேன். பின் நம் பொழப்பு சிரிப்பை சிரிதுவிடக் கூடாது அல்லவா. சிந்தனையைத் தூண்டும் விசயங்களை மட்டுமே என் மூளை எனக்கு உற்பத்தி செய்து கொடுத்தது. நகைச்சுவைக்கான ஹார்மோன்களோ சத்தியாகிரகம் செய்து கொண்டிருந்தன. நல்ல வேளை கையில் பேப்பர் கொடுத்திருந்தார்கள், தோன்றியதை எல்லாம் அதில் குறித்து வைத்துக் கொண்டேன். அப்போது தெரியாது அந்தத் தாள் என் காலை வாரிவிடும் என்று.
மைக்கைப் பிடித்து மேடையைப் பார்த்தேன். அரங்கம் என்னிடம் அதிகம் எதிர்பார்ப்பது போல் தோன்றியது. மனதிற்குள் மற்றுமொரு குழப்பம். செந்தமிழில் பேசுவதா சென்னைத் தமிழில் பேசுவதா என்று. முதலில் பேசுவோம் பின்பு செம்மையா சென்னையா என்று பார்த்துக்கொள்வோம் என்ற முடிவிற்கு வந்தேன். கையிலிருந்த காகிதத்தைப் பார்த்தேன் நல்ல தெளிவாக கிறுக்கி இருந்ததால், என்ன கிருக்கி இருந்தேன் என்பதை என்னாலேயே கண்டுகொள்ள முடியவில்லை. மீண்டும் ஞே தான்.
இனி தலைவன் உரை (ஹி ஹி ஹி ஹி அப்படி எல்லாம் சிரிக்கக் கூடாது)
இங்குள்ள அனைவருக்கும் சிரிப்பான என் மாலை வணக்கங்கள். சிரிப்பரங்கதிற்கு இது என் இரண்டாவது வருகை. கடந்த இரண்டு மாதங்களாக என்னால் வர முடியவில்லை. அதனால் தான் என்னவோ அதற்கு தண்டனையாக, சிரிப்பானந்தா எனக்கு இந்தத் தண்டனையைக் கொடுத்துவிட்டார் என்று நினைக்கிறன். இனிமேல் ஒழுங்காக வருகிறேன். இந்த தண்டனை மட்டும் வேண்டாம். திடீர்னு நீ தான் தலைவர், பேசுன்னு சொன்னதால prepare பண்ண முடியல. இப்ப அதனால தான் பயமாயிருக்கு prepapre பண்ணாததால எங்க அதிகமா பேசிருவனோனு பயமாயிருக்கு.
தப்பு செஞ்சாக் கூட தடயம் இல்லாம செய்யணும்னு சொல்லுவாங்க. இந்தத் தலைவர் பதவிய ஏத்துகிட்டதே பெரிய தப்பு. அதுக்குப் பரிகாரமா கூடவே இரண்டு தடயத்த வேற கூட்டிட்டு வந்த்ருகேன். வேறு யாருமில்ல என்னோட தம்பியும் நண்பனும் தான். சும்மாவே பிரண்ட்ஸ் எல்லாரும் என்ன அப்பாடக்கர்னு கூப்பிடுவாங்க, இனிமேல் நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கர்னு கூப்ட ஆரம்பிச்சிருவாங்க. இப்படி சின்ன அப்பாடக்கரா இருந்த என்ன பெரிய அப்பாடக்கரா மாத்தின பெருமை சிரிப்பானந்தாவையே சேரும்.
நவரசம்ல ஒரே ஒரு ரசம் தான் ரொம்ப சுவையா தித்திப்பா இருக்கும், ஆனா நாம எல்லாரும் அதைத் தேடித் போக பயபடுறோம். எங்க அதிகமா சிரிச்சா அதிகமா கஷ்டப் படுவோமொனு நினைக்கிறோம், அப்படி இல்லை இடுக்கண் வருங்கால் கூட நகுகனு சொல்லியிருக்காங்க.
சிரிப்பு உங்களைத் தேடி வராத பொழுது
நீங்கள் சிரிப்பைத் தேடி செல்லுங்கள்
இல்லையேல்
சிரிப்பரங்கத்தைத் தேடிச் செல்லுங்கள்
நீங்கல்லாம் அம்பத்தூர்ல வசிக்கிறதால ரொம்ப புண்ணியம் செஞ்சு இருக்கீங்க. அதனால தான் சிரிப்பரங்கதுல கலந்துக்க முடியுது. நிறைய இடங்கள்ல இதுபோல் ஆரம்பிக்கணும். சிரிப்பானந்தா செய்து வரும் சேவைக்கு மனபூர்வமான நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு மனபூர்வமான வாழ்த்துக்கள். இறுதியாக ஒரே ஒரு விஷயம் சொல்லி என்னுரையை முடித்துக் கொள்கிறேன்.
நான் UG படிச்சப்போ அரட்டை அரங்கம் தகுதிச் சுற்றுல கலந்துகொண்டேன். முதல் இரண்டு சுற்றில் தேர்வாகி மூன்றாவது சுற்றில் அமர்ந்திருந்தோம். என்னையும் சேர்த்து மொத்தம் ஆறு பேர். யாரவது ஒருவரை முதலில் வந்து பேசும்படி தேர்வாளர் அழைக்கவே ஒருவர் எழுந்து சென்றார். அவர் பேச ஆரம்பித்தது முதலாகவே அரசியல் ஜோக்குகளையும் மற்ற ஜோக்குகளையும் சொல்லிக்கொண்டே சென்றார்.
இடையில் அவரை நிறுத்திய தேர்வாளர், "ஏன் ஜோக் மட்டுமே சொல்றீங்க" என்றார்.
"இங்க கலக்கப் போவது யார் ஷூட்டிங் தானே நடக்குது", என்றார் அப்பாவியாக.
இதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இல்லை, அவர் எப்படி மூன்றாவது சுற்று வரை முன்னேறி வந்தார் என்பதில் தான் ஆச்சரியமாக உள்ளது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் பலருக்கு எங்கே எப்படிப் பேசவேண்டும் என்றே தெரியாது, இதோ இங்கு பேசிக் கொண்டிருக்கும் என்னைப் போல. அதனால் இத்துடன் என்னுரையை முடித்துக் கொள்கிறேன். வாய்ப்பு கொடுத்த சிரிபரங்கதிற்கு நன்றி. இவற்றின் இடை இடையே சில நகைச்சுவைகள் சொன்னேன், பதிவின் நீளத்தைக் கருதி அவற்றை தணிக்கை செய்துவிட்டேன்.
சிரிப்பானந்தா அவர்களே சிரிப்பரங்கதிற்கு என்னிலும் சிறந்த தலைவன் இருக்கிறான் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
பதிவர் சந்திப்பு
ஆகஸ்ட் 19 அன்று மாணவர் மன்றத்தில் வைத்து நடை பெற இருக்கும் பதிவர் சந்திபிற்கு சிரிப்பானந்தா அவர்களையும் அழைத்தேன் மகிழ்வுடன் வர சம்மதித்துள்ளார் என்பதையும் அதே மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
தொடர்புடைய பதிவு
உங்கள மனத்தில் பட்டதை சொல்லிச் செல்லுங்கள்.