27 Dec 2013

ஓடோடி எக்ஸ்பிரஸ் - வண்டலூர் ஜூவும் சில 18+ மிருகங்களும்

அந்த விசித்திர மிருகங்களை ஆங்காங்கே சந்திப்பதற்கு முன்பு வரைக்கும் வண்டலூர் உயிரியல் பூங்கா குறித்த பதிவை எழுத வேண்டுமென்ற எண்ணம் அணுவளவும் எனக்கில்லை. அப்படியென்ன பொல்லாத மிருகத்தை பார்த்துவிட்டாய், சிங்கம் புலி சிறுத்தை என்று நாங்கள் பார்க்காத மிருகத்தையா பார்த்துவிட்டாய்? என்று நீங்கள் கேட்பது எனக்குப்புரிகிறது, ஆம் நான் பார்த்தது பொல்லாத மற்றும் கொஞ்சம் சுவாரசியமான சில மிருகங்களைத்தான். அது குறித்துப்பேசுவதற்கு முன் வண்டலூர் பூங்காவின் சில வரலாற்றுத் தகவல்களை பதிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அதனை படிக்க நினைப்பவர்கள் தொடரலாம் இல்லையேல் நேராக கடைசி பாராவுக்கு தாவி விடலாம், அதையும் தாண்டிய பொறுமை இருந்தால், கடைசி பாராவில் இருந்து மீண்டும் இரண்டாம் பாராவுக்கு தாவலாம். டார்வின் கோட்பாடின் வந்த நமது முன்னோர்களின் கோட்பாடும் அதுதானே.


இன்றைய எக்மோரில் செத்த காலேஜ் இருக்கும் இடத்தில் 1855-ல் பிரிட்டீஷ் அரசாங்கமானது அருங்காட்சியகம் ஒன்றைத் தொடங்க தீர்மானித்தது, அரசாங்கத்தின் இந்த எண்ணம் சற்றே விசாலமாக, அதனருகிலேயே மிருகக்காட்சிசாலை ஒன்றையும் திறந்து சிங்கம் புலி உள்பட பல விலங்குகளையும் அவ்விடத்தில் கொண்டுவந்து அடைத்தனர். 

இவ்விசயம் நம்மக்கள் மத்தியில் சற்றே பிரபலமாக கூட்டம் கூட்டமாக வந்துசெல்ல ஆரம்பித்தனர். மேலும் இவ்விடங்களை இவர்கள் செத்த காலேஜ் என்றும் உயிர் காலேஜ் என்றும் வாஞ்சையோடு அழைக்கத் தொடங்கினர். விஷயம் சுத்துப்பட்டு எட்டுபட்டிக்கும் பரவ "எட்றா வண்டிய" என்றபடி வண்டிமாடு கட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள் ஜமீன்கள் மிராசுகள் மற்றும் ஜனங்கள். வெகுவிரைவில் இவ்விரு இடங்களும் நகரின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக மாறின. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் வான்படை விமானங்கள் மதராசப்பட்டினத்தைத் தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்ட போது விலங்குகளின் நலன் கருதி இடமாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்பின் மீண்டும் இங்கேயே மாற்றிவிட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. 

இந்நிலையில் மிருகக்காட்சி சாலையில் மிருகங்களின்வரத்தும், மதராசப்பட்டினத்தில் போக்குவரத்தும் அதிகரிக்கத் தொடங்கியபோது அங்கிருந்த அத்தனை மிருகங்களையும் விசித்திரமான கொடிய நோய் தாக்கியது. இதனால் பல விலங்குகள் மாண்டன. உறக்கம் கலைந்த அரசாங்கம் மாற்றுவழி தேடி யோசித்த போது சென்னையில் இருந்து முப்பது கிமீ தொலைவில் அமைந்திருந்த வண்டலூரின் பசுமையான இயற்கைச் சூழல் உயிரியல் பூங்கா கட்டமைக்க ஏற்ற சூழல் என்று அரசாங்கம் முடிவெடுத்து 1976-ம் வருடம் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் உதயசூரியனின் தலைமையில் உதயமானது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.  

என்ன காரணத்துக்காக 1976-ம் வருடம் பூங்காவின் இடம் மாற்றபட்டதோ அதே பிரச்சனைகளை தற்போதைய வண்டலூர் சந்தித்துக் கொண்டிருக்கிறது. போக்குவரத்து நெரிசல், வாகனஒலி, வாகனப்புகை, தண்ணீர்ப்பஞ்சம் இதுவும் போதாதென்று உலகிலேயே மிகப் பெரியபேருந்து முனையம் ஏற்படுத்தும் திட்டத்தை வேறு அரசு பரிந்துரைத்துள்ளது. 'என்னவோ போடா மாதவா...ம்ம்ம்... நாம நம்ம கதைக்கு வருவோம்'.     

பத்து வருடங்களுக்கு முன்பு ரவியை டார்ச்சர் செய்து வண்டலூர் அழைத்து வந்தேன். வந்தும் என்ன பிரயோஜனம் அந்தப் பெரிய இரும்புக்கதவை நன்றாக இழுத்து அடைத்து சங்கிலி போட்டு கட்டியிருந்தார்கள். அதனருகில் தேவுடு காத்துக்கொண்டிருந்த ஒரு சின்ன பலகையில் எழுதியிருந்தது. "செவ்வாய் விடுமுறை" என்று. அதற்குப்பின் வண்டலூரை சுற்ற வாய்ப்பே கிடைக்கவில்லை.

கடந்தவாரம் வீட்டிற்கு வந்த உறவினர்கள் வண்டலூர் சென்றே ஆக வேண்டும் என்று (வழக்கமாக சொல்லும் அதே டயலாக் தான்) ஒற்றைக் காலில் நின்றார்கள். "இப்போதான் நைட்ஷிப்ட் முடிச்சி வந்த்ருக்கேன், என்னால வர முடியாது" என்றாலும் என்னை அவர்கள் விடுவதாயில்லை. அந்த கதை இனி... 

பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்டபவர்களுக்கு நுழைவுக் கட்டணம் முப்பது ரூபாயும், சிறுவர்களுக்கு இரண்டு ரூபாயும் மட்டுமே நுழைவுக் கட்டணம். வாசலில் இரு காவலர்கள் உங்கள் பைகளை சோதனை போடுவதால் விலங்குகளின் பாதுகாப்பு கருதி பிளாஸ்டிக்கிற்குத் தடா.   

வண்டலூர் ஜூவை சுற்றிப் பார்க்க மூன்று வழிகள் உள்ளன (i) மின்னியங்கி வாகனம். ஆறு ஏழு கிமீ தொலைவு நடக்க சிரமப்படுபவர்கள், வயதானவர்கள் குழந்தைகள் என்றால் மின்னியங்கி வாகனம் சாலச்சிறந்தது. என்னவொன்று முக்கியமான இடத்தில மட்டுமே நிறுத்துவார்கள். ஓடிச்சென்று பார்த்துவிட்டு, அதேவேகத்தில் மீண்டும் வந்து உட்கார்ந்துகொள்ள வேண்டும் என்பது மட்டுமே இதில் இருக்கும் குறை. (ii) வாடகை மிதிவண்டி. நம்முடன் வருபவர்களால் மிதிவண்டி மிதிக்க முடியும் என்றால் மிதிவண்டி உலா ஆகச்சிறந்தது. நிறுத்தி நிதானமாக எவ்வித அவசரமும் இல்லாமல், ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுற்றி வரலாம். அடுத்தமுறை சென்றால் மிதிவண்டியில் தான் சுற்ற வேண்டுமென்று முடிவெடுத்துள்ளேன், வருகிறீர்களா? (iii) நடராஜா சர்வீஸ். ஆகட்டுண்டா தம்பி ராஜா, நட ராஜா மெதுவா செல்லையா, பதமா நில்லையா. பொறுமையாக மிகப்பொறுமையாக சுற்றிவரலாம். என்னவொன்று மூன்று கிமீ தாண்டுவதற்குள்ளாகவே மூச்சு வாங்கி ஓய்வெடுக்கத் தொடங்கிவிடுவோம். சில இடங்களுக்கு நடப்பதற்குச் சோம்பேறித்தனபட்டு சென்று பார்க்காமல் விட்டுவிடுவோம். மூன்றிலும் சைக்கிள் பெஸ்ட். உள்ளே தமிழ்நாடு ஹோட்டல் இரு இடங்களில் உள்ளது இரண்டுமே செம வேஸ்ட்.

வண்டலூர் பூங்காவின் உள்ளே நுழைந்த உடனேயே அதன் செயற்கைத்தனமும் உடன் இணைந்துகொண்டு பட்டவர்த்தனமாக தலைவிரித்து ஆடுகின்றன. பொதிகை மலைச்சாரலில் பிறந்து வளர்ந்த எனக்கு ஆயிரத்து முன்னூறு ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இக்காடு குளுமையையோ, நிம்மதியான மனநிலையையோ இன்னும் சொல்லபோனால் ஒரு வனத்தினுள் இருக்கிறோம் என்ற பிரம்மையையோக் கூட ஏற்படுத்தவில்லை. ஏதோ நடேசன் பார்க்கில் ஆங்காங்கு மான்களையும் வான்கோழிகளையும் அலையவிட்டது போல் இருந்தது எனக்கு. எங்கெங்கு காணினும் மக்கள் மக்கள் மக்களோடு மக்களாக மக்கள்.

ஒரு சாதாரண மனிதன் எனக்கே இவ்விடம் காடு போன்ற சூழலைத் தந்துவிடாத போது காட்டுவாசிகளான இவ்விலங்குகளுக்கு இச்சூழல் எப்படி நிம்மதியைத் தந்துவிட முடியும். விதவிதமாக ரகம்ரகமாக வகைவகையாக நாம் பார்த்து வியந்து வாயைப்பிளந்து கேமராக்களில் க்ளிக்க வேண்டும் என்பதற்காகவே ஜனனம் எடுத்துள்ளன என்பதைத் தவிர இவ்விலங்குகள் வேறெந்த பாவமும் செய்யவில்லை. 



அத்தனை மிருகமும் உற்சாகமில்லாமல் சோம்பிப்போய் கிடக்கின்றன. படுத்த இடத்திலேயே படுத்துக் கிடக்கின்றன. 'உன்னை அடைத்து வைத்த ஜாதியிலிருந்து வந்துள்ளேன் நிமிர்ந்து பார்' என்றாலும் பார்க்கமறுக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு இவ்விலங்குகளுக்கு கொடுக்க வேண்டிய உணவைக் கூட முறையாகக் கொடுக்காமல் ஊழல் செய்து சிலர் வயிறு வளர்த்தார்கள் என்ற செய்தியைப்படித்த போது வராத வருத்தம் இவ்விலங்குகளை நேரில் காணும் போது என்னுள் தொற்றிக்கொண்டது. 

ஒருமுறை தினமலரில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள், அடிபட்ட புள்ளிமான் ஒன்று படுத்திருப்பது போலவும் அந்த மானின் மீது ஒரு காகம் அமர்ந்து அதன் காயத்தை கொத்திக் கொண்டிருப்பது போலவும். ஜெயமோகனின் யானைடாக்டர் புத்தகத்தில் டாக்டர் கே, 'விலங்குகளின் ரெசிஸ்டன்ஸ் அதிகம், அவை மனிதர்களைப் போன்று சாதாரணமானவை கிடையாது, ஒருவேளை அவைகளின் அடிபட்ட காயத்திற்கு ஆண்டிபயாட்டிக் கொடுத்தால் காடுகளினுள் மூன்று கி.மீக்கு ஒரு விலங்குகள் மருத்துவமனை வேண்டியது திறக்க வேண்டியதுதான்' என்று கூறியிருப்பார். தினமலரில் சுட்டிகாட்டப்பட்ட அந்த மானுக்குத் தேவை மருத்துவசதி இல்லை, வலுகொண்டு அந்த காகத்தை விரட்டவேண்டிய திடம். சோறு போட்டால் தானே அது திடமாய் இருக்கும். அதனுடைய சோறையும் இவன்களே பிடுங்கித்தின்றால்? இன்றும் பல விலங்குகள் காயத்துடன் சோம்பியபடி சுற்றித்திரிவதைப் பார்க்கமுடிகிறது.

சிங்கம் புலி சிறுத்தை போன்ற விலங்குகள் அவ்வளவு எளிதாக வெளியே வருவதில்லை. நாம் அவற்றைப் பார்க்க வரவில்லை, அவை தான் நம்மைப் பார்க்க வரவேண்டும் என்ற கர்வத்துடனேயே சுற்றித் திரிகின்றனவோ என்னவோ! வெள்ளைப் புலிகள் என்றழைக்கபடும் வங்காளப் புலிகளை எளிதில் பார்க்கலாம் அல்லது பார்க்கும்படி வைத்திருக்கிறார்கள். 

வண்டலூர் பூங்காவில் லயன் சாபாரி உள்ளது, மனிதர்கள் அனைவரையும் ஒரு கூண்டுக்குள் அடைத்து அழைத்துச் செல்கிறார்கள், அழைத்துச் செல்கையில் அவர்கள் கூறும் கூறும் ஒரே ஒரு விதி, சிங்கம் மனது வைத்தால் மட்டுமே உங்களைக் காணவரும். சிங்கத்தைக் காண்போம் (அ) காண்பிப்போம் என்பதற்கு உறுதியளிக்க முடியாது என்கிறார்கள். 

மதிய உணவைக் கூடத்துறந்து அத்தனை இடங்களையும் சுற்றிமுடித்த போதுதான் லயன் சபாரி என்ற ஒன்றே எங்களுக்குத் தெரிந்தது. அங்கு பயணிப்பதற்கு முன்பதிவு செய்ய ஒரு பெருங்கூட்டம் காத்திருந்தது, அருகே நின்றுகொண்டிருந்த பூங்கா ஊழியரிடம் சென்று 

"ண்ணா, டிக்கெட் எவ்ளோ ண்ணா" என்றேன். மேலும் கீழும் பார்த்தார்,  பதில் எதுவும் கூறாமல் அருகில் இருந்தவரிடம் பேசத் தொடங்கிவிட்டார். இம்மிபிசகாத சென்னைப்புத்தி. எனக்கோ பயங்கர அலுப்பு, என் பிடிவாதம் என்னை விடுவதாய் இல்லை. மீண்டும் "ண்ணா, டிக்கெட் எவ்ளோ ண்ணா" என்றேன். மிகபெரிய சலிப்புடன் "முன்னாடி எழுதியிருக்கு வேணும்னா அங்க போய் பாரு" என்ற பதில் வந்தது. முன்னாடி சென்று பார்க்கும் அளவுக்கு தெம்பில்லை அதனால் நானும் அவரை விடுவதாய் இல்லை "நடக்க முடியாலன்னு தான உங்ககிட்ட கேக்குறேன் சொல்லலாம் இல்ல", "ஏம்பா முன்னாடி போய் பாருன்னா பேஜார் பண்ணிட்டுருக்க, தோ அன்னாண்ட இருக்கு பாரு" என்று நான் கவனிக்காத திசையில் என் எதிரில் இருந்த பலகையைக் சுட்டிக்காண்பித்தார். "இருபது ரூபா, முப்பது ரூபா" என்று அவர் கூறியிருந்தால் அத்தோடு முடிந்திருக்கும். ஆனால் ஓரிரு வார்த்தையில் கூற வேண்டிய தகவல்களைக் கூறமுடியாத அளவிற்கு பிசியாகிவிட்ட இவர்களின் உளவியலைத்தான் புரிந்து கொள்ளவே முடியவில்லை. அந்தப்பலகையை அவர் காண்பித்தாலும் கூட அதனைப்பார்க்கும் மனநிலை என்னிடம் இல்லை. 

இருந்தும் அடுத்தமுறை லயன் சபாரி செல்வதற்காகவே வண்டலூர் போய்வரவேண்டும். 'அவன் கிடக்கான், லூசுப்பய...' 

இனி வரப்போவது தான் அந்த விசித்திர மிருகங்கள் பற்றிய குஜாலான 18+ பாரா. இது 18+ என்பதால் 18 வயது நிரம்பாதவர்கள் கண்களை மூடிக்கொண்டு படிக்கவும். முதல் பாராவில் இருந்து இங்கு ஒரே தாவு தாவி வந்தவர்கள் நிதானமாகப் படிக்கவும். இந்த மிருகங்கள் பூங்காவின் வெளிப்பகுதிகளில் கொஞ்சம் நாகரிகமாக தோற்றமளித்தாலும், அடர் வனத்தை நெருங்க நெருங்க இவர்களின் சில்மிசங்களும் அதற்கு ஏற்றாற்போல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நான் குறிப்பிட விரும்புபவை எல்லாமே பேன்ட் சட்டை, ஜீன்ஸ் சுடிதார் போட்ட நாகரிகமான மிருகங்கள். வீட்டில் ஒதுங்க இடம் கிடைக்கவில்லையென்று ஒதுக்குபுறமாக தள்ளிக்கொண்டு வந்து ஒதுங்கிய மிருகங்கள். எனக்கு தெரிந்து பூங்காவிற்கு வந்த அனைவரும் விலங்குகளைப் பார்ப்பதை விட இவர்களைப் பார்ப்பதில் தான் அலாதி ஆர்வம் காட்டினார்கள் என்று நினைக்கிறன். தோளில் சாய்ந்து, மடியில் படுத்து, உதட்டுடன் உதடு பொருத்தி, அடேயப்பா இந்த நாகரீக ஆதிவாசிகளின் லீலைகள் இலவசமா ஒரு சினிமா! ஊரில் இருந்து வந்த உறவினர்களின் மனதில் சென்னை குறித்த பிம்பம் தவிடுபொடியானது இந்த இடத்தில்தான். இந்த நிலைக்கு முழுக்க முழுக்க காரணம் சென்னைவாசிகள் இல்லை, மனிதர்கள். அல்லது மனிதர்கள் என்று அடையாளம் காணப்படும் மிருகங்கள். இதில் மாலை போட்டிருந்த  ஒருவன் செய்த லீலைகள் இருக்கிறதே, அவன் சாமியே இல்லை. அக்மார்க் போலிச்சாமி. தான் அழைத்து வந்திருந்த பெண்ணை தன் கரங்களுக்கு இடையிலேயே சொருகிக் கொண்டு நடைபழகிக் கொண்டிருந்தான்.  இம்மியளவு பிரியக்கூட அவன் மனதில் வலுஇல்லை. கிடைத்த புதர்களின் இடைவெளிகளில் இருந்தவர்கள் மகாதியானத்திலும், வெளிப்புறமாக இருந்தவர்கள் தியானத்திலும் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள். சிறுவர் பெரியவர் இளைஞர் பெண்கள் மற்றும் அரசனைப் போன்ற நல்லவர்கள் என்று யார் கடந்தாலும் அவர்கள் அவர்களது தியானத்தில் இருந்து வெளிவருவதாய் இல்லை. போதாக்குறைக்கு சில இடங்களில் "இங்கு சுதந்திரமாக பாம்புகள் நடமாடும் ஜாக்கிரதை" என்றெல்லாம் பலகை வைத்து பயமுறுத்துகிறார்கள், அந்த இடங்களில் தான் இவர்களை அதிகமாய்க் காண முடிகிறது. சில பகுதிகளில் சிறுவர்கள் சிலர் அந்த இடங்களிலேயே டேரா போட்டு இவர்களையே வெறிக்க வெறிக்க ஜொள்ளிக் கொண்டிருந்தனர். "மச்சான் டேய் அங்க பாருடா, செம மச்சி, மச்சான் டேய் அவன் கைய பீப்ப்ப்ப். டெல்லி தமிழகம் பீகார் உட்பட இந்தியா முழுவதும் அதிகரித்து வரும் எதையோ கண்ட்ரோல் செய்யப் போகிறார்களாம். டேய் மொதல்ல பீச்சு பார்க்குக்கு வார இவிங்கள கண்ட்ரோல் பண்ணுங்கடா, மத்ததெல்லாம் தானா கண்ட்ரோல் ஆயிடும்.


இங்கிருந்து வண்டலூர் ஜூவுக்கோ அல்லது இப்பதிவை விட்டோ ஓடிப்போக தயாராயிருக்கும் அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் ஓடோடி எக்ஸ்பிரஸின் நன்றி வணக்கம் :-)  

25 Dec 2013

சீனு'ஸ் கிச்சன் - சுடுதண்ணீர் சமைப்பது எப்படி?

இணையப் பெருவெளியில் மேய்ந்து கொண்டிருந்த போது ஆவி'ஸ் கிச்சன் என்ற பதிவு கண்ணில் பட்டது, 'அட ஆவிகள் கூட கிச்சன் வைத்து நடத்தும் போது, மனிதர்களான நாம் ஏன் முயலக் கூடாது' என்ற பெருத்த வினா மண்டையிலே எழுந்ததன் விளைவே இப்பதிவு மற்றும் நம் மக்களுக்கு என்ன தெரியாது? நாம் என்ன கற்றுக்கொடுக்கலாம் என்று ஆழ்ந்து யோசித்தபோது கிடைத்த பதில் 'சுடுதண்ணீர் செய்வது எப்படி?' 

பெரும்பாலான மனிதர்களுக்கு சுடுதண்ணீர் செய்வது எப்படி? என்பது கூடத்தெரிவதில்லை.ஒன்று முறையான கொதிநிலையை கடப்பதற்கு முன்னரே அடுப்பை அணைத்து கடுப்பை ஏற்றுகிறார்கள் அல்லது பேஸ்புக்கில் லைக்ஸ் போடும் ஆர்வத்தில் தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்து அவதிப்படுகிறார்கள். இதற்கு வழியே கிடையாதா? இந்தத் தொல்லையில் இருந்து விமோசனமே கிடையாதா? என்று எண்ணுபவரா நீங்கள்! உங்களுக்காகவே இந்த பதிவு. ஏனென்றால் சீனு'ஸ் கிச்சனின் கடமை முறையாக வெந்நீர் போடுவது எப்படி? என்று கற்றுக்கொடுப்பதே. 



தேவையான பொருட்கள் 

அம்மா குடிநீர் - ஒரு புட்டி 

எரிவாயு அடுப்பு - உருளையில் எரிவாயு இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும்

ஒரு பெரிய பாத்திரம் - அண்டா அளவு வேண்டாம், குண்டா அளவு இருந்தால் போதும்

ஒரு பாதரசமானி - ஏன் என்று பின்பு சொல்கிறேன்

முக்கிய குறிப்புமேற்கூறிய பொருட்களில் ஒன்று குறைந்தாலும் வெந்நீர் தயாரிக்கும் முயற்சியை கைவிட்டுவிடுங்கள்.

எரிவிப்பானை எடுத்து அடுப்பைப் பற்ற வைக்கவும்***. குண்டாவை நன்றாக எரியும் அடுப்பின் மீது வைத்து நீரை மெல்ல ஊற்றவும், நீரை ஊற்றும் பொழுது நீர் அங்கும் இங்கும் சிதற வேண்டாம்****. தெளிந்த அந்த நீரை நன்றாக உற்று நோக்கிக் கொண்டே இருங்கள். சிறிது நேரத்தில் நீரினுள் இருந்து சின்னச் சின்ன நீர்க் குமிழிகள் வெளிவரத் தொடங்கும். அப்படியென்றால் நீர் மெல்ல சூடாகிக் கொண்டு உள்ளது என்று அர்த்தம். சிறிது நேரத்தில் நீர் 'ஆவி'யாகும், இதனை நீராவியாதல் என்று அறிவியல் குறிப்பிடுகிறது.

உங்களுக்குத் தெரியுமா? - அந்தக்காலத்தில் அவ்வளவு பெரிய ரயிலையே நீராவி கொண்டுதான் இயக்கியுள்ளார்கள். அதனால் நம்முடைய கிச்சன் வெறும் கிச்சன் மட்டுமல்ல மாபெரும் பரிசோதனைக்கூடம்.

நீராவி வரத் தொடங்கியதும் உங்களிடம் இருக்கும் பாதரசமாணியை எடுத்து கொதிக்கும் நீரினுள் வையுங்கள். கவனமாக செயல்படுங்கள், நீரின் கொதிநிலை குறித்து சிறுவயதில் உங்கள் அறிவியல் பாடத்தில் படித்திருப்பீர்கள், இப்போது மறந்திருக்கலாம். அதனால் நியாபகப்படுத்துகிறோம். நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம் இதுவே காரணம் வெந்நீர் போட முயலும் பலரும் தவறு செய்யும் இடம் இதுதான்

பாதரசமானியில் நூறு டிகிரி செல்சியசை காண்பிக்கும் வரை மிகக் நுட்பமாக கவனிக்க வேண்டும், மற்றொரு விஷயம், கொதிக்க வைத்த குடிநீர் ஒரு சிறந்த மருத்துவ நிவாரணி. இன்றைய காலகட்டத்தில் எல்லாவற்றிலும் நுண்ணுயிர்த் தொல்லை அதிகமாகிவிட்ட காரணத்தால், குடிநீரை 100டிகிரி செல்சியஸ் வரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டியது அவசியமாகிறது.உங்கள் தோள்களில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுங்கள், நீங்கள் தயாரித்துக் கொண்டிருப்பது ஒரு அருமருந்து.   

சரி தட்டியது போதும், தெர்மா மீட்டரில் கவனம் கொள்ளுங்கள், கொதிநிலை நூறைத் தாண்டி விடப்போகிறது. நூறைத் தொட்டதும் உடனடியாக அடுப்பை அணைத்துவிட்டு, அருகில் கரித்துணி எதுவும் இருந்தால் அதுகொண்டு மெல்ல இறக்கி வைக்கவும், வெந்நீர் எப்படி தயாராகியிருக்கிறது என்று பதம் பார்க்கும் ஆர்வம் உங்களுக்கு எழலாம்  இருந்தும் நீரின் சூடு உங்கள் நாக்கை பதம் பார்த்துவிடாது இருக்க சூடு தணியும் வரை பொறுமையாக இருங்கள். 

சுடு தண்ணீரில் வைத்த பாதரசமாணியை வெளியில் எடுங்கள் என்று கிளிபிள்ளைக்குச் சொல்லித்தருவது போல் சொல்லிதரவெல்லாம் முடியாது. புரிகிறதா?

ம்ம்ம் இப்போது சூடான சுவையான வெந்நீர் தயார். நீங்க சாதிச்சிட்டீங்க, எஸ் யு டிட் எ கிரேட் ஜாப்.  

"நீரின்றி அமையாது உலகு' என்பது அய்யன் வள்ளுவன் மொழி  
"வெந்நீரின்றி அமையாது உணவு' என்பது அடியேன் சீனுவின் புதுமொழி . 

***உருளை அடுப்பை பற்ற வைக்கும் பொழுது எரிவிப்பானை உபயோகம் செய்யுங்கள், மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, சாட்டை போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம். பொதுநலன் கருதி வெளியிடுவோர் சீனு'ஸ் கிச்சன். 

****குடிநீர் சிக்கனம் தேவை இக்கணம். சமூகநலன் கருதி வெளியிடுவோர் சீனு'ஸ் கிச்சன்.  

சீனு'ஸ் கிச்சனில் அடுத்து வருவது 

பார்டரில் தீவிரவாதி சப்பாத்தி கூட சுடத்தெரியாமல் கஷ்டபடுவதால் அவருக்காக சப்பாத்தி சுடுவது எப்படி? காத்திருங்கள்... விரைவில்... 

படித்து விட்டீர்களா... 

24 Dec 2013

நைட்ஷிப்ட் - விடுகதையா இந்த வாழ்க்கை !

"Hi this is srinivasan from legacy team, joining the bridge call"

'ஹேய்ய்ய்ய் ஸ்ரீஈஈஈஈஈஈநிவாசன் ஹௌ ஆர் யு', மிகபெரிய உற்சாக சிரிப்புடன் பேசத் தொடங்கும் அந்த அமெரிக்க அக்காவுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட பின்பே மற்ற விசயங்கள் குறித்து பேசத்தொடங்கவேண்டும். பொதுவாகவே அமெரிக்கர்களைப் பொருத்தவரையில், உயிர் போகும் விசயமாக இருந்தாலும் சரி அல்லது நம்மைக் கழுவி ஊத்தப் போகும் விசயமாக இருந்தாலும் சரி, பேசவந்த விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நம்மால் மிஞ்சவே முடியாது! 

நான் பேசிக் கொண்டிருப்பது 'பிரிட்ஜ் கால்' என்பதால் என்னை விளித்த அந்த அமெரிக்க அக்காவுடன் இன்னும் சிலரும் இருந்தனர்.  அலுவலகத்தைப் பொறுத்த வரையில் அணை உடைந்து வெள்ளம் வரப்போகிறது என்ற நிலையிலோ அல்லது வெள்ளம் தலைக்கு மேல் ஓடப்போகிறது என்ற நிலையிலோ அணையில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையை அடைப்பதற்காக சகல வல்லுனர்களும், சக வல்லுனர்களும், இன்னபிற பெரிய பெரிய தலைகளும் ஒன்று கூடி ஒரு கூட்டம் போடுவார்கள். இக்கூட்டமனாது ஒரு கான்பரன்ஸ் கால் மூலம் நடக்கும், அதாவது அமெரிக்காவில் இருந்து அவர்களும் இந்தியாவில் இருந்து நாமும் ஒருங்கிணைந்து ஓட்டையை அடைப்பது குறித்து தீர ஆலோசித்து முடிவெடுத்து அடைக்கவேண்டும். இந்த தொலைபேசி உரையாடலை பிரிட்ஜ் கால் என்பார்கள். 

அப்படிப்பட்ட ஒரு பிரிட்ஜ் காலில் உடையக் காத்திருக்கும் அணையை தடுத்து நிறுத்துவதற்கான ஆணையை என்னிடம் இருந்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது அந்த பிரிட்ஜ் கால், இடையிடையே அந்த அமெரிக்க அக்கா தன் அருகில் இருந்தவர்களுடன் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், அவள் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை. கவனிக்கவும் முடியாது காரணம் (i)அணையை அடைக்க வழி  தேட வேண்டும் (ii) அணையை அடைக்க நான் தேடிய வழியை அவர்களிடம் போன் வாயிலாக கூற வேண்டும், (iii) இதுவும் போதாது என்பதற்காக மின்னஞ்சலும் செய்ய வேண்டும். (iv) இவற்றிற்கு இடையில் அணையை அடைக்க வழியும் தேட வேண்டும்.  

நான் வசமாக சிக்கிக் கொண்டிருப்பதோ நைட் ஷிப்ட். துணைக்கு எனதருகில் நண்பர்கள் யாருமில்லாமல் தன்னந்தனியாக அணை  கட்டிக் கொண்டிருந்தேன். திடிரென்று அக்காவிடம் இருந்து மிரட்டலான தொனியில் கட்டளை ஒன்று வந்து சேர்ந்தது. புது உத்தரவு. 'இன்னும் பத்து நிமிடத்தில் அணையை சரி செய்தே ஆக வேண்டும், இல்லையென்றால் பெரிய பிரச்சனையாகிவிடும்'.  வேறு வழியில்லை. முடித்தே ஆக வேண்டிய கட்டாயம். பரபரப்பான நிமிடங்கள் தொடங்கியது. 

"ஹே ஸ்ரீநிவாசன் ப்ளீஸ் மேக் இட் பார்ஸ்ட், வீ டோன்ட் ஹவ் இனாப் டைம்"

அணையை அடைக்க வழி கண்டுபிடித்துவிட்ட ஆர்வத்தில், பரபரப்பின் உச்சத்தில், நானும் "யா யா, வி ஹவ் டன் வித் எவ்ரிதிங், ப்யு மினிட்ஸ், ப்ளீஸ் ஹோல்ட் பார் ப்யு மினிட்ஸ்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

"சீனு..சீனு"         

"வெயிட்..வெயிட்...கைண்ட்லி வெயிட்... ஜஸ்ட்... ப்யு மினிட்ஸ்"  

"சீனு..சீனு.. எந்தில, என்னத்த உளறிகிட்டு இருக்க...மணி ரெண்டாகுது, எந்திச்சி சாப்ட்டு தூங்கு...",  என் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அம்மா உலுக்கும் போதுதான் தெரியும் இவ்வளவு நேரம் நிஜம் போல் கண்டுகொண்டிருந்த அத்தனையும் கனா என்று. 

"போங்கம்மா, நல்ல தூக்கம் வருது, தூங்கும் போது எழுப்பாதீங்கன்னு நூறு தடவ சொன்னாலும் உங்களுக்கு புரியவே புரியாது" அம்மாவைத் திட்டிவிட்டு மீண்டும் தூங்கலாம் என்று கண்களை மூடினாலும், என்னுடைய மனம் முழுவதும், அந்த கனவின் நிஜத்திலேயே லயித்திருக்கும். இது போன்ற அலுவலகம் சார்ந்த கனவுகள் எப்போதாவது அபூர்வமாக வருமென்றாலும் நைட்ஷிப்ட் செல்லும்போது மட்டுமே அனுபவப்பூர்வமாக வந்துத்தொலைக்கும்.

நந்தாவின் நிலைமை இன்னும் மோசம். அவனுடைய ப்ராஜக்ட் இருக்கும் மூன்றாம் மாடியில் இருநூறுபேர் அமரக்கூடிய அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்களாம். அந்த வகையில் எனக்குப் பிரச்சனை இல்லை. பாவம் அவன்தான் ஆவிகளுடனும் மோகினிப் பிசாசுகளுடனும் அளவளாவிக் கொண்டிருக்க வேண்டும். ஷிப்ட் முடிந்து அறைக்கு வந்தால் அத்தனை பேரும் வேலைக்கு சென்றிருப்பார்கள். தனிமை மட்டுமே வாழ்க்கை.  "சத்தியமா சொல்றேன், அங்க இருந்தா பைத்தியம் புடிச்சிரும்டா" என்பவனை சமாதனப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சரியாக இரவு பத்து மணிக்கு அலுவலகத்தினுள் நுழையும் போது தாங்கள் செல்ல வேண்டிய பேருந்தைப் பிடிக்க ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டிருப்பார்கள். "ஏறி தூங்குனா போதும்" என்ற மனநிலையில்தான் அவர்களது ஓட்டமும், ஓட்டம் சார்ந்த நடையும் இருக்கும்.

அன்றொரு இரவும் அப்படியான ஒரு இரவுதான். அலுவலக வளாகத்தினுள் நடந்து கொண்டிருந்தேன். மார்கழிப்பனி இரவை நனைத்துக் கொண்டிருந்தது. (ஒருவேளை இன்னும் சில வருடங்களுக்குப் பின் வரப்போகும் வருங்கால சந்ததிகள் இப்பதிவைப் படிக்க நேர்ந்து, அந்நேரம் மார்கழி என்றால் என்னவென்றே தெரியாமல் குழம்பித் தவிக்கலாம், அவர்களுக்கும் இந்தப் பதிவு புரிய வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்தில்...) டிசம்பர் பனி இரவை நனைத்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் தென்பட்ட புல்வெளியினில் பனித்துளி தலைதூக்கி சிரித்துக் கொண்டிருக்க பலரது உடலையும் ஜெர்க்கின் குளிரில் இருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது. 

பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் என்னைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தவள், தன்னுடன் நடந்து கொண்டிருந்தவனிடம் "யப்பா சாமி, என்னாக் குளிரு, இன்னிக்கு நைட்ஷிப்ட் பாக்கப் போறவன் செத்தான், இல்லடா" என்று கூறிக்கொண்டே என்னைக் கடந்து கொண்டிருந்தாள். கடுப்பான நானோ ஒருநொடி நின்று அவளை நோக்கித் திரும்பிப்பார்த்தேன். ஜெர்க்கினை  உடலோடு இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு நிரம்பி வழிந்துகொண்டிருந்த பனியில் நனைந்து மறைந்தாள். அவள் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இருந்தும் அவள் எங்களைப் பார்த்து கூறிய சொற்கள் சாபமா? இல்லை பரிதாபத்தின் வெளிப்பாடா? யார் அறிவார்!     

குளிருக்கு சோம்பேறித்தனத்தை அதிகமாக்கும் வழக்கம் இயல்பாகவே உண்டென்பதால் கட்டுக்கடங்காமல் வரும் தூக்கத்தைப் புறந்தள்ள அதைவிட இயல்பான மனதைரியம் வேண்டும். என்னுடைய பணியைப் பொருத்தவரையில் வேலை இருந்துகொண்டே இருந்தால் பிரச்சனையே இல்லை, காரணம் தூக்கத்தைப் பற்றி  சிந்திக்க அவகாசம் இருக்காது, ஒருவேளை சிறிதளவு கூட வேலை இல்லாமல் ஆகி, ஏதேனும் வேலை வருமா வருமா என்று இலவு காத்த கிளிபோல் உட்கார்ந்து கொண்டே இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். தூங்கவும் முடியாது. தூங்காமல் இருக்கவும் முடியாது என்பதெல்லாம் என்ன மாதிரியான தண்டனையென்று புரியவில்லை.

சில சமயம் தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி 'உனக்கு வேலை வந்த்ருச்சி எழும்பு' என்று எழுப்பிவிடும் தருணம் அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அந்தோ பரிதாபம் !

"சீனு...இப்போ எந்திக்கப் போறியா இல்லியா? மணி மூன்றையாவுது, கொஞ்சமாவது சாப்ட்டு தூங்கு"

"ம்ம்ம்மா சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதீங்க, பசிச்சா நானே எந்திச்சு சாப்டுவேன், பேசாம போயிருங்க" என்றபடி போர்வையை இழுத்து மூடித் தூங்குபோது, தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றும், பசி லேசாக வயிற்றைக் கிள்ளினாலும் தூக்கம் கண்களில் அள்ளும். எனக்காவது பரவாயில்லை வீட்டில் இருக்கிறேன், சில நேரங்களில் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் சாப்பிட்டுவிடுவேன்,அறைகளில் தங்கிருப்பவர்களின்பாடு படுதிண்டாட்டம். இவர்களில் மதியஉணவைத் துறப்பவர்கள் அநேகம் பேர். சரவணாவிற்கு எல்லாம் இது தான் சாப்பாட்டு நேரம் என்ற வரைமுறை என்றோ மாற்றி எழுதப்பட்டுவிட்டது.    

அதிகாலை மூன்று மணிவரையிலும், பனியானது தாங்கிக்கொள்ளும் அளவில்இருந்தாலும் மூன்றைக் கடக்கும் போதுதான் தாக்கிக்கொல்லும் பனியாக மாறுகிறது. அலுவலகத்தினுள் ஏசியினால் ஏற்படும் குளிரை விட வெளியில் பரவிக்கிடக்கும் குளிர் வெகுவாக நடுங்கச் செய்கிறது. அதுவும் கிழக்குக் கடற்கரையின் மிகஅருகில் அலுவலகம் என்பதால் கடல் காற்று அநியாயத்திற்கு குளுமையாய் வீசுகிறது. 

இரவுப் இரவுப் ப(னி)ணியில் காவலிருக்கும் செக்யுரிட்டிகளின் நிலைமையோ படுமோசம். பெரும்பாலான செக்யுரிடிகள் ஸ்வெட்டர் அணிந்திருந்தாலும், பனிபொழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கள் காதுகளைச் சுற்றிலும் சட்டையைக் கட்டி அதன்மேல் துண்டு அல்லது சால்வையை இறுக்கக் கட்டிக்கொள்கிறார்கள். அவ்வபோது கூட்டமாய் கூடி சாயா குடித்து பனியை விரட்ட முற்படுகிறார்கள்

சில சமயங்களில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது பிடிக்காமல் காலாற நடந்து செல்வதும் உண்டு. ஒரு முழு இரவின் அழகியலின் அமைதியை மிக அருகமையில் சந்திக்கக்கூடிய தருணங்கள் அவை. ரம்மியமான இரவு, தூரத்தில் மின்னியபடி கதைபேசும் விண்மீன்கள், சுற்றிலும் பரந்து விரிந்த புல்வெளி முழுவதும் நிறைந்து கிடக்கும் மவுனம், அந்த மவுனத்தின் அடிநாதமாய் சில்வண்டுகளின் ரீங்காரம், வானில் மிதந்துகொண்டிருக்கும் சாம்பல் நிற மேகங்களுக்கு நடுவில் ஒளிந்து விளையாடும் முழு நிலவு. அவ்வளவு எளிதில் கிட்டாத, மனதை அலைபாய விடாத இந்தச் சூழலே ஒரு தவம். பெருந்தவம். இருந்தும் இது பிடிக்காமல் போவதன் காரணம் 

"சீனு...சீனு.. இப்ப எந்திக்கப் போறியா இல்ல தண்ணிய கோறி ஊத்தவா"

"ஏன் இப்போ கத்துறீங்க, மணி என்ன?"

"நீயே எந்திச்சி பாரு"

"சொல்லுங்கம்மா மணி என்ன "

"ஆறரை"

"என்னது ஆறறையா?" 

"ஆமா ஆறரை.. நீ எப்ப மத்யான சாப்பாடு சாப்ட்டு, எப்போ நைட்டு சாப்பாட சாப்டுவியோ, ஐயோ ஐயோ"

இந்த நிமிடம் இந்த நொடி என் மனம் சொல்லும் 

விடுகதையா இந்த வாழ்க்கை 
விடை தருவார் யாரோ? 



அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக் குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட் ஷிப்ட்.

9 Dec 2013

மார்கழிக்கால வானர நினைவுகள்

மார்கழிமாத மாதப்பிறப்பிற்கு முந்தைய தின இரவே பாட்டி எங்களிடம் கூறிவிடுவாள் "ஏல நாளைக்கு மார்கழி பொறக்கு, பஜனைக்கு போவனும், ஒழுங்கா எந்திச்சிரு". ஒருவேளை அடுத்தநாள் அதிகாலை எழுந்திருக்காமல் தூங்கிவிட்டால் அவ்வளவு தான், விடிகாலையிலேயே என்னருகில் வந்து உட்கார்ந்து கொள்வாள் என் பாட்டி. நான் எழுந்திருக்கும் வரை ஒருஅடி கூட நகரமாட்டாள். வெந்நீர் தயாராய் இருக்கும். காலைக்கடன்களை முடித்து குளித்து பள்ளிக்கூட டவுசரை போட்டுகொண்டு பாட்டியின் அருகில் சென்றால் போதும், வேஷ்டி கட்டி நாமம் போட்டுவிடும் வரை அத்தனையையும் கவனித்துக் கொள்வாள். பாட்டியைப் பொருத்தவரை இரண்டு வெள்ளைக் கோடுகளை இழுத்து, நடுவில் திருச்சனம் இட்டால் தான் நிம்மதி. "செவப்பு நாமம் மட்டும் போதும், பள்ளிகூடத்துல பசங்க கேலி பண்ணுவாங்க" என்றால் விடமாட்டாள். மூன்றையும் இழுத்து விடுவாள். ஆனால் என் அண்ணன் அவனுக்கு அவனே நாமம் போட்டு பழகிக் கொண்டதால் தப்பித்துக் கொள்வான்.   

அண்ணன், நான், தம்பி   

வருடத்தில் அந்த ஒரு மாதத்திற்கு மட்டுமே வேஷ்டி கட்டுவதால் முதன்முறை வேஷ்டிகட்டி நடப்பதற்கு கொஞ்சம் சிரமமாய் இருக்கும். புதிதாய்க் வேஷ்டியை கட்டிக் கொண்டு மார்கழிப் பனியில் தெருவில் இறங்கினால் ராஜா நகர்வலத்திற்கு கிளம்பியது போல மனதினுள் ஒரு புது உற்சாகம் பிறந்திருக்கும். தெருவின் இரண்டு பக்கமும், அம்மா, பெரியம்மா, எதிர்த்தவீட்டு பாட்டி, பக்கத்து வீட்டு அத்தை, இன்னொரு பக்கத்து வீட்டு அக்கா என அனைவரும் கோலம் போடுவதில் மும்மரமாய் இருப்பார்கள். 'பஜன கிளம்புரதுக்குள்ள ஒரு சின்ன கோலமாவது போட்றனும்க்கா" என்றபடி நூறு புள்ளிகளுக்கு மேல் வைத்து படம் வரைந்து பாகம் குறிக்கத் தொடங்கியிருப்பாள் பக்கத்துக்கு வீட்டு அக்கா. தெருவே கோலமயமாக இருக்கும். 

அவர்கள் போட்ட கோலத்தை மிதிக்காமல் அதேநேரத்தில் கட்டிய வேஷ்டியும் அவிழ்ந்து விடாமல் சாவடிக்கு சென்றுவிட்டால் அதுவே அன்றைய தினத்தின் அளப்பரிய சாதனை. சந்திராவின் வீட்டைக் கடக்கும் போது வாசலில் இருந்தே அவன் அம்மா அவனை கத்தத் தொடங்கிவிடுவார் "ஏல சீனுவப் பாரு சாவடிக்கு கிளம்பிட்டான், நீ இன்னும் குளிக்கவே இல்ல".

சாவடிக்குள் நுழைந்தால் எனது அத்தனை நண்பர்களும் எனக்கு முன்னரே சாவடிக்கு வந்து சேர்ந்திருப்பார்கள். இங்கே எனது நண்பர்கள் என்பவர்கள் எங்கள் தெருவின் அப்போதைய வாண்டுகள் என்று அர்த்தம், அனைவருமே பத்து வயதிற்குட்பட்டவர்கள்ஒவ்வொருவன் கையிலும் ஒரு சிங்கி இருக்கும். அதனை எடுப்பதற்காகவே அத்தனை அதிகாலையிலும் வேகமாய் வந்திருப்பார்கள் உற்ற தோழர்கள். 

அந்த அமைதியான அழகான மார்கழிக் காலையில் எங்கள் கையில் சிக்கிய சிங்கியானது குரங்கு கையில் சிக்கிய பூமாலையைப் போன்று அவஸ்த்தைப்படும்.  எப்படி தட்டினாலும் சத்தம் வரும் என்பதற்காக சும்மா 'நங் நங்' என்று தட்டிக் கொண்டே இருப்போம் எங்கள் முதுகில் யாராவது நங் என்று தட்டும் வரை

அதன்பின் பஜனைக்கு எவன் குளித்து விட்டுவந்தான் எவன் குளிக்காமல் வந்தான் என்பதற்கான கணக்கெடுப்பு நடக்கும். ஒருவன் குளித்துள்ளான இல்லையா என்பதை கண்டறிவதே சுவாரசியமான விஷயம். எப்படியும் எங்கள் கைகளில் கயிறு கட்டியிருப்போம், குறைந்தபட்சம் திருப்பதி கயிறு அல்லது எங்கள் தெரு மந்தமாரியம்மன் கோவில் கயிறு. அந்தக்கயிறு ஈரமாக இருந்தால் அவன் குளித்திருக்கிறான், இல்லை என்றால் இல்லை. எங்களுக்குள் விழித்திருக்கும் துப்பறியும் சாம்பு இப்படித்தான் வேலை செய்வான். தற்செயலாக ஒருவன் கயிறு கட்டவில்லை என்றால் அவன் குளிக்காதவனே. இந்த சோதனைக்குப் பயந்தே பலரும் குளித்துவிடுவார்கள், குறைந்தபட்சம் கயிருகட்டியிருக்கும் கையை நனைத்து விட்டாவது வருவார்கள்.      

தெருவில் இருக்கும் தாத்தாக்கள் அண்ணன்கள் பெரியவர்கள் இப்படி ஒவ்வொருவராக சாவடிக்கு வரத்தொடங்கும் போது பஜனை களை கட்டத்தொடங்கியிருக்கும்.  

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கிற்கு 
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால் 

என்று ஆண்டாளை வணங்கிவிட்டு தீபாராதணைக்குப் பின் அனைவரின் கையிலும் நன்றாக குழைத்த சந்தனைத்தை ஊற்றுவார்கள். இது  அடுத்த பிரச்சனை. அதிகாலையில் குளித்தது, மார்கழிமாத குளிர் என எல்லாம் ஒன்று சேர அவர்கள் கொடுத்த சந்தனத்தை உடம்பில் தடவினால் ஒரு கிலோ ஐஸ்கட்டியை தடவியது போல் ஜில்லென்று இருக்கும். அதுவல்ல பிரச்சனை. கையில் கிடைத்த சந்தனத்தை நமக்குத் தெரியாமல் நம் முதுகில் பூச ஒரு கூட்டமே காத்திருக்கும். அவர்களை எதிர்கொள்வது  அடுத்த சவால்.   

ஒருவழியாக இந்தப்பிரச்சனை முடிவுக்கு வந்தால் அடுத்த பிரச்சனை பழம், துளசி வைக்கபட்டிருக்கும் தட்டை 'யார் தூக்குவது?' என்ற வடிவத்தில் வரும். தட்டை தூக்குவது அல்ல பிரச்சனை, தட்டில் வைக்கபட்டிருக்கும் வாழைப்பழம்தான் பிரச்சனை, கயிலாயம் தொடங்கி கவுண்டமணி செந்தில் வரை பழம் தானே பிரச்சனை. அந்த தட்டில் இரண்டு வாழைப்பழம் இருக்கும், அதில் ஒன்றை பஜனை முடியும் பொழுது தட்டைத் தூக்கியவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது தார்மீக கோட்பாடு, அப்படித்தான் நடக்கும். அது பிரச்சனை இல்லை. அந்த தட்டில் இருக்கும் மற்றொரு பழம் யார் யாருக்கு என்பது தான் பிரச்சனையே. பெரும்பாலும் அந்தப் பழத்தை பங்கு போட்டு சாப்பிட வேண்டும் என்பது மேலிடத்து உத்தரவு, அப்படி பங்கு போட்டுக்கொள்ள நடக்கும் சண்டையானது வாய்க்கா வரப்பு சண்டையை விட அதிதீவிரமானதாக இருக்கும்

இறுதியில் பலம் இருப்பவனிடம் பழம் இருக்கும் அல்லது பழம் இருப்பவனிடம் பலம் இருக்கும். தட்டைத் தூக்குபவனுக்கு கண்டிப்பாக ஒரு பழம் உறுதி என்பதால் தட்டைத் தூக்குவதற்க்கும் எங்களுக்குள் கடும்போட்டி நிலவும். ஒருவழியாக சாவடி பிரச்சனைகள் முடிந்து தெருவில்  காலடி எடுத்து வைத்தால்     

கதிரவன் குணதிசை சிகரவந்தணைந்தான் 
கன இருள் அகன்றது காலையம் பொழுதாய்    

பாடல் வரிகள் தெரிந்தவர்கள் பாடத் தொடங்கிவிடுவார்கள். நமக்கோ ஒன்றும் தெரியாது, அதற்காக மனதை தளர விடக்கூடாது, திடிரென்று சில வரிகளில் ஆஆஆஆ என்று ராகம் இழுப்பார்கள், அது எந்த எந்த வரிகள் என்று எங்களுக்கு மனப்பாடமாய்த் தெரியும் அப்போது மட்டும் எங்கள் 'ஆஆஆஆ' விண்ணைப் பிளக்கும். 

அடிமேல் அடிவைத்து மெதுவாக நடப்பதால் எந்த ஒரு கட்டத்திலும் வேஷ்டி அவிழ்ந்து விடாது, ஆனால் அப்படிச் செல்வதில் சுவாரசியம் இல்லையே. வேண்டுமென்றே ஒருவனுக்கு தெரியாமல் அவனுடைய வேஷ்டியை அவிழ்த்து விடுவோம். அதன்பின் அவன் கதி பஜனை முடியும் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கும் தன்னுடைய வேஷ்டியை ஒருமாதிரி சுருட்டிப் பிடித்துக் கொண்டே நடக்க வேண்டும். பார்பதற்கு கொஞ்சம் பாவமாய் இருக்கும். இதை விட பெரிய பிரச்சனையை அவன் பிரசாதம் வாங்கும் பொழுது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கோவிலில் சுட சுட சக்கரைப் பொங்கல் வாங்கும் போது நெய்வடிய சூடாகக் கிடைக்கும் அந்த பொங்கலையும் சாப்பிட வேண்டும். வேஷ்டியையும் தவற விடக்கூடாது. வேஷ்டி அவிழ்ந்தவன்பாடு படுதிண்டாட்டம் தான். அதன்பின் யாராவது வேஷ்டியை கட்டிவிட்டாலும் அது அவன் இடுப்பில் நிற்கவே நிற்காது. நாரதர் தம்புராவைப் பிடித்திருப்பது போல ஒரு கையில் வேஷ்டியைப் பிடித்துக் கொண்டே நடக்க வேண்டியதுதான்.

பிரசாதம் கொடுக்கும் இடத்தில் கைகழுவ தண்ணீர் இல்லையென்றால் 'அப்புறம் தம்பி வீட்டுபாடம்லா எழுதிடிய்யா' என்றபடி பேசிக்கொண்டே எவன் வேஷ்டியையாவது நாசம் செய்யவேண்டியது கையை துடைப்பதற்கான சூட்ச்சுமவித்தை. 

எங்கெல்லாம் மணல் மேடு கண்ணில் தென்படுகிறதோ அதன் மீதெல்லாம் ஏறி விளையாடத் தொடங்கிவிடுவோம். எங்கள் தொந்தரவு தாளாமல் எங்களை பஜனைக்கு வரக்கூடாது என்று கூறியவர்களும் உண்டு. பொங்கல் அன்று பஜனை இன்னும் களைகட்டும். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் செல்லும். 

இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட வருடம் 1995 ஆக இருக்கலாம், முடிந்தால் என்னைக் கண்டுபிடியுங்கள். இப்படத்தில் இருக்கும் பலரையும் காலம் அழைத்துக் கொண்டது.    

எத்தனை முயன்றாலும் இனி அக்குழந்தைப் பருவத்திற்கு நிச்சயம் செல்லவே முடியாது. இன்று எங்கள் தெருவில் என்னதான் எங்களுக்கு அடுத்ததடுத்த சிறுவர்கள் பஜனைக்கு வந்து சேட்டை செய்ய ஆரம்பித்துவிட்டாலும். எங்கள் காலம் பொற்காலம். என்னவொன்று எங்கள் வயதில் பெரியவர்கள் அதட்டினால் நாங்கள் கேட்டுக்கொள்வோம், இப்போதோ கேட்டுக் கொல்கிறார்கள்.

"பாவம் ஸ்ரீ அண்ணா, தனியா அந்த வானரக் கூட்டத்த எப்படி சமாளிக்கப் போறாரோ!"     

இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் தெருவில் மார்கழி மாத பஜனை துவங்க இருக்கிறது. பஜனைக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் எழுந்த நியாபகங்களே இவை. கொஞ்சம் சீரியசான பதிவாகத்தான் எழுத வேண்டும் என்று நினைத்து, சிறுவயது மார்கழிமாத நியாபகம் வந்துவிட்டதால், பதிவின் பாதை வேறுமாதிரியாக பயணித்துவிட்டது. இருந்தும் அந்த பதிவும் உண்டு :-)        

3 Dec 2013

கே.ஆர்.பி செந்திலின் பணம் - புத்தக விமர்சனம்


சில சமயங்களில் ஒரு சில புத்தகங்கள் நம்மோடு பேசுவது போல் தோன்றும். அன்றும் அப்படியொரு புத்தகம் என்னோடு பேசுவது போல் தோன்றியது. வாங்கிவிட்டேன். அது  கே.ஆர்.பி செந்திலின் 'பணம்'.

பதிவுலகம் பரிட்சியமாகியிருந்த புதிது. அண்ணன் மெட்ராஸிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது "சீனு கே.ஆர்.பி மலேசியால இருந்து வந்திருக்காரு, சாய்ங்காலம் நடேசன் பார்க்ல ஒரு சின்ன சந்திப்பு வரமுடியுமா",என்றார்.  எனக்கோ கே.ஆர்.பி என்றால் யார் என்றே தெரியாது இருந்தும் அழைத்தது சிவா என்பதால் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் கிளம்பிவிட்டேன். கே.ஆர்.பி, சிவா, பட்டிக்காட்டான், மதுமதி, மோகன்குமார் உட்பட பத்துக்கும் மேல் வந்திருந்தார்கள், அனைவருமே பதிவர்கள். யாரையும் எனக்கும், என்னை யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. அழைத்த பாவத்திற்கு சிவா  மட்டும் என்னை தனித்து விடாமல் பார்த்துக் கொண்டார். 

கே.ஆர்.பி, அவரைச் சுற்றி ஒரு வட்டம் அமர்ந்திருந்தது.பேச ஆரம்பித்தார். பேசினாஆஆஆஆஆஆஆர், மற்றவர்களும் பேசினார்கள், வெகுநேரம் கழிந்திருந்தது. கே.ஆர்.பியின் பேச்சை கவனிக்க ஆரம்பித்த யாருக்கும் அங்கிருந்து நகர மனம் வரவில்லை. ஆனால் எனக்கோ வேறொரு இடத்திற்கு செல்ல வேண்டி இருக்கவே சிவாவிடம் கூறிவிட்டு மெல்ல எழுந்தேன். 

"எவனோ புதுப்பய நம்ம கூட்டத்துக்கு வந்த்ருக்கான்" என்ற ஞானோதயம் கே.ஆர்.பிக்கு வந்திருக்க வேண்டும். என்னைப்பார்த்து, 

"தம்பி நீங்க" என்று இழுத்தார் கே.ஆர்.பி. சிவாவுக்கு ஆடு கிடைத்துவிட்டது, வெட்ட வேண்டாமா "அப்போ இவ்ளோ நேரம் நீங்க சீனுவ கவனிக்கல, அதெப்படி நீங்க ஒரு புது பதிவர கவனிக்காம இருக்கலாம். புதிய பதிவரை மதிக்காத கே.ஆர்.பின்னு பதிவு போடுங்க சீனு" என்று கொந்தளிக்க, ஆள வுடுங்க சாமி என்று நான் எஸ் ஆனாலும் அடுத்த நாள் "புதிய பதிவரை மதிக்காத கே.ஆர்.பி" என்று பதிவு எழுத நான் மறக்கவில்லை. 


அடுத்தமுறை கே.ஆர்.பியை வாரண்ட் என்னும் குறும்பட திரையிடல் நிகழ்வில் சந்தித்தேன். மறந்திருப்பார் என்று நினைத்த நேரத்தில் அவராகவே அடையாளம் கண்டுகொண்டு பேசினார். ஈகோ பார்க்காத மனிதர். நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தார். பேச்சு முழுமையுமே அவருடைய சிங்கப்பூர் மலேசிய அனுபவங்கள் குறித்தே இருந்தது. அதன்பின் பலமுறை சந்தித்திருந்தும் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது அவர் "பணம்" என்னுமொரு புத்தகம் எழுதியுள்ளார் என்பது குறித்து.  

டிஸ்கவரி புக் பேலஸில் தற்செயலாய் ஒரு புத்தகம் கண்ணில்பட்டது. அப்புத்தகம் என் கண்ணில் படக் மிக முக்கியகாரணம் அதன் அட்டைப் படம்.



முக்கால் நிர்வாணமாக்கி குனிய வைத்த நிலையில் ஒருவன் தனது புட்டத்தில் அடிவாங்குவது போன்ற படம். ஆசிரியர் கே.ஆர்.பி. செந்தில் என்று எழுதியிருந்தது, அட கே.ஆர்.பி புத்தகமெல்லாம் எழுதியுள்ளாரா என்று மனதில் நினைத்துக் கொண்டாலும் வாங்க வேண்டும் என்று தோன்றவில்லை. 'பணம்' என்ற தலைப்பு நிச்சயமாய் சுயமுன்னேற்றம் அல்லது பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது போன்ற வகையறாவாகத் தான் இருக்கும் என்ற அவதானிப்பே வாங்கத் தயங்கியதன் காரணம். இது நடந்து பல மாதங்கள் இருக்கும். 

கடந்த வாரம் டிஸ்கவரி சென்றிருந்த போது பதிவர்கள் எழுதிய அத்தனை புத்தகங்களையும் ஒரு இடத்தில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார் வேடியப்பன். எந்தெந்த பதிவர்கள் என்னென்ன புத்தகம் எழுதியிருக்கிறார்கள் என்று அலசியபோது மீண்டும் கண்ணில் தென்பட்டது கே.ஆர்.பியின் "பணம்".

சில சமயங்களில் ஒரு சில புத்தகங்கள் நம்மோடு பேசுவது போல் தோன்றும். அன்றும் அப்படியொரு புத்தகம் என்னோடு பேசுவது போல் தோன்றியது. வாங்கிவிட்டேன்.

'பணம்' புத்தக விமர்சனம் 

ஒரு புத்தகத்தை கையில் எடுத்ததும் அதனைப் படித்து முடிக்கும் வரை அப்புத்தகத்தின் ஆசிரியர் குறிப்பு, என்னுரை, முன்னுரை மற்றும் இன்னபிற உரைகளையெல்லாம் வாசிக்கும் பழக்கம் எனக்குக் கிடையாது, பழக்கம் என்று சொல்வதைவிட பொறுமை கிடையாது. ஒருவேளை இப்புத்தகத்தின் என்னுரையை வாசிக்காமல் நேரடியாக மெயின் மேட்டரை வாசிக்கத் துவங்கி இருந்தேன் என்றால் ஒன்று எனக்கு கே.ஆர்.பி மீது உச்சபட்ச பரிதாபம் பிறந்திருக்கும் அல்லது பைத்தியம் பிடித்திருக்கும். நல்லவேளையாக முன்னுரையை வாசித்திருந்தேன். 

உள்நாட்டில் பணம் பண்ணத் தெரியாதவர்கள், வெளிநாடு, தங்கள் பிரச்சனைகளைத் தீர்த்துவிடும் என்று நம்பி அயல்தேசம் சென்று தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்த கதையை தனக்குக் ஏற்பட்ட அனுபவங்கள் மூலமும் கிடைத்த குறிப்புகள் மூலமும் எழுதியிருக்கிறார் கே.ஆர்.பி. அதுவும் சுவாரசியமாக.

இப்புத்தகம் ஒரு புதினமோ அல்லது புனைவோ இல்லை. அதற்காக கட்டுரைத் தொகுப்பு என்றும் கூறிவிட முடியாது. கே.ஆர்.பி தன்னை ஒரு கதைசொல்லியாக மாற்றிக்கொண்டு மற்றவர்களின் அனுபவங்களை தன்னுள் உள்வாங்கி சொந்த அனுபவம் போல அனைத்தையும் விவரிக்கிறார். அதாவது இப்புத்தகத்தில் நம்மோடு பயணிப்பவர்கள் கே.ஆர்.பி. வழியாக, கே.ஆர்.பியாகவே வெளிப்படுகிறார்கள். முன்னுரையில் அவர் நம்மிடம் கூற விரும்பியதும் இதைத்தான்.     

வெறும் டூரிட் விசா மட்டுமே வைத்துக் கொண்டு அயல்தேசங்களில் வேலைக்குச் செல்லும் பிறநாட்டவர்கள், அங்கே அவர்கள் படும் கஷ்டங்கள். அயல்தேசம் நம்மை எப்படி நடத்துக்கிறது, நாம் எப்படி நடந்து கொள்கிறோம். அயல்தேசத்தில் வாழும் நம் நாட்டவர்கள் நம்மை நடத்துகிறார்கள், குடும்ப சூழ்நிலை அவை தரும் நெருக்கடி, வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் ஏஜெண்டுகள் மூலம் மாற்றபடுவதால் ஏற்படும் மனஉளைச்சல், கூடவே இருந்து குழிபறிக்கும் நண்பர்கள், அயல்தேசத்து மது மாது மூலம் சம்ம்பாதித்தை இழந்து சீரழியும் ஆண்கள், பணிப்பெண் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், உள்நாட்டில் மனைவிகள் படும் கஷ்டங்கள், கள்ளக்காதல்கள், இவை ஒட்டுமொத்தமும் ஒருகட்டத்தில் பெரிய நெருக்கடியைத் தர அவை மூலம் ஏற்படும் தற்கொலைகள், கொலைகள். அதிர்ஷ்டவசமாக தப்பிப்பிழைத்து ஆகாஓகோ என்று வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள். இவர்கள் தான் இப்புத்தகம் முழுவதும் விரவிக் கிடக்கிறார்கள். 

பலவருட மலேசிய சிங்கப்பூர் அனுபவம் கே.ஆர்.பியிடம் இருப்பதால், அவர் கூறிச்செல்லும் கதையுடன் நம்மால் இயல்பாக ஒன்ற முடிகிறது. மேலும் பெரும்பான்மையான சம்பவங்கள் மற்றும் குறிப்புகள் மலேசியா சிங்கப்பூர் சுற்றியே நிகழ்கிறது. வெளிநாடுகளில் சீன முதலாளிகள் நேர்மானையவர்கள், இந்திய முதாலாளிகள் நம்மை ஏமாற்றிப் பிழைப்பவர்கள் என்பதை நம்பவே கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. 

வொர்க் பெர்மிட் விசா இல்லாததால் எந்நேரமும் போலிசுக்குப் பயந்து கொத்தடிமைகளாக வாழும் அவலம், நாம் அழைத்து வந்த நண்பனே நம்மை போலீசில் காட்டிக் கொடுக்கும் கொடுரம், கூடவே நன்றாக பழகிய நண்பன் வெளிநாட்டு மோகத்தை நம்மில் விதைத்து கையில் இருக்கும் பணத்தை எல்லாம் பிடுங்கி ஏமாற்றும் நம்பிக்கைத் துரோகம் என்று மோசமான நண்பர்களைப் பற்றி குறிப்பிடும் அதே நேரத்தில் வெளிநாட்டில் மாட்டிக் கஷ்டப்படும் பொழுது உதவும் முகம் தெரியா நண்பர்கள், ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் நண்பர்கள் என்று இந்த சமுதாயத்தில் மிகக் குறைவாக தென்படும் நல்லவர்களைப் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை.

எவ்வளவு சம்பாதித்தாலும் அங்கு ஏற்படும் செலவுகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் சொற்பசேமிப்பே எஞ்சி நிற்கும். இதை சம்பாதிக்கவா, விசா இல்லாமல், போலீசுக்குப் பயந்து, கொத்தடிமைகள் போல இங்கு வாழ வேண்டும். வெளிநாடு வருவதற்கு செலவழித்த சில பல இலட்சங்களை முதலீடாக்கியிருந்தால் இங்கு கிடைக்கும் வருமானத்தை உள்நாட்டிலேயே சம்பாதித்து இருக்கலாம், மானமிழந்து அசிங்கப்பட்டு வாழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்பதை அழுத்தமாக சொல்கிறார்கள். பணிபெண்ணாக வெளிநாடு செல்ல முயற்சிக்கும் பெண்களை தயவு செய்து செல்ல வேண்டாம் என்றும் அதற்கான காரணங்களையும் பட்டியல் இடுகிறார்.           

"இந்தியாவில் நான் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை சம்பாதிக்கும் அளவுகடந்த ஆசையில் நான் பட்ட துன்பங்களின்  மட்டுமே உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இனி என் வாழ்நாளில் அத்தைகைய பிரச்சனை வந்தாலும் ஒரு சட்டவிரோதக் குடியேறியாக மட்டும் எந்த நாட்டிற்கும் போக மாட்டேன்"    

மலேசிய சிங்கப்பூர் தவிர்த்து அமெரிக்கா லண்டன் பிரான்ஸ் மொரிசியஸ் அரபுநாடுகள் குறித்தும் எழுதியுள்ளார். மேலும் சட்ட விரோத குடியேறிகளை தடுக்க அணைத்து அரசாங்கங்களும் பலவித கடுமையான சட்டதிட்டங்கள் வகுத்துவிட்டதால் முன்பிருந்த அவலம் தற்போது வெகுவாய்க் குறைந்துவிட்டது என்றும் கூறுகிறார்.   

இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ்நாட்டைக் கூட தாண்டியிராத எனக்கு இப்புத்தகம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. சிறுவயதில் என்னுடைய இஸ்லாம் நண்பர்கள் யாரைக் கேட்டாலும் அவர்களுடைய தந்தை வெளிநாட்டில் பணிபுரிவதாகக் கூறுவார்கள். இப்புத்தகம் படிக்கும் போது அவர்கள் தான் என் கண்முன் வந்து நின்றார்கள். வெளிநாடு சென்று சம்பாதிப்பவர்கள் படும் கஷ்டங்களை வெகு இயல்பாக நம்முள் கடத்தியிருக்கிறார் கே.ஆர்.பி.      

நீங்கள் புத்தகப் பிரியராக இருந்தாலோ அல்லது வெளிநாடு செல்லும் ஆசை உடையவராக இருந்தாலோ குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இது நீங்கள் தவறவிடக் கூடாத புத்தகம்.

ஆன்சைட் என்ற வெளிநாட்டு வேலைக்கு செல்ல நினைப்பவர்களுக்கான புத்தகமல்ல இது. படித்து முடித்து உள்நாட்டில் வேலை இல்லாமல் கஷ்டப்படும், வெளிநாட்டில் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் ராஜாவாகி விடுவேன் என்ற நினைப்பில் வெளிநாடு செல்ல நினைக்கும் அத்தனை பேருக்காகவும் எழுதப்பட்ட புத்தகம். வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படியுங்கள்.      

மறுபதிப்பின் போது வெகுசிலடங்களில் இருக்கும் வாக்கியப்பிழைகளை திருத்தினால் நன்றாக இருக்கும். கே.ஆர்.பி.         


டிஸ்கவரியில் ஆன்லைன் மூலம் வாங்க