நியாய்ய்ய்ய்யம்ம்ம்மாரே.......
படத்தில் எப்போது ட்விஸ்ட் வரப்போகிறது என்று எதிர்பார்க்க வைக்கும் இயக்குனர் அல்ல இவர், எப்போது அழுகை ஆரம்பிக்கப் போகிறது, எப்போது சோகம் தியேட்டரைக் கவ்வி நம்மையும் கவ்வப் போகிறது என்று எதிர்பார்க்க வைக்கக் கூடிய இயக்குனர்.
நீ அழகாய் இருக்கிறாயா பரவாயில்லை, உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கமாக்கிக் கொண்டு வா,காரணம் நீ யாராய் எப்படியாய் எதுவாய் இருந்தாலும் பரவாயில்லை, என் படத்தில் நீ கதையாய் மட்டுமே இருக்கப் போகிறாய், என்று கதை பண்ணக் கூடிய இயக்குனர்.
உயரப் பறக்கும் ஆடி கார், பரபரக்கும் திரைக்கதை எதுவும் வேண்டாம், படம் முழுவதும் கவர்ச்சி நடிகை வேண்டவே வேண்டாம். கூன் விழுந்த விளிம்பு நிலை கிழவி இருக்கிறாள் அவள் போதும் எனக்கு என்று இயல்பை, இயல்பை மீறி காட்ட கூடிய இயக்குனர்.
இன்னும் இன்னும் இவரைப் பற்றி சொல்லிக் கொண்டே செல்லலாம். இதனால் தானோ என்னவோ பரதேசி பார்க்கும் எண்ணம் துளி கூட இல்லாத என்னை பாலா என்னும் பிம்பம் ஈர்த்துவிட்டது. நிச்சயமாக தெரியும் அழ வைத்து தான் அனுப்புவார் என்று, ஆனாலும் அழ வைப்பது பாலா என்பதால் வேறு வழியில்லையே அழுது தானே ஆக வேண்டும்.
மேடவாக்கம் குமரன் தியேட்டர், பரதேசி கதைக் களம் நடக்கும் ஆண்டான 1939ம் ஆண்டைச் சேர்ந்த தியேட்டர் போல் இருந்ததால் எளிதில் கதைக்களத்துடன் ஒன்ற முடிந்தது. தென்காசியில் பரதன் என்று ஒரு தியேட்டர் உண்டு, அங்கு அமர்ந்து படம் பார்ப்பது போலவே ஒரு உணர்வு. "ஏ ச்சாமியோ, ச்சீக்கிரம் உள்ள வுடு ச்சாமியோ", அடேயப்பா இவர்களை எல்லாம் பார்த்து எவ்வளவு நாளாயிற்று.
1939ம் வருடம் தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் குடியிருக்கும் குடியிருப்புகளில் இருந்து கதை பயணிக்கத் துவங்குகிறது. மிக அமைதியான முதல் பாதி திரைக்கதை, கதை திருநெல்வேலி மாவட்டத்தில் தொடங்குவதால் பேச்சு வழக்கில் நெல்லை மனம்.
அதர்வாவை நடிக்க வைத்துவிட்டார் பாலா, என்ன சொன்னாலும் கேட்பதற்கும், செய்வதற்கும், அடித்தால் அடி வாங்குவதற்கும் உங்கள் தெருவில் ஒரு ஜீவன் சுற்றித் திரியுமே அந்தக் கதாப்பாத்திரம் தான் அதர்வாவிற்கு. "ராஜாவுக்கு பணியாரம், ராஜாவுக்கு பாலு" என்று அவர் கூறும் போதெல்லாம் நம்முள்ளும் அந்த ஏக்கம் அப்படியே இறங்குகிறது. இதுபோன்ற ஆரம்பக் காட்சிகளில் இருந்தே கவனம் ஈர்க்க வைக்கிறார் பாலா.
பஞ்சம் பிழைப்பதற்காகவும், வாழ்கையில் மிகப் பெரிய மாற்றம் வரப்போகிறது என்றும் தேயிலைத் தோட்டத்திற்கு கிளம்புகிறது அந்த அப்பாவி கிராமம். இவர்களை பணத்தாசை காட்டி மயக்கும் பொழுது ஒரு கிழவி வெள்ளந்தியாய்க் கூறுவாள் " சாமி நல்ல சிரிக்க சிரிக்க பேசுதாவள". அவளைப் போலவே மொத்த கூட்டமும் வெள்ளந்தியாய் இருந்து தொலைத்தது யார் செய்த பாவமோ?
48 நாட்கள் நடை பயணத்திற்கு பின் தேயிலைத் தோட்டத்தை அடைகிறார்கள். அங்கு அவர்கள் பட்ட கஷ்டங்களும் வேதனைகளுமே மீதிக் கதை. அடிமைகளை விட மோசமாக நடத்துவதும், ஆங்கிலேயனிடம் கூனிக் குறுகி நிற்பதும், ஆங்கிலேயனின் காமப் பசிக்கு, அவன் கண்ணில் கண்ட பெண்கள் எல்லாம் இரையாவதும் என்று படம் முழுவதும் அழுத்தமான திரைக் கதையுடனேயே பயணிக்கிறது.
"அவரு நேத்து என் மடியில தான் படுத்து கிடந்தாவ, டார்லிங் நாளைக்கும் வரேன் டார்லிங்ன்னு வேற சொல்லிருக்காரே" ஆங்கிலேயன் காமபசிக்கு விரும்பி தங்களை தாரைவார்த்த பெண்களும் அக்காலந் தொட்டே இருந்துள்ளார்கள்.
வசனம் நாஞ்சில் நாடன், பல இடங்களில் அவரது வசனம் அருமையாக உள்ளது, சில இடங்களில் சிறிது கவிச்சியாக இருந்தாலும் கிராமத்து நையாண்டி பாசையில் ரசிக்கும்படி உள்ளது. கலை இயக்குனரின் உழைப்பு காட்சிக்கு காட்சி உயிர் தருகிறது. திரைக்கதை முழுவதும் பழுப்பு நிறத்துடனேயே பயணிக்கிறது. இது போன்ற படங்களுக்கு இசை தான் உயிர், சில இடங்களில் இசை மட்டும் தனித்து நின்று நம்மை உருக வைத்து விடுகிறது.பாடல்கள் அனைத்தும் தனித்தனியாக கேட்டால் பிடிக்குமா என்று தெரியவில்லை ஆனால் படத்துடன் பார்க்கும் பொழுது நம்மை ஒன்ற வைத்து விடுகிறது. காதல் பாடலைத் தவிர ,மற்றவையெல்லாம் கதையுடன் நகரும் பாடல்களே. அதிலும் கிளைமாக்ஸ் பாடல் நம்மை நிச்சயம் அழ வைத்துவிடும். மிகவும் கனத்த குரல், அதனால் தானோ என்னவோ அந்தப் பாடலில் அத்தனை ஜீவன் இருக்கிறது.
"கோட்டான கோடி நன்றிகள் ஆண்டவரே கோட்டான கோடி நன்றிகள்" என்று யாருமே எதிர்பாராத நேரத்தில் இவர் படத்திலா இப்படி ஒரு வசனம் என்று ஆச்சரியப் பட வைத்தவர் பாலா. இந்தப் படத்தில் அதை இன்னும் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். தேயிலைத் தோட்டம் முழுவதும் விஷக்காய்ச்சல் பரவ அதனுடன் சேர்ந்து கிறிஸ்துவமும் எப்படி பரவியது என்பதையும், எப்படியெல்லாம் மதமாற்றம் செய்தனர் என்பதையும் பாலாவை விட அழுத்தமாகவும், இதற்கு மேல் காமெடியாகவும் யாராலும் இனி படமெடுத்து விட முடியாது.
மக்கள் கொத்து கொத்தாக செத்து மடியும் பொழுது, இவர்களை குணப்படுத்த வரும் மருத்துவரும், அவரது மனைவியும் சேர்ந்து மதமாற்றம் செய்யத் தொடங்குவார்கள், அப்போது வரும் காமெடியான இசையும், அதைத் தொடரும் காமெடியான அல்லேலுயா பாடலும் இந்த சமுதாயத்திற்கு அழுத்தமான ஒரு விஷயத்தை சொல்லிச் செல்ல தவறவில்லை. எதிர்ப்புகள் வரலாம். இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும். மேலும் தியேட்டரில் இந்தப் பாடலுக்கு பெரிய வரவேற்பு இருந்தது என்பது உண்மை.
படம் முழுவதுமே ஒருவித சோகத்துடன் பயணிப்பது போன்ற உணர்வு, அதனால் திரைக்கதை என்னவோ மெதுவாகவே நகர்கிறது. கேமராமேனுக்கு இப்படத்தில் பெரிய உழைப்பு ஒன்றும் இல்லை. இருந்தும் பாலா காட்ட சொன்னதை தத்ரூபமாக காட்டவும் அவர் தவறவில்லை
படத்தில் எத்தனை அழுத்தமான காட்சிகள் இருந்தாலும் அத்தனையையும் ஒரு நொடியில் தூக்கி சாப்பிட்டுவிட்டது கிளைமாக்ஸ் காட்சி. படத்தின் பின் பாதியில் ஒரு காட்சியை நிச்சயம் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் நான் எதிர்பார்த்த அந்த காட்சியே கிளைமாக்ஸாக இருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்திற்கு அதை விட வேறு ஒரு சிறந்த கிளைமாக்ஸும் இருக்க முடியாது என்பது தான் நிஜம்.
அப்படி ஒரு கிளைமாக்ஸ் முடிந்து வெளியே வந்த பொழுது பலரும் "த்தா மனுசனே இல்லடா இந்த ஆளு", "வீட்ல இருந்திருந்தா நிம்மதியா தூங்கிருப்பன் டா", " ஏன் மச்சி என்ன இப்டி ஒரு படம் பாக்க வச்ச".... இன்னும் இன்னும் எழுத முடியாதா பல கெட்ட வார்த்தை வசனங்களும் இதில் அடங்கும். பாலா விரும்பியதும் இது போல் ஒரு வரவேற்பை தான். காரணம் படம் பார்த்த மக்களின் கோவம் நிச்சயம் பாலா மேல் இல்லை. பாலா ஒரு ஊடகம், அவர் இயக்கியது நிஜத்தை, அதனால் மக்களின் கோவமும் நிஜம் மீது தான்.
இப்படி ஒரு படத்தை பாலா தவிர வேறுயார் இயக்கியிருந்தாலும் அட்டர் பிளப் தான். இவ்வளவு அழுத்தமான கதையை அதன் அழுத்தம் கடைசி வரை மாறாமல் நகர்த்தி செல்ல பாலாவால் மட்டும் தான் முடியும். மிகவும் கோரமான கிளைமாக்ஸ் ஆனால்....... இவன் தான் பாலா இப்படிதான் படமெடுப்பான் என்று மீண்டும் முறை இயக்கிக் காண்பித்து விட்டார்.
பரதேசி கிளைமாக்ஸ் பார்த்ததும் எனக்கு தோன்றிய ஒரு வரி, "தன்னுடைய இயக்குனர் பாதையில் பாலா இயக்கிய மிக மிக டீசண்டான படம் பரதேசி".
Tweet |
அருமையான விமர்சனம்..
ReplyDeleteஇன்னும் என்னால் உறங்க முடியவில்லை அந்த படம் பார்த்தபிறகு.
கிளைமாக்ஸ் காட்சியில் பாலா நெஞ்சில் இடியயே இறக்கியிருப்பார்..
கீழே எனது விமர்சனம் உள்ளது,
பார்த்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லவும்.
http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html
nalla vimarsanam sir..
ReplyDeleteஉங்கள் பாணியில் விமர்சனம் அருமை...
ReplyDeleteபடத்திற்கு முன் வந்த காணொளியைப் பார்த்து, துள்ளிக் குதித்தவர்களுக்கு... (நீங்கள் சொன்னது போல்) கிளைமாக்ஸ் முடிந்து வெளியே வந்த பொழுது பலரும் சொன்னதை விட அதிகம் இருக்கலாம்... பாவம்...
அருமை
ReplyDeleteகருத்திட வரும் நண்பர்களுக்கு :
ReplyDeleteஇன்று எழுதிய பகிர்வுக்கு யாரும் வரவில்லையா...? தங்களின் தளத்தில் udanz ஓட்டுப்பட்டை அல்லது Logo வைத்திருந்தால் எடுத்து விடுங்கள்... Google Chrome browser-ல் உங்களின் பதிவுகளை அவர்களால் வாசிக்க முடியாது...
Chrome
Danger: Malware Ahead!
Google Chrome has blocked access to this page on .blogspot.com.
Content from udanz.com, a known malware distributor, has been inserted into this web page. Visiting this page now is very likely to infect your computer with malware.
Malware is malicious software that causes things like identity theft, financial loss, and permanent file deletion.
என்று வரும்... இது இன்று காலை முதல் வருகிறது... சரியானவுடன் இவைகளை இணைத்துக் கொள்ளலாம்... நன்றி... இதை நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டவர்களுக்கு மேலும் நன்றி...
நல்ல விமர்சனம் சீனு. தில்லியிலி திரையிட்டு இருக்கிறார்கள். முடிந்தால் பார்க்க வேண்டும்....
ReplyDelete//மேடவாக்கம் குமரன் தியேட்டர், பரதேசி கதைக் களம் நடக்கும் ஆண்டான 1939ம் ஆண்டைச் சேர்ந்த தியேட்டர் போல் இருந்ததால் எளிதில் கதைக்களத்துடன் ஒன்ற முடிந்தது.// சோகத்துலயும் ஒரு சொர்க்கம் ...ஹையோ ஹையோ ...
ReplyDelete//பாடல்கள் அனைத்தும் தனித்தனியாக கேட்டால் பிடிக்குமா என்று தெரியவில்லை// எமக்கு பிடிக்கல ...
//திரைக்கதை முழுவதும் பழுப்பு நிறத்துடனேயே பயணிக்கிறது. // ஆங்கிலத்துல இதுக்கு எதோ ஒரு பேரு இருக்கேன்னு யோசனையாவே இருந்துச்சு அதுக்கு பேரு - செபியா டோனாம் - கேபிள் எழுதிருக்காரு .
//கேமராமேனுக்கு இப்படத்தில் பெரிய உழைப்பு ஒன்றும் இல்லை. இருந்தும் பாலா காட்ட சொன்னதை தத்ரூபமாக காட்டவும் அவர் தவறவில்லை //
தத்ரூபமாக காட்டுவதுதான் கஷ்டம் .டிரைலர் பார்த்தவகையில் சொல்கிறேன் . பரதேசியின் வெற்றிக்கு பாலாவுக்கு சமமாக ஒளிப்பதிவுக்கும் , கலைக்கும் , உடைக்கும் இடமுண்டு .
//படம் முழுவதுமே ஒருவித சோகத்துடன் பயணிப்பது போன்ற உணர்வு, அதனால் திரைக்கதை என்னவோ மெதுவாகவே நகர்கிறது//
ReplyDeleteநமக்கு சோகப்படம்னாலே கொஞ்சம் அலர்ஜி... இருந்தாலும் உங்க விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது....
//சாமி நல்ல சிரிக்க சிரிக்க பேசுதாவள//
ReplyDeleteஆளெடுக்கும் அந்தக் காட்சி மனதில் தங்கிய ஒன்று. மிக இயல்பாக இருந்தது!
//மேடவாக்கம் குமரன் தியேட்டர், பரதேசி கதைக் களம் நடக்கும் ஆண்டான 1939ம் ஆண்டைச் சேர்ந்த தியேட்டர் போல் இருந்ததால் எளிதில் கதைக்களத்துடன் ஒன்ற முடிந்தது.//
ReplyDeleteஹா....ஹா... கிளைமேக்ஸ் என்ன? என் காதுல மட்டும் சொல்லுங்க!
படம் பார்க்க தூண்டுது..,
ReplyDelete