திருப்பூர் நான் நினைத்ததை விட சற்றே பெரிய ஊர்.
நான் அழைத்த ஒவ்வொரு
பிரபல பதிவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி தப்பிக்க கடற்கரை தள ஓனர் விஜனுடனான எங்களது திருப்பூர் பயணம் தொடகியது. சென்னையில்
எங்களுடன் சேர்ந்து பயணிக்கத் தொடங்கிய மழை திருப்பூர் வரையிலும் விடமால் தொடர்ந்து கொண்டே இருந்தது. திருப்பூர் சென்று சேர்ந்ததும் மழையும் விட்டபாடில்லை தொழிற்களம் நிர்வாக இயக்குனர் அருணும் வந்தபாடில்லை. அருணிடம் நான் வந்து சேர்ந்த தகவலை பசியுடன் தெரிவிக்க இதோ பத்து நிமிடத்தில் வருகிறேன் என்று சொன்னவர் சரியாக (மூன்று * பத்து) =? நிமிடத்தில் வந்து நான் தமிழன் என்று பெருமையுடன் பறை சாற்றினார். இருந்தும்
பசிக்கு ருசியான சப்பாத்தி வாங்கிக் கொடுத்து
உபசரிபதிலும் தான் தமிழன் என்பதை மீண்டும் ஒருமுறை
இந்த உலகிற்கு நிருபித்தார்.
அதன் பின் அவரது பைக்கில் நாங்கள் ட்ரிப்ள்ஸ் சென்றது பொறுக்காமல், லக்ஸ்மி ஸ்டார்ட் ஆக மறுத்தது. கடைசி வரை லக்ஸ்மி ஸ்டார்ட் ஆகவில்லை என்பதால் ஆட்டோ பிடித்து சென்றோம் என்பது எல்லாம் பதிவிற்கு சற்றும்தேவையில்லாத பதிவுகள்(மேலும் இந்த வரி யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல).
வீடு சுரேஷ் - அன்றைய தினம் எங்களுக்கு இளைப்பாற வீடு கொடுத்தவர் என்ற பெருமை இவரையே சாரும். தல ஒரு வலை தள புலி ( தல நீங்க சொல்ல சொன்னத சொல்லிட்டேன், பேமெண்ட் ஒழுங்கா வந்துரும் தான!)
தமிழ் parents சம்பத் - வீடு சுரேஷ் அவர்களின் அலுவலகத்தில் சம்பத் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. வலைப்பூ மூலம் டாலர் சம்பாதிப்பது எப்படி என்று புத்தகம் வெளியிடும் அளவிற்கு சம்பத்திடம் விஷயம் இருக்கிறது.
அதிகாலை ஏழுமணிக்கு மதுமதியும், பெரியார் தளம் அகரனும் வீடு சுரேஷ் வீட்டிற்கு வந்து அலப்பறை செய்ய அங்கு ஒரு மினி பதிவர் சந்திப்பே நடந்தது. மக்கள்சந்தை நிறுவனர் திரு.சீனிவாசன் , தானே வந்து தனது ஸ்கோடாவில் எங்களை அரங்கிற்கு அழைத்துச் சென்றார் என்பது குறிபிடத்தக்கது. சுமார் பதினோரு மணியளவில் அரங்கம் சென்று சேர்ந்தோம். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பதிவர்கள் அரங்கம் முழுவதும் ஆங்காங்கே தென்பட்டனர்.
சந்திப்பில் நான் சந்தித்த பதிவர்கள் பற்றி சில துளிகள்
ஜீவன்சுப்பு - பல பதிவர்களைப் படித்து பதிவர் ஆனவர். வலைபூ தொடங்கி விட்டார் இன்னும் எழுதத் தொடங்கவில்லை. வலைபூவிற்கு மிகப் புதியவர். புதிய அறிமுகம் (தல சீக்கிரம் பதிவு எழுதத் தொடங்கவும்).
விஜயன் - வருகாலத்தில் இவர் ஒரு எழுத்தாளர் ஆனால் ஆச்சரியப் படுவதற்கில்லை. நான் ரசிக்கும் கவிஞர்களில் இவரும் ஒருவர்.
நா.மணிவண்ணன் - மதுரையில் இருந்து விழாவை சிறபிக்க வந்த தல ரசிகர். தல போலவே வார்த்தைகளையும் அளவாக அளந்து பேசுகிறார். ( தல நீங்க பதிவு எழுதாட்டி, வீடு உங்க வீட்டுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப் போறதா தகவல் வந்துருக்கு.
ஜோதிஜி - விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்று தன முழுக் கவனத்தையும் அதில் மட்டுமே செலுத்தி இருந்தார். அவ்வபோது பதிவர்களையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
திண்டுக்கல் தனபாலன் - உடல் மற்றும் மன சோர்வின் காரணமாக சற்றே அசதியாய் இருந்தார், மற்றபடி சென்னை பதிவர் சந்திப்பில் எவ்வளவு உற்சாகமோ பங்கெடுத்தாரொ அதே உற்சாகம் இங்கும் தொடர்ந்தது ( சார் வீட்டில் கணினி இணைப்பு கட் ஆன காரணத்தால் வலையுலக சூறாவளி சுற்றுப் பயணத்தை தாமதப்படுத்தியுள்ளார்.
சிபி - பதிவுலக அறிமுகம் தேவைபடா பதிவர் ( லோக்கல் சேனலுக்கு அவர் அளித்த தகவல் "அலெக்ஸா ராங்கில் ஐம்பதயிறதிற்குள் இருக்கும் பதிவர்" என்று).
மோகன் சஞ்சீவன் - தொழிற்களம் தளத்தில் இது வரை இருநூறு இருநூறு பதிவுகள் எழுதி இருப்பவர். சம்பவ இடத்தில் வைத்து மட்டும் மூன்று பதிவுகளை போஸ்ட் செய்து தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தியவர். அறிவியல் தமிழுக்கு வலையுலகில் ஆதரவு இல்லை என்று வருத்தப் படுகிறார்.
சிவகாசிக்காரன் - கடந்த மூன்று வருடமாக பதிவு எழுதுகிறார். மிகக் குறைவாக எழுதினாலும் மிக நிறைவாக எழுதுகிறார். சமீபத்தில் அவர் எழுதி இருந்த டைம்மெசின் என்னும் நீண்ட சிறு(!)கதை - அற்புதம்.
செழியன் - நெல்லையை சேர்ந்த மாணவன், கவிதை மீது கொண்ட காதலால் கவிதைப் போட்டியில் பங்கு கொள்வதோடு நில்லாமல் போட்டிகள் நடத்துவதாகவும் உளவுத் துறை தகவல் சொல்லியது.
கண்மணி அன்போடு - பொறியியல் மாணவி. விழாவின் தொகுப்பாளர் அவதாரம் எடுத்து சிறப்பாக செய்தவர். கை தட்டலாமே, கை தட்டலாமே என்று கூறியே பலரையும் கை தட்ட வைத்தவர். விழாவை தொகுத்த விதம் அருமை. தனது அப்பா அம்மாவையும் விழாவிற்கு அழைத்து வந்திருந்தார். இவரது அப்பாவும் ஒரு பதிவர்.
கோவை மு சரளா - பெண் என்னும் புதுமை என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். தமிழ் என் அடையாளம் என்னும் தலைப்பில் மிக சிறப்பாக பேசினார்.
(ஒருவேளை ஏதேனும் பதிவர்கள் விடுபட்டிருந்தால் என்னை மன்னிச்சு)
விழாவின் சில பிளஸ் மற்றும் மைனஸ் மூலம் ஒரு ஷார்ட் கவரேஜ் :
முதலில் மைனஸ்கள் (இவற்றைக் குறைகளாக சொல்லவில்லை, இனி வரும் தொழிற்களம் விழாக்களில் இவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்ற நல் எண்ணத்துடன்)
1. விழாவில் பதிவர் சந்திப்பு ஏற்பாடு பற்றி தெரிவிப்பதில் ஏற்பட்ட தாமதம். சக பதிவர்களைச் சந்திப்பதில் பெரும்பால பதிவர்களுக்கு இருக்கும் ஆர்வம் அவர்களை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பயணிக்கச் செய்யும். உ.தா சென்னை பதிவர் சந்திப்பு. பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்யும் பொழுது முறையான கால இடைவெளிக்குள் அறிவிப்பதும், அவர்களுக்கான வசிதிகள் (உண்ண, உறங்க) குறித்து அறிவிப்பது மிக முக்கியம்.
2. விழா மேடையில் பேச பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. அப்படி வாய்ப்பு கொடுத்தது தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தால், தவிர்க்க இயலாத பேச்சாளர்களுக்கு முதல் வாய்பளித்து இருக்க வேண்டும். சென்னையில் இருந்து தன்னை தயார் செய்து கொண்டுவந்த மதுமதிக்கு பேச வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது அவர் மனதை பாதித்ததோ இல்லையோ என் மனதைப் பாதித்தது. மதுமதி நிச்சயம் சுவாரசியமாகப் பேசி இருப்பார் என்பது திண்ணம்.
3. சுவாரஸ்யமே இல்லாத சிலரது பேச்சு நீண்டு கொண்டே சென்றது, மக்கள் பல நேரம் சலிப்படைந்திருந்தார்கள், விழாவில் அது தவிர்க்க முடியாத ஒன்று, இருந்தும் அவர்களுக்கு என்று ஒதுக்கபட்ட கால இடைவெளியில் பேசி முடிக்க வேண்டும் என்று கண்டிப்பு கலந்த தோழமையுடன் கூறி இருக்கலாம். அல்லது அப்படி கூறும் ஒருவரை இனங்காண வேண்டியது தொழிற்களத்தின் முதல் வேலை. மேடையில் பேசிய ஒருவர் எதற்கெடுத்தாலும் கை தூக்க சொல்லியது உச்ச கட்ட காமெடி.
4. மிக முக்கியமான ஒருவர். இவர் பெயர் மற்றும் புகைப்படம் இருந்தும் இரண்டையும் தவிர்க்கிறேன். பதிவர் கண்மணி தான் விழாவை தொகுத்து வழங்கப் போகிறார் என்பது முடிவாகிய பின்னும் வலுகட்டாயமாக அவரிடம் இருந்து அந்த வாய்ப்பை தட்டிப் பறித்தார். கலெக்டர் சகாயம் அரங்கினுள் நுழையும் பொழுது கண்மணி பேச எத்தனிக்கும் வேளையில் மைக்கை தனதாக்கி சிங்கம் போல முழங்கத் தொடங்கினார். திருச்செந்தூர் சஷ்டியிலே சூரனை வதம் செய்ய முருகன் கிளம்பும் பொழுது வீரமாக வர்ணனை செய்வார்களே அதே போல் தான் மிகக் கம்பீரமாக இருந்தது அவரது வர்ணனை. இருந்தும் தட்டிப் பறித்த செயல், சகாயத்தின் முன் நீங்கள் போட நினைத்த படம் - பாஸ் எனது பார்வையில் நீங்கள் கூண்டுக்குள் அடைபட்ட சிங்கம் - எவ்வளவு கர்ஜித்தாலும் வாயைப் பிளந்து பார்ப்போமே தவிர ஈர்க்கப் பட்டு விடமாட்டோம். பின்னர் ஒரு சந்தர்பத்தில் தவறான தகவல் நீங்கள் கொடுக்க அதை ரமணாஸ்ரமம் என்று கண்மணி திருத்த, போதும் பாஸ் இதோட நான் நிறுத்திக்கிறேன் (உங்க புராணம் பாடுறத).
சில பிளஸ்கள்
1. வந்திருந்த பதிவர்கள் அனைவரையும் மிகச் சிறப்பாக வரவேற்றது. பொது மக்களில் இருந்து பதிவர்களை தனித்துக்காட்டியது. சகாயம் வீற்றிருக்கும் மேடையில் சக பதிவர்களுக்கு வாய்பளித்தது.
2. மேடையில் திருநங்கை ஒருவருக்கும் சம வாய்ப்பு அளித்து அமரச் செய்தது. அவர் பேசுவதற்கும் வாய்ப்பளித்து இருக்கலாம்.
3. தாய் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளித்தது. அவர்கள் திறமைகள் "ஆகா அற்புதம் அருமை - காணற்கரிய காட்சி". எவ்வளவு திறமைகளை ஆளுமைகளை அந்தப் பள்ளி அவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் பரவ அந்த பள்ளி எடுக்கும் முயற்சிக்கு ஊக்கம் அளித்த மக்கள் சந்தையின் பாங்கு பாராட்டத்தக்கது. நாட்டுபுறக் கலைகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதன் மீது இன்னும் அதிகமான தீராக் காதல் கொள்ளச் செய்தது அந்த மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சி.
4. தாய் தமிழ் பள்ளி பற்றிய விரிவான பதிவு கண்டிப்பாக இங்கு சுட்டி படியுங்கள். பரப்புங்கள் ( என் வேண்டுகோள்).
5. தமிழ்வழி அதிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்பதில் பெருமை கொள்ளுங்கள். நாளைய தமிழை வளர்க்கப் போவது கவிஞர்களும், புலவர்களும் இல்லை அரசுப் பள்ளி மாணவர்கள் தான் என்று திரு.சகாயம் ஆற்றிய அற்புதமான உரை.
.
சில மைனஸ் தவிர்த்து என்னைப் பொறுத்த வரை மிக அற்புதமான நிறைவான விழா. சில புதிய நண்பர்களை பெற்றுக் கொடுத்த விழா. அதற்க்கு வகை செய்த தொழிற்களம் குழுவினருக்கு மகிழ்ச்சியான பாராட்டுகள்.
பின் குறிப்பு 1 : அருண் உங்க லக்ஷ்மி ஸ்டார்ட் ஆகாதா மேட்டர் பத்தி கவலைப்படாதீங்க, அற்புதமான இளைஞர்னு சகாயம் சொன்னாரு அத நினைச்சு பெருமைப்படுங்க
பின் குறிப்பு 2 : இந்த விழா சம்ந்தமான போட்டோமற்றும் வீடியோ எனக்குக் கிடைத்ததும் பகிர்கிறேன். மாணவர்களின் கலை நிகழ்ச்சி அடங்கிய வீடியோவை நிச்சயம் காணுங்கள்.





