சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் (நந்தலாலா மிஸ்ஸிங்கா) மிஸ்கினின் எந்த ஒரு மிஷனையும் அரங்கில் பார்த்தது இல்லை. பார்க்கும்படியான சந்தர்பமும் அமையவில்லை. பின்னர் பார்த்த பொழுது அரங்கில் பார்க்கவில்லையே என்று நினைத்தது உண்டு. முகமூடி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பொதுவாகவே சூப்பர் ஹீரோ படங்கள் எனக்கு பிடிக்காது. அதனால் பார்க்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. சொல்லப் போனால் முகமூடி மொக்கையாக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். என் அண்ணன் அழைத்ததால் செல்ல வேண்டிய கட்டாயம். அவன் ஒரு மிஸ்கின்வாதி.

படம் ஆரம்பித்த முதல் காட்சியில் இருந்தே மிஸ்கின் பயணிக்கத் தொடங்கி விட்டார்..ஒரு திரில்லர் படத்திற்கு தேவையான அத்தனையும், அத்தனை என்றால் அத்தனையும் இதில் இருக்கிறது கதை என்ற அடித்தளம் தவிர. கதை தான் இல்லையே தவிர பலமான திரைக்கதை உள்ளது. பல காட்சிகளில் வழக்கமான தமிழ் சினிமாத்தனம் தவிர்க்கப்ட்டுள்ளது. இந்தக் காட்சியின் பின் இது தான் தான் நடக்கும் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது அல்லது வேறு ஒரு சமயம் நடக்கும். பார்த்துப் பழகிப் போன காட்சிகளை சற்று வேறுவிதமாக வைத்துள்ளார். அந்த உழைப்பிற்காக வாழ்த்துக்கள் மிஸ்கின் சார்.
நான்லீனியர் கதை இல்லை ஆனால் லீனியர் கதையில் நான்லீனியர் காட்சிகளை வைத்துள்ளார். பொறுமையாக நகரும் காட்சிகள். அதில் கவிதை போன்ற அழகு. முதல் பாதி சற்று நீளம், இரண்டாம் பாதி நீளமில்லாமல் இருந்தது சிறப்பு.
ஜீவா நடிப்பில் அசத்துகிறார்.பல தருணங்களில் காமிராவும் இசையும் மட்டுமே கவிதை பேசுகின்றன. இசையில் கிட்டாரின் ஆளுமை அதிகம் இருக்கிறது. படத்தில் பல குறைகள் இல்லாமல் இல்லை. இருந்தும் நமக்குப் பிடித்த விஷயங்கள் அதிகம் இருக்கும் பொழுது குறைகள் ஒரு பொருட்டாய் தெரிவது இல்லை. ஜீவாவை சூப்பர் ஹீரோவாக பார்க்கவில்லை, அவர் சூப்பர் ஹீரோவும் இல்லை. சூப்பர் ஹீரோவுக்கான எந்த மாய பிக்சன்களையும் அவர் செய்யவில்லை. பின் ஏன் சூப்பர் ஹீரோ என்று விளம்பரம் செய்தார்களோ தெரியவில்லை.
படம் முடிந்து வெளியே வரும் பொழுது "அஞ்சாதே மாதிரி இல்ல ,மிஸ்கின் எவ்வளவோ நல்லா எடுத்து இருக்கலாம், சொதப்பிட்டான்" முகமூடியின் முதல் விமர்சனம் கூற ஆரம்பித்தான் என் அண்ணன். பல படங்களில் சொதபலகளை கண்டால் கொந்தளிக்கும் நானோ அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன். "படம் பார்த்த மாதிரியே இல்ல, இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தல" என்றான். அது என்னவோ உண்மை தான். மிஸ்கினின் இந்தப் படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கவில்லை. தாக்கம் . பாதிப்பு. ஒரு திரைப்படம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்கிறீர்களா? சிறுவயதில் ஜுராசிக்பார்க், அனகோண்டா போன்ற படங்கள் பார்த்துவிட்டு இரவு வேளைகளில் குண்டு பல்பு வெளிச்சத்தில் சாப்பிடும் பொழுது இடுப்புவரை கவ்வும் டைனோசர் எந்தப்பக்கம் இருந்து வருமோ, அந்தரத்தில் தொங்கும் அனகோண்டா விழுங்கிவிடுமோ என்றெல்லாம் தோன்றும்.
ரஜினி படம் பார்த்தால் குறைந்தது ஒரு வாரதிற்காவது ரஜினி நம்முள் இருப்பார். அங்காடிதெரு கிளைமாக்ஸ் பாதிப்பை நண்பன் கூறியதால் இன்று வரை அங்காடித்தெரு படமே பார்க்கவில்லை. சித்திரம் பேசுதடி திரைபடத்தில் பாவனா அப்பாவிற்காக சிறை செல்லும் நரேன், அந்தக் காட்சி விவரிப்பு அவ்வளவு எதார்த்தமாக இருக்கும். இந்தப் படம் அப்படி ஒன்றையும் ஏற்படுத்தவில்லை என்பது உண்மை.முகமூடியில் மார்கெட்டில் நடக்கும் சண்டையை அவ்வளவு பிரமாதமாக எடுத்துவிட்டு கிளைமாக்ஸ் சண்டையை மொக்கையாக எடுத்து இருக்கிறார்.
முகமூடி. பலவகை மசாலாக்களுடன் தயாராகும் அம்மாவின் சமையல். அந்த சமையல் வாசனையை நுகரும் பொழுது ஏற்படும் உணர்வு தான் முகமூடியின் முதல் அரை மணி நேரம். அப்படி தயாரான சமையலை திருப்தியாக சாப்பிட்ட நினைத்தால் ஏதோ ஒன்று குறைவது போன்றே தெரியும், குறைவது என்னவென்று கண்டுபிடிக்கவும் முடியாது. அது தான் முகமூடியின் மீதி.
முகமூடி - தி மிஷன் ஆப் மிஷ்கின்
- சீனு
முகமூடி - தி மிஷன் ஆப் "மிஸ்"கின்
- மிஸ்கின்வாதிகள்