பதிவர் சந்திப்பு மண்டபம் :
கடந்த பதிவர் சந்திப்பின் பொழுது மண்டபத்திற்கான செலவை முழுவதுமாக மக்கள் சந்தை அமைப்பினர் ஏற்றுக் கொண்டனர், சென்ற ஆண்டு மண்டபத்திற்காக ஆன செலவு முப்பதாயிரம் ரூபாய், ஒட்டு மொத்த செலவுகளில் கணிசமான ஒரு தொகை.
மேலும் கடந்த வருடம் மண்டபம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், மண்டபத்தில் போதிய இடவசதி இல்லை, பயங்கர நெருக்கடியாய் இருந்தது, சின்ன மண்டபம் என்பதால் எதிரொலி படுபயங்கரமாய் இருந்தது, மேடையில் ஏறி பேசிய ஒருவரது பேச்சும் தெளிவாக அதேநேரம் சுத்தமாக கேட்கவில்லை. மண்டபம் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்ததால் கண்டுபிடிக்க சிரமமாய் இருந்தது...
அளவில் சிறிய, கொஞ்சம் உள்ளே தள்ளியிருந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே முப்பதாயிரம் ரூபாய், இதைவிட பெரிய அதே நேரம் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் மண்டபம் பிடிப்பது என்றால் மிகவும் சிரமம், ஒருவேளை அப்படி அமைந்தாலும் சந்திப்புக்காக கிடைக்கும் நிதி அனைத்தும் அதற்கு மட்டுமே செலவாகியிருக்கும்.
சென்னை போன்ற மாநகரம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை நமக்குப் பிடித்த அல்லது நமக்கு ஏற்ற மண்டபம் கிடைப்பதென்பது.
மேற்கூறிய சவால்களை சமாளித்து ஒரு மண்டபம் தேடிபிடிக்க வேண்டும் அதே நேரத்தில் பட்ஜெட் கையைக் கடிக்கக் கூடாது, தற்செயலாய் திரையிசைக் கலைஞர்கள் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு விழாக்குழுவினர் செல்ல ஏன் இதை விசாரித்துப் பார்க்கக் கூடாது என்று விசாரிக்க, கடந்த முறை நாம் சந்தித்த அத்தனை சவால்களுக்கும் விடை கிடைக்க உடனடியாக மண்டபம் பதிவு செய்யப்பட்டு அதன் பின் சந்திப்பிற்கான தேதியும் குறிக்கப்பட்டது.
மிக முக்கியமான விஷயம் மண்டபம் கிடைக்கும் வரை பதிவர் சந்திப்பு தேதி குறிப்பிடப்படவில்லை என்பது தான். விசாலமான இடம், கடந்த வருடம் போன்ற நெருக்கடியான மேடை இல்லாமல், தாராளமான மேடை அமைப்பு, மாநகரின் முக்கிய பகுதியான வடபழனி பேருந்துநிலையம் அருகில், மண்டப வாடகை பத்தாயிரம் ரூபாய் விசாலமான பார்க்கிங் வசதியுடன். இத்தனை பிளஸ்கள் இருந்ததால் தான் உடனடியாக மண்டபம் பதிவு செய்யப்பட்டது.
எல்லாம் இருந்தும் ஒரு குறை மண்டபத்தின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட் ஆகிப்போனது தான். ஆகஸ்டு - செப்டம்பர் மாதம் என்பதால் ஓரளவேனும் குளிர்ச்சி நிலவும் சமாளித்து விடலாம் என்றொரு நம்பிக்கை இருந்தது, ஆனால் அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. ஒருநாள் முழுவதும் பதிவர்கள் எப்படி அமர்ந்து இருக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருந்தது. இந்நேரத்தில் உடனடியாக செயல்பட்டது உண்மைத்தமிழன் தான், தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் உடனடியாக நான்கு பெரிய பெடஸ்ட்ரைல் மின்விசிறி ஏற்பாடு செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தார், இருந்தும் பதிவர்கள் ஒட்டுமொத்தமாக வெக்கையை உணர்ந்தது மின்சாரம் தடைபட்ட நேரத்தில் தான்.
சற்றும் எதிர்பாராது நேர்ந்த இப்படியொரு அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இனிவரபோகும் பதிவர் சந்திப்பில் மண்டப விசயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பது நமக்கு விடப்பட்டிருக்கும் முக்கியமான சவால்.
இருந்தும் பெரும்பாலான பதிவர்கள் நிலைமையை உணர்ந்துகொண்டு அல்லது பொறுத்துக்கொண்டு பதிவர் சந்திப்பில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொண்டனர் என்பதை அன்றைய தின நிகழ்வுகள் எடுத்துக்காட்டின.
சந்திப்புக்கு வந்த பதிவர்களிடம் சென்று வெக்கையடித்ததா, புழுங்கியதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்வார்கள், அதே நேரத்தில் இந்த நிகழ்வை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுங்கள் என்றால் வாழ்நாளில் மறக்க முடியா இனிய நிகழ்வு என்பது தான் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கும். பதிவர்களையும் பதிவர் சந்திப்பையும் பொறுத்தவரையில் குறைகளைத் தாண்டிய சாதனையில் இது ஒன்றுதானே முக்கியமானது.
பதிவர் சந்திப்பு அறிமுகம்
விழாவில் மிகமுக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுவது இந்த நிகழ்வுதான், முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் இந்த நிகழ்வுகளை எப்படி நடத்துவது என்பது பற்றிதான் பெரும்பாலும் விவாதித்தோம். அதிகமான திட்டங்கள் வகுத்தோம், பெரும்பாலானவை நடைமுறைக்கு ஒத்துவராமல் போகவே அவற்றைத் தவிர்த்துவிட்டோம்.
1. பதிவர் விபரங்களை திரட்டி அவற்றை பிரசண்டேஷனாக திரையிடுவது, இதற்காக ஸ்கூல்பையன் பெரும்பாலான விபரங்கள் திரட்டிவிட்டார், இருந்தும் ஒவ்வொரு பதிவர் தனை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவரது தகவலை சரியான நேரத்தில் சரியான சமயத்தில் திரையிட வேண்டும், இதில் ஏதாவது ஒன்றின் கால அளவு மாறினாலும் குழப்பமும் பெருங்குழப்பமும் மிஞ்சும், குழப்பம் வரும் பட்சத்தில் அந்த பதிவர் தகவலை திரையிடாமல் விட்டால் தனிப்பட்ட வன்மம் என்றொரு குற்றச்சாட்டு எழும்.
2. மேலும் இந்த திரையிடல் படலத்தை பதிவர்கள் பற்றி அறிந்த பதிவர்களால் தான் செய்ய முடியும் வெளிநபர்களால் செய்ய முடியாது, இதற்கென்று தனியொரு பதிவரை நியமித்தால் பாவம் அவரால் இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது, அவ்வளவு தூரம் பயணித்து வந்த பதிவர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்று அரசன் மீண்டும் மீண்டும் புலம்புகிறாரே அப்படி ஒரு நிலைமை இன்னும் ஒரு பதிவருக்கு ஏற்படும், இதை விழாக்குழு விரும்பவில்லை.
3. கடந்த முறை பதிவர் அறிமுகத்தில் நான்கு பதிவர்களை மேடையேற்றி அவர்கள் மூலம் மற்றபதிவர்களை மேடைக்கு அழைத்தோம். அப்படி அழைக்கப்படும் பொழுது ஆரூர் மூனாவை மேடைக்கு அழைத்த பதிவர் மிக (அ)நாகரிகமாக மேடைக்கு அழைக்க ஆருராருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மேடை ஏறி ஏறிய அடுத்த நொடி கீழே இறங்க, இது போன்ற அசௌகரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை விழாக்குழு விரும்பியது.
4. ஒவ்வொரு பதிவரும் தங்கள் இடத்தில் இருந்து மேடைக்கு சென்று, மேடையில் ஏறி அறிமுகம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு நிமிடம் என்று கணக்கிட்டால் (சிலர் அதிகமாக பேசுவர், சிலர் பெயர் மட்டும் கூறி விடைபெறுவார் என்பதால் இக்கணக்கு ஒரு நிகழ்தகவைச் சார்ந்தது) நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களை மேடையேற்ற ஆகும் மொத்த நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்நேரத்தில் ஒவ்வொரு பதிவரையும் அவரது பின்புலத்துடன் மற்றொருவர் அறிமுகம் செய்து மேடை ஏற்றி இறக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த நிகழ்வும் அறிமுகம் என்ற சம்பிரதாயத்தில் கலந்து கரைந்து விடும்.
5. மேற்கூறிய நான்கு பாயிண்டுகளும் சாத்தியப்படுமா என்று உங்கள் எண்ண ஓட்டத்தில் கேள்விகேட்டு விடைதேடுங்கள், இதில் ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்க விழாகுழுவில் இருப்பவர்கள் மேடையேறி அறிமுகம் செய்யக் கூடாது அதன் மூலம் நேரத்தை மிச்சப் பிடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது, அதே நேரம் இக்குழுவில் கவியாழி, ஸ்கூல்பையன், ரூபக்ராம் என்ற மூன்று புதியவர்கள் உள்ளனர், அவர்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது.
அறிமுகம் என்ற சம்பிரதாயத்தை ஒட்டுமொத்தமாக நீக்கும் பொழுது அங்கே பதிவர் சந்திப்பிற்கான அர்த்தம் மறைந்து விடுகிறது, இந்நிகழ்வை கால, சூழ்நிலைகளைப் பொறுத்து மாற மற்றும் மாற்றியமைக்க வேண்டும். அது விழாக்குழு கையில் உள்ளது.
இம்முறை பதிவர் சந்திப்பு அறிமுகம் சம்பிரதாயமாக நடந்ததாதா இல்லை சம்பிரதாயத்திற்கு நடந்ததா என்றால், சென்ற முறையை விட மிக ஒழுங்காக மிக நேர்த்தியாக நடந்தது. ஏற்கனவே முடிவு செய்தபடி ஐந்து ஐந்து பேராக அழைக்கப்பட்டு எவ்வித குழப்பமும் இல்லாமல் மிக நேர்த்தியாக நடந்தது, கடந்த முறையில்;ஏற்பட்ட குழப்பம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது, சென்றாண்டு மேடையில் அறிமுகம் நடந்த பொழுது சக பதிவர்கள் தங்கள் அருகில் இருந்த பதிவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர் அதனால் அறிமுக படலம் கொஞ்சம் பிசுபிசுத்துப்போனது, இம்முறை பெரும்பாலான பதிவர்கள் அறிமுகத்தை ஈடுபாட்டுடன் கவனித்தனர், பதிவர்கள் தாங்கள் அறிமுகம் செய்யும் பொழுது தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டனர் இவை எல்லாவற்றிக்கும் மேலாக அறிமுகப்படலமானது குறித்த நேரத்தில் நிறைவாக நிறைவடைந்தது.
பதிவர்கள் தனித்திறன் :
அனைவருமே பெரிதும் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு, தயார் செய்வதற்கு போதிய காலஅளவு இல்லாததால் மட்டுமே அறிவித்த இரண்டு நாடகங்கள் நிறுத்தப்பட்டன, மயிலன், தேவாதிராஜன் அவர்களின் கவிதை குடந்தையூர் சரவணனின் பலகுரல், கோவை ஆவியின் பதிவர் சந்திப்புப் பாடல் என இனிதே நிறைவேறியது, இந்நேரத்தில் மதுமதியின் குறும்படத்தைக் கூட தனித்திறன் பகுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.
பத்து நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் பதிவர்களின் குறும்படங்களை சந்திப்பின் இடைவெளியில் அவ்வபோது திரையிடலாம். இது ஒரு நல்ல ரிப்ர்ஷிங்காக இருக்கும். மற்ற பதிவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது போலவும் இருக்கும்.
மூத்தபதிவர்கள் கவுரவித்தல், கவியரங்கங்ள் மேலும் மேலும் :
கடந்த பதிவர் சந்திப்பில் மூத்த பதிவர்களை கவுரவம் செய்தாயிற்று இம்முறை என்ன செய்யலாம் என்ற வாதம் எழுந்த போது பதிவுலகில் கதை கவிதை கட்டுரை போன்ற ஏதேனும் போட்டி வைத்து பரிசளிக்கலாம் என்றும் சாதனை புரிந்த பதிவர்களை கவுரவிக்கலாம் என்றும் விவாதிகப்பட்டது போட்டிவைத்து பரிசளிக்க கால அவகாசம் இல்லை, சாதனைப் பதிவர்களை எந்த அளவீட்டில் தேர்ந்தெடுப்பது என்பதில் அளவீட்டை நிர்ணயம் செய்வதில் முரண் ஏற்பட்டது, பின் அதனை பதிவுலகில் சர்வே நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அதற்கும் கால அவகாசம் இல்லை, அரை மனதுடன் இத்திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்த சந்திப்பு நடத்தப் போகிறவர்கள் தயவு செய்து இவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.
கவியரங்கம் என்பது தனித்திறன் என்ற ஒட்டுமொத்த வடிவத்திற்குள் அடங்கிவிட்டது. கவிதை எழுதிக் கொண்டுவந்தவர்களிடம் கவியரங்கம் கிடையாது என்றோ பாடப்போகிறேன் என்றவரை கலாய்த்து அனுப்பவோ இல்லை.
புத்தக வெளியீடும் மாலை நேரமும் :
புத்தக வெளியீடு என்பது பதிவர் என்ற நிலையில் இருந்து தனிப்பட்ட ஒரு பதிவரை முன்னிறுத்துவது என்ற நிலையை நோக்கி நகருகிறது. அதாவது இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் பதிவர்கள் தங்கள் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் என்னும் வட்டத்தையும் உள்ளிழுக்கின்றனர், அவர்கள் வரக் கூடாது என்று சொல்லமுடியாது காராணம் இந்த நிகழ்வு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது அதனால் நண்பர்களை உறவினர்களை அழைத்து வருவதில் தவறில்லை, ஆனால் ஒருவேளை புத்தக வெளியீடானது ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகரிக்கும் போது ஒரு தனிநபர் விழாவாகி பெரும்பான்மை பதிவர்களுக்கு சலிப்பூட்டுவதாக அமைவதற்கான வாய்ப்புகள் ஏராளம், முக்கிய பிரச்சனை என்னவெனில் பதிவர் சந்திப்பு நிகழ்வுக்கான காலத்தை அவர்கள் எடுத்துவிடக் கூடாது.
அதனால் சந்திப்பின் கடைசி நிகழ்வாக இதை வைத்தால் ஒருவேளை நேரம் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பிழையேதும் இல்லை, என்பது தான். நாங்கள் எதிர்பார்த்தது போலவே 45 நிமிடங்கள் தாமதமாகத் தான் இந்நிகழ்வு முடிந்தது.
ஒருவேளை புத்தக வெளியீடு காலையில் இருந்திருந்தால் பதிவர்கள் அழைத்து வரும் நண்பர்களுக்கான உணவு ஏற்பாடு? விழாவிற்கு வந்த பதிவர்களின் நண்பர்களை சாப்பிடாக்கூடாது என்று கூறுவது தமிழனின் விருந்தோம்பல் பண்பில்லை. அதே நேரத்தில் சந்திப்புக்காக வரும் பதிவர்களுக்கு திருப்தியாக உணவளிக்க வேண்டியது நம் கடமை.
முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் விவாதம் செய்யப்பட்டு, விவாதம் வளர்ந்து ஒருமனதாக முடிவுசெய்யப்பட்ட ஒன்று தான் புத்தக வெளியீடு என்பது நிகழ்ச்சி நிரலில் மாலை இடம் பெற வேண்டும் என்பது.
அதே நேரத்தில் புத்தகம் வெளியிடும் பதிவர்களிடம் ஐந்தாயிரம் ருபாய் வசூலிகப்பட்டதை அவர்கள் நண்பர்கள் விருந்தோம்பலுடன் யாரும் இணைக்க வேண்டாம், நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க நிதியளித்தல் விதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்ட விதி. தனியொரு நிகழ்வாக புத்தக வெளியீடு நடத்துவதற்கு ஆகும் செலவை விட இது குறைவு தான் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.
உணவு பரிமாறுதல் :
பப்பே முறையில் பரிமாறப்பட்ட உணவை உண்ண யாரும் பெரிய அளவில் கஷ்டப்டவில்லை என்று நினைக்கிறன், அப்படி ஒருவேளை கஷ்டபட்டிருந்தால் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கிறோம்.
மேலும் பந்தியில் அமர்ந்து இலையில் பரிமாறியிருந்தால் கூட இவ்வளவு கலகலப்பாக பேசிக் கொண்டே உண்டிருபார்களா என்று தெரியவில்லை, இதில் அத்தனை பதிவர்களும் கூட்டமா கூட்டமாக நின்று, சகபதிவர்களுடன் அளவளாவிக் கொண்டே உண்டனர், ஒருவகையில் இது போற்றற்குறியது தானே.
விழாக்குழுவினர் மேடை ஆக்கிரமிப்பு :
விழாக்குழுவினர் சிறப்பு விருந்தினருக்கு மரியாதை செய்யும் பொழுதும், நினைவுப் பரிசு பெறும்போதும் மட்டுமே மேடையை ஆக்கிரமித்தனர், மேலும் நினைவுப் பரிசு வழங்கும் போது அதனை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம், நேரமின்மையால் அவசர அவசரமாக நடந்து முடிந்த ஒரு நிகழ்வு என்றால் அது விழாக்குழுவினருக்கு நினைவுப் பரிசுவழங்கும் நிகழ்வு தான், எவ்வளவு அவசரம் என்றால் மதுமதிக்கான நினைவுபரிசை தான் நான் கண்மணி குணசேகரன் அய்யா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன், என்னைப் பொறுத்தவரை இது புரிந்துகொள்ளக் கூடிய நிகழ்வு, சுட்டிகாட்டப்பட வேண்டிய தவறு இல்லை.
மேலும் விழாக்குழுவை சேர்ந்தவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தியோ இல்லை மேடையை ஆக்கிரமித்து சுயதம்பட்டம் அடிக்த்தோ ஒரு இடத்திலும் நடந்துகொள்ளவில்லை என்பதை விரைவில் வர இருக்கும் வீடியோ கவரேஜ் கூறும்.
பதிவர் சந்திப்பு நேரலை :
பெரியார்தளம் திரு அகரன் அவர்கள் நேரலை விசயத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டார், அவரை கவுரவிக்காதது சிறு குறையே, சந்திபிற்கு முந்தின தினம் இரவில் இருந்து நடந்த ஒரு பெரும்போராட்டதிற்கு பின்தான் அவரால் நேரலையை செயல்பட முடிந்தது.
வாடகைக்கு எடுத்த மடிக்கணிகள் ஒழுங்காக ஒத்துழைக்காதது முதல் காரணம், எதிர்பாராத விதமாக தோழர் அகரனிடம் இருந்த ஆடியோ இன்புட் பழுதடைந்தது மற்றொரு காரணம், அதை சரி செய்ய அவர் எவ்வளவோ முயன்றார் இருந்தும் முடியவில்லை. பாவம் அவராலும் என்ன செய்துவிட முடியும், விரைவில் சந்திப்பு வீடியோ கவரேஜ் பதிவேற்றப்படும், எதிர்பாரா விதமாக ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். அகரனின் சேவைக்கு தலை வணங்குகிறோம். நன்றி அகரன்.
தொகுப்பாளர்கள் :
ரெயின்போ பண்பலையில் தொகுப்பாளர் என்ற முகத்தில் தொடங்கி பன்முக சாதனையாளராக வலம் வரும் சுரேகா, இவருடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோவை அகிலா மற்றும் கோவை எழில் ஆகியோர் தொகுப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்பது கூட்டங்களில் கலந்தாலோசித்து சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று எடுக்கப்பட முடிவு.
ஒருவேளை யாருக்கேனும் ஆர்வம் இருந்து, நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கருத வாய்ப்பு இருக்குமானால் இனி வரபோகும் பதிவர் சந்திப்பு நடத்த இருப்பவர்களுக்கு கூற விரும்புவது "பதிவர் சந்திப்பை தொகுத்து வழங்க ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்" என்று பதிவுபோட்டு தகவல்களை பெற முயற்சிக்கவும். ஆனால் ஆர்வமிருப்பவர்களிடம் தொகுத்து வழங்குவதற்கான குறைந்தபட்ச திறமை உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது விழாக்குழுவினருக்கு விடப்படும் மற்றொரு சவால். மேலும் நேரத்தை கச்சிதமாக கையாள வேண்டிய பெரும்பொறுப்பு தொகுப்பாளர்கள் கையில் தான் உள்ளது.
உ.ம் : இந்த சந்திப்பில் பதிவரே அல்லாத ஒருவர் பேருரை ஒன்று கொடுக்கத் தொடங்க அவரை மிகத் திறமையாக சமாதனம் செய்து அந்த பேச்சை முடிவுக்கு கொண்டுவந்தார் சுரேகா, அந்த திறமை மிக முக்கியமானது அவசியமானது.
இந்தப் பதிவில் சந்திப்பானது எப்படி நடந்தது என்பது பற்றி மட்டும் தான் எழுதியுள்ளேன், விழாக்குழு எப்படி உழைத்தது என்பதை இன்னும் எழுதவில்லை. விழாக்குழுவின் உழைப்பை தனியொரு பதிவில் பகிர்கிறேன். (ஏற்கனவே நான் பெருசா எழுதுகிறேன் என்று ஓட்டுராயிங்க, இந்தப் பதிவின் அவசியம் கருதி தான் எசமான் பதிவு பெருசாச்சு :-)
ஒவ்வொரு வாரமும் முன்னேற்பாட்டுக் கூட்டம் என்றபெயரில் நாங்கள் கூடி விவாதித்து செயல்படுத்திய விசயங்களை தான் மேலே முடிந்தளவில் தொகுத்துள்ளேன், இந்த விஷயங்கள் எதிர்கருத்து கூறுவோறுக்காக எழுதப்பட்டவை அல்ல.
நாலு பதிவர் ஒண்ணா சேர்ந்து சந்திப்பு நடந்துறாங்க நாம பக்க பலமா இருப்போம் என்றளவில் சக பதிவர்களை மதித்து எல்லாவகையிலும் உறுதுணையாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறார்களே பெரும்பாலான பதிவர்கள்,அவர்கள் விழாக்குழுவினரை பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், இது போன்ற சந்திப்புகள் சிற்சிறு சலசலப்புகளால் நடைபெறாமல் நின்றுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே எழுதினேன்.
இப்போதும் சொல்கிறேன் இப்படி ஒரு விளக்கபதிவு எழுதியதற்காக நான் வருத்தபடுகிறேன். அரசனும் ரூபக்கும் ஆரூரும் மெட்ராசும் மதுமதியும் உழைத்த உழைப்பை பெரும்பதிவாக எழுதுவதையே நான் விரும்புகிறேன்.
ராஜபாட்டை ராஜா, சிவாகாசிகாரன், அப்துல்பாசித், பிரபு, சதீஷ் அண்ணா, சங்கரலிங்கம் அய்யா, ஆவி இவர்களுடனான நினைவுகளை எழுதவே விரும்புகிறேன்.
குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, மன்னிப்புக் கேட்கவும், திருத்திக் கொள்ளவும் தயார், ஆனால் நீங்கள் நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள்.
இறுதியாக குறைகள் இல்லா மனிதனும், குறைகள் இல்லா நிகழ்ச்சியும் இல்லை, சிறு குறையோ பெருங்குறையோ அவை உங்களை வருத்தப்படுத்தி இருக்கும் என்றால் விழாக்குழு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.
இன்னும் விளக்கம் தேவை என்றாலும் எழுதத் தயார், சட்டியில் இருக்கிறது அகப்பையில் வரும்.
நன்றி
விழாக்குழு சார்பாக
சீனு