Showing posts with label பதிவர் சந்திப்பு - 2013. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு - 2013. Show all posts

6 Sept 2013

பதிவர் சந்திப்பு - நடந்தது என்ன ?

பதிவர் சந்திப்பு மண்டபம் : 

கடந்த பதிவர் சந்திப்பின் பொழுது மண்டபத்திற்கான செலவை முழுவதுமாக மக்கள் சந்தை அமைப்பினர் ஏற்றுக் கொண்டனர், சென்ற ஆண்டு மண்டபத்திற்காக ஆன செலவு முப்பதாயிரம் ரூபாய், ஒட்டு மொத்த செலவுகளில் கணிசமான ஒரு தொகை. 

மேலும் கடந்த வருடம் மண்டபம் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள், மண்டபத்தில் போதிய இடவசதி இல்லை, பயங்கர நெருக்கடியாய் இருந்தது, சின்ன மண்டபம் என்பதால் எதிரொலி படுபயங்கரமாய் இருந்தது, மேடையில் ஏறி பேசிய ஒருவரது பேச்சும் தெளிவாக அதேநேரம் சுத்தமாக கேட்கவில்லை. மண்டபம் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்ததால் கண்டுபிடிக்க சிரமமாய் இருந்தது...

அளவில் சிறிய, கொஞ்சம் உள்ளே தள்ளியிருந்த மண்டபத்தின் ஒருநாள் வாடகையே முப்பதாயிரம் ரூபாய், இதைவிட பெரிய அதே நேரம் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் மண்டபம் பிடிப்பது என்றால் மிகவும் சிரமம், ஒருவேளை அப்படி அமைந்தாலும் சந்திப்புக்காக கிடைக்கும் நிதி அனைத்தும் அதற்கு மட்டுமே செலவாகியிருக்கும். 

சென்னை போன்ற மாநகரம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்னை நமக்குப் பிடித்த அல்லது நமக்கு ஏற்ற மண்டபம் கிடைப்பதென்பது.  

மேற்கூறிய சவால்களை சமாளித்து ஒரு மண்டபம் தேடிபிடிக்க வேண்டும் அதே நேரத்தில் பட்ஜெட் கையைக் கடிக்கக் கூடாது, தற்செயலாய் திரையிசைக் கலைஞர்கள் மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்விற்கு விழாக்குழுவினர் செல்ல ஏன் இதை விசாரித்துப் பார்க்கக் கூடாது என்று விசாரிக்க, கடந்த முறை நாம் சந்தித்த அத்தனை சவால்களுக்கும் விடை கிடைக்க உடனடியாக மண்டபம் பதிவு செய்யப்பட்டு அதன் பின் சந்திப்பிற்கான தேதியும் குறிக்கப்பட்டது.

மிக முக்கியமான விஷயம் மண்டபம் கிடைக்கும் வரை பதிவர் சந்திப்பு தேதி குறிப்பிடப்படவில்லை என்பது தான். விசாலமான இடம், கடந்த வருடம் போன்ற நெருக்கடியான மேடை இல்லாமல், தாராளமான மேடை அமைப்பு, மாநகரின் முக்கிய பகுதியான வடபழனி பேருந்துநிலையம் அருகில், மண்டப வாடகை பத்தாயிரம் ரூபாய் விசாலமான பார்க்கிங் வசதியுடன். இத்தனை பிளஸ்கள் இருந்ததால் தான் உடனடியாக மண்டபம் பதிவு செய்யப்பட்டது. 

எல்லாம் இருந்தும் ஒரு குறை மண்டபத்தின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட் ஆகிப்போனது தான். ஆகஸ்டு -  செப்டம்பர் மாதம் என்பதால் ஓரளவேனும் குளிர்ச்சி நிலவும் சமாளித்து விடலாம் என்றொரு நம்பிக்கை இருந்தது, ஆனால் அப்படியொன்றும் நடந்துவிடவில்லை. ஒருநாள் முழுவதும் பதிவர்கள் எப்படி அமர்ந்து இருக்கப் போகிறார்கள் என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருந்தது. இந்நேரத்தில் உடனடியாக செயல்பட்டது உண்மைத்தமிழன் தான், தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் உடனடியாக நான்கு பெரிய பெடஸ்ட்ரைல் மின்விசிறி ஏற்பாடு செய்து நிலைமையை ஓரளவு சமாளித்தார், இருந்தும் பதிவர்கள் ஒட்டுமொத்தமாக வெக்கையை உணர்ந்தது மின்சாரம் தடைபட்ட நேரத்தில் தான்.

சற்றும் எதிர்பாராது நேர்ந்த இப்படியொரு அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இனிவரபோகும் பதிவர் சந்திப்பில் மண்டப விசயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும் என்பது நமக்கு விடப்பட்டிருக்கும் முக்கியமான சவால். 

இருந்தும் பெரும்பாலான பதிவர்கள் நிலைமையை உணர்ந்துகொண்டு அல்லது பொறுத்துக்கொண்டு பதிவர் சந்திப்பில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொண்டனர் என்பதை அன்றைய தின நிகழ்வுகள் எடுத்துக்காட்டின. 

சந்திப்புக்கு வந்த பதிவர்களிடம் சென்று வெக்கையடித்ததா, புழுங்கியதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்வார்கள், அதே நேரத்தில் இந்த நிகழ்வை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுங்கள் என்றால் வாழ்நாளில் மறக்க முடியா இனிய நிகழ்வு என்பது தான் பெரும்பான்மைக் கருத்தாக இருக்கும். பதிவர்களையும் பதிவர் சந்திப்பையும் பொறுத்தவரையில் குறைகளைத் தாண்டிய சாதனையில் இது ஒன்றுதானே முக்கியமானது.   

பதிவர் சந்திப்பு அறிமுகம் 

விழாவில் மிகமுக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுவது இந்த நிகழ்வுதான், முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் இந்த நிகழ்வுகளை எப்படி நடத்துவது என்பது பற்றிதான் பெரும்பாலும் விவாதித்தோம். அதிகமான திட்டங்கள் வகுத்தோம், பெரும்பாலானவை நடைமுறைக்கு ஒத்துவராமல் போகவே அவற்றைத் தவிர்த்துவிட்டோம்.  

1. பதிவர் விபரங்களை திரட்டி அவற்றை பிரசண்டேஷனாக திரையிடுவது, இதற்காக ஸ்கூல்பையன் பெரும்பாலான விபரங்கள் திரட்டிவிட்டார், இருந்தும் ஒவ்வொரு பதிவர் தனை அறிமுகம் செய்து கொள்ளும் போது அவரது தகவலை சரியான நேரத்தில் சரியான சமயத்தில் திரையிட வேண்டும், இதில் ஏதாவது ஒன்றின் கால அளவு மாறினாலும் குழப்பமும் பெருங்குழப்பமும் மிஞ்சும், குழப்பம் வரும் பட்சத்தில் அந்த பதிவர் தகவலை திரையிடாமல் விட்டால் தனிப்பட்ட வன்மம் என்றொரு குற்றச்சாட்டு எழும்.

2. மேலும் இந்த திரையிடல் படலத்தை பதிவர்கள் பற்றி அறிந்த பதிவர்களால் தான் செய்ய முடியும் வெளிநபர்களால் செய்ய முடியாது, இதற்கென்று தனியொரு பதிவரை நியமித்தால் பாவம் அவரால் இதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது, அவ்வளவு தூரம் பயணித்து வந்த பதிவர்களுடன் நேரம் செலவிட முடியவில்லை என்று அரசன் மீண்டும் மீண்டும் புலம்புகிறாரே அப்படி ஒரு நிலைமை இன்னும் ஒரு பதிவருக்கு ஏற்படும், இதை விழாக்குழு விரும்பவில்லை.

3. கடந்த முறை பதிவர் அறிமுகத்தில் நான்கு பதிவர்களை மேடையேற்றி அவர்கள் மூலம் மற்றபதிவர்களை மேடைக்கு அழைத்தோம். அப்படி அழைக்கப்படும் பொழுது ஆரூர் மூனாவை மேடைக்கு அழைத்த பதிவர் மிக (அ)நாகரிகமாக மேடைக்கு அழைக்க ஆருராருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் மேடை ஏறி ஏறிய அடுத்த நொடி கீழே இறங்க, இது போன்ற அசௌகரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதை விழாக்குழு விரும்பியது.

4. ஒவ்வொரு பதிவரும் தங்கள் இடத்தில் இருந்து மேடைக்கு சென்று, மேடையில் ஏறி அறிமுகம் செய்ய குறைந்தபட்சம் இரண்டு நிமிடம் என்று கணக்கிட்டால் (சிலர் அதிகமாக பேசுவர், சிலர் பெயர் மட்டும் கூறி விடைபெறுவார் என்பதால் இக்கணக்கு ஒரு நிகழ்தகவைச் சார்ந்தது) நூற்றுக்கும் மேற்பட்ட பதிவர்களை மேடையேற்ற ஆகும் மொத்த நேரத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்நேரத்தில் ஒவ்வொரு பதிவரையும் அவரது பின்புலத்துடன் மற்றொருவர் அறிமுகம் செய்து மேடை ஏற்றி இறக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த நிகழ்வும் அறிமுகம் என்ற சம்பிரதாயத்தில் கலந்து கரைந்து விடும்.

5. மேற்கூறிய நான்கு பாயிண்டுகளும் சாத்தியப்படுமா என்று உங்கள் எண்ண ஓட்டத்தில் கேள்விகேட்டு விடைதேடுங்கள், இதில் ஏற்படும் நேர விரயத்தை தவிர்க்க விழாகுழுவில் இருப்பவர்கள் மேடையேறி அறிமுகம் செய்யக் கூடாது அதன் மூலம் நேரத்தை  மிச்சப் பிடிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது, அதே நேரம் இக்குழுவில் கவியாழி, ஸ்கூல்பையன், ரூபக்ராம் என்ற மூன்று புதியவர்கள் உள்ளனர், அவர்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 

அறிமுகம் என்ற சம்பிரதாயத்தை ஒட்டுமொத்தமாக நீக்கும் பொழுது அங்கே பதிவர் சந்திப்பிற்கான அர்த்தம் மறைந்து விடுகிறது, இந்நிகழ்வை கால, சூழ்நிலைகளைப் பொறுத்து மாற மற்றும் மாற்றியமைக்க வேண்டும். அது விழாக்குழு கையில் உள்ளது.

இம்முறை பதிவர் சந்திப்பு அறிமுகம் சம்பிரதாயமாக நடந்ததாதா இல்லை சம்பிரதாயத்திற்கு நடந்ததா என்றால், சென்ற முறையை விட மிக ஒழுங்காக மிக நேர்த்தியாக நடந்தது. ஏற்கனவே முடிவு செய்தபடி ஐந்து ஐந்து பேராக அழைக்கப்பட்டு எவ்வித குழப்பமும் இல்லாமல் மிக நேர்த்தியாக நடந்தது, கடந்த  முறையில்;ஏற்பட்ட குழப்பம் பெருமளவில் தவிர்க்கப்பட்டது, சென்றாண்டு மேடையில் அறிமுகம் நடந்த பொழுது சக பதிவர்கள்  தங்கள் அருகில் இருந்த பதிவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர் அதனால் அறிமுக படலம் கொஞ்சம் பிசுபிசுத்துப்போனது, இம்முறை பெரும்பாலான பதிவர்கள் அறிமுகத்தை ஈடுபாட்டுடன் கவனித்தனர், பதிவர்கள் தாங்கள் அறிமுகம் செய்யும் பொழுது தங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொண்டனர் இவை எல்லாவற்றிக்கும் மேலாக அறிமுகப்படலமானது குறித்த நேரத்தில் நிறைவாக நிறைவடைந்தது.

பதிவர்கள் தனித்திறன் :

அனைவருமே பெரிதும் எதிர்பார்த்த ஒரு நிகழ்வு, தயார் செய்வதற்கு போதிய காலஅளவு இல்லாததால் மட்டுமே அறிவித்த இரண்டு நாடகங்கள் நிறுத்தப்பட்டன, மயிலன், தேவாதிராஜன் அவர்களின் கவிதை குடந்தையூர் சரவணனின் பலகுரல், கோவை ஆவியின் பதிவர் சந்திப்புப் பாடல் என இனிதே நிறைவேறியது, இந்நேரத்தில் மதுமதியின் குறும்படத்தைக் கூட தனித்திறன் பகுதியில் சேர்த்துக் கொள்ளலாம்.

பத்து நிமிடத்திற்குள் எடுக்கப்பட்டிருக்கும் பதிவர்களின் குறும்படங்களை சந்திப்பின் இடைவெளியில் அவ்வபோது திரையிடலாம். இது ஒரு நல்ல ரிப்ர்ஷிங்காக இருக்கும். மற்ற பதிவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவது போலவும் இருக்கும்.

மூத்தபதிவர்கள் கவுரவித்தல், கவியரங்கங்ள் மேலும் மேலும் :

கடந்த பதிவர் சந்திப்பில் மூத்த பதிவர்களை கவுரவம் செய்தாயிற்று இம்முறை என்ன செய்யலாம் என்ற வாதம் எழுந்த போது பதிவுலகில் கதை கவிதை கட்டுரை போன்ற ஏதேனும் போட்டி வைத்து பரிசளிக்கலாம் என்றும் சாதனை புரிந்த பதிவர்களை கவுரவிக்கலாம் என்றும் விவாதிகப்பட்டது போட்டிவைத்து பரிசளிக்க கால அவகாசம் இல்லை, சாதனைப் பதிவர்களை எந்த அளவீட்டில் தேர்ந்தெடுப்பது என்பதில் அளவீட்டை நிர்ணயம் செய்வதில் முரண் ஏற்பட்டது, பின் அதனை பதிவுலகில் சர்வே நடத்தி அதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அதற்கும் கால அவகாசம் இல்லை, அரை மனதுடன் இத்திட்டமும் கைவிடப்பட்டது. அடுத்த சந்திப்பு நடத்தப் போகிறவர்கள் தயவு செய்து இவற்றைக் குறித்துக் கொள்ளுங்கள்.

கவியரங்கம் என்பது தனித்திறன் என்ற ஒட்டுமொத்த வடிவத்திற்குள் அடங்கிவிட்டது. கவிதை எழுதிக் கொண்டுவந்தவர்களிடம் கவியரங்கம் கிடையாது என்றோ பாடப்போகிறேன் என்றவரை கலாய்த்து அனுப்பவோ இல்லை.  

புத்தக வெளியீடும் மாலை நேரமும் :

புத்தக வெளியீடு என்பது பதிவர் என்ற நிலையில் இருந்து தனிப்பட்ட ஒரு பதிவரை முன்னிறுத்துவது என்ற நிலையை நோக்கி நகருகிறது. அதாவது இந்த நிகழ்வில் புத்தகம் வெளியிடும் பதிவர்கள் தங்கள் குடும்பம் உறவினர்கள் நண்பர்கள் என்னும் வட்டத்தையும் உள்ளிழுக்கின்றனர், அவர்கள் வரக் கூடாது என்று சொல்லமுடியாது காராணம் இந்த நிகழ்வு அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது அதனால் நண்பர்களை உறவினர்களை அழைத்து வருவதில் தவறில்லை, ஆனால் ஒருவேளை புத்தக வெளியீடானது ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகரிக்கும் போது ஒரு தனிநபர் விழாவாகி பெரும்பான்மை பதிவர்களுக்கு சலிப்பூட்டுவதாக அமைவதற்கான வாய்ப்புகள் ஏராளம், முக்கிய பிரச்சனை என்னவெனில் பதிவர் சந்திப்பு நிகழ்வுக்கான காலத்தை அவர்கள் எடுத்துவிடக் கூடாது.

அதனால் சந்திப்பின் கடைசி நிகழ்வாக இதை வைத்தால் ஒருவேளை நேரம் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பிழையேதும் இல்லை, என்பது தான். நாங்கள் எதிர்பார்த்தது போலவே 45 நிமிடங்கள் தாமதமாகத் தான் இந்நிகழ்வு முடிந்தது.   

ஒருவேளை புத்தக வெளியீடு காலையில் இருந்திருந்தால் பதிவர்கள் அழைத்து வரும் நண்பர்களுக்கான உணவு ஏற்பாடு? விழாவிற்கு வந்த பதிவர்களின் நண்பர்களை சாப்பிடாக்கூடாது என்று கூறுவது தமிழனின் விருந்தோம்பல் பண்பில்லை. அதே நேரத்தில் சந்திப்புக்காக வரும் பதிவர்களுக்கு திருப்தியாக உணவளிக்க வேண்டியது நம் கடமை.

முன்னேற்பாட்டுக் கூட்டங்களில் விவாதம் செய்யப்பட்டு, விவாதம் வளர்ந்து ஒருமனதாக முடிவுசெய்யப்பட்ட ஒன்று தான் புத்தக வெளியீடு என்பது நிகழ்ச்சி நிரலில் மாலை இடம் பெற வேண்டும் என்பது.

அதே நேரத்தில் புத்தகம் வெளியிடும் பதிவர்களிடம் ஐந்தாயிரம் ருபாய் வசூலிகப்பட்டதை அவர்கள் நண்பர்கள் விருந்தோம்பலுடன் யாரும் இணைக்க வேண்டாம், நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க நிதியளித்தல் விதிகளில் ஒன்றாக சேர்க்கப்பட்ட விதி. தனியொரு நிகழ்வாக புத்தக வெளியீடு நடத்துவதற்கு ஆகும் செலவை விட இது குறைவு தான் என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.  

உணவு பரிமாறுதல் : 

பப்பே முறையில் பரிமாறப்பட்ட உணவை உண்ண யாரும் பெரிய அளவில் கஷ்டப்டவில்லை என்று நினைக்கிறன், அப்படி ஒருவேளை கஷ்டபட்டிருந்தால் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவிக்கிறோம்.

மேலும் பந்தியில் அமர்ந்து இலையில் பரிமாறியிருந்தால் கூட இவ்வளவு கலகலப்பாக பேசிக் கொண்டே உண்டிருபார்களா என்று தெரியவில்லை, இதில் அத்தனை பதிவர்களும் கூட்டமா கூட்டமாக நின்று, சகபதிவர்களுடன் அளவளாவிக் கொண்டே உண்டனர், ஒருவகையில் இது போற்றற்குறியது தானே.   

விழாக்குழுவினர் மேடை ஆக்கிரமிப்பு :

விழாக்குழுவினர் சிறப்பு விருந்தினருக்கு மரியாதை செய்யும் பொழுதும், நினைவுப் பரிசு பெறும்போதும் மட்டுமே மேடையை ஆக்கிரமித்தனர், மேலும் நினைவுப் பரிசு வழங்கும் போது அதனை கொஞ்சம் நிதானமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம், நேரமின்மையால் அவசர அவசரமாக நடந்து முடிந்த ஒரு நிகழ்வு என்றால் அது விழாக்குழுவினருக்கு நினைவுப் பரிசுவழங்கும் நிகழ்வு தான், எவ்வளவு அவசரம் என்றால் மதுமதிக்கான நினைவுபரிசை தான் நான் கண்மணி குணசேகரன் அய்யா அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டேன், என்னைப் பொறுத்தவரை இது புரிந்துகொள்ளக் கூடிய நிகழ்வு, சுட்டிகாட்டப்பட வேண்டிய தவறு இல்லை. 

மேலும் விழாக்குழுவை சேர்ந்தவர்கள் தங்களை முன்னிலைப்படுத்தியோ இல்லை மேடையை ஆக்கிரமித்து சுயதம்பட்டம் அடிக்த்தோ ஒரு இடத்திலும் நடந்துகொள்ளவில்லை என்பதை விரைவில் வர இருக்கும் வீடியோ கவரேஜ் கூறும். 

பதிவர் சந்திப்பு நேரலை :

பெரியார்தளம் திரு அகரன் அவர்கள் நேரலை விசயத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டார், அவரை கவுரவிக்காதது சிறு குறையே, சந்திபிற்கு முந்தின தினம் இரவில் இருந்து நடந்த ஒரு பெரும்போராட்டதிற்கு பின்தான் அவரால் நேரலையை செயல்பட முடிந்தது. 

வாடகைக்கு எடுத்த மடிக்கணிகள் ஒழுங்காக ஒத்துழைக்காதது முதல் காரணம், எதிர்பாராத விதமாக தோழர் அகரனிடம் இருந்த ஆடியோ இன்புட் பழுதடைந்தது மற்றொரு காரணம், அதை சரி செய்ய அவர் எவ்வளவோ முயன்றார் இருந்தும் முடியவில்லை. பாவம் அவராலும் என்ன செய்துவிட முடியும், விரைவில் சந்திப்பு வீடியோ கவரேஜ் பதிவேற்றப்படும், எதிர்பாரா விதமாக ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். அகரனின் சேவைக்கு தலை வணங்குகிறோம். நன்றி அகரன்.            

தொகுப்பாளர்கள் :

ரெயின்போ பண்பலையில் தொகுப்பாளர் என்ற முகத்தில் தொடங்கி பன்முக சாதனையாளராக வலம் வரும் சுரேகா, இவருடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கோவை அகிலா மற்றும் கோவை எழில் ஆகியோர் தொகுப்பாளர்களாக செயல்பட வேண்டும் என்பது கூட்டங்களில் கலந்தாலோசித்து சம்மந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று எடுக்கப்பட முடிவு.

ஒருவேளை யாருக்கேனும் ஆர்வம் இருந்து, நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கருத வாய்ப்பு இருக்குமானால் இனி வரபோகும் பதிவர் சந்திப்பு நடத்த இருப்பவர்களுக்கு கூற விரும்புவது "பதிவர் சந்திப்பை தொகுத்து வழங்க ஆர்வமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளவும்" என்று பதிவுபோட்டு தகவல்களை பெற முயற்சிக்கவும். ஆனால் ஆர்வமிருப்பவர்களிடம் தொகுத்து வழங்குவதற்கான குறைந்தபட்ச திறமை உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வேண்டியது விழாக்குழுவினருக்கு விடப்படும் மற்றொரு சவால்.  மேலும் நேரத்தை கச்சிதமாக கையாள வேண்டிய பெரும்பொறுப்பு தொகுப்பாளர்கள் கையில் தான் உள்ளது.

உ.ம் : இந்த சந்திப்பில் பதிவரே அல்லாத ஒருவர் பேருரை ஒன்று கொடுக்கத் தொடங்க அவரை மிகத் திறமையாக சமாதனம் செய்து அந்த பேச்சை முடிவுக்கு கொண்டுவந்தார் சுரேகா, அந்த திறமை மிக முக்கியமானது அவசியமானது.    

இந்தப் பதிவில் சந்திப்பானது எப்படி நடந்தது என்பது பற்றி மட்டும் தான் எழுதியுள்ளேன், விழாக்குழு எப்படி உழைத்தது என்பதை இன்னும் எழுதவில்லை. விழாக்குழுவின் உழைப்பை தனியொரு பதிவில் பகிர்கிறேன். (ஏற்கனவே நான் பெருசா எழுதுகிறேன் என்று ஓட்டுராயிங்க, இந்தப் பதிவின் அவசியம் கருதி தான் எசமான் பதிவு பெருசாச்சு :-)  

ஒவ்வொரு வாரமும் முன்னேற்பாட்டுக் கூட்டம் என்றபெயரில் நாங்கள் கூடி விவாதித்து செயல்படுத்திய விசயங்களை தான் மேலே முடிந்தளவில் தொகுத்துள்ளேன், இந்த விஷயங்கள் எதிர்கருத்து கூறுவோறுக்காக எழுதப்பட்டவை அல்ல.

நாலு பதிவர் ஒண்ணா சேர்ந்து சந்திப்பு நடந்துறாங்க நாம பக்க பலமா இருப்போம் என்றளவில் சக பதிவர்களை மதித்து எல்லாவகையிலும் உறுதுணையாக, உற்சாகபடுத்துபவர்களாக இருக்கிறார்களே பெரும்பாலான பதிவர்கள்,அவர்கள் விழாக்குழுவினரை பொறுப்பில்லாமல் நடந்து கொண்டார்கள் என்று நினைத்துவிடக் கூடாது என்பதற்காகவும், இது போன்ற சந்திப்புகள் சிற்சிறு சலசலப்புகளால் நடைபெறாமல் நின்றுவிடக் கூடாது என்பதற்காகவும் மட்டுமே எழுதினேன்.    

இப்போதும் சொல்கிறேன் இப்படி ஒரு விளக்கபதிவு எழுதியதற்காக நான் வருத்தபடுகிறேன். அரசனும் ரூபக்கும் ஆரூரும் மெட்ராசும் மதுமதியும் உழைத்த உழைப்பை பெரும்பதிவாக எழுதுவதையே நான் விரும்புகிறேன். 

ராஜபாட்டை ராஜா, சிவாகாசிகாரன், அப்துல்பாசித், பிரபு, சதீஷ் அண்ணா, சங்கரலிங்கம் அய்யா, ஆவி இவர்களுடனான நினைவுகளை எழுதவே விரும்புகிறேன்.    

குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தவறில்லை, மன்னிப்புக் கேட்கவும், திருத்திக் கொள்ளவும் தயார், ஆனால் நீங்கள்  நோக்கிய இடமெல்லாம் குறைகளாக மட்டுமே தெரிந்தால் குறைகள் நோக்கிய இடத்தில் மட்டும் இல்லை என்பதை உணருங்கள்.     

இறுதியாக குறைகள் இல்லா மனிதனும், குறைகள் இல்லா நிகழ்ச்சியும் இல்லை, சிறு குறையோ பெருங்குறையோ அவை உங்களை வருத்தப்படுத்தி இருக்கும் என்றால் விழாக்குழு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள்.

இன்னும் விளக்கம் தேவை என்றாலும் எழுதத் தயார், சட்டியில் இருக்கிறது அகப்பையில் வரும். 

நன்றி 
விழாக்குழு சார்பாக 
 சீனு

30 Aug 2013

வழிகாட்டி - பதிவர் சந்திப்புக்கு வரவிருக்கும் வெளியூர் நண்பர்கள் கவனத்திற்கு


பிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 17M, 17E. M17M       

அனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.

17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.

குறிப்பு :  17M, 17E. M17M  தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.

கோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : 70A, M70A, G70, D70 மற்றும் M27

கோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும். 

குறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம்  நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.      

70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.  

மற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.

தாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு : 

பேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும்  M18M

அனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது). 

தாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.

மாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :

பேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)

சென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.

ஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.

அல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.                           

வடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது 

பேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)  

வடபழனி டிப்போவில் இருந்து  சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால்  தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முகவரி 

Masafi Guest House
No. 5, Gangappa Street, (Opp. to AVM Studio) Vadapalani,
Chennai - 600026.
Ph: 044 - 42136173 / 23766173 / 23766174

பதிவர் சந்திப்பு நடைபெறும் இடம் 

திரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை - 
26. கமலா தியேட்டர் அருகில்.

நாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை. 




மேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 

அதிகாலை ஐந்து மணி முதல் 10 மணி வரை 

தொடர்புக்கு 

சீனு        : 9940229934
அரசன்  : 9952967645
ரூபக்     : 8148915596

10 மணிக்கு மேல் தொடர்புக்கு 

சிவா      : 9841611301
சீனு        : 9940229934
ரூபக்     : 8148915596

விளம்பரம் :-)

எனது சமீபத்திய சிறுகதை : அம்முவும் அகாலமும் 

தமிழ் வலைப்பதிவர் குழுமம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. உங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்த்து 

சீனு 

22 Aug 2013

பதிவர் சந்திப்பு - 2013 - நீங்கள் அறியாத சில தகவல்கள் & வாங்கண்ணா வணக்கங்கண்ணா

பிள்ளையார் சுழி 

மே மாதம் முடியும் வரையிலும் யாருமே பதிவர் சந்திப்பைப் பற்றி பேசத் தொடங்கி இருக்கவில்லை. என்னுள்ளும்  ஒரு சந்தேகம் தொடர்ந்து கொண்டே இருந்தது, அது இவ்வருடம் பதிவர் சந்திப்பு நடக்குமா நடக்காதா என்று. 


பதிவர் ராஜ் சென்னை வந்தபோது, புலவர் அய்யா வீட்டில் வைத்து நடந்த ஒரு திடீர் சந்திப்பில் தான் அண்ணன் மெட்ராசும் ஆரூர் மூனாவும் இவ்வருட பதிவர் சந்திப்பிற்கான பிள்ளையார் சுழியைப் போட்டனர். ஆனால் கடந்த வருடம் பதிவர் சந்திப்பை முன்னின்று வழிநடத்திய மூத்த பதிவர்கள் யாரும் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை, காரணம் சென்ற வருடம் பதிவர் சந்திப்பு முடிந்த பின் ஏற்பட்ட சில தேவையில்லாத பிரச்சனைகள் அவர்களை சோர்வடையச் செய்திருந்தது. இதனால் சென்றமுறை ஆர்வமாய் வழிநடத்திய மூத்த பதிவர்களை இம்முறை இளைய பதிவர்கள் உற்சாகப்படுத்த அவர்களும் பழைய உற்சாகத்துடன் இணைய இனியும் காலம் தாழ்த்த வேண்டாம் என்று உற்சாகமாக களத்தில் இறங்கியது பதிவர் குழு. 

பதிவர் சந்திப்பு முன்னேற்பாட்டுக் குழு 

ஜூலை முதல் வாரம் கே.கே நகரில் இருக்கும் சிவன் பார்க்கில் தொடங்கிய முதல் முன்ஏற்பாட்டுக் கூட்டமானது எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படாமலேயே கலைய, பின் வந்த வாரங்களில் சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கியது பதிவர்கள் குழு. வரவேற்புக் குழு, நிகழ்ச்சி மற்றும் பதிவர் ஒருங்கிணைப்புக் குழு, உணவுக் குழு என்று சில குழுக்கள் பிரிக்கப்பட்டு வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு பதிவர் சந்திப்பு நடத்த தொழிற்களம் நிறுவனம் தாமாக முன்வந்து உதவினர், இம்முறை அதுபோல் ஸ்பான்சர் எதுவும் கிடைக்காததால் விருப்பமுள்ள அனைத்து பதிவர்களிடமும் தம்மால் இயன்ற பங்களிப்பை அளிக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 


இதில் நான் அதிசயித்து வியந்த மற்றும் மிக மகிழ்ச்சியான விஷயம் யாதெனில் தம்மால் கலந்து கொள்ள முடியாதென்றாலும் பதிவுலகில் நம்மோடு பயணிக்கும் சக பதிவர்கள் சேர்ந்து நடத்தும் விழா என்ற எண்ணத்தோடு பல வெளிநாட்டுவாழ் பதிவர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து மிக சிறப்பாக உதவினர். எவ்வளவு பெரிய விஷயம் இது, பதிவுலகில் நமக்கே தெரியாமல் மறைமுகமாக பொதிந்து கிடக்கும் ஒற்றுமையின் வெளிபாடாகவே இதனைக் கருத முடிகிறது. 

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல பதிவர்கள் கலந்து கொள்ள இருக்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர் பதிவர் குழுவைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு இருக்கும் பல குடும்ப மற்றும் அலுவல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் விழாவிற்கென தனியாக நேரம் ஒதுக்கி எந்த ஒரு வேலையிலும் குறை ஏற்பட்டு விடாதபடி பார்த்துப் பார்த்து செய்து கொண்டிருக்கும் இவர்களது உழைப்பிற்கு முதல் வணக்கங்கள். இதில் குறிபிடப்பட்ட வேண்டிய மிக முக்கியமானவர்கள் மதுமதி, ஆருர்மூனா செந்தில், வாத்தியார் பாலகணேஷ் அரசன் மற்றும் ஸ்கூல் பையன். காரணம் இவர்களுக்கு ஒத்துகப்பட்ட பணிகளின் சுமை சற்றே அதிகம்.

ஒவ்வொரு வார ஞாயிறும் தங்கள் மதிய தூக்கத்தைத் தியாகம் செய்து! மீட்டிங்கில் கலந்து கொள்ளவே தனி உற்சாகமும் தெம்பும் வேண்டும். கடந்த பத்து வாரங்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம். ஒவ்வொரு வாரமும் கூட்டம் நடத்த இடமளித்து உதவி வரும் டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கு சிறப்பான நன்றிகள்.

டிஸ்கவரி புக்பேலஸ் :  

டிஸ்கவரி புக் பேலஸின் புத்தக விற்பனை நிலையம் பதிவர் சந்திப்பு நடைபெறும் அரங்கில் இயங்க இருக்கிறது. இந்த விற்பனை நிலையம் மூலம் விற்கப்படும் அனைத்து புத்தகங்களும் பதிவர்களுக்கான சிறப்பு சலுகையாக பத்து சதவீதம் தள்ளுபடி விலையில் விற்கப்படும் என்பதை வேடியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள், மேலும் அணைத்து முன்னனி பதிப்பகங்களின் புத்தகங்களும் விற்பனை இங்கே ஆக இருக்கிறது.


உங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை டிஸ்கவரி புக்பேலசின் ஆன்லைன் மூலமாக முடிவுசெய்து டிஸ்கவரியின் என்ற 044-6515 7525 எண்ணுக்கு கால் செய்து கூறினால் பதிவர் சந்திப்பு அன்று  புத்தகங்களை உங்களுக்காக எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். பதிவர்களுக்காக பல சலுகைகள் செய்து தரும் வேடியப்பன் அவர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றிகள்.

புத்தக வெளியீடுகள் 

பதிவர் சந்திப்பின் மற்றொரு சிறப்பம்சமாக கருதப்படுவது நாம் எழுதிய புத்தகங்களின் வெளியீடுகள். இம்முறை நான்கு பதிவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட இருக்கிறது. அவர்களுக்கு உற்சாகமான வாழ்த்துக்கள் 


பதிவர்கள் தங்களின் அடுத்த படிநிலையாகக் கருதும் தாங்கள் எழுதிய புத்தகங்களை பதிவர் சந்திப்பின் மூலம் வெளியிடுவது நமக்கும் பெருமையே. ஆனால் இதில் நாம் சந்திக்கும் சவால் ஒன்றே ஒன்று, அது நேரமின்மை. அதனால் புத்தகம் வெளியிடும் பதிவர்கள் நேரத்தைக் கணக்கில் கொண்டு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் புத்தக வெளியீட்டை முடித்துக் கொண்டால் காலதாமதத்தை தவிர்க்க முடியும்.

மவுன அஞ்சலி 

கடந்த வருடம் மறைந்த மூன்று பதிவர்களான ஆயிரத்தில் ஒருவன் மணி, டோட்ன்டு ராகவன் மற்றும் பட்டாப்பட்டி ஆகியோருக்கு ஒருநிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.

சிறப்பு அழைப்பாளர் :


எழுத்தாளர் மற்றும் மிகச் சிறந்த பேச்சாளரான எழுத்தாளர் உயர்திரு பாமரன் அவர்களின் சிறப்புரை நிகழ இருக்கிறது. பதிவர்களுக்கு மற்றும் எழுத்துச் செழுமைக்கு தேவையான விசயங்களைக் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.       

பதிவர் தனித்திறன் நிகழ்வுகள் 

நம்முள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர இது ஒரு சிறிய சந்தர்ப்பம், ஆர்வமுள்ள பதிவர்கள் முன்னேரே ஆருர்மூனா செந்திலையோ அல்லது நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரையோ தொடர்பு கொண்டால் நலம்.
  • மெட்ராஸ், ஆரூறார், செல்வின் மற்றும் பிலாசபி இணைந்து ஒரு மேடை நாடகத்திற்கு தயாராகி வருகின்றனர்.
  • சங்கத்து தீவிரவாதி (சதீஷ்) ஒரு மாறுவேடப் போட்டிக்கு தயாராகி வருகிறார் அது சஸ்பென்ஸ்.
  • திண்டுக்கல் தனபாலன் (டி.டி) ஒரு மேடை நாடக ஸ்க்ரிப்ட்டுடன் தயாராக உள்ளார், நடிப்பதற்கு மூன்று பேர் தேவை. உங்களில் யார் அந்த மூன்று பேர். ஆர்வமாய் உள்ளவர்கள் என்னையா அல்லது டிடியையோ தொடர்பு கொள்ளுங்கள்.           

பதிவர் சந்திப்புக் கீதம் 

பதிவுலகில் நமது நண்பர்கள் காட்டிவரும் ஆர்வம் அளப்பரியது. இவ்விசயத்தில் என்னை வெகுவாய்க் கவர்ந்தவர் கோவை ஆவி. பதிவுலகில் மிக ஈடுபாட்டுடன் வலம் வரும் ஆவி பதிவர்களுக்காக ஒரு பாடலை எழுதி தானே மெட்டமைத்துப் பாடியுமுள்ளார்.  



ஆவிக்கு பதிவுலகம் மீது இருக்கும் ஆர்வம் அளப்பரியது என்று எப்படி சொல்கிறேன் என்றால் கடந்த மாதம் ஆவிக்கு ஒரு மிகப் பெரிய விபத்து நேர்ந்து தனது இருகைகளிலும் முறிவு ஏற்பட்டு கட்டுண்டார், அந்த நிலையிலும் உற்சாகமாக எழுதிய பாடல் தான் இந்த பதிவர் ஆந்த்தம்.

தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள் 
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை 
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை 

இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம் 
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..

மிக்க நன்றி ஆவி.

உணவுக் குழு 

ஆருர்மூனா, ராஜீ அக்கா மற்றும் சிராஜுதீன் தலைமையில் சூடானா சுவையான வெஜ் மற்றும் நான் வெஜ் நமக்காக காத்துள்ளது, வாருங்கள் அவற்றையும் ஒரு பிடிபிடிப்போம்.      

குட்டனுக்கு ஒரு வேண்டுகோள் 

குசும்பு குட்டன் அவர்கள் தினமும் அவரது பதிவில் பதிவர் சந்திப்புக் குறித்து மிக உற்சாகமாக எழுதி வருகிறார். முகம் தெரியாத குட்டனின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். குட்டன் அவர்களே தங்களது தரிசனம் கிடைக்குமா? உங்களை எதிர்பார்த்து உங்கள் வாசகன் :-)))))


பதிவர் சந்திப்பிற்கான பணஉதவி 

பதிவர் சந்திப்பிற்காக உங்கள் பங்களிப்பைத் தர விரும்பினீர்கள் என்றால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கு மூலம் செலுத்துங்கள்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
 
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093

Contact :

044- 24849775 

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645
   

வாங்கண்ணா வணக்கங்கண்ணா 


இதுவரை நாம் படித்து ரசித்த எழுத்துக்களின் சொந்தக்காரர்களையும், புதிய அறிமுகங்களையும் தர இருக்கும் பதிவர் சந்திப்பை நிகழ்த்த தலைநகரம் உற்சாகமாக தயாராகி வருகிறது. நீங்கள் தயாராகி விட்டீர்களா...! உங்கள் அனைவரையும் ஆவலுடன் எதிர்பார்த்து... 

உங்கள் நண்பன் 
சீனு