Showing posts with label நைட்ஷிப்ட். Show all posts
Showing posts with label நைட்ஷிப்ட். Show all posts

24 Dec 2013

நைட்ஷிப்ட் - விடுகதையா இந்த வாழ்க்கை !

"Hi this is srinivasan from legacy team, joining the bridge call"

'ஹேய்ய்ய்ய் ஸ்ரீஈஈஈஈஈஈநிவாசன் ஹௌ ஆர் யு', மிகபெரிய உற்சாக சிரிப்புடன் பேசத் தொடங்கும் அந்த அமெரிக்க அக்காவுக்கு நான் எப்படி இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொண்ட பின்பே மற்ற விசயங்கள் குறித்து பேசத்தொடங்கவேண்டும். பொதுவாகவே அமெரிக்கர்களைப் பொருத்தவரையில், உயிர் போகும் விசயமாக இருந்தாலும் சரி அல்லது நம்மைக் கழுவி ஊத்தப் போகும் விசயமாக இருந்தாலும் சரி, பேசவந்த விஷயத்தை ஆரம்பிப்பதற்கு முன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்தை நம்மால் மிஞ்சவே முடியாது! 

நான் பேசிக் கொண்டிருப்பது 'பிரிட்ஜ் கால்' என்பதால் என்னை விளித்த அந்த அமெரிக்க அக்காவுடன் இன்னும் சிலரும் இருந்தனர்.  அலுவலகத்தைப் பொறுத்த வரையில் அணை உடைந்து வெள்ளம் வரப்போகிறது என்ற நிலையிலோ அல்லது வெள்ளம் தலைக்கு மேல் ஓடப்போகிறது என்ற நிலையிலோ அணையில் ஏற்பட்டிருக்கும் ஓட்டையை அடைப்பதற்காக சகல வல்லுனர்களும், சக வல்லுனர்களும், இன்னபிற பெரிய பெரிய தலைகளும் ஒன்று கூடி ஒரு கூட்டம் போடுவார்கள். இக்கூட்டமனாது ஒரு கான்பரன்ஸ் கால் மூலம் நடக்கும், அதாவது அமெரிக்காவில் இருந்து அவர்களும் இந்தியாவில் இருந்து நாமும் ஒருங்கிணைந்து ஓட்டையை அடைப்பது குறித்து தீர ஆலோசித்து முடிவெடுத்து அடைக்கவேண்டும். இந்த தொலைபேசி உரையாடலை பிரிட்ஜ் கால் என்பார்கள். 

அப்படிப்பட்ட ஒரு பிரிட்ஜ் காலில் உடையக் காத்திருக்கும் அணையை தடுத்து நிறுத்துவதற்கான ஆணையை என்னிடம் இருந்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தது அந்த பிரிட்ஜ் கால், இடையிடையே அந்த அமெரிக்க அக்கா தன் அருகில் இருந்தவர்களுடன் நமுட்டுச் சிரிப்புடன் என்னைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தாள், அவள் என்ன பேசிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை. கவனிக்கவும் முடியாது காரணம் (i)அணையை அடைக்க வழி  தேட வேண்டும் (ii) அணையை அடைக்க நான் தேடிய வழியை அவர்களிடம் போன் வாயிலாக கூற வேண்டும், (iii) இதுவும் போதாது என்பதற்காக மின்னஞ்சலும் செய்ய வேண்டும். (iv) இவற்றிற்கு இடையில் அணையை அடைக்க வழியும் தேட வேண்டும்.  

நான் வசமாக சிக்கிக் கொண்டிருப்பதோ நைட் ஷிப்ட். துணைக்கு எனதருகில் நண்பர்கள் யாருமில்லாமல் தன்னந்தனியாக அணை  கட்டிக் கொண்டிருந்தேன். திடிரென்று அக்காவிடம் இருந்து மிரட்டலான தொனியில் கட்டளை ஒன்று வந்து சேர்ந்தது. புது உத்தரவு. 'இன்னும் பத்து நிமிடத்தில் அணையை சரி செய்தே ஆக வேண்டும், இல்லையென்றால் பெரிய பிரச்சனையாகிவிடும்'.  வேறு வழியில்லை. முடித்தே ஆக வேண்டிய கட்டாயம். பரபரப்பான நிமிடங்கள் தொடங்கியது. 

"ஹே ஸ்ரீநிவாசன் ப்ளீஸ் மேக் இட் பார்ஸ்ட், வீ டோன்ட் ஹவ் இனாப் டைம்"

அணையை அடைக்க வழி கண்டுபிடித்துவிட்ட ஆர்வத்தில், பரபரப்பின் உச்சத்தில், நானும் "யா யா, வி ஹவ் டன் வித் எவ்ரிதிங், ப்யு மினிட்ஸ், ப்ளீஸ் ஹோல்ட் பார் ப்யு மினிட்ஸ்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே 

"சீனு..சீனு"         

"வெயிட்..வெயிட்...கைண்ட்லி வெயிட்... ஜஸ்ட்... ப்யு மினிட்ஸ்"  

"சீனு..சீனு.. எந்தில, என்னத்த உளறிகிட்டு இருக்க...மணி ரெண்டாகுது, எந்திச்சி சாப்ட்டு தூங்கு...",  என் பக்கத்தில் அமர்ந்துகொண்டு அம்மா உலுக்கும் போதுதான் தெரியும் இவ்வளவு நேரம் நிஜம் போல் கண்டுகொண்டிருந்த அத்தனையும் கனா என்று. 

"போங்கம்மா, நல்ல தூக்கம் வருது, தூங்கும் போது எழுப்பாதீங்கன்னு நூறு தடவ சொன்னாலும் உங்களுக்கு புரியவே புரியாது" அம்மாவைத் திட்டிவிட்டு மீண்டும் தூங்கலாம் என்று கண்களை மூடினாலும், என்னுடைய மனம் முழுவதும், அந்த கனவின் நிஜத்திலேயே லயித்திருக்கும். இது போன்ற அலுவலகம் சார்ந்த கனவுகள் எப்போதாவது அபூர்வமாக வருமென்றாலும் நைட்ஷிப்ட் செல்லும்போது மட்டுமே அனுபவப்பூர்வமாக வந்துத்தொலைக்கும்.

நந்தாவின் நிலைமை இன்னும் மோசம். அவனுடைய ப்ராஜக்ட் இருக்கும் மூன்றாம் மாடியில் இருநூறுபேர் அமரக்கூடிய அந்த அறையில் அவனைத் தவிர வேறு யாருமே இருக்க மாட்டார்களாம். அந்த வகையில் எனக்குப் பிரச்சனை இல்லை. பாவம் அவன்தான் ஆவிகளுடனும் மோகினிப் பிசாசுகளுடனும் அளவளாவிக் கொண்டிருக்க வேண்டும். ஷிப்ட் முடிந்து அறைக்கு வந்தால் அத்தனை பேரும் வேலைக்கு சென்றிருப்பார்கள். தனிமை மட்டுமே வாழ்க்கை.  "சத்தியமா சொல்றேன், அங்க இருந்தா பைத்தியம் புடிச்சிரும்டா" என்பவனை சமாதனப்படுத்த என்னிடம் வார்த்தைகள் இல்லை.

சரியாக இரவு பத்து மணிக்கு அலுவலகத்தினுள் நுழையும் போது தாங்கள் செல்ல வேண்டிய பேருந்தைப் பிடிக்க ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டிருப்பார்கள். "ஏறி தூங்குனா போதும்" என்ற மனநிலையில்தான் அவர்களது ஓட்டமும், ஓட்டம் சார்ந்த நடையும் இருக்கும்.

அன்றொரு இரவும் அப்படியான ஒரு இரவுதான். அலுவலக வளாகத்தினுள் நடந்து கொண்டிருந்தேன். மார்கழிப்பனி இரவை நனைத்துக் கொண்டிருந்தது. (ஒருவேளை இன்னும் சில வருடங்களுக்குப் பின் வரப்போகும் வருங்கால சந்ததிகள் இப்பதிவைப் படிக்க நேர்ந்து, அந்நேரம் மார்கழி என்றால் என்னவென்றே தெரியாமல் குழம்பித் தவிக்கலாம், அவர்களுக்கும் இந்தப் பதிவு புரிய வேண்டும் என்ற நல்லெண்ண நோக்கத்தில்...) டிசம்பர் பனி இரவை நனைத்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் தென்பட்ட புல்வெளியினில் பனித்துளி தலைதூக்கி சிரித்துக் கொண்டிருக்க பலரது உடலையும் ஜெர்க்கின் குளிரில் இருந்து காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தது. 

பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் என்னைக் கடந்து ஓடிக்கொண்டிருந்தவள், தன்னுடன் நடந்து கொண்டிருந்தவனிடம் "யப்பா சாமி, என்னாக் குளிரு, இன்னிக்கு நைட்ஷிப்ட் பாக்கப் போறவன் செத்தான், இல்லடா" என்று கூறிக்கொண்டே என்னைக் கடந்து கொண்டிருந்தாள். கடுப்பான நானோ ஒருநொடி நின்று அவளை நோக்கித் திரும்பிப்பார்த்தேன். ஜெர்க்கினை  உடலோடு இன்னும் இறுக்கி அணைத்துக்கொண்டு நிரம்பி வழிந்துகொண்டிருந்த பனியில் நனைந்து மறைந்தாள். அவள் சொல்வதிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை, இருந்தும் அவள் எங்களைப் பார்த்து கூறிய சொற்கள் சாபமா? இல்லை பரிதாபத்தின் வெளிப்பாடா? யார் அறிவார்!     

குளிருக்கு சோம்பேறித்தனத்தை அதிகமாக்கும் வழக்கம் இயல்பாகவே உண்டென்பதால் கட்டுக்கடங்காமல் வரும் தூக்கத்தைப் புறந்தள்ள அதைவிட இயல்பான மனதைரியம் வேண்டும். என்னுடைய பணியைப் பொருத்தவரையில் வேலை இருந்துகொண்டே இருந்தால் பிரச்சனையே இல்லை, காரணம் தூக்கத்தைப் பற்றி  சிந்திக்க அவகாசம் இருக்காது, ஒருவேளை சிறிதளவு கூட வேலை இல்லாமல் ஆகி, ஏதேனும் வேலை வருமா வருமா என்று இலவு காத்த கிளிபோல் உட்கார்ந்து கொண்டே இருப்பதென்பது கொடுமையிலும் கொடுமையான விஷயம். தூங்கவும் முடியாது. தூங்காமல் இருக்கவும் முடியாது என்பதெல்லாம் என்ன மாதிரியான தண்டனையென்று புரியவில்லை.

சில சமயம் தூங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பி 'உனக்கு வேலை வந்த்ருச்சி எழும்பு' என்று எழுப்பிவிடும் தருணம் அவன் முகத்தைப் பார்க்க வேண்டுமே! அந்தோ பரிதாபம் !

"சீனு...இப்போ எந்திக்கப் போறியா இல்லியா? மணி மூன்றையாவுது, கொஞ்சமாவது சாப்ட்டு தூங்கு"

"ம்ம்ம்மா சும்மா சும்மா தொந்தரவு பண்ணாதீங்க, பசிச்சா நானே எந்திச்சு சாப்டுவேன், பேசாம போயிருங்க" என்றபடி போர்வையை இழுத்து மூடித் தூங்குபோது, தொடர்ந்து தூங்கிக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றும், பசி லேசாக வயிற்றைக் கிள்ளினாலும் தூக்கம் கண்களில் அள்ளும். எனக்காவது பரவாயில்லை வீட்டில் இருக்கிறேன், சில நேரங்களில் அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் சாப்பிட்டுவிடுவேன்,அறைகளில் தங்கிருப்பவர்களின்பாடு படுதிண்டாட்டம். இவர்களில் மதியஉணவைத் துறப்பவர்கள் அநேகம் பேர். சரவணாவிற்கு எல்லாம் இது தான் சாப்பாட்டு நேரம் என்ற வரைமுறை என்றோ மாற்றி எழுதப்பட்டுவிட்டது.    

அதிகாலை மூன்று மணிவரையிலும், பனியானது தாங்கிக்கொள்ளும் அளவில்இருந்தாலும் மூன்றைக் கடக்கும் போதுதான் தாக்கிக்கொல்லும் பனியாக மாறுகிறது. அலுவலகத்தினுள் ஏசியினால் ஏற்படும் குளிரை விட வெளியில் பரவிக்கிடக்கும் குளிர் வெகுவாக நடுங்கச் செய்கிறது. அதுவும் கிழக்குக் கடற்கரையின் மிகஅருகில் அலுவலகம் என்பதால் கடல் காற்று அநியாயத்திற்கு குளுமையாய் வீசுகிறது. 

இரவுப் இரவுப் ப(னி)ணியில் காவலிருக்கும் செக்யுரிட்டிகளின் நிலைமையோ படுமோசம். பெரும்பாலான செக்யுரிடிகள் ஸ்வெட்டர் அணிந்திருந்தாலும், பனிபொழிவைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தங்கள் காதுகளைச் சுற்றிலும் சட்டையைக் கட்டி அதன்மேல் துண்டு அல்லது சால்வையை இறுக்கக் கட்டிக்கொள்கிறார்கள். அவ்வபோது கூட்டமாய் கூடி சாயா குடித்து பனியை விரட்ட முற்படுகிறார்கள்

சில சமயங்களில் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது பிடிக்காமல் காலாற நடந்து செல்வதும் உண்டு. ஒரு முழு இரவின் அழகியலின் அமைதியை மிக அருகமையில் சந்திக்கக்கூடிய தருணங்கள் அவை. ரம்மியமான இரவு, தூரத்தில் மின்னியபடி கதைபேசும் விண்மீன்கள், சுற்றிலும் பரந்து விரிந்த புல்வெளி முழுவதும் நிறைந்து கிடக்கும் மவுனம், அந்த மவுனத்தின் அடிநாதமாய் சில்வண்டுகளின் ரீங்காரம், வானில் மிதந்துகொண்டிருக்கும் சாம்பல் நிற மேகங்களுக்கு நடுவில் ஒளிந்து விளையாடும் முழு நிலவு. அவ்வளவு எளிதில் கிட்டாத, மனதை அலைபாய விடாத இந்தச் சூழலே ஒரு தவம். பெருந்தவம். இருந்தும் இது பிடிக்காமல் போவதன் காரணம் 

"சீனு...சீனு.. இப்ப எந்திக்கப் போறியா இல்ல தண்ணிய கோறி ஊத்தவா"

"ஏன் இப்போ கத்துறீங்க, மணி என்ன?"

"நீயே எந்திச்சி பாரு"

"சொல்லுங்கம்மா மணி என்ன "

"ஆறரை"

"என்னது ஆறறையா?" 

"ஆமா ஆறரை.. நீ எப்ப மத்யான சாப்பாடு சாப்ட்டு, எப்போ நைட்டு சாப்பாட சாப்டுவியோ, ஐயோ ஐயோ"

இந்த நிமிடம் இந்த நொடி என் மனம் சொல்லும் 

விடுகதையா இந்த வாழ்க்கை 
விடை தருவார் யாரோ? 



அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக் குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட் ஷிப்ட்.

25 Sept 2012

நைட்ஷிப்ட் - எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே


மெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக்  குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட்ஷிப்ட். 

ரவு பத்து மணியளவில் கம்பெனிக்குள் நுழையும் நேரம், மொத்த கம்பெனியும் தூக்கத்தைத் தேடி வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும். பகலில் நூறு பேருக்கு மேல் வேலை செய்யும் ப்ரோஜெக்ட்டில் நைட்ஷிப்ட்டில் பத்து பேர் இருந்தால் அதுவே அதிசயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆளுக்கொரு கணினியில் முகம் புதைத்து தங்கள் இருப்பை அமெரிக்கர்களுக்கு தெரிவித்துக் கொண்டிருப்பர். பதினோரு மணியளவில் ஆங்காங்கு இருக்கும் லவுட் ஸ்பீக்கரில் இருந்து மெல்லிய சங்கீதம் கசியத் தொடங்கும். ஸ்பீக்கரின் மொழயில் இருந்து அமர்ந்திருப்பவனின் தாய்மொழி தெலுங்கா ஹிந்தியா மலையாளமா என்று தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு ஸ்பீக்கரிலிருந்து தெலுங்கு ஹிந்தி தமிழ் என்று பல மொழிப்பாடல்கள் ஒலிபரப்பப் படுகிறதோ, உறுதியாகச் சொல்லலாம் அவன் தமிழன் என்று!

பொதுவாக நைட்ஷிப்ட்களில் வேலை அதிகம் இருக்காது. ஒருவேளை அன்றிரவு நாம் முழித்தவர் முகத்தின் ராசியைப் பொறுத்து ஐந்து பேருக்கான வேலையை தனியொருவன் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்படலாம். போர்களத்திற்கு செல்லும் வீரனும், நைட் ஷிப்டிற்கு செல்லும் சூரனும் எதற்கும் தயாராகத் தான் செல்ல வேண்டும். பனிரெண்டு மணி வரை ஒன்றுமே தெரியாது, அதற்க்கு மேல் கால தேவனுக்கும் ஓய்வு தேவைப்படும் போல், நகரவே மாட்டான். 

நிமிடங்கள் நகர நகர பசிக்கும் நமக்குமான சண்டை ஆரம்பமாகும். சரவணபவனை தவிர அனைத்து மலிவு விலை பணக்காரக் கடைகளும் தங்கள் கடையை சாத்தியிருப்பார்கள். சரவணபவனில் இட்லி தோசையை எதிர்பார்த்துச் சென்றால் சட்னியாகி வெளியே வரவேண்டியது தான். பானிபூரி, பேல்பூரி மட்டுமே கிடைக்கும். அவற்றைச் சாப்பிடாதே என்று மனசு சொல்லும். "அடேய் எதையாவது தின்னுத் தொலை" என்று வயிறு அடம் பிடிக்கும். வேறுவழியே இல்லாமல் அங்கு கிடைக்கும் மலிவு விலை காபியை வாங்கினால், பதினெட்டு ருபாய் மூன்றே உரிஞ்சல்களில் காலியாகி இருக்கும். காலியான டம்லரையே  முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால், சொத்தையே சரவணபவனுக்கு எழுதிக் கொடுத்தது போன்ற பிரமை ஏற்பட்டுவிடும். அப்படியோரு நிலைக்கெல்லாம் வந்துவிடக் கூடாது. காரணம் ஐந்து மணிக்கு சொத்தை எழுதிக் கொடுக்க மீண்டும் வந்து தான் ஆகவேண்டும். 

மெதுவாக நடக்க ஆரம்பித்தால், செக்யுரிட்டிகள் தமக்கான இடத்தில உட்கார்ந்துகொண்டு சாமியாடிக் கொண்டிருப்பார்கள். டாஞ்சூர் பொம்மை (தஞ்சாவூர் என்பதை டாஞ்சூர் என்று சொல்லாவிட்டால் நான் தமிழன் இல்லை) இவர்களிடம் தோற்றுவிடும். வலமும் இடமுமாக ஆடும் பொழுது புவிஈர்ப்பு விசை இவர்களை கீழ்நோக்கி இழுத்தாலும், தூக்கத்தில் கூட மீசையில் மண் ஒட்டி விடக்கூடாது என்ற பாதுகாப்பு விசை மேல்நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கும். இருந்தும் அதிகாலையில் கொட்டும் பனியில் இவர்களைப் பார்ப்பதற்கே கஷ்டமாக இருக்கும். 

காப்பி குடித்துவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தால் பலரும் கண்ணை மூடி வானம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இவர்கள் அனைவரையும் கண்காட்சிப் பொருள் போல் பார்த்துவிட்டு கணினியில் அமர்ந்தோமானால் ஒரு மணியில் இருந்து நான்கு மணி வருவதற்குள் நான்கு யுகங்கள் கடந்து இருக்கும். எவ்வளவு தான் அதிகமான வேலை பார்த்திருந்தாலும், வேலை பார்த்தது போலவே இருக்காது. நைட் ஷிப்டில் இருக்கும் ஒரே ஒரு நன்மை இது தான். எந்தவிதமான தொந்தரவும் இருக்காது. நைட் ஷிப்டிற்கு பழகி விட்டோமானால், மூளை வேலையை தவிர வேறு எதையும் யோசிக்காது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் எளிதில் பிறக்கும்.

வ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும், நான்கு மணி வந்தே தீரும். சாமி ஆடியே ஆக வேண்டும். சில சமயங்களில் மணியைப் பார்க்காமலே உற்சாகமாக வேலை பார்பதுண்டு, தப்பித்தவறி மணியை பார்த்துத் தொலைத்து, மணியும் நான்கைக் காட்டிவிட்டதென்றால் அவ்வளவு தான், புவி ஈர்ர்ப்பு விசை தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும். இந்த நேரங்களில் லவுட் ஸ்பீகர்கள் ம்யுட்டிற்கு சென்று இருக்கும். எதாவது ஒரு மூலையில் இருந்து மெல்லிய குறட்டை ஒலி பரவத் தொடங்கும். மணி ஐந்தைத் தொடும் பொழுது சாயா குடிக்கச் சென்று விட வேண்டும். இல்லை என்றால் "சாய்ந்து சாய்ந்து நான் தூங்கும் பொழுது அடடா" தான். அடுத்த நாள் ஷிப்டிற்கு வருபவன் வந்து மூஞ்சியில் தண்ணீர் தெளித்தால் மட்டுமே மயக்கம் கலையும்.

ம் சாரதியின் துணையுடன் வீட்டிற்கு வந்தால் ஒன்பது மணி வரை கட்டாயம் முழித்திருக்க வேண்டும். இல்லை என்றால் காலை மதியம் இரண்டு வேளை சாப்பாட்டையும் மறந்து, இரவு வேளை சாப்பாட்டை மட்டுமே சாப்பிட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம். ஒன்பது மணிவரை வீட்டில் இருப்பவர்களிடம் எரிந்து விழுந்து கொண்டு, தூக்கத்தில் ஏதாவது உளறிக்கொண்டிருந்தால், வீட்டிலிருப்பவர்களுக்கு நல்ல டைம் பாஸ் ஆகும். வீட்டில் இருந்தால் கெஞ்சி கொஞ்சியாவது சாப்பிட வைத்துவிடுவார்கள்.

ண்பர்களுடன் ரூமில் இருப்பவர்கள் வாழ்விலோ நைட் ஷிப்ட் என்பது சற்றே கொடுமையான விஷயம். எது வேண்டுமானாலும் கடைக்குத் தான் செல்ல வேண்டும். அதற்க்கு வருத்தப்பட்டே உணவைத் தியாகம் செய்யும் பலரும் உண்டு, ஒரு காலத்தில் நான் உட்பட. விடுமுறை தின நைட் ஷிப்ட் இன்னும் கொடுமையானது. மொத்த நண்பர்கள் கூட்டம் ரூமில் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும். அதுவரை கேட்டிராத பிரபல பாடல்கள் அனைத்தையும் அன்றைக்குத் தான் அபூர்வமாகக் கேட்பது போல் ரசித்து சத்தமாகப் பாடிக் கொண்டிருப்பார்கள். அலறும் டிவி அடிதடி சண்டை, ஸ்ஸ்ஸப்பா எப்படிக் கண்ணைக் கட்டும்.

ப்படியே ஒருவழியாகத் தூங்கினாலும், நமது தொலைதூர அணைத்து நன்பேண்டாக்களுக்கும் அப்போது தான் நம் நியாபகம் வரும். " மச்சி நைட் ஷிப்ட்டா, பகல் நேரத்துல தூங்குறியே வெக்கமா இல்ல" இப்படியெல்லாம் பேசி, அன்பாக கடுப்பைக் கிளப்புவார்கள். நல்ல தூக்கத்திலிருந்து திடிரென்று முழிப்பு வந்தால், சர்வமும் வெளிச்சமயமாக இருக்கும். இதைத் தடுக்கவே நான்கு கர்சீப் ஐந்து போர்வை தேவைபடும். கரண்ட் கட் புழுக்கம் என்று அரசும் தான் பங்கிற்கு கடுப்பைக் கிளப்பும். இவ்வளவு இன்னலுக்கு மத்தியிலும் தூங்கி எழுந்து மொபைலில் மணி பார்த்தால், மணி ஆறைத் தொட்டிருக்கும்.  அது காலை ஆறு இல்லை, மாலை ஆறு என்று மூளை மனதிடம் சொல்லும் பொழுது மனம் சோகமாக சொல்லும் "எஞ்சோகக் கதையக் கேளு தாய்குலமே,  நம்ம  தாய்குலமே".          

அமெரிக்கா விழித்துக் கொண்டிருக்கும் நேரம் எவன் ஒருவன் இந்தியாவில் விழித்துக் கொண்டு, அவனது இந்தியக் குடும்பத்திற்காகவும், அமெரிக்காவின் வர்த்தகக்  குடும்பத்திற்காகவும் உழைக்கிறானோ, அவனின் ஒருநாள் இருளில் விடிந்து, விடியலில் படுக்கையைத் தேடுவதற்கான இடைப்பட்ட வேளை அல்லது வேலை தான் நைட் ஷிப்ட்.


*************************

விளம்பரம் ஒன்று : 

எனது சகோதரி ஸ்ரீமதி அவளும் தன் பங்கிற்கு வலைபூ ஒன்று ஆரம்பிதுள்ளாள். மேடம் பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்லீஷ் நாட்டில் என்பதால் ஆங்கிலத்தில் தான் வலைபூ எழுதுவார்களாம். நாம் தமிழ் பிரபலங்கள் ஆக நினைத்தால், அவளோ உலக மகா பிரபலம் ஆக நினைக்கிறாள். நீங்கள் விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த ஆங்கில வலைப்பூ பற்றிய அறிமுகமும் தகவல்களும், ஆங்கில வலைப்பூவை பிரபலப்படுத்தும் வழிகளும் அவளுக்குச் சொல்லிக்கொடுங்கள். சத்தியமா எனக்குத் தெரியாது.   

விளம்பரம் இரண்டு :


விளம்பரம் மூன்று : 

எனது வலைப்பூவில் விளம்பரம் என்பது புதிய பகுதி. இங்கே செலவில்லாமல் விளம்பரம் செய்து தரப்படும். இனி என் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் விளம்பரம் தொடரும். எனக்குப் பிடித்த பதிவு பற்றிய விளம்பரங்கள் இங்கே தவறாது இடம்பெறும்.  
      

நைட்ஷிப்ட் பற்றிய எனது பதிவிற்கான உங்கள் கருத்துக்களை தவறாது சொல்லிச் செல்லுங்கள்.