Showing posts with label சென்னையில் ஒரு நாள். Show all posts
Showing posts with label சென்னையில் ஒரு நாள். Show all posts

3 Apr 2013

ஜஸ்ட் ரிலாக்ஸ் - 03/04/2013

அன்சைஸ் - பா ராகவன் - புத்தக விமர்சனம் 


அன்சைஸ் - பா ராகவனின் சமீபத்திய புத்தகம், புத்தகக் கண்காட்சியில் வாங்கியது. தற்போதைய தமிழ் எழுத்தாளர்களில், எழுத்துலகில் மிக சிறப்பான பயணத்தை தொடர்கிறவர் பா.ராகவன். அன்சைஸ் புத்தகத்தின் முன் - பின் அட்டைகளின் வசனங்களே சொல்லிவிடுக்றது நிச்சயம் இது நம்மை சிரிக்க வைக்கக் கூடிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம் என்று. 

பெரும்பாலும் அவர் அவரையே கிண்டல் செய்து எழுதிய கட்டுரைகளே இடம் பெற்றுள்ளன. ஒரே போன்ற சில கட்டுரைகள் சில சமயம் அலுப்பு தருகிறது. முதல் இரு கட்டுரைகள் மட்டுமே கொஞ்சம் அதிகமான மொக்கை போல்  உணர்ந்தேன் மற்றவை எல்லாம் அருமை. பதிவுலகில் சற்றே தேர்ந்த நடையில் எழுத வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

என்ன ஒன்று இவை அனைத்தும் அவர் வலைத்தளத்தில் எழுதிய  கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.       

மேடவாக்கம் - அம்பாள் ஸ்டோர் - சைனா ப்ரொடக்ட் 

மேடவாக்கம் அம்பாள் ஸ்டோர் என்னும் பாத்திரக்கடைக்கு சில வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க தம்பியுடன் சென்றிருந்தேன். கல்லாவுக்கு அருகில் "சைனா பொருட்களுக்கு வாரன்டியோ, கியாரண்டியோ கிடையாது, கண்டிப்பாக திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. தயவுசெய்து வாங்குவதைத் தவிர்க்கவும்" என்று எழுதிப் போட்டிருந்தனர்.

அதைத் தம்பியிடம் காண்பிக்கும் பொழுது ஓனர் எனது செய்கையைப் பார்த்துவிட்டார். " என்ன தம்பி பண்றது, நம்மாளுக ரேட் கம்மின்னு வாங்குறாங்க, எங்களுக்கும் லாபம் அதிகம் தான், ஆனாலும் யார் எங்ககிட்ட சைனா பொருள் கேட்டாலும் வாங்காதீங்கன்னு சொல்றோம், வியாபாரம் கெட்டாலும் பரவாயில்ல, தரம் முக்கியம், சுதேசித் தயாரிப்பு முக்கியம்.

படிச்சவரு மன்மோகன் சிங் அவரு பண்ணுன நல்ல காரியம் என்ன தெரியுமா திண்டுக்கல் பூட்டு சென்னையில எங்கையும் கிடைக்காது, எல்லா இடத்துலையும் சைனா பூட்டு தான். படிச்ச மனுஷன், வெளிநாட்டுல படிச்சிட்டு வெளிநாட்டுக்காரனுக்காக அரசாங்கத்த நடத்திட்டு இருக்காரு, விவசாயத்துக்கு மானியம் கேட்டா, விவசாயம் பண்ணாதன்னு சொல்றாரு, என்னத்த சொல்ல போங்க" என்று சில நிமிடங்களுக்கு பொங்கோ பொங்கு என்று பொங்கி விட்டார்.

உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மிஸ்டர் அம்பாள் ஸ்டோர்.   


பதிவர் சந்திப்பு 

வாத்தியார் மற்றும் வெங்கட் நாகராஜுடன் நான் 

கடந்த சனி கிழமை காலை, வாத்தியார் பால கணேஷிடம் இருந்து போன், "ஒரு பிரபல பதிவரை சந்திக்கலாம் வா என்று", அந்தப் பிரபலம் வேறு இல்லை டெல்லி வாழ் பதிவர், வலையுலகில் அதிகமாக பயணக் கட்டுரைகள் எழுதி வருபர் திரு.வெங்கட் நாகராஜ். அவரைப் புகைப்படங்களில் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் சற்றே சிலிம்மாக இருக்கிறார். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி சார்.


வெகு சமீபத்தில் பதிவுகள் எழுத ஆரம்பித்தவர். தேர்ந்தெடுத்த வார்த்தைகளைக் கொண்டு இவர் எழுதும் பதிவுகள்  ரசிக்கும் படியாய் உள்ளது. சமீபத்தில் இவர் எழுதிய பதிவான "பேசாத வார்த்தைகள் அழகானவை" - இவர் எழுதியதால் மிக அழகாய் வந்துள்ளது. கவிதைக்கும் கட்டுரைக்கும் இடைப்பட்ட எழுத்து. கண்டிப்பாய் வாசித்துப் பாருங்கள். 


குறும்படம் - இடுக்கண் 

ஒரு வயாதான பிச்சைக்காரருக்கும், உழைத்து சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் வயதான முதியவருக்கும் இடையில் இருக்கும் புரிந்துணர்வைப் பற்றிய குறும்படம். வழக்கமான குறும்படத் தேடலில் இறங்கிய பொழுது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட திரைப்படம் என்று தெரிந்தது. இசை ஜஸ்டின் - சமீப காலங்களில் பல குறும்படங்களில் இவரின் இசை இடம் பெற்றுள்ளது. 

சென்னையில் ஒரு நாள் 

எனது தம்பி, பதிவர் ஸ்கூல் பையன் மற்றும் அவர் நண்பர் சகிதமாக சென்று பார்த்த திரைப்படம். ஐனாக்சில் நான் பார்த்த முதல் திரைப்படம். ஸ்க்ரீன் கிளாரிட்டி அற்புதம்.     

சென்னையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு முதலில் வெளிவந்த திரைப்படம் ட்ராபிக். இப்படத்தில் நடித்த எந்த நடிகர்களிடமும் எதார்த்தத்தை மீறிய நடிப்பு வெளிப்பட்டு இருக்காது.   இயல்பான நடிப்பு, பின்னணி இசை, முகபாவங்கள் அதே சமயம் வேகமாக நகராவிட்டாலும் பரபரப்புடன் நகரும் திரைக்கதை என்று மனதிற்கு மிகவும் பிடித்த மற்றும் மறக்க முடியா படமாக அமைந்து இருந்தது.

அதே கதையை தமிழில் படம் பண்ணுகிறார்கள் என்றதும் எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியது. காரணம் தமிழ் சினிமா பிரம்மாக்கள் மீது வைத்திருந்த அசைக்க முடியா கர்வம் தான். ஆனால் அவை அத்தனையையும் தவிடுபொடியாக்கி விட்டார்கள். இத்தனைக்கும் இந்த இரு படத்திற்கும் கதை, இசை, ஒளிப்பதிவு என்று தொழில்நுட்ப குழுவிலும் எந்த மாற்றமும் இல்லை. 

இசை படத்திற்கு பொருந்தவில்லையா இல்லை நடிகர்களுக்கு பொருந்தவில்லையா என்று தெரியவில்லை, இந்தப் படத்திற்கு தேவையான பின்னணி இசை சுத்தமாக இல்லை, நெடுகிலும் வயலினை மட்டும் இசைக்க விட்டுவிட்டார். கொஞ்சம் சொதப்பலான திரைக்கதை.

ட்ராபிக் போலீஸான சேரன் வண்டி ஓட்டும் பொழுது போன் பேசுவதை குறிப்பிட்ட எவரும், அவருக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்து இருப்பவர் சீட் பெல்ட் போடாதது பற்றி குறிப்பிடவில்லை. சீட் பெல்ட் போடாததும் குற்றம் :-)  

மற்றபடி ட்ராபிக் பார்க்காத அத்தனை நல்ல உள்ளங்களும் பார்க்க வேண்டிய திரைப்படம் சென்னையில் ஒரு நாள் .    

கேடி பில்லா கில்லாடி ரங்கா



சிவ கார்த்திகேயன் மற்றும் பாண்டிராஜ் மீது நம்பிக்கை வைத்து சென்ற படம் என்று சொல்வதை விட, மதிய நேர மின்தடையில் இருந்து தப்பிப்தற்காக சென்ற படம். மேடவாக்கம் குமரன் தியேட்டர், அரங்கம் ஓரளவு நிறைந்தது ஆச்சரியம் அளித்தது, காரணம் நாங்கள் சென்றது திங்கள் கிழமை மதிய காட்சி.

படம் நெடுக பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருகிறார்கள். பல மெகா சீரியல்களை ஒன்றாய் பார்த்த உணர்வு. குடும்ப திரைப்படம் என்றாலும் மெகா சீரியல் ரசிகர்களுக்கு மட்டுமே மிகப்பிடிக்கும். என்னைப்போல் பொழுது போகாதவர்கள் ஒருமுறை பார்க்கலாம்.         

மற்றபடி ரெஜினாவும் பிந்துமாதவியும் செம பிகர், அவர்களை சைட் அடிக்க வேண்டுமனால் மீண்டும் ஒருமுறை படம் பார்க்கலாம். லோ பட்ஜெட்க்கு ஏற்ற நல்ல பிகர்கள். பெரிய பெரிய நடிகர்களுடன் வலம் வருவார்களா என்றெல்லாம் ஆருடம் சொல்லத் தெரியவில்லை. தொடர்ந்து வைப்பு கொடுத்தால் யான் தன்யனாவேன்.


முக்கிய குறிப்பு / முடிவு 

இனி சினிமா விமர்சனங்கள் எழுதுவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்த படமாக/ பிடித்த நடிகர்கள் நடித்த படமாக இருந்தால் விமர்சனம் எழுத வாய்ப்பு உள்ளது. மற்றபடி எனது சினிமா பார்வை ஜஸ்ட் ரிலாக்சில் தொடரும்.  

நன்றி 

பிளாக்கர் குறித்து எனக்கு வரும் அசாதாரணமான சந்தேகங்களை/ உதவிகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் பிளாக்கர் நண்பனுக்கு.