Showing posts with label குற்றாலம். Show all posts
Showing posts with label குற்றாலம். Show all posts

21 Jan 2015

செண்பகாதேவி - வேலம்மா பாட்டியும் அகஸ்தியரும்

செண்பகாதேவி கோவிலைக் கடந்து அருவியை நோக்கி நடந்து கொண்டிருக்கையில் நெற்றி நிறைய விபூதி பூசியிருந்த ஒரு பாட்டி கோவிலில் இருந்து வெளிப்பட்டு அருவியை நோக்கி நடந்து கொண்டிருந்தார். குறைந்தது எழுபத்தி ஐந்து வயதாவது இருக்கும் அவருக்கு. லேசாக கூன் விழுந்திருந்தது என்றாலும் தெம்பாக நடந்து கொண்டிருந்தார். எங்களுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீ அண்ணாவைப் பார்த்ததும் 'கோவிலுக்குப் போய்ட்டு அய்யாவப் பார்க்க வா' என்றார். 'அண்ணே யாருன்னே அவங்க, இதுக்கு முன்னாடி வந்தப்பவும் அவங்களப் பார்த்திருக்கேன்' என்றேன். 

'அந்தப் பாட்டி தன்னோட பதினேழு வயசில இருந்து செண்பகாதேவில தான் இருக்காங்க. இப்ப எண்பது வயசாது. கிட்டத்தட்ட அறுபது வருஷம் இங்கதான் இருக்காங்க. குளிச்சிட்டு கோயிலுக்குப் போயிட்டு அவங்களைப் பார்க்கலாம்' என்றார். 

யாருமற்ற வனத்தில் வெறும் பத்து பேருக்கும் குறைவாகவே ஆட்கள் இருந்ததால் தொல்லை இல்லாமல் குளித்துக் கொண்டிருந்தோம். கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரக் குளியல். குளித்து முடித்து கரையேறிய போது பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கி இருந்தது. அங்கே எதுவுமே கிடைக்காது. முன்பெல்லாம் செண்பகாதேவி ஏறும் பாதையில் பட்டாணி சுண்டல் மாங்காய் சோடா எல்லாம் கிடைக்கும். மலைப்பாதையில் ஆங்காங்கு விற்றுக்கொண்டு இருப்பார்கள். இப்போது யாருக்குமே அனுமதி இல்லை என்பதால் எல்லாவற்றுக்கும் கீழேதான் சென்றாக வேண்டும். அதுவரைக்கும் பசியும் தாங்கியாக வேண்டும். 




இன்றைக்குத்தான் முதல்முறையாக செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குள் நுழைகிறேன். இதற்குமுன் வந்த போதெல்லாம் யாருமற்று பூட்டிக் கிடக்கும் கோவிலை மட்டுமே பார்த்திருந்த எனக்கு, இன்றைக்கு அம்மனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தது நிச்சயம் அதிர்ஷ்டம் தான். குரங்குகள் கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து விடக்கூடாது என்பதற்காக கோவிலின் கதவுகளை அடைத்தே வைத்திருந்தார்கள். மிகப் பழைய கோவில். 

பழமையான கோவில்களுக்கே உண்டான விபூதி வாசம். சுத்தமான பொதிகைமலைக் காற்று. நிரம்பிக்கிடக்கும் மௌனத்தின் ஊடாக கோவிலுக்குள் நுழைந்தோம். பௌர்ணமி என்பதால் கோவில் சுத்தமாகக் கழுவி விடப்பட்டிருந்தது. வனம் வனத்தின் மத்தியில் இருக்கும் கோவில் என்று மனம் தன்னையே அறியாமல் ஒருவித சமநிலைக்கு வந்திருந்தது. சிலநிமிட வேண்டுதல்களுக்குப் பின் அங்கிருந்து வேறோரு கட்டிடம் நோக்கி நடந்தோம். 

பாறை மீது கட்டப்பட்ட மற்றுமொரு சிறிய கட்டிடம். அதனுள் நான்கைந்து பேர் உணவருந்திக் கொண்டிருந்தனர். சிறிய அகஸ்தியர் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யபட்டு அவர் அருகில் ஒரு ஜோடி பாதம் கல்லில் செதுக்கபட்டிருக்க கிட்டத்தட்ட அதுவும் சிறிய கோவில் போன்ற அமைப்பிலேயே இருந்தது. அங்கும் ஒரு சிறிய வழிபாட்டிற்கு பின் எங்களையும் உணவருந்தச் சொன்னார்கள். தயிர்சாதம் ஊறுகாய். தேவாமிர்தமாய். இது அடுத்த அதிர்ஷ்டம். பௌர்ணமி தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான சிறப்பு அன்னதானம் என்ற தகவல் பின்னர் கிடைத்தது. குளியல் கோவில் உணவு என்று எதிர்பார்க்காத விஷயங்கள் ஒவ்வொன்றாக நடந்து கொண்டிருக்க, அங்கிருந்து நேராக ஒரு அந்தப் பாட்டி தங்கியிருக்கும்  குகைக்கு சென்றோம். அதற்கு அவ்வையார் கோவில் என்றும் ஒரு பெயர் உண்டு. 

தென் மாவட்டங்களில் அவ்வையார் பூஜை என்று ஒன்று நடைபெறும் (மற்ற மாவட்டம் பற்றி தெரியவில்லை) விதவிதமான வடிவங்களில் (வட்டம், சதுரம் நீள் உருளை) மிக சிறியதாக அரிசி கொளுக்கட்டை செய்து அதனை நள்ளிரவில் அவ்வையாருக்குப் படைத்து பூஜை செய்வார்கள், அந்தக் கொளுக்கட்டையை ஆண்கள் பார்க்கக் கூடாது. நாடோடிகள் படத்தில் அனன்யா சசிகுமாருக்கு ஒரு கொழுக்கட்டை ஊட்டி விடுவரே அதேதான். அந்தப் பூஜை செண்பகாதேவியில் விமர்சையாக நடைபெறும். தன்னுடைய சின்ன வயதில் எங்கள் பாட்டி அம்மா சித்தியை இங்கு நடைபெறும் பூஜைக்குக் கூட்டி வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதுவரை வெளியில் இருந்து மட்டுமே பார்த்த அந்த கோவிலினுள் இன்றுதான் நுழைகிறேன். மனம் முழுவதும் ஆனந்தம் நிறைந்திருந்தது.

வேலம்மாள் பாட்டி உள்ளே அமர்ந்திருந்தார். கதவைத் திறந்தால் எங்களுக்கு முன் உள்ளே நுழைய குரங்குகள் தயாராய் இருந்தன. உள்ளே ஒரு சிறிய அவ்வையார் சிலை இருந்தது. பாட்டி டார்ச் லைட் ஒன்றை எடுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குள் நுழைய, நாங்களும் நுழையும் போதுதான் தெரிந்தது அது அறையல்ல குகை என்று. மிகபெரிய குகை. குகையின் முடிவில் அகஸ்தியர் நின்று கொண்டிருந்தார். பாட்டி அவருக்கு சூடம் காண்பித்துவிட்டு வெளியில் செல்ல கொஞ்சம் நேரம் குகையின் இருளில், விளக்கொளியில் பிரகாசமாகி இருந்த அகஸ்தியரைப் பார்த்தபடி கண்களை மூடி தியானம் செய்தோம். செண்பகாதேவி சலசலத்து இறங்கி கொண்டிருந்தாள்.  அதன் சத்தம் குகைக்குள் துல்லியமாக ஒலித்துக் கொண்டிருந்தது. மற்றவர்கள் தியானம் செய்து கொண்டிருக்க மெல்ல வேலம்மாள் பாட்டியிடம் வந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். 


வேலம்மாள் பாட்டி

அவருடைய இளவயது போட்டோ ஒன்றை காண்பித்தார். ஆர்ப்பரிக்கும் செண்பகாதேவிக்கு முன் ஜடாமுடியுடன் நின்று கொண்டிருந்தார். நல்ல சிரித்த முகம். 'இத எடுத்து நாப்பது அம்பது வருஷம் இருக்கும்' என்றார். 

குற்றாலத்திற்கு கீழ் இருக்கும் கிராமத்தில் இருந்து தன்னுடைய பதினேழாவது வயதில் இங்கு வந்துவிட்டதாகக் கூறியவர், இடி மழை புயல் வெள்ளம் அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த அத்துவானக் காட்டில் தான் வசித்து வருகிறார். தினமும் செண்பகாதேவியில் நீராடல், அகஸ்தியர் பூஜை, இருவேளை மட்டுமே உணவு என்று கூறினார். இந்தியாவின் முக்கியமான திருத்தலங்களுக்கு சென்று வந்துள்ளதாகவும், இரண்டு மூன்று தொலைக்காட்சி சேனலில் இருந்து வந்து படம்பிடித்து சென்றதாகவும் கூறினார். அந்தக் குகைக்கு உள்ளேயே சமையல் செய்து சாப்பிட அடுப்பு வைத்திருக்கிறார். பயமா இல்லையா என்றால் சிரித்தார். உள்ளே நிரம்பி இருக்கும் சாமிகளைப் பார்த்தார். வார்த்தைகளால் கேட்ட கேள்விக்கு பாவனையால் புரிய வைத்துவிட்டார். 

இது சித்தர் வாழுற காடுன்னு சொல்றாங்களே நீங்க சித்தர்கள பார்த்து இருக்கீங்களா என்றேன். இது வழக்கமாக அவர் எதிர்கொண்டிருக்கக் கூடிய கேள்வி தான், அதனால் அவர் என்ன கூறுவார் என்று யூகித்திருந்தேன். இருந்தாலும் கேட்டேன். ஆர்வம். 'பார்த்திருந்தா சொல்லுவனாய்யா' என்றார். சிரித்தேன். 'சொல்லலாமா' என்றார். கூடாது என்று தலையாட்டினேன். ஆனால் அவர் பார்த்ததாக அவருடைய கண்களும் முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சியும் கூறியது. குகைக்குள் தியானம் செய்து கொண்டிருந்த எல்லாருமே இப்போது பாட்டியின் முன் அமர்ந்திருந்தோம்.

'இத்தன வருசமா தனியா இருக்கீங்களே பயமா இல்லையா பாட்டி' மீண்டும் கேட்டேன். மீண்டும் சிரித்தார். எனக்கென்ன பயம். 'அய்யா துணைக்கு இருக்காரு இல்ல'. இங்கே அனைவருமே அகஸ்தியரை அய்யா என்றே குறிப்பிடுகிறார்கள். 'இங்க ரொம்ப நாளா ஒரு கருநாகம் இருக்கு. அதுபாட்டுக்கு அது வேலைய பார்க்கும். நான் பாட்டுக்கு என் வேலையைப் பார்ப்பேன். ஒருநாள் அய்யா பக்கத்தில நின்னுட்டு இருந்திருக்கு. இங்க வெளிச்சம் இல்ல பார்த்தியா, கண்ணு தெரியாம மிதிச்சிட்டேன். தீண்டிருச்சு. ஆனா விசப்பல்லு இல்ல. ஆனாலும் கடுமையான வலி. அப்புறம் ஒரு பெரியவர் வந்து பச்சிலை கொடுத்துட்டு போனார். அவர் யார் என்னன்னு தெரியாது. ஆனா யாரா இருக்கும்னு எனக்குத் தெரியும்', என்று தனக்கு நடந்த அனுபத்தைக் கூறினார். 


அவ்வையார் குகை

'என்னது கொகைக்குள்ள கருநாகம் இருக்கா' எங்களுக்கெல்லாம் ஒரு நிமிடம் திக் என்று இருந்தது. பாட்டி அதனை முதலிலேயே கூறியிருந்தால் தைரியமாகக் குகையினுள் சென்றிருப்போமா தெரியவில்லை. அவரோடு மேலும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து செண்பகாதேவிக்கு மேற்புறம் இருக்கும் அகஸ்தியர் குகைக்குச் சென்றோம். அகஸ்திய குகை மிக மிகப் பெரிய குகை. உள்ளே உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. அங்கே ஒரு சாமியார் தங்கி இருக்கிறார். அவர் இங்கு வந்து ஒரு சில வருடங்கள் தான் இருக்கும் என்று ஸ்ரீ அண்ணா கூறினார். அவரைச் சுற்றி நெல்லையில் வந்திருந்த யோகா மாஸ்டர்கள் உட்கார்ந்திருந்தனர். அகஸ்தியரை வழிபட்டுவிட்டு மீண்டும் வெளியில் வந்தோம். மேலே தேனருவி நடக்கும் தூரம் தான் என்றாலும் இன்னொருநாள் போய்க் கொள்ளலாம் என்று மெல்ல கீழே இறங்கத் தொடங்கினோம். இப்படி ஒரு அற்புதமான பயணத்தை சாத்தியபடுத்திய ஸ்ரீ அண்ணாவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும். மாறாக கீழே இறங்கும் வரை அவர் எங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார். எங்களால் தான் இந்தப் பயணம் சாத்தியாமாயிற்று என்று.  

எங்களுக்கு எதிர்புறம் உள்ளூர் மக்கள் வரத்து அதிகரித்துக் கொண்டு இருந்தது. நிதானமாக மலையேறிக் கொண்டிருந்தார்கள். எப்படியும் அவர்கள் அனைவரும் மாலை வரை அங்கிருந்துவிட்டுத்தான் வருவார்களாம். 

அவ்வையார் குகைக்கும் அகஸ்தியர் குகைக்கும் இடையே தெட்சிணா மூர்த்தி குகை இருக்கிறது. ஆனால் அடைத்திருந்தது என்பதால் உள்ளே செல்ல முடியவில்லை. அவ்வையார் குகையில் இருந்து வெளியில் வரும்போது வேலம்மாப் பாட்டி என்னை அழைத்தார். 'சொல்லுங்க பாட்டி' என்றேன். என்னைப் பார்த்து சிரித்தவர் அடுத்தவாட்டி வரும்போது அய்யாவுக்கு நல்லெண்ண வாங்கிட்டு வா, விளக்குக்கு ஊத்தணும் என்றார். 'இனி அடிக்கடி இங்க வரணும்' நினைத்துக் கொண்டே கீழே இறங்கத் தொடங்கினேன். 

படங்கள் : நன்றி இணையம்

முந்தைய பதிவு செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்

15 Jan 2015

செண்பகாதேவி - ஒரு வனாந்திரப் பயணம்

சிற்றருவியைக் கடந்து செண்பகாதேவியை நோக்கி ,மலையேறத் தொடங்கும் பொழுது மணி ஏழை நெருங்கி இருந்தது. அவ்வளவாக குளிர் இல்லை. சூரியனும் முழுதாக முளைத்திருக்கவில்லை. எங்கும் பரவி இருக்கும் அமைதி, வனத்தின் மௌன சாட்சியாக எங்களை வரவேற்றுக் கொண்டிருந்தது. 

காட்டினுள் பயணிப்பது என்றாலே என்னையும் அறியாத கூடுதல் உற்சாகம் என்னோடு வந்து ஒட்டிக் கொள்ளும். இப்போது வனவிலங்குகள் நிறைந்த அடர் கானகத்தினுள் பயணிக்கப் போவதில்லை என்றாலும் அடுத்த நான்கு கிலோ மீட்டர்கள் மனிதர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட பாதைகளின் ஊடாகத்தான் நடக்க இருக்கிறோம். ஆம் பொதுமக்கள் செண்பகாதேவி அருவிக்கு சென்று குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரணமில்லாமல் இல்லை. அருவிக்குச் சென்ற இடத்தில் போனோமா குளித்தோமா என்று வராமல் உயர இருக்கும் பாறை மீது ஏறி 'தலைகீழாகக் குதித்து தடாகத்தினுள் இருக்கும் பாறை மீது மோதி அல்பாயுசில் மேலோகம் போனவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறைத் தொடும். 

செண்பகாதேவி

மேலும் செண்பகாதேவிக்கு செல்லும் பாதையில் தான் மெயின் அருவியின் மேற்பக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட 520 அடி உயரம். அங்கு இருந்து எட்டிப் பார்த்தால் பேரருவியின் பொங்குமாங்கடல் தெரியும். மேலும் அங்கிருந்து பொங்குமாங்கடலுக்குச் செல்ல பாறையில் செதுக்கப்பட்ட படிகளும் உண்டு. அதன் வழியாக இறங்கும் போது இறந்தவர்களும், மேலே இருந்து பொங்குமாங்கடலை எட்டிப் பார்க்கிறேன் பேர்வழி என்று தலைசுற்றி கீழே விழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நூறைத் தாண்டும். அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் அபாய எச்சரிக்கைப் பலகை யாருக்கோ தேவுடு காத்துக் கொண்டிருந்தாலும், அதில் எந்தெந்த வருடங்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற புள்ளி விபரக் கணக்கைப் பார்க்கும் போது பயமாகத்தான் இருக்கிறது. இருந்தும் இவற்றையெல்லாம் கடந்து சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படும் இந்த மலையில் இன்னும் ஏராளமான ஆச்சரியம் தரும் சங்கதிகள் இருக்கின்றன.  

மூன்று நாள் பயணமாக அலுவலக நண்பர்களுடன் தென்காசி செல்வது என்று முடிவான போது இரண்டு நாட்களுக்கு தேவையான பயணத் திட்டம் எங்களிடம் இருந்தது. முதல் நாள் குற்றாலம் முழுவதையும் சுற்றுவது பார்டரில் பரோட்டா சாப்பிடுவது. இரண்டாம் நாள் காரையாறு பாநாசம் முடிந்தால் மணிமுத்தாறு அப்படியே தென்காசி பெரியகோவில். மூன்றாம் நாள் திட்டத்தில் தான் மிகப்பெரிய குழப்பம். எங்கு செல்லப்போகிறோம் என்பது குறித்த தீர்மானமான திட்டம் எங்களிடம் இல்லை. உடன் வந்த நண்பர்கள் திருத்தலங்கள் வேண்டாம் என்றதால் ஆரியங்காவு அச்சன் கோவில் செல்லும் திட்டம் கைவிடப்பட்டது. மாஞ்சோலை முயற்சி செய்தோம் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் தான் 'ஏன் செண்பகாதேவி செல்வதற்கு முயன்று பார்க்கக் கூடாது' என்ற யோசனை தோன்றியது. 

செண்பகாதேவிக்கு அனுமதி இல்லை, உள்ளூர்வாசி என்று கூறினாலும் விடுவார்களா தெரியவில்லை. ஸ்ரீ அண்ணனுக்கு போன் செய்தேன். அவரும் அதையே கூறினார். இருந்தாலும் மேலே செண்பகாதேவி அம்மன் கோவிலுக்குச் செல்வோம் அப்படியே குளித்துவிட்டு வரலாம், ஆனால் உடன் வரும் நண்பர்கள் மிகவும் பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும், ஒருவேளை போலீஸ் அனுமதி கொடுக்காவிட்டால் கீழே இறங்கிவிட வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் தானும் உடன்வருவதாகக் கூறினார். 

செண்பகாதேவியின் மேற்புறம் இருந்து

வீட்டிலோ செண்பகாதேவி செல்வதாகக் கூறிய அடுத்த நொடி 'ஏம்ல அங்கலாம் போயிட்டு இருக்க, பசங்கள ஊருக்கு கூட்டிவந்த இடத்துல ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டுன்னா என்ன செய்வ' என்று வழக்கம் போல் அர்ச்சனை செய்ய, 'இல்ல ஸ்ரீ அண்ணா தொணைக்கு வாராங்க' என்றதும் கொஞ்சம் சமாதானம் அடைந்தார்கள். 'ஸ்ரீ அண்ணாவோ தனக்கு வேறு ஏதேனும் வேலை வந்துவிட்டால் வரமுடியாது' என்று கூறவிட, செண்பகாதேவி பயணத்தின் மீதிருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மேலும் தென்காசிக்கு சென்று இறங்கியதில் இருந்து அவரை நச்சரித்துக் கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் என் நச்சரிப்பு பொறுக்காமல் சரி நாம போறோம். என்னவானாலும் போறோம் என்று சந்தேகத்திற்கு முற்றுபுள்ளி வைத்தார். 

செண்பகாதேவி யாருக்கும் அனுமதிக்கப்படாத மலைப்பாதை என்பதால் மிக மோசமாக இருந்தது. சிற்றருவி வரைக்கும் சிமின்ட் ரோடு, அங்கிருந்து செங்குத்தாக ஏறும் சிமின்ட் படிகள். இப்படிகள் உபயோகத்தில் இல்லாமல் இருப்பதாலும், முறையான பராமரிப்பு இல்லதாதாலும் மோசமான நிலையில் இருக்கின்றன. மேலும் செங்குத்தாக வேறு கட்டபட்டிருப்பதால் ஏறுவதற்கும் சிரமமாக இருக்கிறது. இப்படியாக ஐம்பது படிகளை ஏறினால் அங்கிருந்து நீளுகின்ற ஒத்தயடிப்பாதை நம்மை கொஞ்சம் ஆசுவாசபடுத்துகிறது. வனம் தனக்குள் ஒளித்து வைத்திருக்கக் கூடிய பிரம்மாண்டமும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.

குற்றாலம் குறித்த பல பயணக் கதைகள் நிலாச் சோறு ஊட்டப்பட்ட காலத்தில் இருந்து சேர்த்தே ஊட்டப்பட்டவை. அம்மாவும் பாட்டியும் மாமாவும் தாங்கள் சென்று வந்த குற்றாலத்தையும் இப்போது இருக்கும் குற்றாலத்தையும் குறித்தும் கதை கதையாகக் கூறுவார்கள். 

செண்பகாதேவியை நோக்கி ஓடிவரும் சிற்றாறு 

இப்போது இருப்பது போல் பயணம் அவ்வளவு எளிதாக மாறி இருக்காத காலத்தில் குற்றாலத்தில் ஐம்பதுக்கும் குறைவான குடும்பங்களே வாழ்ந்திருக்கின்றன. எந்தவொரு அத்தியாவசியத் தேவைக்கும் தென்காசிக்குத் தான் வர வேண்டும். பொழுது போகவில்லை என்றால் தென்காசிக்காரர்கள் சோறுகட்டிக் கொண்டு குற்றாலம் நோக்கி நடக்க ஆரம்பித்தது விடுவார்களாம். எங்கும் சூழ்ந்திருக்கும் வயல்வெளியும், பாதையோர மரங்களும் அவர்கள் பயணத்தை இலகுவாக்கி இருக்கின்றன. மிகவும் அமைதியான சாவகாசமான வாழக்கையை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கோ நம் வாழ்க்கையில் நமக்கு நடந்த சம்பவங்களைக் கூட அசைபோட்டுப் பார்க்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறோம்.

வனம் அமைதியான மனநிலையை கொடுத்துக் கொண்டிருந்தது. ஸ்ரீ அண்ணா மேலும் பல கதைகளை, தான் படித்த கேட்ட நிகழ்வுகளை எல்லாம் கூறிக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். எங்கும் உயர்ந்து வளர்ந்து நிற்கும் மரம் செடி கொடிகளுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சிற்றாறு. மலையின் மீதிருந்து விழும் போது மட்டும் அதன் பெயர் பேரருவியாகயோ ஐந்தருவியாகவோ செண்பகாதேவியாகவோ மாறிவிடுகிறது. தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தோம். என்றைக்கோ ஒருநாள் என் பாட்டனும் பூட்டனும் கதைபேசிக் கொண்டே நடந்த இடத்தின் வழியே நானும் பயணித்துக் கொண்டு இருக்கிறேன் என்பது எத்தனை அலாதியான அனுபவம். கார்த்திக்கும் சரவணாவும் விஜயும் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். எங்களுக்கு முன்னரே அருவிக்குச் சென்ற சில குளித்து முடித்து இறங்கிக் கொண்டிருந்தார்கள்.    

நான்கு கிலோமீட்டர்கள் நடந்ததே தெரியவில்லை அருவியை நெருங்கி விட்டோம். செண்பகாதேவி அம்மன் பூஜைக்குத் தயாராகிக் கொண்டிருந்தார். அருவியை நெருங்கிய போதுதான் தெரியும் அன்றைக்கு பௌர்ணமி என்று. இங்கு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெறும். திரளான உள்ளூர்க்காரகள் வந்து வழிபட்டுச் செல்வார்கள். பௌர்ணமி இரவில் கோவிலில் தங்கி பூஜை செய்பவர்களும் இருக்கிறார்கள். எங்களுக்கு முன்னரே வந்து சென்றவர்களின் காரணம் புரிந்தது. 

செண்பகாதேவி. வெறும் இருபது அடி உயரத்தில் இருந்து இறங்கும் அருவி என்றாலும் ஆக்ரோசமானது. இப்போது நீர்வரத்து குறைவாக இருப்பதால் அருவியின் ஆர்ப்பாட்டம் கொஞ்சம் குறைவாக இருந்தது. நின்று குளிக்கும் இடமும் பாறையால் ஆனது. வழுக்கி விடாமல் இருக்க கொஞ்சம் சிமின்ட் போட்டு மெழுகி விட்டிருக்கிறார்கள். அருவியின் நீர், வேகமாக விழுந்து விழுந்து கைபிடிக் கம்பிகள் வளைந்து போய்க் கிடக்கின்றன. நீர் விழும் இடத்தில் தடாகம் மிகவும் ஆழமானது என்ற போதிலும் முழுவதும் பாறைகளால் ஆனது. நீச்சலிடிக்கும் போதே பாறை இடுக்குகளில் கால் மாட்டி உயிர் இழந்தவர்களும் இருகிறார்கள் காப்பாற்றபட்டவர்களும் இருக்கிறார்கள். இது போன்ற அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக பத்து வருடங்களுக்கு முன் அப்போதைய கலெக்டர் வலைகளைக் கொண்டு தடாகத்தை மூடியிருந்தார். நீரின் வேகத்தைத் தாக்குபிடிக்க முடியாமல் ஒரே பருவத்தில் அந்த வலைகள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயின. வலை இருந்த தடயமாக அவை கட்டபட்டிருந்த இரும்புக் கம்பிகள் மட்டும் ஆங்காங்கு நீட்டிக் கொண்டுள்ளன. 

செண்பகாதேவி

தண்ணீர் குளிர்ந்து போய்க் கிடந்தது. எங்கள் ஐந்து பேரைத் தவிர மேலும் மூன்று பேர் மட்டுமே குளித்துக் கொண்டிருந்தார்கள். குரங்குகளிடம் இருந்து துணிமணிகளைப் பாதுகாத்துவிட்டு மெல்ல அருவியை நோக்கி நடந்தோம். தூரத்தில் பார்க்கும் போது அமைதியாகத் தெரிந்த அருவி நெருங்கிச் சென்றால் மண்டையிலேயே அடித்தது. அவ்வளவு வேகம். அங்கிருக்கும் கைபிடிக் கம்பிகள் மட்டும் இல்லை என்றால் நம்மால் அருவியில் குளிக்கவே முடியாது. அவ்வளவு வேகமாக செண்பகாதேவி கீழிறங்கிக் கொண்டிருந்தது. மிகவும் பத்திரமாக கவனமாக குளிக்கத் தொடங்கினோம், நீர் பனிக்கட்டிகளாக எங்கள் மீது பரவிக் கொண்டிருந்தது. முதல் நாள் பேரருவியிலும், ஐந்தருவியிலும் குளித்தது திருப்தியாகவே இல்லை எனக்கு. அருவி நம்மீது ஆர்பரித்து இறங்க வேண்டும். உள்ளுக்குள் அதிர்வுகளை உண்டாக்க வேண்டும். இது சீசன் இல்லை என்பதால் எல்லா அருவிகளிலும் நீர் வெண்ணையாக வடிந்து கொண்டிருந்தது. நல்லவேளை செண்பகாதேவி மட்டும் என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருந்தாள். அற்புதமான குளியல். பின் கொஞ்ச நேரம் தடாகத்திலும் குளித்துவிட்டு கரை ஏறினோம். 

செண்பகாதேவி அம்மன் கோவிலில் அப்போதுதான் பௌர்ணமி பூஜை முடிந்திருந்ததால் இனிப்பு அப்பம்/அதிரசம் கொடுத்தார்கள். குளியலுக்குப் பின்னான பசியை அது மேலும் கிளறிவிட்டது. கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக செண்பகாதேவியை மிக அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் அந்த பாட்டியை சந்திப்போம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. 
- தொடரும் 

20 Jun 2013

நாடோடி எக்ஸ்பிரஸ் - குற்றாலம் சுத்தலாம் வாங்க

காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக நகர்த்தத் தொடங்கினார். அப்போது எனது வயது ஐந்ததைத் தொட்டு ஆறை நோக்கி வளர்ந்து கொண்டிருந்தது. எனது முதல் கல்விச் சுற்றுல்லா மற்றும் குற்றாலம் என் நினைவில் பதிந்த முதல் சுற்றுல்லா.

வாழ்வில் முதன்முதலில் பார்த்ததாய் நினைவில் இருக்கும் அன்றைய பழைய குற்றாலம் வெறிச்சோடிக் கிடந்த போதும் முழுமையாய் நினைவில் இருக்கும் அதன் குளுமை. வெள்ளை சட்டை, ப்ளு ட்ரவுசர். "டீச்சர் சேட்ட பயங்கரமா பண்ணுவான், உங்கள நம்பி தான் அனுப்புறேன்" என்று அம்மா சொன்னதற்காகவே எனது கையை விடாமல் பிடித்திருந்த டீச்சர், அதையும் மீறி அருவியைப் பார்த்த சந்தோஷத்தில் ஆர்ப்பறித்து ஓடி அடிவாங்கியதன் வலி. 


கையில் வைத்திருந்த பிஸ்கட் பாக்கெட்டை என்னையும் மீறி பறித்து உடனடியாய் மரத்தில் ஏறிக் கொண்ட குரங்கு, பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு ரூபாய், கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டில். அதில் இருந்த மொத்த வெந்நீரையும் தூர ஊற்றி குளுமையான நீரை நிரப்பி திரும்பும் வழியெல்லாம் குடித்துக் கொண்டே வந்த பேருந்துப் பயணம். எதுவும் மறக்கவில்லை. இதற்கு முன்பே என்னை குற்றாலம் அழைத்து சென்றிருப்பார்கள் இருந்தாலும் அந்த இன்பச் சுற்றுல்லாமூலம் சென்ற குற்றாலம் தான் என் நினைவில் வரும் முதல் பயணம்.

அப்போதெல்லாம் சீசன் சமயத்தில் மட்டுமே குற்றாலம் செல்வது வழக்கம். சிறுவயதில் குற்றாலத்திற்கு குளிக்கச் செல்வதே ஒருநாள் இன்ப சுற்றுல்லா தான், கூட்டாஞ் சோறு, லெமன் சாதம் ஊறுகாய் என்று எல்லாவற்றையும் கட்டிக் கொண்டு சொந்தபந்தகள் புடை சூழ கிளம்பிவிடுவார்கள். தென்காசியில் எங்கள் வீடு இருக்கும் வாய்க்காப் பாலத்தில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் யானப்பாலம் வரை நடந்தே செல்ல வேண்டும். கையில் சுமையாக துணிப்பை அல்லது சாப்பாட்டுப் பை. 

ஊர்கதை உலகக்கதை பேசிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள் என்றால் ஒருநாள் பூராவும் நடப்பார்கள். வழித்துணையாக வருவது பரதன் தியேட்டர் போஸ்டர்களும் திடிரென்று அண்ணன் தம்பிகளான எங்களுக்குள் வரும் சண்டைகளும். ஒவ்வொரு தெருவுக்கும் ஒவ்வொருவர் பையை தூக்க வேண்டும் என்று எங்களுக்குள் ஒரு சமாதான துணியோ-சாப்பாட்டு பை ஒப்பந்தம் இருக்கும். அதன் எல்லை மீறப்படும் பொழுது சண்டைகளும் திடீர்த் தாக்குதல்களும் நடைபெறும்.

மெயின் பால்ஸ், புதுக் குத்தாலம் பெரிய அருவி என்றெல்லாம் அழைக்கப்படும் அருவி, குற்றாலத்தின் மிக  முக்கியமான அருவி என்றாலும் சிறுவயதில் அதிகமாய் வெறுத்த அருவியும் இது தான். 

ஆண்கள் அருவி பக்கம் தண்ணீர் அதிகம் விழும் என்று குளிக்க விடமாட்டார்கள். பெண்கள் பக்கமும் நாட் அலவுட். சிமிண்ட் கொண்டு கட்டப்பட்ட ஒரு செயற்கை நீரோட்டப் பாதை அக்காலங்களில் உண்டு, இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை, அதில் இருந்து வேகமாய் வரும் அருவி போன்ற அருவியில் தான் எம் போன்ற சிறுவர் வகையறாக்கள் கும்மாளம் இட வேண்டும். அத்தனை பெரிய அருவி இருந்தும் குளிக்க முடியவில்லையே என்பதால் அந்த அருவியே எங்களுக்கு பிடிக்காது.

ஒருநாள் வலுகட்டயாமாக மெயின்பால்ஸ்க்கு அழைத்துச் சென்றும் குளிக்க மாட்டோம் என்று அடம் பிடித்ததால் புதிதாய் ஒரு அருவிக்கு அழைத்துச் சென்றார்கள். குற்றாலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து இரண்டு கி.மீ நடக்க வேண்டும், நடக்கத் தான் வேண்டும் என்றாலும் நாங்கள் பெரிதும் விரும்புவது அந்த அருவியைத் தான். காரணம் அதன் பெயரிலேயே இருக்கும்.

புலி அருவி. "இந்த அருவிக்கு போனா புலியப் பாக்கலாம்" என்று தான் அழைத்து சென்றார்கள். புலி வருமோ இல்லையோ சிறுவர்கள் குளிப்பதற்கு மிகச் சிறந்த அருவி குற்றாலத்தில் இதைவிட்டால் வேறு கிடையாது. இப்போது கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது. முன்பெல்லாம் இன்னும் அருமையாக இருக்கும். புலி அருவியினுள்  பொழுதே ஒரு குகை போன்ற அமைப்பு இருக்கும், இங்கு தான் புலி வந்து ஓய்வு எடுக்கும் என்றெல்லாம் கப்சா விடுவார்கள். புலி அருவி என்ற பெயருக்கு ஏற்றவாறு இருக்க வேண்டுமே என்று கட்டிய அமைப்பு அது. 

மெயின் பால்ஸ் - டாப் வியு 

புலி அருவி வெறும் எட்டடி உயரத்தில் இருந்து நீர் விழும் அமைப்பு கொண்டது. அருவியில் இருந்து தண்ணீர் விழும் இடத்தில் ஒரு பெரிய கிடங்கு உண்டு, அதில் நீர் நிரம்பி பின் வெளியேறும், அதில் குளித்தால் ஒரு ஸ்விம்மிங் பூலில் குளிப்பது போன்ற உணர்வு, அதற்காகவே அங்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடிபோம். சீசன் இல்லாத சமயங்களில் வெறும் கிடங்கில் தேங்கிக் கிடக்கும் நீரில் குளித்த நாட்கள் உண்டு. 

புலி அருவி செயற்கையாக உருவாக்கப்பட்ட அருவி, கலைவாணருக்காக என்று நினைக்கிறேன். மிக மிக ரம்மியமான அமைதியான இடம். குற்றாலங்களில் எனக்கு மிகவும் பிடித்த இடம். குளித்த முடித்தவுடன் பட்டாணி வாங்கி சாப்பிட்டால் அதன் சுவையே தனி தான். பட்டாணி வாங்கிக் கொண்டு வழி நெடுக கொறித்துக் கொண்டு வருவோம்.

பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மிகபெரிய பூங்கா ஒன்று உண்டு. குற்றாலம் செல்கிறோமோ இல்லையோ இங்கு சென்றே ஆகவேண்டும். ஊஞ்சல் தொடங்கி சகலவிதமான விளையாட்டுகளையும் குரங்குகளோடு குரங்குகளாக சேர்ந்து விளையாடலாம். ஊரே இங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும், வனத்தில் இருக்கும் மொத்த குரங்குகளும் இங்கு சுற்றித் திரியும். இப்போது இந்தப் பூங்கா பராமரிப்பு இன்றி அலங்கோலமாக கிடக்கிறது. பூங்காவினுள்ளே சென்று சில வருடங்களுக்கு மேலாகிறது. 

இந்தப் பூங்காவின் அருகில் பாம்புப் பண்ணை ஒன்று இருந்தது அதில் சில முதலைகளைக் கூட வளர்த்தார்கள், பராமரிக்க முடியவில்லை என்று இழுத்து மூடிவிட்டார்கள்.

உயர்நிலைப் பள்ளிக்கு சென்றதும் நண்பர்களுடன் சேர்ந்து மட்டுமே குற்றாலம் செல்வது வாடிக்கையாகிவிட்டது. கிரிக்கெட் விளையாடி விட்டு அப்படியே சைக்கிளை மெதுவாக அழுத்த ஆரம்பித்தால் எனது வீட்டில் இருந்து நான்காவது கி.மீட்டரில் பழைய குற்றாலம். பழைய குற்றாலம் செல்லும் வழி ஏதோ மலைப் பிரதேசத்துக்குள் நுழைவது போன்றே இருக்கும். சில நிமிட உணர்வு தான் என்றாலும், அந்த வளைவுகளில் சைக்கிளையோ பைக்கையோ செலுத்தும் பொழுது ஏற்படும் உணர்வு அலாதியானது.


பொதுப்பணித் துறையினரால் விவசாயத்திற்காக ஏற்படுத்தப்பட அருவி பழையக் குற்றாலம், நீரின் வேகம் மிக அதிகமாய் இருக்கும், மக்களால் குளிக்க முடியாது. பின்னர் மக்கள் குளிக்க வேண்டும் என்பதற்காக, குளிப்பதற்கு ஏதுவாக வெடிவைத்து தகர்க்கப்பட்டு உருவாக்கியது தான் பழைய குற்றாலம்.எண்ணை தேய்த்து சுகமாய் நெடுநேரத்திற்கு குளித்து வரவேண்டும் என்றால் தென்காசி ஓடுவது பழைய குற்றாலம் நோக்கி தான்.   

கடந்த முறை நண்பர்களுடன் பழைய குற்றாலம் சென்றிருந்த பொழுது அருவியின் அருகில் இருக்கும் காடுகளினுள் நுழைந்து அருவிக்கு மேல் சென்று குளித்து வந்தோம். அங்கெல்லாம் செல்ல வனத்துறை அனுமதி இல்லை, துணிவே துணையென்றானபின் அனுமதி எதற்கு! அது ஒரு வித்தியாசமான அனுபவம். மேலே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. ஸ்ரீ அண்ணிடம் அது பற்றி விசாரித்தேன் அந்த சிவனாரின் பெயர் ஆதி குற்றாலநாதர் என்றும் அங்கு சென்று வழிபட அனுமதி உண்டு என்றும் கூறினார்.

குற்றாலநாதர் கோவிலின் வடிவமைப்பு மிக அருமையாக இருக்கும்,சம்மந்தரால் பாடபெற்ற தளம். அம்மன் சன்னதியை தேக்கு மரத்தாலான வேலைப்பாடுகளால் வடிவமைத்துள்ளனர். இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ள இங்கே சுட்டுங்கள்.  

குற்றாலத்தில்(மெயின் பால்ஸ்) குளித்துவிட்டு சூடாக மிளகா பஜ்ஜி, பாதம் பால், நேர்த்தங்கா சிப்ஸ், வெங்கடேஸ்வரா நெய் அல்வா என்று அனைத்தையும் ருசித்தால் பசி பறந்துவிடும்.

ஐந்தருவி, சிறுவயதில் இங்கு செல்வதற்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அடிக்கடி செல்வது கிடையாது, இப்போதெல்லாம் முதலில் செல்ல நினைப்பது ஐந்தருவி தான், மிக சுகமான குளியிலைப் பெற வேண்டுமென்றால் ஐந்தருவி தான் எனது சாய்ஸ். ஐந்தருவியில் மூலிகைகளும், விதவிதமான பொதிகை மலைப் பழங்களும் கிடைக்கும். அதற்காக பல பழக் கடைகள் உண்டு.         


பழத்தோட்ட அருவி, செல்லும் வழி முழுவதுமே வனத்துறைக்கு சொந்தமான பழத்தோட்டங்கள் தான், குரங்குகளை விட நம்மாளுங்க சேட்டைகள் அதிகமானதால் பல காலம் அடைத்து வைத்திருந்தார்கள், உறவினர் ஒருவர் செல்வாக்குடன் சென்றதுண்டு, குட்டி அருவி தான், இப்போது அனைவரும் செல்ல அனுமதி உண்டு என்று கேள்விபட்டேன். தேனருவியும் மிக சின்ன அருவியே, வழி தெரியாமல் செல்ல முடியாது என்பதால் ஊர்காரர்கள் துணையுடன் செல்லலாம்.


செண்பகா தேவி அருவி. மிக முக்கியமான அருவி, குற்றாலத்தின் ஆதியான அருவி. இங்கு செண்பகாதேவி அம்மன் கோவில் ஒன்று உண்டு. தென்காசி பகுதி முழுவதுமே செண்பக வனத்தால் ஆனது என்பதால் தென்காசிக்கு செண்பகவனம் என்றும் ஒரு பெயர் உண்டு. இக்கோவிலில் அவ்வையார் பூஜை பெண்களாலும், மற்றபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்று பௌர்ணமி பூஜையும் நடைபெறுகிறது. உள்ளூர் சிவபக்தர்கள் அதிகமான அளவில் பங்கு கொள்வார்கள். சித்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்று கூறுவார்கள். 

செண்பகாதேவி 


செண்பகாதேவி அருவியை சுற்றி இருக்கும் கிடங்கு மிகவும் ஆபத்தானது. பல உயிர்களை பலி வாங்கியுள்ளது என்பதால் தற்போது வலைகட்டியுள்ளனர். செண்பகாதேவி அருவிக்கு செல்வதற்கு தற்போது தடைவிதிக்கப் பட்டுள்ளது. மேலும் சரக்கு எடுத்துவிட்டோ அடித்துவிட்டோ சென்றால் தர்ம அடி கிடைக்கும். 

அடர்ந்த காடுகள் வழியே தான் செல்ல வேண்டும், மேலும் மெயின் அருவிக்கு செல்லும் ஒரு நீரோட்டத்தைக் கடந்து செல்ல வேண்டும் என்பதால் அதிகமாக மழை பொழியும் பொழுது செண்பகாதேவிக்கு செல்ல முடியாது. இந்த மலைமேல் இருந்து மெயின் பால்சின் பொங்குமா கடலை பார்க்க முடியும், அப்படிப்ப் பார்க்க வேண்டும் என்றால் பாறை வறண்டு தண்ணீரின்றி இருக்க வேண்டும். ஒரே ஒருமுறை பார்த்ததுண்டு.   

  

பெரும்பாலும் சீசன் சமயங்களில் ஊர்காரர்கள் குற்றாலம் பக்கம் செல்வதில்லை, எங்களுக்கென்று மழை பெய்து புதுவெள்ளம் வரும் போது கூட்டமில்லாத அருவிகளில் ஆனந்தமாய் குளிப்பதுண்டு, கடந்த வருடம் அடைமழை பெய்து கொண்டிருந்த சமயம் தனி ஒருவனாய் பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கு கிடைத்த வாய்ப்பு தவமின்றி கிடைத்த வரம். பெரும்பாலும் ஆண்கள் இரவுகளில் குளிக்க செல்வதே வழக்கம். இரவு நேரம் குளித்துவிட்டு அப்படியே செங்கோட்டை பார்டர் சென்று ரஹ்மத்திலோ பிலாலிலோ பாராட்டோ சாப்பிட்டால் தான் குளித்தற்கான திருப்தி கிடைக்கும்.

எப்போதும் வீசும் தென்றல்,  விடாது தூறும் தூறல், அருவியின் அருகில் சென்றாலே கிடைக்கும் குளுமையும் சாரலும், மெயின்பால்சின் வேகத்திற்கு பயந்து அனைவரும் முன்னால் நின்று தலைகாட்ட அருவியின் உள்ளே புகுந்து யாருமற்ற குளுமையான அருவியின் மற்றொரு முகத்தில் நுழைந்து குளிக்கும் பொழுது கிடைக்கும் ஏகாந்தம்... 

மதியம் சரியாக ஒன்பது மணி வண்டியை எடுத்துக் கொண்டு அலுவலகம் கிளம்பினேன். சோளிங்கநல்லூர் சிக்னல், சிக்னலுக்காக காத்திருந்த ஐந்து நிமிடத்தில் வியர்வையில் குளித்து, ஹெல்மட்டில் இருந்து ஒழுகும் வியர்வை கண்ணாடியை பாழாக்கி விட உடனடியாய் ரோட்டோரம் ஒதுங்கி கைகுட்டையால் தலைதுடைத்து மீண்டும் அவசர அவசரமாய் அலுவலகம் நோக்கி கிளம்பினேன்.

இன்று பேஸ்புக் முழுவதும் என் நண்பர்களின் குற்றால சீசன் குளியல் படங்கள். அத்தனை ஏகாந்தகங்களும் ஏக்கங்களாய் மாறிவிட்டது. ஊர்ல இருக்குற பசங்கல்லாம் கடுப்பேத்துறாங்க மைலார்ட்!   

பின் குறிப்பு : பதிவெழுத ஆரம்பித்த புதிதில் அண்ணன் சதீஷ் என்னிடம் வெகுநாளாய் கேட்ட பதிவு. ஒருவருடம் கழித்து இன்று தான் அத்தனை நியாபகங்களும் என்னுள் முழுதாய் நிறைந்துள்ளது. சற்றே பெரிய பதிவாய் ஆனதற்குப் பொருத்தருள்க. சொல்லாமல் விட்டவை ஏராளம், முடிந்தால் பின்னொரு பதிவில் பகிர்கிறேன்.