Showing posts with label கன்னியாகுமரி. Show all posts
Showing posts with label கன்னியாகுமரி. Show all posts

31 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - தேசிய சின்னம் - விவேகானந்தர் பாறை

பத்மனாதபுரம் அரண்மனையை விட்டு வெளியே வந்தபோது ஆதவன் தலைக்கு ஏறியிருந்தான். முத்துவையும் குமாரையும் பார்த்தேன் அவசரமாய் மயங்கிவிழத் தயாராய் இருந்தார்கள். நாகர்கோவிலில் இருந்து பேருந்து ஏறிய அடுத்த நிமிடம் குமரியில் இறங்கிவிட்டது போன்ற பிரமை, மூவருமே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறோம் என்பது குமரி வந்தபோதுதான் புரிந்தது. அரைமணிநேர ஆழ்ந்த உறக்கம் கொஞ்சம் உற்சாகத்தை கொடுத்திருந்த போதும் பசி வயிற்றைக் கிள்ளியது.



குமரி இன்னும் மாறவில்லை அல்லது பெரிதாக எவ்வித மாற்றமும் கண்டிருக்கவில்லை. பத்து வருடங்களுக்குப் முன் பார்த்தபோது எப்படியிருந்ததோ அப்படியே இருக்கிறது. கடற்கரைக்கு அழைத்துச் செல்லும் அதே அகலமான அதே சிமிண்ட் ரோடு, அதே போன்ற கடைகள், அதே கடல் வாசம்... பழைய நியாபகங்கள் என்னை வழிநடத்திக் கொண்டிருக்க, திடிரென்று ஒரு இடத்தில் முத்துவும் குமாரும் பெருங்கூட்டத்தை கண்டுபிடித்திருந்தார்கள்.  

'சீனு வா என்னன்னு போய் பார்த்துட்டு வருவோம்' முத்து கையைப் பிடித்து இழுத்தான்.

அருகில் நெருங்கியதும் புரிந்தது அது கூட்டம் இல்லை, விவேகானந்தர் பாறைக்கு செல்வதற்காண பயணச்சீட்டு வாங்கும் நீள் வரிசை என்று, நாங்கள் நின்று கொண்டிருந்த மேடான சாலையில் இருந்து அவ்வரிசையை அளந்தேன், கண்ணுக்கு எட்டிய தூரத்தைத் தாண்டியும் நெளிந்து கொண்டிருந்தது. 'இது ஆவுற காரியம் இல்ல, எவ்ளோ... பெரிய க்யு' பெருமூச்சு விட்டான் குமார். அவர்கள் இருவர் கண்களிலும் அகோரப் பசி. இரண்டரை மணி குமரி வெயில் சென்னைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தது. 

'நீங்க போய் சாப்ட்டு, எனக்கு குடிக்கிறதுக்கு மட்டும் எதவாது வாங்கிட்டு வாங்க' என்றபடி அவர்களை அனுப்பிவிட்டு க்யூவில் நிற்கத் தொடங்கினேன். தென்இந்திய முகங்களைக் காண்பதே அரிதாக இருந்தநிலையில் க்யூவில் பெரும்பாலனவர்கள் வடஇந்தியர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக வெளிநாட்டவர்கள். அரைமணி நேரத்திற்கும் மேல் நின்றுவிட்டேன் க்யு நகர்ந்த பாடில்லை. சாப்பிட சென்றவர்களும் வந்தபாடில்லை. க்யு இன்னும் ஒரு கிமீ தூரத்திற்கு நீண்டிருந்தது. க்யூவில் சங்கு சிப்பி போன்ற கடல் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தவரிடம் மெல்ல பேச்சு குடுத்தேன்.

"எப்போதுமே இவ்ளோ கூட்டம் இருக்குமான்னே"

"இல்ல தம்பி, டிசம்பர்ல எல்லா பக்கமும் லீவு இல்ல, அதனால் கூட்டமா இருக்கு, அப்புறம் சனி ஞாயிறு கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கும், மத்த நாள் ப்ரீயா தான் கெடக்கும்"

"இன்னிக்கு காலைல கூட்டம் இருந்தததான்னே"

"காலைல சரியான கூட்டம் தம்பி, எப்போதுமே சூர்யோதயம் பார்த்துட்டு நேரா க்யுல வந்து நின்றுவாங்க"

எங்கள் பயண திட்டப்படி குமரிதான் முதலில் இருந்தது. ஒருவேளை இங்கு வந்திருந்ததால் குமரியை தவிர வேறு எங்குமே சென்றிருக்க முடியாது! எங்கள் பயண திட்டம் மாறி இருந்ததில் கொஞ்சம் மகிழ்ச்சி அடைந்தேன். குமரிக்கு வருவதாய் இருந்தால் மாலை மூன்று மணியளவில் வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை குமரியிலேயே ஒருநாள் முழுவதும் செலவழிப்பதாய் உத்தேசம் என்றால் கவலையில்லை. நிதானமாக சுற்றிப் பார்க்கலாம். குமரியம்மன் கோவில், காந்தி மண்டபம், முக்கடல் சங்கமிக்கும் கடற்கரை, கலங்கரை விளக்கம் இன்னும் பல என்று எவ்வளவோ உள்ளன.

நாங்கள் மூவரும் இவற்றை எல்லாம் கல்வி சுற்றுல்லாவிலேயே பார்த்தவர்கள் தாம். இருந்தும் விவேகானந்தர் பாறைக்கு செல்ல வேண்டும், சிலநிமிட பயணம் என்றாலும் கடலில் பயணிக்க வேண்டும்.  

ஒருவழியாக வந்து சேர்ந்த என் சகாக்கள் 'எலேய் கடக்காரன் ஏமாத்றான்ல, எல்லாத்துலையும் MRPய விட பத்து ரூபா அதிகமா வச்சி விக்கரானுங்க', என்றபடி புலம்பினான் குமார். இந்தியா முழுவதும் இருக்கும் எல்லா சுற்றுல்லாத் தளங்களிலும் இருக்கும் தேசியப் பிரச்சனை. என்ன செய்வது இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் என்பதைத் தவிர.     

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் க்யூவில் நின்ற நாங்கள் அதன்பின்னும் அரைமணி நேரம் காத்திருந்தே படகில் ஏறினோம். கட்டுகடங்காத கூட்டம்.  வெறும் மூன்றே மூன்று படகுகள் மட்டுமே இங்கும் அங்குமாக சேவை புரிந்து கொண்டிருந்தன. தமிழக அரசின் பூம்புகார் நிறுவனம் படகு சேவையை செவ்வனே செய்து கொண்டுள்ளது. படகுக் கட்டணம் + பாறைக் கட்டணம் சேர்த்து 55/- என்று நினைக்கிறேன், மேலும் இங்கும் வி.ஐ.பி நுழைவாயில் உள்ளது அதற்கு தலா 400/- என்று நினைக்கிறன்.  


'சீனு சின்ன வயசுல இந்த போட்ல நாம போனப்ப, நீ 20 பைசாவ கடல்ல தூக்கி போட்ட, அத பாத்து ஏகப்பட்ட பேரு காச தூக்கி போட்டாங்க நியாபகம் இருக்கா' என்றான் முத்து. மறக்கவே முடியாத நினைவலைகள் அவை. எனக்கு விபரம் தெரிந்த முதல் கடல் பயணம். அப்போதும் இந்த இருவரும் உடன் இருந்தார்கள். இப்போதும்! 

லைப் ஜாக்கெட் என்ற பெயரில் ஒரு வஸ்துவை அணியச் சொன்னார்கள். அதனை அணியாதிருந்தால் தத்தளித்தாவது கரை சேர்ந்துவிடுவீர்கள். காரணம் அவையெல்லாம் விவேகானந்தர்,  பாறைக்கு நீந்திச் சென்ற காலத்தில் வாங்கிய லைப் ஜாக்கெட்டுகள் இவை. ஒரு கவர்ச்சி நடிகையின் ஜாக்கெட்டில் கூட அவ்வளவு கிழிசல்களும் ஓட்டைகளும் இருக்காது. இதில் ஓராயிரம் ஓட்டைகள் கிழிசல்கள். 

வசதியாக ஆளுக்கொரு கடல் ஓர இருக்கையைப் பிடித்துக் கொண்டு ஆழியினை ரசிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் ரசிக்கத் தொடங்கினோம், அந்தோ பரிதாபம்! அதற்குள் பாறை வந்துவிட்டது.    

விவேகானந்தர் பாறையைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் தேவைப்படாது என்று நினைக்கிறன், இருந்தும் சில முக்கிய தகவல்கள் மட்டும். 

விவேகானந்தர் குமரி முனையில் இருந்து இந்த பாறைக்கு நீந்தியே வந்துள்ளார், அவர் வந்து சென்றதை சில மீனவர்கள் உறுதி செய்துள்ளார்கள்.

விவேகானந்தர் பாறையும், குமரி அம்மன் ஆலயமும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் இந்த பாறையை விவேகானந்தர் தேர்ந்தெடுத்ததாகவும், மேலும் இங்கு அம்மனின் பாதம் இருப்பதாகவும், அது அம்மன் சிவனை நோக்கி தவம் செய்த போது படிந்த பாதம் என்றும் கூறுகிறார்கள்.  

மூன்று நாட்கள் இங்கிருந்து தவம் புரிந்துள்ளார். குமரி அம்மனின் அருள் பெற்று இங்கிருந்து அவர் நேராக பயணப்பட்டது சிக்காகோவை நோக்கி.

இந்த இடத்தில் நினைவுச் சின்னம் அமைப்பதற்காக ஏக்நாத் ரானடே மிக அதிகமான எதிர்ப்புகளையும் ஏளனங்களையும் சந்தித்துள்ளார். மேலும் இதுபோன்ற எதிர்ப்புகள் அத்தனையையும் மீறி ஒரு தேசியமே ஒன்றிணைந்து, ஒரு நபருக்கு ஒரு ரூபாய் என்றளவில் நன்கொடை வழங்கியது விவேகானந்தர் நினைவுச் சின்னம் காட்டுவதற்காகத் தான் இருக்கும். 

விவேகானந்தர் வங்கத்தை சேர்ந்தவர் என்பதால், வங்கத்தை சேர்ந்தவர்கள் அதிகமான அளவில் வந்து செல்கிறார்கள். 

சுகமான கடல் காற்றால் சூழ்ந்திருந்தது விவேகானந்தர் பாறை.  இவற்றைக் கடந்து நல்ல  விசாலமான மண்டபத்தினுள் கம்பீரமாக நின்று கொண்டிருந்த விவேகானந்தரை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த நேரம், என் அருகில் இருந்த சிறுவனிடம் அவன் அம்மா கூறினார் 'தம்பி விவேகானந்தர் இங்க வந்து தவம் பண்ணும் போது தாண்டா இறந்து போயிட்டாரு, அதான் அவருக்கு இங்க செல வச்சிருக்காக' என்றார். ஊம் கொட்டி கேட்டுக் கொண்டான் அச்சிறுவன், விவேகானந்தரின் ஆன்மாவும் ஊம் கொட்டி கொண்டே சிரித்திருக்குமென நினைக்கிறன். பின்னே அவருக்கும் டைம் பாஸ் வேணாமா!   

விவேகானந்தர் சிலை இருக்கும் மண்டபத்தில் தியானம் செய்வதற்கு அனுமதி இல்லை. அதற்கென்றே கீழ் தளத்தில் ஒரு தியான மண்டபம் இருகின்றது. தவறாது சென்று வாருங்கள். ரம்யமான இடம். மேலும் இங்கே ஒரு புத்தக நிலையம் உள்ளது, கையடக்க சிறிய சிறிய புத்தகங்கள் உங்களுக்குப் பயன்தரலாம்  

கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் சுற்றிலும் பரந்து  ஓய்வில்லாமல் ஓடிவிளையாடிக் கொண்டிருந்த கடலை அங்கும் இங்கும் அலைந்து கொண்டே ரசித்துக் கொண்டிருந்தோம். இங்கிருந்தே சூர்யாஸ்தமணத்தை ரசித்தோம். அதே கல்வி சுற்றுலாவில் கடல் காற்று என்னை தூக்கிச் செல்லப் பார்த்ததை நினைவுபடுத்தி சிலாகித்தான் முத்து. அந்த சூழ்நிலைக்கு அடிமையாகிருந்த மனது மீண்டும் கரைக்குச் செல்ல விரும்பவேயில்லை. மீண்டும் படகு. மீண்டும் குதுகலம். மீண்டும் கரை. மீண்டும் ஏக்கம். இருள் பரவத் தொடங்கியிருந்தது. இருந்தும் நெடுநாள் ஆசை நிறைவேறியதில் மனம் பிரகாசமாக இருந்தது.


தாழ்நிலை நீர்மட்டம் காரணமாக அய்யன் வள்ளுவன் சிலைக்கான படகுப் போக்குவரத்தை தடை செய்திருந்தார்கள். அங்கு செல்ல முடியாதது கொஞ்சம் வருத்தமாக இருந்தது. மேலும் அதிக காற்று, கடல் கொந்தளிப்புகள் இருந்தால் எந்நேரமும் விவேகானந்தர் பாறைக்கான படகுப் போக்குவரத்தும் நிறுத்தபடலாமாம். அதனால் மழைகாலத்தில் குமரிப் பயணத்தை ஒத்தி வைத்துவிடுவது நலம். 

இந்தப் பதிவோடு குமரி பயணத்தை முடித்து விடலாம் என்று நினைத்தேன்... ஆனால்.. மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் தொடரும்... :-))) 

படங்கள் : இணையம் 

16 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - பத்மநாதபுரம் அரண்மனை - ஒரு விஸிட்

மண்டைக்காடு பயணம் முடித்து தக்கலையில் இறங்கிய போது 'சீனு பத்மனாதபுரம் போவமே' என்றான் குமார். சிறுவயதில் கல்விச் சுற்றுல்லாவில் பார்த்த பத்மனாதபுரம் அரண்மனை யின் நினைவுகள் மூளையின் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிகொண்டிருந்த போதும், தக்கலையில் இருந்து வெறும் 1.5 கிமீ தூரத்தில், மிஞ்சிபோனால் ஓரிரு மணிநேரத்தில் சுற்றி முடிக்கக் கூடிய இடம் மேலும்  இதேபோல் வேறொரு வாய்ப்பு கிடைப்பது அரிதினும் அரிது. 



தக்கலையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அத்துனை பேருந்துகளும் அரண்மனை வழிதான் சென்றாக வேண்டும், இருந்த போதும் இவ்வழியே செல்லும் நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகள் மிகக்குறைவு.வெறிச்சோடிக்கிடந்த பேருந்து நிலையத்தில் 'எப்போதும் கிளம்புமோ?' எனத்தெரியாத மினிபஸ் ஒன்று தேவுடு காத்து கொண்டிருந்தது. 'நாப்பது ரூவா கொடுத்தா போலாம் தம்பி' என்றார் ஒரு ஆட்டோ. '35 ரூபாய் நுழைவுக் கட்டணம்' என்றார் அரண்மனை அலுவலக ஓபிசர். அரண்மனை தமிழகத்தில் இருந்தாலும், நிர்வாகம் கேரளா. 

அரண்மனை வளாகமானது வட இந்தியர்களாலும், வெளிநாட்டு கலா ரசிகர்களாலும் நிரம்பி வழிந்த நிலையில் தென்னிந்திய முகங்களைக் காண்பதோ அரிதிலும் அரிதாக இருந்தது. அரண்மனையினுள் காலணி அணிய அனுமதியில்லை, ஓபீஸ் அருகில் காலணி பாதுகாக்கும் இடம் இருக்கிறது, அங்கே காலணிகளை வைத்துவிட்டு வாருங்கள் உள்ளே செல்வோம்.

வாயில் சூயிங்கம் மென்று கொண்டிருந்தால், துப்பிவிட்டு வாருங்கள், இல்லையேல் உள்ளே விடமாட்டார்கள். அரண்மனையின் ஓரிடத்தில் ஒரு தூணில் எவனோ ஒருவன் ஒட்டி வைத்திருந்த சூயிங்கம்மை, பிய்த்து எடுக்க பிரயத்தனப்பட்டு, எடுக்க முடியாமல் அலங்கோலமாக மாறியிருந்த ஒரு தூணை உங்களிடம் காண்பிக்கிறேன், அப்போது பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள் நாமெல்லாம் இந்தியர்கள் என்று. அதனால் தானோ என்னவோ அரண்மனைப் பராமரிப்பு விசயத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். மிக கண்டிப்புடனும் இருக்கிறார்கள்.  



வெளியிலிருந்து பார்த்தால் அரண்மனையானது ஏதோ ஒரு சாதாரண பழைய பங்களா போல்தான் தோன்றும். திரைப்படங்களில் காட்டுவது போல் பிரமாண்டமான கோட்டை, கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான படை வீர்கள், பிரம்மாண்ட முகப்பு என்று எவ்வித இத்யாதிகளையும் உங்களால் காண முடியாது, இருந்தும் சாதரணமான முகப்பைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள், உள்ளே உங்களை ஆச்சரியபடுத்த வேண்டுமென்றே சில விஷயங்கள் காத்துக்கொண்டுள்ளன. மேலும் அரண்மனையின் உட்புறம் செல்ல செல்ல அரண்மனைப்பகுதிகள் அனுமாரின் வால் போல வெகுதூரத்திற்கு நீண்டு செல்கின்றன. 

கிபி 1550ல் இந்த வழியாக சென்று கொண்டிருந்த சேர மன்னன் ரவிவர்ம குலசேகர பெருமாளுக்கு ' இயற்கை எழில் கொஞ்சும் இந்தப் பகுதியையே தலைநகராகக் கொண்டு ஏன் ஆட்சி புரியக்கூடாது' என்ற எண்ணம் உதயமாகியிருக்க வேண்டும், மேலும் தனது அரசை பலப்படுத்த, பாதுகாக்க கம்பீரமான மேற்குத்தொடர்ச்சி மலை இருக்கிறது, வாணிபத்திற்கு முக்கடல் இருக்கிறது, இதனை விட வேறு என்ன வளம் வேண்டும். திருவிதாங்கூர் மாகாணத்தின் தலைநகரமானது பத்மநாதபுரம்.

ராஜ ரவிவர்மா மற்றும் அவர் வழிவந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கிய, தற்போது கேரள அரசாங்க பராமரிப்பில் இருக்கும் இந்த அரண்மனையின் உள்புறம் தாய்க்கொட்டாரம் என்று ஒரு கட்டிடம் உண்டு, அதுவே இந்த  அரண்மனையில் முதன்முதலாக கட்டப்பட்ட கட்டிடமாகும். 

மலையடிவாரம் என்பதால் இயற்கையாகவே அரண்மனை முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. போதாகுறைக்கு மொத்த அரன்மையையும் தேக்கு கொண்டு இழைத்திருக்கிறார்கள். மேலும் அரண்மனையினுள் எவ்வித அலங்கார மின்விளக்குகளும் கிடையாது. இயற்கை தரும் வெளிச்சம் கொண்டே அரண்மனை முழுமையையும் சுற்றிப்பார்க்க வேண்டும் என்பதால் மாலை 4.30 மணி வரை மட்டுமே அரண்மனை உலாவிற்கு அனுமதி.           

அரண்மனையினுள் முக்கியமான இடங்களிலெல்லாம் நிற்கும் அரண்மனை ஊழியர்கள் அந்த இடங்களின் சிறப்பை, அதன்பின் இருக்கும் வரலாற்று புராணத்தை நமக்குக் கூறுகிறார்கள். அனைவருமே மலையாளிகள், ஆங்கிலம் ஹிந்தி சரளமாக பேசுகிறார்கள், தமிழ் புரிந்து கொள்கிறார்கள், பேச்சு அவ்வளவு சரளமில்லை. இருந்தும் அவர்களது மலையாளத் தமிழ் நமக்கு புரியும் படியாகவே இருக்கிறது.  

ஆசியாவிலேயே மரத்தால் (தேக்கால்) ஆன மிகபெரிய அரண்மனையினுள், நுழைந்த அடுத்த வினாடி நம்மை வரவேற்பது குதிரை வீரன் விளக்கு. விளக்கின் மேற்புறம் ஒரு குதிரைவீரன் போருக்கு செல்வதற்கு தயார் நிலையில் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டதே இவ்விளக்கின் பெயர்காரணமாகும். 




தேக்காலான வரவேற்பு மண்டபத்தின் மேற்கூரையில் இருந்து கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருக்கும் சிக்கலான வடிவமுடைய இரும்புச் சங்கிலி இந்த விளக்கை தாங்கிப் பிடித்துக் கொண்டுள்ளது மேலும் விளக்கை நீங்கள் எந்த திசையில் அல்லது கோணத்தில் திருப்பினாலும் அது அந்த திசை நோக்கியே வெளிச்சம் கொடுக்கும், எத்தனை பலமாக காற்றடிப்பினும் அசையவே அசையாது, விளக்கின் முகமும் மாறாது. தொடாதீர்கள். இங்கிருக்கும் எந்த ஒரு பொருளையும் தொட்டு ரசிப்பதற்கு அனுமதியில்லை. 

குதிரைவீரன் விளக்கை தவிர்த்து குறிப்பிடும்படியான மற்றொரு விஷயமும், விளக்கு தொங்கிக் கொண்டிருக்கும் தேக்கால் ஆன மேற்கூரையில் ஒன்றிற்கொன்று ஒற்றுமையில்லாத தொண்ணூறு விதமான தாமரை மலர்கள் மிகமிக நெருக்கமாக அருகருகே பொறிக்கப்பட்டுள்ளன. சீன தேசத்தவர்கள் அன்பளிப்பாக வழங்கிய நாற்காலி மற்றும் கட்டிலையும் அந்த மண்டபத்தில் பார்வைக்கு வைத்துள்ளார்கள். 

முகப்பு மணடபத்தின் ஓரத்தில் குறுகலான அமைப்பையுடைய மர ஏணி மேல்தளம் நோக்கி ஏறுகிறது. (இங்கே மரம் எனப்படுபவை அனைத்தும் தேக்காலனவை) இந்த ஏணியின் அருகில் இருக்கும் கண்ணாடிப் பேழையினுள் அரசர்களுக்கு வந்த ஓண வாழ்த்து அட்டைகளை பார்வைக்கு வைத்துள்ளனர். 

ஏணியானது நம்மை அழைத்துச் செல்லுமிடம் அரசவையின் மந்திராலோசனைக் கூடம். அரசர் தன் குழாமுடன் இணைந்து ஏதேனும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டுமாயின் அம் மந்திராலோசனை இங்கு வைத்தே நடைபெறும். மிக சிறிய இடமாயினும் அரசரின் அரியணை, மந்திரி, தளபதி இன்னபிறர் அமரும் இருக்கைகள்,  ஊர்ப் பெரியவர்கள் மற்றும் ஊரார் அமரும் இடம் என்று அனைவருக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 



கேரளா பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையின் ஜன்னல்கள் உள்ளிருந்து பார்த்தால் வெளிப்புறம் தெரியும்படியாகவும், வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் இருளாய் தெரியும் படியாயும் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வாயில்கள் மிகக் குறுகலாகவே கட்டப்பட்டுள்ளன. இந்த அரண்மனையில் இருக்கும் பெரும்பாலான அறைகளின் தரைப்பகுதி நல்ல வளுவளுப்பாக இருப்பதன் காரணம் முட்டை ஓடு, முட்டையின் வெள்ளைக்கரு, தேங்காய் செரட்டை, சுண்ணாம்பு. 

மந்திராலோசனைக் கூடம் கடந்து அடுத்ததாக நாம் நுழையும் இடம் அன்னதான மண்டபம். இரண்டு தளங்களாக அமைந்திருக்கும் அன்னதான மண்டபத்தில் ஒரேநேரத்தில் இரண்டாயிரம் ஆயிரம் பேர் வரை அமர்ந்து உணவருந்த முடியும். மேலும் தினசரி இங்கே அன்னதானம் நடைபெறுமாம். உணவு சமைக்கும் இடம், ஊறுகாய் பராமரிக்க பயன்படுத்திய சைனா களிமண்ணால் செய்யப்பட்ட தாளிகள் போன்றவற்றை பத்திரமாக பராமரித்து வருகிறார்கள். 

அன்னதான மண்டபம் தொடர்ந்து வருவது தாய்க்கொட்டாரம். மிகபெரிய கூட்டுக்குடும்பம், அங்கே வாழ்ந்ததற்கான சாட்சியங்களை விட்டுச் சென்றுள்ளது இந்த தாய்க்கொட்டாரம். ராஜா ரவிவர்மா முதன் முலில் கட்டிய தாய்க்கொட்டாரத்தை சுற்றியே அவரைத் தொடர்ந்து சமஸ்தானத்தை ஆட்சி புரிந்தவர்கள், அரண்மனை மொத்தத்தையும் விஸ்தரித்துள்ளார்கள். தற்போது அமைந்திருக்கும் அரண்மனையின் மொத்த பரப்பளவு ஆறரை ஏக்கர். 

தாய்க் கொட்டாரத்தைத் தொடர்ந்து வருவது மூன்று அடுக்குகளைக் கொண்ட ராஜ மாளிகை. இங்கு மன்னரின் படுக்கையறை மற்றும் ஓய்வெடுக்கும் அறைகள் அமைந்துள்ளது. மன்னரின் படுக்கையறையில் இருக்கும் கட்டிலானது 64 மூலிகைகள் சேர்த்து செய்யப்பட்ட மருத்துவ குணமுடைய கட்டிலாகும். மேலும் இக்கட்டிலை டச்சுகார்கள் மன்னருக்கு நட்பு நிமித்தமாக பரிசளித்துள்ளனர் . 


இந்த அறையைத் தொடர்ந்து வருவது அரச குமாரிகளின் அந்தபுரம். இங்கு அரசனைத் தவிர வேறு யாருக்குமே அனுமதி இல்லை. நல்ல நீளமான அறைகளையுடைய அந்தபுரத்தின் இருபக்க சுவர்களிலும் ரசம் மங்கிய ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகள் தொங்குகின்றன. ஒரு கண்ணாடியின் அருகில் ஒப்பனை செய்துகொள்ள வசதியாக ஊஞ்சல் ஒன்று கட்டித்தொங்க விடப்பட்டுள்ளது. 

திருவிதாங்கூர் அரச குடும்பத்தைப் பொருத்தவரையில் பெண்களுக்கே அதிக மரியாதைகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளனர். மேலும் இங்கே ராணியின் மகள்வழிப் பேரனே ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்த வேண்டும் என்றொரு விதியும் உள்ளது.

அந்தபுரத்தைத் தொடர்ந்து வரும் மற்றொரு நீளமான அறையில் மன்னரின் ஆட்சிகாலத்தில் நடைபெற்ற சாதனைகள், போர்கள், மன்னரிடம் அடிபணிந்தவர்கள், மற்ற முக்கிய நிகழ்வுகள் முதலியவை ஓவியங்களாக வரையப்பட்டு தொங்க விடப்பட்டுள்ளன. 

இதைத் தொடர்ந்து வருவது இந்திர விலாசம். இந்திர விலாசமானது மாட வீதிககளை நோக்கியபடி அமைந்துள்ளது. மாட வீதிகளில்  இறைவன் உலா வரும்போது தரிசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னர் நகர்வலம் செல்லும் போது யானையின் அம்பாரியில் ஏறி அமர்வதற்குண்டான இடமும் இங்கே இருக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுடன் மன்னர் உரையாடும் இடம் இந்திரவிலாசம் என்பதால் சற்றே நவீனபாணியில் கொஞ்சம் அகலமாக விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வரும் இடம், முழுக்க முழுக்க கற்களால் கட்டப்பட்ட நவராத்திரி மண்டபம். மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் இங்கிருந்த சரஸ்வதி சிலை தற்போது இல்லை. அரண்மனையின் கலாசாலையும் இம்மண்டபமே. அரசி மற்றும் அரச குடும்பத்துப் பெண்டிர் கலை நிகழ்சிகளை பார்த்து ரசிக்கும் படியாக மரத்தாலான மறைவான தடுப்பு ஒன்றும் இவ்விடத்தில் இருக்கிறது.



அரண்மனையின் வெளிப்புறதில் மிகபெரிய தடாகம் ஒன்றை கட்டியுள்ளார்கள். மன்னரின் அறையில் இருந்தும், அந்தபுரத்தில் மற்றும் கோவிலில் இருந்தும் தடாகத்தினுள் செல்லும் படியாக மொத்தம் மூன்று வழிகளை அரண்மனையின் உட்புறம் இருந்து அமைத்துள்ளார்கள். 

அரண்மனையினுள் மிக ஒடுக்கமான ஆயுதசாலைகள் உள்ளன, ஈட்டி, வேல்கம்பு, கையெறி குண்டு, துப்பாக்கி முதலான போர்க்கால ஆயுதங்களை மிகவும் ரகசியமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருந்திருக்கிறார்கள். மேலும் இந்த பகுதியை சுற்றி கடுமையான காவல் இருந்துள்ளது. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில்  பெரும்பாலான ஆயுதங்கள் மிலேச்சர்களால் அபகரிக்கப்பட்டதாக கூறுகின்றனர், எஞ்சிய ஆயுதங்களை அருகில் இருக்கும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.

திரைப்பட ஷூட்டிங்களுக்கு வாடகைக்கு விட்டே நாயக்கர் மகாலைநாசம் செய்துவிட்டோம், முறையான பராமரிப்பின்றி, வேலூர், செஞ்சி மற்றும் இன்னபிற கோட்டைகளின் முக்கால்வாசி வீதம் அழிந்தே போய்விட்டது. தமிழகத்தில் உருப்படியாய் இருக்கும் ஒரே ஒரு அரண்மனை இதுவாகத்தான் இருக்கவேண்டும் .அதுவும் பாழ்பட்டுப் போகுமுன் ஒருமுறை நேரில் சென்று பார்த்துவிடுங்கள். 

அரண்மனையை சுற்றிப்பார்த்துவிட்டுத் திரும்புபோது 'ஏ இங்கதாண்டி சந்திரமுகி படமும் ராரா பாட்டும் எடுத்தாங்களாம்' என்று கூறிக்கொண்டே கடந்த அந்த அழகிய மங்கையை உள்ளிருக்கும் மன்னர்களின் ஆன்மா மன்னிக்கவே போவதில்லை :-)  

படங்கள் : நன்றி கூகுள் 

பயணிப்போம்...

13 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கால் பதித்தபோது அதிகாலை ஐந்து மணி. தைமாதக் குளிர் சென்னையைவிடக் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. வடசேரி புதிய பேருந்து நிலையம், வெளியூர்களில் இருந்து வரும், புறப்படும் எல்லா பேருந்துகளுக்கும் அடைக்கலம் கொடுக்குமிடம். மீனாட்சிபுரத்தில் இயங்கும் அண்ணா பேருந்துநிலையம் பழைய மற்றும் உள்ளூர் பேருந்துகளின் நிலையம். 

சூர்யோதயம் பார்க்கும் திட்டம் ரத்தானதால், பகவதி அம்மனை தரிசிக்க முடிவு செய்து மண்டைக்காடு கிளம்பினோம். (மண்டைக்காடு கிளம்பும் வரையிலான சம்பவங்கள் கத்தரிக்கப்படுகின்றன.) ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வடசேரி பேருந்து நிலையம் செல்லும் அந்த சாலை சோம்பிக்கிடந்த போதும் எங்களுக்கு வழி சொல்ல வேண்டும் என்பதற்காகவே தங்கள் தூக்கத்தைத் தொலைத்த இருவர் சாலையில் எதிர்பட்டார்கள். 

'அண்ணே மண்டைக்காடு எப்படி போகணும்'' 

'மண்டகாடு போவனும்முன்னா அண்ணா போறது நல்லதாக்கும், வடசேரில பஸ்ஸு கொரவு புள்ளே, உள்ள போய் அத்தம் போ பஸ்ஸு உண்டு' முதியவரின் வெத்தலைப் பேச்சு காற்றில் பரவியது. நாகர்கோவில் தமிழைக் கேட்டு எவ்வளவு நாளாகிறது, 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பாஷையைத்தான் கேட்கப்போகிறேன்' நினைக்கும் போதே குதூகலமாய் இருந்தது. 

"பஸ்ஸு அதிகம் உண்டா', அவர் பாஷையைக் கேட்கும் ஆர்வத்தில் பேச்சை வளர்த்தேன். 

'மண்டகாடுக்கு பஸ்ஸு கொரவுதான், உள்ளூரு கிராமத்து கோவிலுனால நேரமே சாத்திருவான், ஒன்பதுக்குள்ள போனா அம்மைய பாக்கலாம், வடசேரில பஸ்ஸு புடிச்சி தக்கல போனா கொல்லம், அங்கன இருந்து பஸ்ஸு அடுதுக்கடுத்து உண்டு'.

'அய்யே வடசேரி போறதுக்கு அண்ணா நட பிள்ளே, பஸ்ஸு உடனுக்கு கிட்டும்' இது அவரின் அருகில் இருந்தவர்.

'வேணா வேணா, அண்ணா போவ தொலவு நடக்கணும், வடசேரி கொல்லம்'       

வடசேரி. அவர்கூறியது மிகச்சரியே. மண்டைக்காடு செல்வதற்கு ஒரு பேருந்துகூட இல்லை. தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி பயணிக்கத் தொடங்கினோம். சரியாக இரண்டு நிமிடங்களில் டவுனைத் துறந்து கிராமங்களினுள் நுழையத் தொடங்கியது பேருந்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எவ்வளவு அதிகமென்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் ஒரு கிராமமே எனும் அளவிற்கு அதிகம். அதனால் பேருந்து ஏறுவதற்கு முன் அது நேர்வழிப் பேருந்தா, எல்.எஸ்.எஸா என்றெல்லாம் விசாரித்து ஏறினால் சேர வேண்டிய இடத்தை துரிதமாக சென்றடையலாம். இல்லையேல் என்னவாகும் என்பதை கடைசி பத்தியில் சொல்கிறேன்.        .   

தமிழகத்தின் மற்ற எல்லா மாவட்டங்களும் மிக வேகமாக தனது பழைய அடையாளங்களை இழந்து புதியதை ஏற்றுக்கொண்ட நிலையில் குமரி மாவட்டம் மிக மெதுவாகவே தனது அடையாளத்தை இழந்து வருகிறது. விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. சாலைகளின் இருபுறமும் பச்சைபசேல் வயல்வெளிகள், அவற்றிற்கு நிழல் தருவதற்காக உயர்ந்து வளர்ந்த தென்னந்தோப்புகள். சிலசமயம் சாலைகளுடன் சேர்ந்து பயணிக்கும், சாக்கடை கலக்காத ஆச்சரியமான ஓடைகள். கேரளாபாணி வீடுகள். வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய சாலைகள். எங்களுடன் பயணித்த சக காட்சிகளை ஆர்வம் பொங்க வர்ணித்துக் கொண்டே வந்தான் முத்து. அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துப்போனது குமரிமாவட்டம் .

அரைமணி நேரத்தில் தக்கலையில் இறங்கி மண்டைக்காடு செல்ல தயாராய் இருந்த பேருந்தினுள் ஏறும் போது 'இது சுத்தி போற பஸ்ஸு, நேரமே போணும்னா பொறத்த பஸ்ஸு உண்டு' என்றார் அந்தப் பேருந்தின் நடத்துனர். அந்த புண்ணியவானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பசி பசி என்று அலறிக் கொண்டிருந்த வயிற்றிற்கு கருணை காட்டுவதற்காக டீ குடிக்க சென்றோம். பாரபட்சமே இல்லமால் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதே தேயிலை வெந்நீர் இங்கும் சுடசுட கிடைக்கிறது. இம்மியளவும் வித்தியாசமில்லா சுவை.

முத்துவின் வர்ணனை தொடங்க மீண்டும் தென்னந்தோப்புகளின் நடுவே பயணிக்கத் தொடங்கினோம். திங்கள் சந்தை திங்கள் நகராக மாறியுள்ளது. ஏன் மாற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த அரைமணி நேரத்தில் மண்டைக்காடு எங்களை இனிதே வரவேற்றது. கோவில் வாசல்வரை பேருந்து செல்வதால் நீண்டதூரம் நடக்கத் தேவையில்லை.   

நாங்கள் சென்ற தினம் விடுமுறை தினமாகவே இருந்தபோதும் கூட்டம் சிறிதும் இல்லை. மிக நிம்மதியான பகவதி அம்மன் தரிசனம். சில கோவில்களில் மட்டுமே உணர முடிகிற மன அமைதி இங்கும் கிடைத்தது. மிகவும் சிறிய கோவில். 15 அடி உயரம் வளர்ந்த புற்றையே அம்மனாக வழிபடுகின்றனர். செவ்வாய் வெள்ளி மற்றும் மாசிமாத திருவிழாக்களில் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோவில் திருப்பிரசாதமான சந்தனம் குங்குமம் போன்றவற்றை இன்றளவிலும் வாழை இலையிலேயே தருகிறார்கள். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது நாங்கள் வந்த பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அதில் செல்லலாம் என்று கூறிய குமாரிடம் 'மண்டைக்காடு பீச் போக வேண்டாமா?' என்றேன்.  

ராஜாக்கமங்கலம் கடற்கரையில் சுதந்திரமாக விளையாடவிடும் பத்மா மாமி மண்டைக்காடு கடற்கரையில் கால் நனைக்க வேண்டும் என்று கூறினாலே கோபமாகிவிடுவார். காரணம் இறைவனின் வடிவமைப்பில் இந்தக் கடற்கரை கொஞ்சம் விநோதமானது. 

மற்ற எல்லா கடற்கரையிலும் கடல் அலையானது வெகுதூரத்தில் உருவாகத்தொடங்கி, உயரத் தொடங்கி கரையை நெருங்கும் போது மெதுவாக மிக மெதுவாக வந்து நமது பாதம் நனைத்துச் செல்லும். சில சமயங்களில் நம்மிடம் விளையாட்டு காட்டுவதற்காக கொஞ்சம் வேகமாக, கொஞ்சம் உயரமாக எழும்பி நம்மை மகிழ்விப்பதுண்டு. இன்னும் சொல்லபோனால் இவை நேராக நமது காலை நோக்கி தவழ்ந்து வரும் கடலலைகள். ஆனால் மண்டைக்காடு கடல் சற்றே வித்தியாசமானது.


ராமேஸ்வரம் கடலைப் பார்த்திருகிறீர்களா, ஒரு குளம் போல் மிக சாதுவாக இருக்கும், அலை என்பதை பெயரளவில் கூட காண முடியாது. மண்டைக்காடு கடலும் கிட்டத்தட்ட அதேபோல் தான் இருக்கும். ஆனால் இந்த கிட்டத்தட்ட என்ற வார்த்தை தான் அந்த அபாயத்தையும் அற்புதத்தையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால், இந்தக்கடலும் ஒரு பெரிய குளம் போல் மிக சாதுவானதாக தெரியும். ஆனால் தொம் தொம் என்ற சப்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் கொஞ்சம் கிட்ட நெருங்கிப் போய் பார்த்தாலும், கடலானது குளம் போல் சலனமற்றுதான் தோன்றும். ஆனால் 'தொம்' சப்தம் அதிகரித்திருக்கும்.  

முழுவதுமாக கடற்கரையினுள் இறங்கிவிடுங்கள். இப்போது ஆழியின் அற்புதத்தை மிக அருகில் காணலாம். மண்டைக்காடு மற்றும் இதன் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் மட்டும் கடலின் அலையானது கடற்கரையின் ஒரு சில அடிகளின் சமீபத்தில் தோன்றி ஒரு பெருத்த வேகத்துடன் கடற்கரையில் மோதி மீண்டும் தங்களை கடலுடனே இணைத்துக் கொள்கின்றன. 

இங்கு கடற்கரையானது சமதளமாக இருப்பதில்லை. மேடும் பள்ளமுமாக மாறி மாறி அமைந்துள்ளன. அதற்குக் காரணமும் இந்த வித்தியாசமான கடல் அலைகளே. இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், நான் கூறுகின்ற இடத்தில் உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நிற்பது ஒரு சமதளம், ஆனால் உங்களின் இடமும் வலமுமாக இருக்கும் பகுதிகள் சற்றே உயர்ந்த மணல் திட்டுகள். சலனமில்லாமல் கரையை நோக்கி ஓடிவரும் ஆழி கரையை நெருங்கும் போது கோபம் கொண்டு தன்னால் முடிந்தளவு உயரமாய் எழுந்து தொம் என்ற பெருஞ்சத்தத்துடன் கரையில் மோதி மீண்டும் பணிந்து விடுகிறது. 

இந்நேரம் கடல் அலைகள் உங்கள் கால்களை நனைக்கும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. காரணம் கடலலையின் முடிவில், கடல் நீரானது உயரமாக எழுந்து நிற்கும் மணல் திட்டுகளின் மீது பரவத் தொடங்கி மெல்ல வேகமெடுத்து உங்கள் பின்னங்கால் வழியாக சூழ்ந்து மெல்ல உங்களை தன் வீட்டிற்கு அழைக்கும். சற்றே அசமந்தமாக இருந்தாலும் கடலின் பசிக்கு, அதன் கோபத்திற்கு நீங்கள்தான் அழையா விருந்தாளி. ஒருமுறை உங்களை இடப்புறமாக சுற்றும் கடலலைகள் மறுமுறை வலப்புறமாகவும் சுற்றலாம். அதனால் மற்ற கடற்கரையைப் போல் யாரும் தைரியமாக உள்ளே இறங்கி கால் நனைப்பதில்லை. மிக பாதுக்காப்பான தூரத்தில் இருந்தே கால் நனைத்துச் செல்கிறார்கள்.   

தமிழகத்தில் நடந்த மிக மோசமான மத சண்டைகளில் மண்டைக்காடு மதக்கலவரம் மிக முக்கியமானது, மிக கோரமானது. அந்த மோசமான வரலாற்று வடுக்களை தன்னுள் பொதித்துக்கொண்டு அமைதிகாக்கும் இந்தக் கடல், கலவரத்தின் போது தன் பங்குக்கும் சில உயிர்களை கேட்டு வாங்கிக் கொண்டது என்பது இன்னும் மோசமான விஷயம். 


கோவிலில் இருந்து சிலநிமிட நடை தூரத்தில் இருக்கும் மண்டைக்காடு கடற்கரை நீங்கள் தவறவிடக்கூடாத இடம்.ஓயாது முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், மண்டைக்காடு கடலலையின் ஓசை இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே உள்ளது. கடற்கரையில் கடலின் விளையாட்டுக்களை அலைகளின் ஆச்சரியத்தை கண்டுகளித்துவிட்டு மீண்டும் பேருந்து ஏறுவதற்காக கிளம்பினோம். 

நெடுநேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட கிடைக்கவில்லை. நல்லவேளையாய் திங்கள் நகர் வரை செல்லும் மினிபஸ் வரவே அதில் ஏறி அமர்ந்தோம். அமர்ந்தபின் தான் தெரிந்தது அது ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிச் செல்லக்கூடிய பேருந்து என்று. வேறுவழி? எப்படியோ மீண்டும் தக்கலை சென்று சேர்ந்தால் சரி என்று பயணிக்கத் தொடங்கினோம்.

அதுவரை பஸ்ஸ்டாப் பஸ்ஸ்டாப்பாக வந்து கொண்டிருந்த கிராமங்கள் அதன் பின் ஒவ்வொரு தெருவுக்கும் வரத் தொடங்கின. ஏதோ மிக குளிர்ச்சியான காட்டுப் பகுதிக்குள் குறுகலான ஒற்றையடிப்பாதையில் பயணிப்பது போல் இருந்தது அந்த இருபது நிமிட பிரயாணம். வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, வயல்வெளிகள் என மாறிமாறி வந்த காட்சிகள் பயணத்தை ரம்யமாக்க, விழியில் மைதீட்டி, நெற்றியில் சந்தனமிட்டு, கூந்தலின் மயிர்க் கற்றைகள் சில கோர்த்து சிறிய பின்னலுடன் வளைய வந்த குமரிப் பைங்கிளிகள்... நல்லவேளை எங்களுக்கு அப்படியொரு பயணம் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஆசியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னம், இந்தியாவின் தொன்மைச்சின்னம்... விரைவில்... 

பயணிப்போம்...   

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

12 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ் - குமரியை நோக்கி


பொதுவாகவே எந்த ஒரு ஊர் சுற்றலிலும் முறையான திட்டமிடல் இல்லையெனில் நாம் பார்க்கவேண்டும் என்று நினைக்கும் பகுதிகளில் பாதியைக் கூட சுற்றிப்பார்க்க முடியாது என்பதே உண்மை. நானெல்லாம் ஒரு பகுதிக்குப் போவதாய் இருந்தால் எவ்வளவு அதிகமான பகுதிகளை சுற்றிப்பார்க்க முடியும் என்று யோசிப்பேன். காரணம் பயணதூரம். ஆனால் நம்முடைய ஒத்த அலைவரிசையில் இருக்கும் நண்பர்கள் நம்முடன் ஒத்துப் போகவில்லையெனில் சிக்கலே. அவ்வகையில் நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி, ஏனென்றால் என்னுடன் பயணிக்க விரும்பும் நண்பர்கள் பல்லைக் கடித்துக் கொண்டேனும் அக்கொடுமையை எல்லாம் சகித்துக்கொள்வார்கள்.   

   

இதற்குமுன் எழுதிய எந்தவொரு நாடோடி எக்ஸ்பிரஸிலும் மேற்கூறிய பத்தியை எழுதியதே இல்லை, ஆனால் இங்கு குறிப்பிடுவதன் காரணம் கன்னியாகுமரி அப்படியொரு மாவட்டம். அங்கிருக்கும் ஒவ்வொரு கிராமமுமே ஒரு சுற்றுல்லாத் தளம்தான்.

கன்னியாகுமரி தவிர்த்து, முட்டம் மீன்பிடி துறைமுகம், ராஜாக்கமங்கலம் தேங்காய்ப்பட்டணம் மண்டைக்காடு கடற்கரைகள் என்று கடற்கரைகளுக்குப் பஞ்சமேயில்லாத மாவட்டம் குமரி மாவட்டம். குமரியம்மன், மண்டைக்காடு பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலையப் பெருமான், நாகராஜா கோவில் என்று கோவில்களுக்கும் பஞ்சமில்லை. திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள், பத்மனாதபுரம் அரண்மனை என்று மேற்குத்தொடர்ச்சி மலையின் மற்றொரு அடிவாரம் குமரி மாவட்டத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் இடங்கள். இவை எல்லாவற்றையும் நிதானமாகச் சுற்றிப்பார்க்க குறைந்தது மூன்று தினங்கள் வேண்டும். 

பல வருடங்களுக்குப் பின் குமரி மாவட்டம் செல்வதால் எந்ததெந்த இடம் எங்குள்ளது என்பதெல்லாம் மறந்துவிட்டது. இணையத்திலும் முறையான சுற்றுல்லா வழிகாட்டி இல்லை . எங்கெல்லாம் செல்ல வேண்டுமென்று முடிவெடுப்பதே மிகவும் சிரமமாயிருந்தது. 

முடிவுவெடுக்க முடியாமல் குழம்பிய மனநிலையில் பேருந்தில் ஏறி அமர்ந்த போது, மிகத் தற்செயலாக 'காணமல் போன கனவுகள்' வலைப்பூவில் எழுதிவரும் ராஜி அக்கா பேஸ்புக் சாட்டிங்கில் வந்தார். அவரது சில பதிவுகளில் குமரி மாவட்டம் குறித்து எழுதியிருந்தது நினைவுக்கு வர அவரிடமே ஐடியா கேட்டேன். நான் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மிகப் பொறுமையாக பதில் சொன்ன அவருக்கு முதல் நன்றி. 

என்னுடைய முதல்கட்ட திட்டமிடலானது நேராக கன்னியாகுமரி செல்ல வேண்டும், சூர்யோதயம், விவேகானந்தர் பாறை, குமரியம்மன் கோவில், காந்திமண்டபம், பின் சுசீந்திரம் கோவில், பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகள், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், மாத்தூர் தொட்டிப்பாலம் என்பதாகத்தான் இருந்தது. ராஜி அக்காவுடன் பேசிய பின்புதான் ஒரேநாளில் இவ்வளவு பகுதிகளையும் சுற்றுவதென்பது இயலவே இயலாத காரியமெனப் புரிந்தது. 

அதனால் ராஜி அக்காவிடமே 'ஒரு பிளான் போட்டுக் கொடுங்கள்' என்று கேட்டேன். ஒன்று குமரி மற்றும் குமரி சுற்றிய கடற்கரையோரப் பகுதிகள் அல்லது தக்கலை, தக்கலை சுற்றிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் என்று பிரித்துக்கொண்டு இதில் ஏதாவது ஒன்றை வேண்டுமானால் சுற்றிப் பார்க்கலாம். இரண்டையுமே பார்க்க வேண்டுமென நினைப்பது இயலாத காரியம் என்றார். இங்கு குறிப்பிடப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயம் நாங்கள் சுற்றிப் பார்க்க இருப்பது சீருந்தில் அல்ல அரசாங்கப்பேருந்தில். அதனால் நேர மேலாண்மை என்பது இயலாத காரியம். எனக்கோ அனைத்து பகுதிகளையும் சுற்ற வேண்டும் அதுவும் ஒரேநாளில். சரி வாடகைக்குக் கார் எடுத்துக் கொள்ளலாமா என்றால் வெறும் மூன்று பேருக்காக கார் எடுத்தல் என்பது வரவு எட்டணா செலவு பத்தாயிரம் அணா போலாகிவிடும். பேருந்ததைத் தவிர வேறு வழியே இல்லை.

என் நண்பர்கள் கண்டிப்பாக விவேகானந்தர் பாறைக்குச் சென்றாக வேண்டும் என்றார்கள், நானோ தொட்டிப்பாலம் என்றேன். மாத்தூர் தொட்டிப்பாலம் இரு மலைகளுக்கு இடையே மனிதர்களால் கட்டப்பட்ட மிகபெரிய கற்பாலம், மற்றும் நீர்வளமிக்க ஒரு கிரமாத்தில் இருந்து மற்றொரு கிராமத்தின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்ட மிகபெரிய, மிக உயரமான பாலம். மேலும் இதன் மீது நின்று பார்த்தால் குமரியின் பச்சைபசேல் இயற்கையை கண்டு ரசிக்கலாம். சிறுவயதில் பார்த்த தொட்டிப்பால நியாபகங்கள் எஞ்சியிருந்ததால் தொட்டிப்பாலம் பார்த்தே ஆக வேண்டும் என்பதில் மிக ஆவலாய் இருந்தேன். ஆனால் குமரியும் மாத்தூரும் எதிரெதிர் திசையில் சுமார் 60கி.மீ தொலைவில்இருந்ததால் தொட்டிப்பாலம் திட்டத்தைக் கைவிட வேண்டிய நிலை. மேலும் தொட்டிப்பாலம் பார்க்கவேண்டிய இடம் என்றாலும் அதனை உங்கள் பயணத்திட்டத்தில் கடைசியாக வைத்துக் கொள்ளுங்கள், ஒருவேளை செல்வதாய் இருந்தால் இருட்டும்முன் சென்றுவாருங்கள். 

இந்த இடத்தில் ராஜி அக்கா கூறிய மற்றொரு முக்கியமான விஷயத்தை குறிபிட்டே ஆக வேண்டும். எங்கள் ஒட்டுமொத்த பயண திட்டத்தையும் தலைகீழாக்கியது அது ஒன்றுதான். சூர்யோதயத்தை எந்த கடற்கரையில் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம், ஆனால் சூர்ய அஸ்தமனத்தை குமரியில் மட்டுமே காண முடியும், அதனால் குமரிக்கு காலையில் செல்வதை விட அஸ்தமனம் பார்க்கும் படி மாலையில் செல்வதே நலம் என்றார். அது உண்மை என்பது சூர்ய அஸ்தமனம் பார்க்கும் போது புரிந்தது.       

காரில் சுற்றுவதாய் இருந்தால் ஒரேநாளில் உங்களால் பல இடங்களையும் சுற்றிப் பார்க்க முடியும் அல்லது இரண்டு தினங்கள் குமரியில் தங்க முடியுமென்றால் பேருந்தில் கூட சுற்றிப்பார்க்கலாம். எந்த இடங்களெல்லாம் பார்க்க முடியுமோ அதையெல்லாம் பாப்போம், மற்றதை மறந்துவிடுவோம் என்பதை கஷ்டப்பட்டு எனக்குள் கூறிக்கொண்டு குமரி நோக்கிய பயணத்திற்கு என்னை நானே தயார் செய்துகொண்டேன். இந்த இடத்தில் தற்செயலாக நான் செய்த மற்றொரு மிக முக்கியமான விஷயம், மாலை நான்கு மணிக்கே சென்னையில் இருந்து நாகர்கோவிலை நோக்கிக் கிளம்பியதுதான். 

எனக்கு விபரம் தெரியும் முன்பிருந்தே என்னுடன் பயணிக்கத் தொடங்கிய என் சகாக்கள் 

பயணிப்போம்... 

மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் : இது என்னுடைய நூற்றிஐம்பதாவது பதிவு. தொடர்ந்து என்னை உற்சாகமாக எழுத வைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

என்றும் நட்புடன் 
சீனு