13 Jan 2014

நாடோடி எக்ஸ்பிரஸ்- தவறவிடக் கூடாத மண்டைக்காடு கடற்கரை

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் கால் பதித்தபோது அதிகாலை ஐந்து மணி. தைமாதக் குளிர் சென்னையைவிடக் கொஞ்சம் குறைவாகவே இருந்தது. வடசேரி புதிய பேருந்து நிலையம், வெளியூர்களில் இருந்து வரும், புறப்படும் எல்லா பேருந்துகளுக்கும் அடைக்கலம் கொடுக்குமிடம். மீனாட்சிபுரத்தில் இயங்கும் அண்ணா பேருந்துநிலையம் பழைய மற்றும் உள்ளூர் பேருந்துகளின் நிலையம். 

சூர்யோதயம் பார்க்கும் திட்டம் ரத்தானதால், பகவதி அம்மனை தரிசிக்க முடிவு செய்து மண்டைக்காடு கிளம்பினோம்(மண்டைக்காடு கிளம்பும் வரையிலான சம்பவங்கள் கத்தரிக்கப்படுகின்றன.) ஞாயிற்றுக்கிழமை காலை என்பதால் வடசேரி பேருந்து நிலையம் செல்லும் அந்த சாலை சோம்பிக்கிடந்த போதும் எங்களுக்கு வழி சொல்ல வேண்டும் என்பதற்காகவே தங்கள் தூக்கத்தைத் தொலைத்த இருவர் சாலையில் எதிர்பட்டார்கள். 

'அண்ணே மண்டைக்காடு எப்படி போகணும்'' 

'ண்டகாடு போவனும்முன்னா அண்ணா போறது நல்லதாக்கும், வடசேரில பஸ்ஸு கொரவு புள்ளே, உள்ள போய் அத்தம் போ பஸ்ஸு உண்டு' முதியவரின் வெத்தலைப் பேச்சு காற்றில் பரவியது. நாகர்கோவில் தமிழைக் கேட்டு எவ்வளவு நாளாகிறது, 'இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த பாஷையைத்தான் கேட்கப்போகிறேன்' நினைக்கும் போதே குதூகலமாய் இருந்தது. 

"பஸ்ஸு அதிகம் உண்டா', அவர் பாஷையைக் கேட்கும் ஆர்வத்தில் பேச்சை வளர்த்தேன். 

'மண்டகாடுக்கு பஸ்ஸு கொரவுதான், உள்ளூரு கிராமத்து கோவிலுனால நேரமே சாத்திருவான், ஒன்பதுக்குள்ள போனா அம்மைய பாக்கலாம், வடசேரில பஸ்ஸு புடிச்சி தக்கல போனா கொல்லம், அங்கன இருந்து பஸ்ஸு அடுதுக்கடுத்து உண்டு'.

'அய்யே வடசேரி போறதுக்கு அண்ணா நட பிள்ளே, பஸ்ஸு உடனுக்கு கிட்டும்' இது அவரின் அருகில் இருந்தவர்.

'வேணா வேணா, அண்ணா போவ தொலவு நடக்கணும், வடசேரி கொல்லம்'       

டசேரி. அவர்கூறியது மிகச்சரியே. மண்டைக்காடு செல்வதற்கு ஒரு பேருந்துகூட இல்லை. தக்கலை செல்லும் பேருந்தில் ஏறி பயணிக்கத் தொடங்கினோம். சரியாக இரண்டு நிமிடங்களில் டவுனைத் துறந்து கிராமங்களினுள் நுழையத் தொடங்கியது பேருந்து. கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமங்களின் எண்ணிக்கை மிக அதிகம். எவ்வளவு அதிகமென்றால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமும் ஒரு கிராமமே எனும் அளவிற்கு அதிகம். அதனால் பேருந்து ஏறுவதற்கு முன் அது நேர்வழிப் பேருந்தா, எல்.எஸ்.எஸா என்றெல்லாம் விசாரித்து ஏறினால் சேர வேண்டிய இடத்தை துரிதமாக சென்றடையலாம். இல்லையேல் என்னவாகும் என்பதை கடைசி பத்தியில் சொல்கிறேன்.        .   

மிழகத்தின் மற்ற எல்லா மாவட்டங்களும் மிக வேகமாக தனது பழைய அடையாளங்களை இழந்து புதியதை ஏற்றுக்கொண்ட நிலையில் குமரி மாவட்டம் மிக மெதுவாகவே தனது அடையாளத்தை இழந்து வருகிறது. விவசாயம் பெருமளவில் நடைபெறுகிறது. சாலைகளின் இருபுறமும் பச்சைபசேல் வயல்வெளிகள், அவற்றிற்கு நிழல் தருவதற்காக உயர்ந்து வளர்ந்த தென்னந்தோப்புகள். சிலசமயம் சாலைகளுடன் சேர்ந்து பயணிக்கும், சாக்கடை கலக்காத ஆச்சரியமான ஓடைகள். கேரளாபாணி வீடுகள். வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய சாலைகள். எங்களுடன் பயணித்த சக காட்சிகளை ஆர்வம் பொங்க வர்ணித்துக் கொண்டே வந்தான் முத்து. அவனுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துப்போனது குமரிமாவட்டம் .

ரைமணி நேரத்தில் தக்கலையில் இறங்கி மண்டைக்காடு செல்ல தயாராய் இருந்த பேருந்தினுள் ஏறும் போது 'இது சுத்தி போற பஸ்ஸு, நேரமே போணும்னா பொறத்த பஸ்ஸு உண்டு' என்றார் அந்தப் பேருந்தின் நடத்துனர். அந்த புண்ணியவானுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு பசி பசி என்று அலறிக் கொண்டிருந்த வயிற்றிற்கு கருணை காட்டுவதற்காக டீ குடிக்க சென்றோம். பாரபட்சமே இல்லமால் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதே தேயிலை வெந்நீர் இங்கும் சுடசுட கிடைக்கிறது. இம்மியளவும் வித்தியாசமில்லா சுவை.

முத்துவின் வர்ணனை தொடங்க மீண்டும் தென்னந்தோப்புகளின் நடுவே பயணிக்கத் தொடங்கினோம். திங்கள் சந்தை திங்கள் நகராக மாறியுள்ளது. ஏன் மாற்றிவிட்டார்கள் எனத் தெரியவில்லை. அடுத்த அரைமணி நேரத்தில் மண்டைக்காடு எங்களை இனிதே வரவேற்றது. கோவில் வாசல்வரை பேருந்து செல்வதால் நீண்டதூரம் நடக்கத் தேவையில்லை.   

நாங்கள் சென்ற தினம் விடுமுறை தினமாகவே இருந்தபோதும் கூட்டம் சிறிதும் இல்லை. மிக நிம்மதியான பகவதி அம்மன் தரிசனம். சில கோவில்களில் மட்டுமே உணர முடிகிற மன அமைதி இங்கும் கிடைத்தது. மிகவும் சிறிய கோவில். 15 அடி உயரம் வளர்ந்த புற்றையே அம்மனாக வழிபடுகின்றனர். செவ்வாய் வெள்ளி மற்றும் மாசிமாத திருவிழாக்களில் மிக அதிகமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோவில் திருப்பிரசாதமான சந்தனம் குங்குமம் போன்றவற்றை இன்றளவிலும் வாழை இலையிலேயே தருகிறார்கள். தரிசனம் முடிந்து வெளியே வந்தபோது நாங்கள் வந்த பேருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அதில் செல்லலாம் என்று கூறிய குமாரிடம் 'மண்டைக்காடு பீச் போக வேண்டாமா?' என்றேன்.  

ராஜாக்கமங்கலம் கடற்கரையில் சுதந்திரமாக விளையாடவிடும் பத்மா மாமி மண்டைக்காடு கடற்கரையில் கால் நனைக்க வேண்டும் என்று கூறினாலே கோபமாகிவிடுவார். காரணம் இறைவனின் வடிவமைப்பில் இந்தக் கடற்கரை கொஞ்சம் விநோதமானது. 

ற்ற எல்லா கடற்கரையிலும் கடல் அலையானது வெகுதூரத்தில் உருவாகத்தொடங்கி, உயரத் தொடங்கி கரையை நெருங்கும் போது மெதுவாக மிக மெதுவாக வந்து நமது பாதம் நனைத்துச் செல்லும். சில சமயங்களில் நம்மிடம் விளையாட்டு காட்டுவதற்காக கொஞ்சம் வேகமாக, கொஞ்சம் உயரமாக எழும்பி நம்மை மகிழ்விப்பதுண்டு. இன்னும் சொல்லபோனால் இவை நேராக நமது காலை நோக்கி தவழ்ந்து வரும் கடலலைகள். ஆனால் மண்டைக்காடு கடல் சற்றே வித்தியாசமானது.


ராமேஸ்வரம் கடலைப் பார்த்திருகிறீர்களா, ஒரு குளம் போல் மிக சாதுவாக இருக்கும், அலை என்பதை பெயரளவில் கூட காண முடியாது. மண்டைக்காடு கடலும் கிட்டத்தட்ட அதேபோல் தான் இருக்கும். ஆனால் இந்த கிட்டத்தட்ட என்ற வார்த்தை தான் அந்த அபாயத்தையும் அற்புதத்தையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தால், இந்தக்கடலும் ஒரு பெரிய குளம் போல் மிக சாதுவானதாக தெரியும். ஆனால் தொம் தொம் என்ற சப்தம் மட்டும் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும். இன்னும் கொஞ்சம் கிட்ட நெருங்கிப் போய் பார்த்தாலும், கடலானது குளம் போல் சலனமற்றுதான் தோன்றும். ஆனால் 'தொம்' சப்தம் அதிகரித்திருக்கும்.  

முழுவதுமாக கடற்கரையினுள் இறங்கிவிடுங்கள். இப்போது ஆழியின் அற்புதத்தை மிக அருகில் காணலாம். மண்டைக்காடு மற்றும் இதன் அருகாமையில் இருக்கும் பகுதிகளில் மட்டும் கடலின் அலையானது கடற்கரையின் ஒரு சில அடிகளின் சமீபத்தில் தோன்றி ஒரு பெருத்த வேகத்துடன் கடற்கரையில் மோதி மீண்டும் தங்களை கடலுடனே இணைத்துக் கொள்கின்றன. 

ங்கு கடற்கரையானது சமதளமாக இருப்பதில்லை. மேடும் பள்ளமுமாக மாறி மாறி அமைந்துள்ளன. அதற்குக் காரணமும் இந்த வித்தியாசமான கடல் அலைகளே. இன்னும் தெளிவாக புரிய வேண்டுமானால், நான் கூறுகின்ற இடத்தில் உங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நிற்பது ஒரு சமதளம், ஆனால் உங்களின் இடமும் வலமுமாக இருக்கும் பகுதிகள் சற்றே உயர்ந்த மணல் திட்டுகள். சலனமில்லாமல் கரையை நோக்கி ஓடிவரும் ஆழி கரையை நெருங்கும் போது கோபம் கொண்டு தன்னால் முடிந்தளவு உயரமாய் எழுந்து தொம் என்ற பெருஞ்சத்தத்துடன் கரையில் மோதி மீண்டும் பணிந்து விடுகிறது. 

ந்நேரம் கடல் அலைகள் உங்கள் கால்களை நனைக்கும் என்று எதிர்பார்த்தால் அது தவறு. காரணம் கடலலையின் முடிவில், கடல் நீரானது உயரமாக எழுந்து நிற்கும் மணல் திட்டுகளின் மீது பரவத் தொடங்கி மெல்ல வேகமெடுத்து உங்கள் பின்னங்கால் வழியாக சூழ்ந்து மெல்ல உங்களை தன் வீட்டிற்கு அழைக்கும். சற்றே அசமந்தமாக இருந்தாலும் கடலின் பசிக்கு, அதன் கோபத்திற்கு நீங்கள்தான் அழையா விருந்தாளி. ஒருமுறை உங்களை இடப்புறமாக சுற்றும் கடலலைகள் மறுமுறை வலப்புறமாகவும் சுற்றலாம். அதனால் மற்ற கடற்கரையைப் போல் யாரும் தைரியமாக உள்ளே இறங்கி கால் நனைப்பதில்லை. மிக பாதுக்காப்பான தூரத்தில் இருந்தே கால் நனைத்துச் செல்கிறார்கள்.   

மிழகத்தில் நடந்த மிக மோசமான மத சண்டைகளில் மண்டைக்காடு மதக்கலவரம் மிக முக்கியமானது, மிக கோரமானது. அந்த மோசமான வரலாற்று வடுக்களை தன்னுள் பொதித்துக்கொண்டு அமைதிகாக்கும் இந்தக் கடல், கலவரத்தின் போது தன் பங்குக்கும் சில உயிர்களை கேட்டு வாங்கிக் கொண்டது என்பது இன்னும் மோசமான விஷயம். 


கோவிலில் இருந்து சிலநிமிட நடை தூரத்தில் இருக்கும் மண்டைக்காடு கடற்கரை நீங்கள் தவறவிடக்கூடாத இடம்.ஓயாது முன்னும் பின்னும் அலைந்து கொண்டிருக்கும், மண்டைக்காடு கடலலையின் ஓசை இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே உள்ளது. கடற்கரையில் கடலின் விளையாட்டுக்களை அலைகளின் ஆச்சரியத்தை கண்டுகளித்துவிட்டு மீண்டும் பேருந்து ஏறுவதற்காக கிளம்பினோம். 

நெடுநேரம் காத்திருந்தும் ஒரு பேருந்து கூட கிடைக்கவில்லை. நல்லவேளையாய் திங்கள் நகர் வரை செல்லும் மினிபஸ் வரவே அதில் ஏறி அமர்ந்தோம். அமர்ந்தபின் தான் தெரிந்தது அது ஊர் உலகத்தையெல்லாம் சுற்றிச் செல்லக்கூடிய பேருந்து என்று. வேறுவழி? எப்படியோ மீண்டும் தக்கலை சென்று சேர்ந்தால் சரி என்று பயணிக்கத் தொடங்கினோம்.

துவரை பஸ்ஸ்டாப் பஸ்ஸ்டாப்பாக வந்து கொண்டிருந்த கிராமங்கள் அதன் பின் ஒவ்வொரு தெருவுக்கும் வரத் தொடங்கின. ஏதோ மிக குளிர்ச்சியான காட்டுப் பகுதிக்குள் குறுகலான ஒற்றையடிப்பாதையில் பயணிப்பது போல் இருந்தது அந்த இருபது நிமிட பிரயாணம். வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு, வயல்வெளிகள் என மாறிமாறி வந்த காட்சிகள் பயணத்தை ரம்யமாக்க, விழியில் மைதீட்டி, நெற்றியில் சந்தனமிட்டு, கூந்தலின் மயிர்க் கற்றைகள் சில கோர்த்து சிறிய பின்னலுடன் வளைய வந்த குமரிப் பைங்கிளிகள்... நல்லவேளை எங்களுக்கு அப்படியொரு பயணம் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

டுத்ததாக நாங்கள் சென்ற இடம் ஆசியாவின் மிக முக்கியமான வரலாற்றுச் சின்னம், இந்தியாவின் தொன்மைச்சின்னம்... விரைவில்... 

பயணிப்போம்...   

நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

16 comments:

  1. நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து குளச்சல் செல்லும் பேருந்தில் மண்டைக்காடு செல்லலாம். பேருந்து அடிக்கடி உண்டு.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரர்
    மிக அழகான இடத்தை அறிமுகம் செய்தமைக்கும் சிறப்பானதொரு பதிவிற்கும் நன்றிகள்...
    ---------
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. தமிழ்ப்புத்தாண்டில் குமரிப்பைங்கிளிகளின் தரிசனம்!
    தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
    ஜமாய்ங்க!

    ReplyDelete
  4. மண்டைக்காடு கடற்கரை சென்றதில்லை... சுகமான அனுபவத்திற்கு வாழ்த்துக்கள்...

    தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. முளகுமூடு என்னும் ஊரில் சில மாதங்கள் இருந்தபோது மண்டைக்காடு சென்றிருக்கிறேன்..அதை நினைவு படுத்திவிட்டீர்கள்
    இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் சீனு

    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய
    பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் சகோ !

    ReplyDelete
  7. தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. சென்றேயாக வேண்டும் சீனு. சும்மா கிடந்த ஆர்வத்தைச் சீண்டிவிட்டீர்கள் .
    முளகுமூடு .. எத்தனை அதிசயமான பெயர்.. இந்த மாதிரி இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே உங்களுக்கு! லேசா பொறாமை..;)

    மெருகேறும் எழுத்து சீனு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முளகுமூடு .. எத்தனை அதிசயமான பெயர்.. இந்த மாதிரி இடங்களில் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே உங்களுக்கு! லேசா பொறாமை சென்னைப்பித்தன் ..;)

      Delete
    2. கொல்லம்//

      கொல்லம் இல்லை கொள்ளாம்...ஹி ஹி...

      Delete
  9. மறக்காம வட்டகோட்டையை பார்த்து விடுங்கள், பாண்டிய மன்னர்களிடம் இருந்து கேரளா மன்னன் மார்த்தாண்ட வர்மன் அபகரித்த கோட்டை அது, முப்படை தாக்குதல்களையும் சமாளிக்கும் விதமாக உள்ளது விஷேசமாக கடல் வழி தாக்குதல்...!

    ReplyDelete
  10. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. அருமையான தொடர். இணைய நேரம் குறைந்து விட்டதால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன வர்ணனை அழகு சீனு,,,, இப்படி பல விசயத்தைப் பற்றியும் கலந்து எழுதனும்னு எனக்கும் ஆசையாக இருக்கிறது

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் தைத்திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பயணம் பசியுடன் தான்

    ReplyDelete
  13. மண்டைக்காடு கடற்கரையை பார்க்கும் ஆர்வம் அதிகரித்து விட்டது சீனு. எப்போது செல்லப் போகிறேன் என்பது தான் கேள்வி!

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  14. பக்கத்துலதான் முட்டம் பீச் போனீங்களா?

    ReplyDelete