26 Feb 2018

தோட்டி மகன் - வஞ்சிக்கப்படுதலின் உயிர்வலி

தீபாவளி முடிந்த அடுத்தநாள் காலை. வீட்டில் இருக்கும் அத்தனை பலகாரங்களையும் வரிசையாக ஆறேழு பாத்திரங்களில் அடுக்கி, கையில் பத்து இரண்டுரூபாய் நாணயங்களையும் வைத்துக்கொண்டு கதவின் அருகில் அமர்ந்துவிடுவாள் பாட்டி. எதற்கென்று கேட்டால் 'தோட்டி வருவாம். போட வேணாமா' என்பாள். கேள்விகள் கேட்டு உலகை அறிந்துகொள்ள முயன்ற பருவம் அது. பாட்டி அருகில் அமர்ந்துகொண்டால் போதும் கதை சொல்வதை அவள் பார்த்துக்கொள்வாள். 

'ஏன் பலகாரம் போடணும். அவங்க வீட்ல சுட மாட்டாங்களா?' ; 'அதான் நாம சுடுறோம்லா' என்பாள்

'அவங்களே சுட்டு சாப்ட்டா என்ன?' ; 'சுட்டுதிங்க காசு கிடையாது. அதான் வாராங்க' 

'எல்லார் வீட்லையும் கொடுப்பாங்களா?' ; 'இருந்தா கொடுப்பாங்க' 

'நாம எப்பயுமே கொடுப்பமா' ; 'எங்க தாத்தா காலத்தில இருந்தே கொடுப்போம்' 

'ஏன்?'; 'ஏன்னா தோட்டிக்கு நாமதான் இருக்கோம்'

இப்படித்தான் தோட்டி என்ற வார்த்தையும் தோட்டி என்றால் யார் என்பதன் அர்த்தமும் புரிய ஆரம்பித்தது. தென்காசியின் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில்தான் அவர்கள் குடியிருப்பு இருந்தது. அங்கிருந்து பாத்திரத்தைக் எடுத்துக்கொண்டு வருவார்கள் என்று பாட்டி சொன்னாள். வந்தவர்களில் பாதிபேர் எனக்கு நன்கு அறிமுகமான முகம். பெரும்பாலும் பெண்களும் அவர்கள் இடுப்பில் இருக்கும் குழந்தைகளுமாகவே வந்து போவார்கள். பாட்டி சிலருக்கு பலகாரம் கொடுப்பாள். சிலருக்கு பலகாரத்தோடு இரண்டு ரூபாய் பணம். சிலரிடம் மட்டும் 'எதுவும் இல்லை' என்று கூறிவிடுவாள். எதற்கென்று கேட்டால், 'அவங்க வேற தெரு தோட்டி. அங்கயும் வாங்கிட்டு இங்கயும் வாறாங்க. நம்ம தெரு தோட்டிக்கு கொடுக்க மட்டும் தான நம்மகிட்ட இருக்கு' என்பாள். புரிந்தது போல் இருக்கும். 

சிலரை விரட்டாத குறையாக அனுப்பிவிடுவாள். 'ரெண்டு கொடுங்களேன்' என்பேன். 'சட்டி நிறைய வாங்கி இருப்பாங்க' என்பாள். 'இல்லம்மா ஒரு வீட்லையும் கொடுக்கல. புள்ள பலகாரத்துக்கு ஆசபடுது. இங்க பாரு தாயி' என்று வெளியில் இருந்து குரல் கேட்கும். தெரு தோட்டிகள் எல்லாம் வந்து சென்றிருந்தால் வெளியில் நிற்கும் பெண்களுக்கு ஏதாவது கிடைக்கும். இல்லையென்றால் பாட்டி மனது வைக்க வேண்டும். அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். சமயங்களில் பாட்டியிடம் கேட்காமலேயே எடுத்துக்கொண்டு போய் கொடுப்பேன். அவர்களோடு வரும் குழந்தைகளில் சிலர் வெடி கேட்பார்கள். வெடியைக் கொடுக்க மனசு வராது. அடுத்தடுத்த தீபாவளிகளில் அவர்களுக்கென வெடியையும் எடுத்து வைக்க பழகியிருந்தேன். காரணம் அந்தத் தாத்தா.  

எப்போதும் முகம் நிறைய மலர்ச்சியோடு இருப்பார். காக்கி நிக்கர், காக்கி சட்டை இதுதான் எப்போதைக்குமான அவர் உடை. சிரித்துக்கொண்டே இருப்பார். அத்தனை பேரின் பார்வைக்காகவும் ஏங்கும் கண்கள். வெத்தலை மென்று மென்று சிவந்த வாய். சுண்ணாம்பின் வெம்மையில் வெந்து போய் வெள்ளையாகிப்போன உதட்டோரங்கள். தலையில் குற்றால சீசன் துண்டு கட்டியிருப்பார். கையில் மம்மெட்டியும் அருகில் அவர் இடுப்பு உயரத்திற்குமான குப்பை வண்டியும் இருக்கும். அதில் இருக்கும் ஓட்டைகளை அழுக்கு சாக்கு கொண்டு அடைத்திருப்பார்.

அவரிடம் முகம் கொடுத்துப் பேசும் பலரையும் பார்த்திருக்கிறேன். அவர்களிடம் ஒரு வீட்டு எஜமானன் தோரணை இருக்கும் என்றால் இவரிடம் அடிமையின் பாவனை. 'என்னடே வேல ஒழுங்கா நடக்கா' என்றால் 'ஆமா சாமி' என்று குழைவார். எல்லோரிடமும் ஒரேபோல் இருப்பார். சிறுவர்களைக் கூட அவர் எஜமானாகவேப் பார்த்தார்.

ஞாபங்களின் அடுக்கில் அவர் முகம் இன்னமும் மறையாமல் இருப்பது அதிசியம் தான். ஏனென்றால் என் அன்றாடங்களில் இருந்து எப்போதோ மறைந்து போயிருந்தார். அவருக்குப் பின் தெருவுக்கு வந்த சுகாதாரத்துறை ஆட்கள் எவரையுமே என் தெருவாசிகள் தோட்டி என்று அழைத்துப் பார்த்ததில்லை. காலமாற்றத்தில் அந்த தீபாவளிப் பலகாரங்கள் வாங்க வருவது கூட குறைந்துபோய் ஒரு கட்டத்தில் நின்று போயிருந்தது. 'எங்க தெருல இருந்து இனிமே யாரும் அப்டி வாங்க போக்கூடாதுன்னு உத்தரவு போட்டுஇருக்காங்க' என்று அசோக் சொன்னது ஞாபகம் இருக்கிறது.   

நான் கூறிய இந்த விஷயங்கள் அனைத்துமே எனது பதினைந்து வயதுக்குள் நடந்து முடிந்த சம்பவங்கள். அதிலிருந்து காலம் உருண்டோடி இன்றைக்கு எங்கோ வந்துவிட்டோம். அவர்களைப் பற்றி பெரிதாக சிந்தித்துப் பார்த்தது இல்லையோ என்று இப்போது தோன்றுகிறது. இரவுகளில் தள்ளுவண்டிகளின் ஓரத்தில் பாய்களைக் கொண்டு அடைத்து மலம் அள்ளிப்போகும்போது கை தானாக மூக்கின் அருகில் போகும். ஆனாலும் அவர்கள் கதை பேசிக்கொண்டே தள்ளிக்கொண்டு போவார்கள். அது அவர்கள் வாழ்வில் அன்றாடம் என்று புரிந்த மனதிற்கு, ஏன் அன்றாடம் ஆனது என்பது பற்றி கேள்வி எழுப்பத் தோன்றியதேயில்லை.

வரலாற்றில் அவர்கள் பக்கம் மட்டும் மிக மெதுவாகவே நவீனத்துவம் அடைந்திருக்கிறது என்பதை உற்றுநோக்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. 

தோட்டி மகன் வாசித்து முடித்த நிமிடத்தில் இருந்து அவர்கள் குறித்த சிந்தனைதாம்.

இதுவரைக்கும் நான் சந்தித்த பேசிய, எப்போதும் கையில் மம்மட்டியுடன் திரியும் மனிதர்களே வந்து போகிறார்கள். தங்களுக்கு எதிராக நிகழும் சமூக வன்முறையை எதிர்த்து தோட்டிகள் கேள்வி கேட்கலாமா கூடாதா என்ற முடிவையே தயங்கித் தயங்கி எடுக்கும் காலத்தில் நிகழ்ந்த கதையை பேசுகிறது தோட்டிமகன் நாவல். கதை நிகழும் காலத்தை என்னால் கணிக்க முடியவில்லை எனினும், நிச்சயம் இருபதாம் நூற்றாண்டுக் கதையாகத்தான் இருக்க வேண்டும். அதனால் சரித்திரத்தின் பக்கத்தை ரொம்பவெல்லாம் புரட்டவேண்டிய தேவை இல்லை. இந்நாவலில் நிகழும் பல சம்பவங்கள் அவர்கள் வாழ்வில் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன என்பது பெரும்சோகம்.



இசக்கிமுத்து எனும் தோட்டி தன் மகன் சுடலைமுத்துவை வலுக்கட்டாயமாக தோட்டி வேலைக்கு அனுப்பவதில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. இசக்கிமுத்து என்பவர், நான் மேலே கூறினேன் இல்லையா எங்கள் தெரு தோட்டி அச்சுஅசலாக அவரைப்போல்தான் இருந்திருக்க வேண்டும். சுடலைமுத்து காலத்தின் கட்டாயத்தில் வேறு வழியே இல்லாமல் அப்பன் தூக்கிய அதே மம்மெட்டியைத் தூக்கிக்கொண்டு வேலைக்குச் செல்கிறான். அவனுக்கென சில தன்மானங்கள், சில நியாயங்கள் இருக்கின்றன. அதன்படி நடக்க வேண்டும் என்று நினைக்கிறான். தன்மானம் என்ற ஒன்று நினைப்பில் கூட இருக்ககூடாது எனும்படியான சம்பவங்கள் வரிசையாக நடந்தேறுகின்றன. 

மனிதக்கழிவு அள்ளும் நாம்தான் இப்படியிருக்கிறோம், சந்ததியாவது தோட்டி என்ற அவசொல்லில் இருந்து தப்பிப்பிழைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான். தோட்டிகளிலேயே மிகவும் சிந்திக்கத் தெரிந்த தோட்டியாக தன்னை உருமாற்றுகிறான். அதனால்தானோ என்னவோ அவன் சிந்திக்க ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து தன் சக நண்பர்கள், தொழிலாளர்கள் என தன் வர்கத்தின் உள்ளேயே வஞ்சகம் செய்ய ஆரம்பிக்கிறான். சுடலைமுத்து என்ன ஆனான், அவன் சார்ந்த கூட்டம், உரிமைக்காக குரல் எழுப்ப துணிந்ததா? செய்யும் வேலைக்கு ஏற்ற ஊதியமும், சங்கமும் கிடைத்ததா? என்பன போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் அவர்கள் வாழ்க்கை நகர்கிறது. கூடவே வைசூரி, காலரா போன்ற நோய்களுக்கு பலியாகும் ஒரு இனத்தையும் கவலையோடு காண வேண்டியிருக்கிறது. தொற்று வியாதிக் காலங்களை எளியவர்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதையும், வலியவர்கள் எளியவர்களை எப்படியெல்லாம் வஞ்சித்தார்கள் என்பதையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் தகழி சிவசங்கரன் பிள்ளை.     

கதை சுடலைமுத்துவில் ஆரம்பித்து சுடலைமுத்துவிலேயே முடிகிறது. எப்பாடுபட்டாவது தன் மகனை வேறுவேலைக்கு அனுப்பிவிடத் துடிக்கும் அவன் தன் மகனுக்கு மோகன் என்கிற நாகரீகமான பெயர் சூட்டுகிறான். அதற்கே ஊரெல்லாம் அவனை கேலி பேசுகிறார்கள். தன் அப்பன் ஒரு தோட்டி என்பதும், தோட்டி என்றால் என்னவென்றே தன் மகனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காகப் முடிந்தவரை போராடுகிறான். தன் இழி நிலையை மாற்ற வாழ்க்கை முழுவதும் போராடிக் கொண்டே இருக்கிறான் என்பதுதான் மொத்த கதையும். இந்நாவல் வெளியான காலகட்டத்தில் எவ்விதமான தாக்கத்தை உண்டுபண்ணியிருக்க முடியும் என்பதை இப்போதும் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் இசக்கிமுத்துவையும், மோகனையும் காலம் இன்னமும் விரட்டிக்கொண்டே இருக்கிறது. நாம் மூக்கில் கை வைத்துக் கடக்கும் நம் மலத்தை ஏதேனும் ஒரு ஓரத்தில் நின்றபடி சுத்தம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்.   

மலையாளத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய நூலை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் சுந்தர ராமசாமி. மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல் என்பதே தெரியாத அளவுக்கு அற்புதமான மொழியாக்கமாக வந்திருக்கிறது. தவறாமல் வாசிக்க வேண்டிய நூல்.   

நன்றி
நாடோடி சீனு

1 comment:

  1. அவசியம் வாசிக்கப்பட வேண்டிய நூல்

    ReplyDelete