16 Feb 2018

ரோலக்ஸ் வாட்ச் - சரவணன் சந்திரன்

வாழ்க்கையின் உயர்மட்டத்தில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெரும்புள்ளிகளுடன் தொடர்பில் இருக்கும் ஒரு சாதாரணன், தான் சந்தித்த மனிதர்கள் மூலமாக, வாழ்க்கையின் அந்தரங்கத்தை அல்லது இதுவரையில் நாம் அறிந்திராத ஒரு சமூகத்தின் பக்கம் பற்றி கூறும் கதை. இதுவரை நாம் அறிந்திராத சமூகம் என்று கூறினேன் இல்லையா அதில் எனக்கு உடன்பாடில்லை. அதை மட்டும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன். ஏன் என்ற காரணத்தை பிறகு சொல்கிறேன். 

மிகவும் கஷ்டப்பட்ட பின்னணியில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்கும் ஒருவனுக்கு அவனுடைய காலேஜ் சீனியரான சந்திரனின் பழக்கம் கிடைக்கிறது. சந்திரன் மூலம் வேறோர் உலகின் அறிமுகம் கிடைக்கிறது. அவ்வுலகின் மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுக்கும் தனக்குமான உறவைத் தக்க வைத்துக்கொள்வதற்காக எவ்வாறெல்லாம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதன் மூலம் கிடைக்கும் லாப நஷ்டங்கள் என்ன என்பதை தன்னிலை விளக்கமாக அளிக்கும் ஓர் கதை ரோலக்ஸ் வாட்ச். உயர்மட்டத்தில் இருக்கும் பல்வேறுபட்ட மனிதர்கள் சார்ந்த கதை என்பதால் நாவல் முழுக்க மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். அந்தத் தம்பியாக, அந்தத் தம்பியின் நண்பனாக, அந்த நடிகனாக, அந்த நடிகனின் காதலியாக, எனக்குத் தெரிந்த நண்பராக, எங்கள் உள்வட்டக் குழுவில் இருப்பவராக, எங்கள் உள்வட்டக் குழுவில் இல்லாவிட்டாலும் எங்கள் நண்பராக இருப்பவராக என கதை முழுவதும் 'யாரோ ஒருவராக' மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரே ஒற்றுமை இவர்கள் அனைவரும் சமூகத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு குற்றப்பின்னணி இருக்கிறது. 

இப்படியாக நாவல் முழுக்க வரும் மனிதர்கள் 'யாரோ ஒருவராக' தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால் நாவல் எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதே பெரும்புதிராக இருக்கிறது. அந்தப் புதிர் இறுதிவரையிலும் அவிழ்க்கப்படவில்லை என்பதுதான் பெருஞ்சோகம். சரவணன் சந்திரனிடம் சரளமான வாக்கியக் கோர்ப்பு இருக்கிறது. சலிக்காமல் அலுக்காமல் கதை சொல்கிறார். அதுதான் அவருடைய பலம். அதற்காக அதனைக் கொண்டு மட்டுமே வாசகனை ஏமாற்றிவிட முடியாது என நினைக்கிறன். கதையின் மைய நீரோட்டத்தில் ஆங்காங்கு சில சிறுகதை மனிதர்கள் வந்து போகிறார்கள்; அந்த குடிகார மாமாவாக, திவ்யாவாக, திவ்யா போல் இருக்கும் பிலிப்பைன்ஸ் பெண்ணாக என சிலரை மட்டுமே கவனித்து உற்றுநோக்க முடிகிறது. சந்திரனும் மாதங்கியும் கூட எக்ஸ்பிரஸ் மனிதர்களாகவே வந்து போகிறார்கள். குறுநாவல் மற்றும் அதிகமான மனிதர்கள் என்பதனால் ஏற்பட்ட பிரச்சனையாக இருக்க வேண்டும். இத்தனை மனிதர்கள் இருந்தும் கதைக்களத்தில் ஒரு சுவாரசியம் இல்லை. வருகிறார்கள் போகிறார்கள் என்பதையெல்லாம் பெட்டிச்செய்தியாக கடந்து போகலாமே தவிர, கதாபாத்திரமாக கடந்து போதல்  இயலாத காரியம். 



தமிழ்ப்பிரபாவின் பேட்டையிலும் சிறுகதைகளாக சில மனிதர்கள் வருவார்கள். சிறுகதை அளவிற்கு அதன் நிறைவையும் கொடுத்திருப்பார்கள். அதேநேரம் அந்தக்கதைகள் இல்லாவிட்டாலும் நாவலில் எவ்வித குறைபாடும் இருக்காது. இங்கு நாவல் முழுக்க மனிதர்கள் வருகிறார்கள். இருந்தும் ஒருவர் கூட சிறுகதை அளவுக்குக் கூட தாக்கம் ஏற்படுத்தவில்லை. பெரும்பாலான மனிதர்கள் ஏதேனும் ஒன்றிற்கான உவமைகளாக வந்து போகிறார்கள். விநாயக முருகனின் உத்தி கூட இதுவே. ஒரு உவமையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த உவமையை உருவாக்க மிகப்பெரிய சம்பவம் ஒன்றை உருவாக்குவார் பின் அதில் இருந்து உவமையை எடுத்து இதைப்போல் என கொண்டு வருவர். சில சமயங்களில் அவை சுவாரசியமாக இருக்கும், சில சமயங்களில் ஷப்பா என பெருமூச்செறியச் செய்யும். சரவணன் சந்திரன் கூறும் மனிதர்களும் பெரும்பாலும் அவ்வாறாகத்தான் வந்து போகிறார்கள். 

இந்த நாவலில் அலுப்பை ஏற்படுத்திய மற்றுமோர் விஷயம் வாக்கியக் கட்டமைப்பு. ஒரு பேஸ்புக் பதிவை எழுதும் வேகத்தில் நாவல் எழுதியதைப் போல் இருக்கிறது. என், எனக்கு, நான் போன்ற வார்த்தைகளை தேவையற்ற இடங்களில் இருந்து எடுத்தாலே இரண்டு பக்கங்கள் குறைந்துவிடும். சில வாக்கியங்களை இன்னும் சிரத்தையெடுத்து மாற்றியிருக்கலாமோ என்று தோன்றியது. ரோலக்ஸ் வாட்ச், சரவணன் சந்திரன் எழுதிய முதல் நாவல் என்பது என் ஞாபகம். அதற்குப் பின்னும் சில நாவல்கள் எழுதிவிட்டார். அவற்றைப் படித்துப் பார்க்க வேண்டும். அவற்றில் இக்குறைகளை களைந்திருந்தால் மகிழ்ச்சி. மற்றபடி நேரமிருந்தால் ஒருமுறை வாசிக்கலாம். 


நன்றி         
நாடோடி சீனு

No comments:

Post a Comment