7 Feb 2018

ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குருஸ்

ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குருஸ்

வாசகமனதைப் பிடிக்க முடிந்தவர்களின் பெரும்பான்மையான எழுத்துக்களில் கருத்தாழமோ இல்லை உருப்படியானோ களமோ இருக்காது. இவ்விரண்டும் இருந்தால் சுவாரசியம் இருக்காது. ஆக களத்திற்கும் மொழிக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் ஆகச்சிறந்த படைப்புக்கள் தோற்றுப்போயிருக்கும் அல்லது போலியாக உருமாறியிருக்கும். முதல்முறையாக நாவல் எழுதும் ஒருவரால் இவ்விரண்டையுமே சாத்தியமாக்க முடியுமா என்றால் எவ்வித மறுப்பும் இல்லாமல் ஆழி சூழ் உலகைக் கைகளில் கொடுக்கிறார் ஜோ.டி.குருஸ். 

எழுத்தாளர் ஜோ.டி க்ரூஸிற்கு இது முதல் நாவலாம். நம்பவே முடியாத அற்புதமான எழுத்தாக்கம். அப்படியொரு மொழிநடை.

ஒருநாவலுக்கான எவ்வித யோசனையும், முன் தயாரிப்பும் இல்லாமல் தமிழினி வசந்தகுமார் கேட்டு கொண்டதன் பேரில் தன் நாவலை எழுத ஆரம்பித்ததாக ஜோ.டி.குருஸ் குறித்து ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆழி சூழ் உலகின் மீதான் ஆகப்பெரிய ஆச்சரியம் இதுவே. ஒருநாவல் எழுதுவதென்பது சாதாரண விஷயமில்லை. அசாதாரணமான காரியம். சொல்வந்த விஷயத்தை செய்நேர்த்தியோடு, சுவாரசியத்தோடு, தொடர்புடைய விஷயங்களை எவ்விதத்திலும் குழப்பாமல், எவ்விதமான உணர்வுச் சிக்கலுக்கும் பிற உணர்வுகளுக்கும் இடம் கொடுக்காமல் கதை சொல்வதென்பது மிகப்பெரிய விஷயம். பெரும்பாலான எழுத்தாளர்கள் தோற்றுப்போவது இவ்விஷயங்களில் தான். கூடவே முதல்முறையாக நாவல் எழுதுபவர்களுக்கு 'எண்ணத்த எழுதி எண்ணத்த கிழிச்சு' என்ற மனநிலை வந்துவிட்டால் அவ்வளவுதான் எத்தனை அதிமுக்கியமான படைப்பு என்றாலும் உருவாவதற்கு முன்பே அழிந்து போயிருக்கும். அப்படியில்லையென்றால் கடமைக்கு எழுதிமுடிக்கபட்டு வாசகனை வந்தடையும். பல்வேறு படிநிலைகளைக் கடந்தே ஒரு எழுத்தாளன் படைப்பாளி ஆகின்றான். அந்தக் கணம் மிக முக்கியமானது. அழகானது. கவித்துவமானது.

*****

ஆழி சூழ் உலகு, முழுக்க முழுக்க வட்டார மொழியிலேயே எழுதபட்ட நாவல் என்பதால் முதல் மூன்று பக்கங்களைப் படித்து முன்னேறுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது அதையும் மீறி முன்னேறிச் செல்வீர்களேயானால் அற்புதமான உலகம் ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது.

வட்டாரச் சொல்லுக்கான அர்த்தங்களை புத்தகத்தின் இறுதிப்பக்கங்களில் கொடுத்திருக்கிறார்கள் - மிகப்பெரிய உபகாரம். அவை புரியவில்லை என்றால் கதையில் பாதி பக்கங்களை வேற்றுமொழியை தமிழில் வாசிப்பது போல் கடந்திருக்க வேண்டிவரும். அதேநேரம், மீனவ மக்களோடு மக்களாக கலந்து போன குறிப்பிட்ட அந்த சொற்கள் மீண்டும் மீண்டும் வருவதால் வட்டார மொழி என்பது பெரும்தடையல்ல.

1930 - களில் ஆரம்பிக்கும் கதை 1985 வரைக்குமாக நிகழ்ந்து நிறைவடைகிறது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களை உள்ளடக்கிய கதை என்பதால் அதிகமான மனிதர்கள் வந்து போகிறார்கள். வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதோ ஒருவிதத்தில் முக்கியத்துவம் அடைகிறார்கள் அல்லது கதைக்கான முக்கியத்துவத்தைக் கொடுத்துவிட்டே செல்கிறார்கள். மிக அதிகமான கதாபாத்திரங்களை உலவவிட்ட போதிலும் கதை சொல்லுவதில் எவ்விதமான குழப்பத்தையும் உண்டு பண்ணாமல் தெளிந்த நீரோட்டமாக நகர்கிறது களம். 

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஆமந்துரை மீனவ கிராமம்தான் கதைக்களம். சிராப்பாறு எனப்படும் சுறாமீன் வேட்டையாடலுக்காகச் செல்லும் தொம்மந்திரை எனும் கடலாடியில் இருந்து ஆரம்பிக்கிறது கதை. அவரோடு இணைந்து கடலுக்குள் செல்லும், தொம்மந்திரையை தனது குருவாக ஏற்றுக்கொண்ட கோத்ராபிள்ளை கதையின் அடுத்த முக்கிய கதாப்பாத்திரம். ஆரம்பம் முதல் முடிவு வரைக்குமாக நம்மோடு பயணிக்கப் போகிறவர். 

நாவலின் முதல் வார்த்தையில் இருந்தே நம்மோடு பயணிக்க ஆரம்பித்துவிடுகிறது கடல். எந்நேரமும் அலையடித்துக் கொண்டிருக்கும், எப்போதும் ஆறுதலாக இருக்கும், சாவகாசமாக காற்றுப் வாங்கப்போகும், நமக்கான மாலை நேரத்துக் கடற்கரைக்கும், எந்நேரமும் சாவை எதிர்கொள்ளலாம் எனும் சவாலோடு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருக்கும் பரதவ மக்களின் வாழக்கைப் போராட்டத்திற்கும் இடையில் உயிரோட்டமாக பயணிக்கிறது கடல்.

கடற்கரையில் இருந்து கடலைப் பார்த்த நமக்கு, கடலோடிகளின் வழியாக விரியும் கடலாக, அம்மக்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்த குடும்ப உறவாக, இன்பதுன்பங்களில் மடிகொடுக்கும் அன்னையாக கடலைக் காட்ச்சிப்படுத்தி அதனை கற்பனையின் பிரவாகத்தில் வேறோர்தளத்தில் நிகழ வைத்திருப்பதுதான் ஆசிரியரின் சாமர்த்தியம்.



கதை முழுக்கவே பல்வேறு விதமான மனிதர்கள் வந்து செல்கிறார்கள். ஒரு சாதாரண கடற்கரை கிராமத்தில் எவ்வித கல்வியறிவும் கிடைக்காத நிலையில் இருக்கும் தொம்மந்திரையிடம் இருந்து பிறக்கும் தத்துவங்கள் வாழ்க்கையை முழுமையாக உணர்ந்த ஒருவனிடம் இருந்து கிடைக்கும் தரிசனங்கள். அந்தப்பிராந்தியத்திலேயே தொம்மந்திரையை மிஞ்ச ஒரு கடலோடியும் இல்லை, ஓடோவியும் (கட்டுமரம் தயாரிப்பவர்) இல்லை. ஆளுமை என்ற சொல்லுக்கு சிறந்த உதாரணம்.

கோவில்பட்டியில் இருந்து வாழ்க்கையைத் தேடி கிட்டதட்ட பிச்சைக்காரனாக வரும் ஒருவனை கோடீஸ்வரன் ஆக்கும் திறமையும் அதற்கான பக்குவமும் தொம்மந்திரையிடம் இருக்கிறது.

ரத்னசாமி நாடாருக்கு அன்றைய தினம் எவ்வித யோசனையும் இல்லாமல், சல்லிக்காசு வாங்காமல் காகு சாமியார் சொன்னார் என்ற ஒரே காரணத்திற்காக ரெண்டுபெட்டி கருவாடு கொடுத்தனுப்பும் பக்குவம்தான் தொம்மந்திரை. காகு சாமியார் கூறியிராவிட்டாலும் தொம்மந்திரை, கருவாட்டினை ரத்னசாமிக்குக் கடனாகக் கொடுத்திருப்பார் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ஒருவேளை தொம்மந்திரையை ரத்னசாமி சந்திக்காது போயிருந்தால் அவரால் பென்ஸ் கார் வரை வாங்கும் வாழ்க்கையை நினைத்துப் பார்த்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதேநேரம் தொம்மந்திரையோ கடைசி வரைக்கும் அதே ஓலைக்குடிசையில் வாழ்ந்து பலவித சிந்தனைகளோடு மாண்டு போயிருப்பார். அவரது சிந்தனை முழுக்கவே கடலும் அவரது மகளும் எஸ்கலினும் மட்டுமே. மகள் விருப்பப்பட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக தன் மகள் எஸ்கலினை தனக்கு சற்றும் விருப்பமில்லாத, எவ்விதத்திலும் நல்ல குணங்கள் கொண்டிராத கில்பர்ட்டுக்குக் கட்டிகொடுத்துவிட்டு வாழ்நாள் முழுவதும் அதனை நினைத்து துயரப்பட்டுக்கொண்டிருக்கும், மகளுக்காகவே வாழ்ந்து மறையும் அப்பனாகத்தான் வந்து போகிறார். 

அடுத்ததாக கோத்ராப்பிள்ளை. தொம்மந்திரைக்கு இணையான ஒரு கதாபாத்திரம். தங்கையின் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தனக்கொரு பிள்ளை பெற்றுக்கொள்ளாமல் வாழ்ந்து முடித்த தம்பதிகள் கோத்ராவும் - தோக்களத்தாவும். அத்தனை விஷயங்களையும் மிகச்சிறப்பாக கையாளும் கோத்ரா தோற்றுப்போவதுகூட பாசத்தின் முன்னிலையில் தான். சிங்களம் கைவிட்ட தன் தம்பி சில்வேராவை லட்சாதிபதி ஆக்குவதும், அதே தம்பி கைகொடுத்த அண்ணனை கைவிடுவதும் நடந்தேறுகிறது. கோத்ரா நினைத்திருந்தால் அன்றைய தினம் கிடைத்திருக்கக்கூடிய றால் வியாபாரத்தைத் தான் எடுத்து நடத்தியிருக்க முடியும். மிகப்பெரும் பணக்காரன் ஆகியிருக்க முடியும். தம்பிக்கு ஒரு வழிபிறக்க வேண்டும் என்று வாழ்க்கையைக் காட்டியவரின் வாழ்க்கை கடலுக்குள் ஆரம்பித்து கடலோடவே முடிகிறது. பாசத்தின் முன்தானே தோற்றுப் போனேன் பரவாயில்லை என்கிறார். காகு சாமியார் கற்றுகொடுத்த தியாகம் பண்பை உயிர்மூச்சை கடைசியாக சுவாசிக்கும் தருணம் வரையிலும் உயிர்நாடியாகக் கொண்டிருக்கிறார்.     

தொம்மந்திரையும் கோத்ராவும் முதல் பாகம் என்றால் அடுத்து வருபவர்கள் சூசையாரும் ஜஸ்டினும். இவ்விருவரும் சீரழிந்து போவது காமத்தால். சூசையின் காமம் இலைமறை காய்மறையாக நிகழ்வது என்றால் ஜஸ்டின் அவனுக்கு நேரெதிர்.

சூசை யாருடனெல்லாம் தொடர்பில் இருக்கிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். சுந்தரி டீச்சருடனான உறவுக்கு மத்தியில் அந்தக்கள்ள உறவை எப்படி கள்ள உறவாகவே நிலைத்திருக்கச் செய்ய வேண்டும் என்று விவரிக்கும் சூசை காமத்தின் முழுமுதல் சாட்சி. அவ்வபோது தன் வீட்டிற்கு வந்துபோகும் செலினையும் விட்டுவைக்கவில்லை சூசை.

தன் காம விளையாட்டுகள் எதுவும், தன் மனைவி மேரிக்குத் தெரிந்திருக்காது என்று நம்பும் சூசைக்கு எப்போதுமே தெரியாது மேரி காதலின் அன்பின் வடிவம் என்று. அன்பு அனைத்தையும் கண்டுபிடித்துவிடும் வல்லமை வாய்ந்தது. அத்தனை இன்னல்களுக்கும், வறுமைக்கும் மத்தியில் சூசையின் காம விளையாட்டுகள் தெரிந்தும் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்ளும் மேரியின் வடிவம் அன்பின் ஊற்று. ஊமையன் இறந்துபோகும் அன்றே சிலுவையை தன் மகனாகப் பாவிக்கும் வல்லமை அவளிடம் மட்டுமே இருந்தது. தன் பிள்ளையை யாரோ அநாதை எனக்கூறிவிட்டதை ஜீரணிக்க மறுக்கும் மனம் அவளுடையது. சொலுவை குறித்தான மேரியின் மனவோட்டங்கள் நமக்கும் கூட போகிற போக்கில் தெரிந்துவிடுவதில்லை. மிகக்கூர்ந்து கவனித்தால் மட்டுமே அவளுடைய உள்ளுணர்வை அவள் அழுகையின் ரகசியத்தைக் கண்டறிய முடியும். 

ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதே அளவிற்குப் பெண் கதாப்பாத்திரங்களுக்கும் உயிர்கொடுத்திருக்கிறார் ஜோ.டி.குருஸ். தோக்களத்தா மேரிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் பெண் வசந்தா.

ஜஸ்டினின் மார்பு பிளந்து குடல் வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் போது அதில் கடல் மண்ணை அள்ளிப்போட்டு மார்பில் மிதித்து தன் ஆத்திரம் போக்கிக்கொள்ளும் வசந்தா அதற்குமுன் வேறெங்குமே அப்படியொரு அழுகையை வெளிப்படுத்தி இருக்கமாட்டாள். வாலிபத்தின் மிடுக்கில் சுற்றிக் கொண்டிருந்த ஜஸ்டினையும் காலம் திருத்திய ஜஸ்டினையும் வசந்தா அறிவாள். ஜஸ்டினின்பால் காமத்தில் வீழ்ந்து, ஜஸ்டினால் சீரழிந்து, தகப்பனை இழந்து, இதற்கு இடைப்பட்ட காலத்தில்,  காலத்தால் கைவிடப்பட்டு கோத்ராவினால் தூக்கிவிடப்பட்ட பெண்ணாகத்தான் தன் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறாள் வசந்தா. காமத்தின் பேரன்பையும் பேரழிவையும் ஒருசேர அனுபவித்தவள்.

காமத்தின் உன்மத்தம் தலைக்கேறிய நிலையில் வசந்தாவின் அப்பாவைக் குத்திக் கொன்றுவிட்டு ஜெயில் செல்லும் ஜஸ்டின் திரும்பி வந்ததும் தன் நிலைகுறித்து வருந்தி வசந்தாவின் மனமாற்றத்திற்காகக் காத்திருந்தாலும் என்றைக்குமே அதனைத் தர தயாராயில்லை வசந்தா. வசந்தாவின் கோபம், இழப்பு என்றைக்குமே ஜஸ்டினை மன்னிப்பதில்லை. வசந்தாவின் மன்னிப்பு தன்னை ஒருபோதும் நெருங்காது என்பதை அறிந்திருந்த போதிலும் என்றைக்காவது ஒருநாள் அது கிடைக்காத என ஏங்கித் தவிக்கும் ஜஸ்டின் வெறுப்பின் வடிவாமாகத் தோன்றி ஞானத்தின் வடிவமாக மாறி மறையும் ஓர் உயிர். 

இவர்களுக்கு அடுத்த தலைமுறை சிலுவையும், வருவேலும் சேகரும் லூர்தும். 

மிக்கேல் பர்னாந்து ஆமந்துரையில் இருந்து சிங்களம் சென்று மிகப்பெரும் வணிகராகி நடுத்தெருவில் அடையாளம் தெரியா ஒருவனால் குத்துபட்டுச் சாகும் ஜீவன். தவமிருந்து பெற்ற மகனுக்கு வாய் பேச வராது. ஊமையானாக வரும் செலஸ்டின் செல்வச் சீமானின் மகனாகப் பிறந்திருந்தாலும் வாழ்க்கை முழுவதும் சொல்லமுடியாத அத்தனை துன்பங்களையும் வாழ்ந்து அனுபவித்தவராகத்தான் மறைகிறார். சிங்களத்தில் ஏற்பட்ட ஈழப்பிரச்சனையின் காரணமாக மனைவி மற்றும் குழந்தையோடு ஆமந்துரை கரையொதுங்கும் ஊமையன் கோத்ராவினால் அடையாளங்காணப்பட்டு சூசையாரால் வார்த்தெடுக்கபடுகிறார். சூசையாரைத் துரத்தும் பேய்க்கண்களுக்குப் பின்னால் இருக்கும் ஊமையனின் விதியும் சூசையாரின் காமமும் மோதிப் பார்க்கும் தருணங்கள் விசித்திரமான விநோதக்களம். 

ஆமந்துரை தேவாலயத்தில் கட்டப்பட்டிருக்கும் பேய்பிடித்த பெண் ஒருத்தியின் வார்த்தைகளுக்கு அடுத்தநாள் ஊமையான கடலுக்குள் பலியாகிறான். இக்கதையில் வரும் முக்கியமான கதாபாத்திரங்கள் கடலில் பலியாவது சற்றே வேதனைக்குரிய விஷயம். கடலை வாழ்க்கையாக நம்பியவர்ககளின் அடுத்த கணம் கடலுக்குள் மறைவது வேதனையான உண்மை. ஊமையனின் மறைவுக்குப் பின் சூசையாரால் வளர்க்கப்படுகிறான் சிலுவை. சிலுவையின் வழியாக கடலோர கிராமப்பள்ளியும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் காமப்பார்வையும் பதியப்பட்டிருக்கிறது. நஸ்ருதீன் வாத்தியாரின் காமவிளையாட்டால் சிலுவையின் படிப்பு பறிபோய் அவனுடைய விதியும் கடலுக்காக எழுதப்படுகிறது.

சிலுவையின் நண்பனாக வரும் வருவேலின் வாழ்க்கை வித்தியாசமான கோணத்தில் நிகழ்கிறது. அதுவும் அவனுடைய சித்தி ரோசம்மாவால் நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது. தோக்களத்தா மேரி போன்ற பெண்களுக்கு மத்தியில் வந்து போகும் ரோசம்மா பிறரின் விதியை சமைப்பதற்காவே அனுப்பபட்ட ஜீவராசிகள். தன் சித்தி ரோசம்மாவின் மூலம் வருவேலுக்கு ஏற்படும் மனப்போராட்டங்களை ஒரேயொரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குள் சுருக்கி விட முடியாது. வருவேலைப் போல சூழ்நிலைக் கைதிகள் சமுதாயத்தின் அத்தனை புறங்களிலும் இருக்கிறார்கள். 

இவர்கள் அத்தனை பேருக்கும் மத்தியில் முக்கியமான கதாப்பாத்திரமாக வந்து செல்கிறார் காகு சாமியார். தங்கள் பங்குக் கோவிலுக்கு வரும் பிற மோசமான சாமியார்களைக் காணும் போதெல்லாம் மக்கள் ஆமந்துரை மக்கள் காகு சாமியாரையும் தவறாது நினைத்துப் பார்க்கிறார்கள். 

மனிதர்களின் வழியாகப் பல்வேறு பிரச்சனைகள் பேசப்பட்டிருந்தாலும் அவர்கள் வாழ்ந்த காலத்தின் மிகமுக்கியமான வரலாறும் பதிவுசெய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

1. காந்தி நிகழ்த்திய உப்பு சத்தியாகிரகம்
2. கப்பலோட்டிய வ.வு.சி
3. தி.க வின் பெரியார் மாநாடு
4. இந்தி எதிர்ப்புப் போராட்டம்
5. தனுஷ்கோடியில் நிகழ்ந்த பேரழிவு - தத்ருபமான காட்சியமைப்பு
6. கொழுப்பில் நிகழ்ந்த இனப்படுகொலை
7. கிராமங்களுக்கான மின்இணைப்பு
8. அண்ணா மறைவு

மீன்பிடிக்கப் போகும் போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு மத்தியில் சகமீனவர்களுக்கு இடையே நிகழும் தொழில்ப் பிரச்சனையயும் மிகஆழமாகவே பதிவு செய்யபட்டுள்ளது. 

ஆழி சூழ் உலகைப்பற்றி சற்றே எளிமையாகச் சொல்வதென்றால் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு கடலை மட்டுமே நம்பி வாழும் பரதவ மக்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை. இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால் - இது வரைக்கும் நாம் அறிந்திராத கதை அல்லது சமூகத்தில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டவர்களின் கதை.

அழுத்தமாகச் சொல்வதென்றால் தமிழ் இலக்கியத்தில் தவறவிடக் கூடாத ஒரு நாவல் ஆழி சூழ் உலகு.

2 comments:

  1. நல்லதோர் அறிமுகம் சீனு. படிக்க முயல்கிறேன்.

    ReplyDelete
  2. மனம் நிறைந்த நன்றி

    ReplyDelete