11 Feb 2018

விசா-ஸித்தி ஹனுமான்

விசா-ஸித்தி ஹனுமான்

வீட்டில் இருந்து சரியாக பத்து மைல் தொலைவில் இருக்கிறது காரியஸித்தி ஹனுமான் கோவில். நகர்புறங்களில் கட்டபடும் புதிய கோவில்களைப் போன்ற தோற்றம்கொண்ட கோவில்.

அமெரிக்காவில் கோவில் என்பது தற்சமயத்திற்கு ஆச்சரியமான தகவல் இல்லை என்றாலும் இந்த ஊரில் இவ்வளவு பெரிய கோவில் என்பது ஆச்சரியமே. கோவிலின் முன்புறம் இந்தியக்கலை அம்சத்துடன் கோபுரம் கட்டத்தொடங்கி இருக்கிறார்கள். சனிக்கிழமையானால் அன்னதானம் உண்டு என்பது இங்குவாழும் அத்தனை அகில இந்திய பேச்சிலர் பக்தர்களும் அறிந்த உண்மை. ஆனால் அன்னதானக் கூடத்தை நிறைப்பது என்னவோ குடும்பஸ்தர்கள்தான். சொல்லவந்த காரியம் அன்னதானம் பற்றியது இல்லை. அன்னதானக்கூடம் பற்றியதும் இல்லை. ஹனுமானைப் பற்றியதுதான். நாம் கோவிலுக்குள் போவோம்.

பிளானோ வந்த இரண்டு வருடங்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இந்தக் கோவிலுக்கு வந்திருக்கிறேன். மனதிற்கு நெருக்கமான கோவில் என்றாலும் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் என்னளவில் குறைந்திருக்கிறது. என் நாட்டம் முழுவதும் பழங்காலக் கோவில்களில் மட்டுமே. அதற்கிருக்கும் மணமும் குணமும் தனி.

நேற்றைக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் முன்பே வர்ஷனாவிடம் இருந்து தகவல் வந்திருந்தது 'நாளை ஹனுமான் கோவிலுக்குப் போகணும்'. உடனே சரி சொல்லிவிட்டேன்.

'புரட்டாசி சனிக்காது கோவிலுக்குப் போயிட்டுவா' என அம்மா கூறியிருந்ததால் நான்காம் சனிக்கு வந்திருந்தோம். அதன் பின் இன்றைக்குத்தான் வருகிறேன்.

கோவிலுக்கு அருகாமை பார்க்கிங் நிரம்பி வழிந்ததால் கோவிலில் இருந்து சற்றுதள்ளி இருக்கும் வெட்டவெளியில் கார்களை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். நாளுக்குநாள் கோவிலில் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒருவேளை டிரம்ப் இந்தக்கோவில் வழியாக நகர்வலம் வருவாரே என்றால் இந்தியர்களின் நிலை கவலைக்கிடம்தான். டிரம்ப் இந்தக் கோவிலுக்கெல்லாம் வரவேண்டாம். ஒரேயொருமுறை பிளானோ வந்தால் கூட போதும். கதை கந்தல். இன்றைக்கு வரைக்கும் எங்களுக்குள் அமெரிக்க மனநிலை வராது இருப்பதற்கான காரணத்தை நீங்கள் பிளானோவிற்கு வந்தால் அறிந்துகொள்வீர்கள். இதைபற்றி பின்னொரு நாள் விலாவரியாகக் கூறுகிறேன்.

இன்றைக்குக் குளிர் கொடூரத்திற்கு இருந்தது. பார்க்கிங்கில் இருந்து கோவிலுக்குள் செல்வதற்குள் உடல் நடுநடுங்கிவிட்டது. நேற்று வரைக்கும் நன்றாக இருந்த வானிலை இன்றைக்கு ஜீரோ டிகிரிக்குக் கீழே போனது கொஞ்சமும் எதிர்பார்க்காதது. காற்று வேறு பலமாக அடித்துக் கொண்டிருந்தது. காற்று இல்லை என்றால் கூட குளிரை சமாளித்துவிடலாம். காற்றுதான் பிரச்சனை. அடித்த குளிரில் கைகால்கள் விரைத்து கண் மற்றும் மூக்கில் இருந்து நீர் வர ஆரம்பித்திருந்தது. கோவிலுக்குள் நுழையும் வரையிலும் ஒட்டுமொத்த கூட்டமும் நடுங்கிக்கொண்டிருந்தது.

எதிர்பார்த்ததை விட மிக அதிகமான கூட்டம். கூட்டத்தில் அந்தப்பெரிய மண்டபமே நிரம்பி வழிந்தது. ஒரு பெருங்கூட்டம் வரிசையில் காத்திருந்தது. அகில இந்திய பக்தர்கள் கூட்டம் என்பதுதான் சரியான சொல். கூட்டத்தினுள் நீந்தி நடு மண்டபத்தை அடைந்தபோது புரிந்துவிட்டது. ஏதோ ஓர் காரணத்திற்காக தரிசன பாதைகளை அடைத்து வைத்திருந்தார்கள். பாதைகள் என்று சொல்வதற்கான காரணத்தை முறையே பொது மற்றும் சிறப்பு தரிசனம் என்று பிரித்துக்கொள்ளுங்கள். கோவில் என்னில் இருந்து விலகிப் போவதற்கான முக்கிய காரணம் இந்த தரிசனமுறைகள். இதை மாற்றவாது அந்தக் கடவுள் கல்லைக் கடந்து வர வேண்டும்.

மண்டபத்தின் நடுவில் எனக்கும் ஹனுமனுக்குமான புரிந்துணர்வு தூரத்தில் நின்றுகொண்டு கோவிலை வேடிக்கை பார்க்க ஆரம்பித்திருந்தேன். சாமி கும்பிடுவதில் ஆரம்பித்தித்து, விழுந்து கும்பிடுவது, கற்பூர ஆரத்தியை வணங்குவது வரைக்கும் கலாச்சாரம் மாநிலத்திற்கு மாநிலம் வேற்படுவதை இங்கேதான் முதன்முறை கண்டேன்.

ஒரே தெய்வத்தை நோக்கிய ஒவ்வொருவரின் வழிபாடும் வெவ்வேறுவிதங்களில் இருப்பதும் அதனைக் அறிவதுமே தனி கலை தான். இந்தியாவில் இருந்து வெளிவந்து இந்தியாவை நோக்கும் போது அது வேறுமாதிரியாக இருக்கிறது. குறிப்பாக கலாச்சார விஷயத்தில். நான் தமிழகத்தைத் தாண்டியிராதவன் என்பதும் முக்கிய காரணம். ஒவ்வொரு விதமான வழிபாடுகளையும் நோக்கிக்கொண்டே ஹனுமனை நோக்கி பார்வையை செலுத்திய போதுதான் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்ததை கவனித்தேன்.

கோவில் குருக்கள் ஒரு பெண்ணிடம் பச்சை நிறத்திலான கயிறு ஒன்றைக்கொடுத்து தூணில் கட்டச்சொன்னார். அந்த தூண் பச்சைநிறக் கயிறுகளால் நிரம்பி வழிந்தது. கூடவே பிராத்தனைகளை நிறைவேற்றும் தூண் என்பது எவ்வித விளக்கமும் இல்லாமல் புரிந்தது. தூணை இன்னும் கூர்ந்து நோக்கினேன், அது தூண் இல்லை. ஹனுமானின் ஆயுதமான கதையை தலைகீழாக நிறுத்தி இருந்தார்கள். என்னவிதமான பிராத்தனையாக இருக்கும் என்று ஆராய்ந்த போது அதன் மேல் விளக்கம் இருந்தது. விளக்கத்திற்கு பின் வருகிறேன். கோவிலை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தேன்.

வழிபாட்டுப்பாதை இன்னும் திறந்திருக்கவில்லை. கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. வழக்கமான இடங்களில் இருந்து சற்றே தள்ளி நின்று பார்க்கும் போதுதான் நாம் இதுவரைக்கும் கவனிக்காத பல விஷயங்கள் கண்ணில் படுகின்றன என்ற வரியை என்னுள் எழுதிக்கொண்டேன். கோவிலை மொத்தமாக ஆராய்ந்தபோது மொத்தமாக நான்கு கதையை கவிழ்த்து வைத்திருந்தார்கள். நான்கில் ஒன்று மட்டுமே நிறைந்து வழிந்தது. மற்ற மூன்றும் கடனே என நின்று கொண்டிருந்தன. மூன்றின் காரணமும் அந்த ஒன்றில் இருந்து வேறுபட்டதுதான் காரணம்.

நான்கில் இரண்டு கதை நல்ல அறிவைகொடு என்று கேட்கும் வழிபாடு. இரண்டிலும் இருந்த கயிறுகளின் எண்ணிக்கையை பத்து நிமிடத்தில் எண்ணிவிடலாம். இன்னொன்று வெல்த்-தைக் கொடு (வெல்த் என்பதை புரிய வைப்பதில் தமிழ்ச்சிக்கல் எனக்கு). அதில் ஓரளவிற்கு கணிசமான கயிறுகள். மற்றொன்று தான் முக்கியமான கதை. அதுதான் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

நல்ல உடல் ஆரோக்கியம் (வெல்த்), குடும்ப பிரச்சனைகள் தீர என்று எழுதி இருந்தது. அதான பார்த்தேன். ஆனா வெல்த் இருந்தாலே ஹெல்த் தானா வந்தரும் தான அப்புறம் ஏன் மக்கள் நேரா அந்தத்தூணுக்குப் போறாங்க என்ற என் தர்க்கத்தை வர்ஷனாவிடம் கூறினேன். கோவிலுக்கு வந்தா வந்த வேலைய மட்டும் பாருங்க என பதில் வந்தது. சரி பரவாயில்லை. என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன்.
ஆராய்ச்சி மொத்தமும் அந்தத் தூணை சுற்றியே.

நல்ல உடல் ஆரோக்கியம் (ஹெல்த்), குடும்ப பிரச்சனைகள் என்பதோடு சேர்த்து விசா பிரச்சனைகளுக்கும் சேர்த்து என ஒரு வாசகம் இருந்தது. என்ன ஒரு அற்புதமான பிராத்தனை. அதைப்பார்த்து சிறிதுநேரம் சிரித்துக்கொண்டே இருந்தன். மனம் இன்னமும் அந்த பிராத்தனைக்கான வார்த்தையைச் சுற்றியே வருகிறது. விசாவில் இருக்கும் பிரச்சனைகள் தீர என்ற வார்த்தைகளைப் படிக்கும்போது அனுமான் எப்படி உணர்ந்திருப்பார். ஒருவேளை டிரம்ப் எனும் ஒருவரைப் பற்றி அனுமாருக்கு முன்பே தெரிந்திருக்கக்கூடுமோ என்றெல்லாம் நினைத்துக் கொள்கிறேன்.

எனக்குத் தெரிந்து அந்தக் கயிறுகள் மொத்தமும் டிரம்ப் பதவி ஏற்றதற்குப் பின் கட்டபட்டதாகத்தான் இருக்கவேண்டும். பார்க்கலாம். அடுத்தமுறை போகும் போது எனக்கொரு கயிறு வாங்க வேண்டுமாவென யோசிக்க வேண்டும்.

ஜெய் ஹனுமான்.

4 comments:

  1. என் நாட்டம் முழுவதும் பழங்காலக் கோவில்களில் மட்டுமே. அதற்கிருக்கும் மணமும் குணமும் தனி.//
    மீ டூ சீனு!!! எனக்கும் பழங்காலக் கோயில்கள் தான் பிடிக்கிறது. இன்னொன்று பழங்காலக் கோயில்களைக் கூட இப்போது புதுப்பிக்கிறோம் புனர் நிவாரணம் என்று ரணப்படுத்திவிடுகிறார்கள் டைல்ஸ்போட்டு...நான் வேடிக்கையாகச் சொல்வதுண்டு "பாத்ரூம் கோயில்" என்று!!

    நானும் கோயிலுக்குப் போவது என்பது அரிதாகிப் போனதன் காரணங்களில் புதுக் கோயில்கள், கூட்டம், பிரிவினை வாதம்...

    //கோவில் என்னில் இருந்து விலகிப் போவதற்கான முக்கிய காரணம் இந்த தரிசனமுறைகள். இதை மாற்றவாது அந்தக் கடவுள் கல்லைக் கடந்து வர வேண்டும்.//

    பிரிவினை வாதம் வெளியில் மட்டுமல்ல கோயிலிலும் என்பதால் எனக்கும் இப்படிப்பட்டக் கோயில்களுக்குச் செல்வதில்லை. நடைபாதையில் ஏகாந்தமா ஈ ஓட்டிக் கொண்டிருக்கும் பிள்ளையார், அம்மனைக் கூடப் பிடிக்கும். இப்போது அப்படியான நடை பாதைக் கோயில் கூடாரம் போட்டுக் கொண்டு...பந்தல் போடப்பட்டு கூட்டம் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் என்று போய்விட்டால் என் பார்வையிலிருந்து அவுட்...

    கோயில் என்பது கோ உறையும் இல்! அதனை வியாபாரத் தலமாக்குவது கண்டனத்திற்குரியது. இந்தியாவில் தான் பிரிவினை வாதம் என்றால் அமெரிக்காவில் வரும் கோயில்களுக்குமா!! ஹும் என்ன சொல்ல...

    கீதா

    ReplyDelete
  2. சீனு மீண்டும் உங்கள் பதிவுகள் வருவது பார்த்து ரொம்ப மகிழ்ச்சி...

    ஸ்ரீராமைக் கலாய்த்து நீங்கள் எழுதியிருந்த இரு பதிவுகளின் சுட்டியைச் ஸ்ரீராம் உங்கள் கதையை அங்குப் போட்ட போது கொடுக்க அதை வாசித்தேன் சிரித்து முடியலை..அந்தக் கிரிக்கெட்!!! ரொம்ப ரசித்தேன் அது போல பீச்சில் ஸ்ரீராம் ஹா ஹா ஹா..

    கீதா

    ReplyDelete
  3. இந்த விசா அனுமன் அங்கயும் வந்துட்டாரா..இங்கயும் விசா ஹனுமான், விசா பிள்ளையார் என்றெல்லாம் ரொம்ப ஃபேமஸா இருக்காங்க....இங்கதான் மரத்துக்கு மரம், தூணுக்குத் தூண் கயிறு தொட்டில், ராமஜெயம் பேப்பர் எல்லாம் தொங்கும்...அங்குமா...யப்பா சீனு
    இந்தியர்கள் எங்கு போனாலும் இப்படித்தான் போலும். குட்டிச் சுவராக்கிவிடுவார்கள் போல..அந்தப் பக்த கோடிகளிடம் அடுத்த முறை சும்மானாலும் சொல்லுங்க...10001 துண்டு பேப்பர்ல ஸ்ரீராமஜெயம் எழுதி மாலையா கோர்த்து கதைல கட்டினா விசா ப்ராப்ளம் தீர்ந்துடும் ட்ரம்ப் மாமா வே ஹனுமான் பக்தராகிட்வார்னு...

    .லல்லு பிரசாத்தின் ஃபேமஸ் வசனம் நினைவுக்கு வருது...அதை அபப்டியே இங்கு..

    Laloo Prasad Yadav was hosting a Japanese Delegation for Business Development to Bihar. The Japanese Embassy was quite impressed with Bihar and he stated, "Bihar is an excellent state.

    Give us three years and we will turn it into an economic superpower like Japan." Laloo was very surprised." You Japanese are very ineficient," he stated "Give me three days and I will turn Japan into Bihar"

    ஹா ஹா ஹா...ட்ரம்ப் அங்கிளை உங்க ஊருக்கு வந்து பார்த்துட்டுப் போகச்சொல்லி ஒரு மெயில் தட்டறேன்..ஹா ஹா...அப்ப என்னாகும் கதினு ..எல்லாரும் ட்ரம்ப் மாமாவின் கண்ணில் படட்டும் எங்கள் சீனுவையும் ஹர்ஷனாவையும் தவிர...அதுக்காக எங்க சார்பில ஒரு பச்சைக்கயிறு கட்டிருங்க ஹா ஹா ஹா ஜெய் ஹனுமான்!

    கீதா

    ReplyDelete
  4. இந்தக் காலத்தில் கோவில் கட்டுவதே வியாபார நோக்கமாகிப் போய் விட்டதுபண்டைக்காலகோவில்கள் கலையை வளர்க்கவும் பக்தியைவளர்க்கவும் கட்டப் பட்டவை எங்கோ படித்தது இப்பொழுதுநினைவுக்கு வருகிறது வேற்று நாட்டவர்களிந்தியாவில் கல்விக் கூடங்களை வளர்த்தர்கள் ஆனால் நாம்
    இந்தியர்களோ கோவில் கட்டி சுய நம்பிக்கையை இழக்கவைக்கிறோம்

    ReplyDelete