21 Dec 2016

Internet - Nothing but Sex?

அந்த பதின்ம வயது சிறுவனுக்கு அவனுடைய காதலியிடம் இருந்து ஒரு படம் வருகிறது. அந்த இளம்பெண் கிட்டத்தட்ட தன்னை நிர்வாணமாக எடுத்துக்கொண்ட படம். கூடவே இதேபோன்ற உன் படத்தையும் அனுப்ப முடியுமா என்ற கேள்வியும் வருகிறது. முதலில் அதிர்ச்சியாகும் சிறுவன் ஒரு மெல்லிய குறுகுறுப்புடன் மீண்டும் அந்தப் படத்தை கவனிக்கத் தொடங்குகிறான். இன்னும் மீசை கூட முளைக்காத அந்த சிறுவனின் மனதில் வயதை மீறிய ஒன்றை முயன்று பார்க்கும் ஆசை துளிர்க்கிறது. அதில் இருந்து சில நிமிடங்களில் மீண்டும் ஒரு தகவல் அவளிடம் வருகிறது 'நான் உன்கிட்ட இப்படி கேட்டிருக்கக் கூடாதுன்னு நினைக்கிறன். என்னை மன்னிச்சிக்கோ'. சிறுவனின் மனதில் அந்தக் குறுகுறுப்பு இன்னும் அதிகமாகிறது. 

வேகமாக குளியலறைக்குள் நுழைபவன் லிப்ஸ்டிக்கை எடுத்து தன் தொடையில் 'லவ் ஸ்லேவ்' என்று எழுதி கூடவே தன் நிர்வாணத்தையும் அனுப்புகிறான். அதில் இருந்து சிலநாட்களில் அந்தப்படம் அவனுடைய பள்ளிக்கூடம் முழுவதும் பரவுகிறது. ஒட்டுமொத்த பள்ளியும் அவனை 'லவ் ஸ்லேவ், லவ் ஸ்லேவ்' என்று கிண்டல் செய்யத்தொடங்க, முதல் தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றப்பட்டு கோமாவிற்கு செல்கிறான் அந்த சிறுவன். இதற்குக் காரணமான அதே பள்ளியைச் சேர்ந்த மற்ற இரு சிறுவர்களும் குற்றத்தில் இருந்து தப்பிக்கும் வழியில் இறங்குகிறார்கள். 

வேறோர் காட்சி இப்படித்தான் தொடங்குகிறது. ஒரு பதின்ம வயது சிறுவன் அரை நிர்வாணமாக கணினியின் முன் நின்று கொண்டு தன்னோடு உறவு வைத்துக் கொள்ளும்படி விளம்பரம் செய்கிறான். தெளிவாகச் சொல்வதென்றால் 'Paid adult internet sex'. இந்த விளம்பரத்தைக் கடக்கும் ஒரு பெண் அவனோடு பேச ஆரம்பிக்கிறாள். ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பிக்கிறது. மிகவும் வெளிப்படையாக அதேநேரத்தில் செக்ஸைத் தவிர வேறெதுவும் பேசத் தயாராக இல்லை அந்த சிறுவன். செக்ஸ் அல்லாது வேறு வேறு விஷயங்களுக்கு அவள் சென்றாலும் தான் கொண்ட காரியத்திலேயே கண்ணாயிருக்கிறான் இந்த சிறுவன். அதுவரைக்கும் எழுத்து மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவனுக்கு அவளது முகத்தைப் பார்க்கும் ஆவல் வருகிறது, முகம் பார்த்து பேசிப்பழகி பின் நேரில் சந்திக்க அழைக்கிறான். அவர்கள் இருவரும் நேரில் சந்திக்கும் இடத்தில் அந்தப்பெண் 'தான் ஒரு ரிப்போர்ட்டர் என்றும், இணையம் மூலம் பாலியல் தொழில் செய்யும் குழந்தைப் பாலியல் தொழிலார்களைப் பற்றி சிறப்புச் செய்தி வெளியிட வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தையும் அவனிடம் தெரிவிக்கிறாள். முதலில் தயங்கினாலும் அவளுக்காக, அந்த புதிய நட்புக்காக சிலபல நிபந்தனைகளுடன் அந்த பெட்டிக்கு ஒப்புக்கொள்கிறான். 

அதில் மிக முக்கியமான நிபந்தனை அவனுடைய அடையாளம் வெளியில் கசியக்கூடாது என்பது. எப்படி பாலியல் தொழிலாளி ஆனான், எவ்வாறு அந்த மாயவலைக்குள் ஈர்க்கப்பட்டான், அந்த நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்ற பல தகவல்களுடன் வெளியாகும் அந்தப்பேட்டி மிகப்பெரிய வெற்றியடைகிறது. கூடவே பாதுகாப்பு அதிகாரிகளின் காதுக்கும் சென்று சேர்க்கிறது. யார் அந்தப்பையன் என்று அவனுடைய முகவரி கேட்டு மிரட்டத் தொடங்குகிறது அதிகாரத்தின் மேல்மட்டம். தன்னை நம்பி வந்த இளைஞனின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. 

முகம் பார்த்திராத, யார் என்றே தெரியாத அந்த ஆணிடம் தன்னிடம் இருக்கும் அத்தனை ரகசியங்களையும் கொட்டத் தொடங்குகிறாள் அந்தப்பெண். மிக சமீபத்தில் குழந்தையை இழந்த, எந்நேரமும் வேலை வேலை என வேலையே கதியென இருக்கும் கணவனின் அரவணைப்பு கிடைக்காத, ஆதரவாய் பேச யாருமற்ற சூழலில் முகம்தெரியாத அந்த நபரிடம் தன்னைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் சொல்கிறாள். 

அவள் ஆசை விருப்பு வெறுப்பு என போகும் அந்த நட்பு கிட்டத்தட்ட காதலாக மாறுகிறது. அதேநேரத்தில் அவள் கணவனுடைய வங்கிக் கணக்கு மற்றும் கடன் அட்டை விபரங்கள் மொத்தமும் சிலரால் கைப்பற்றப்பட்டு அதிலிருக்கும் பணம் மொத்தமும் களவாடப்படுகிறது. அன்றாடச் செலவுக்குக் கூட காசில்லாத சூழ்நிலை. தங்களால் உதவ முடியாது என கைவிரித்துவிட்ட சூழலில் தனியார் துப்பறிவாளரிடம் செல்கிறான் கணவன். அவர்களுடைய கணினியை ஆராய்ந்துவிட்டு அவளுடைய மனைவியோடு தொடர்பில் இருக்கும் அந்த முகம் தெரியாத நபர் தான் அவர்களுடைய கணினியினுள் வைரஸை செலுத்தி அத்தனை தனிப்பட்ட விபரங்களையும் களவாடிவிட்டதாக குற்றம் சுமத்துகிறான்.  




இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் இடம் இன்டெர்நெட். இன்டெர்நெட் குறித்தும் அதன் தீவிர எதிர்நிலை குறித்தும் பல கதைகள் வந்துவிட்ட போதிலும் இணைய குற்றங்களை மையமாக வைத்து வெளிவந்த டிஸ்கனெக்ட் திரைப்படம் மிகமுக்கிய இடத்தைப் பிடிக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் இந்தக் கதைகள் சொல்லப்பட்ட விதம். மிக அழுத்தமான கதையை எவ்வித உறுத்தலும் இல்லாமல், அதே நேரத்தில் இணைய உலகம் நம் தனிமனித பாதுகாப்பை எப்படி கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் அலுப்பூட்டாமல் சொன்ன விதம். 

ஒன்றுகொன்று சம்மந்தமில்லாமல் வரும் மூன்று கதைகளிலும் கவனிக்க வேண்டிய ஒன்று - இதில் பாதிக்கப்பட்ட மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள். ஆறுதலாக பேச ஆளில்லாமல் தங்கள் தேவைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள். ஒருவேளை ஆறுதல் கிடைக்க வேண்டிய நேரத்தில், கவனம் செலுத்தபட வேண்டிய நேரத்தில் கவனிக்கபட்டிருந்தால் மிகபெரும் பிரச்சனைகள் மொத்தமும் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ஹென்றி அலெக்ஸ் ரூபின். பிரச்சனகளைப் பற்றி மட்டும் பேசாமல் அதன் தீர்வையும் அழுத்தமாக பேசிய விதத்தில் மிக முக்கயமான படமாகிறது இந்த டிஸ்கனெக்ட். 


A Wired connection may turn as weird connection at any point of time. 

5 Dec 2016

டியர் சிந்தகி


அன்புள்ள ஆவி, 

நலமாய் இருக்கிறீர்களா? எழுதி பலநாள் ஆகிறது. எங்கே எழுதுவது மொத்தமாக மறந்து போய்விட்டதோ என்று சில சமயம் பயமாகவும் இருக்கிறது. எதை எழுத ஆரம்பித்தாலும் கருணையே இல்லாமல் எழுதியது மொத்ததயும் அழித்துவிடுகிறேன் அல்லது பாதியில் நிறுத்திவிடுகிறேன். எழுத்து என்பது விருப்பப்பட்டு நிகழ வேண்டிய ஒரு செயல். அதனை வலுகட்டாயமாக திணித்து எழுத முடியாது. அல்லது என்னால் முடியவில்லை என்றும் சொல்லலாம். அமெரிக்கா வந்ததில் இருந்து எவ்வளவோ சுவாரசியமான விஷயங்கள் நடந்து கொண்டிருகின்றன. யாரும் பார்க்காத வனத்தில் மலர்ந்து உதிரும் பூ போல் யாருமற்ற இடத்தில் வீசும் தென்றலைப் போல் யாருக்கும் சொல்லாமல் கடந்து கொண்டிருக்கிறேன். 'என்ன சீனு இப்ப ஏதும் எழுதுறது இல்ல போல' 'என்னடா எழுதுறத நிறுத்திட்ட போல' 'ஜீ எதாது எழுதுங்க ஜீ' போன்ற வார்த்தைகளை சமீப நாட்களாக அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் எழுத்தைத் தேடும் சிலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கிட்டதட்ட பத்து மாதகாலமாக நீங்கள் கூறிக்கொண்டிருந்ததை இப்போது இன்னும் சிலரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். 

நீண்ட நாளைக்குப் பின் ஏதாவது எழுத வேண்டும் போல் இருக்கிறது, தொய்வில்லாமல் ஒரு விஷயத்தை எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது, அதற்குக் காரணம் டியர் சிந்தகி படமாகவும் இருக்கலாம். அந்தப் படத்தில் காண்பிக்கப்பட்ட கோவாவாகவும் இருக்கலாம். முதலில் படம் அப்படி ஒன்றும் எனக்குப் பிடிக்கவில்லை. மிக மெதுவான திரைக்கதை. பிடிப்பே இல்லாத கதைக்களம் என திரையில் ஏதோ ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்க நம்மை படத்தோடும் கட்டிபோடும் எவ்வித மாயாஜாலமும் அந்தக்கதையில் இருந்திருக்கவில்லை கதைக்களம் கோவாவை நோக்கி நகரும் வரைக்கும். 

கோவா கோவா கோவா... கோவா எத்தனை அருமையான இடம் என்பதை இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உணர்ந்து கொண்டிருந்தேன். ஆளரவம்ற்ற அமைதியான அந்த கடற்கரை. வளைந்து நெளிந்து சில சமயங்களில் குறுகி மிரட்டி நீளும் சாலைகள், நாம் தங்கியிருந்த இடத்தின் அருகில் இருந்த மிகபெரிய ஆறு. அந்த ஆற்றின் சலனம். அந்த சலனங்களின் மேல் நீண்டு மறுகரையைத் தேடிச் செல்லும் பாலம், மக்களை ஏற்றிச்செல்லும் படகு என கோவா நினைவுகள் மீண்டு எழுகின்றன. 

இன்னும் எத்தனை முறை சென்றாலும் நாம் முதல்முறை சென்ற கோவா பயணத்தைப் போல் மீண்டும் ஒருமுறை அமையுமா என்பது சந்தேகமே. யாருக்கும் வாய்க்காத ஒரு பயணம் அது. மிகச்சரியான சமயத்தில் நல்லதொரு மழைக்காலத்தில் அமைந்த பயணம். பயணம் ஆரம்பித்த நிமிடத்தில் இருந்து முடியும் வரையிலும் மழை நம்மை துரத்திக் கொண்டே இருந்தது. முதலில் மழையை வெறுத்து சபித்து பின் மழையின் துணையோடு ஊர் சுற்ற ஆரம்பித்த நினைவுகள் சுகமாக இருக்கின்றன. நீங்கள் நான் கௌதம் ரூபக் என அந்த நான்கு நாட்களும் நம்மை கோவாவிடம் ஒப்புக் கொடுத்திருந்தோம். வழியெங்கும் பசுமையான காடுகள் மலைகள் ஆறுகள் கடல் என ஒரு பறவையைப் போல் பறந்து கொண்டிருந்தோம். சலிக்காமல் பயணித்துக் கொண்டே இருந்தோம். எத்தனை விதமான மனிதர்கள் அனுபவங்கள் சாகசங்கள். 

'கார் வேணாம் பைக் ஊர் சுத்தலாம்' என நீங்கள் சொன்னபோது 'பெய்யுற மழைக்கு கார்தான் பாஸ் பெஸ்ட்' என்று கூறியதன் அர்த்தம் புரிய ஒரு நாளாகியது எனக்கு. ஷானே பஞ்சாப், ஷேர் கே பஞ்சாப் டோனா பாலா பன்ஜிம் என கோவா நினைவுகள் அத்தனை சீக்கிரம் மறக்கக்கூடிய விசயமல்ல. மீண்டும் ஒருமுறை கோவா போகவேண்டும். போகவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டதே தவிர நினைத்தவுடன் கோவா பயணிக்க முடியவில்லை என்பது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. காரணமே இல்லாமல் டியர் சிந்தகி பிடித்துவிட்டது. கோவாவில் நகரும் உணர்வுப் பூர்வமான கதைக்களம் பிடித்திருக்கிறது. 

போகட்டும் விடுங்கள் டியர் சிந்தகி பிடிக்க ஒரேயொரு காரணம் வேண்டும் என்றால் உங்களுக்கு ஆலியா எனக்கு கோவா!

நன்றி
சீனு 

9 Apr 2016

மெட்ராஸ் டூ டெக்சாஸ் - புது இடம்! புது மேகம்!

விமானத்தின் ஜன்னல் கதவுகளை உயர்த்தி மெல்ல வெளியில் பார்த்தேன். நல்ல வெளிச்சம். ஒரு இருண்ட குகைக்குள் இருந்து கடுமையான வெளிச்சத்தை பார்பதைப் போல் இருந்தது அந்த உணர்வு. தூக்கம் நிரம்பிய எனது கண்கள் அந்த வெளிச்சத்தை ஏற்றுக்கொள்ள திணறிக் கொண்டிருந்தன. கண்களை சுருக்கி, மேலும் கூர்மையாக்கி நிலத்தைத் தேடினேன். பரந்து விரிந்த பசுமையான புல்வெளி. அவைகளுக்கு மத்தியில் கூரை வேயப்பட்டதைப் போல கட்டிடங்கள், அங்கங்கே பெரிய பெரிய குளங்கள் என டாலசை பிரதி எடுக்க ஆரம்பித்திருந்தேன். விமானம் மெல்ல தனது உயரத்தைக் குறைக்க ஆரம்பித்திருந்தது. 


'இன்னும் சில நிமிடங்களில் டாலஸ் விமான நிலையத்தை நெருங்க இருக்கிறோம். லண்டனில் கடுமையான விமான போக்குவரத்து நெரிசல் இருந்தபோதிலும், வரும் வழியில் கடுமையான மேகமூட்டம் இருந்த போதிலும் நாம் எதிர்பார்த்ததை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே டாலஸ் விமான நிலையத்தை நெருங்கிவிட்டோம். நாம் தரையிறங்குவதற்கான உத்தரவு கிடைத்துவிட்டது. கடவுளுக்கு நன்றி. உங்களுக்கு சேவை செய்ததில் நாங்களும் அமெரிக்கன் ஏர்லைன்சும் மிகவும் பெருமைப்படுகிறோம். நன்றி.' என்ற தகவலை கூறிவிட்டு விமானத்தை ஓடுதளம் நோக்கி சீராக்குவதில் கவனம் செலுத்தத் தொடங்கினார் கேப்டன்.

ஒட்டுமொத்த விமானமும் உறக்கம் கலைந்து அமெரிக்காவில் இறங்க தயாராகிக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஜன்னலின் வழியாக விரிந்த அந்த நிலத்தின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பறந்து கொண்டிருப்பது அமெரிக்காவின் மீது என்பதையே நம்பமுடியாமல் மிதந்து கொண்டிருந்தேன். அமெரிக்கா வந்துவிட்டேன் என்கிற நிறைவு இருந்தாலும் என்னையே அறியாமல் ஏதோ ஒன்று உள்ளுக்குள் எட்டி உதைக்க ஆரம்பித்தது. மனம் மொத்தமும் சென்னையில் இருக்கும் என்னுடைய வீட்டில். நேற்று வரைக்கும் நான் நடந்து கொண்டிருந்த அந்த தரைகளில் கால்பதித்து நின்று கொண்டிருந்தது. உடல் மட்டும் விமானத்தின் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தது. இன்னும் அடுத்த தேசத்தினுள் கால்பதிக்கவே இல்லை அதற்குள் ஹோம்சிக் - ஆம் இந்த உணர்வினை அப்படித்தான் கூறுகிறார்கள். அது ஒருவித கலவரமான மனநிலை. அம்மாவைப் பிரிந்து முதல்நாள் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தையின் மனநிலை. கொஞ்சம் தள்ளி அமரிந்திருந்த மகேஷைப் பார்த்தேன், எனது உணர்வுகளை பிரதி எடுத்தது போல் அமர்ந்திருந்தான். ஒருவருக்கொருவர் சிரித்துக் கொள்ளக்கூட மனமில்லாமால் வேறுபக்கம் திரும்பிக் கொண்டோம்.

மகேஷாவது பரவாயில்லை பேச்சிலர்ஸ் ரூம். நானோ வீட்டைத்தாண்டி எங்கும் போனதில்லை. வீட்டை என்பதை விட என் அம்மாவைப் பிரிந்து எங்கும் சென்றதில்லை என்பது தான் உண்மை. இன்றைக்கு கண்காணாத தொலைவில், உலக உருண்டையின் வேறோரு மூலையில் இருக்கிறேன். இனி எனக்கான உலகம் வேறு. நான் சந்திக்கப்போகும் மனிதர்கள் வேறு. நான் காணப்போகும் காட்சிகள் வேறு. ஆனால் நான்?

காலையில் கண் விழிக்கும் போது கிடைக்கும் காபியில் இருந்து, 'லேசா உடம்பு வலிக்கி' என்றால் கழுத்தைத் தொட்டுப்பார்க்கும் அம்மாவின் பாசத்தில் இருந்து, நள்ளிரவில் மழுங்க மழுங்க கணினியைப் பார்க்கும் போது 'பாபு தூங்கு டே' என்று அப்பா கூறும் அக்கறையில் இருந்து, இவை கிடைக்காத தொலைதூரத்திற்கு வந்திருக்கிறேன். இனி எனக்கு நானே காபி போட்டுக்கொள்ள வேண்டும், சமைக்க வேண்டும், என்னுடைய வேலைகள் மொத்தத்தையும் நானே கவனித்துக்கொள்ள வேண்டும். சுருங்கச் சொல்வதென்றால் யாருடைய அனுசரனையும் இல்லாமல் என்னை நானே கவனித்துக்கொள்ள வேண்டும். நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. 

விமானம் மெல்ல வானத்தில் வட்டமடிக்க வட்டமடிக்க தலைக்கு மேல் சில வளையங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. அமெரிக்கா சென்றே ஆக வேண்டும் என்று முடிவானபோது பலரும் பயமுறுத்தினார்கள் 'சீனு கண்டிப்பா ஹோம்சிக் வரும். வீட்டு ஞாபகமாவே இருக்கும். தனிம பாடாப்படுத்தும், ஆனா எவ்ளோ சீக்கரம் இத பழகிக்க முடியுமோ பழகிக்கோ.' என்று தான் அறிவுறுத்தினார்கள். இதையெல்லாம் கேட்கும்போது 'ஹெஹ்ஹே எனக்கா, ஹோம் சிக்கா' என்பது போல் சிரித்தேன். நாட்கள் நெருங்க நெருங்க, வேறு வழியே இல்லை விமானம் ஏறியே ஆக வேண்டும் என்ற நிலை வந்தபோது தான் என்னுடைய நிலை என்ன என்பதே எனக்குத் தெரிந்தது. நேற்று வரைக்கும் எனக்கே எனக்கான கூட்டில் மிகப் பாதுகாப்பாக, மிகப் பத்திரமாக இருந்திருக்கிறேன். இன்றைக்கு கண்கானா தொலைவில்.

'நாம தான் நல்லா ஊர் சுத்துவோமே நமக்கென்ன கவல. ஹோம் சிக்காவது மண்ணாவது' என்பது தான் என் எண்ணமாக இருந்தது. பயணம் முடிவான போதே யாமினி கூறியிருந்தாள் 'அண்ணா இங்க வந்தா உடனே ஹோம் சிக் வரும். இல்ல கொஞ்சநாள் கழிச்சு வரும், ஆனா உடனே வந்துட்டா நல்லது' என்று. அதை நினைத்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இருந்தும் முதல்முறையாக வீட்டைவிட்டுப் பிரிந்து வெகுதூரம் பயணிப்பதால் உருவாகும் உணர்வுகளை சமாளிக்க முடியவில்லை. திடிரென என் மீது எல்லாருக்கும், எல்லோர் மீது எனக்கும் பாசம் வந்ததைப் போல் இருந்தது. அந்த உணர்வில் இருந்து மீளவே முடியாத தொலைவிற்கு சென்றிருந்தேன்.

ஒரு தூக்கம் தூங்கி எழுந்தால் என்னுடைய வீட்டில், என்னுடைய படுக்கையில் இருந்து எழுந்திருக்க மாட்டேனா என்றெல்லாம் சிந்தனை ஓடியது. சில கனவுகள் நிஜமாகலாம். சில நிஜம் என்றைக்குமே கனவாக முடிவதில்லை. எவ்வளவு யோசித்தாலும் மூளையைப் போட்டு கசக்கினாலும் இனி ஒன்றும் ஆவதற்கில்லை. சிலவற்றை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். உலகம் எவ்வளவு பெரியது என்பதை கூட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் தானே தெரிந்துகொள்ள முடியும். ஆனாலும் ஆனாலும் ஆனாலும் என்ற தொடக்கப்புள்ளி மட்டும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. 

ஒரு நாளைக்கு எவ்ளோ பேர் வெளிநாடு போறாங்க. ரவி எவ்ளோ நாளா அமெரிக்கால இருக்கான். பொண்ணுங்களே சமாளிக்கிறாங்க உன்னால முடியாத என்ற எதிர்வாதமும் என்னிடம் இல்லாமல் இல்லை. முதல்முறை வேலை நிமித்தம் வெளிநாடு வருபவர்களின் மனநிலையும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று எனக்கு நானே சமாதனம் கூறிக்கொண்டேன். 

ரவி அமெரிக்கா சென்றபோது அவனை வழியனுப்புவதற்காக விமான நிலையம் போனதுதான் என்னுடைய முதல் விமான நிலைய அனுபவம். அன்றைக்கு தன் கணவனை வழியனுப்ப வந்த பெண் ஒரு சின்னக் குழந்தையைப் போல் தரையில் விழுந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவரைப் பார்க்கவே அந்த இடத்தில் ஒரு கூட்டம் கூடிவிட்டது. அவருடைய துயரத்தை எண்ணி பலரும் தங்கள் நிலையை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். இருந்தும் பிரிவு எப்போதுமே இரு பக்க வேதனையை தரக்கூடியது. 

கணேஷ் கடைசி வரைக்கும் கேட்டுக் கொண்டே இருந்தான் 'அண்ணா ஏர்போர்ட்ல வச்சு அழுவியானா' என்று. 'அவர் எங்க அழப்போறாரு நல்ல சந்தோசமாத்தான் போவாரு' என்றான் வினோத். நானோ விமான நிலைய காட்சியை கற்பனை செய்துபார்க்கும் துணிவு கூட இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். 'சீனி சோகமாக இருக்காத சீனி. சந்தோசமா இரு. life has everything' என்று பத்து நாட்களுக்கு முன்பிருந்தே கூறத் தொடங்கியிருந்தார் கார்த்திக். என்னவானாலும் எங்கேயும் அழுதுவிடக் கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். பயணத்திற்கான நாள் நெருங்க நெருங்க இரவும் பகலும் வேகமாக செல்வதைப் போல் இருந்தது. இது தான் உலகின் கடைசி நாள், இனி ஆவதற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல் பறந்து கொண்டிருந்தது காலம். அதன் இழுப்பில் எந்தப் பக்கம் திரும்புவதெனத் தெரியாமல் காற்றில் அல்லாடும் இறகைப் போல் ஆடிக் கொண்டிருந்தது மனம்,  

ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்னும் மூணு நாள், இன்னும் ரெண்டு நாள், இன்னும் ஒரு நாள் என்பதையே கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். வெளிநாட்டு வாழ்க்கை அவ்வளவு எளிதானது இல்லை என்று யாரோ எப்போதோ என் அடி மனதில் பதிய வைத்துவிட்டார்கள் போல, மந்திரம் போல அதுவே கண்முன் நிழலாடிக் கொண்டிருந்தது. அலுவலகத்தின் கடைசி நாளின் போது கேக் வெட்டும் போது கண்ணைக் குளமாக்கிவிட்டார்கள். கேக் வெட்டக்கூடாது நான் வெட்டமாட்டேன் என்று மறுத்தும் நிகழ்ந்த சம்பவம் அது. ஆனால் அது எவ்வளவு பெரிய உபாயத்தை செய்தது என்பதை என்னால் சென்னை விமான நிலையத்தில் தான் புரிந்துகொள்ள முடிந்தது. சோகமோ கோவமோ உடைந்து வெளிப்பட்டுவிட்டால் போதும் பின் அதனை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். அதுதான் அங்கே நிகழ்ந்தது. 

- பறப்போம்


[பின்குறிப்பு : ஹோம்சிக்கில் இருந்து மீண்டுவிட்டேன் என்பது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான தகவல்.]

27 Feb 2016

Biட்டு

ஸ்டாலின் கொலைவெறியோடு என்னைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தபோது ஒட்டுமொத்த தேர்வறையும் காலாண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருந்தது. நான் மட்டும் ஸ்டாலினை நக்கலாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படிப்பார்க்க பார்க்க அவனுடைய கோவம் இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கையிலிந்த பேனாவை நீட்டி 'குத்திருவேன்' என்பது போல் சைகை செய்தான். சிரித்தேன். அவசரமாக என்னுடைய பேப்பரைக் கசக்கினான். அதற்கும் சிரித்தேன். பேனாவை உதறி கொஞ்சம் இங்க்கை பேப்பரின் மீது தெளித்தான். அது சிதறி பேப்பர் முழுவதும் பரவியது. அதற்கும் சிரித்தேன். அதற்கு அடுத்த நொடி அவன் கசக்கிய, அவன் மை ஊற்றிய அந்த பேப்பரை மெதுவாகக் கசக்கி எனக்கு அருகில் இருந்த ஜன்னலின் வழியே தூற எறிந்தேன். நான் பம்முவேன் என எதிர்பார்த்தவன் இதை எதிர்பார்க்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டான். முகத்தை சுருக்கி, சுழித்து பெஞ்சின் மீது ஓங்கிக் குத்தினான். அமைதியாக இருந்த அந்த ஒட்டுமொத்த தேர்வறையும் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்பியது. 

'என்னடே சத்தம்', தேர்வறையின் வாசலில் அப்போதுதான் வந்த டீயை உறிஞ்சிக்கொண்டே கேட்டார் வாத்தியார். ஒட்டுமொத்த வகுப்பறையும் ஸ்டாலினைப் பார்க்க, ஸ்டாலின் என்னைப் பார்க்க, 'ஒண்ணும் இல்ல சார்' என்றேன். அமைதியான அறையில் என்னுடைய குரல் மிகத் தெளிவாகக் கேட்டது. 'ஒண்ணுமில்ல' என்ற பதிலைக் கேட்டதும் மீண்டும் டீயை உறுஞ்சுவதில் சுவாரசியம் காட்டினார் அந்த வாத்தியார். இங்கே நடந்து கொண்டிருப்பது அத்தனைக்கும் காரணம் அவர் தான். அவர் தான் என்றால் அவர் மட்டும் இல்லை. ஆனால் அவரும் தான். ஸ்டாலின் என் மீது கோவப்பட்டதற்கு, மை தெளித்ததற்கு, பேப்பரை கசக்கியதற்கு. இது எதையும் அறியாமல் டீயை உறுஞ்சிக் கொண்டிருந்தார்.     

ஸ்டாலினுக்கும் எனக்கும் எந்த சம்மதமுமில்லை அவனும் நானும் பதினொன்றாம் வகுப்பு என்பதைத் தவிர. அவனுக்கும் எனக்கும் இன்றைக்கு இயற்பியல் தேர்வு என்பதைத் தவிர. ஒரே வித்தியாசம் அவன் சயின்ஸ் க்ரூப். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ். 

அரசாங்கப் பள்ளி என்பதால் பாதிநாள் வகுப்பு நடக்காது. அப்படி நடக்கும் மீதி நாட்களிலும் ஸ்டாலின் வந்திருக்க மாட்டான். இதற்கு முன் ஓரிருமுறை அவனைப் பார்த்திருக்கிறேன். குற்றாலம் போகும் வழியில் இருக்கும் சிந்தாமணி தான் அவனுடைய கிராமம். ஒருமுறை யானப்பாலம் பஸ் ஸ்டாப்பில் ரன்னிங்கில் ஏறியபோது புட் போர்டில் நின்று கொண்டிருந்த என் மீது மோதி என்னுடைய இடத்தை பறித்துக்கொண்டான் என்பதைத் தவிர அவன் மீது எனக்கு எந்தக் கோவமும் இல்லை. அப்போதே முறைத்தேன். அந்த தருணத்தில் அவன் என்னைக் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. கொசு யானையைப் பார்ப்பதைப் போல என்னை நினைத்திருக்கக் கூடும். 

ஸ்டாலின் முரடன். பார்ப்பதற்கு மட்டும் இல்லை நிஜமாகவே முரடன். அவனுக்கென்று ஒரு கூட்டம் உண்டு. அவனைச் சுற்றிவர, அவனுக்கு சேவகம் செய்ய, அவன் கண்ணைக் காட்டினால், காட்டிய இடத்தில் நிற்பவனை அடிக்க. அதனாலும் அவனை எனக்குத் தெரியும். அவனைப் பற்றிய பரபரப்பு எழும்போதெல்லாம் எவனையாவது ரத்தம் வர அடித்திருப்பான். ஆனால் அவனுக்கு என்னைத் தெரியாது. இப்போது தெரிந்துகொள்ள வேண்டிய அவசரத்தில், இருக்கிறான். மீண்டும் சிரித்துக் கொண்டேன். எப்போது வேண்டுமானாலும் அவன் என்னை அடிக்கலாம் என்பதற்கான வாய்ப்பின் பிரகாசம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. மேலும் என்னுடைய குழந்தை முகம் அவனை அதிகமாக தொந்தரவு செய்திருக்க வேண்டும். இந்த அப்பாவி முகம் அவனை நோக்கி கேவலமாக சிரிப்பதை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதற்காக என்னால் சிரிக்காமல் இருக்கவும் முடியவில்லை.  

அரசாங்கப்பள்ளி என்பதால் எதற்குமே ஒரு வரைமுறை கிடையாது. காட்டாற்று வெள்ளம் போல அதுஅது அதனதன் போக்கில் நடைபெறும். யார் எக்கேடு கெட்டாலும் வெள்ளம் தன் பாதையிலேயே போய்க்கொண்டிருக்கும். வெள்ளத்தோடு சேர்ந்து எல்லாமும் போய்க்கொண்டிருக்கும். அப்படித்தான் நாங்களும். எங்களுடைய அரசாங்கப்பள்ளி வாழ்க்கையும். அதிலும் மிகக்கண்டிப்பான ஒரு கிறிஸ்த்தவ பள்ளியில் படித்த எனக்கு இந்த சுதந்திரம் அலாதியாக இருந்தது. அல்லது அதீத சுதந்திரத்தைக் கொடுத்தது. விருப்பபட்டால் பள்ளிக்கூடம். வெறுப்பானால் பத்மம், பாக்கியலச்சுமி திரையரங்கம். அப்படி போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் தான் திடிரென காலாண்டுத் தேர்வு எட்டிப்பார்த்தது. முதல் இடைத்தேர்வு நடந்தது என்றாலும் நாங்கள் எழுதவில்லை. அவர்களும் கேட்கவில்லை. ஆனால் இந்த காலாண்டை எழுதியே ஆகவேண்டுமென உத்தரவு. அப்படித்தான் ஸ்டாலின் என்னருகில் வந்து அமர்ந்திருக்கிறான். 

வாத்தியார் வினாத்தாளுடன் தேர்வறைக்குள் நுழைந்த அடுத்த நொடி 'என்ன பத்தி கேள்விபட்ருப்பிய. எவனவன் கையில பிட்டு இருக்கோ இங்க வந்து குடுத்துருங்க. உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம்' என்றார். மிடுக்கான அந்த குரலைக் கேட்டதும் வகுப்பறையில் ஒரே சலசலப்பு. ஸ்டாலின் திரும்பி அவனுக்குப் பின்னால் இருந்தவனைப் பார்த்து எதோ சைகை செய்தான். ஓரிருவர் மட்டும் முன்னால் சென்று தங்களிடம் இருந்த பேப்பரை வீசிவிட்டு வந்தார்கள்.

'எனக்கு தெரியும் இன்னும் எப்டியும் பத்து பேராவது பிட்டு வச்சிருப்பியன்னு. கண்டுபிடிச்சேன் தொளிய உறிச்சிருவேன். மரியாதையா வந்திருங்க' என்றார். இப்போது ஸ்டாலின் மீண்டும் திரும்பி தனக்குப் பின் இருந்தவனைப் பார்த்தான். அவன் எழுந்து முன்னால் சென்றான். அவனைத் தொடர்ந்து இன்னும் சிலரும் தங்களிடம் இருந்த பிட்டை தியாகம் செய்தார்கள். நம்பிக்கை இல்லாத வாத்தியார் ஒவ்வொருவரின் அருகிலாக வந்தார். 

சிலருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும் இவனெல்லாம் பிட்டே அடிக்கத் தகுதியில்லாதவன், தெரியாதவன் அல்லது 'உறுதியா இவன்ட்ட பிட்டு இருக்காது' என்று, அப்படி ஒரு முகம் என்னுடையது. ஆனால் ஸ்டாலின் அப்படியே எதிர்மறை. அவனிடம் பிட்டே இல்லை என்றாலும் சோதித்துப் பார்க்கத் தூண்டும் முகம். நல்ல கருப்பு. அடர்த்தியான முகவெட்டு. கட்டுமஸ்தான தேகம். எப்போதும் எவரையும் கோபமாகவே பார்க்கும் சிறிய கண்கள். 

வாத்தியார் ஸ்டாலினை நெருங்கிய போது 'என்னடே' என்றார். 

'சார் பிட்டு இல்ல சார்' என்றான். 

'நெசமா' என்றார். 

'சத்தியமா' என்றான் கையை காற்றில் வீசி சத்தியம் செய்துகாட்டி.

'கண்டுபிடிச்சேன். தெரியும்லா' என்றார். 

'தெரியும் சார்' என்றான். 

அந்த தெரியும் சொல்லி முடிப்பதற்குள் சிரித்துவிட்டேன். அதுதான் பிரச்சனையே. ஒவ்வொருவரிடமும் வினாத்தாளை கொடுத்துவிட்டு ஒரு ஓரமாக வாத்தியார் உட்காரவும் ஸ்டாலின் என்னிடம் வம்பிழுக்கவும் மிகச்சரியாக இருந்தது. எழுத ஆரம்பித்த முதல் பேப்பரை இழுத்து கிழித்துவிட்டான். முறைத்தேன். 'மொறச்ச, மொகரக்க்கட்ட பேந்திரும்' என்பது போல் சைகை செய்தான். 'சார் காத்துல கிழிஞ்சிருச்சு, வேற பேப்பர் கொடுங்க' என்றேன். சலித்துக் கொண்டார் என்றாலும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. 

மேலும் பத்து நிமிடம் கடந்திருக்கும். காற்றில் அலையும் பேப்பர் சத்தத்தையும் தாண்டி வெளியில் இருந்து கேட்கும் சப்த்தங்கள் மிகத் துல்லியமாக கேட்டுக்கொண்டிருந்தன. இந்நேரத்தில்தான் ஒரு கசங்கிய காகிதம் என்னருகில் வந்து விழுந்தது. தலையை நிமிர்த்திப் பார்த்தேன். அது ஒரு பிட். ஸ்டாலின் தான் தூக்கிப் போட்டான். அதனை அப்படியே விட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்திருக்கலாம் தான். என்னுடைய கொழுப்பு அல்லது வீம்பு அதனை தூக்கி அவனருகிலேயே எறிந்தேன். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. ஏன் நானே எதிர்பார்க்கவில்லை அப்படிச் செய்வேன் என. மீண்டும் என்னருகில் தூக்கி வீசினான். மெல்ல அதனை பிரித்துப் பார்த்தேன். அன்றைய தேர்வுக்கு சற்றும் உபயோகமில்லாத ஒரு பிட். தேர்வறையே அமைதியாக இருக்க அவனைப் பார்த்து சிரித்தேன். ஏன் சிரிக்கிறேன் என்பதை புரிந்துகொண்ட அவனுடைய கோவம் இன்னும் அதிகமாவது தெரிந்தது. அவனுடைய கோவம் அதிகமாவது நல்லதில்லை என்றாலும் உள்ளுக்குள் ஒரு குதிரை என்னை எட்டி உதைத்துக் கொண்டே இருந்தது அவனிடம் வம்பிழுக்கும்படி. அந்த தாளை கசக்கி ஒரு பந்துபோலாக்கி ஜன்னல் வழியே வீசி எறிந்தேன். 

'இப்ப எனக்கு அந்த தாள் வேணும் போய் எடுத்துட்டு வா' என்றான். 'முடியாது' எனும்படி மண்டையை ஆட்டிட்டேன். பேனாவை எனக்கு மிக அருகில் வீசி பயமுறுத்தினான். 

பின்னால் இருந்து ஒரு கால் என்னை உதைத்தது. செல்வா தான். திரும்பிப் பார்த்தேன். 'அவன்கிட்ட வச்சிக்காத. அமைதியா இரு' என்பது போல் சைகை செய்தான் செல்வா. ஆனால் ஸ்டாலின் இதற்கு மேலும் என்னை அப்படியே விடுவான் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதற்காக இவனை இப்படியே விடவும் முடியாது. விட்டால் ஆபத்து. வளரவிடக்கூடாது என இன்னொரு குதிரை உதைக்க 'சார்' என்றேன். 'என்னடே' என்றார். ஒட்டுமொத்த தேர்வறையும் ஒரு நிமிடம் தலை தூக்கி என்னைப் பார்த்தது. 

'பேனா எழுத மாட்டேங்குது'. 

'அதுக்கு'. 

'பையில இன்னொன்னு இருக்கு', என்று கூறிவிட்டு வெளியில் சென்றேன். 

இல்லாத பையில் பேனாவைத் தேடாமல் தூர எறிந்த பிட்டை எடுத்துகொண்டு உள்ளே நுழைந்தேன். வாத்தியார் என்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. பெஞ்சில் அமரும் போது 'இருக்காடே' என்றார். 'எடுத்துட்டேன் சார்' என்றேன். 'பேப்பரு, பேனான்னு சின்னபயளுவாலவே இருக்கிய டே' என்றார். அதற்கும் சிரித்துக் கொண்டேன். 

அதேநேரத்தில் ஸ்டாலினுக்கு என்னைப் பற்றிய புரிதல் ஓரளவிற்கு வந்திருக்கும் என நினைக்கிறன். ஆச்சரியமாக என்னைப் பார்த்தான். கோபம் குறையாத ஆச்சரியம். அந்த ஆச்சரியத்தை ஒரு நிமிடத்தில் கலைத்துவிட்டான் அல்லது கலைத்துவிட்டேன். பிட்டை தூக்கி அவனிடம் வீசினேன். இதை எதிர்பார்க்காத அவன் கோபம் மீண்டும் தலைக்கேற, அவனருகில் விழுந்த பிட்டை எடுத்து ஜன்னலின் வழியாக தூர எறிந்தான். இனி நான் வெளியில் சென்றால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த பிரக்ஞையும் இல்லாமல் இல்லை. அதேநேரம் ஸ்டாலினின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அந்த ரவுடி பிம்பம் என்னை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே அவன் பிட்டடிக்கும் விதம் தான். 


பிட்டடிப்பது ஒரு கலை. பிட்டடிப்பவன் முகத்தில் எவ்விதமான உணர்ச்சிகளையும் வைத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக பயமோ அல்லது அதீத தன்னம்பிக்கையோ ஆகவே ஆகாது. தேர்வறைக்கு ஒன்று சீக்கிரமாக வரவேண்டும் அல்லது தாமதமாக. கூட்டத்தோடு கூட்டமாக சென்றால் மாட்டிக்கொள்வோம். மாட்டிகொள்வோம் என்று பட்சி கூறினால் எவ்வித கருணையும் இல்லாமல் பிட்டை தூக்கி தூர எறிந்துவிட வேண்டும். பிட்டை விட பட்சி முக்கியம். இவை எல்லாவற்றையும் மீறி பிட்டை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். அதற்கென பிரத்தயேகமான சட்டைகளை உருவாக்க வேண்டும். கூடவே நமகேற்ற நண்பர்களையும் உருவாக்க வேண்டும். மிகமுக்கியமான ஒன்று நம்மோடு பிட்டை சுமந்து வரும் நண்பனும் தைரியமனவனாக இருக்க வேண்டும். எந்த தருணத்திலும் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்ற நம்பிக்கை உடையவனாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மீறி ஒருவேளை மாட்டிகொண்டால் நமக்கும் அவனுக்கும் சம்மந்தமே இல்லாதவன் போல் நடந்துகொள்ள வேண்டும். 

அப்படி மாட்டிக்கொண்டால் 'வேற எவன்ட்டல்லாம் பிட்டு இருக்கு' என்பது தான் வாத்தியாரின் அடுத்த கேள்வியாக இருக்கும். பயத்தில், அவருடைய மிரட்டும் தொணியில் சிக்கிகொண்டவன் நம்மை பலியாடாக்கிவிடுவான். அவன் மீதிருந்த கோபம் முழுவதும் இப்போது நம் மீது திரும்பி இருக்கும். அதற்காகவே பித அடிக்கும் போது ஒன்று கூட்டு சேர்த்துக்கொள்ளக் கூடாது அல்லது தெளிவான சேர்க்கையாக இருக்க வேண்டும். சிலர் எல்லாம் பிட்டடிப்பதைப் பார்த்தால் சிரிப்பு சிரிப்பாக வரும். பிட்டடித்து முடிப்பதற்குள் ஆளையே காலி செய்திருப்பார்கள். 

பிட்டடிப்பதற்கென சில குறிப்பிட்ட தருணங்கள் இருக்கின்றன. அவசரம் அறவே கூடாது. வாத்தியார் எனப்படுபவர்கள் வேவு பார்க்கும் கழுகு போல. எப்போ பிட்டை எடுப்போம் எப்போ கழுத்தைப் பிடித்து தூக்கலாம் என வேவு பார்க்கும் கழுகு. தேர்வு ஆரம்பித்த சில நிமிடங்களுக்கு நம்மையே சுற்றி சுற்றி வரும் கழுகுக்கு இரையாகி விடக்கூடாது. அதேநேரம் கழுக்குக்கும் ஓய்வு தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது ஓய்வுக்கு போகும் வரை நமக்கு தெரிந்த எல்லாவற்றையும் எழுத வேண்டும். தெரியாவிட்டாலும் எதையாவது எழுத வேண்டும். முடிந்தளவு அதிகமாக பேப்பர் வாங்க வேண்டும். பேப்பர் வாங்கும் போது ஒருவித பவ்யமான பாவனை இருக்க வேண்டும். எக்காலத்திலும் சந்தேகம் வரக்கூடாத பாவனை. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான விசயம் பிட்டை பார்த்து எழுதும் போது வரக்கூடிய நடுக்கம் அறவே கூடாது. அதுவே ஆளை காலி செய்துவிடும். இத்தனைக்கும் திறமை இல்லாதவன் தான் வாத்தியார் கேட்ட மாத்திரத்தில் தங்களிடம் இருக்கும் பிட் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு வருபவர்கள். ஸ்டாலினைப் போன்றவர்கள். பிட்டு கூட அடிக்கத் தெரியல, இவன்லாம் பெரிய ரவுடியா என்ற எண்ணம் தான் அவன் மீதான பிம்பத்தை சிதைத்தது. எத்தனுக்கு எத்தன் எங்காவது ஒளிந்து கொண்டிருப்பான். என்னைப் போல. 

ஸ்டாலினின் கோவம் உச்சத்திற்கு சென்ற போது அவனிடம் ஒரு பிட்டை தூக்கி எறிந்தேன். பதட்டமடைந்தவன். அவசர அவசரமாக அதைப் பிரித்தான். அவன் முகத்தில் சந்தோசம். பதினாறு மதிப்பெண் வினாவில் ரெண்டு ஆ. எழுது  என்றவாறு தலையாட்டினேன். 

அதுவொரு மைக்ரோ பிட் காலம். உள்ளங்கை நெல்லிக்கனி போல. தென்காசி புது பஸ்டாண்டில் ஒரு ஜெராக்ஸ் கடையில் மைக்ரோ பிட் எடுத்துக் கொடுப்பதாகக் கூறி செல்வாதான் அழைத்துச் சென்றான். செல்வா என் ரகம். என்னவானாலும் மாட்டிக்கொள்ளமாட்டான். மாட்டினாலும் மாட்டிவிட மாட்டான். என்ன ஒரே ஒரு பிரச்சனை என்றால் தேர்வறைக்கு பிட்டை எடுத்துவர மாட்டான். அப்படி எடுத்துவந்தால் மாட்டிக்கொள்ளும் ராசி. அதனால் எப்போதுமே பிட் எடுத்துவரும் வேலை மட்டும் என்னுடையது. மேலும் நானும் அவனும் சேர்ந்து செய்த எந்தவொரு ஆப்பரேஷனும் தோற்றது இல்லை. பெயர் வரிசைப்படி எனக்குப் பின்னால் வரும் வரம் வாய்த்தவன் என்பதால் இன்னும் வசதி. 

ஸ்டாலின் அந்த பிட்டை எழுதிமுடித்த அடுத்த நிமிடம் 'என்ன செய்ய' என்பது போல் பிட்டை என்னிடம் நீட்டினான். எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த செல்வாவை நோக்கி கைய நீட்ட அடுத்த சில நொடிகளில் அந்த துண்டு காகிதம் செல்வா கைகளுக்கு மாறியிருந்தது. 'வேற ஏதாச்சும் இருக்கா' என்றான். இப்போது சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தான். தேர்வறையில் கிடைக்ககூடிய மிகபெரிய சந்தோசம் என்ன தெரியுமா பிட் எதுவுமே இல்லாத கையறு நிலையில் யாராவது பிட்டு கொடுத்து உதவுவதுதான். அதிலும் வழக்கமாக பெயில் ஆகும் கூட்டம் என்றால் அவர்களுடைய சந்தோசத்திற்கு அளவே இல்லை. என்னிடம் இருந்த இன்னொரு பிட்டை அவனிடம் நீட்டினேன். அவனுடைய ஆச்சரியத்தை அந்த சிறிய கண்களில் வைத்துக்கொள்ள முடியவில்லை. மெல்ல அவனை என்னிடம் அழைத்தேன் 'என்ன' என்றான். மிக மெதுவாக அவனிடம் 'பிட் கொண்டு வாறது பெருசு இல்ல, என்ன கேள்வி வரும்ன்னு யோசிச்சு கொண்டு வரணும்' என்றேன். என்ன சொல்வதெனத் தெரியாமல் வெடுக்கென திரும்பிகொண்டான். 

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பேப்பரை கட்டிவிட்டு அங்கிருந்து நகர முயல 'முடிச்சிட்டியா' என்றான். 'நாப்பது வந்துரும் போதும்' என்றேன். ஒருநிமிடம் மேலும் கீழும் பார்த்தவன், 'என் பேரு ஸ்டாலின்' என்றான். முதல்முறையாக என்னைப் பார்த்து சிரித்தான். 'தெரியும். செல்வாகிட்ட இன்னும் ரெண்டு பிட்டு கொடுத்திருக்கேன். வேணும்ன்னா வாங்கிக்க' என்றேன். 'ம்ம்' என்றான் ஆர்வமாக. எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த விரோதம் மறைந்து ஒருவித சிநேகம் வளர்ந்திருந்தது. இதைத்தான் அந்த குதிரை முதலிலேயே கூறியது. 

பேப்பரை வாத்தியாரின் கையில் கொடுத்துவிட்டு வெளியில் நகர அதிலிருந்து சில நிமிடங்களில் செல்வா வந்தான். செல்வா வந்த சில நிமிடத்தில் ஸ்டாலினும் வந்தான். வந்தவன் நேரே என்னருகில் வந்து கையைப்பிடித்து குலுக்கி 'நான் மாட்டிக்காம பிட்டச்ச மொத பரீச்ச இதான்' என்றான். 'நிச்சயம் பாசாயிருவேன்' என்றான். அவனிடம் இருந்த சந்தோசம் அலாதியானது. 'இனி நாம எல்லாரும் பிரண்ட்ஸ்' என்ற உறுதி அவனிடம் இருந்தது. அதுதான் எனக்கும் தேவை. அதேநேரம் இவனிடம் அதிகம் வைத்துகொள்ளக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இல்லை. செல்வா அவசரமாக கையைப் பிடித்து இழுத்தான்.   


'போலாம் செல்வா' என்றபடி நானும் செல்வாவும் அங்கிருந்து நகர முயல, 'மக்கா' என்றான். 'என்ன மக்கா' என்றேன். செல்வாவை நோக்கி கைகாட்டி 'நீ எப்ப அவங்கிட்ட பிட்ட கொடுத்த, நான் பாக்கவேயில்லையே' என்றான். நான் பதில் சொல்வதற்குள் செல்வா அவனை நோக்கி, 'ஏன்டே அவன் எப்பம் பிட்டடிச்சான்னே உன்னால கண்டுபிடிக்க முடியல. இதுல அவன் எப்ப பிட்ட மாத்தினான்னு மட்டும் உனக்கு தெரியவா போகுது' என்றான். பிட்டடிப்பது வாத்தியாருக்கு மட்டுமில்லை அருகில் இருப்பவனுக்குக் கூடத் தெரியக்கூடாது என்பதெல்லாம் அனுபவ விதி. ஆயுள் ரேகை. 

15 Feb 2016

நாயும் ஆனவன் - சிறுகதை

பூனை வளர்த்து இருந்தீங்கன்னா ஒருவிசயத்த கவனிக்க முடியும். பூனைங்க அதீத பாதுகாப்பு உணர்வு கொண்டது. எவ்வளவு செல்லம் கொடுத்து வளர்த்தாலும் அதோட அடியாழத்துல அழுத்தமா பதிந்து போன எச்சரிக்கை உணர்வு அத தொந்தரவு பண்ணிட்டே இருக்கும். பூனைய நெருங்குறது அவ்வளவு சுலபம் இல்லை. அதுக்கு அசாத்தியப் பொறுமை வேணும். பூனை ஒரு செல்லக்கிறுக்குன்னு கூட சொல்லலாம். ஆனா நாய் அப்படியில்லை. வெகுளி. ஈஸியா நம்பிரும். ஒருமுறை பழகினா அடுத்தமுறை நாம அடிச்சாலும் வாலட்டிட்டே பக்கத்தில வந்து கொழையும். இதையெல்லாம் நான் தெரிஞ்சிசிக்க காரணமா இருந்தது சென்னையும் பாலாஜியும் தான். சென்னை வந்த பின்னாடி தான் நாய்ங்கள அதிகமா கவனிக்க ஆரம்பிச்சேன். அதுக்கு ஆரம்பப்புள்ளி வச்சது கூட பாலாஜிதான். 

திருவள்ளூர்ல நாங்க குடியிருந்த வீட்டுக்கு எதிர்த்த வீட்டுப் பையன் பாலாஜி. ரொம்ப சின்ன பையன். ஒரு நாய் வளர்த்தான். தெருநாய்தான். ஆனாலும் அது எப்பவும் அவன் வீட்டில தான் இருக்கும். அவனையே சுத்தி சுத்தி வரும். அவன மாதிரியே அதுவும் ஒரு குட்டி. கொஞ்சம் வளர்ந்த குட்டி.

பாலாஜியோட குடும்பம் கொஞ்சம் வித்தியாசமானது. வித்தியாசமானதுன்னு சொல்றத நீங்க எந்தளவுக்கு புரிஞ்சிப்பீங்களோ அத விட வித்தியாசமானது. காரணம் அவன் அம்மாவுக்கு கொஞ்சம் மனவளர்ச்சி குறைவு. 

கழுத்து வரைக்கும் வளர்ந்த முடி. எப்போதும் எதையோ தேடிட்டு இருக்கிற கண்ணுன்னு பார்க்கவே வித்தியாசமா இருப்பாங்க. களங்கமில்லாத முகம்ன்னாலும் கலங்கிப் போன கண்கள். சில சமயம் அதில இருந்து கண்ணீர் வந்துட்டே இருக்கும். எத நினைச்சு அழுறாங்கன்னு யாருக்கும் தெரியாது. 'அது அப்டிதான்னா, வுடுன்னா' என்று கூறிவிட்டு கடந்துவிடுவான் பாலாஜி. 

காலையில சூரியன் உதிக்கும் போது தெருவில் வந்து உட்கார்ந்தா ராத்திரி அவன் அப்பா வார வரைக்கும் அவன் வீட்டு பக்கத்தில் இருக்கிற கரண்ட் கம்பியவே வெறிச்சு பார்திட்டு உட்கார்ந்து இருக்கும் அவன் அம்மா.  அந்த வழியா கடந்து போற சின்ன குழந்தைங்க மொத்தமும் பயந்து அழுங்க. இதனால ஏகப்பட்ட பிரச்சன. 'சொந்த வூடா இருக்காங்காட்டி தப்பிச்சோம். இல்லாட்டி என்னிக்கோ தொர்த்தி விட்ருப்பானுங்கோ' என்பான் பாலாஜி. அக்கம்பக்கத்து ஏச்சு பேச்சுகளுக்கு பயந்தே ராத்திரியில அவன் அம்மாவ வீட்டு உள்ள போட்டு பூட்டிருவாரு பாலாஜியோட அப்பா. 'வாழ்ந்து கெட்ட குடும்பம். இப்போ கெட்டும் வாழ்ந்துட்டிருக்கு' ஹவுஸ் ஓனர் சொன்னாரு. 

பாலாஜி அப்பா ஆட்டோ டிரைவர். காலையில எந்திச்சதும் ஆட்டோவ குளிப்பாட்டி, பாலாஜி அம்மாவ குளிப்பாட்டி, பாலாஜிய குளிப்பாட்டி அப்புறம்தான் வண்டிக்குப் போவாரு. தினமும் காலையில மறக்காம ரெண்டு பாக்கெட் டைகர் பிஸ்கட் வாங்கிக்கொடுப்பாரு. ஒண்ண பாலாஜி சாப்பிட்டு இன்னொண்ண நாய்க்கு கொடுப்பான். அவன் நாய்க்கு பேரு கிடையாது. அவன் மூடப்பொறுத்து அதுக்கு பேரு கிடைக்கும் இல்ல அடி கிடைக்கும். 

'டே டே அத அடிக்காதடா பாவம்' என்று அம்மா கத்தும் போதெல்லாம் 'உனக்கு தெரியாதுக்கா அது இன்னா செஞ்சதுன்னு அது கையிலயே கேளு' என்பான். 'நீ இன்னா செஞ்ச'ன்னு எங்க அம்மாவால எப்படி நாயாண்ட கேக்க முடியும். அம்மா தான் தலையில அடிச்சிக்கும். 

பாலாஜி நாலாங்கிளாஸ் படிக்கிறான். பாதிநாள் ஸ்கூலுக்குப் போகமாட்டான். காரணம் கேட்டா 'பசங்களுக்கு என்ன புடிக்கலக்கா' என்பான். 'உன்ன வேற ஸ்கூல்ல சேர்த்து விடுறேண்டா'ன்னு அம்மா கேட்டால் 'அந்தப் பசங்களுக்கும் என்ன புடிக்கதுக்கா' என்பான். 'ஏண்டா' என்றால் 'என் அம்மாவ திட்டுவாங்கோ லூசும்பாங்கோ, எனக்கு புடிக்காது. சண்ட போடுவேன். அம்மா பாவம்க்கா அது கொழந்த' என்பான். சில சமயம் அழுவான். அதுக்கு அப்புறம் அம்மா பள்ளிக்கூடம் குறித்து கேட்பதையே நிறுத்திட்டா.     

இந்த வீட்டுக்கு வந்து ஒரு மாசம் ஆச்சு. பாலாஜியும் அம்மாவும் தாயும் புள்ளயுமா ஆகிட்டாங்க. சோறு ஆக்குனா அவனுக்கும் சேர்த்து ஆக்கணும். 'க்கா நாய்க்கு கொடேன்' என்பான். 'ன்னோவ் இஸ்கூலு முடிச்சு வரும் போது டைகர் பிஸ்கட் வாங்கினு வருவியா, நாய்க்கு போடணும்' என்பான். 'டே அவன் இஸ்கூலு படிக்கில, காலேஜ் போறான்' என்று அம்மா கூறினால் 'அக்காங் பெரிய இஸ்கூலு. எனக்கு தெரியுமே. ஆவ்டில தான படிக்கிற. இங்க மீரா தியேட்டராண்ட ஒன்னு கீது. உனக்கு அங்க சீட் கிடைக்கலியா. எதுக்கு அவ்ளோ தொல போற' என்பான். பேசிட்டே இருப்பான். 'ன்னா டைகர் பிஸ்கட் வாங்கினுவான்னா' என்றான்.

அவன் நச்சரிப்பு தாளாமால் அம்மா டைகர் பிஸ்கட் வாங்கிக் கொடுக்க 'க்கா என் நாய் பொம்பளிங்கோ கிட்ட வாங்கி துன்னாது, ன்னா நீ கொடுன்னா' என்றான். அம்மாக்கு ஏக கடுப்பு. ஆனால் பாலாஜி சொன்னதும் சரிதான். வீட்டு வாசலில் பொம்பளைங்க சாப்பாடு வச்சா மோந்து கூட பாக்காது. ஆம்பளைங்க நல்ல கடிச்சு தின்ன எலும்பு துண்டு போட்டா வால ஆட்டினு போவும். 'இது இன்னா மேரி நாயின்னு எனக்கே தெரியலக்கா' என்பான்.  

சில சமயங்களில் 'இது எங்கம்மா மேரிக்கா. இன்னா நினைக்குதுன்ன்னு யாருக்கும் தெரியாது' என்பான். அதைக் கொஞ்ச ஆரம்பித்தான் என்றால் அந்த காட்சியைப் பார்ப்பவர்களுக்கு ரெண்டு பேரும் சரசம் செய்றா மாறி இருக்கும். இல்ல கொடுமைப்படுத்ற மாறி. அவன் இல்லாட்டா அந்த நாய் நிலம என்னாகுமோ. அவன் நாய்கூட வெளயாடுறத பார்த்துட்டு அம்மா அப்பப்போ நாய் கத சொல்வா. 'எங்க அய்யா கூட நாய் வளத்தாறு. இவரு தெருவுக்கு வார சத்தம் கேட்டாபோதும், கொலைக்க ஆரம்பிச்சிரும். ஊருக்கு கிளம்புனா விடாது. அதுக்கு தெரியும் அய்யா வயக்காட்டுக்கு போறாரா இல்ல ஊருக்கு போறாரான்னு. ரொம்ப பாசமா இருந்துச்சு. அவருன்னா அதுக்கு உசுரு. அவரு செத்துப் போன ரெண்டாவது வாரமே நாயும் செத்துப் போச்சு' என்று கூறிவிட்டு ஒரு பெருமூச்சுவிட்டு 'அந்த ஒரு புள்ள போதும்டா நம்ம வீட்டுக்குன்னு, அடுத்த நாய் வாங்க சம்மதிக்கவே இல்லை உன் பாட்டி' என்று தன்னிடம் இருந்த ஒரே ஒரு நாய்க்கதையை கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். 

பொதுவாவே எனக்கு நாய் மேல பெருசா விருப்பம் இருந்தது இல்ல, அதே நேரம் வெறுப்பும் இல்ல. எனக்கும் நான் வசிக்கிற தெருவுல இருக்கிற நாய்ங்களுக்கும் ஒரு மானசீகமான உறவு இருந்துட்டே இருக்கும். எந்த தெரு நாய்ங்க என்னை தொறத்தினாலும் என்னோட தெருநாய்ங்க தொரதினதே கிடையாது.  ஆனா மத்த தெருநாய்ங்க அப்டி இல்லையே. அதுனால பொதுவா நாய்ன்னா எனக்கு ஆவாது. அதிலயும் கற்பக விநாயகர் கோவில் சந்து வழியா போனா தொரத்திற அந்த இரண்டு கருப்புநாய்ங்களும் எனக்கும் சுத்தமா ஆகாது. எதோ பொறு ஜென்மத்து பகை எனக்கும் அதுங்களுக்கும் இருக்கு. என்னைப் பார்த்து கொறைக்கும் போது அதுங்க பல்லு ரெண்டும் ஒரு வேட்டை நாய் மாதிரி முன்னாடி துருத்திகிட்டு நிக்கும். பார்க்கவே பயங்கரமா இருக்கும். அதுங்க செய்ற தொந்தரவு தாங்கல. கற்பக விநாயகர் கோவில் சந்து ரொம்ப சின்ன சந்து. அது வழியா போகும் போது அந்த நாய்ங்ககிட்ட மாட்டினா தப்பிச்சு வாறது பெரும்பாடு. ஆனாலும் திருவள்ளூர் பஸ்ஸ்டாண்ட்க்கு அந்த வழியாதான் போயாகனும். வேற ஒரு வழி இருக்கு. ஆனா அது நாலு தெரு சுத்தி போகும். அந்த வழியா போனா காலேஜ்க்குப் போற ஏழு இருவது ரயிலப் புடிக்க முடியாது. லேட் ஆகிரும். இந்த விசயத்த அம்மாட்ட புலம்பிட்டு இருந்தப்ப பாலாஜி கேட்டுட்டான். 

'ன்னா இன்னா பண்ணு, நீ அந்த வயியா போ, நானும் நாயும் வாரோம். அப்புறம் சீனு தான்' என்றான்

'ஏய் ன்னா வெளாடுரியா. அடிங்' என்றேன் ஏற்கனவே இருந்த கடுப்பில்.

'த்தா சொன்னா புத்தி வாராதுனா உனக்கு' என்று நாக்கை மடக்கிக் காட்டிவிட்டு ஓடிவிட்டான். 

பாலாஜி பார்ப்பதுக்கு தான் சின்ன பையன். செயலும் பேச்சும் வயதுக்கு மீறி இருக்கும். அம்மா ஒருமுறை சொன்னாள் 'நம்மால படிக்க வைக்க முடிஞ்சதுன்னா இவன நல்லா படிக்க வைக்கனும் டா' என்று. எனக்கும் அந்த எண்ணம் அவ்வப்போது வந்து போகாமல் இல்லை.

அடுத்தநாள் காலை காலேஜ் கிளம்பி தயராக நின்னபோது 'ன்னா நீ முன்னாடி போ வாறன்' என்றான். அருகே நாய் டைகர் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. 'அதான் சொல்றான் இல்ல, போ' என்றாள் அம்மா. 

காலை ஏழுமணி வெயிலில் வியர்வை வழிய விநாயகர் கோவில் சந்தில் திரும்பினேன். சைக்கிள் முழுதாக கூட நுழையல. என்னப் பார்த்த அடுத்த நொடி ரெண்டு கருப்பு நாயும் காட்டுக் கத்து கத்த ஆரம்பிச்சது. அடுத்த நொடி ஒரு நாய் முன்னாடி, இன்னொரு நாய் பின்னாடின்னு என்ன சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சது. தினமும் காலையில இதே நிலைமைதான் என்றாலும், யாராவது துணைக்கு வருவாங்க, அவங்க கூட அப்படியே போயிருவேன். இன்னைக்குப் பார்க்க அந்த சந்தே காலியா இருந்தது. 'அடேய் இப்படி கோர்த்து விட்டுட்டுடியேடா' என உள்ளுக்குள் கருவ, சினிமாவில் கதாநாயகன் ஓடிவருவதைப் போல பாலாஜியும் அவனுக்கு முன்னால் நாயும் ஓடி வந்தார்கள். அப்போவரைக்கும் கருப்புநிற நாய்தான் பலசாலின்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இந்த குட்டிநாய் அந்த ரெண்டு கருப்பு நாய்களையும் தொம்சம் செய்ய ஆரம்பிச்சது. சண்டையைப் பார்க்க சின்ன கூட்டமே கூடுனது. 'பாத்துனே நிக்காத, இஸ்கூலுக்கு நேரமாகுதுல. நீ கிளம்பு' என்று விரட்டினான். என்னை ஆணையிட்டுத் தொரத்தும் எஜமானன் போல. அல்லது அந்த இடத்தின் கதாநாயகன் போல. காலையில் நிகழ்ந்த அந்த காட்சியை மறக்கவே வெகுநேரம் தேவைப்பட்டது.  நாயும் நாய்களும் பாலாஜியும் உள்ளுக்குள் வந்து வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.  

அதே தினம் சாயங்காலம் நான் எப்போ வருவேன் என காத்திருந்தவன் போல, நான் வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி அவனும் வந்தான். வந்தவன் 'ன்னா நாய்க்கு உன்னப் புடிச்சுப் போச்சுனா' என்றான்

'என்னடா சொல்ற' 

'ஆமான்னா அதுக்கு உன்ன புடிச்சு போச்சு'

'எப்படிடா சொல்ற'

'அது என்கிட்ட சொல்லுச்சு'

'ம்மா இவன கொஞ்சம் என்னான்னு கேளு, சும்மா நொய்யு நொய்யுன்னு' 

'க்கா அண்ணா கைல சொல்லுக்கா, நாய்க்கு அண்ணாவ புடிச்சு போச்சுன்னு'

'நீ தான் ஒத்துகோயேண்டா' அம்மா பாலாஜிக்கு சப்போர்ட் செய்தாள்.

'ம்மா உனக்கும் அவன் கூட சேர்ந்து என்னவோ ஆயிருச்சு' 

'இன்னிக்கு காலில என்னா சண்ட தெரியுமாக்கா, நம்ம நாய் வுடலியே. இனி அண்ணா அந்த தெருவாண்ட போன ரெண்டு நாயும் சாலாம் வெக்கும் பாரு' சொல்லிவிட்டு சாலாம் வைத்துக் காண்பித்தான். 

'நூறுவாட்டி சொல்லிட்டாடா, வேற எதுனா சொல்லேன்' அம்மா சிரித்தாள். அத்தனை சொந்தங்களையும் ஊரில் விட்டுட்டு இவ்ளோ தூரம் தள்ளி இருக்கும் திருவள்ளூருக்கு வர அம்மாவுக்கு மனசே இல்ல. வந்த மொதவாரம் முழுக்க பித்துப்பிடிச்சா மாறி இருந்தா. அவளுக்கு ஒரே துணை, பொழுதுபோக்கு பாலாஜிதான். அவன் வந்தபின் எனக்கு கடைக்குப் போக வேண்டிய வேலையும் குறைந்துவிட்டது. அதையும் அவனி பார்த்துக் கொண்டான்.  

'க்கா ஈரோக்கா நம்ம நாயி. ஈரோ' என்றான். 

'ஆமாடா ஈரோதாண்டா'  

'ன்னோவ் ஒரு ஹெல்ப் பண்ணுணா'

'சொல்லுடா'

'நான் செத்து போயிட்டா நாய பாத்துபியானா' எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக கேட்டான்., அம்மாதான் பதறிவிட்டாள்.

'யேய் இன்னா பேச்சு பேசுற, வெளக்கு பொறுத்தின வீட்டில சாவு அது இதுன்னு' அம்மா அவனை அடிக்க கையை ஓங்க 

'போன மாசம் எங்க ஆயா கூடத்தான் பக்கெட்டு ஒடச்சது, அதுக்கு இன்னா பண்ண முடியும்' என்றான் விவரம் போதாமல்.

'புள்ள மாதிரியாடா பேசுற. கொஞ்சமாச்சும் கொழந்ததனம் இருக்கா உன்கிட்ட' அம்மா பாலாஜிகூட பேசிப்பேசியே சென்னை பாஷை பேச ஆரம்பித்திருந்தாள். விட்டால் திருநவேலி எந்தப் பக்கம் இருக்கு என்று கேட்டாலும் கேட்பாள் போல. 

'ன்னோவ் சொல்லுனா, நாய பார்த்துபியா' 

'அவன் பாக்காட்டா நான் பார்த்துகிறேன்டா, டெய்லி ஒரு டைகர் பிஸ்கட் போடணும் அவ்ளோதான' 

'க்கோவ் என் நாய் பொம்பள கையால துன்னாதுன்னு உனக்கு தெரியாது'

'போடா உனக்கு போய் பேசுனம்பாரு. என்ன சொல்லணும்'

'உன்ன யாரு கேட்டா, நீ கம்ம்னு இரு. ன்னோவ் சொல்லுனா நாய பார்த்துப்பியா' இருவரும் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம். 

வெளியே பாலாஜி அப்பாவின் குரல் கேட்க 'ப்பா இரு வாறன்' என்று கூறிபடி ஓடினான். ஓடின கொஞ்ச நேரத்தில் 'க்கா க்கா க்கா உடனே வா, உடனே வா' என்று பாலாஜி அலறும் குரல் கேட்டது. எங்கள் வீடு, ஹவுஸ் ஓனர் வீட்டிற்கு பின்னால் இருப்பதால் அவன் குரல் மட்டும்தான் கேட்டது. அம்மாவுக்கும் எனக்கும் அல்லு இல்லை. 'என்னாச்சு என்னாச்சு' கத்திகொண்டே ஓடினாள் அம்மா. கூடவே நானும். 

முகம் நிறைய சந்தோசத்தோடும், மகிழ்ச்சியோடும் ஒருமாதிரி படபடப்போடும் துள்ளிகொண்டிருந்தான் பாலாஜி. குதித்தான். மிதந்தான். அவன் அப்பாவுக்கு அதற்குமேல சந்தோசம். அவர்கள் குடும்பம் அப்படி இருந்தது நாங்கள் பார்த்ததே இல்லை. எப்போதும் சூனியம் பிடித்த குடும்பம் போல் இருக்கும். வீடே இருளடைந்து கிடக்கும். அவர்கள் வீட்டைப் பார்த்தால் அந்த வீட்டின் சோகம் நம்மீதும் அப்பிக் கொள்ளும். அப்படி ஒரு ராசி கொண்ட வீடு அது. அப்படியிருக்க இவர்கள் இருவரின் செயலும் புதிராக இருந்தது. 

'ன்னாடா எதுக்கு கத்துன' என்றாள் அம்மா. அவன் போட்ட கூச்சலில் மொத்த தெருவும் வீதிக்கு வந்திருந்தது. 


'க்கா அங்க பாருக்கா' என்றான் பாலாஜி. சந்தோசத்தில் கண்ணீர் விட்டுகொண்டிருந்தான். அவன் முகத்தில் முதன்முறையாக குழந்தைத்தனம் வந்திருந்தது. அவன் காட்டிய திசையில் சற்று தள்ளி நாய் டைகர் பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. நாய் சாப்பிடுவதற்காக அடுத்த பிஸ்கட்டை நீட்டிக்கொண்டிருந்தாள் பாலாஜியின் அம்மா. அவள் கொடுத்த அடுத்த பிஸ்கட்டை வாங்காமல் அவளின் காலை நக்கத் தொடங்கியது அந்த நாய்குட்டி இதுவரைக்கும் அவர்கள் அறிந்திருக்காத ஒரு புதிய விடியலின் தொடக்கத்திற்காக.

12 Feb 2016

மனிதன் எனும் கொலை மிருகம்

மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல் என்கிறார் ஜி.நாகராஜன். எனக்கென்னவோ நாளாக நாளாக, அறிவும் அவனைச் சுற்றிய உலகமும் விரிய விரிய அவனொரு கொலை மிருகமாக மாறிவிட்டானோ என ஐயமாக இருக்கிறது. தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் ஈவிரக்கில்லாமல் வெட்டி வீழ்த்திவிட்டு, தான் மட்டுமே தனி ராஜாங்கம் நடத்த தயாராகிக் கொண்டிருக்கும் மனிதனை கொலை மிருகமாக அடையாளப்படுத்தாமல் எப்படி ஜீவகாருண்ய சுடராக போற்ற முடியும். கால ஓட்டத்தில் பிற ஜீவன்களில் இருந்து தன்னைத் தனித்து உயர்த்தி ஆறறிவு வாய்ந்தவன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் அவன் செய்யும் எல்லா செயல்களையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

எல்லாருக்கும் சமமாகத்தான் எல்லாவற்றையும் பங்கிட்டுக் கொடுத்திருக்கிறது இயற்கை. ஆனால் மனிதன் மட்டும் தன் தேவையையும் மீறி தனக்குத் தேவையானவற்றை இயற்கையிடம் இருந்து பறித்துக் கொள்கிறானோ எனத் தோன்றுகிறது. ஆமை புகுந்த வீடு உருப்படாது என்று கற்பிதம் செய்திருக்கும் மனிதன்தான், தான் புகுந்த எல்லா இடங்களையும் நாசம் செய்து கொண்டிருக்கிறான். தெரிந்தும் தெரியாமலும். புரிந்தும் புரியாமலும். 

காற்றை மாசுபடுத்தி, குடிநீரை சாக்கடையாக்கி, சோலைகளை இல்லாமல் ஆக்கி, உண்ணும் உணவில் எல்லாம் பக்க விளைவுகளை உருவாக்கிவிட்டு யார் வாழ்வதற்காக இந்த பூமியை கட்டமைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவனும் அவன் இனமும் தான் கூற வேண்டும். 


நேற்றைக்கு மதியம் தென்காசியில் இருந்து இலத்தூர் சென்றுவிட்டு அங்கிருந்து இலஞ்சி வழியாக குற்றாலம் செல்லும் பாதையில் தான் சில மோசமான கொலைகளைப் பார்க்க நேரிட்டது. அதுதான் இந்த பதிவுக்கான வித்தும் கூட. நூற்றாண்டு காலமாக எவ்வித தொந்தரவும் இல்லாமல் நன்கு வளர்ந்து செழித்து வளர்ந்த மரங்கள் சாலை முழுவதும் வெட்டுப்பட்டுக் கிடப்பதைக் காண நேரிட்டால் எப்படி இருக்கும் உங்களுக்கு. அப்படியொரு நிலையில் அவற்றைப் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர முடியவில்லை எனக்கு. ஒவ்வொன்றும் வயதில் மூத்த பெரிய பெரிய மரங்கள். அதுநாள் வரைக்கும் பல பறவைகளுக்கு இடம் கொடுத்த உறைவிடங்கள். பல பாதாசரிகளுக்கு துணையாக நின்ற அரண்கள். நொடிபொழுதில் உயிரை இழந்து வீழ்த்தபட்டுக் கிடக்கின்றன. 


பொதிகை மலையாடிவாரத்தில் இருக்கும் தென்காசியில் இருந்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும் சாலை முழுவதும் நிழல் நிரம்பி இருக்கும் மரங்களைக் கடந்து செல்ல முடியும். ஊரைச் சுற்றிலும் அவ்வளவு மரங்கள் வளர்ந்து கிடக்கின்றன. கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என எந்த திசை நோக்கி நகர்ந்தாலும் மரங்கள் சூழத்தான் பாதை விரியும். ஆனால் அதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு வரை மட்டுமே. 

வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக மக்களின் தேவைகள் கூட மரங்களும் இன்னபிற ஜீவராசிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றன. கடந்த வருடம், தென்காசி ராஜபாளையம் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அதில் இருந்த அத்தனை பெரிய மரங்களையும் வெட்டி வீழ்த்திவிட்டார்கள். சில மாதங்களுக்கு முன்பு தென்காசி நெல்லை சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பெரும்பாலான மரங்களை வெட்டிஎறிந்திருக்கிறார்கள். அவற்றின் எச்சங்களை அகற்றும் முன் இலத்தூர் - இலஞ்சி சாலையில் இருக்கும் மரங்களை வெட்டி எறிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் அதுவொன்றும் அவ்வளவு பரபரப்பான சாலையெல்லாம் கிடையாது. குற்றால சீசனின் போது வேண்டுமானால் கணிசமான போக்குவரத்து இருக்கலாம். மற்றபடி ஆள் அரவமற்ற சாலை. பின் ஏன் இங்கு மர அழிப்பு என்றால் - அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது தென்காசி - மதுரை புறவழிச்சாலை அமையவிருப்பது. அதற்காகத்தான் வேக வேகமாக மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

தென்காசியின் ஒருபுறம் தொடங்கி சுமார் பத்து கிமீ வயல்வெளிகளின் ஊடாக பயணித்து தென்காசியின் மறுபுறம் வந்து சேர இருக்கிறது இந்த புறவழிச்சாலை. நகருக்குள் ஏற்படும் வாகன நெரிசலையும், கனரக போக்குவரத்தையும் தவிர்ப்பதற்கே இந்த ஏற்பாடு.

ஆனால் இந்த புறவழிச்சாலை மற்றுமொரு அபாயத்தையும் சேர்த்தே கூட்டிவருகிறது. அதவாது புறவழிச்சாலை அமைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலங்கள் அத்தனையும் வயக்கடாக இருக்கும் - நன்றாக செழித்து வளரும் வண்டல் மண் பூமி. பொதிகை மலையின் மிக அருகில் இருக்கும் வளமான பூமி. 


இந்தப் பகுதியில் புறவழிச் சாலை வந்தால், அப்படி அமைய இருக்கும் புறவழிச் சாலையைச் சுற்றிலும் புதிய நகரம் உருவாகும். இந்தப் புதிய நகரம் அதிகமான விலை நிலங்களையும், வருவாயையும் உருவாக்கும். சுற்று வட்டராத்தில் நடக்கும் விவசாயம் இல்லாமல் போகும். ஏன் இப்போதே புறவழிச் சாலையை மனதில் கொண்டு பல இடங்களில் கட்டுமான பணிகள் வேக வேகமாக நடந்து வருகின்றன. பலரும் வீடு கட்டி குடியமர்ந்துவிட்டார்கள். சில பெரிய கல்யாண மண்டபங்களும் வந்துவிட்டன. சில வருடங்களுக்கு முன்பு வரை செழித்து வளர்ந்த வயக்காடுகள் அத்தனையும் இன்றைக்கு விலை நிலங்களாக மாறி இருக்கின்றன. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வயல்வெளிகளைப் பார்த்த இடங்களில் எல்லாம் கான்க்ரீட் வீடுகளை விதைத்திருக்கிறார்கள். அந்த விதை செழித்து வளர வேண்டும் என்பதற்காக சாலையோரத்து மரங்களை அறுவடை செய்து கொண்டிருகிறார்கள்.  

இன்றைய தேதியில் தென்காசி நகருக்கு புறவழிச்சாலை மிகவும் அவசியம் என்றாலும் மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப சாலைக் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வரலாம். அப்படி செய்யாமல் இருப்பது இந்த நவீன யுகத்தின் பெரும் பின்னடைவு. இதே புறவழிச்சாலையை பறக்கும் சாலைகளாக கட்டுமானம் செய்தால் இயற்கைக்கு ஏற்படும் மிகபெரும் சேதாரத்தை தவிர்க்கலாம். வயல்வெளிகளை உயிர்ப்போடு வைத்திருக்கலாம். இதையெல்லாம் செய்யலாம் என்றால் செலவுகள் அதிகரிக்கும், பட்ஜெட் இல்லை என்பார்கள். 'நீங்க ஆட்டைய போடுறதுல பாதிய ஒழுங்கா செலவு செஞ்சாலே பட்ஜெட் இடிக்காது' என்றால் அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு இன்னும் அவர்களுக்குள் இன்னும் மனிதம் ஊறி இருக்கவில்லை. பெருக்கெடுத்து ஓடும் சுயநலங்களுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கு எங்கே இதெல்லாம் புரியப்போகிறது. இயற்கைக்கு எதிராக இது தொடர்ந்தால் இதற்காக நாம் கொடுக்க இருக்கும் விலை மிக அதிகம் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள். என்ன அப்போது திண்பதற்கு எதுவும் இருக்காது. 


சென்னையில் காற்றில் கலந்திருக்கும் மாசின் அளவு அதிகரித்து விட்டது என்கிறது சமீபத்திய தரவு. எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு இது. இதைக் கண்டுபிடிக்கத்தான் லட்சம் லட்சமாக செலவு செய்கிறார்கள் போலும். நகரைச் சுற்றி இருக்கும் மரங்களை வெட்டி கரியைக் கலந்துவிட்டு காற்று மாசு அடைந்துவிட்டது, சுகாதாரச் சீர்க்கேடு அடைந்துவிட்டது என பிள்ளையையும் கிள்ளிவிட்டு எச்சரிக்கை மணியையும் ஆட்டுகிறார்கள் ஆகச்சிறந்த அதிகாரிகள். இதைத்தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்கள். இனி என்ன எடுக்கப்போகிறார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. அவர்களைத் தொடர்ந்து வரப்போகும் சந்ததிகளுக்கும் தெரியாது. 

காடுகளில் அடர்ந்து வளர்ந்திருக்கும் சோலைகள் தான் மழையின் ஜீவ ஊற்று. சோலை இல்லாமல் மழை இல்லை. இருந்த போதிலும் நகருக்குள் வளர்ந்து நிற்கும் இது போன்ற மரங்கள் தான் சுற்றுக்சூழல் சமநிலைக்கான மிக முக்கிய காரணி. அவை இல்லாமல் காற்று மாசுபடுவதை தடுக்கவே முடியாது. அப்படியிருக்க போக்குவரத்துக்கு இடையூறு என வெட்டி வீழ்த்திவிட்டு அபாய சங்கு ஊதினால் வெள்ளம் வந்தபின் மாம்பலத்தைக் காப்பாற்றவா முடியும். 


புறவழிச் சாலை இயற்க்கைக்கு புதிய தலைவலி என்றாலும் இப்போவே தென்காசியில் வெயிலின் தாக்கம் அதிகமாகிவிட்டது. காரணம் எவ்வித அக்கறையும் இல்லாமல் மரங்களை வெட்டித்தள்ளும் போக்கும், கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் விவாசய நிலங்களும் தான். போதாக்குறைக்கு புதிய வேலைவாய்ப்பைத் தேடித்தந்த காற்றாலைகளும் தான். 

இயற்கையை அழிப்பதோடு சேர்த்து புதிது புதிததாக நோய்களையும் இழுத்து வைத்துக் கொள்கிறோம். மூன்று தினங்களுக்கு முன் தென்காசியில் போய் இறங்கிய அடுத்த நொடி சித்தி எங்களிடம் கூறியது 'தென்காசி முழுசும் டெங்கு தீவிரமா பரவுது. சுட வச்ச தண்ணிய குடி. ஊருக்கு போற நேரத்துக்கு எதையும் இழுத்து வச்சிட்டுப் போயிராத' என்பதுதான். சென்னையில் இருந்து தென்காசி போவதற்கான முக்கிய காரணமே அங்கு கிடைக்கும் அந்த சுத்தமான தண்ணி தான். இப்போ அதுவும் நஞ்சாகிவிட்டது என்பது எவ்வளவு பெரிய அவலம்.   


இன்றைய தேதியில் தென்காசியில் கொசு ஒழிப்பு மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. டெங்குவை ஒழிப்பதன் முதல் படியாக வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்து, ஒருவேளை குடிநீர் மாசுபட்டிருந்தால் சுத்தபடுத்தும் வழிகளையும் கூறிவிட்டுச் செல்கிறார்கள் நகராட்சி நிர்வாகிகள். 

இந்த விஷயம் எனக்கு தெரியாது. முந்தாநாள் மதிய நேரம். வீட்டில் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடிரென காதுக்கு மிக அருகில் ஏதோ ஒரு பெரிய இயந்திரம் ஓடும் சத்தம். கண்ணைத் திறந்து பார்த்தால் வீடு முழுவதும் புகை மூட்டம். கெமிக்கல் வீச்சம். மூச்சு முட்ட அடித்துப் பிடித்து வெளியே வந்தால் ஒரு ஆசாமி கையில் பெரிய கொசு ஒழிப்பு இயந்திரத்தை வைத்துக் கொண்டு கதவு வழியாக மருந்தை செலுத்திக் கொண்டிருந்தார். 

'அண்ணாச்சி கதவ தட்ட வேண்டியது தான்' என்றால் 'ஆள் இல்லன்னு நினச்சேன்' என்றார். 'கொசு ஒழிக்கேன்னு கொஞ்ச நேரத்துல ஆள தூக்கிருப்பீரே' என்றேன்.' கொசுவே சாவ மாட்டேங்குது. நீரு எங்கவே சாவ போறீரு' என்று கூறிவட்டு சிரித்தபடியே கடந்தார். அவர் சிரித்துவிட்டுக் கடந்தாலும் அதுதான் உண்மை. நன்மை செய்யும் பூச்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வர, தீமை செய்யும் பூச்சிகள் அனைத்தும் தப்பிப் பிழைக்கின்றன. ஆக பரிணாம வளர்ச்சியில் நாம் கொசுவுக்கான உலகத்தைத்தான் கட்டமைத்துக் கொண்டிருக்கிறோமா என்ற பயமும் வந்து சேர்க்கிறது. டெரா, பெகா என்று கணினித்துதுறை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிச் செல்ல, அதற்கு ஈடு கொடுத்து இப்போது கொசுவும் ஜிகா வரைக்கும் வந்துவிட்டது. அடுத்ததாக ஆண்ட்ராயிடில் பரவும் வைரஸ்களையும் உறுஞ்சி நம்முடம்பில் செலுத்தினால்  கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. 



சரி கடைசியாக ஒரே ஒரு பாரா எழுதி பதிவை முடித்துக் கொள்கிறேன்.  ஒரே ஒரு மரத்தை அழிப்பது மட்டும் ஒரு நூறு குடும்பத்தை அழிப்பதற்குச் சமம் என்று கண்டுபிடித்த மனிதன், அந்த கண்டுபிடிப்பை தான் அசுத்தபடுத்திய காற்றில் அப்படியே பறக்க விட்டுவிட்டு மேலும் மேலும் அதே பாப செயலை செய்து கொண்டே இருக்கிறேன். இயற்கையின் ஒவ்வொரு கண்ணிகளையும் அவன் அவிழ்த்துவிட அவிழ்த்துவிட கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண்பது அவனைத் தாங்கிப் பிடிக்கும் அஸ்திவாரம் தான் என்பதையாவது புரிந்து கொண்டானா என்றால் மிஞ்சி நிற்பது கேள்விக்குறியும் இயற்கையின் வீழ்ச்சி குறித்த இயலாமையும் மட்டுமே. இதையெல்லாம் புரிந்துகொள்ளாத வரைக்கும் இயற்கையை மட்டுமே நம்பியிருக்கும் ஒவ்வொரு ஜீவராசியும் மனிதனைக் கொலை மிருகமாகத்தான் பார்க்கும். ஆறறிவு கொண்ட மனிதனும் கொலை மிருகமாகத்தான் பார்க்கப்படுவான். என்ன இயற்கை தன்னை சமநிலைப் படுத்திக்கொள்ள தன்னிடம் இருக்கும் ஆயுதத்தை கையில் எடுக்கும் போது மனிதன் இயற்கையை கொலை மிருகமாகப் பார்ப்பான் என்பதுதான் ஆகச்சிறந்த நகைமுரண். 

16 Jan 2016

போலி புத்தகக் கண்காட்சி - 2016

புத்தகக் கண்காட்சியை போலி என்று கூற ஏழு காரணங்கள்

1. இடப்பற்றாக்குறை. காற்று புகக்கூட வசதியில்லாத ஒரு மைதானத்தில் மந்தையில் அடைத்தது போல் கடைகளை அமைத்து மக்களையும் மந்தையாக்கி சிரமித்திற்குள்ளாக்கி இருப்பது முதல் குறை. பெருங்குறை. அந்தப் பக்கம் நகர்ந்தால் ஒரு பெரியவர் முறைக்கிறார், இந்தபக்கம் நகர்ந்தால் ஒரு பெரியம்மா முறைக்கிறார். எந்தப்பக்கம் திரும்பினாலும் யாராவது ஒருத்தர் இடிக்கிறார்கள். இல்லை முறைக்கிறார்கள். முறைப்புக்கு மத்தியில் புத்தகங்களை தேடவேண்டி இருக்கிறது. 

2. இடப்பற்றாக்குறையின் காரணமாக ஸ்டால்களையும் சின்னதாகவே அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தால் வெளியே வர முடியவில்லை. வெளியே நின்றால் அடுத்த ஸ்டாலின் உள்ளே நுழைய முடியவில்லை. இதன் காரணமாகவே பல ஸ்டால்களின் உள்ளே நுழைவதை தவிர்த்துவிட்டேன். மீறி நுழைந்தாலும் ஒவ்வொரு அலமாரியின் முன்னும் யாராவது ஒருவர் நின்றுகொண்டு அங்கே இங்கே நகர மறுக்கிறார்கள். நகர இடமும் இல்லை என்பது வேறுவிஷயம். 

3. ஸ்டாலின் அளவு மிகவும் சிறியது என்பதால் ஒப்புக்கு நான்கு புத்தகங்களை அடுக்கி இருக்கிறார்கள். மேடவாக்கத்தில் இருந்து ராயப்பேட்டை வரை 20+20 கிமீ பயணித்து சென்றவனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஏமாற்றம் இதுவாகத்தான் இருக்க வேண்டும். பெரும்பாலான கடைகளில் ஒரே ஆசரியர் எழுதிய அதே புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். கணையாழி, உயிர்மை, விகடன், கிழக்கு எல்லாம் வெறும் பெயர்ப்பலகையை மட்டும் தொங்கவிட்டு விட்டு சிவனே என உட்கார்ந்து இருக்கிறார்கள். 

4. ஸ்டால் சிறியது, அடுக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் ஒரு கடையிலும் Card Payment வசதி இல்லை. கணையாழியில் மட்டும் புண்ணியத்திற்கு Card Payment வசதி செய்து கொடுத்துள்ளார்கள். இதனாலேயே பெரும்பாலான ஸ்டால்களில் எடுத்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன். வாழ்க வளமுடன். அன்பர் ஒருவர் மூவாயிரம் ரூபாய்க்கு புத்தகத்தை எடுத்துவிட்டு என்ன செய்வதன தெரியாமல் பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தார்,  கூடவே அவர் கையில் இருந்த ஜெமோவும், சாருவும், யுவன் சந்திரசேகரும்.     

5. வெறும் ஸ்டால்கள் என்பதால் எந்த கடைகள் எந்த வரிசையில் இருக்கிறது என்ற வழக்கமான கையேடை அச்சடிக்காமல் விட்டிருக்கிரார்கள். பெரும்பாலான நபர்கள் எந்த கடை எங்கிருக்கிறது என செக்யுரிடியை கேட்டு டார்ச்சர் செய்ய 'தோ அந்த பக்கம் போனா, எழுதி ஒட்டி இருக்காங்க. போய் பாரு' என்று கூறிவிட்டு அருகில் நின்ற என்னை நோக்கியவர், 'ஜனம் மொத்தமும் எங்கிட்டயே வந்து கேட்டா இன்னா சார் செய்வேன்' என்றார். முறையான வழிகாட்டுதல் இல்லை என்பது ஒரு மாபெரும் குறை. 

6. இடப்பற்றாக்குறை காரணமாக முறையான பார்க்கிங் வசதி இல்லை. சகட்டுமேனிக்கு வாகனங்கள் வந்து செல்வதால் அரங்கம் மொத்தமும் தூசி/புழுதி. அரங்கை விட்டு வெளியில் வந்தால் தூசி அபிஷேகம் நிச்சயம். 

7. முறையான பார்க்கிங் வசதி இல்லை என்பதை விட, பார்க்கிங் வசதியே இல்லை என்று கூறலாம். அனைவரும் சகட்டுமேனிக்கு வண்டியை நிறுத்தி, அருகில் நிறுத்தப்பட்ட வண்டிகளை காயப்படுத்தி ரணகளப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஏண்டா வண்டியில் வந்தோம் என்று ஆகும் அளவுக்கு இருக்கிறது வாகன நெரிசல்.

சென்னையில் வசிப்பதால் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமே புத்தகக் கண்காட்சி தான். அதை எதோ ஒரு அமைப்பு ஏனாதானோவென நடத்துவது என்போன்ற/ நம்போன்ற வாசகர்களை ஏமாற்றுவது போல் தான் இருக்கிறது. இதில் விடுமுறை தினத்தன்று அவ்வளவு தூரம் பயணித்து ஏமாந்தது இன்னும் கடுப்பாய் இருக்கிறது. ஒரே நல்ல காரியம் சென்னையில் இன்றைக்கு வாகன நெரிசல் இல்லை என்பதுதான். 


மேலும் பபாசியை விட வேறு யாராலும் புத்தகக் கண்காட்சியை சிறப்பாக நடத்த முடியாது என்று சத்தியம் செய்து கூறுகிறார்கள் இப்போது புத்தகக் கண்காட்சி நடத்தும் இந்த அமைப்பினர். எல்லாம் சரி சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக, புத்தக உலகின் தொய்வை சரிசெய்வதற்காக என்றெல்லாம் கூறும் சால்ஜாப்புகள் தான் மேலும் கடுப்பைக் கிளப்புகின்றன. ஓய்வான ஒரு மாலை வேளையில் டிஸ்கவரிக்கோ, அகநாழிகைக்கோ, பனுவலோக்கோ சென்றால் இதைவிட அதிக கலெக்சன் கிடைக்கும், இதைவிட நிம்மதியான புத்தகத் தேடல் கிடைக்கும் என்பதே இன்றைக்கு யாம் பெற்ற இன்பம். 

அது என்ன ஏழு காரணம் என்று கேட்கிறீர்களா? புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களின் எண்ணிக்கை எழு. 

புதுமைப்பித்தன் கதைகள் - முழு தொகுதி - கணையாழி
தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரன் பிள்ளை
ஒற்றன் - அசோகமித்திரன்
சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்
கன்னி நிலம் - ஜெமோ
தேகம் - சாரு
பறவை உலகம் - சலீம் அலி

இந்திய அரசாங்கத்தின் நேஷனல் புக் டிரெஸ்ட் பதிப்பகத்தை இப்போதுதான் முதல்முறை பார்க்கிறேன். குறைவான விலையில் புத்தகம் விற்கிறார்கள். பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கதைகளாகவும், தெரியாத ஆசிரியர்களாகவும் இருந்ததால் பறவை உலகம் தவிர்த்து வேறு எந்த புத்தகமும் வாங்கவில்லை. நாளைக்கும் கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே நினைகிறேன். திங்கட்கிழமை ஓய்வாக இருந்தால் ஒரு எட்டு சென்று வாருங்கள். யார் புத்தகக் கண்காட்சி நடத்தினால் என்ன இந்தப் புத்தகக் கண்காட்சியிலும் ஹீரோ வாத்தியார் சுஜாதா தான்.