26 Dec 2014

2014 - வாசித்ததும் நேசித்ததும்

எழுத்தும் எழுத்து சார்ந்த விசயங்களின் மீதான ஈர்ப்பும் அவ்வளவு எளிதில் அலுப்பை ஏற்படுத்தி விடுவதில்லை. அவ்வகையில் இந்த வருடம் கொஞ்சம் சுவாரசியமான வருடமே. இப்போதெல்லாம் பலவிதமான புத்தகங்களைத் தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். எப்போதோ ஆரம்பித்திருக்க வேண்டும். இந்த வருடத்திலாவது ஆரம்பித்தேனே என்று கொஞ்சம் சந்தோசமாக உள்ளது. கிட்டத்தட்ட கடந்துபோன இருப்பத்தி ஐந்து வருடங்களை உருப்படியான வாசிப்பு இல்லாமலேயே கழித்திருக்கிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் கடந்து போன வருடங்களில் சுஜாதாவின் கணேஷ் வசந்த்தை மட்டுமாவது தேடித்தேடி வாசித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. 



வாசிப்புப் பழக்கம் எப்போது எப்படி ஆரம்பித்தது என்றெல்லாம் உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் நான்காம் வகுப்பிலேயே கதைகள் படிக்க ஆரம்பித்துவிட்டேன். படித்த முதல் சிறுகதைத் தொகுதி அண்ணனுடைய ஆறாம் வகுப்பு துணைப்பாடப் பகுதி. 

அப்போதெல்லாம் அம்மாவைப் பொறுத்தவரை நானும் அண்ணனும் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியில் எங்கும் விளையாடச் செல்லக் கூடாது. போதாகுறைக்கு வீட்டில் தொலைகாட்சிப் பெட்டியும் கிடையாது. வேறுவழி. அம்மா பீடி ஒட்டிக் கொண்டிருக்க நானும் அண்ணனும் அவர் அருகில் அமர்ந்தபடி புத்தகத்தைப் பார்க்க வேண்டியது தான். அவன் படிக்கிற புள்ள. பேசாமல் படித்துக் கொண்டே இருப்பான். நமக்கு. ம்கூம் ஐந்தாவது நிமிடத்தில் தூங்க ஆரம்பித்தது விடுவேன். தொடையில் நுள்ளி விடுவார். கண்ணைக் கசக்கிக் கொண்டே அடுத்த ஐந்து நிமிடம் புத்தகத்தைப் பார்ப்பேன். மீண்டும் தூக்கம். மீண்டும் அடி. தற்செயலாக ஒருநாள் அண்ணனுடைய பாடப் புத்தகங்களை நோண்டிக் கொண்டிருந்த போது துணைப்பாட நூல் என்ற ஒன்று கையில் சிக்கியது. திறந்து பார்த்தால் அத்தனையும் சிறுகதைகள். படிக்க சுவாரசியமாக இருந்ததா என்றால் ஐந்தாம் வாய்ப்பாடை விட சுவாரசியமாக இருந்தது என்றுதான் கூறுவேன். 

அதில் இருந்து மெல்ல சிறுவர் மலர், அம்புலி மாமா, தென்காசிப் பேருந்து நிலையத்திற்கு செல்லும் போதெல்லாம் ராணிமுத்து காமிக்ஸ், அப்பா ஊருக்கு வரும் போதெல்லாம் வாங்கிவரும் தெனாலி ராமன் கதைகள் பீர்பால் பரமார்த்தகுரு கதைகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வாரமலர் விகடன் படிக்குமளவுக்கு ப்ரோமாசன் கிடைத்த போது ஒன்பதாம் வகுப்பை வந்து சேர்ந்திருந்தேன். அப்போதெல்லாம் வாரமலரில் அன்புடன் அந்தரங்கம் கிடையாது, குடும்பமலரில் அந்தரங்கம் இது அந்தரங்கம் உண்டு. அதுவே ஏதொ கிளுகிளுப்பு நிறைந்த பத்திகளாகத்தான் தெரியும். இப்போது இருப்பதை விட பலமடங்கு சுவாரசியம் நிறைந்தது. அப்போதும் இப்போது வருவது போன்ற அதே கதைகளே கூட இருந்திருக்கலாம் ஆனால் அப்போதைய வயதில் அதுதான் படு சுவாரசியம். 

ராஜீவ்காந்தி சாலை - விநாயக முருகன்

ராஜீவ்காந்தி சாலை என்ற புத்தகத்தில் இருந்து தான் இந்த வருடமே ஆரம்பித்தது. விநாயக முருகன் என்ற ஐடி ஊழியர் கம் பேஸ்புக் பிரபலம் எழுதிய புத்தகம் என்றளவில் மட்டுமே அறிமுகம். 'உங்க லைப் ஸ்டைல் பத்திதான் எழுதியிருக்காரு, நீ படிக்கணும்' என்று அண்ணன் கூற கார்த்திக் சரவணன் @ ஸ்கூல் பையன் புத்தகச் சந்தையில் வாங்கிய புத்தகத்தை அவரிடம் இருந்து அபேஸ் செய்திருந்தேன். 

வலுவான கதைக்களம். கரு. ஆனால் சோர்வளிக்கும் எழுத்து நடையில் 'எப்பா சாமீ படிச்சு முடிச்சா போதும் என்ற நிலைக்கு வந்திருந்தேன். அந்த சுகானுபவத்தை சிலாகித்து வாசகர் கூடத்தில் விநாயக முருகனுக்கே கடிதம் எழுதி இருக்கிறேன். படிக்கவில்லை என்றால் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தரங்கம் இது அந்தரங்கம் பிடிக்கும் என்றால் அதன் மேம்பட்ட வடிவத்தில் ரா.கா.சாலையும் பிடித்துப் போகலாம். அதையும் மீறி பல தருணங்களில் ராஜீவ் காந்தி சாலையில் பயணிக்கும் போது அப்புத்தகத்தின் சில நொடிகள் கண்முன் வந்து போகும். அப்போது ஏற்படும் உணர்வு அலாதியானது. ஒரு புத்தகத்தினால் மட்டுமே கிடைக்கக் கூடியது. மேலும் எங்களுடைய லைப் ஸ்டைல் சார்ந்த புத்தகம் கூட. தினமும் நான் பயணிக்கும் சாலையைச் சார்ந்த புத்தகம். நன்றாக வந்திருக்க வந்திருக்க வேண்டிய ஒன்று என்ற எண்ணம் மட்டும் இருந்துகொண்டே இருக்கிறது.


6174 சுதாகர் கஸ்தூரி

கப்ரேகர் எண் என்ற கணித எண்ணை மையமாக வைத்து புணையப்பட்ட திகில் நாவல். சுதாகர் கஸ்தூரியை தற்செயலாக டிஸ்கவரி புக் பேலஸில் வைத்து சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் அவ்வளவு பெரிய எழுத்தாளர், குறிப்பிடத்தகுந்த நாவல் ஒன்றை எழுதியுள்ளார் என்பதெல்லாம் தெரியாது. இருந்தும் அவரைப் பார்த்ததும் ஒரு மரியாதை ஏற்பட்டது. அடுத்த நொடி அரசன் கையில் 6174. அரசனை வித்தியாசமாகப் பார்த்தேன். அதற்கு அடுத்த நாட்களில் இணைய வாசகர்களால் இவ்வாண்டு முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்ட நாவல் இது. லெமூரிய கண்டம், கணிதம் அறிவியல்-தமிழ் என்று பரபரப்பாக நாவலை வளர்த்திருப்பார். அவசியம் படிக்க வேண்டிய நாவல்.


குற்றப் பரம்பரை - வேல ராமமூர்த்தி

குற்றப்பரம்பரை குறித்து கூறும் முன் அரசனின் புத்தகத் தேடல் குறித்து கூறியே ஆக வேண்டும். அரசனின் அலமாரி ஒரே எழுத்தாளர்களால் நிறைந்தது அல்ல. தனித்துவம் வாய்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களால் நிறைந்தது. அத்தனையும் எளிய மனிதர்களின் கதை கூறும் புனைவுகள். இலக்கியங்கள். எப்படி யாரிடம் இருந்து இந்தப் புத்தகளைப் பற்றி எல்லாம் அறிந்து கொண்டார் என்று தெரியவில்லை, ஆனால் அவருடைய கலெக்சன் என்னுடைய டாப் பேவரைட். இந்தப் புத்தகத்தைப் படி என்று அவர் கொடுத்தால் அடுத்த வாரம் முழுவதும் அதைத் தான் படித்துக் கொண்டிருப்பேன்.  

குற்றப்பரப்பரையும் அரசனின் புத்தக அலமாரியில் இருந்து உருவியது தான். முதலில் இந்தப் புத்தகத்தை எடுத்துச் செல்வதற்கு பெரிதும் தயக்கம் காட்டினேன், காரணம் வேலராமமூர்த்தி. ஏற்கனவே அரசன் என்னிடம் வேலராமமூர்த்தி கதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை கொடுத்து படி படி என்று உயிரை வாங்கிக் கொண்டிருந்தார். என்னால் அவற்றை தொடர்ச்சியாக படிக்க முடியவில்லை. நான் எதிர்பார்த்தது போன்று அவை இல்லை. அல்லது அந்த எழுத்தை உள்வாங்கிக் கொள்ளும் அளவிற்கு நான் இன்னும் முதிர்ச்சி அடைந்திருக்கவில்லை. ஆகா அவருடைய நாவலும் அப்படித்தான் இருக்கும் என்ற முன் முடிவிற்கு வந்திருந்தேன். அரசனின் தொடர்ந்த வற்புறுத்தலால் குற்றப்பரம்பரையை எடுத்து வந்து, வெகுகாலம் படிக்காமலேயே வைத்திருந்து பின்னர் ஒருநாள் மனது கேட்காமல் படிக்கத் தொடங்கினேன். 

வேலராமமூர்த்தி அட்டகாசமான கதை சொல்லி. எந்தப் பத்தியை எந்த இடத்தில் வைத்தால் சுவாரசியமாக இருக்கும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறார். பிரிடிஷ் இந்தியாவில் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்வியல் சார்ந்த கதை. ஒரு சமூகம் அந்த சமூகத்தோடு தொடர்புடைய பிற சமூகங்கள் என்று அருமையாக காட்சிப்படுத்தி இருப்பார். என்னைக் கேட்டால் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் என்றே கூறுவேன்


அவரவர்பாடு - கநாசு

நவீன எழுத்தாளர்களின் முன்னோடியான சார்ந்தவர் என்ற வகையில் இவருடைய புத்தகத்தை வாங்கினேன். அவரவர்பாடு என்பது இலக்கியத்தில் கிரைம். பாண்டிச்சேரி கடலோர கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபடும் கொலை கொள்ளைகள், கிராமத்து பஞ்சாயத்துகள் நிறைந்த கதை. இவரது எழுத்துகளின் மூலம் சுதந்திர இந்தியாவின் ஒரு சில இடங்களை சுற்றிப்பார்த்து வரலாம். மற்றபடி குறிப்பிடும்படியான நாவல் எல்லாம் இல்லை. இருந்தும் இவரது மற்றைய படைப்புகளையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பாப்போம்.

சோளகர் தொட்டி - பால முருகன் @ உபயம் அரசன்

தொட்டி என்பது மலையில் வாழும் மனிதர்களின் இடத்தை குறிக்கும் சொல். மலை ஜாதியினரில் முக்கியமானவர்களான சோளகர்களின் தொட்டியில் நடைபெறும் சம்பவங்கள் சார்ந்த கதை. உண்மைக் கதை என்றும் கூறலாம். நவீனத்தின் வருகையால் கொஞ்சம் கொஞ்சமாக தனது தொன்மையை இலக்கத் தொடங்கும் வனம் சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஆளுமைக்குப் பின் என்னவாகிறது, அவனைத் தேடி வரும் போலீசாரால் அங்கும் வாழும் சோளகர்கள் என்ன விதமான கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்பது குறித்து பேசும் நாவல். இது குறித்து வாசகர் கூடத்தில் நூல் விமர்சனம் எழுத இருப்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். நடைபெற்றவை அனைத்தும் உண்மைச் சம்பவங்கள் என்பதாலோ என்னவோ புத்தகத்தை ஒரு டாக்குமென்ட்ரியைப் போலவே எழுதியுள்ளது பெரிய குறை. புனைவுக்கான பீல் எங்குமே வரவில்லை. அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய கதை என்றளவில் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுகிறது. 

கானகன் லக்ஷ்மி - சரவணகுமார்

உப்புநாய்கள் நாவலின் மூலம் அறிமுகமானவர். கானகன் இவருடைய இரண்டாவது நாவல். சாரு மற்றும் சாரு விமர்சகர் வட்டத்தின் மூலம் கானகன் நாவல் அறிமுக விழா அகநாழிகையில் நடைபெறுவது கேள்விப்பட்டு நான் வாத்தியார் மற்று ஸ்பை மூவரும் சென்றிருந்தோம். காடும் காடு சார்ந்த எழுத்தும் என்றால் இயல்பாகவே அதீத ஆர்வம் ஏற்பட்டுவிடுகிறது. புலி வேட்டையில் ஈடுபடும் தந்தை, கட்டிய கணவனை விடுத்து இன்னொருவனோடு ஓடிவந்த அம்மா, தாயைக் கொன்றவனை கொள்ளத் துடிக்கும் இளைய புலி என்றபடி நாவல் முழுக்க காடுகளோடும் வேட்டையாடுதலோடும் புலிகளோடும் பயணித்துக் கொண்டே இருக்கலாம். காடு புலி வேட்டையாடுதல் சார்ந்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும். தவறவிடக்கூடாத நாவல் என்றெல்லாம் கூறமாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்துவிடுங்கள் என்றே கூறுவேன். இப்புத்தகத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை. 

7.83hz - சுதாகர் கஸ்தூரி

6174 எழுதிய சுதாகர் கஸ்தூரி அவர்களின் இரண்டாவது நாவல் 7.83hz. இதுவும் அறிவியல் புனைவே. புக்பாயிண்டில் வைத்து நடைபெற்ற புத்தக வெளியீட்டிற்கு நானும் வாத்தியாரும் சென்றிருந்தோம். அந்த விழாவில் இரா.முருகன் கூறினார் 'அறிவியல் புனைவு என்றாலே அனைவரும் ரோபோவுக்கு உயிர் வருவதாகத்தான் எழுதுகிறார்கள், அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உயிரியல், இயற்பியல் சமாச்சாரங்களை சுதாகர் கையிலெடுக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று' என்று குறிப்பிட்டார். முற்றிலும் உண்மை. 6174ஐ விட கொஞ்சம் வேகமாக நகரும் கதை. மனிதன் எவ்வித உணர்வெழுச்சியும் இல்லாத, மனம் சமநிலையில் இருக்கும் போது அடையக்கூடிய என்ன அலைவரிசை 7.83hz என்றும் அந்த நொடியில் அவனை தங்களுடைய கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவர இயலும் என்றும் ஒரு மையைக்கருவை எடுத்துக் கொண்டு அதனை ஹாலிவுட் ரேஞ்சிற்கு எழுதியிருப்பார். பலவிதமான அறிவியல்/இயற்பியல் விவாதங்கள் நடைபெற்றாலும் எங்குமே தொய்வடையாத எழுத்து நடை. என்ன அதிகமான கதாபாத்திரங்களை அறிமுகபடுத்திக் கொண்டே இருப்பார். அவர்களை நியாபகம் வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். இன்னொன்று அதே தான் இப்புத்தகத்திற்கு வா.கூடத்தில் விமர்சனம் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சந்தர்ப்பம் அமையவில்லை.  

காலச்சக்கரம் - நரசிம்மா

புத்தகத்தின் கதை சொல்லும் சுவாரசியத்திற்காக வாத்தியார் அவ்வபோது சில புத்தகங்களைக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் இருக்கும். அவ்வகையில் சில இந்திய அரசியல் பின்னணியைச் சார்ந்தவர்களை வைத்து நரசிம்மா அவர்கள் எழுதிய புத்தகம் முக்கியமான ஒன்று. 

பகடையாட்டம் - யுவன் சந்திரசேகர் 

ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த ஜூலியஸ் லுமும்பா என்னும் நாடோடி, இரண்டாம் உலகப் போரில் இருந்து தப்பி வந்த ஹான்ஸ் வெயிஸ்முல்லர் என்னும் அகதி, கிருஷ் என்னும் இந்திய மேஜர் மற்றும் சோமிட்ஷியா என்னும் கற்பனை தேசம் இவைகளைக் கொண்டு தன் புனைவை எழுதி இருக்கிறார் யுவன்சந்திர சேகர். கதையும் கதைக்களமும் கூட பகடையாட்டம் போலத்தான். மிக மிக மெதுவாக நகரும். சிறிது பிசிறு தட்டினாலும், சில பக்கங்களை முறையாக உள்வாங்காவிட்டாலும் முக்கியமான விசயங்களை தவற விட்டுவிடும் வாய்ப்பு உண்டு. நாவலை முழுவதுமாக முடித்துவிட்டு மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் தான் இந்த விசயமே எனக்குப் புரிந்தது.  

கர்ணனின் கவசம் - கே.என்.சிவராமன் 

தினகரன் இதழின் இணைப்பிதழ்களுக்கு ஆசிரியராக இருக்கும் கே.என்.சிவராமன் அவர்கள் எழுதிய கர்ணனின் கவசம் இவ்வாண்டின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் ஒன்று. குங்குமம் இதழில் தொடர்கதையாக வெளிவந்து பின் புத்தகமாகவும் உருவெடுத்தது. சூப்பர் மேன் ஸ்பைடர் மேன் பேட் மேன்களுக்குப் பதிலாக நம்முடைய காவிய காப்பிய நாயகர்களே களத்தில் இறங்கினால் அதுதான் கர்ணனின் கவசம். அட்டகாசமான பொழுதுபோக்கு நாவல். அதிகப்படியான கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்துகொள்ள வேண்டிய அவசியத்ததைத் தவிர துளியும் அலுப்பு தட்டாத நாவல். 


வாடிவாசல் - சிசு செல்லப்பா

இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்தப் புத்தகத்தை வாங்கிவிட்டேன் என்றாலும் இந்த வருடம் தான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. குறுநாவல் அல்லது சற்றே நீண்ட சிறுகதை என்று கொள்ளலாம். வெறும் எழுபது பக்கங்களில் பண்டைய சமூகம் ஒன்றின் வீர விளையாட்டை வெகு அழகாக செதுக்கி இருப்பார் சிசு செல்லப்பா. வாடியில் இருந்து வெளிவரும் காளைகளுக்கும் வாடிக்கு வெளியில் காத்துக் கிடக்கும் காளைகளுக்கும் இடையே நடைபெறும் த்வந்த யுத்தமே வாடிவாசல். ஒரு சில மணி நேரங்களுக்கு நம்மையும் வாடிவாசலின் வெகு அருகில் நிறுத்தி அழகு பார்த்திருப்பார் இதன் ஆசிரியர். அட்டகாசமான புத்தகம். கண்டிப்பாக படியுங்கள் என்றெல்லாம் கூறமாட்டேன். இதனைப் படிக்கும் வாய்ப்பை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என்று வேண்டுமானால் கூறுவேன். 


ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா

சுஜாதாவின் படைப்புகளில் என்றென்றும் பேசப்படக்கூடிய படைப்புகள் என்றால் இந்திய சிப்பாய் கலகத்தினை மையமாக வைத்து அவர் எழுதிய ரத்தம் ஒரே நிறம் படைப்பிற்கு நிச்சயம் முதல் இடம் கொடுக்கலாம். வாரணாசி நோக்கி படகு செலுத்தப்படும் பொழுது, கங்கை நதிக்கரையில் ஆஷ்லி காண நேரிடும் உடன்கட்டை ஏறுதல் நிகழ்வு ஒன்றே சுஜாதாவின் எழுத்தாளுமைக்கு உச்சகட்ட சான்று. பிண்டத்தின் மண்டை ஓடு வெடித்துச் சிதறும் நேரத்தில் நம் மண்டைக்குள்ளும் ஒருவித குறுகுறுப்பு நேறுமே, என்னைக்கேட்டால் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகமாக பரிந்துரைப்பேன். 


வரும் ஆண்டு படிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்

புயலிலே ஒரு தோணி - ப சிங்காரம்
கடலுக்கு அப்பால் - ப சிங்காரம்
காடு - ஜெயமோகன்
இரவு - ஜெயமோகன்
எழாம் உலகம் - ஜெயமோகன் 
எக்ஸைல் 2- சாருநிவேதிதா
கடல் புறா - சாண்டில்யன்
தமிழ்நாடு - ஏகே செட்டியார்

8 Dec 2014

ஆதிவனம் - சிறுகதை (அறிவியல் புனைவு)

ஆதிவனம் குறித்து கேள்வி பட்டிருகிறீர்களா? மனிதர்கள் தங்களையும் விலங்குகளாக நினைத்துக் கொண்டிருந்த வரையிலும், நெருப்பும் சக்கரமும் கண்டுபிடிக்கப் பட்டிராத, ஆற்றுப்படுகைகளை ஆக்கிரமித்து நாகரீக வளர்ச்சி அடைந்திராத வரையிலும், காமம் கழிக்க மட்டுமே கட்டியணைத்த வரையிலும் ஆதி காடு சுகமாகத்தான் இருந்தது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அதனதன் தேவை கருதி ஒரு பல்லுயிர்ச் சுழற்சியை நிகழ்த்தி வந்தன. காட்டிற்கு ராஜா சிங்கம் என அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கானகத்தின் வேட்டையன் புலியும் தந்திரக்கார நரியும் வெறும் புலியும் நரியுமாகத்தான் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.


ஆதிகாடு குளிர் நிறைந்தது. பசுமை நிறைந்தது. இடைவிடாத பறவைகளின் சப்தமும் வண்டுகளின் ரீங்காரமும் கொண்டது. அடர்ந்து வளர்ந்த மரங்களின் இலைகளை ஊடுருவிப் பரவும் சூரிய ஒளி ஒரு மெல்லிய கோடாக வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும். இளம் இலைகளின் மீது பாய்கையில் அடர்த்தி குறைந்த பச்சை நிறத்தையும் மூத்த இலைகளின் ஊடாகப் பரவும் போது அடர் பச்சை நிறத்தையும் உமிழக் கூடிய சூரியன் அதுவரை தெய்வமாகியிருக்கவில்லை. ஆம் ஆதி காட்டில் தெய்வம் என்று யாருமே கிடையாது. தெய்வத்தின் தேவைக்கான காரணம் புலப்படாத வரைக்கும் மனிதன் வனத்தை, வனத்தின் இயற்கையை தொந்தரவு செய்திருக்கவில்லை. 

ஆதி காட்டைப் பற்றி அதிகமாக கேள்விப் பட்டிருக்கிறேன். அது சார்ந்த தேடல் என்னுள் இயற்கையாக எழுந்தது. மனிதன் எழுத்துப் பழகிய நாளில் இருந்து இப்போதுவரை அவன் அதிகம் சிலாகித்த விஷயம் ஆதி காடாகத்தான் இருக்க வேண்டும். கானகத்தைப் பற்றி நினைக்க நினைக்க நானும் அவற்றினுள் நுழைந்து அவர்களில் ஒருவனாகவே என்னை ஒப்புகொடுத்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. நல்லவேளை நல்ல தமிழில் கானகம் அதிகமாகவே புனையப்பட்டுள்ளது. என்னால் நேராடியாகக் காண முடியாத கானகம் மற்றொருவனின் கற்பனையின் வாயிலாகவாவது காண முடிகிறதே என்ற அல்ப சந்தோசம். 

ஆதி கானகத்தின் முதல் உயிர்பலி மனிதனால் வெட்டப்பட்ட முதல் மரமாகத்தான் இருக்க வேண்டும், அன்றிலிருந்து தான் நாகரிகம் வளரத் தொடங்கியது. தானும் மனிதனும் ஒன்று என அதுவரை நம்பிவந்த மனிதக் குரங்குகள் மனிதனைக் கண்டு அஞ்சத் தொடங்கின. நான் உன்னில் இருந்து உயர்வானவன் என்று ஒவ்வொரு உயிரினத்தையும் நம்ப வைக்கத் தொடங்கினான் மனிதன். ஆதிகாடு மெல்ல அதன் உருவழியத் தொடங்கியது. அது அழிகிறது என்பதை அவனே வேதனையுடன் பதிவும் செய்தான் என்பது தான் நகைமுரண். 

ஆதிகாடை காப்பாற்றி இருக்க வேண்டும். முழுவதுமாக காப்பாற்றியிராவிட்டாலும் அதன் எச்சங்களையாவது காப்பாற்றியிருக்க வேண்டும். முன்னோர்கள் சுயநலமானவர்கள். தாங்கள் மட்டுமே ஆண்டு அனுபவித்து வருங்காலத்தை அவதியுறச் செய்யும் அளவிற்கு சுயநலமானவர்கள். என்னால் மீண்டும் ஒரு ஆதிகாட்டை உருவாக்க முடியாது. உலகின் கடைசி மரம் அழிந்து ஐநூறு வருடங்கள் ஆகிவிட்ட பின் மீண்டும் ஒரு கானகத்தை உயிரோட்டமான வனத்தை உருவாக்க முடியும் என்பது கடவுளுடன் தேநீர் அருந்துவதற்குச் சமம். இருந்தாலும் அதற்காகத்தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவோ அறிவியல் ஆரய்ச்சிகள் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போதிலும் ஒருவராலும் ஒரு தேனீயின் மகரந்தச் சேர்க்கையை தாங்கள் தயாரித்த ரோபோ தேனீக்கள் கொண்டு நிகழ்த்தவே முடியவில்லை. 

உலகின் கடைசித் தாவரம் அழிவதற்கு முன்னரே கடைசித் தேனீ அழிந்துவிட்டது. அதை மட்டுமாவது காப்பாற்றியிருக்க முடியுமானால், அதன் மூலமாவது மகரந்த்தச் சேர்க்கையின் தொடர்ச்சியை நீளச் செய்திருக்க முடியுமானால் எங்களால் தாவரம் என்ற உயிரினத்தைக் கண்குளிர பார்த்திருக்க முடியும். வெறும் எழுத்துகளாகவும், பிம்பங்களாகவும், தொடர் காட்சிகளாக விரியும் படங்களாகவும் பார்த்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. 

இந்த நவீன யுகத்தில் ஒருவனது அறிவின் தேவையைக் கருத்தில் கொண்டு அவனது ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், தேவையில்லை எனில் அடுத்த நொடியே அழித்துவிடவும் முடியும் அளவிற்கு வளர்ச்சி கண்ட பின்னரும் இன்னும் எங்களால் ஒரு சிறு தாவரத்தைக் கூட உருவாக்க முடியவில்லை என்பது தீரா சோகம். 

ஆதிகாட்டில் இருந்து மனிதன் தன்னை வேறுபடுத்தி நிலப்பரப்புகளாக பிரிந்து செல்லத் தொடங்கியபோது தனது முதல் கடவுளாக வணங்கிய சூரியன் தான் இன்று எங்களின் முதல் எதிரி. சூரியனின் கதிர்வீச்சு எங்களின் ஆய்வுகளை இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. சூரியனையே அழிக்கும் ஆயுதத்தைக் கண்டுபிடித்து விட்ட போதிலும், சூரியன் அழிந்தால் நாங்களும் அழிந்து போவோம் என்ற ஒரே அறிவியல் உணமையைக் கருத்தில் கொண்டுதான் நீங்கள் வணங்கிய கடவுளை நாங்கள் வெறுக்கும் எதிரியை உயிரோடு விட்டு வைத்திருக்கிறோம். 

ஒருகாலத்தில் மனிதர்கள் வீட்டு விலங்குகளாக நாய்களையும் பூனைகளையும் வளர்த்தார்களாம். இன்று நாங்கள் மனிதர்களையே தரம் பிரித்து அவர்களில் ஒரு குழுவினருக்கு வீட்டு அடிமைகள் என்று பெயர்சூட்டி வளர்ப்புப் பிராணிகளைப் போல் வளர்த்து வருகிறோம். எங்களின் நாய்களும் பூனைகளும் கூட அவர்கள் தாம். நாங்கள் வாலாட்ட சொன்னால் வாலாட்டுவார்கள், பந்தை தூர எறிந்து எடுத்துவரச் சொன்னால் சொன்ன பேச்சு மாறாமல் எடுத்தும் வருவார்கள்.

உங்களால் நம்ப முடிகிறதா தெரியவில்லை. நம்பாது போனாலும் கவலை இல்லை. நான் ஆதி காட்டினை வளர்க்கத் தொடங்கிவிட்டேன். என்னுடைய நெடுநாள்த் தவம் அது. கற்பனையில் வழிந்தோடிய கானகத்திற்கு உருகொடுத்து மீட்டெடுப்பது என்பது வாழ்நாள் வேட்கை. பலமாத நீண்ட உழைப்பிற்குப் பின் அதனை மீட்டெடுத்தும் விட்டேன். ஆம் நானே அதன் கர்த்தா. அம்முவும் இதனை முதலில் நம்பவில்லை.

அம்மு என் நான்கு வயதுக் குழந்தை. அவள் பிறந்ததில் இருந்தே மற்ற அப்பாக்களைப் போல அவளுக்கு அறிவியலும் ரோபாடிக்ஸும் ஏ.ஐ-யும் கற்றுக் கொடுக்கவில்லை. அவள் என் மகள். ஒருவேளை என்னால் முடியாது போனால் என் கற்பனையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் அவளிடம் இருக்கிறது என்பதால் வெறும் கானகத்தைப் பற்றி மட்டுமே அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். கடவுளின் கதைகளைக் கேட்பது போல் தன்னை மறந்து கேட்டுக் கொண்டிருகிறாள். நான் மீட்டெடுத்த கானகத்தின் உள் நுழையும் முதல் இரு அதிர்ஷ்டசாலிகள் நாங்களே என்பது வரலாற்று உண்மை. 

அம்மு முதலில் அந்த பிரம்மாண்டத்தின் நீட்சியை நம்பவில்லை. தன் பிஞ்சுக் கரங்களால் என்னை இறுக்கப் பற்றிக் கொண்டாள். தென்றல் அவள் தலைமுடியை மெல்ல வருட, காற்றில் அலைபாய்ந்த முடிக்கற்றைகளை பறக்க விடாமல் செய்து கொண்டிருந்தாள். அப்படியொரு அலாதியான உணர்வை இதுவரைக்கும் அவள் அனுபவித்ததே இல்லை. சந்தோசத்தில் என்னை கட்டிக் கொண்டாள். கரடுமுரடான மண் தரை. அவற்றின் மீது வளர்ந்து கிடக்கும் சிறிய புற்கள், செடிகள், அதன் மீது படிந்திருக்கும் ஈரமும் அரவணைப்பும் மெல்ல எங்கள் உடலுக்குள் பரவ உங்கள் வேதங்களில் சொர்க்கம் என்று கூறுவீர்களே அதில் இருப்பது போல்தான் உணர்ந்தோம். அதுநாள் வரை நடந்து பழகாத பாதையில் எங்கள் பயணம் நீளத் தொடங்கியது. 

வெறும் நீல நிற வானத்தைப் பார்த்துப் பழகிய எங்களுக்கு எங்களின் தலைமேல் தெரிந்த பச்சை நிற வானம் அற்புதத்தின் ஆரம்பம். வனத்தினுள் நுழைய நுழைய குளிர் மெல்ல பரவத் தொடங்கியது. ஆங்காங்கு கம்பி இழை போல் நீளும் சூரிய ஒளி இதமான கதகதப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. 

எங்கிருந்தோ துள்ளிக் குதித்து வந்த உயிரனத்தைப் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டாள் 'ப்பா மான் ப்பா, ப்பா மான் ப்பா'. 

மானும் மானுக்கு அருகில் இருந்த குட்டிமானும் இவளைப் போலவே துள்ளிக் குதிக்கத் தொடங்கின. பஞ்சுத் தலையணைப் போன்ற ஒரு குள்ள முயல் அம்முவின் கால்களை சுற்றிச்சுற்றி வந்தது. அம்மு பிறந்ததில் இருந்து இன்று வரை அவள் முகத்தில் அப்படியொரு ஆனந்தத்தைப் பார்த்தே இல்லை. பிறந்த இரண்டாம் பருவத்தில் இருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கும் அவளுக்கு இயற்பியலின் அத்தனை சூத்திரங்களும் அத்துபடி. என்னுடைய நான்கு வயதில் நான் காடுகளைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்திருந்தேன். அம்மு இயற்பியலைப் பற்றி. 

முதலில் என் கரம் பற்றி நடந்து கொண்டிருந்த அம்மு, இப்போது என்னை இழுத்துச் செல்ல ஆரம்பித்திருந்தாள். அந்தக்குட்டி முயலும் மானும் கொடுத்த தைரியம் அவளுக்குள் இருந்த பயத்தை மொத்தமாக நீங்கியிருந்தது. முதல் முறையாக அவளுக்குள் இருந்த குழந்தையை ரசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குள் இருக்கும் குழந்தை மனதை புரிய வைத்ததும் இந்தக் காடு தானே. 

தூரத்தில் நீர் சலசலக்கும் ஒலி கேட்டு ஓட அவளைப் பின் தொடர்ந்து நானும். கண்ணாடி போன்ற சிறு ஓடை சலசலத்துக் கொண்டிருந்தது. மெதுவாக அதைத் தீண்டினாள். ஒன்றிரண்டு நீர்த்துளிகளை என் மீது தெளித்தாள். உடம்பெல்லாம் ஒருவித சிலிர்ப்பு. எங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் குட்டி முயலும் மானும் நீர் அருந்த அம்முவும் முழங்காலிட்டு அவற்றைப் போலவே நீர் அருந்தத் தொடங்கினாள். கைகளை நீரினுள் விட்டு வேகமாக ஆட்டினாள். தெளிந்த நீர் லேசாகக் கலங்கி மீண்டும் தெளிந்தது. உள்ளிருந்த கூழாங்கற்கள் ஒன்றிரண்டை எடுத்து வீசி எறிந்தாள். 

நான் சற்றும் எதிர்பார்க்காத விதத்தில் என் கற்பனையையும் தாண்டி அற்புதமாக விரிந்துள்ளது இந்தக் கானகம். எனக்கே என்னை நினைத்தால் பெருமையாக இருந்தது. அம்முவை வாரியணைத்து ஒரு சுற்று சுற்றினேன். என்னை இப்படியெல்லாம் அவள் பார்த்ததே இல்லை. அதிசியமாகப் பாத்தாள்

ரீங்கரிக்கும் வண்டுகளின் ஓசைகள் ஊடே தொடர்ந்து நடக்கையில், உடம்பெல்லாம் ரோமங்கள் நிறைந்து லேசாக கூன் விழுந்த முதுகினை உடைய அந்த முதல் மனிதனை அங்கே சந்தித்தோம். ஏறத்தாழ மனிதக் குரங்கு போலவே இருந்தான். நிலத்தினுள் மறைந்திருந்த கிழங்குகளை தோண்டிக் கொண்டிருந்தவன் எங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்துகொண்டான். அவனைத் துரத்திச் செல்ல நினைத்த அம்மு அவன் முகத்தில் இருந்த கொடூரத்தைப் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக் கொண்டாள். மிக உயரமாயிருந்தான். தடித்து வளர்ந்திருந்த ரோமங்களே அவனுடைய நிர்வாணத்தை மறைக்க போதுமாயிருந்தது. இன்னும் சற்றுத் தள்ளி வேறொரு பெண் கிழங்கை தேடிக் கொண்டிருந்தாள். ரோமங்கள் முழுவதும் ஜடை சடையாய் திரிந்து இறுகிப் போயிருந்தன. முதுமைப் பருவத்தில் இருப்பதற்கான அத்தனை அடையாளங்களையும் பட்டியலிட்டது அவளுடைய அங்கங்கள். அந்த சூனியக் கிழவியின் வெறித்த தீர்க்கமான பார்வையை தாங்க மாட்டாது அம்மு மீண்டும் என் பின்னால் மறைந்து கொண்டாள். 

முயலும் மானும் கூடவே நானும் அம்முவுடன் வருவது அவளுக்கு பெரிய நிம்மதியாயிருந்தது. 'ப்பா அது என்ன' என்று அவள் கை காட்டிய இடத்தில் ஒரு சிறிய குகை இருந்தது. சத்தம் எழுப்பாமல் மெல்ல உள்ளே நுழைந்தோம். மெல்லிய கதகதப்பு குகை முழுவதும் நிரம்பி இருந்தது. வெளிப்புறம் இருந்த குளிர் உள்ளே அவ்வளவாகத் தெரியவில்லை. குகை முழுவதும் பரவிக் கிடந்த சருகுகள் எங்கள் பாதம் பட்டதும் நொறுங்கும் ஒலி கேட்டது. சப்தம் கேட்டதும் உள்ளிருந்து எட்டிப்பார்த்த சில உருவங்கள் எங்களைப் பார்த்ததும் ஓடி ஒளிந்து கொண்டன. அதுவரை தைரியமாக சென்று கொண்டிருந்த அம்மு என்னை முன்னால் விட்டு பின் தொடர்ந்தாள். எனக்குள்ளும் லேசான திக்திக். இதயம் வேகமாக துடித்தது. அங்கிருந்த இருளுக்கு நாங்கள் பழகி இருக்கவில்லை. எங்கள் உலகத்தில் இருள் என்பதே விளக்கை அணைத்தால் ஏற்படுவது மட்டுமே. எங்களுடன் வந்த முயல் மற்றும் மானின் கண்கள் நீல நிறத்தில் ஜொலித்தன. அம்மு கண்களை இருக்க மூடிக்கொண்டு கூடவே நடந்தாள். அவள் இதயம் துடிப்பை என் கைகளில் உணர்ந்தேன். 

குகையின் ஓரிடத்தில் இருந்த மெல்லிய துளை வழியாக சூரிய வெளிச்சம் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அதை நோக்கி வேகமாக நகர்ந்தோம். அந்த இடம் முழுவதுமே பரவி இருந்த வெளிச்சம் திடீர் நிம்மதியைக் கொடுத்தது. 

'ப்பா' என்று என்னை சொறிந்தாள் அம்மு. 

அவள் பார்வை பட்ட குகையின் மேற்புறச் சுவர் முழுவதுமே ஓவியங்கள். எங்கள் அருகில் நின்று கொண்டிருந்த மானும் முயலும் தங்கள் உருவம் அங்கே வரையபட்டிருப்பதை அப்போது தான் கவனித்திருக்க வேண்டும். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன. கூடவே பாம்பு, நரி, சிங்கம் புலி மனிதன் என்று விதவிதமான ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியங்களுக்குப் பின்னும் ஏதோ ஒரு அர்த்தம் இருந்தது. புலி மான் மீது பாய்ந்து கொண்டிருந்தது. மனிதன் கன்னத்தில் கைவைத்தபடி அந்த வேட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தான். மரங்களுக்குப் பின்னிருந்த நரிகளும் புலியின் வேட்டையை எதிர்நோக்கிக் காத்திருந்தன. இப்படி ஒவ்வொரு ஓவியத்திலும் ஏதோ ஒரு தொடர்ச்சியும் அர்த்தமும் இருந்ததன. அம்முவைத் தூக்கினேன் அந்த ஓவியங்களுக்கு வலிக்காத வண்ணம் தொட்டுப் பார்த்தாள். 

திடிரென ஒரு உள்ளுணர்வு எங்களின் முதுக்குப் பின்னால் யாரோ எங்களை கவனிப்பது போன்ற உணர்வு. அவசரமாகத் திரும்பினேன். ஆங்காங்கு சில ஜோடி கண்கள் எங்களையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் கைகளில் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என்று கூடத்தெரியாது. ஆனால் நிச்சயம் அவர்கள் பயந்திருக்க வேண்டும். ஆம் ஆதிமனிதனுக்கு பய உணர்ச்சி அதிகம். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவே அவன் பிரயத்தனப்பட வேண்டி இருந்தது. தூங்கும் போதும் விழிப்போடு இருப்பதற்கே தன் மொத்த ஆற்றலையும் செலவழிக்க வேண்டி இருந்தது அவனுக்கு. 

குகையை விட்டு வெளியேறிய தருணத்தில் ஒரு யானைக் கூட்டம் தூரத்தில் கிளைகளை ஒடித்து பசியாறிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள் அம்மு. யானைகளும் எங்களை கவனித்துவிட்டன. அம்முவைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடி வந்த குட்டியானை அவளை முகர்ந்து பார்த்தது. முதலில் பயந்த அம்மு பின் அந்தக் குட்டியானையை வருட ஆரம்பித்தாள் அதுவும் அவளைத் தூக்கி அம்பாரி மீது வைத்துக் கொண்டது. வீட்டினுள் இருக்கும் போது அம்முவின் முகத்தில் எப்போதுமே எதையோ பறிகொடுத்த உணர்வு இருக்கும். ஒவ்வொரு இயற்பியலாளர்களுக்கும் இயல்பாகவே இருக்கக் கூடிய முகவெட்டு அவளுடையது. இப்போது அவள் முகத்தில் இருந்து சுத்தமாக அந்தக் களை மறைந்து பிரகாசமாக இருந்தாள். மற்ற யானைகளும் தங்கள் துதிக்கையால் எங்களை வருடிக் கொடுத்தன. 

அப்போது தான் சற்றும் எதிர்பார்க்காத அந்த சம்பவம் நிகழ்ந்தது. எங்கோ மறைந்திருந்த புலி ஒன்று நொடிப் பொழுதில் அம்முவை நோக்கிப் பாய்ந்தது. சடுதியில் மற்றொரு யானை தன் துதிக்கை கொண்டு அம்முவை தூக்க அம்மு பிழைத்தாள். 

இரையாதலுக்கும் பிழைத்தலுக்கும் இடைப்பட்ட நொடியில் பத்திரமாகக் காப்பாற்றபட்டாள் அம்மு. இப்போது புலியின் வெறி கூடியிருந்தது. அம்முவின் மீதிருந்த வெறித்த பார்வையை அது எடுக்கவே இல்லை. அழத் தொடங்கினாள். எனக்கும் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை. ஒரு புலி இப்போது இரண்டு மூன்று புலிகளாக அதிகரித்தன. அத்தனையும் சுற்றி இருந்த புதரினுள் ஒளிந்து இருந்திருக்க வேண்டும். சமயம் பார்த்து சுற்றி வளைத்துவிட்டன. புலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவே யானைக் கூட்டம் மிரண்டு கலைந்து ஓடத் தொடங்கியது. அம்முவும் நானும் மட்டும் தனித்து விடப்பட்டிருந்தோம். சுற்றி நின்ற புலிகளுக்கு மத்தியில் வசமாக சிக்கிக் கொண்டோம். 

இத்தனை நாள் ஆதி மனிதர்களை மட்டுமே புசித்து வாழ்ந்து கொண்டிருந்த புலிகளுக்கு நாகரீக மனிதர்களை ஆடும் வேட்டை வித்தியாசமான விருந்தாகத்தான் இருக்க வேண்டும். அதேநேரம் தப்பித்தல் என்பது உடனடித் தேவை, உயிர்வாழ அவசியாமானதும் கூட. அம்முவைக் கட்டிபிடித்த படி அருகில் இருந்த பள்ளத்தில் உருண்டேன். அடர்ந்த வளர்ந்த செடிகளின் மீது உருளுவது பஞ்சணையில் உருளுவதைப் போன்ற சுகத்தைக் கொடுத்த போதிலும் உயிர்வாழும் ஆசை எங்களை விரட்டிக் கொண்டிருந்தது. 

என்னுடைய இந்த செயலை சற்றும் எதிர்பார்க்காத புலிகள் முன்னை விட இன்னும் ஆக்ரோசமாகத் துரத்தத் தொடங்கின. ஓடி ஒடி களைத்திருந்தோம். எங்களுடைய நாட்டில் தேவைக்கு அதிகமாக எங்களுடைய சக்தியை இழக்கக் கூடாது. அவ்வாறு இழக்கும் ஒவ்வொரு கிராம் சக்தியும் மீட்க முடியாதது. இப்போது வேறு வழியில்லை அம்முவை தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கினேன், முதல்முறையாக வேர்க்கத் தொடங்கியது. அம்மு பலமாக அலறத் தொடங்கினாள். புலிகள் வெகுவாக நெருங்கிவிட்டன. அவற்றின் மூச்சுக்காற்று அனலாக தகித்தது. ஒரு கட்டத்தில் இதற்கு மேல் ஓடவே முடியாது என்ற நிலை வந்த போது என் கையில் இருந்த பொத்தானை அமுக்கினேன்.

எங்களைச் சுற்றிலும் பதிக்கப்பட்டிருந்த எல்.ஈ.டி விளக்குகள் அணைந்து நொடி இருளுக்குப் பின் மீண்டும் வெளிச்சம் பாய்ந்தது. அம்மு பிரம்மிப்பின் உச்சத்தில் என்னை இறுக்கமாகக் கட்டி ஒரு முத்தம் கொடுத்தாள். நிச்சயம் இந்த ஜென்மத்திற்குப் போதுமான முத்தம் தான் அது. அவளைக் கூட்டிக் கொண்டு வெளியில் வந்தேன். விளையாட்டு மைதானம் போல் பெருத்து இருந்த அந்த அரங்கின் வெளியில் இருக்கும் பெயர்ப் பலகையில் எழுதி இருந்தது. ஆதிவனம்.  

ஓவியம் - நன்றி  வெண்முரசு

3 Dec 2014

பிர்லா கோளரங்கம் - சென்னை

ஒவ்வொரு முறை பிர்லா கோளரங்கத்தைக் கடக்கும் போதும் ஒருவித குற்றவுணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். சென்னைக்கு குடிபெயர்ந்து ஆறு வருடங்களுக்கும் மேல் ஆகிறது இன்னும் இங்கு சென்ற பாடில்லையே என்று. இனி இருக்காது. நேற்று சாபம் தட் சாபம் நீங்கிய டே. நீங்கள் நீங்களாக சென்றால் வெறும் ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதுமானது, நீங்கள் குழந்தையாகவோ இல்லை உங்கள் குழந்தையுடனோ சென்றால் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஒகே, அதற்கு மேல் அந்த குழந்தைக்கே போரடித்துவிடும். 


நுழைவுக் கட்டணம் 45 ரூபாய். கோளரங்கத் திரைப்படம், முப்பரிமான திரைப்படம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி அரங்கங்கள் அனைத்திற்கும் சேர்த்து மேற்கூறிய கட்டணம். நாள் முழுவதும் ஒவ்வொரு ஒரு மணி நேரமும் கோளரங்கத் காட்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. தமிழ் இங்கிலீஷ் எந்த மொழி வேண்டுமோ அந்த மொழியைக் கூறி டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும். இரண்டு மொழியிலும் பார்க்க வேண்டுமானால் கூடுதலாக இருப்பது ரூபாய் செலுத்தினால் போதும்.

நேராக கோளரங்க காட்சி அரங்கினுள் நுழைந்தேன். தலைக்கு மேல் ஒரு அரைக் கோளத்தைக் கவிழ்த்து வைத்தது போன்ற திரை. அண்ணாந்து தான் பார்க்க வேண்டும். பரதன் தியேட்டர் காலத்து இருக்கைகள். வெள்ளை நிற திரை பழுப்பேறியிருந்தது. இருநூறு பேர் அமரக் கூடிய அரங்கில் மொத்தமே இருப்பது பேர் தான் இருந்தோம். அரங்கின் நடுப்புறத்தில் வித்தியாசமான ப்ரொஜெக்டர் இருந்தது. அதில் இருந்து தான் படம் காட்டுவார்கள், அதனால் எண்டு அமர்ந்தாலும் காட்சிகள் ஒரே போன்று தான் இருக்கும் என்று நினைத்தது தவறாய்ப் போயிற்று. அந்த மெஷின் இரவு நேர  வானத்தை உருவாக்க மட்டுமே, மெயின் ப்ரொஜெக்டர் வேறு ஒரு இடத்தில் இருந்தது. எங்கு அமர்ந்தால் ஒழுங்காக படம் தெரியாதோ அங்கு போய் அமர்ந்துத் தொலைத்திருந்தேன். சரி பரவாயில்லை என அங்கிருந்தபடியே பார்க்கத் தொடங்கினேன். 

சுமார் அரை மணி நேரம் ஓடுகிறது. வானவியலைப் பற்றிய ஆராய்சிகள் அதிலும் நமது சூரிய குடும்பம் தோன்றியது முதல் அதில் இருக்கும் ஒவ்வொரு கோள்கள் குறித்தும் பல விஞ்ஞானிகள் நிகழ்த்திய ஆராய்ச்சிகள் என்று நீள்கிறது படம்.

முதல் பதினைத்து நிமிடத்திற்கு எதுவுமே தெரியவில்லை, அட்டகாசமாக இருந்தது. ஆ என்று வாயைப் பிளந்து ஆச்சரியபடத் தகுதியான தரவுகளை விளக்கிக் கொண்டிருந்தார்கள். அடுத்த பதினைந்து நிமிடங்கள் மிகக் கொடுமையானவை. வழமையான செலஸ்டின் டீச்சரின் அறிவியல் வகுப்பை நியாபகப்படுத்தத் தொடங்கிவிட்டது. அவர் வகுப்பு எப்போதுமே உணவு இடைவேளைக்குப் பின்னான முதல் அல்லது இரண்டாம் வகுப்பாகத்தான் இருக்கும். இப்போதும் நல்ல மூக்குப் பிடிக்க மதிய உணவு உண்டிருந்தேன். தூக்கம் கண்ணைச் சுழல இமைகளுக்கு நடுவே கடப்பாறையைச் சொருகிக் கொண்டு கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தேன். 

அந்த இடம் முழுவதுமே மயான அமைதி. அரங்கில் ஆடியோ இல்லை என்றால் பத்து சீட் தள்ளி அமர்ந்திருப்பவர் மூச்சு விடும் சப்தம் கூடக் கேட்கும் அளவில் அமைதி. தூக்கத்தை மேலும் தூண்ட அதுவே போதுமானதாயிருந்தது. அண்டம், பால்வெளிக் குடும்பம், அணுச் சிதைவு, நியாபங்கள் எல்லாம் நாஸ்டாலஜியா நினைவுகள் இல்லை நாங்கள் நாசமாய்ப் போன காலத்து நினைவுகள். இருந்தாலும் வொர்த்தான ஒரு காட்சிக் கோப்பு. அவசியம் பார்க்க வேண்டும். மனிதனின் வானியல் ஆராய்ச்சிகள் மொத்தமுமே தான் நாசமாக்கிவிட்ட பூமியில் இருந்து தப்பித்து வேறொரு இடத்தில் உயிர்ச் சூழலை ஏற்படுத்தி விடமாட்டாமோ என்று கண்டுபிடிப்பதிலேயே தான் இருக்கிறது. அதிலும் ஏனோ சோவியத் கூடுதல் முனைப்பைக் காட்டியிருக்கிறது. அட்டகாசமான வீடியோ என்றபோதிலும் புதிய தகவல்களுடன் அப்டேட் செய்யாமல் வைத்திருக்கிறார்கள் என்பது பெருங்குறை.    

இறுதியாக ஒருவழியாக படத்தை நிறைவு செய்யும் போது இப்படியான பால்வெளி அண்டத்தில் சூரியக் குடும்பத்தில் நமது பூமி மட்டுமே மனிதன் உயிவாழத் தகுதியான இடம் தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று ஆடியோ கூறிக் கொண்டிருக்கும் போதே என்னிடம் இருந்து தள்ளி நான்காவது இருக்கையில் ஒரு பெரிய குறட்டைச் சப்தம் கேட்டது. பூமியைக் காப்பாற்றச் சொன்னால் இப்படியே குறட்டை விட்டுக் கொண்டிருங்கள் என்று அந்த பூமியே கூறுவது போல் இருந்தது.  

இந்தக் காட்சி முடிந்தது முப்பரிமான காட்சிக்கு அனுப்பினார்கள். என் கையில் கிடைத்த அந்த முப்பரிமாணக் கண்ணாடியைப் பார்த்தேன் முன்னூறு ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தது. கேவலமான ஒரு அரங்கம். பத்து நிமிடம் ஓடும் இக்காட்சியில் டினோசர் பற்றி ஒரு அனிமேசன் கிளிப்பிங்கை ஓட்டுகிறார்கள். நன்றாய் இருந்தது. குழந்தைகள் வெகுவாய் ரசிக்கக் கூடும். 

அது முடித்து மீண்டும் கோளரங்கத் திரைப்படத்தை ஆங்கிலத்தில் பார்பதற்காக மீண்டும் நுழைந்தேன். இம்முறை கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. எந்த இருக்கையில் உட்கார்ந்ததால் படம் நன்றாக தெரியும் என்று கணித்திருந்ததால் சரியாக அங்கே சென்று உட்கார்ந்தேன். (அரங்கினுள் நுழைந்ததும் நுழைவாயிலுக்கு எதிர்புறம் சிறிய ப்ரோஜெக்டர் இருக்கிறது அதன் அருகில் உட்காருவது நலம்). ஏனோ தெரியவில்லை தமிழை விட ஆங்கிலம் கொஞ்சம் எளிதாய்ப் புரிந்தது போல் உணர்ந்தேன். அதற்கு என் தமிழ் அறிவு மழுங்கி விட்டதாய் நினைத்து விட வேண்டாம்,  ஆங்கில ஆடியோவில் இருந்த நிதானம் தமிழில் இல்லை, அரை மணிநேரத்தில் முடித்து விட வேண்டும் என்று வேகவேகமாகப் பேசியது போல் இருந்தது அந்த தமிழ் ஒலிக்கோப்பு. 

அரங்கில் அரங்கினுள் இருந்த சில ஆங்கிலச் சீமாட்டிகள் மீது இன்னும் தீராக் கோவம் இருக்கிறது எனக்கு. உள்ளே நுழைந்ததும் தங்கள் மொபைலை நோண்ட ஆரம்பித்தவர்கள் படம் முடியும் வரையிலும் நோண்டிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் நோண்டிக் கொண்டு இருந்தது பிரச்சனை இல்லை. அவர்கள் கைபேசியில் இருந்து வந்த வெளிச்சம் அரங்கத்தின் இருள் சூழ்ந்த அட்மாஸ்பியரை பாழ்படுத்திக் கொண்டிருந்தது என்பதுதான் பிரச்சனையே. எத்தனையோ முறை எத்தனையோ பேர் கூறியும் அவர்கள் அடங்கவில்லை. இன்னும் அதிகமாக அறச்சீற்றம் எழுகிறது, கூடுதலாக நான்கு வரி எழுதினால் பெண்ணுரிமை ஆணாதிக்கம் எனக்கூடும். பேசாமல் அடுத்தவரிக்கு நகர்கிறேன். 


கோளரங்கக் காட்சிகள் முப்பரிமான காட்சிகள் முடித்துவிட்டு நேராக மற்ற அறிவியற் கூடங்களைப் பார்க்கக் கிளம்பினேன். நான் அவற்றைப் பார்க்காமலேயே கிளம்பி இருக்க வேண்டும், பார்த்ததால் தான் மீண்டும் அறச்சீற்றம் எழுகிறது. அத்தனையும் பாழ்பட்டுக் கிடக்கிறது, இருபத்தி மூன்றாம் புலிகேசியில் ஒரு வசனம் வருமே 'கேட்டால் அரசாங்க வேலை என்று பீத்திக் கொள்வது' என்று, அப்படி பீத்திக்கொள்ள மட்டுமே இங்கிருப்பவர்கள் பணிபுரிகிறார்கள் போலும், ஒரு மெயிண்டனன்ஸ் கூட இல்லை. அரங்கம் முழுவதும் குப்பை, அத்தனையும் உடைந்து பாழ்பட்டுக் கிடக்கும் அறிவியல் குப்பைகள். அதிகாரிகளைக் கேட்டால் அரசாங்கத்தைக் கைநீட்டுவார்கள். எது எப்படியோ ஒரு கலைக் கூடம் கொலைக் கூடமாகத்தான் காட்சியளிக்கிறது. இருந்தாலும் கோளரங்கக் காட்சிகளை கண்டு ரசிப்பதற்காக வேண்டுமானால் அவசியம் ஒருமுறை சென்று வரலாம். 

24 Nov 2014

ரியல் எஸ்டேட் மிருகமும் - வண்டலூர் ஜூவும்

தினமும் தொலைகாட்சியில் ரியல் எஸ்டேட் செய்யும் ப்ரோக்கர்கள் சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கும் வண்டலூரில் இருந்து ஐந்தே நிமிடத்தில் சென்று விடக்கூடிய இடத்தில் ப்ளாட் போட்டு விற்றுக் கொண்டிருப்பதை காட்டுகிறார்கள். அவர்களது வியாபார யுக்தியே அருகில் இருக்கும் லேண்ட்மார்க்குகளைக் கூறி கூவி கூவி விற்பனை செய்வதுதானே. அப்படித்தான் இந்த வண்டலூர் அருகில் இருக்கும் ப்ளாட்டையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். 

வண்டலூரின் லேண்ட்மார்க்காக அவர்கள் கூறுவது இன்னும் சில வருடங்களில் இங்கே அமைய இருக்கும் உலகின் மிகபெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை. 

ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் கோயம்பேடு என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அது இப்போது நிரம்பி வழியும் அவலத்தில் இருப்பதால் சென்னை தினமும் அதன் காலை மாலை வேளைகளிலும் அசந்தர்ப்பமான சூழ்நிலைகளிலும் திக்குமுக்காடிப் போகிறது. நிலைமையை சரிசெய்ய அங்கு இருக்கும் பேருந்து நிலையத்தையே இரண்டு அடுக்கு பேருந்து நிலையமாக மாற்றலாமா என்று யோசித்துப் பார்த்தார்கள். என்ன நினைத்தார்களோ அந்த திட்டத்தைக் கைவிட்டு இப்போது வண்டலூர் என்கிறார்கள். 

கோயம்பேடில் பேருந்து நிலையம் வருவதற்கு முன் அனைத்து பேருந்துகளும் பாரிஸ் வரை சென்று வந்து கொண்டிருந்தன. சென்னை ஒன்னில் ட்ராபிக்கை கட்டுபடுத்த ஊரின் ஒதுக்குபுறமாக இருந்த கோயம்பேடைத் தேர்ந்தெடுத்தது தமிழக அரசு. இப்போது கோயம்பேடும் மையப் பகுதி ஆகிவிட்ட நிலையில் சென்னைக்கு மிக மிக அருகில் இருக்கக் கூடிய வண்டலூரைத் தேர்வு செய்திருக்கிறார்கள் அதிகாரிகள், அரசியல் மட்டத் தலைகள். 

எந்த படித்த அறிவு ஜீவி வண்டலூரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி புத்தி புகட்டினார் என்று தெரியவில்லை. ஒருவேளை வண்டலூரின் பின்கதை அந்த அதிமேதாவிக்கு தெரியாமல் போயிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆசியாவின் மிகபெரிய மிருகக் கண்காட்சி சாலையை பிரிடிஷ் அரசாங்கம் முதன்முதலில் அமைத்த இடம் தற்போது சென்ட்ரலில் மூர்மார்க்கட் அருகில் இருக்கும் இடம். 


அப்போது பாரிஸ் சென்ட்ரல் போன்ற இடங்கள் இயற்கைச் சூழல் மிகுந்து இருந்த பகுதிகள் என்பதால் அங்கே அமைத்தார்கள். முதலில் உயரதிகாரிகள், சமஸ்தான தலைவர்கள் மட்டுமே வந்து போகும் இடமாக இருந்த சென்ட்ரல் மிருகக் காட்சி சாலை மெல்ல மெல்ல பொதுமக்கள் பார்வைக்கும் திறந்து விடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் வண்டி கட்டி பார்த்து சென்றிருக்கிறார்கள். மெல்ல அவர்களின் முக்கியமான பொழுது போக்கும் இடமாகவும் மாறி இருக்கிறது.

இவ்விசயம் நம்மக்கள் மத்தியில் சற்றே பிரபலமாக கூட்டம் கூட்டமாக வந்துசெல்ல ஆரம்பித்தனர். மேலும் இவ்விடங்களை இவர்கள் செத்த காலேஜ் என்றும் உயிர் காலேஜ் என்றும் வாஞ்சையோடு அழைக்கத் தொடங்கினர். விஷயம் சுத்துப்பட்டு எட்டுபட்டிக்கும் பரவ "எட்றா வண்டிய" என்றபடி வண்டிமாடு கட்டிக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டார்கள் ஜமீன்கள் மிராசுகள் மற்றும் ஜனங்கள். வெகுவிரைவில் இவ்விரு இடங்களும் நகரின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக மாறின. இந்நிலையில் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் வான்படை விமானங்கள் மதராசப்பட்டினத்தைத் தாக்கலாம் என்ற நிலை ஏற்பட்ட போது விலங்குகளின் நலன் கருதி இடமாற்றம் நடைபெற்றுள்ளது. அதன்பின் மீண்டும் இங்கேயே மாற்றிவிட்டார்கள். இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? என்பது குறித்துத் தெரியவில்லை. 

சமநேரத்தில் மிருகக் காட்சி சாலையில் இருந்த விலங்குகளை ஏதோ திடீர் நோய் தாக்கி அவற்றின் உயிரைக் காவு வாங்கி இருக்கின்றன, ஒன்று அல்ல இரண்டு அல்ல, கொத்து கொத்தாக விலங்கினங்கள் செய்தது மடிய, என்ன நடக்கிறது என்பதையே நம் அரசாங்கத்தால் உணர்ந்து கொள்ள முடியாமல் போயிருக்கிறது. உடனடியாக ஒரு ஆய்வுக் கமிட்டியை  களத்தில் இறக்கி இருக்கிறார்கள். அதில் இருந்த மருத்துவர்களும், ஆய்வாளர்களும் மிருகங்களுக்கு வந்திருக்கும் புதிய நோயைக் கண்டுபிடித்து ஒரு ரிப்போர்ட்டை சப்மிட் செய்தார்கள். அதில் அவர்கள் கூறிய விஷயம் உடனடியாக அரசாங்கத்தை சிந்திக்கச் செய்தது. 

அவர்கள் கூறிய கருத்து

பாரிஸ் சென்ட்ரல் எழும்பூர் பகுதியில் போக்குவரத்தும் வாகனங்களின் எண்ணிகையும் கணிசமாகப் பெருகி விட்டதால் வாகனங்கள் எழுப்பும் ஒலியை விலங்குகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாக ரெஸ்ட்லெஸ் என்று கூறுவோமே, அது மாதிரியான மன நோய் விலங்குகளைத் தாக்கி அவற்றை ஒரு நிலையில் இல்லாமல் வைத்து சாகடித்துக் கொண்டிருகின்றன. இந்நிலை மாற வேண்டுமானால் உடனடியாக இடத்தை மாற்ற வேண்டும் என எச்சரித்திருக்கிறார்கள்.

உறக்கம் கலைந்த அரசாங்கம் மாற்றுவழி தேடி யோசித்த போது சென்னையில் இருந்து முப்பது கிமீ தொலைவில் அமைந்திருந்த வண்டலூரின் பசுமையான இயற்கைச் சூழல் உயிரியல் பூங்கா கட்டமைக்க ஏற்ற சூழல் என்று அரசாங்கம் முடிவெடுத்து 1976-ம் வருடம் சுமார் 1400 ஏக்கர் பரப்பளவில் உதயசூரியனின் தலைமையில் உதயமானது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா.  

இப்படி மிருகங்கள் அனைத்தையும் பாதுகாப்பதன் பொருட்டு உடனடியாக இடத்தை மாற்றியாக வேண்டிய நிலை. அதற்காக அடுத்த இடத்த தேடிய போதுதான், சென்னையில் இருந்து சற்றே தொலைவில், தனிமையில் ஓரளவு மலைப்பாங்கான அடர் வனம் சூழ்ந்த இடமாக இருந்த வண்டலூரைத் தேர்வு செய்தது அரசாங்கம். அன்றிலிருந்து இன்று வரை மிகப் பெரிய உயிர்ச்சூழலின் சாட்சியாக இயங்கி வருகிறது வண்டலூர் மிருகக் காட்சி சாலை. 

இப்போது அதே வண்டலூரில் தமிழக அரசாங்கம் மிகபெரிய பேருந்து நிலையத்தை அமைக்கப் போவதாக அறிவித்து இருக்கிறது. அதவாது என்ன காரணத்திற்காக வண்டலூர் உருவானதோ அதையே இல்லாமல் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறது அரசாங்கம். இப்படியே போனால் வண்டலூரையே இழுத்து மூடிவிட்டு அதன் மேலேயே ரியல் எஸ்டேட் வியாபாரம் நடத்தினாலும் நடத்துவார்கள் நம்மவர்கள். இத்தனை நாள் காடுகளை அழித்து காடு போன்ற சூழலை ஏற்படுத்தி அதில் வாழ்ந்து கொண்டிருந்தோம். இப்போது காடு போன்ற சூழலையும் அழிக்க இருக்கிறோம்.  

என்ன செய்வது மனிதன் என்பவன் மிகபெரிய சுயநல மிருகம். தன் இனம் நிம்மதியாக வாழ எதையும் செய்யக் கூடியவன். தான் நிம்மதியாக வாழ தனது இனத்தையே அழிக்கக் கூடியவன் தானே, மிருக இனம் அழிவதைப் பற்றி அவனுக்கு என்ன கவலை இருந்து விடப் போகிறது. 

23 Nov 2014

மற்றுமோர் மென்பொருள் தினம்

நேற்றைய தினம் அலுவலகத்தில் family day. அலுவலகமே உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தது. இதற்கெனவே சிலபல பிரத்யோக ஏற்பாடுகளைத் தயார் செய்து மிகப் பெரிய கொண்டாடத்திற்கு தன்னை ஏற்பாடு செய்திருந்தது எங்கள் அலுவலகம். சும்மாவே எங்கள் அலுவலகம் asia's largest single campus building. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் அலுவலகத்தின் பரப்பை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. கிட்டத்தட்ட 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கட்டிடம். அந்த மொத்த பரப்பளவையும் சுற்றிவளைத்து கொண்டாட்டங்களுக்கான இத்யாதிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள். முந்தின நாள் நள்ளிரவில் அலுவலகம் முடித்து கிளம்பும் போது எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள். 

நேற்று சனிகிழமை மதியம் அலுவலகத்தில் நுழையும் போதே அதன் முகமே மாறியிருந்தது. இந்த அலுவலகத்தில் சேர்ந்த பின் இது மூன்றாவது family day. அதில் ஒன்றைக் கூட பார்த்ததில்லை. ஆகவே என்னைப் பொறுத்தவரையில் இதுதான் எனக்கு முதல் தடவை. சிறுசேரி மொத்தமும் வாகனங்களால் நிரம்பி வழிய, அலுவலக கட்டிடம் மொத்தமும் மனிதர்களால் (அலுவலக ஊழியர்களின் குடும்பங்களால்) நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மேளதாளம் பொய்க்கால் பொம்மை நடமாட்டத்துடன் வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருக்க ஒரு திருவிழாக் களை வந்திருந்தது அலுவலகத்திற்கு. ஆனான்கு சீரியல் பல்பு, அம்மன் கட்வுட் இல்லை அவ்வளவு தான் ஒரு கோவில் திருவிழாவிற்கும் பேமிலி டேவுக்குமாக இருந்த வித்தியாசம். ஆனான்கு பம்பரம், கோலிகுண்டு, கேரம் இன்னும் இன்னும் வித்தியாசமான விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருக்க, பலரும் உற்சாகமாக பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு உற்சாக அலை என்னை தள்ளிக் கொண்டு போவது போல் உணர்வு, அலுவலகத்தினுள் வண்டி ஓட்டிக் கொண்டே இவற்றை கவனித்துச் சென்றதால் என்னால் நெருங்கி சென்று எதையும் பார்க்க முடியவில்லை. 

என்னுடைய ப்ராஜெக்டில் சென்று ஒரு அட்டென்டென்சை போட்டுவிட்டு அப்புறம் இந்தக் கொண்டாட்டங்களைப் பார்க்க செல்லலாம் என்று அந்த கண்ணாடி சிறைக்குள் நுழைந்தேன். ஆம் எனக்கு வேலை தினம். அதிலும் production support வேறு. இருக்கையில் யாராவது இருந்து அந்த இயந்திரத்தைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். ப்ராஜெக்ட் மொத்தமும் வெறிச்சோடிக் கிடக்க பிரபு மட்டும் கணினியில் முகம் புதைத்து தீவிர ஆலோசனையில் இருந்தார். உள்ளே நுழைந்ததும் நேரே அவர் அருகில் சென்றேன். சொல்ல மறந்துவிட்டேன் பிரபு என் டீம். எனக்கு முந்தைய ஷிப்ட். என்ன பிரபு 'பேமிலி டேக்கு போகாம இங்க இருக்கீங்க' எனக் கேட்க வந்ததை மனதிலேயே முழுங்கி அவர் நிலையைப் பார்த்ததும் கண்டுபிடித்து விட்டேன். 'ஸ்ரீனி காலையில இருந்து ஒரு இஸ்யு, சால்வ் ஆகல.  பார்த்துட்டு இருக்கேன்' என்றார். 

அவர் சொல்லி முடிக்கவில்லை. சரவனாவிடம் இருந்து ஒரு போன். 'டேய் EB3 (கட்டிடத்தின் பெயர்) வா, செமையா இருக்கு என்றான். அலுவலகத்தினுள் வரும் போதே திருவிழாக் கொண்டாட்டம் என்று கூறினேன் இல்லையா, அதன் காரணம் கலர் கலரான நிறைய கலர்களும் தான்! ஏ சீக்கிரம் கிளம்பி வா என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். இங்கே கணினியைப் பார்த்தால் பிரச்சனை முடியும் போல் தெரியவில்லை. 

நாங்கள் மட்டுமே தனித்து இயங்க முடியாது. சில கட்டளைகளை எழுத்து வடிவில் அமெரிக்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கிருக்கும் அவர்கள் அதை செயல்படுத்த வேண்டும். 

எங்கள் நேரமோ என்னவோ. அமெரிக்கர்கள் மொத்தமாக விடுமுறைக் கொண்டாட்டங்களுக்கு (கிறிஸ்மஸ் நெருங்குகிறது இல்லையா) கிளம்பிவிட்டார்கள் போலும். எங்களைப் போல சிக்கிக் கொண்ட ஓரிரு அமெரிக்கர்கள் அவர்களுடைய நள்ளிரவில் ஓடாய்த் தேய்ந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் கட்டளைகளைப் பிறப்பித்தால் அதைச் செயல்படுத்த நெடுநேரம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். இப்படி பிரச்சினையுடனும் அமெரிக்கர்களுடனும் போராடி ஒருவழியாய் பிரச்னையை முடித்து அப்படா என்று நிமிரும் போது மணி ஆறு. ஒவ்வொரு பிரச்சனைகளை முடித்து தலைநிமிரும் போதும் இஸ்ரோவில் ராக்கெட் ஏவிய திருப்தி கிடைக்கும் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். காரணம் நாங்கள் பணிபுரிவது production support-ல். இந்நேரத்தில் சரவணாவும் டெஸ்கிற்கு வந்திருந்தான்.  


சரி வாங்க பிரபு பேமிலி டே எப்படி இருக்குன்னு பார்க்க போவோம் என்றபடி நான் பிரபு சரவணா மூவரும் கிளம்பி வெளியில் வந்தால் பேமிலி டே நடந்ததற்கான தடயங்கள் மொத்தமும் சுத்தமாக அழிக்கப்பட்டு வழக்கமான மயான அமைதி. எஞ்சி ஆங்காங்கு நின்று கொண்டிருந்த மக்களை செக்யுரிட்டிகள் விரட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு கொண்டாட்டம் எங்கள் பார்வையில் பட்டு மனதில் பதியாமலேயே கடந்துவிட்டது. ஒரு திருவிழா நடந்தால் ஆங்காங்கு குப்பையாகக் கிடக்கும். அது கூட இல்லை. இது புயலுக்குப் பின்னான அமைதி இல்லை. புயலே இல்லாத அமைதி. மீண்டும் கண்ணாடிக்குள் நுழைந்தோம். மீண்டும் வேறு புதிய பிரச்சனைகள். முடித்துவிட்டுக் கிளம்பும் போது மணி நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடையிலான மூன்று மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. சில நாய்களைத் தவிர யாருமற்ற எங்களுக்கான பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி உருளத் தொடங்கியது. என்ன செய்வது நாளையும் மற்றுமொரு நாளே. 

14 Nov 2014

பழைய மகாபலிபுரம் சாலை

பழைய மகாபலிபுரம் சாலையில் சுவாரசியமான காட்சிகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. அதிலும் நள்ளிரவில் என்றால் சலிக்காமல் பல கதைகள் கூறலாம், அவ்வளவு இருக்கிறது. 

இன்றைக்கு அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது மணி ஒன்றை நெருங்கி இருந்தது. லேசான தூறல் வேறு. சிறுசேரியில் இருந்து கிளம்பும் வரையிலும் லேசாக தூறிக் கொண்டிருந்த வானம் நாவலூரைக் கடக்கையில் கொஞ்சம் அடித்துப் பெய்யத் தொடங்கியது. 

நேற்றைக்கும் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது நள்ளிரவு ஒரு மணி. யாருமற்ற அந்த சாலையில், அதில் நிலவும் அமைதியில் பயணிக்கவே அலாதியாய் இருக்கும். அவ்வப்போது கடக்கும் கார்கள், ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் தவிர யாருமே இருக்க மாட்டார்கள். 



அப்படியிருக்க நேற்றைய தினம் சத்யபாமாவைக் கடக்கையில் ஒரு பெண் சாலையின் ஓரத்தில் மாடல் ட்ரெஸ் அணிந்தபடி துள்ளிக் குதித்து டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தாள். யார் அவள், இந்நேரம் ஏன் இப்படி என்ற கேள்விகளுடனேயே கடக்கும் போதுதான் தெரிந்தது அவர் ஒரு திருநங்கை என்று. மீண்டும் மனதில் ஆயிரம் கேள்விகள், அதற்கு ஆயிரம் விடைகள், இவர்களின் வாழ்கையே முறையே வேறு. எளிதில் புரிந்துகொள்ள இயலாதது. தனிமை புறக்கணிப்பு மிரட்டல் தீண்டாமை பாலியல் வன்கொடுமை என்று எத்தனையோ கஷ்டங்கள் நிறைந்தது. வீட்டில் அவரை எதிர்பார்த்து யாரேனும் இருப்பார்களா, முதலில் அவருக்கு வீடு இருக்குமா, எங்கு தங்குவார். அடுத்த சில கிமீ அவரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.  

இன்றைய நள்ளிரவில் நாவலூர் ஏஜிஸ் கடந்து செம்மஞ்சேரி செக்போஸ்டைக் கடக்கையில் இரண்டு பெண்கள் காதில் ஹெட்செட் மாட்டியபடி தைரியமாக நடந்து கொண்டிருந்தார்கள், ஒருசில வாகனங்களைத் தவிர யாருமே இல்லை. மழை வேறு வலுத்துக் கொண்டிருந்தது. மிக சமீபத்தில் தான் சிறுசேரி பயங்கரம் நடந்து முடிந்துள்ளது. ஆனாலும் அசால்ட்டாக நடந்து கொண்டிருந்தார்கள். அருகில் நடந்து செல்லும் தொலைவில் தான் அவர்கள் ஹாஸ்டல் இருக்க வேண்டும் என்றாலும் அந்த அர்த்த ராத்திரியில் ஒருவருக்கு ஒருவர் துணையாக அவர்கள் எடுத்த முடிவு வீண் வம்பில் சென்றால் அவர்கள் வீட்டிற்கு யார் பதில் கூறுவது. அதிபயங்கரமான இந்த ஆண் சமூகத்தை எப்படி இவ்வளவு எளிதில் நம்பினார்கள்.  

ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்த அந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதத்தால் அங்கு பணிபுரியும் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் தற்போதைய கஷ்டங்கள் போதாதா? 

இவர்களுக்கு என்ன ஹாயாக ரோட்டில் நடந்து சென்று வம்பில் மாட்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு என்ன ஹாயாக கார்பரேட் ஆபீசில் அமர்ந்து கொண்டு சிறுசேரியில் என்ன நடக்கிறது, அடிமட்ட ஊழியன் எப்படி கஷ்டப்படுகிறான் என்பதையெல்லாம் புரிந்து கொள்ளாமலேயே நான்கு புதிய சட்டங்களைச் சமைத்து ஈமெயில் அனுப்புவார்கள். மாட்டிக் கொண்டு முழிக்கப் போவது என்னவோ எங்களைப் போல் யாரோ ஒரு நூறு கோயிஞ்சாமி தானே. பாவம் எங்களுக்கு என்ன மயிரே போச்சு. அனுபவிக்கட்டும். ஆனால் நேற்றைக்கு அந்த திருநங்கையைப் பார்த்ததற்கும் இன்று இவர்களைப் பார்த்தற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது, எத்தனைப் பெரிய முரண்! 

செம்மஞ்சேரி போலீஸ் செக்போஸ்ட்டை நெருங்க நெருங்க தூரத்தில் ஒரு ஏசி பஸ் ரோட்டின் ஓரமாய் பார்க் செய்யபட்டிருந்தது தெரிந்தது. ஆனால் அது நின்று கொண்டிருந்த விதமும் டிசைனும் வித்தியாசமாக இருப்பதைப் பார்த்ததும் ஏதோ ஒரு நெருடல். அந்த இடத்தில் வழக்கமாகவே நான்கைந்து பேரிகட்ஸ் இருக்கும், மேலும் யு டர்ன் போட வசதியான இடமும் கூட. தாறுமாறாக நிறுத்தபட்டிருந்த அந்த அரசாங்கப் பேருந்தைப் பார்த்துக் கொண்டே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். 

அருகில் செல்லச் செல்ல ஆட்கள் கூட்டமாக இருப்பது தெரிந்தது. வண்டியில் ஓட்டுனரும் நடத்துனரும் அருகில் நின்று கொண்டிருக்க அவர்களோடு நான்கைந்து போலீசார் நின்று கொண்டிருந்தார்கள். 

பேருந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவரை இடித்து ஒரு பத்தடி முன் நகர்ந்து அசாதாரணமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய சாலையில், சாலையின் ஓரத்தில் இருக்கும் இரண்டடி சுவரின் மீது ஏறி அந்தப் பக்கம் போய் இருக்க வேண்டும் என்றால் அந்த பேருந்து எவ்வளவு வேகத்தில் அவ்விடத்தைக் கடக்க முயன்றிருக்க வேண்டும். பாவம் உள்ளிருந்த பயணிகளை நினைத்தாலே கதி கலங்குகிறது. நாங்கள் பார்க்கும் போது யாருமற்ற பேருந்தாக தனித்து தொங்கிக் கொண்டிருந்தது, அருகில் நின்று பார்க்க முனைபவர்களை நிற்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தனர் போலீசார். ஒருவன் போட்டோ எடுக்கமுயல நல்லவேளை அவனுக்கு அடி விழவில்லை. 

நான்கைந்து மாதங்கள் இருக்கும் என்று நினைக்கிறன், மதியம் அலுவலகம் சென்று கொண்டிருக்கும் வழியில் சத்யமபாமா தாண்டி இருக்கும் ஆலமரத்து நிறுத்தத்தின் அருகில் மீடியனைத் தாண்டி ஒரு ஆம்னி தலையணையைப் புரட்டிப் போல் குப்புறக் கவிழ்ந்து கிடந்தது. சம்பவம் நடந்த ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் அங்கு இருந்தோம். என்னவென்று விசாரித்ததில் ஆம்னியின் பின் டயர் வெடித்து அது வந்த வேகத்தில் தூக்கி தூர வீசப்பட்டு சாலையின் ஓரத்தில் சோப்பு டப்பாவைப் போட்டது போல் கவிழ்ந்து கிடந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த ஆம்னியில் இருந்த ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சிவனே என்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த அந்த புதிய ஹோண்டா சிட்டிக்குத்தான் பலத்த அடி. அந்த காட்சி இப்போதும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. அந்த ஆம்னியின் ஓனர் ஒரு ஓரமாய் நின்று தலையத் தொடைத்துக் கொண்டிருந்தார். மரணபயம் நிறைந்திருந்த அந்தக் கண்களை இன்னும் மறக்க முடியவில்லை.  


ஆனாலும் சொல்கிறேன் நிலைமை எப்படி இருந்தாலும் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் வண்டி ஓட்டுவதற்கு இணையான சுகானுபத்தை இதுவரை வேறு எந்த சாலையுமே கொடுத்ததில்லை. காரணம் அது பழைய மகாபலிபுரம் சாலை. 

பின்குறிப்பு : பீக் ஹவர்ஸில் பழைய மகாபலிபுரம் சாலையின் முகம் வேறு மாதிரி இருக்கும். வேறு மாதிரி என்றால் கொஞ்சம் கொடூரமாக இருக்கும். நல்லவேளை எனக்கும் பீக் ஹவர்ஸுக்கும் சம்மந்தமே இல்லை :-) 

படங்கள் : நன்றி இணையம்.

5 Nov 2014

ஒரு கலைஞனின் தரிசனம்

கடந்த ஞாயிறு இரவு. மேற்கு மாம்பலத்தில் வாத்தியாரின் வீட்டின் அருகில் அவரை இறக்கிவிட்டு விட்டு மேடவாக்கத்தை நோக்கி வண்டியைத் திருப்பும் போதுதான் கவனித்தேன் வித்தியாசமானதொரு கனத்த குரலில் ஒலித்துக் கொண்டிருந்த அந்தப் பாடலை. அது ஒரு கூத்துப் பாடல், கூர்ந்து கவனித்தப் போது தெரிந்தது கர்ணன் குறித்த கூத்துப் பாடல் என்று.  

இரவு எட்டு மணி, லேசான தூறலுக்கும் குளிர்ந்த காற்றுக்கும் மத்தியில் கேட்ட அந்த குரலில் ஒரு வசீகரம் இருந்தது.  


ஷட்டர் இழுத்து மூடப்பட்ட கடையின் திண்ணையில் அமர்ந்து இருந்த பெரியவர் ஒருவர், பெரியவர் என்றால் வயது தொண்ணூறு ஆகிறது அவருக்கு. உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் வேறொரு பெரியவரும், ஒரு அம்மாவும் அமர்ந்திருந்தார்கள். அவர் பாடப்பாட அருகில் இருந்த அந்த இன்னொரு பெரியவர் அந்த கூத்துக்கு ஸ்ருதி சேர்த்து ஜால்ரா போட்டுக் கொண்டிருந்தார். ஆர்வம் தாளவில்லை. வண்டியை அவர்களை நோக்கி நிறுத்திவிட்டு அந்த இன்ஸ்டன்ட் கூத்தை கவனிக்கத் தொடங்கிவிட்டேன். 

வெகு அற்புதமாகப் பாடிக் கொண்டிருந்தார். நம்மூரின் நாட்டுப்புற இசையில், நாட்டார் பாடலில் இருக்கும் வசீகரம் இன்னும் என்னைவிட்டுப் போகவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் இழுத்துப் இழுத்து சற்றே ராகம் சேர்த்து பாடிக்கொண்டிருந்தார். பரபரப்பான அந்த சாலையில் அந்தப் பெரியவரை கவனிக்க மனமில்லாமல்/நேரமில்லாமல் அனைவரும் ஓடிக் கொண்டிருக்க, அந்தப் பெரியவரையும், அந்தப் பெரியவரை ரசித்துக் கொண்டிருக்கும் என்னையும் வித்தியாசமாகப் பார்த்தபடி நகர்ந்து கொண்டிருந்தது பொதுஜனம். 

எனக்கும் அவருக்கும் இடையே மூன்று அடி இடைவெளி இருந்தது. அவர்களின் அருகில் சென்று நின்றுகொண்டு அவர் பாடுவதைக் கேட்க ஆசை தான் என்றாலும் ஒருவேளை நான் நெருங்கிச் சென்றால் பாடுவதை நிறுத்திவிடுவாரோ என்ற பயத்தில் விலகியே நின்று கொண்டிருந்தேன். அவ்வபோது ஒலிக்கும் ஹார்ன் ஓசையில், வாகனங்களின் பேரிரைச்சலில் அவர் குரல் கேட்காமல் போனாலும் தொடர்ந்து என்னுடைய கவனம் முழுவதும் அவர் மீதே இருந்தது. பொக்கை விழுந்த வாய், பிய்ந்து போன பொம்மையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒட்டிக் கொண்டிருக்குமே அது போல் ஒட்டிக் கொண்டிருந்த தலைமயிர். பல வாரங்கள் துவைக்கப்படாமல் அழுக்கு ஏறிப் போயிருந்த சட்டை என பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தார். அவரிடம் இருக்கும் அந்தக் கலையும் தமிழகத்தில் தற்போது அதே நிலையில் தான் உள்ளது.  

இந்நேரத்தில் மழை பெரிதாகத் தொடங்க இதுதான் சாக்கு என்று வண்டியை விட்டு இறங்கி அவர்கள் அருகில் சென்று நின்று கொண்டேன், இந்நேரம் அந்தப் பெரியவர் கூத்து பாடுவதை நிறுத்தி தன சொந்தக் கதையை பேசிக் கொண்டிருந்தார், அதவாது அந்தக் காலங்களில் வயலில் நாத்து நாடும் போது ஆரம்பித்து ஒவ்வொரு சமயங்களிலும் என்ன மாதிரியான பாடல்களைப் பாடுவார்கள் என்பதை விவரித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் நடுப்புறமாக அமர்ந்திருந்த பெரியவரிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன். சரளமாக தங்கள் கதையை கூறத் தொடங்கினார்.  

'இவரு பெரிய கூத்து நடிகன், சொந்த ஊரு விழுப்புரம், பாட ஆரம்பிச்சாருன்னா கேட்டுட்டே இருக்கலாம், அதான் கேட்டுகிட்டே அவரோட வம்பிளுத்துட்டு இருக்கேன், என் தாய் மாமன்' என்றபடி அவரிடம் 'மாமா உன் பொண்ண என் கண்ணுல காமியேன் மாமா' என்று வம்பிழுத்தார்.

அதற்கு அவரோ 'ஓத்தா கிழவா, கட்டையில ஏறப்போற உனக்கு என் பொண்ணு கேக்குதோ' என்றபடி ஏதேதோ பேச ஆரம்பித்தார். அவருடைய வாயைத் திறந்தால் சரளமாக வந்துவிழுந்த வார்த்தைகளில் ஒன்று ஓத்தா. பொதுவாகவே கூத்தில் பொதுஜனங்களின் கவனம் திசை திருப்பாமால் இருக்க கொஞ்சம் கவர்ச்சியையும் கொஞ்சம் கவிச்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்  என்பது நாட்டார் கலைஞர்களின் விதி. 

'காஞ்சிபுரம் மாவட்டத்துல ஆக்கூர்ன்னு ஒரு ஊர் இருக்கு, அந்த காலத்தில, இப்பவும் நடக்குது, அந்த காலத்தில வருசா வருஷம் பெருசா கூத்து நடக்கும், ஜனங்க இவரோட கூத்து பார்கிறதுக்கு வண்டி கட்டி வருவாங்க, அந்த காலத்திலயே கூத்து கட்டி ஐம்பாதாயிரம் பரிசு ஜெயிச்சவரு, பச்சையப்பா காலேஜ் பட்டதாரி. என்று கூறிக் கொண்டிருக்கும் போதே ஒரு சைரன் சத்தம் எங்களைக் கடக்க

அந்தப் பெரியவர் கூறினார் 'ஒத்தா பாடி போவுது பாரு' என்று.

'செவிட்டு மாமா அது பாடி இல்ல போலிசு, உன் மவள தராட்டா உன்ன புடிச்சு கொடுக்கிறேன் பாரு' என்றபடி மீண்டும் வம்பிழுத்தார்.

அதற்கு அவரோ நீ எனக்கு காசு பணம் சொத்து எதுவும் தர வேணாம், கூத்துல நான் பாடுற ஒரு வரிய நீ பாடுறா பொட்ட, அப்புறம் என் மகளை கட்டலாம்.' என்றபடி நீளமாக மூன்று நிமிடத்திற்கு மூச்சு விடாமல் ஒரு பாடலைப் பாடினார், ஒருமுறை அல்ல இருமுறை அல்ல கிட்டத்தட்ட நான்கு முறை அதே வரியை திரும்பத் திரும்ப பாடினார், அவருடைய மருமகனால் அதைப் பாட முடியவில்லை. 'மாமா மாமா நீ பெரிய ஆளு மாமா, என்றபடி பதிலுக்கு அவரைக் கொஞ்ச ஆரம்பித்தார். எனக்கும் சற்றும் சம்மந்தமே இல்லாத உலகம் தான் அது என்றாலும், யாரோ மூவர், சாலையின் ஓரத்தில் தங்கள் இரவுப் பொழுதைக் கழிக்க ஒதுங்கியவர்கள் தான் என்றபோதிலும் தமிழகத்தின் அழிந்து வரும் கலைகளில் ஒன்றின் உயிர்நாடி அவரிகளிடம் ஜீவனோடு ஓடிக் கொண்டுள்ளது என்பதால் நடப்பது அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சில தருணங்களை நாமாக தேடினாலும் அமைத்துக்கொள்ள முடியாது. ஆனால் சில தருணங்கள் தாமாக அமையும். இது எனக்காகவே, என்னுடைய வரவுக்காகவே காத்திருந்த தருணம் போலத் தோன்றியது.    

நான் வெகு அருகில் நின்று வேடிக்கைப் பார்ப்பதைப் பார்த்ததும் ஒரு கூட்டம் எங்களை சூழ்ந்து கொண்டது, அவர்களும் அந்தப் பெரியவருடன் பேசி சிரிக்க ஆரம்பிக்க, எங்களுக்காக ஒரு பதினைந்து நிமிடம் கர்ணன் போருக்கு செல்லும் பாடலை நடித்துக் காண்பித்தார். 

ஏனோ தெரியவில்லை அவர் நடிக்கத் தொடங்கவும் நம் மக்கள் மெல்ல ஒவ்வொருவராக கழன்று கொண்டனர். அந்த மாபெரும் கலைஞனுக்கு கலைக்கு நம்மாட்கள் கொடுக்கும் மரியாதை அவ்வளவுதான், அவ்வளவு அற்புதமாக நிகழ்ந்து கொண்டிருந்த கூத்தினை ரசிக்காமல் கலைந்து செல்வதைப் பார்த்தபோது என்னவோ போல் இருந்தது. யாருக்குக் கிடைக்கும் இப்படியொரு கலைஞனின் தரிசனம். தேடிவருவதை வேண்டாம் என்று நகரும் இவர்களைக் கையைப் பிடித்தா இழுக்க முடியும். 

அதற்குப் பின் மீண்டும் அந்த இரு பெரியவர்களும் சண்டை போட்டுக் கொள்ள, இவர் அவர் மகளைக் கேட்பதும், அவர் தரமாட்டேன் என்று கூறுவதும், இப்படியாக சண்டை நடந்து கொண்டிருக்க திடிரென அவருடைய மருமகன் ஒரு டயலாக் விட்டார், 'டேய் மாமா நான் உன் மகளை பார்க்கப் போறேன் தூக்கிட்டு அமெரிக்க போறேன், இருக்க சொத்து எல்லாத்தையும் வித்துட்டு அவள அமெரிக்கா தூக்கிட்டுப் போகப் போறேண்டா' என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 

அவரும் விடாமல் கட்டையில் போறவனுக்கு **** கேக்குதோ என்று மேலும் ஆபாசமாக பேசத் தொடங்கினார். டேய் எனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரந்த்தி சொச்சம் பணத்த கொடுடா மொதல, நீயே நடுத்தெருவில நிக்குற நாய் என்று தன மருமகனை திட்டத்தொடங்க, 'மாமா பணம் என்ன மாமா பணம், துட்டு என்ன பொறுத்தவரைக்கும் மாநகராட்சி கொசுக்கு சமம் மாமா' என்றார். அவர்களிடம் பணம் சுத்தமாக இல்லை என்றாலும், பணத்திற்கு அவர் கூறிய ஒப்புமை அத்தனை எளிதில் நம்மால் கூற முடியாதது. அவருடைய வார்த்தைகளில் விரக்தியும் இருந்தது என்பது வேறுவிசயம். 

'டேய் மாமா உன்ட்ட ஒரே ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு மட்டும் பதில் சொல்லுடா பார்க்கலாம்' என்றார், 'டேய் பாடு நீ என்ன கேள்வி கேப்பன்னு எனக்கு தெரியாதா என்ன? சரி கேளுடா' என்றார் அந்தப் பெரியவர். அதற்கு பதிலாக அவர் மருமகனிடம் இருந்து வெளிப்பட்ட அந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியாயிருந்தது. அதிர்ச்சியாயிருந்தது என்பதை விட ஆச்சரியமாய் இருந்தது என்பது தான் உண்மை. 

அவர் கேட்ட கேள்வி, 'டேய் மாமா பிகினிணா என்னன்னு தெரியுமாடா' என்று கேட்க, 'எனக்கு பிகிடியும் தெரியாது பீடியும் தெரியாது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்க செஞ்சோஓஓஓஓஓஓற்றுக் கடன் தீர்க்கஅஅஅஅஅ' என்று மீண்டும் அவர் உச்சதாயில் பாடத் தொடங்க மேலும் ஒரு பத்து நிமிடம் அவர்களோடு இருந்துவிட்டு நடையைக் கட்டினேன். அவர்கள் உலகம் திரும்பவும் அவர்களுக்காக சுழலத் தொடங்கியது. சுழலட்டும்.

இதற்கு முன் மேடவாக்கத்தில் தற்செயலாய் கண்டு ரசித்த ஒரு தெருக்கூத்தைப் பற்றிய பதிவு 

சென்னை - நடுநிசியில் ஒருகூத்து